Home Historical Novel Jala Mohini Ch26 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch26 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

143
0
Jala Mohini Ch26 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch26 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch26 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 26. வலுச் சண்டை

Jala Mohini Ch26 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ரகுதேவின் பேச்சும் போக்கும் பீம்ஸிங்குக்கு அடியோடு புரியவில்லை. ‘மூன்று அல்லது நான்கு நாட்களுக்குத்தான் ஸித்தி அஹமத்திடம் பயம் என்று சொன்னானே, பிறகு எப்படி அந்தப் பயம் தீர்ந்து விடும்?’ என்று எண்ணிப்
பார்த்தார். அவர் சம்பந்தப்பட்ட வரையில் பயம் தீருவதற்கான அறிகுறிகள் எதையுமே காணோம். தமது குடிசைக்குப் பின்னாலிருந்த பயங்கரக் காடோ, அல்லது அதற்குப் பின்புறம் ஆகாயத்தைத் தொட்டு நின்ற மலைகளோ, எதிரே
தமானாவும் கடலும் கலக்கும் ஜலப்பிரதேசமோ, நதிக்கரையில் வேலை செய்து கொண்டும் செய்யாத சமயங்களில் குடித்தும் கூத்தாடித்துக் கொண்டுமிருந்த கொள்ளைக்காரர்களோ பயம் தீருவதற் கான அம்சங்களாக அவர் புத்திக்குப்
படவில்லை. சுற்றிலும் ஆபத்தைத்தான் அவர் கண்கள் கண்டறிந்தன. கண்கள் கண்டறிந்ததற்கு அப்பால் ஏதாவதிருக்கிறதா என்று ஆராய்ந்த மூளையும் எதுவும் இல்லையென்ற முடிவுக்கே வந்ததால் ரகுதேவ் ஏதோ சமயத்துக்குத்
தகுந்தபடி பேசுகிறானேயொழிய உண்மையில் மூன்று நான்கு நாட்களில் நிலைமை மாறுவதற்கான விசித்திரம் எதுவும் நிகழ்ந்து விடாது என்ற தீர்மானத்துக்கு வந்தார். அதன் விளைவாக ரகுதேவின்மேல் ஏற்கனவே இருந்த வெறுப்பு
அதிகமாகிய தன்றி, இப்பேர்ப்பட்டவன் பேச்சைக் கேட்டுத் தமானாவில் வந்து மாட்டிக் கொண்டோமே என்றும் எண்ணிப் பெருமூச்சு விட்டார். ரகுதேவும் தாமும் அகஸ்மாத்தாகவே ஜலமோகினியில் சந்தித்த பேர்வழிகளென்பதையும்,
சந்தர்ப்பவசங்களாலேயே தாங்கள் அப்பொழுது தமானாவில் இருக்க நேர்ந்திருக்கிறது என்பதையும் பீம்ஸிங் அறவே மறந்தார். ஒரு மனிதனைப் பிடிக்கவில்லையென்றால் மனம் அவன்மீது இல்லாத குறைகளையெல்லாம் சுமத்துகிறது.
அவன் செய்த நன்மைகளையும் மறக்கிறது. அத்தகைய நிலைமைக்கு வந்துவிட்ட பீம்ஸிங் ரகுதேவை மனமாரச் சபித்தார். இத்தனை லட்சணத்தில் பத்மினியையும் தம்மையும் கொண்டுவந்து மாட்டி வைத்துவிட்டு அவன் தம்மை விடப்
பெரிய மனிதன் போல் நடப்பதையும் நினைக்க நினைக்க அவருக்கு ரகுதேவ் மேலிருந்த எரிச்சல் அதிகமாகவே, ஜலக்கரைக்குச் சென்றுகொண்டிருந்த ரகுதேவ்மீது கண்களை ஒட்டி, ‘அடிக்கடி இவன் எதற்காக ஜலக்கரைக்குப் போகிறான்’
என்று தம்மைத் தாமே கேட்டுக் கொண்டார். அதற்குச் சரியான விடை கிடைக்காமற் போகவே ரகுதேவையே சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்துவிட்டுத் தமது குடிசைக்காகத் திரும்பிச் சென்றார்.
இத்தகைய எண்ணங்களில் பீம்ஸிங்கைச் சுழலவிட்டு ஜலக்கரையை நோக்கிச் சென்ற ரகுதேவின் மனமும் ஒரு நிலையில் இல்லாமல் எங்கெங்கோ சஞ்சரித்துக்கொண்டு தானிருந்தது. ஸித்தி அஹமத் பத்மினியைத் தொட்டுப் பிடித்த
காட்சி திரும்பத் திரும்ப அவன் மனத்தில் எழுந்து அவன் உள்ளத்தைப் பலப்பல ஈட்டிகளால் குத்தி விவரிக்க வொண்ணாத வேதனையை விளைவித்துக் கொண்டிருந்தது. பத்மினியின் எதிரில், பத்மினியின் நன்மை ஒன்றை மட்டும்
உத்தேசித்துக் கொண்டே, ரகுதேவ் தனிமையில் வந்ததும் அந்த உணர்ச்சிகளால் தாக்கப்பட்டு, சுயநிலையைப் பெரிதும் இழந்தவனானான். அத்தகைய கலக்கமான நிலையில் தமானா நதிக்கரையில் எங்கு போகிறோமென்பதை அறியாமலே
அங்குமிங்கும் நடந்து சென்ற ரகுதேவைப் பல மாலுமிகள் அழைத்தார்கள். பலர் சிரித்து ஏதோ பரிகாசம் செய்தார்கள். அத்தனைக்கும் பதிலேதும் சொல்லாமலும் தலையை நிமிர்த்தாமலும் பூமியைப் பார்த்துக் கொண்டே சென்றான்
ரகுதேவ். அவன் மனோநிலைக்குக் காரணத்தை அறியாத மாலுமிகள் சிலர் அவனைப் பிரமித்துப் பார்த்தார்கள். கப்பல் அடித்தளங்களுக்கு ஆணியடித்துச் செப்பனிட்டுக் கொண்டிருந்த சில மாலுமிகள் அவனை ஏறெடுத்துப் பார்த்து
ஒருவருக்கொருவர் ஏதோ கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் பார்வையையோ பேச்சையோ கவனியாமல் நேராக நதியின் மேற்குக் கோடிக்குச் சென்று ஒரு மூலையில் நின்று கொண்ட ரகுதேவ் கடலின் பக்கம் சிறிது நேரமும் காட்டின்
பக்கம் சிறிது நேரமும் கண்களைச் சுற்ற விட்டான். இரண்டு பக்கங்களையும் கவனித்தபின் பெரு மூச்சு விட்டுக் காட்டின் பக்கமாகக் காலடி எடுத்து வைத்த சமயத்தில் காட்டின் அந்தப் பகுதியிலிருந்து ரஜனிகாந்த் எட்டிப் பார்த்துக்
காட்டுக்குள் வரும்படி சைகை செய்தான். அதுவரை மனத்தைத் தாக்கி நின்ற உணர்ச்சிகளைத் தூரக் கட்டி வைத்துவிட்டு வெகு துரிதமாக ரஜனிகாந்த் இருந்த இடத்திற்குச் சென்ற ரகுதேவ், “என்ன, ஏதாவது விசேஷமுண்டா?” என்று
வினவினான்.
பதிலுக்கு ரஜனிகாந்த் காட்டின் தெற்குப் பக்கமாக எழுந்து நின்ற மரங்களின் உச்சாணிக்காகக் கைகளை உயர்த்திக் காட்டினான். காட்டின் அந்தப் பக்கத்தில் மெல்லிய புகைத் திரையொன்று கிளம்பி ஆகாயத்துக்காகச் சென்று
கொண்டிருந்தது. புகை கிளம்பிய இடத்துக்கும் தாங்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கும் சுமார் ஒன்றரை மைல் தூரமிருக்கலாம் என்பதை ரகுதேவ் தீர்மானித்துக் கொண்டு எதனால் அந்தப் புகை கிளம்பி இருக்கிறதென்பதை அறிய
விரும்பி ரஜனிகாந்தை நோக்கி, “இதென்ன ரஜனிகாந்த் இது ஏது புகை? காடு எங்கேயாவது தீப்பிடித்து இருக்குமோ?” என்று வினவினான்.
“இல்லை, மகராஜ்! இது காட்டுத் தீயால் ஏற்பட்ட புகையல்ல. அதோ பாருங்கள்! புகை செங்குத்தாகச் செல்கிறது. காட்டுத் தீயானால் நாலா பக்கத்திலும் நெருப்பு பரவி புகை பரவலாயிருக்குமே” என்றான் ரஜனிகாந்த்.
“அப்படியானால் யாராவது வேண்டுமென்று புகை கிளப்பியிருப்பார்களா?” என்று திரும்பவும் கேட்டான் ரகுதேவ்.
“ஆமாம் மகராஜ். வேண்டுமென்றே கிளப்பப்பட்ட புகைதான் இது.”
“யார் கிளப்பியிருப்பார்கள்? ஏதாவது ஊகிக்க முடியுமா?”
“ஊகிக்க வேண்டாம். நிச்சயமாகத் தெரியும்.”
“யாரது?”
“நான்தான்!”
ஸ்தம்பித்துச் சற்று நேரம் நின்றுவிட்டான் ரகுதேவ் “நீயா! எதற்காகப் புகை கிளப்பியிருக்கிறாய்?” என்று சிறிது நேரத்திற்குப் பிறகு வினவினான்.
“புகை எதற்காகப் போடுவார்கள்? கொள்ளைக்காரர்கள் ஒருவர் உதவிக்கு இன்னொருவரை அழைக்கப் புகை போட்டுத்தானே இருப்பிடத்தை உணர்த்துவது வழக்கம்?”
“ஆமாம். இப்பொழுது யாரை இங்கு வரவழைக்கப் புகை கிளப்பியிருக்கிறாய்?”
“புகை எழுந்தால் கடலில் மூன்று நான்கு மைல்களுக்குள் சஞ்சரிக்கும் எல்லாக் கப்பல்களுக்கும் தெரியும். ஏதோ ஆபத்தென்று உதவிக்கு வருவார்கள். நாம் அவர்கள் உதவியைக் கொண்டு ஸித்தி அஹமத்தைச் சமாளிக்கலாம்.”
ரகுதேவுக்கு ஆத்திரம் பொங்கிக்கொண்டு வந்தது. “அட முட்டாள்! ஸித்தி அஹமத்தை யார் இங்கு அணுக முடியும்? தமானா முகத்துவாரத்தைத்தான் ஜலமோகினி காத்து நிற்கிறதே. அதன் பீரங்கிகளைத் தாண்டித்தானே இங்கு
யாராவது நுழைய வேண்டும்?” என்று வினவினான் ரகுதேவ். என்றும் இரைந்து சிரிக்காத ரஜனிகாந்த் இந்தப் பதிலைக் கேட்டதும் கடகடவென நகைத்து, “மகராஜ் அதோ பாருங்கள்” என்று ஜலமோகினியைச் சுட்டிக் காட்டினான்.
ஜலமோகினியைக் கவனித்த ரகுதேவின் பிரமிப்பு உச்சநிலையை அடைந்தது. ஸித்தி அஹமத் மிகத் துரிதமாக வேலை செய்கிறானென்பதையும் ஏதோ திட்டத்துடனேயே ஜலமோகினிக்கு ஆட்களை அனுப்பியிருக்கிறா னென்பதையும்
உணர்ந்து கொண்டான். உணர்ந்து கொண்ட பின்பு அங்கிருந்து நகராமல், “சரி ரஜனிகாந்த்! நீ போய் பத்மினியைப் பார்த்துக்கொள். நான் சாப்பிட வரவில்லையென்று சொல்லிவிடு!” என்று சொல்லிவிட்டுத் தமானாவின் அந்த
முனையிலேயே நின்று கொண்டு ஜல மோகினியில் என்ன நடக்கிறதென்பதைக் கவனிக்கலானான்.
ஜலமோகினியை நோக்கிப் பத்து படகுகள் விரைந்து கொண்டிருந்தன. அந்தப் பத்துப் படகுகளிலும் தச்சர்கள் உட்பட சுமார் நாற்பது மாலுமிகள் சென்று கொண்டிருந்தார்கள். படகுகள் கப்பலை அணுகியதும் மாலுமிகள்
துரிதமாகக் கப்பலில் பாய்ந்து ஏறியதையும், கப்பலின் பக்கவாட்டுகளில் ஏதோ வேலை ஆரம்பமாகியதையும் ரகுதேவ் கவனித்தான். சமார் அரைமணி நேரத்திற்கெல்லாம் ஜலமோகினியின் பீரங்கிகளில் நான்கு கழற்றப் பட்டுப் படகுகளில்
இறக்கப்பட்டதையும் பார்த்தான். ஜல மோகினிக் கப்பலிலுள்ள பீரங்கிகளைக் கழற்றித் தரைக்குக் கொண்டு போகவே ஸித்தி அஹமத் ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்ட ரகுதேவின் முகத்தில்
சந்தோஷச் சாயை பரவலாயிற்று. அந்தச் சந்தோஷத்தின் காரணமாக மனத்திலிருந்த கவலைகள் சிறிது கலையவே ரகுதேவ் தமானா முனையை விட்டுத் திரும்பி மாலுமிகள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தான்.
உச்சி வேலை சமீபித்துவிட்டதால் ஆதவனின் சுடு கிரணங்கள் தங்கள் உக்கிரத்தைப் பூராவாகத் தமானா நதிக் கரையின் மீது காட்டத் தொடங்கின. மாலுமிகளும் பகல் போஜனத்துக்காக வேலையை நிறுத்தி துல்யமான தமானாவின்
நீரில் கைகால் முகங்களைக் கழுவ ஆரம்பித்தார்கள். அவர்களை எதிர்பார்த்துத் தூரத்திலுள்ள சமையல் பட்டறையில் நாலைந்து ஆடுகள் வெந்து கொண்டிருந்தன. அவற்றின் வாசனை நதிக்கரையை எட்டஎட்ட, மிகத் துரிதமாக
மாலுமிகள் தேகத்தைக் கழுவி மேற்குக் கரையில் ஆதிகாலந் தொட்டு சகஜமாகக் கிடைத்து வந்த ‘தோர்த்து முண்டு’ காளால் (துடைக்கும் துண்டுகள்) உடம்புகளைத் துடைத்துக் கொண்டு போஜன சாலையை நோக்கிச் சென்றார்கள்.
இத்தனையிலும் ஜலமோகினிக்குச் சென்ற பத்துப் படகுகள் மட்டும் வேகம் குன்றாமல் அலுவல் புரிந்து கொண்டிருந்ததை ரகுதேவ் கவனித்தான். எப்படியும் இரண்டு மணி நேரத்தில் கப்பலிலிருந்து பீரங்கிகள் காலியாகிவிடும்
என்பதை அறிந்து அதற்குப் பிறகு ஸித்தி அஹமத்தைச் சந்திக்கலாம் என்று திட்டம் போட்டுக் கொண்டு பத்மினியின் குடிசைக்காகத் திரும்பினான் ரகுதேவ். ஆனால், ஸித்தி அஹமத்தின் திட்டம் வேறாயிருந்தது.
நகைகளால் அடிபட்ட நிமிஷத்திலிருந்து பெரிய வெறியனாக மாறிவிட்ட ஸித்தி அஹமத், ரகுதேவின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தானிருந்த இடத்திலிருந்து கவனித்துக் கொண்டிருந்தான். ரகுதேவும் பீம்ஸிங்கும் ஏதோ
பேசியதையும், பேசிய பின்பு ரகுதேவ் நதியின் மேற்கு முனைக்குச் சென்றதையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். ரஜனிகாந்தும் ரகுதேவும் சந்தித்தது மட்டும் அவன் கண்களுக்குப் புலப்படவில்லை. ரஜனிகாந்த்
ரகுதேவைச் சந்தித்த இடம் ஸித்தி அஹமத்தின் குடிசைக்குப் பின்புறமாகக் காட்டிற்குள் அமைந்திருந்ததால் அங்கு என்ன நடந்ததென்பதைப் பூர்ணமாக அவனால் அறிய முடியவில்லை. ரகுதேவ் நதியின் மேற்கு முனையிலிருந்து
திரும்பிக் காட்டிற்குள் சென்றதை மட்டுமே அவன் கவனித்தான். திரும்பிச் சிறிது நேரம் கழித்து ரகுதேவ் கரையோரமாக நடந்து வந்ததும் கண்ணில் பட்டது. இடையே நிகழ்ந்தவை கண்ணில் படவில்லை. இடையே என்ன நிகழ்ந்திருக்கும்
என்பதை ஆராயும் தன்மையிலும் அவன் மனோநிலை அப்பொழுது அமையவில்லை. எங்கு போயிருந்தாலும் போகாமற்போனாலும் ஜலமோகினியின் பீரங்கிகள் அப்புறப் படுத்துவதை ரகுதேவ் பார்த்திருப்பானென்பதும்,
அதனால் பெரிதும் இடிந்து போயிருப்பானென்பதும், ஸித்தி அஹமத்தின் நம்பிக்கை. மாலுமிகளை இவன் கதை சொல்லித் தன் பக்கமிழுத்து, அவர்களில் சிலர் அவனிடம் நிஜமாகவே மயங்கி அவன் உத்தரவுப்படி கப்பலை நடத்திச் செல்ல
முன் வந்தாலும், பீரங்கிப் பாதுகாப்பில்லாத கப்பலே அவனிடம் கிட்டுமென்பதையும் அத்தகைய ஒரு கப்பலைக் கொள்ளைக்காரர் நிறைந்த அரபிக் கடலில் கொண்டு செல்ல ரகுதேவ் ஒருகாலும் சம்மதிக்கமாட்டானென்பதையும்
நினைத்து ஸித்தி அஹமத் பெருமகிழ்ச்சி அடைந்ததோடு ரகுதேவின் சூழ்ச்சிப் படகிலிருந்து முக்கிய ஆணிகளைத் தான் கழற்றி விட்டதை எண்ணிப் பெருமிதமும் கொண்டான். அடுத்த படியாக ரகுதேவை மடக்குவதற்கென ஒரு
திட்டமும் தயாரித்து, ரகுதேவ் குடிசையை நோக்கித் திரும்ப எத்தனித்த சமயத்தில் அவனைத் தடுத்து நிறுத்த தன் குடிசையிலிருந்து வெகு வேகமாகக் குறுக்கே பாய்ந்து வந்தான்.
அவன் வந்த சமயம் மாலுமிகள் குளியலை முடித்துக் கொண்டு கரையேறிய சமயம். கரையிலிருந்து சற்று தூரத்தில் நடந்து சென்ற ரகுதேவைக் கையைத் தட்டிக் கூப்பிட்டான் ஸித்தி அஹமத். ரகுதேவ் தோளின் பின் புறமாகத்
தலையைச் சற்றே திரும்பிப் பார்த்தான். கிட்டே வருமாறு சைகை செய்தான் ஸித்தி. ஸித்தி அஹமத்தின் கண்களிலிருந்த வெறியையும் அவன் மூர்க்கத்தனமாக ரகுதேவை வரும்படி அழைத்த தோரணையையும் கண்ட மாலுமிகள் ஏதோ
தகராறுக்கு அவன் பூர்வ பீடிகை போடுகிறானென்பதை உணர்ந்து கூட்டமாகச் சேரலானார்கள். தூரத்தே இருந்து இதைக் கவனித்த ஒற்றைக் கண் ரஹீம் கூட அந்த இரு விரோதிகளும் சந்திக்க இருந்த ஸ்தலத்தை நோக்கி விரைந்தான்.
ஆனால், அவன் வருவதற்குள் காரியம் ஓரளவு மிஞ்சிவிட்டது. தன் அழைப்புக்கிணங்கி நெருங்கி வந்த ரகுதேவை நோக்கி, “அத்தனை நேரம் இவர்களுடன் என்ன பேசிக் கொண்டிருந்தாய்?” என்று ஸித்தி அஹமத் மிகக் கடுமையான
குரலில் கேட்டான்.
ரகுதேவ் பதிலேதும் சொல்லாமலே புன்முறுவல் செய்தான்.
“ஏன் சிரிக்கிறாய்?” என்றான் கோபம் மீறிய குரலில் ஸித்தி அஹமத்.
“வலுச் சண்டைக்கு இழுக்க வேறு வழி எதுவும் உனக்குப் புரியவில்லையே என்பதற்காக நகைத்தேன்.” என்றான் ரகுதேவ்.
“நீ சொல்வது புரியவில்லை.”
“நீ இருக்கும் நிலையில் புரியாது. உதாரணமாக இதோ பார், நீ என் குடிசைக்கு வந்து சென்றது முதல் நான் இவர்கள் யாருடனும் பேசவேயில்லை. என்ன பேசிக் கொண்டிருந்தேனென்று விசாரிக்கிறாய். உனக்கு வேண்டியது என்னுடன்
வலுச்சண்டை. அதற்குக் காரணம் தேடுகிறாய். ஆனால், உனக்குச் சரியான காரணம் கிடைக்கவில்லை. ஏன் தெரியுமா?”
“ஏன்?”
“உன் மூளை அவ்வளவு கட்டை.”
அடுத்த வினாடி நிகழ்ந்த நிகழ்ச்சியால் மாலுமிகள் திக்பிரமையடைந்து நின்றனர். தூரத்தே இருந்து வேகமாக ஸ்தலத்தை அடைந்த ரஹீம், தான் கொண்ட அச்சத்தால் அசைவற்று நின்றுவிட்டான். அந்த நிகழ்ச்சியின் விளைவு
விபரீதந்தான் என்பதில் யாருக்குமே சந்தேகமில்லை.

Previous articleJala Mohini Ch25 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch27 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here