Home Historical Novel Jala Mohini Ch29 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch29 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

65
0
Jala Mohini Ch29 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch29 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch29 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 29. வடக்கத்திக் காற்றும் வாட்போரும்

Jala Mohini Ch29 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஆம்; திகைக்கும்படியான நடவடிக்கைதான் அது. ஆனால், அத்தனை சீக்கிரம் அந்த நடவடிக்கை தொடங்கும் என்பது அதைத் தொடங்கிய ரகுதேவுக்கே தெரியாது. எப்படித் தெரியும்? இயற்கை வகுக்கும் திட்டங்கள் மனிதனுக்கு
எப்படித் தெரியும்? விதி வகுக்கும் திட்டங்களை மனித புத்தி எப்படி அளவிட முடியும்? அரபிக் கடலில் தென்றல் அடிக்க வேண்டிய காலத்தில் வடக்கத்திக் காற்று வரும் என்று யார்தான் எதிர்பார்க்க முடியும்? எதிர்பாராமல் உலகத்தில்
நடக்கும் விசித்திரங்கள் எத்தனையோ இருக்கின்றன. அதில் அந்த வடக்கத்திக் காற்றும் ஒன்றாக இருந்திருக்க வேண்டும்! இரண்டு நாளில் நடவடிக்கையைத் தொடங்குவேன் என்று ரகுதேவ் பத்மினியிடம் சொன்னதென்னமோ
உண்மைதான். ஆனால், தொடங்க முடியும் என்று அந்தச் சமயத்தில் அவனே நம்பவில்லை. வடக்குக் காற்று அத்தனை சீக்கிரம் வரும் என்று அவன் மனத்தால் கூட நினைக்கவில்லை.
அவனையறியாமலே காற்று திரும்பிவிட்டது. குடிசை வாசலில் பத்மினியுடன் இணைந்து உட்கார்ந்து அவன் பேசிக் கொண்டிருந்த அந்தச் சில மணி நேரங்களிலேயே மாறிவிட்டது. காற்று, எந்தத் திக்கில் எந்த நிமிஷத்தில் திரும்பினாலும்
சட்டென்று தெரியக்கூடிய அளவுக்கு உணர்ச்சிகளைத் தீட்டிக் கொண்டிருந்த மாலுமியான ரகுதேவுக்குப் பத்மினியுடனிருந்த அந்தச் சில மணி நேரங்களில் எதுவுமே தெரியவில்லை. பத்மினியின் சமீபத்தினாலும் அவள் பேச்சிலிருந்த
குழைவினாலும், சொற்களில் தொனித்த அர்த்தத்தினாலும் உள்ளத்தே பெரிய சூறாவளி எழுந்து அடித்துக் கொண்டிருந்ததால், வெளியே திசை மாறிய காற்றின் தன்மையை அறிய அவன் புத்தி சக்தியிழந்து கிடந்தது. அவள் கையைத்
தன் கைக்குள் அடக்கிக் கொண்டு இன்ப வேதனையில் ஆழ்ந்து கிடந்த அவன் உணர்ச்சிகள் அவள் பேச்சுகளைக்கூட காதில் விழாமல் அடித்தன. “இரண்டு நாட்களில் என்ன நடக்கப் போகிறது?” என்ற வினாவுக்கு அவன் உடனே பதில்
சொல்லவில்லை. வாளாவாகவே உட்கார்ந்திருந்தான்.,
பத்மினி தன் அஸ்திரங்களை அவன் மீது அள்ளிச் சொரிந்தாள். அவள் உடல் அவன் மீது நன்றாகச் சாய்ந்து உராய்ந்தது. அவன் கைக்குள் சிறைப்பட்டிருந்த அவள் பூங்கரம் ஒருமுறை சுழன்றது. கன்னத்தோடு ஒட்டியிருந்த மலர்க்
கன்னம் கொஞ்சம் பின்வாங்கி மீண்டும் கன்னத்தில் அழுந்தியது. அவள் இதழ்களிலிருந்து கொஞ்சலாக உதிர்ந்த வார்த்தைகள் ஏதோ வனப்பறவையின் சப்தம் போல் காதுக்கருகில் கேட்டன.
“இரண்டு நாட்களில் என்ன நடக்கப் போகிறது? சொல்லமாட்டீர்களா?” கேள்வியை இரண்டாம் முறை வீசினாள் பத்மினி.
அந்த இன்ப நிலையிலிருந்து விடுபட இஷ்டப்படாமல் அப்படியும் இப்படியும் சிறிதும் அசையாமல் எதிரே தமானாவின் சிறு அலைகளில் கண்களை ஓட்டியபடியே சொன்னான் ரகுதேவ்: “என்னை இப்பொழுதொன்றும் கேட்காதே
பத்மினி! இரண்டு நாட்களில் நீயே புரிந்து கொள்வாய்.”
“என்னிடம் நம்பிக்கையில்லையா உங்களுக்கு?” பத்மினியின் கேள்வியில் கோபம் தொனித்தது.
“இல்லையென்று யார் சொன்னது?” பரிதாபமாக இருந்தது ரகுதேவின் பதில்.
“இருந்தால் ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்?”
“பெண்களிடம் சில விஷயங்களைத்தான் சொல்லலாம்.”
“ஊரிலிருந்தால் நீங்கள் சொல்வது சரி; இங்கென்ன?”
“நீ சொல்வது புரியவில்லையே?”
“பெண்களிடம் ரகசியம் நிற்காது. ஊரிலிருந்தாலாவது மற்றப் பெண்களிடம் சொல்லி விடுவேன். ஆகையால் ரகசியம் அம்பலமாகிவிடும் என்று நீங்கள் பயப்படுவதில் அர்த்தமிருக்கும். இந்தக் காட்டில் யாரிருக்கிறார்கள்? ரஜனிகாந்த்
உங்களைவிட அழுத்தம், பேசமாட்டான். பீம்ஸிங் சளசளவென்று பேசுவார். அவரிடம் நான் சொல்லமாட்டேன். வேறு யார்? ஒரு வேளை ஸித்தி அஹமத் திடம் சொல்லி விடுவேனென்று பயமோ?” இதைச் சொல்லி லேசாகச் சிரித்தாள்
பத்மினி.
அந்தச் சிரிப்பிலிருந்த சிலம்பொலி ரகுதேவை மீண்டும் அவள் மோக வலைக்குள் இழுத்துச் சென்றாலும் அவன் மெள்ள நிதானித்துக் கொண்டு, “நீ யாரிடமும் சொல்வாயென்ற பயமில்லை பத்மினி. இருந்தாலும் உன்னிடம் கூட நான்
சொல்ல இஷ்டப்படவில்லை. ஏனென்றால் எனக்கே நிச்சயமாகத் தெரியாது. எல்லாம் காற்றைப் பொறுத்திருக்கிறது.”
“காற்றையா?” ஆச்சரியத்துடன் கேட்டாள் பத்மினி.
“ஆமாம்.”
“காற்று என்ன செய்யும்?”
“திசை திரும்பும்?”
“திசை திரும்பினால்?”
“சில நிகழ்ச்சிகள் ஏற்படலாம். அதுவும் ஊகந்தான்” என்று சொல்லி, அவள் கரத்தைச் சற்று அழுத்திக் கொடுத்தான் ரகுதேவ். தொட்டால் சிணுங்கிச் செடி போல் அவனிடமிருந்து விலகிக்கொண்ட பத்மினி, அவன் கையிலிருந்த தன்
கையை இழுத்து மடியில் வைத்துக் கொண்டாள். பிறகு இருவரும் வெகுநேரம் பேசவில்லை. கடைசியாகப் பெருமூச்சு விட்ட பத்மினி, “காலையில் உங்களுக்கு வேலையிருக்கும். காற்றையும், நிலத்தையும், கடலையும் கவனிக்க வேண்டிய
பொறுப்பு இருக்கும். படுத்துச் சற்று நேரமாவது தூங்குங்கள். உங்களுக்கும் உங்கள் யோசனைகளுக்கும் இடைஞ்சலாக நான் நிற்பானேன்?” – என்று சொல்லிவிட்டுத் திரையை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றாள். அவள்
கோபத்துடன் தொப்பென்று மஞ்சத்தில் விழும் சத்தம் ரகுதேவின் காதில் விழுந்த போது, வருத்தம் கலந்த புன்முறுவலொன்று அவன் இதழ் களில் தவழ்ந்தது. ‘அப்பா! பெண்களுக்குத்தான் என்ன பிடிவாதம். புருஷனிடமிருந்து
தகவலைக் கிரகிப்பதில் என்ன சிரத்தை! புருஷன் சொல்லாவிட்டால் என்ன கோபம்!’ என்று மனத்திற்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.
அன்றிரவு பூராவும் ரகுதேவுக்குத் தூக்கம் துளிகூட வரவேயில்லை. ஏதோ யோசித்தபடியே படுத்துக் கொண்டிருந்தான். விடிய ஒரு ஜாமமிருக்கையில் ரஜனிகாந்த், அவசர அவசரமாகத் தன் குடிசையிலிருந்து வெளியே வந்து
“எசமான்!” என்று மெள்ள அழைத்தான். கண்களை மாத்திரம் மூடித் தூங்காமலிருந்த ரகுதேவ் எழுந்து, “என்ன விசேஷம்?” என்று வினவினான்.
“என்ன இப்படிக் கேட்கிறீர்களே எசமான்!”
“என்ன புதிர் போடுகிறாய்?”
“புதிர் ஒன்றுமில்லை எசமான் எழுந்திருந்து பாருங்கள்.”
“சற்று நிதானித்த ரகுதேவ் துள்ளி எழுந்தான், “ஆமாம் ரஜனிகாந்த்! இது எனக்கு எப்படித் தெரியாமலிருந்தது”
“அதுதான் எனக்கும் ஆச்சரியமாயிருந்தது எசமான்.”
“பத்மினியுடன் பேசிக் கொண்டிருந்தேன்.”
“அதனால் கவனித்திருக்க மாட்டீர்கள்” என்று எந்த உணர்ச்சியையும் காட்டாமலே ரஜனிகாந்த் பதில் சொன்னாலும் உள்ளூர அவன் தன்னைப் பார்த்து நகைக்கிறான் என்பதை ரகுதேவ் புரிந்து கொண்டான். எதைப் புரிந்து
கொண்டாலும் பதில் சொல்லக்கூடிய அவசியத்துக்கு, மேற்பட்ட நிகழ்ச்சி அப்பொழுது ஏற்பட்டிருந்ததால் ரகுதேவ் மௌனமாகவே எழுந்திருந்து படுத்திருந்த இடத்திலிருந்து பத்தடி நடந்து குடிசைக்குச் சற்றுத் தூரத்தில் நின்று
ஆகாயத்தையும் கடலையும் காட்டையும் மாறிமாறிப் பார்த்தான். பிறகு ரஜனிகாந்தை நோக்கி, “ரஜனிகாந்த்! கடவுள் உண்மையிலேயே நம்மீது கண் திறந்து விட்டார். இதை நான் எதிர்பார்க்கவேயில்லை” என்றான்.
“நானும் எதிர்பார்க்கவில்லை எசமான். கோடையில் அரபிக்கடலில் சாதாரணமாகத் தென்றல்தான் அடிக்கும். இந்த வடக்கத்திக் காற்று வீசுவது மிக துர்லபம். பத்து வருஷங்களுக்கு ஒருமுறைதான் காற்று இப்படித் திரும்புவது
வழக்கம்” என்றான் ரஜனிகாந்த்.
“சரி ரஜனிகாந்த்! இனி நாம் துரிதமாக வேலை செய்தால்தான் பிழைத்தோம். வடக்கத்திக் காற்று திரும்பியது நல்லதுதான். ஆனால், அதில் ஆபத்துமிருக்கிறது.”
“என்ன ஆபத்து மகராஜ்?”
“காற்று திசை திரும்பிவிட்டதால் வடக்கே பிரயாணம் செய்வது கஷ்டம். என்ன யந்திர வசதி இருந்தபோதிலும், ஸித்தி அஹமத்தின் கப்பலின் ஓட்டத்தை இந்த வடக்கத்திக் காற்று பெரிதும் தடை செய்யும். கப்பல் பழுது பார்க்கப்
பட்டால்கூட பிரயாணம் கஷ்டந்தான். வடக்கத்திக் காற்று இப்பொழுது சாதாரணமாகத்தான் இருக்கும். ஆனால், இரண்டு மூன்று நாட்களில் சூறாவளியாக மாறிச் சுழன்றடிக்கும். இதனால் பிரயாணத்துக்கு ஏற்படக் கூடிய இடைஞ்சலை
ஸித்தி அஹமத் அறியாதவனல்ல. இதை ஒரு காரணமாகக் காட்டி மாலுமிகளின் ஆக்ரோஷத்தை நம்மீது திருப்பி விட்டாலும் விடுவான்” என்று விளக்கினான், ரகுதேவ்.
“ஆமாம் மகராஜ்! இதற்கு என்ன செய்யலாம்?” என்று வினவினான் ரஜனிகாந்த்.
“இந்த ஆபத்தைச் சமாளிக்க நான் திட்டம் வைத்திருக்கிறேன்” என்றான் ரகுதேவ்.
“என்ன திட்டம் மகராஜ்?”
“இப்பொழுது என்னை எதுவும் கேட்காதே, சொல்கிறபடி செய். நேற்றுப் புகை போட்ட மாதிரி மீண்டும் புகை போடு.”
“போடுகிறேன்.”
“போடுவதோடு தினமும் நான் சொன்னதைக் கவனி.”
“உத்தரவு மகராஜ்!”
“ஏதாவது உன் கண்ணில் பட்டால்…”
“உடனே ஓடி வரமாட்டேனா!”
“சரி; நான் சொன்னதெல்லாம் நினைவிருக்கட்டும். மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள். நீ காட்டுக்குள் போவதும் வருவதும் யாருக்கும் தெரியக்கூடாது.”
“யாருக்குமா?”
“ஆமாம். யாருக்கும்தான்” கண்டிப்பான குரலில் சொன்னான் ரகுதேவ். ரஜனிகாந்த் சிறிது தயங்கினான். எதற்காக ரஜனிகாந்த் தயங்குகிறானென்பதை உணர்ந்து கொண்ட ரகுதேவ், அவன் சந்தேகத்தை விலக்க முற்பட்டு மிகத் திட்டமாகச்
சொன்னான். “யாருக்கும் தெரியக் கூடாது ரஜனிகாந்த்! பத்மினிக்கும் கூடத்தான்.”
ரஜனிகாந்த் எசமானைத் தலை நிமிர்ந்து பார்த்தான். “மகராஜ்! இந்த இடம்தான் சிறிது கஷ்டமாயிருக்கும் போலிருக்கிறது?” என்றான்.
“என்ன கஷ்டம்?”
“நான் காட்டுக்குள் போகும்போதெல்லாம் அவர்கள் எப்படியோ கண்டுபிடித்துக் கூப்பிட்டு எங்கே போகிறே னென்று கேட்கிறார்கள். காட்டுக்குள் போவதாகச் சொன்னால் தானும் வருவதாகச் சொல்லுகிறார்கள்.”
“அழைத்துப் போக முடியாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிடு.”
“கோபித்தால்!”
“என் உத்தரவு என்று சொல்.”
இந்தப் பதிலைக் கேட்ட ரஜனிகாந்தின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. இருந்தாலும் அதை அடக்கிக் கொண்டு, “மகராஜ்! அந்தத் தந்திரத்தைக் கையாண்டு பலிக்கவில்லை. அவர்கள் தங்களிடம் சொல்லிக் கொள்வதாகச்
சொல்கிறார்கள்” என்றான்..
ரகுதேவின் இதழிலும் லேசாகப் புன்முறுவல் தென்பட்டது. பெண்களின் போக்கை நினைத்துச் சற்று சிரிக்கவும் சிரித்தான். ஆனால், கணநேரத்துக்கு இருந்த அந்தச் சிரிப்பை அடுத்து வரும் பேராபத்தைப் பற்றிய சிந்தனைகள்
கலைத்துவிடவே சொன்னான்: “ரஜனிகாந்த்! ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழித்துவிடு. அதிகமாகக் கேட்டால் இன்னும் இரண்டு நாள் வரையிலாவது காட்டுக்குள் வராமலிருக்கச் சொல்” என்று.
இந்தச் சம்பாஷணைக்குப் பிறகு இருவரும் பிரிந்து சென்றனர். காலை விடிந்ததும் பெரியதொரு ஆச்சரியமும் அத்துடன் கூடிய சங்கடமும் கலந்து காத்திருந்தது ரஜனிகாந்துக்கு. காட்டுக்குள் செல்ல முயன்ற ரஜனிகாந்தைக் கூப்பிட்டு
நிறுத்திய பத்மினி வழக்கம் போல் கேட்டாள்: “எங்கு போகிறாய் ரஜனிகாந்த்?”
“காட்டுக்குள்!”
“நாம் வருகிறேன்”
“கூடாது.”
“யார் சொன்னது!”
“எஜமான் உத்தரவு.
ரஜனிகாந்த் ‘பட்பட்டென்று தங்கு தடையின்றிச் சொன்ன பதிலுக்கு வழக்கப்படி பதில் கொடுத்தாள் பத்மினியும். “அவரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன், ரஜனிகாந்த்” என்று.
இந்தப் பதிலைக் கேட்ட ரஜனிகாந்துக்குச் சிரிக்க வேண்டும் போலிருந்தது. இருந்தாலும் உள்ளூர எழுந்த நகைப்பை அடக்கிக் கொண்டு பதில் சொன்னான்: “அம்மணி! இந்த முறை மன்னியுங்கள். இப்பொழுது என்னைக்
கட்டாயப்படுத்தாதீர்கள். தயவுசெய்து இரண்டு நாள் பொறுத்திருங்கள்.”
இதைக் கேட்ட பத்மினியின் உடல் அதிர்ச்சியால் தூக்கிவாரிப் போட்டது -இரண்டு நாட்கள்! அவர் சொன்ன அதே பதில்!’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். அவள் மௌனத்தின் காரணத்தைப் புரிந்து கொள்ளாத ரஜனிகாந்த்
ஓரளவு குழப்பத்திற்குள்ளாகி, “என்ன யோசிக்கிறீர்கள்?” என்று வினவினான்.
“ஒன்றுமில்லை ரஜனிகாந்த்! இந்த இரண்டு நாள் பாடத்தை அவர் எப்பொழுது சொல்லிக் கொடுத்தார் உனக்கு” என்று கேட்டாள்.
இந்த முறை அதிர்ச்சியடைந்தவன் ரஜனிகாந்த். மெள்ள தன்னைச் சமாளித்துக் கொண்டு, “எசமான் சொல்லிக் கொடுத்தார் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்” என்று கேட்டான்.
“நேற்றிரவு அவர் என்னிடம் படித்த பாடமும் இதுதான். இந்த இரண்டு நாட்களில் என்ன ஏற்படப் போகிறது ரஜனிகாந்த்! என்னிடம்கூட சொல்லமாட்டாயா?” அவள் குரல் குழைந்தது.
பதிலிறுத்த ரஜனிகாந்தின் குரலில் பரிதாபமும் கலந்து தொனித்தது. “அம்மணி! உண்மையில் எனக்குக் கூட சரியாகத் தெரியாது. எசமானராகச் சொன்னாலொழிய கேட்கும் பழக்கமும் எனக்குக் கிடையாது. ஒன்று சொல்லு வேன்;
எசமானர் இப்பொழுது செய்யும் சகலமும் தங்கள் நன்மையை உத்தேசித்துத்தான். மேற்கொண்டு எதுவும் கேட்காதீர்கள். எசமானர் விருப்பத்திற்கு மாறாக நடக்கவும் நடக்காதீர்கள்” என்று சொல்லிவிட்டு விடுவிடு என்று காட்டுக்குள்
நடந்துவிட்டான் ரஜனிகாந்த்.
பத்மினியின் மனத்தில் ஏக்கமும் கவலையும் இழைந்து இழைந்து பெரிய அலைகளாக மாறி உள்ளம் கடலெனக் கொந்தளித்தது. அன்று முழுவதும் அவள் ரகுதேவையோ ரஜனிகாந்தையோ பார்க்கவில்லை. இரவில் வழக்கம் போல்
படுத்த ரகுதேவ், சீக்கிரமாகவே உறங்கிவிட்டதால் வழக்கமான பேச்சுக்கும் வசதியில்லாது போயிற்று. அடுத்த நாள் மாலையும் வந்தது. மாறுதலில்லாதிருந்த நிலைமையில் திடீர் மாறுதல் ஏற்பட்டது. குடிசைக்கருகே நின்றிருந்த
ரகுதேவிடம் ஒடிவந்த ரஜனிகாந்த், “எசமான்! தெரிந்து விட்டது” என்றான்.
“உண்மையாகவா?”
“ஆம்.”
“நீயே பார்த்தாயா?”
“ஆமாம், எசமான்.”
“சரி உள்ளே சென்று என் வாளையும் கச்சையையும் எடுத்து வா” என்று உத்தரவிட்டான் ரகுதேவ். அதுவரை கல்லாயிருந்த அவன் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவ மாடியது. கவலை கலைந்ததற்கு அறிகுறியாகப் பெருமூச்சு ஒன்று
வெளிவந்தது. கத்தியை ரஜனிகாந்துக்குப் பதில் பத்மினியே எடுத்து வந்தாள். “எதற்காகக் கத்தி” என்று கேட்கவும் கேட்டாள். பதில் சொல்லாமல் கச்சையை இறுக்கிக் கட்டி, கத்தியைச் சரிப்படுத்திக் கொண்ட ரகுதேவ், “ரஜனிகாந்த்! நீ
இங்கேயே இரு” என்று சொல்லிவிட்டு தமானா நதிக்கரையின் மற்றொரு கோடியிலிருந்த ஸித்தி அஹமத்தின் குடிசைக்கு நடந்து சென்றான்.
மாலை மறைந்து இருள் புகத் தொடங்கிவிட்டதால் மாலுமிகள் பந்தங்களைக் கொளுத்திக் கொண்டிருந்தார்கள். பெரிய பலகையொன்றைச் சுற்றி உட்கார்ந்திருந்த மாலுமிகளுடன் பகடையாடிக் கொண்டிருந்தான் ஸித்தி அஹமத்.
அவன் குடிசையில் அந்தச் சூதாட்டத்தின் குஷியால் கூச்சலும் கும்மாளமும் பிரமாதமாயிருந்தன. பொங்கித் துள்ளும் பாலுக்குத் தெளித்த ஜலத்துளிகளைப் போல இடையே விசிறினான் சொற்களை ரகுதேவ். “டேய் ஸித்தி அஹமத்!
எழுந்திரு!” என்ற சொற்களும் அதிகாரம் கலந்த ரகுதேவின் குரலும் ஸித்தி அஹமத்தையும் அவன் சகாக்களையும் குஷியின் ஊக்கத்திலிருந்து கோபத்தின் உச்சத்துக்கு இழுத்தன.
ஸித்தி அஹமத் கேட்டான் கோபம் பொங்கும் குரலில்: “எதற்காக இங்கு வந்தாய்?”
“உனக்கு வாட் பயிற்சி அளிக்க.”
இடிபோல எழுந்தது ஸித்தி அஹமத்தின் சிரிப்பு. விடுவிடென்று உள்ளே சென்ற அவன் வாளுடன் வெளியே வந்தான். தமானாவின் மணற்பரப்பில் ரகுதேவைச் சந்தித்ததும், “ரகுதேவ்! முந்தா நாளே நீ செத்திருக்கலாமே. இதற்காக
இரண்டு நாள் காத்திருப்பானேன்?” என்று சொல்லிவிட்டுப் பயங்கரமாக ஒருமுறை நகைத்தான். மறுமுறை நகைக்க அவகாசமில்லை அவனுக்கு. ரகுதேவின் நீண்ட வாள் வெகு வேகமாக உறையினின்றும் கிளம்பி, எட்ட இருந்த
பந்தங்களின் ஒளியில் பளிச்சிட்டுக் கொண்டே ஸித்தியின் தலைமீது பயங்கரமாக இறங்கியது.

Previous articleJala Mohini Ch28 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch30 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here