Home Historical Novel Jala Mohini Ch22 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch22 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

105
0
Jala Mohini Ch22 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch22 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch22 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 22. ரகுதேவின் அபயம்

Jala Mohini Ch22 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

பத்மினியின் கூச்சலால் தன் அக்கிரமச் செயலை அரை விநாடி நிறுத்திய ஸித்தி அஹமத், அவள் கையைத் தன் கையால் இறுகப் பிடித்தவாறே குடிசைக்குள் வெளியே கண்களைச் செலுத்தினான். தொலை தூரத்தில் வேலை செய்து
கொண்டிருந்த மாலுமிகள் குடிசைப் பக்கம் சற்றும் திரும்பாததைக் கண்ட அந்த அரக்கன் கட கடவென்று பயங்கரமாகச் சிரித்துக் கொண்டே சொன்னான்: “பெண்ணே அதோ பார்! உன் கூச்சலைக் கேட்ட எந்த மாலுமியாவது
திரும்புகிறானா? திரும்பினாலும் என்ன பயன்? என் உத்தரவை மீறி எதுவும் செய்ய அவர்களில் ஒருவனுக்காவது துணிச்சல் உண்டென்று நினைக்கிறாயா? ஆகையால் பயனற்ற இக்கூச்சலை விடு. என் அருகில் வா.”
இந்த வார்த்தைகளைக் கேட்டதும் உள்ளத்தே எழுந்த கோபத்தால் பத்மினி கையைத் திமிறக்கூட மறந்தவளாய், சுடு சொற்களால் அவனை நோக்கிக் கூறினாள் “ஸித்தி அஹமத்! உன்னைப் போன்ற கொள்ளைக்காரர்களின்
யோக்கியதை எனக்குத் தெரியாதென்று நினைக்காதே. அதை அறிந்துதான் அரை நிமிஷங்கூட எங்கும் போக வேண்டாமென்று அவரைத் தடுத்திருந்தேன். என் வார்த்தையை மீறி உன்னைப் போன்ற கொடியவனின் நன்னடத்தையில்
நம்பிக்கை வைத்துச் சற்று முன்புதான் எங்கேயோ சென்றார். அவர் எந்த நிமிஷத்திலும் வந்து விடுவார். கையை விடு” என்று.
கடைசியில் பத்மினி சொன்ன வார்த்தைகளைக் கேட்ட ஸித்தி அஹமத்தின் கண்களில் ஒரு புது ஒளி பிறந்தது. “யார் ரகுதேவா? அவன் வந்துவிடுவானென்று தான் பயப்படுகிறாயா? அதற்காகப் பயப்படாதே. வேண்டுமானால் ஒரு
வார்த்தை சொல். அவனை இன்னும் சில மணி நேரத்தில் கண்டந் துண்டமாக வெட்டிக் காட்டில் கழுகுகளுக்கு இரையாகப் போட்டு விடுகிறேன்” என்றான். அவன் பேச்சு அவள் நடுக்கத்தை அதிகப்படுத்தியது. கையை முறுக்கித் திமிற
விரும்பினாள். ஆனால், ஏற்கனவே இரும்பு போலிருந்த ஸித்தி அஹமத்தின் பிடி இன்னும் அதிகமாக இறுக ஆரம்பித்தது. “பத்மினி! இந்த அஹமத்தின் கையில் அகப்பட்ட அழகிகள் இதுவரை யாரும் தப்பியதில்லை நீ மாத்திரம் தப்ப
முடியுமென்று நினைக்காதே. அந்த முட்டாள் ரகுதேவுக்காக அரபிக் கடல் பிராந்தியத்தின் பெரிய கடற்படைத் தலைவனை இழக்காதே. உனக்காக என்னென்ன கொண்டு வந்திருக்கிறேன் பார்” என்று சொல்லிக் கொண்டே தன் ஒரு
கையால் அவள் கையைப் பிடித்த வண்ணம் இன்னொரு கையால் மடியிலிருந்த இரண்டு மூன்று வைர நகைகளை எடுத்து மஞ்சத்தில் விட்டெறிந்தான். அத்துடன் அவளை அருகில் சற்று இழுத்து, “நான் சொல்கிறபடி கேட்டால் இந்த
மாதிரி எத்தனையோ தருவேன். இதைவிட இன்னும் மிக உயர்வான ரகங்கள் இருக்கின்றன. அத்தனையும் உன் அழகிய அவயவங்களை அலங்கரிக்கும்” என்று நெருங்கிச் செல்லவும் போனான்.
மாமிசமும் மதுவும் கலந்த துர்நாற்றம் அவன் வாயிலிருந்து வீசியதால் பத்மினி சற்றுப் பின்னடைந்து மிதமிஞ்சிய அருவருப்பாலும் பயத்தாலும், “விடு என் கையை! விடுகிறாயா, இல்லையா? மறுபடியும் கத்தட்டுமா?” என்று
சொல்லிக்கொண்டே கையை இரு முறை திமிறப் பார்த்து முடியாததால் அதுவரை சுதந்திரமாயிருந்த இன்னொரு கையால் அவன் கன்னத்தில் பளேரென அறைந்துவிட்டாள். அதனால் மற்றொரு கையையும் சரே லென உதறிவிட்ட ஸித்தி
அஹமத் ஒரு விநாடி ஸ்தம்பித்து நின்று தன் கன்னத்தைத் தடவிக் கொண்டான். அடிபட்ட துஷ்ட மிருகம் எப்படி இரட்டை மடங்கு கோபத்துடன் மனிதன் மீது தாவுமோ அந்த மாதிரியே வெறியினால் நிதானத்தை அடியோடு இழந்து
விட்ட ஸித்தி அஹமத், “என்ன துணிச்சல் உனக்கு? என்னை அடிக்கவா அடிக்கிறாய்? எங்கே இனிமேல் அடிபார்ப்போம்” என்று சொல்லிக்கொண்டே அவளை மூர்க்கத்தனமாக அணுகி அப்படியே தூக்கிக்கொண்டு போய்விடக் கட்டிப்
பிடிக்கலானான். அப்படிக் கட்டிப் பிடிக்கப்போன தருணத்தில் பத்மினியின் முகத்தில் பயத்துக்குப் பதில் ஆச்சரியமும் பிரமையும் கலந்து நிற்பதைக் கண்டவன் ஒரு கணம் தாமதித்துக் கதவுக்காகத் திரும்பினான். வாயிற்படியில்
அசாத்திய கோபத்துடனும் உருவிய கத்தியுடனும் ரகுதேவ் நின்று கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் பீம்ஸிங்கும் மிகுந்த படபடப்புடன் நின்று கொண்டிருந்தார்.
ரகுதேவின் கண்களும் ஸித்தி அஹமத்தின் கண்களும் கலந்தன. இருவர் உள்ளங்களிலும் எழுந்து கொண்டிருந்த பரஸ்பர வெறுப்பு அவர்கள் முகங்களில் தாண்டவமாடிக் கொண்டிருந்தன. விபரீதமான அந்த நிலையில்கூட ரகுதேவ்
நிதானத்தைப் பூராவும் இழக்கவில்லை. அவன் இழந்திருந்த நிதானத்துக்கு அறிகுறியாக கைமாத்திரம் சற்று அசங்கியது. கால் பூமியில் திடமாக நிற்காமல் சற்று அசைந்து கீழேயிருந்த மண்ணில் கோடு ஒன்றை அரை வட்டமாக
இழுத்தது. பேச்சை மீறிய நிலைமையாகையால் ரகுதேவும் பேசவில்லை. ஸித்தி அஹமத்தும் பேசவில்லை. பீம்ஸிங் மட்டும் பேசினார். அதுவரையில் அவர் பேச்சு அடைத்து நின்றதே ஆச்சரியம். ஆனால், பத்மினியை ஸித்தி அஹமத்
பலாத்காரம் செய்வதைக் கண்ணாரக் கண்ட பிறகு ரகுதேவ் வெறும் கட்டைபோல் நின்று கொண்டிருந்ததை அவரால் நீண்ட நேரம் பொறுக்க முடியவில்லை. “ஏன் பேசாமல் நின்று கொண்டிருக்கிறாய்? மேலே நடக்க வேண்டியது
நடக்கட்டும்” என்று ரகுதேவுக்கு ஊக்கம் கொடுத்தார்.
அவர் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்கவோ வேறு எந்தவித அலுவல்களிலும் மனத்தைச் செலுத்தவோ முடியாமல் எதிரேயிருந்த காட்சியிலே கண்களை லயிக்கவிட்ட ரகுதேவ், கையிலிருந்த கத்தியை உறையில் போட்டான்.
அதேசமயத்தில் அவர்கள் வரவால் பத்மினியின் கையை விட்டுவிட்ட ஸித்தி அஹமத்தும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறி நின்று கொண்டிருந்தான். அதுவரையிருந்த அச்சத்தாலும் மேல் நடக்கப் போவது என்னவோ ஏதோ
என்ற திகிலாலும் நிலை தவறிய பத்மினி இரண்டடி பின் நகர்ந்து மஞ்சத்தில் உட்கார்ந்து கொண்டாள். ஸித்தி அஹமத்தை நோக்கி மிக உக்கிரமாக எழுந்தது ரகுதேவின் குரல். “நான் இல்லாத சமயத்தில் உன்னை இங்கு யார் வரச்
சொன்னது?” என்று ரகுதேவ் வினவினான்.
மூர்க்கனான ஸித்தி அஹமத்தும் வீம்பை விடாமலே பதில் சொன்னான்: “இந்தப் பிராந்தியத்தில் இப்பொழுது நான் தான் அதிகாரி. தமானா பிரதேசத்தில் எங்கும் என்னிஷ்டப்படி சஞ்சரிப்பேன்.”
“மற்ற இடங்களில் நீ திரிவதைப் பற்றி எனக்கு அக்கறையில்லை. ஆனால், இந்தக் குடிசையிலிருந்து சற்று எட்டப் போவது மேல்.”
“எட்டப் போகாவிட்டால்?”
“என் பொறுமை எல்லை மீறிவிடும்.”
“மீறினால் என்ன செய்வாய்?”
“ஸித்தி அஹமத். உனக்கு நேரடியாகப் பதில் சொல்ல எனக்கிஷ்டமில்லை. இருந்தாலும் சொல்கிறேன் கேள். இன்னொரு முறை என் மனைவியிருக்கும் இடத்துக்கருகில் உன்னை நான் பார்த்தால். கண்டபடி தின்று அனாவசியமாகக்
கொழுத்திருக்கும் உன் தடி உடலுக்கும் அதற்குள்ளே ஊசலாடும் அற்ப உயிருக்கும் சம்பந்தமில்லாமல் செய்து விடுவேன்.”
“என்னை மிரட்டுகிறாயா?
“மிரட்டலல்ல, நடக்கக்கூடிய காரியத்தைத்தான் சொல்கிறேன்.”
அதைக் கேட்ட ஸித்தி அஹமத் குலுங்கக் குலுங்க நகைத்தான். எத்தனையோ வீராதி வீரர்களையெல்லாம் வெட்டிப் போட்ட தனக்கு இந்த மராட்டியன் எந்த மூலை என்று நினைத்த ஸித்தி அஹமத் சிரித்துக் கொண்டே சொன்னான்:
“ரகுதேவ், ஸித்தி அஹமத்தை மிரட்டி உயிர் வாழ்ந்தவன் இதுவரை அரபிக்கடல் பிராந்தியத்தில் நீ ஒருவன்தான். அதுவும் பின்னால் வரக்கூடிய பொக்கிஷக் கப்பல்களுக்காகவே உன் வார்த்தைகளைப் பொறுக்கிறேன். மிரட்டலிலும்
மனிதனின் தராதரத்தைப் பார்த்து மிரட்டு” என்றான்.
ரகுதேவ் தர்க்கத்தை வளர்க்க விரும்பாததால் வாயிற்படியிலிருந்து விலகி ஸித்தி அஹமத்துக்கு வழியை விட்டு, “அஹமத்! நான் நிதானத்தை அடியோடு இழக்கும் முன்பாக வெளியே போய்விடும்” என்றான். ஸித்தி அஹமத் ஒரு
விநாடி நிதானித்தான். “உம் சீக்கிரம்” என்று தடிப்பாக எழுந்தது ரகுதேவின் குரல். மீண்டும் அந்தக் குரலில் தொனித்த அதட்டல், உறுதி, கோரம், மூன்றினாலும் விஷயம் பயங்கரமான ஓர் உச்ச நிலைக்குச் செல்வதை அறிந்த ஸித்தி அஹமத்
ரகுதேவை ஒரு தடவை முறைத்துப் பார்த்து விட்டுக் குடிசையை விட்டு வெளியே சென்றான். அப்படிப் போகும்போது பீம்ஸிங் வழி மறைத்திருக்கவே ரகுதேவ் மீதிருந்த கோபத்தை அவர்மீது காட்டி அவரை இடித்துத் தள்ளிக் கொண்டு
சென்றான். அவனுடைய நடத்தை அடியோடு நாகரிகமற்றது என்று எண்ணிய பீம்ஸிங், “சுத்த காட்டுமிராண்டிப் பயல். மரியாதை தெரியாதவன்” என்று முணுமுணுத்ததுக் கொண்டே அவனைப் பார்த்தார். ஸித்தி அஹமத் அவரை
சிறிதும் லட்சியம் செய்யாமல் நடந்தாலும் இன்னொரு குரல் அவனைத் தேக்கியது. குடிசையை விட்டுப் பத்தடி தூரம் சென்று விட்ட அவனை ரகுதேவ் அழைத்து, “ஸித்தி அஹமத்! இதை மறந்துவிட்டாயே” என்றான். ரகுதேவ், எதைச்
சொல்கிறான் என்பதை அறியத் திரும்பிப் பார்த்த ஸித்தி அஹமத், தான் பத்மினிக்குக் கொடுத்த நகைகளைக் கையில் வைத்துக் கொண்டு ரகுதேவ் குடிசை வாசற்படியில் நிற்பதைக் கண்டான். அடுத்த விநாடி அந்த நகைகள் ஒன்றன்
பின் ஒன்றாகத் தன் முகத்தைத் தாக்குவதையும் உணர்ந்தான். நகைகளை ஒவ்வொன்றாக ஸித்தி அஹமத்தின் முகத்தில் வீசி எறிந்த ரகுதேவ் மேற்கொண்டு அவனைக் கவனிக்காமல் பத்மினி உட்கார்ந்திருந்த இடத்தை அணுகினான்.
அதுவரை மனத்தில் எழுந்த துக்கத்தாலும் பிறன் கை தன் மேலே பட்டதால் உண்டான வெட்கத்தாலும் கண்ணீரை உதிர்த்துக் கொண்டே மஞ்சத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி ரகுதேவ் அருகில் வந்ததும் எழுந்திருந்து அவனை நோக்கிச்
சற்றுப் பெரிதாகவே அழுதுவிட்டாள். எதற்கும் கலங்காத அந்த ராஜபுத்ர ஸ்திரீயின் அழுகையைப் பார்த்த ரகுதேவ், அவளை மஞ்சத்தில் மீண்டும் உட்கார வைத்துத்தானும் பக்கத்தில் உட்கார்ந்து அவள் மெல்லிய உடலைத் தன் மீது சார்த்தி
அணைத்துக் கொண்டான். அவள் தலை அவன் தோள் மேல் சாய்ந்து கிடந்தது. கண்ணிலிருந்து கன்னத்தில் வழிந்து உருண்டோடிய ஓரிரு நீர்த்துளிகள் அவன் அங்கியிலும் பட்டன. ரகுதேவின் இடது கரம் அவளை நன்றாகச் சுற்றி வந்து
பெரிய பாதுகாப்பை யளிக்கும் கோட்டைபோல் அபயத்தை அளித்தது. மற்றொரு கை அவள் கண்ணீரைத் துடைத்தது. “பத்மினி! ராஜபுத்ர ஸ்திரியான நீ கண்ணீர் விடலாமா?” என்று மெள்ள சமாதானப்படுத்த முயன்றான் ரகுதேவ்.
ஏதோ அமைதியான ஒரு பிராந்தியத்தை அடைந்து விட்டது போன்ற நிம்மதியை அப்பொழுதுதான் பெற்ற பத்மினி, “ராஜபுத்ர ஸ்திரீயாயிருந்தாலும் நான் பெண்தானே. என்னை இவன் ஹிம்ஸிக்கும்படியாக விட்டு எங்கு
போய்விட்டீர்கள்?” என்று வினவினாள்.
“காரியமாகத்தான் போயிருந்தேன் பத்மினி?”
“என்னைக் கப்பாற்றுவதைவிட என்ன அப்படி முக்கிய காரியம் உங்களுக்கு?”
“வேறு காரியம் இப்பொழுது கிடையாது பத்மினி. போன அலுவல்கூட உன்னைக் காப்பாற்றும் வேலைதான்.”
“ஆனால் இங்குக் கிடைத்த பலனைப் பார்த்தீர்களல்லவா?”
“பார்த்தேன் பத்மினி, பார்த்தேன், ஆனால் பொறுத்து
“எதற்கும் பொறுத்திருப்பதா?”
“பொறுக்காமல் நாம் எதையும் செய்ய முடியாது. நான் எவ்வளவு தூரம் பொறுக்கிறேன் பார். உன்மேல் ஸித்தி அஹமத் கை வைத்த பிறகும் அவனை உயிருடன் போக விட்டிருக்கிறேனென்றால் என் பொறுமையின் எல்லையை நீயே
கவனி பத்மினி.”
“கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். ஆனால் பிரதி தினமும் பெரிய கண்டமாயிருக்கும் போலிருக்கிறதே.”
“நாம் சந்தித்த நாளர்கக் கண்டம்தானே, எத்தனை எத்தனை கண்டங்களையோ தாண்டிவிட்டோம். இன்னும் சில நாட்கள், அப்புறம்.”
“அப்புறம்?” அவன் தோளில் படுத்தபடியே அவன் தலையைத் தனக்காகத் திருப்பிக் கேள்வி சொட்டும் கண்களை ரகுதேவ்மீது திருப்பினாள் பத்மினி.
“அப்புறம்?” என்ன நடக்க இருக்கிறது, என்ன நடக்குமென்பது தன் உத்தேசம் என்பதைப் பற்றி ரகுதேவ் எதுவும் சொல்லவில்லை. பதிலுக்கு அவளை இறுக அணைத்துக் கொண்டான். “என்னை நம்பு நான் காப்பாற்றுகிறேன்” என்று
சொல்வது போலிருந்தது அந்த அணைப்பு. அதனால் பெரிதும் அமைதியைப் பெற்றாள் பத்மினி. அவள் அமைதி எத்தனை அதிகமாயிற்றோ அத்தனைக்கத்தனை பீம்ஸிங்கின் அமைதி குலைந்தது. ஸித்தி அஹமத்துக்கு அடுத்தபடி
ரகுதேவ் பத்மினியிடம் உறவாடுவதையும், உறவும் அத்து மீறிப் போவதையும் கண்ட பீம்ஸிங் குடிசைக்கு வந்து, “நான் காண்பது கனவா? உண்மைதானா?” என்று பெரிதாக இரைந்தார்.
“நீர் இப்பொழுது தூங்கவில்லையே.”
“இல்லை.”
“அப்படியானால் நீர் காண்பது கனவல்ல, உண்மைதான்.”
“இதை நான் மேற்கொண்டு பொறுக்க முடியாது” என்றார் பீம்ஸிங் மிகுந்த கோபத்துடன்.
“பொறுக்க முடியாவிட்டால் உமது குடிசைக்குப் போய்ச் சேரும்” என்றான் ரகுதேவ் பத்மினியைவிடாமலே.
“விளையாடுகிறாயா? விடு பத்மினியை” என்றார் பீம்ஸிங்.
“உமது முட்டாள் தனத்தைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளும். ஸித்தி அஹமத் இன்னும் தனது இருப்பிடம் போகவில்லை. பின்னால் பாரும்” என்றான் ரகுதேவ்.
திரும்பிப் பார்த்தார் பீம்ஸிங். குடிசைக்குள் நடந்த காட்சியை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றான் ஸித்தி அஹமத். இருந்தாலும் ரகுதேவை அங்கிருந்து விலக்க இஷ்டப்பட்ட பீம்ஸிங், “அவன் போகாவிட்டால் என்ன?” என்று

.
வினவினார்.
“நானும் பத்மினியும் புருஷன் மனைவி என்று அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே விஷயம் விபரீதத்திலிருக்கிறது. புருஷன் மனைவியல்ல என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டால் பத்மினியின் கற்பு அரை விநாடி
நிலைக்குமா?” என்று கேட்டான் ரகுதேவ்.
“அப்படியானால் இப்பொழுது நடந்தது அவனுக்காக ஏற்பட்ட நடிப்புத்தானா?”
“ஆமாம்.”
“இப்படி அடிக்கடி நடித்துக் காட்ட வேண்டியது அவசியமா?”
ரகுதேவ் ஏதோ பதில் சொல்லப் போனான். ஆனால் அடுத்த விநாடி மற்றொரு விபரீதம் நிகழ்ந்தது. பத்மினி சரேலென ரகுதேவைப் பிடித்துத் தள்ளி, விலகி எழுந்து நின்று அவனையும் பீம்ஸிங்கையும் பார்த்து, “இரண்டு பேரும்
சீக்கிரம் எங்காவது தொலைந்து போங்கள். என் கண்முன்னால் வராதீர்கள்” என்று சொல்லிக் கொண்டே ரகுதேவையும் பீங்ஸிங்கையும் வெளியில் விரட்டி, குடிசைக் கதவைச் சரேலெனச் சாத்தித் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள்.
குடிசைக்கு வெளியே ரகுதேவும் பீம்ஸிங்கும் ஒருவரையொருவர் பார்த்து விழித்துக் கொண்டு நின்றனர்.
“இவள் நடத்தைக்குக் காரணம் என்னவாயிருக்கும்?” என்று பீம்ஸிங் ஆராயலானார். ரகுதேவுக்கு மட்டும் காரணம் புரிந்திருந்ததால் அவன் ஆராய்ச்சியில் ஈடுபட வில்லை. உள்ளத்தே பீறிட்டு எழுந்த சோகத்தின் அடையாளமாகப்
பெருமூச் சொன்றை விட்டுக் கலக்கம் நிறைந்த கண்களை ஆகாயத்துக்காக உயர்த்தினான்.

Previous articleJala Mohini Ch21 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch23 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here