Home Historical Novel Jala Mohini Ch30 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch30 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

111
0
Jala Mohini Ch30 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch30 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch30 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 30. இறைவனை நினைத்துக்கொள்

Jala Mohini Ch30 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜன்ஜீரா ஸித்திகளின் மரபைச் சேர்ந்த அஹமத் குடிகாரனாயிருக்கலாம், கொள்ளைக்காரனாயிருக்கலாம், கோபக்காரனாயிருக்கலாம், இன்னும் எத்தனை எத்தனையோ குறைகள் அவனிடமிருக்கலாம். ஆனால், வாட் போரிடுவதில்
மட்டும் எந்தக் குறையும் அவனிடம் இருந்ததாகத் தெரியவில்லை. கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் வெகு வேகமாகத் தலைமீது இறங்கிய ரகுதேவின் வாளை ஸித்தியின் வாள் மின்னல் வேகத்தில் தடுத்து நின்றது. அத்துடன் சற்றுப்
பின்னோக்கியும் குதித்து அஹமத் எதிரியின் வாள் வீச்சுப் பிரயோகத்திலிருந்து விலகி, நொடி நேரத்தில் தற்காப்புச் செய்து தன் நிலையைச் சரிப்படுத்திக் கொண்டதல்லாமல், மிகப் பலமான தன் வாளைக் கனவேகமாகச் சுழற்றி
ரகுதேவைத் தாக்கவும் முற்பட்டான். ஒருவரையொருவர் தீர்த்துவிட நெடுநாட்களாகக் கங்கணம் கட்டிக்கொண்டிருந்த அந்த ஜன்ம விரோதிகள் இருவரும் மிக உக்ரத்துடன் போரிடத் தொடங்கவே, கத்திகள் விநாடிக்கொரு தடவை
சந்தித்துப் பயங்கரமான ஒலிகளை எழுப்பின. சண்டை மூண்டதைக், கவனித்த பந்தம் கொளுத்தும் மாலுமிகள் அரைகுறையாகக் கொளுத்தப்பட்ட பந்தங்களுடன் ஓடிவந்து வாட்போரை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள்.
ஸித்தியின் கூடாரத்தில் ஸித்தியோடு உட்கார்ந்திருந்த ரஹீம், கலிபுல்லா முதலிய கொள்ளைக்கார உபதலைவர்கள் ஏதோ விபரீதம் நேரிடப் போகிறதென்ற நிச்சயமிருந்தாலும் அதைத் தடுக்க வகையற்றவர்களாய், வெளியே வந்து நின்று
போர் போகும் போக்கை எச்சரிக்கையுடன் கவனித்துக் கொண்டிருந்தார்கள். தூரத்தில் மணற்பரப்பில் ஜலக்கரையின் அருகிலிருந்த மாலுமிகள் ஸித்தியின் கூடாரத்தருகே ஓடுவதையும் கும்பல் கூடுவதையும் கண்டு எழுந்து
துரிதமாக ஓடினார்கள். போர் ஸ்தலத்தில் கும்பல் வெகு துரிதமாகக் கூடிவிட்டது. இந்த ரகளையைத் தூரத்தே குடிசையிலிருந்து கவனித்த பத்மினியின் மனத்தில் சொல்ல வொண்ணா திகில் எழுந்து அவள் உள்ளத்தை ஒரே அழுத்தாக
அழுத்திக் கொண்டிருந்தது. அவள் மெல்ல பீம்ஸிங்கின் குடிசைக்குச் சென்று அவரைக் கிளப்பி வெளியே அழைத்துக் கொண்டு வந்து, “அதோ பாருங்கள்! அங்கே ஏதோ அமர்க்களம் நடக்கிறது” என்று சுட்டிக் காட்டினாள்.
அப்படிக் காட்டிய பொழுது அவள் உடலிலிருந்த பதைபதைப்பைப் பார்த்த பீம்ஸிங், “பத்மினி! எதற்காக இப்படி நடுங்குகிறாய்? கொள்ளைக்காரர்களுக்குள் ஏதாவது சண்டை ஏற்பட்டிருக்கும்? இந்த நாய்களுக்கு என நடுங்க
வேண்டும்!” என்று ஆறுதல் சொன்னார்.
என்றுமில்லாதபடி எரிச்சல் பற்றிக்கொண்டு வரவே பத்மினி சொன்னாள்: “கொள்ளைக்காரர்களுக்குள் அல்ல சண்டை, போய்க் கவனித்துப் பாருங்கள்.”
“நான் அங்கே போவதா!” ஆச்சரியத்தால் ஸ்தம் பித்துப் போனார் பீம்ஸிங். உபதளபதியான தன்னைப் பார்த்துக் கொள்ளைக்காரர்களுக்குச் சமமாக நின்று சண்டையைப் பார்க்கச் சொன்ன பத்மினியின் புத்தியை நினைத்துப்
பரிதாபமும் பட்டார்.
அவருடைய பார்வையிலிருந்தே அவருடைய உள்ளப் போக்கைப் புரிந்து கொண்ட பத்மினி துடித்துக் கொண்டே சொன்னாள்: “நீங்கள் போகாமல் யார் போவது? நான் போவதா?”
“நீயா? நீ எதற்காகப் போக வேண்டும்?”
“ஐயோ! உங்களுக்கு என்ன பட்டவர்த்தனமாகச் சொன்னாலும் புரியவில்லையே. அங்கு சண்டை போடுவது யார் தெரியுமா?”
“யாராயிருந்தால் நமக்கென்ன?”
“நமக்கென்னவா? அவர் சண்டை போடுகிறார் தெரியுமா?”
இந்தப் பதிலைக் கேட்டதும் ஏதோ இகழ்ச்சியாக “யார் அந்த அவர்” என்று பேச்சைத் தொடங்கிய பீம்ஸிங்கின் மூளையில் உண்மை திடீரென உதயமாகவே, “யார்; ரகுதேவா! அடா! பாவி கெடுத்தானே” என்று கூவினார்.
“அவர் என்ன கெடுத்தார்?” என்று வினவினாள் பத்மினி.
“அவன் சண்டை போடுவதானால் அந்த ஸித்தி அஹமத்துடனே போடுவான்” என்றான் பீம்ஸிங்.
“ஆமாம்! அதனாலென்ன!” என்று கோபத்துடன் மீண்டும் கேட்டாள் பத்மினி.
“அதனாலென்னவா! இதன் விளைவு என்னவென்று உனக்குப் புரியவில்லையா? ஸித்தி அஹமத் முதலில் அவனைக் கொல்லுவான், பிறகு என்னைக் கொல்லுவான். அடுத்தபடி…” என்று பேசிக்கொண்டு போன பீம்ஸிங்கின்
பேச்சுக்களை இடையிலேயே வெட்டி, “அத்துடன் நிறுத்துங்கள். என்னைப் பற்றிக் கவலை வேண்டாம். உங்களுக்கு. நம்மைக் காப்பாற்றிய மனிதன் ஆபத்திலிருக்கிறான். இங்கு நின்று கொண்டு தர்க்கம் செய்கிறீர்கள். முதலில் போய் அங்கு
என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். உதவத் தைரியமிருந்தால், முடிந்தால் உதவுங்கள். நன்றியுள்ள மனிதன் செய்யக்கூடிய காரியம் இதுதான்” என்று சொல்லி விட்டுத் தன்குடிசைக்குச் செல்லத் திரும்பினாள் பத்மினி.
பீம்ஸிங்கிற்கு என்ன செய்வதென்று புரியவில்லை, அந்த நாசமாகப் போகிற அதிர்ஷ்டம் கடைசியில் தமது தலைக்கே தீம்பு வைத்துவிடும் போலிருக்கிறதே என்று எண்ணி ஏங்கினார். ஸித்தி–ரகுதேவ் சண்டையில் தலையிட்டால்
அடுத்த நிமிடம் மாலுமிகள் தம்மைக் கண்ட துண்டமாக வெட்டிப் போடுவார்களென்பதைச் சந்தேகமறப் போனாலோ பத்மினியையும் ஊரிலிருக்கும் அவளுடைய திரண்ட செல்வத்தையும், இழக்க நேரிடுமென்பதும் அவருக்குத்
தெரியும். உயிரை இழப்பதா பத்மினியை இழப்பதா என்ற விடுகதைக்குச் சரியான விடை காண முடியாமல் திண்டாடிய பீம்ஸிங்குக்குத் தெய்வமே துணையாக வந்தததுபோல் வந்து சேர்ந்தான் ரஜனிகாந்த காட்டின் ஒரு மூலையிலிருந்து.
பத்மினியும் பீம்ஸிங்கும் தர்க்கிப்பதை வரும்போதே கண்டுகொண்ட ரஜனிகாந்த், தர்க்கம் எதைப்பற்றியிருக்கும் என்பதையும் ஓரளவு ஊகித்துக்கொண்டு பத்மினியை அணுகியதும், “அம்மணி, நீங்கள் இங்கு ஏன் நிற்கிறீர்கள்
குடிசைக்குப் போகலாமே” என்றான். பத்மினி பதில் சொல்லவில்லை. பீம்ஸிங்கே பதில் சொன்னார்: “அதோ ஸித்தி அஹமத்துடன் உன் எசமான் போரிடுகிறாராம். அதைப் போய்க் கவனித்து ஏதாவது உதவ முடியுமானால் உதவச்
சொல்கிறார்கள்” என்று பத்மினி தமக்கிட்ட பணியை அரைகுறையாக விளக்கினார் பீம்ஸிங்
ரஜனிகாந்த் ஒரு விநாடி அவரை ஊன்றிக் கவனித்து விட்டு, “எசமானனுக்கு யார் உதவியும் தேவையில்லை எந்த உதவியும் பயன்படாது. நீங்கள் அங்குப் போகா திருப்பதே நலம்” என்றான்.
பத்மினி அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டுக் கேட்டாள். “அவரைக் கொள்ளைக்காரர்களிடம் மடிய விட்டு நாம் இங்கே கைகட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பதா?”
“அவர் மடியமாட்டார். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம்.” உறுதியாக சொன்னாள் ரஜனிகாந்த்
ஆச்சரியம் நிரம்பிய விழிகளை அவன்மீது நிலைக்க வைத்த பத்மினி, “உன் எசமானுடைய வீரத்தில் உனக்கு அத்தனை நம்பிக்கையா! அவரும் என்ன மனிதர்தானே. பலபேர் சேர்ந்து தாக்கினால் என்ன செய்வார்?” என்று மீண்டும்
வினவினாள்.
“அம்மணி! எசமானை உங்களுக்குத் தெரியாது. அவர் போர்த் திறமை மட்டுமல்ல, சமயத்துக்குத் தகுந்தபடி அவர் வகுக்கும் தந்திரங்களைப் பார்த்து கனோஜி ஆங்கரேயே பலமுறை அசந்து போயிருக்கிறார். ஆகையால்
கவலைப்படாதீர்கள்” என்று கூறி, பீம்ஸிங்குக்காக கண்களை ஒரு விநாடி ஓட்டி, மீண்டும் பத்மினியை நோக்கி, “இவர் அங்கு போவதால் எசமானுக்குக் கஷ்டமேயொழிய உதவியாயிருக்காது. ஆகையால் அவரை வலுக்கட்டாயம்
செய்யாதீர்கள்” என்று கூறினான்.
பத்மினி பதில் சொல்லாமலே தன் குடிசையை நோக்கி நடந்தாள். நடந்தபோதிலும் கண்களும் உள்ளமும் தமானாவின் மேற்குக் கோடியிலிருந்து வந்துகொண்டிருந்த வாட்களின் சப்தங்களிலும் அவற்றை இடையிடையே தடுத்த
மாலுமிகளின் கூச்சல்களிலும் நிலத்துவிட்டன. குடிசையை அடைந்த பிறகும்கூட, அவள் உள்ளே செல்லாமல் சண்டைப் பிராந்தியத்தைக் கவனித்த வண்ணம் கற்சிலை போல் நின்றுவிட்டாள். ரஜனிகாந்த் கூட அவள், பக்கத்தில்
மௌனமாக நின்றான். பத்மினிக்கு ஆறுதலாகச் சற்று முன்பு அவன் சொன்ன சொற்களில் அவனுக்கே நம்பிக்கை அதிகமில்லை. “என்ன இருந்தாலும் எசமான் ஒருவர், என்ன செய்யப் போகிறாரோ” என்ற சிந்தனை அவன் உள்ளத்தை
உலுக்கிக் கொண்டிருந்தது. தவிர ஸித்தி அஹமத் அரபிக் கடல் பிராந்தியத்திலேயே பெயர் பெற்ற பெரிய வாள் வீரன் என்பதும் அவனுக்குத் தெரியும்.
அவனுக்கு மட்டுமென்ன, அதுவரை ஸித்தி அஹமத்தை நேருக்கு நேர் போரில் சந்திக்காத ரகுதேவுக்கும், கூட அது சண்டை ஆரம்பித்த சில விநாடிகளில் புரிந்துவிட்டது. ஸித்தி அஹமத் மிக சாமர்த்தியமாகப் போரிட்டான். அவன்
புஜபலம் எத்தன்மையதென்பது அவன் வாள் தன் வாளுடன் உராய்ந்த பொழுதெல்லாம் ரகுதேவ் உணர்ந்தான். “இதுவரை சந்திக்காத மிக அபாரமான ஒரு வீரனுடன் போரிடுகிறோம்” என்பதை ஆரம்ப அடிகளிலேயே அறிந்து கொண்ட
ரகுதேவ் மிக நிதானமாகப் போரிடலானான். அஹமத்தின் போர் முறைக்கும் ரகுதேவின் போர் முறைக்கும் வித்தியாசம் ஒன்றுதானிருந்தது. அஹமத்தின் போர் முறையில் ஓர் அவசரமும் பதட்டமும் காணப்பட்டது. ரகுதேவின் போர்
முறையில் சதா ஓர் எச்சரிக்கை, ஒரு நிதானம் தெரிந்தது எந்த இடத்தில் பாய்ந்தால் மனிதனைக் கபளிகரம் செய்யலாம் என்று ஜாக்கிரதையுடன் புலி நடமாடுவதைப் போலிருந்தது ரகுதேவின் சஞ்சாரம். அப்படி நிதானித்து எதிரிக்கு
இடங்கொடுத்ததைப் பலவீனத்துக்கு அறிகுறியாக நினைத்த ஸித்தி அஹமத் மிக உக்கிரமாகத் தாக்கலானான் அடி மேலடியாக மின்னல் வேகத்தில் அவன் வாள் ரகுதேவின் மீது பலமுறை இறங்கவே, சுற்றிலுமிருந்த மாலுமிகள்
சிரித்தார்கள்; கூச்சலிட்டார்கள்; கை தட்டினார்கள். இரு குழந்தைகள் சண்டையிடுவதைப் பார்த்து மகிழும் மற்ற குழந்தைகள் போல் அவர்கள் உற்சாகமும் கூத்தும் கும்மாளமும் மிதமிஞ்சிப் போயர் கொண்டிருந்தன. ஆரம்பத்திலிருந்த
நிதானம் அடியோடு கலைந்தது. அவர்கள் தமானாவை மறந்தார்கள். பொககிஷக் கப்பல்களை மறந்தார்கள். சண்டையிடு பவர்களைக்கூட மறந்தார்கள் பந்தங்களைப் பிடித்துக் கொண்டிருந்தவர்கள் கூட சில சமயங்களில் உற்சாகத்தால்
துள்ளிக் குதித்துத் தீப்பந்தப் பொறிகளை அங்கும் இங்கும் உதிர்த்தார்கள்.
அவர்கள் கும்மாளத்தினால் உற்சாகம் தலைக்கேறிய ஸித்தி அஹமத்தின் தாக்குதல் உக்கிரத்தின் உச்ச நிலையை அடைந்தது. தேகத்தில் வியர்வை வழிந்தோடப் பாய்ந்து பாய்ந்து வாளை வீசினான். அந்த ஒவ்வொரு வீச்சையும்
ரகுதேவின் வாள் தடுத்து நின்றது. எந்த இடத்தில் வாளைப் பாய்ச்சினாலும் எத்தனை வேகத்தில் பாய்ச்சினாலும், எந்தத் திக்கில் தாக்கினாலும் அங்கெல்லாம் மந்திரத்தால் உந்தப்பட்டதுபோல் ரகுதேவின் வாள் வந்து தன் வாளைத் தேக்கி
நிற்பதைக் கண்ட ஸித்தி அஹமத், எப்பேர்ப்பட்ட எதிரியைத் தான் சமாளிக்க வேண்டும் என்பதை மெள்ள மெள்ளப் புரிந்து கொண்ட மறுகணத்திலிருந்து ரகுதேவின் போர் முறை மாறி விட்டதையும், அவன் தற்காப்பு நிலையிலிருந்து
மாறித் தன்னைத் தாக்க முற்பட்டு விட்டதையும் கவனித்தான். ரகுதேவின் வாள்முனை அடுத்த சில வினாடிகளில் தன் கண் முன்பாக அடிக்கடி விளையாடுவதைக் கவனித்த ஸித்தி அஹமத்தின் கோபம் உச்ச ஸ்தாயியை அடையவே
அவன் நிதானத்தை அடியோடு இழந்து கண்டபடி போரிடலானான். எதிரி நிதானத்தை இழந்து விட்டதை எளிதில் அறிந்து கொண்ட ரகுதேவ், தன் வாளைக் கணவேகத்தில் சுழற்றலானான் அடுத்த சில வினாடிகளில் நடந்த நிகழ்ச்சியைக்
கண்டு மாலுமிகள் கூட பிரமித்துப் போனார்கள். தங்கள் தலைவன் நிதானமிழந்து விட்டதைக் கண்ட மாலுமிகள், போரின் முடிவு எப்படி ஆகுமோ என்று நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் ரகுதேவ் உரக்கச் சிரித்து, “டேய் ஸித்தி
அஹமத்! இது என்ன வாட்போரா, பரத நாட்டியமா?” என்று சொல்லிக் கொண்டே அரங்கின் ஒரு மூலைக்கு ஸித்தி அஹமத்தை விரட்டினான். இதனால் அடியோடு வெகுண்டு நிதானத்தைக் காற்றில் பறக்கவிட்ட ஸித்தி அஹமத்,
“மஹாராஷ்டிர நாயே! இதோ பார்!” என்று கூவிக் கொண்டு வெகு வேகமாக வாளை ரகுதேவின் மீது பாய்ச்சினான். அந்த வாள் ரகுதேவைத் தாக்காமல் எங்கோ காற்றில் சென்றதை ஸித்தி அறிந்தான். அடுத்த விநாடி ரகுதேவின் வாள் தன்
உடலில் பாய்ந்து விட்டதையும் உணர்ந்தான். “ஹா” என்ற சப்தத்துடனும், மாலுமிகளின் கோபக் கூச்சலுடனும் தரையில் தடாரென விழுந்த ஸித்தி அஹமத்தின் உடலிலிருந்து வாளைப் பிடுங்கினான் ரகுதேவ். வாள் வெளியே
இழுக்கப்பட்ட அதே விநாடியில் ஸித்தி அஹமத்தின் உயிரும் வானை நோக்கிச் சிட்டுக் குருவிபோல் பறந்துவிட்டது.
சற்று முன்பாக ஏராளமான கொள்ளைக்காரர்களின் அதிபதியாக விளங்கிய ஸித்தி அஹமத் இதயத்திலிருந்து கொப்பளித்துக் கொண்டு வந்த குருதி ஆறாக ஓட, அசைவற்று அனாதையாகக் கிடந்தான். அந்தக் கோரக் காட்சியைப்
பார்த்த கொள்ளைக்காரர்கள் கூச்சல்கூட அடுத்த விநாடி அடக்கி மிகப் பயங்கரமான அமைதி அங்கு நிலவலாயிற்று. எதிர்பாராத அந்த மரணம் கிளப்பி விட்ட பிரமையின் காரணமாகச் செயலிழந்த மாலுமிகள், ஏதும் நடக்காததுபோல்
கீழே கிடந்த சவத்தைத் திரும்பிக் கூடப் பார்க்காமல் தமானாவின் கிழக்குக் கோடியிலிருந்த பத்மினியின் குடிசையை நோக்கி நடந்த ரகுதேவைத் தடை செய்யவேயில்லை.
இந்தப் பிரமை அதிக நேரம் நீடிக்காதென்பதை அறிந்தாலும் பயத்தையோ வேகத்தையோ காட்டாமல் நிதானமாக நடந்து, குடிசைக்கு வந்த ரகுதேவைப் பார்த்ததும் உணர்ச்சி மிகுதியால் அவன் மீது சாய்ந்த பத்மினி “என்ன நடந்தது”
என்று வினவினாள்.
“நடக்க வேண்டியது நடந்துவிட்டது” என்றான் ரகுதேவ் அமைதியுடன்.
“ஸித்தி அஹமத்…”
“இறைவன் திருவடிகளை அடைந்துவிட்டான்.”
“அப்படியானால் ஆபத்து…”
“அதிகரித்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டே மேற்குக் கோடிக்காகக் கண்களை ஓட்டிய ரகுதேவ் மாலுமிகள் ஆத்திரத்துடன் அங்குமிங்கும் ஓடுவதையும் பந்தங்களைக் கொளுத்துவதையும் கண்டு, “பத்மினி! இறுதிக் கட்டம்
நெருங்கிவிட்டதென்றே நினைக்கிறேன். இந்தக் குடிசையோடு நாமும் இன்னும் சில விநாடிகளில் கொளுத்தப்படுவோம். இறைவனை நினைத்துக்கொள்” என்றான். அவன் சொல்லி முடித்ததும் மேற்குக் கோடி யிலிருந்த பந்தங்கள்
மெள்ள நகர ஆரம்பித்தன. “கொளுத்து” “கொல்” என்ற கூச்சல்களும் வானைப் பிளந்தன.

Previous articleJala Mohini Ch29 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch31 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here