Home Historical Novel Jala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

121
0
Jala Mohini Ch3 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 3. இரண்டாவது நாள்

Jala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

இரண்டே நாட்கள் தான் ரகுதேவ் தங்கியிருப்பான் என்று பீம்ஸிங் பெரிதும் மன உவகை எய்தியது என்னமோ வாஸ்தவம். ஆனால், அந்த இரண்டு நாளும் தனக்குப் பெரிய நரக வேதனையாக இருக்குமென்று மட்டும் அவர்
எதிர்பார்க்கவில்லை. சிறிதாவது மனம் தளரும் சுபாவ முடையவராயிருந்தால் அடுத்த இரண்டு நாட்களில் நடந்த சம்பவங்கள் மலை போன்ற பீம்ஸிங்கைத் துரும்பாக உருக்கி விட்டிருக்கும். ஏனென்றால் முதல் நாளன்று ஜலமோகினியின்
மேல் தளத்தில் ரகுதேவுக்கும் பத்மினிக்கும் ஆரம்பித்த நட்பு அடுத்த இரண்டு நாட்களில் மிக நெருக்கமாக வளரத் தொடங்கியதே தவிர சிறிதும் குறையவில்லை. நேரம் போவது தெரியாமல் சாப்பாட்டையும்கூட மறந்து அவர்கள் பேசிக்
கொண்டிருந்ததை முதல் நாளன்று மட்டுமே அவர் எச்சரிக்க முடிந்தது. மற்ற இரண்டு நாட்களிலும் அவ்விருவரும் பீம்ஸிங்கின் யோசனைகளைச் சிறிதும் ஏற்காமல் தங்கள் இஷ்டம்போல் நடந்து கொண்டார்கள். அவ்விருவர்
நடவடிக்கைகளையும் பீம்ஸிங் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்திருந்தார். ஆனால் அவர் பொறுமையையும் மீறும் பல விஷயங்கள் நடந்தேறின. ரகுதேவ் வந்தது முதல் பத்மினி வேறு நபர்களைப் பற்றிப் பேசுவதை அறவே
மறந்தாள். முதல்நாள் மேல் தளத்தில் ஆரம்பித்த பேச்சு பீம்ஸிங் இடையே புகுந்து வெட்டியும் நிற்காமல் சாப்பாட்டின் போதும் தொடர்ந்தது.
பீம்ஸிங் பத்மினியையும் ரகுதேவையும் எச்சரித்ததில் எள்ளளவும் பிசகில்லை. அஸ்தமன சமயத்தில் தன் பிரயாணத்தைத் துவங்கிய ஜலமோகினி இரண்டரை நாழிகைக்குப் பிறகு கடலில் ஜாஜ்வல்லியமாக மிதந்து சென்று
கொண்டிருந்தது. கப்பலின் விளக்குகளெல்லாம் ஏற்றப்பட்டு இருந்தமையால், தளங்களிலிருந்து மட்டுமின்றித் தண்ணீர் மட்டத்திலிருந்த அடிப்பாக அறைகளின் துவாரங்களிலிருந்தும், வெளிச்சம் ஜலத்தில் விழுந்து பிரதிபலித்துக்
கொண்டிருந்தது.
விளக்குகள் சில மேல் தளத்தில் உயரமாக நிறுத்தப் பட்டு இருந்ததால் அவை அலைகளுக்குள் தலைகீழாகத் தெரிந்து கப்பலுடன் ஓடிவந்து கொண்டிருந்தன. தன்னந் தனியாக இரவில் விளக்குகள் பல பளிச்சிட கடலில், மிதந்து சென்ற
ஜலமோகினியைக் கரையிலிருந்து மட்டும் யாராவது பார்த்தால் பல நகைகளை அணிந்த அப்சரஸ் ஸ்தீரி கண்களைப் பறிக்கும்படி கடலில் உலாவுகிறாளா, என்று எண்ணும்படியாய் இருக்கும். அந்த அழகியை விட்டுச் செல்ல
இஷ்டமில்லாத சந்திரன் கூட ஆகாய மார்க்கத்தில் கப்பலைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். அந்த மோகினியைப் பின்தொடரும் சந்திரனைப் பரிகசித்து ஓரிரு விண்மீன்கள் கண்களைச் சிமிட்டின.
மேல் தளத்திலிருந்து கீழே செல்லுமுன்பு பத்மினி சற்றுநேரம் இயற்கையின் எழிலைப் பருகினாள். இயற்கையின் அந்த எழிலைவிட சாப்பாட்டு அறைகளிலிருந்த பால், பழரசம் முதலியவற்றை அருந்த விரும்பிய பீம்ஸிங் சங்கடப்பட்டு
நின்றதைப் பார்த்த ரகுதேவ், பத்மினியை நோக்கி, “வாருங்கள், ஆகாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் வந்து இந்த இயற்கைப் பூம்பொழிலைப் பார்ப்போம்” என்றான்.
“இவனுக்கு என்ன துணிச்சல்? சாப்பிட்டுவிட்டு மீண்டும் மேல் தளத்திற்குப் பத்மினியை இழுத்துக் கொண்டுவரப் பார்க்கிறானே” என்று பீம்ஸிங் உள்ளூறக் கோபப்பட்டாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அவர்களுடன் கீழே
இறங்கிச் செல்ல எழுந்தார்.
அம்மூவரும் கீழே போகுமுன்பாகவே அவர்களைச் சந்தித்த மாலுமியொருவன், கப்பல் தலைவன் அறையிலேயே அவர்களுக்கு உணவு பரிமாறப்படுமென்றும் அங்கேயே அவர்களை வரும்படி கப்பல் தலைவன் அழைப்பதாகவும்
கூறினான். “அப்படியானால் நீங்கள், உங்கள் அறைக்குச் சென்று வாருங்கள், நான் என் அறைக்குச் சென்று உடையை மாற்றிக் கொண்டு வருகிறேன்” என்றான் ரகுதேவ்.
“உடை மாற்றத்திற்கு இப்பொழுது என்ன அவசியம்? சற்று நேரத்திற்கு ஒருமுறை அலங்கரித்துக் கொள்ளாவிட்டால் சரிப்படாதோ” என்று நினைத்த பீம்ஸிங், “சாப்பிட்டுவிட்டுப் படுக்கும்போது உடையை மாற்றிக் கொண்டால்
போகிறது” என்று தமது அபிப்ராயத்தைத் தெரிவித்தார்.
“படுப்பதற்கு எத்தனை நாழியாகுமோ? தங்கள் புத்திரி வேறு தளத்தின் அழகைப் பார்க்க விரும்புகிறாள்” என்று ஆரம்பித்த ரகுதேவை மிகுந்த கோபத்துடன் இடைமறித்த பீம்ஸிங், “பத்மினி என் புத்திரியல்ல” என்றார்.
“மன்னிக்க வேண்டும். ஒருவேளை மருமகளோ!”
“அதுவுமில்லை.” இதைச் சொன்னபோது பீம்ஸிங் வெடித்துவிடும் நிலைக்கு வந்தார். அவர் கோபத்தின் காரணத்தை அறியாத ரகுதேவ், “உறவு சொல்லாவிட்டால் என்ன உறவென்று நான் எப்படி ஊகிப்பது” என்றான் மரியாதையாக.
“அதனால் பாதகமில்லை, நீங்கள் முதலில் சொன்னதே சரி” என்றாள் பத்மினி.
“எது சரி? எதை முதலில் சொன்னார்” என்று கேட்டார் பீம்ஸிங்.
“நான் தங்கள் புத்திரி என்று சொன்னாரல்லவா? அதில் தவறென்ன?”
“நீ எப்படி எனக்குப் புத்திரி?”
“சொந்தப் பெண்ணல்ல. அதனாலென்ன, வளர்ப்புப் பெண்ணாயிருக்கிறேன்” என்று பத்மினி பதில் சொன்னாள்.
“வளர்ப்புத் தந்தையாயிருப்பது மிக விசேஷமாயிற்றே?” என்றான் ரகுதேவ் பீம்ஸிங்கை சிலாகிக்கும் முறையில்.
ஆனால், அந்தப் பாராட்டுதலைப் பெற பீம்ஸிங் தயாராயில்லை. “சரி சரி, நீங்கள் அறைக்குப் போய் உடையை மாற்றிக்கொண்டு வாருங்கள்” என்று சொல்லி விட்டுப் பத்மினியுடன் விடுவிடென்று நடந்தார். மீண்டும் அவர்கள் கப்பல்
தலைவன் அறையில் சாப்பிடச் சந்தித்த போது ரகுதேவ் மிக ரம்மியமான விலை உயர்ந்த உடைகளை அணிந்திருந்தான். பட்டினால் செய்யப்பட்ட மெல்லிய சொக்காய், சரிகை வேலைப்பாட்டுடன் கூடிய கால்சராய் இவற்றைத் தவிர பல
வர்ணங்களுடன் கூடிய ஒரு பட்டுத் துணியைக் கழுத்தில் கட்டிக் கொண்டிருந்தான். முகம் கழுவி மாலைக் கடன்களை முடித்துக் கொண்டு வந்ததற்கு அறிகுறியாக நெற்றியில் கோபிச் சந்தனம் இருந்தது. தலையை நன்றாகச் சீவி
விட்டிருந்தாலும் மயிர்கள் ஒன்றிரண்டு முகத்தில் தவழ்ந்து அவன் அழகையும் கம்பீரத்தையும் அதிகப்படுத்தின. இவன் சுத்தடம்பாச்சாரியாயிருப்பான் போலிருக்கிறது என்று பீம்ஸிங் நினைத்தார். ஆனால், பத்மினியின் கண்களுக்கு
அவன் மாசற்ற வீரனாகவே காணப்பட்டான். கப்பல் தலைவன் ரகுதேவைப் பற்றிப் பேசிய பேச்சிலும் பத்மினியின் அபிப்பிராயமே தொனித்தது. அவ்விருவர் சம்பாஷணையிலிருந்து இந்தியாவின் மேற்குப் பிராந்திய நிலையைப் பற்றிய பல
விவரங்களைப் பத்மினி அறிந்துகொண்டாள்.
“என்னை மால்வானில் இறக்கிவிடாமல் விஜய துர்க்கத்தில் இறக்கிவிடக்கூடாதா?” என்று ரகுதேவ் கப்பல் தலைவனை வினவினான் சாப்பிட்டுக் கொண்டே.
“உனக்கென்ன பைத்தியமா ரகுதேவ்? விஜயதுர்க்கம் இப்பொழுது ஸித்திகள் வசமிருக்கிறது. இந்தக் கப்பல் அந்தத் துறைமுகத்துக்குப் போனால் இதிலுள்ள சரக்குடன் ஊர் போய்ச் சேருமா?” என்றான் கப்பல் தலைவன்.
“விஜயதுர்க்கத்துக்குக் கப்பல் போக வேண்டாம். விஜயதுர்க்கத்துக்கு அருகில் எங்காவது ஒரு படகில் இறக்கி விட்டால் நான் போய்விடுகிறேன்.”
“படகு ஏது!
“உங்கள் படகில்தான் ஒன்றைக் கொடுங்களேன்.”
“கொடுத்தால் நீ ஒருவன் மட்டும் படகை ஓட்டிச் சென்றுவிட முடியுமா?”
“முடியும். எத்தனையோ முறை தனியாகவே மைல் கணக்கில் படகை ஓட்டிச் சென்றிருக்கிறேன். ஆனால் தற்சமயம் அது அவசியமில்லை. என் சேவகன் ரஜினிகாந்தும் வந்திருக்கிறான்.”
“யார் வந்திருந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி, மால்வான் துறைமுகத்தில் என் வியாபாரம் முடிந்ததும் கரையிலிருந்து பத்து மைல் தள்ளியே கப்பலை செலுத்துவேன். இது என் கடைசிப் பயணம் ரகுதேவ். இதில் என் உயிரை ஸித்திகளைப்
போன்ற கடற் கொள்ளைக்காரர் களிடம் ஒப்படைக்க நான் இஷ்டப்படவில்லை.”
ரகுதேவின் புருவங்கள் ஆச்சரியத்தால் உயர்ந்தன. சாப்பாட்டைச் சிறிதுநேரம் நிறுத்தி, “இது உங்கள் கடைசிப் பயணமா!” என்று கேட்டான்.
“ஆம்; எனக்கு வயது அறுபதாகிறது. வருஷத்தில் ஓரிரண்டு மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் கப்பலிலேயே இருக்கிறேன். மனைவி மக்களுடன் தொடர்ச்சியாக ஒரு வருஷம் இருக்க இத்தனை நாட்களாக முடியவில்லை. இத்துடன்
இந்தக் கப்பல் தலைவன் உத்தியோகத்திலிருந்து விலகப் போகிறேன். என் முதலாளிகளுக்கும் நான் சொல்லியாகிவிட்டது.” என்றான் கப்பல் தலைவன்.
“அப்படியா!” என்றான் ரகுதேவ்.
“ஆமாம் ரகுதேவ். அதனால்தான் ஸித்திகளின் கொள்ளைக் கூடுகளான ஜன்ஜீரா, விஜயதுர்க்கம் இவற்றின் அருகேகூட நான் செல்ல விரும்பவில்லை.”
“மால்வான் விஜயதுர்க்கத்திற்குத் தெற்கிலிருந்தாலும் மிக அருகில்தானே இருக்கிறது. அதில் ஆபத்து ஏற்படாதென்பது என்ன நிச்சயம்?”
“ஒரு நிச்சயமுமில்லை. ஆனால், சூரத்திலுள்ள என் முதலாளிகள் மால்வானிலிருந்து சரக்கு பிடித்துக்கொண்டு வரச்சொல்லி உத்தரவிட்டிருக்கிறார்கள். தவிர இப்பொழுது விஜயதுர்க்கத்துக்கு ஏதோ ஆபத்து நேரிட
இருக்கிறதென்றும் ஆகையால் ஸித்தி அஹமத் விஜயதுர்க்கத்தை விட்டுக் கிளம்பமாட்டானென்றும் செய்தி கிடைத்திருக் கிறது.”
இந்தச் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டு அது வரை மௌனமாயிருந்த பத்மினி, “யாரது ஸித்தி அஹமத்?” என்று கேட்டாள்.
கப்பல் தலைவனின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தான.
“என்ன! ஸித்தி அஹமதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?” எனறான் கப்பல் தலைவன்.
“அரபிக் கடலின் அபிஸீனியக் கொள்ளைக்காரர்களுக்குள் ஈவிரக்கம் சிறிதும் இல்லாதவன். ஜன்ஜீராவிலிருக்கும் ஸித்திப் பிரபுக்கள் அவனைத்தான் விஜயதுர்க்கத்தின் தலைவனாக நியமித்திருக்கிறார்கள். மேற்குக் கடல் பிராந்தியம்
முழுவதிலும் அவன் செய்யும் அக்கிரமங்களை விவரிக்க முடியாது. உடலும் உள்ளமும் ஒருங்கே கறுத்தவன். மஹாராஷ்டிரம் மட்டும் ஒன்றுபட்டிருந்தால் இந்த ஸித்திகளின் கொட்டத்தை அடக்கலாம்… ஹும்… விதி யாரை விட்டது?
தனிமனிதனை விட்டதா? அல்லது தேசங்களைத்தான் விட்டதா?” என்றான் கப்பல் தலைவன்.
“ஏன் மஹாராஷ்டிரத்தில் ஒற்றுமையில்லாமலென்ன?” என்று பத்மினி வினவினாள்.
“தரையில் ஒற்றுமையிருக்கிறது. ஷாஹு மன்னர், ஆட்சியில் பேஷ்வா பாலாஜி விசுவநாத்தின் தலைமையில் மஹாராஷ்டிரம் நிலத்தில் பெரிதும் பலப்பட்டிருக்கிறது. கனோஜி ஆங்கரேயின் தலைமையில் மஹாராஷ்டிரர்கள்
கடற்படையும் பெரிதும் பலமடைந்திருக்கிறது. ஆனால் நீர்ப் படைக்கும் தரைப் படைக்கும் ஒற்றுமையில்லாததால் மஹாராஷ்டிரம் பெரிய வல்லரசாக மாற முடியவில்லை. கனோஜி ஆங்கரே இன்னும் மன்னரிடமிருந்து பிரிந்து வெறும்
கொள்ளைக்காரனாகவே இருக்கிறான்” என்று விவரித்த கப்பல் தலைவனை இடைமறித்த ரகுதேவ், “அது பழைய கதை” என்றான்.
“அப்படியானால்?”
“ஒரு மாதத்திற்கு முன்பு பேஷ்வா பாலாஜி விசுவநாத்திற்கும் கனோஜி ஆங்கரேக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டு விட்டது. ஆங்கரே மன்னருக்குக் காணிக்கைகூட அளித்து விட்டார்” என்றான் ரகுதேவ்.
“இனி ஸித்திகள் கடலாட்சி முடியும்” என்றான் தலைவன்.
“கண்டிப்பாக. ஒப்பந்தம் ஏற்பட்டதும் ஏற்படாததுமாக, ஸித்தி அஹமத்தின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு ஆயிரம் பொன் வெகுமதியளிப்பதாக ஆங்கரே அறிவித் திருக்கிறார்.”
“ஆங்கரேயை ஆண்டவன்தான் காப்பாற்றட்டும்” என்று கப்பல் தலைவன் பிரார்த்தித்தான்.
இவர்கள் பேச்சைக் கேட்ட பத்மினி பரவச மடைந்தாள். அன்றிரவு ரகுதேவுடன் கப்பலின் தளத்தில் உலாவிய போதும், அடுத்த நாள் உட்கார்ந்து அளவளாவிய போதும் கடற் போரைப் பற்றியும் பத்மினி பல கேள்விகளைக் கேட்டாள்.
அவற்றிற்கெல்லாம் ரகுதேவ் சொன்ன பதில்களில் அடங்கியிருந்த வீரக் கதைகளைக் கேட்டுப் பரவசமடைந்தாள்.
அவர்கள் நேசம் முற்றுவதைக் கண்ட பீம்ஸிங் உள்ளூற அவஸ்தைப்பட்டாலும் இந்த ஆட்டம் சிறிது காலத்திற்குத் தானே என்று சும்மா இருந்தார். இரண்டாவது நாளும் நெருங்கியது. “இன்றுடன் நம்மைப் பிடித்த சனியன்
தொலைந்தான்” என்று பீம்ஸிங் உற்சாகத்துடன் நடுத் தளத்தில் உலாவிக் கொண்டிருந்தார். ஆனால் அவரைப் பிடித்த சனியன் அவ்வளவு சுலபமாக விடுவதாயில்லை.
கப்பலின் பக்கப் பலகைக்கு அருகே நின்று தூரதிருஷ்டிக் கண்ணாடியால் பார்த்துக் கொண்டிருந்த கப்பல் தலைவன் சற்றுத் தூரத்தில் பத்மினியுடன் பேசிக் கொண்டிருந்த ரகுதேவை அவசரமாகக் கூப்பிட்டான். ரகு தேவுடன்
பத்மினியும் வந்து பக்கத்தில் நின்று கொண்டாள். கப்பல் தலைவன் முகத்தில் தீவிரமான கவலைக் குறி படர்ந்திருப்பதையும் கண்டாள்.
கப்பல் தலைவன் தூரதிருஷ்டிக் கண்ணாடியை ரகுதேவிடம் கொடுத்து, “அத்திசையில் என்ன தெரிகிறது பார்” என்றான்.

.
தூரதிருஷ்டிக் கண்ணாடியை வெகு நேரம் கண்ணில் வைத்து ஆராய்ச்சி செய்த ரகுதேவ், கடைசியாக கண்ணாடியைத் திரும்பக் கப்பல் தலைவனிடம் கொடுத்து விட்டு, பத்மினிக்காகத் திரும்பி, “நீங்கள் உங்கள் அறைக்குச் செல்லுங்கள்.
நான் சற்று நேரத்தில் வருகிறேன்” என்றான். அவள் தாமதிக்கவே, நடுத்தளத்தில் உலாவிய பீம்ஸிங்கைக் கூப்பிட்டு அவளை அறைக்கு அழைத்துச் செல்லும்படி உத்தரவிட்டான்.
அவன் தங்களை உத்தரவிடுவது அவ்வளவு சரியாக பீம்ஸிங்குக்குத் தோன்றாவிட்டாலும் பத்மினியை அழைத் துச் செல்லும் பணியை: அளிக்கவே மகிழ்ச்சியுடன் அவளை அழைத்துக்கொண்டு போனார்.
அவர்கள் சென்றதும் கப்பல் தலைவனை நோக்கித் திரும்பிய ரகுதேவின் முகத்திலும் கடுமையான கவலை படர்ந்திருந்தது.
“நீங்கள் நினைத்தது சரிதான்” என்றான் ரகுதேவ்.
“அப்படியானால் அது…”
“ஸித்தி அஹமத்தின் கப்பல்தான்.” இதைக் கேட்டதும் கப்பல் தலைவனின் திகில் சொல்லவொண்ணாததாயிற்று. மிதமிஞ்சிய கிலியால் ஏதும் சொல்ல முடியாமல் பிரமித்துப் போய்க் கற்சிலையாகச் சற்று நேரம் நின்றுவிட்டான்.
கடைசியாக அவன் பேசியபோது அவன் குரல் நடுங்கியது. “இந்தக் கொலைபாதகனிடமிருந்து நான் எப்படித் தப்பப் போகிறேன் ரகுதேவ்?” என்று சொல்லி முகத்தைத் தன் இரு கைகளிலும் புதைத்துக் கொண்டான். ஸித்தி அஹமத்தின்
கப்பல் வேகமாக ஜலமோகினியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

Previous articleJala Mohini Ch2 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here