Home Historical Novel Jala Mohini Ch24 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch24 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

63
0
Jala Mohini Ch24 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Image Title: Jala Mohini Ch24 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch24 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 24. ஆங்கரேயின் மர்மம்

Jala Mohini Ch24 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

தேசப் படத்தில் குருஜீ சுட்டிக் காட்டிய இடத்தைக் கண்டதும் கடகடவென வாய்விட்டுப் பயங்கரமாகச் சிரித்த மஹாராஷ்டிரக் கடற்படைத் தலைவனான கனோஜி ஆங்கரே, சட்டெனத் தமது சிரிப்பை அடக்கிக் கொண்டு மீண்டும்
தேசப்படத்தைக் கூர்ந்து கவனிக்கலானார். மஞ்சத்தில் உட்கார்ந்து தமக்கும் குருஜீக்கும் இடையில் படம் வரைந்த துணியை நன்றாக விரித்துப் போட்டுக் கையிலிருந்த உடைவாளால் அந்தப் படத்தில் காட்டப்பட்டிருந்த
துறைமுகங்களையும் மலை வனாந்திரங்களையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார். குருஜீயும் அந்த உடைவாளின் நுனி படும் இடங்களையெல்லாம் மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்படிக் கவனித்துக் கொண்டிருந்த போது, உடைவாள் சிற்சில இடங்களைக் குறிப்பிட்டுத் தொட்டபோதெல்லாம் குருஜியின் முகத்தில் ஆச்சரியமும் ஆனந்தமும் கலந்து தாண்டவமாடின. குருஜீ கத்தி முனை சென்றவிடங்களைக்
கவனித்ததோடு கனோஜி ஆங்கரேயின் சிந்தனை நிறைந்த முகத்தையும் அவ்வப்பொழுது பார்த்து, அந்த மஹாராஷ்டிர வீரன் புத்தி எந்தத் திக்கில் பாய்ந்திருக்கிறது என்பதை அறிய முயன்று கொண்டிருந்தார்.
ஆனால், கனோஜி ஆங்கரே முகத்திலிருந்து எதையும் குருஜீயால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்களோடு கனோஜி ஆங்கரேயின் புத்தி பூராவும் படத்திலேயே பதிந்து கிடந்ததால் முகத்தில் ஆழ்ந்த யோசனையின் ஒரு
அடையாளத்தைத் தவிர வேறெவ்வித அடையாளமும் தெரியவில்லை. கையிலிருந்த கத்தி மட்டும் புத்தியின் வேகத்தை அநுசரித்துப் படத்தின் மேல் அடிக்கடி இடம் மாறிக் கொண்டிருந்தது. கனோஜி ஆங்கரே காண்டேரித் தீவிலிருந்து நேர்
தெற்கே கத்தியைக் கொண்டுபோய் ஒருமுறை விஜயதுர்க்கத்தின் மீது நாட்டினார். பிறகு அதற்குப் பின்னாலிருந்த ஸஹ்யாத்ரி மலைத் தொடரைக். கத்தியால் தடவிப் பார்த்துவிட்டு மீண்டும் விஜயதுர்க்கத்துக்கு எதிரிலிருந்த அரபிக்
கடல் பிராந்தியத்தைக் கத்தியால் ஆழம் பார்த்தார். கத்தி மேலும் தெற்கே போய் கடைசியாக விங்குர்லா துறைமுகத்தில் நிலைந்தது. அங்கு சிந்தனையைக் கலைத்த கனோஜி ஆங்கரே குருஜியைப் பார்த்து, “குருஜீ! நம்மை விட்டுப்
போனானே அந்த அயோக்கியன் ரகுதேவ், அவன் இந்த இடத்திலிருந்துதான் கப்பலில் ஏறிச் சென்றானாம்” என்றார்.
“என்ன, விங்குர்லாவிலிருந்தா! அங்கு எதற்காகப் போனான்?” என்று ஆச்சர்யம் நிரம்பிய பார்வையுடன் கேட்டார் குருஜீ.
“விங்குர்லாவுக்கும் விஜயதுர்க்கத்துக்கும் இடையில் தான் கொள்ளைக்காரர் நடமாட்டம் அதிகம். அவர்களுடன் சேர வேண்டுமானால் அதற்குச் சரியான இடம் மால்வான் துறைமுகம். விங்குர்லாவிலிருந்து புறப்பட்டு மால்வானுக்கு
வரத் தீர்மானித்திருப்பான்” என்று விளக்கினார் கனோஜி ஆங்கரே.
“ஸித்தி அஹமத்தைப் பிடிக்குமுன் முதலில் அந்த அயோக்கியனைப் பிடித்துத் தண்டிக்க வேண்டும்” என்றார் குருஜீ.
கனோஜி ஆங்கரே மீண்டும் தன் சீரிய சிந்தனையைக் கைவிட்டுப் பலமாகச் சிரித்தார். குருஜியின் முகத்தில் ஆச்சர்யச் சாயை மீண்டும் படர்ந்தது. “எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று வினவினார்.
“இல்லை; மஹாராஷ்டிரக் கடற்கரையில் உபதலைவனாயிருந்து அதை உதறிவிட்டுக் கொள்ளைக்காரர்களைத் தேடிக்கொண்டு போனானே அந்த மேதாவி என்பதற்காகச் சிரித்தேன். அவன் நமது கையில் சிக்கினால் அவனைச் சும்மாவா
விடுவேன்? எப்பேர்ப்பட்ட தண்டனை கொடுக்கப் போகிறேனென்று நீங்களே பாருங்கள்” என்றார் கனோஜி ஆங்கரே.
குருஜீ ரகுதேவைப் பற்றிய பேச்சில் மேலே அக்கறை காட்டாமல் “சரி; அதற்கும் நாம் விஜயதுர்க்கத்தைப் பிடிப்பதற்கும் என்ன சம்பந்தமிருக்கிறது?” என்று வினவினார்.
“மிகுந்த சம்பந்தமிருக்கிறது குருஜீ. விங்குர்லாவிலிருந்து ஜலமோகினி என்ற வியாபாரக் கப்பலில் கிளம்பிய ரகுதேவ், பிறகு அரபிக் கடல் பிராந்தியத்தில் தென்படவில்லை. ஜலமோகினியும் சூரத் துறைமுகத்தை அடைந்ததாகத்
தெரியவில்லை.”
“அப்படியானால் அந்தக் கப்பல் எங்குப் போய்விட்டது?”
“அதைத்தான் நாம் கண்டுபிடிக்க வேண்டும்.”
“அதை எதற்காகக் கண்டுபிடிக்க வேண்டும்?”
“அது இருக்கிற இடத்தில்தான் ரகுதேவ் இருப்பான்.”
“இருக்கட்டுமே. இருந்தால் என்ன ஆபத்து?”
“பெரிய ஆபத்து குருஜீ.”
குருஜீ ஏதும் புரியாமல் விழித்தார். கனோஜியே விளக்கத் தொடங்கி, “நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லை போலிருக்கிறது. விங்குர்லாவிலிருந்து புறப்பட்ட ஜலமோகினி அது அடைய வேண்டிய இடத்தை அடையவில்லை.
அடைவதாயிருந்தால் நம்மைத் தாண்டித் தான் போக வேண்டும். தவிர அரபிக் கடலில் அதே சமயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஸித்தி அஹமத்தும் திடீரென மறைந்துவிட்டான். அரபிக் கடல் பிராந்தியத்தில் எங்கும் நமது வேவுப்
படகுகள் அவனைச் சந்திக்கவில்லை. விஜயதுர்க்கத்திலும் அவன் இல்லையென்று நமது ஒற்றர்கள் சொல்கிறார்கள்.”
“வேறு எங்கு போயிருப்பான்?”
“வேறு எங்கு போயிருப்பார்கள் என்று கேளுங்கள்?”
“என்ன!”
“ஆமாம் குருஜீ! ஜலமோகினியும் ஸித்தி அஹமத்தின் கப்பலும் ஏக காலத்தில் கிட்டத்தட்ட ஒரே இடத்திலிருந்து, அதாவது விஜயதுர்க்கத்துக்கும், விங்குர்லாவுக்கும் இடையிலிருந்து மறைந்திருக்கின்றன. ஆகவே அவை இரண்டும்
எங்கிருந்தாலும் ஒன்றாகத்தானிருக்க வேண்டும். ரகுதேவை நாம் கண்டுபிடித்தால், ஸித்தி அஹமத்தை நாம் கண்டு பிடித்த மாதிரிதான். ஒரு திருடன் இருக்கிற இடத்தில்தான் இன்னொரு திருடனும் இருப்பான்.”
“எந்த இடத்தில் இருவருமிருப்பார்களென்று ஊகிக்கிறாய்?”
கனோஜி ஆங்கரே மீண்டும் தேசப்படத்தை ஊன்றிக் கவனித்துவிட்டுத் தலையை ஆட்டி, “நிச்சயமாக எதுவும் சொல்ல முடியாது குருஜீ! ஆனால் விஜயதுர்க்கத்தைத் தாக்க இன்றே புறப்படுகிறேன்.” என்று கூறிவிட்டு குருஜீயை ஏற
இறங்கப் பார்த்தார்.
குருஜியின் முகத்திலும் தீவிர யோசனை படரலாயிற்று. சிறிது நேரம் சிந்தித்த பின் கேட்டார். “ஆமாம் விஜயதுர்க்கத்தைத் தாக்கினால்தான் ஸித்தி அஹமத் பின்னால் வந்து தாக்குவானென்று சொன்னாயே?”
“தாக்கலாம். ஆனால், தாக்க வழியில்லாமல் செய்துவிடுகிறேன்.”
“எப்படி?”
“தாங்கள் தான் அதற்கு இடத்தைக் காட்டிவிட்டீர்களே?”
குருஜியின் முகத்தில் சந்தோஷச் சாயை தாண்டவ மாடியது. கனோஜி ஆங்கரே என்ன செய்ய முயல்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துக் கொண்டாலும், அவர் வாயின் மூலமாகவே அந்தத் தகவலைக் கேட்க வேண்டும் என்ற ஆவலால்,
“சரியாக விளங்கச் சொல்” என்று வினவினார்.
“குருஜீ! இதோ பாருங்கள். இதுதான் விஜயதுர்க்கம். நான் அழைத்துச் செல்லும் படையின் ஒரு பகுதி விஜயதுர்க்கத்தைத் தாக்கிப் பிடிக்கும். இன்னொரு பகுதியை நான் வெளியே தங்க வைத்து ஸித்தி அஹமத்துக்காகக் காத்திருப்பேன்.
அவன் படைகள் விஜயதுர்க்கத்தை எட்டியதும் நான் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து வெளியே வருவேன். துறைமுகத்திலுள்ள என் கப்பல்களும், நான் மறைவிடத்திலிருந்து அழைத்துச் செல்லும் கப்பல்களுக்கும் இடையே ஸித்தி
அஹமத்தின் கப்பல்கள் அகப் பட்டுக்கொள்ளும். அப்புறம் அவனைப் பொசுக்கித் தள்ளுவது மிகச் சாதாரண வேலை” என்றார் கனோஜி ஆங்கரே. பகலப்பக்கம்
“பேஷ் பேஷ்!” என்று மிகுந்த குதூகலத்துடன் ஆமோதித்த குருஜீ, “அப்படியானால் எப்பொழுது புறப்பட உத்தேசம்?” என்று வினவினார்.
“இன்னும் சிறிது நேரத்தில்.”
“என்ன இன்னும் சிறிது நேரத்திலா?” வியப்பில் ஆழ்ந்தார் குருஜீ.
“ஆம், குருஜீ! எனது கப்பல்கள் சென்ற மூன்று நாட்களாகப் பிரயாணத்துக்குத் தயாராக இருக்கின்றன.”
“அப்படியானால் ஏன் புறப்படவில்லை?”
“காரணமாகத்தான்.”
“என்ன காரணமோ?”
“இன்னும் மூன்று நாட்களிலே நீங்களே புரிந்துகொள்வீர்கள்.”
கனோஜி ஆங்கரே எதற்காவது பதில் சொல்ல விரும்பவில்லை என்றால், அதைப் பற்றி பன்முறை கேட்டாலும் பயன் ஒன்றுதானென்பதை அறிந்து கொண்டிருந்ததால் குருஜீ வேறெதுவும் பேசவில்லை. கனோஜி ஆங்கரே மட்டும் மிகத்
துடிப்புடன் ஆசனத்திலிருந்து எழுந்திருந்து. “டேய் யாரங்கே?” என்று கூவினார். சிறிது நேரத்திற்கெல்லாம் வாயிற்படியில் வணங்கி நின்ற மாலுமியை நோக்கி, “சீக்கிரம் நமது உபதளபதியை வரச்சொல்” என்று உத்தரவிட்டார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் உபதளபதியும் வந்து சேர்ந்தான். கனோஜி ஆங்கரே அவனை நோக்கி, “நமது கப்பல்கள் எத்தனை மணி நேரத்தில் புறப்பட முடியும்?” என்று கேட்டார.
“இந்த விநாடிகூடப் புறப்படலாம். உணவு வகை யறாக்களும் தண்ணீரும் சேகரிக்கப்பட்டு விட்டன. பீரங்கிகளுக்கு வேண்டிய வெடி மருந்தும் பீப்பாய்களில் நிரப்பப்பட்டு அடித்தளங்களில் தயாராயிருக்கின்றன” என்று பதில்
கூறினான்.
“அப்படியானால் இன்னும் அரைமணி நேரத்தில் புறப்படுவோம். ஆறு போர்க் கப்பல்கள் புறப்பட்டால் போதும்.’
“சரி.”
“படையை இரண்டாகப் பிரித்துவிடு. ஒன்றைக் கரையோரமாக விஜயதுர்க்கம் அழைத்துச் செல்.”
“உத்தரவு.”
“இன்னொன்றை நான் கரைக்குச் சற்றுத் தள்ளி அழைத்துச் செல்கிறேன்.”
“சரி மஹாப்பிரபு.”
“நீ விஜயதுர்க்கத்தைத் தாக்கிப் பிடி.”
“பாக்கியம்.”
“நான் என்ன செய்யப்போகிறேனென்று கேட்கவில்லையே.”
“தாங்கள் சொல்லவில்லை.”
“தமானா நதிப் பிரதேசம் தெரியுமா?”
“தெரியும் மஹாப்பிரபு.”
“அங்கு தங்கினால் நமது கப்பல்கள் யாருக்கும் தெரியாது.”
“ஆம்.”
“உனக்கு உதவுவதானால் நான் திடீரென்று அந்த இடத்திலிருந்து வெளி வரவும் முடியும்.”

.
“ஆமாம்.”
“நான் நேரே தமானா நதிப் பிராந்தியத்துக்குச் சென்று அங்கு பதுங்கியிருக்கிறேன்.”
“சரி” என்று சொல்லிவிட்டுச் சென்றான் உபதளபதி.
அரை மணி நேரத்திற்கெல்லாம் ஆங்கரேயின் ஆறு கப்பல்கள் மும்மூன்றாகப் பிரிந்து பாய் விரித்துத் தெற்கு நோக்கி ஓடின. கப்பலின் இரண்டாம் நாள் பிரயாணத்திலிருந்தே கனோஜி ஆங்கரே தளத்துக்கு அடிக்கடி சென்று
தூரதிருஷ்டிக் கண்ணாடியில் வெகுநேரம் எதையோ பார்த்துக் கொண்டு நின்றார்.
அந்தத் தூரதிருஷ்டிக் கண்ணாடி மூலம் அவர் எதைப் பார்க்க முயற்சிக்கிறார் என்பது குருஜீக்குப் புரியாமற் போகவே கேட்டார்: “எதைப் பார்க்க முயல்கிறாய் கனோஜி” என்று.
கனோஜி ஆங்கரே பதில் சொல்லவில்லை. குருஜீயைப் பார்த்து அர்த்தமற்ற புன்முறுவல் ஒன்றை மட்டும் வீசினார். கனோஜி எதையோ தம்மிடமிருந்து மறைக்கப் பார்க்கிறார் என்பதை மட்டும் குருஜீ சந்தேகமறப் புரிந்து கொண்டார்.

Previous articleJala Mohini Ch23 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch25 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here