Home Historical Novel Jala Mohini Ch32 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch32 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

80
0
Jala Mohini Ch32 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch32 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch32 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 32. ஜோடிப் புறா

Jala Mohini Ch32 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

நீர்க் கரையில் காரியங்களை மிகத் துரிதமாகத் தொடங்கிய ரகுதேவ், நாலைந்து பேர் போகக்கூடிய படகைத் தயார் செய்ய மாலுமிகளுக்கு உத்தரவிட்டு ரஹீமையும் கலிபுல்லாவையும் நோக்கி, “கனோஜி ஆங்கரேயிடம் யாராவது
தூது செல்ல வேண்டுமே, யாரை அனுப்பலாம்?” என்று கேட்டான். கலிபுல்லா சுற்றுமுற்று மிருந்த மாலுமிகளை நோக்கினான். போய் வருவதற்குச் சம்மதிக்கக்கூடிய குறி எந்த மாலுமியின் முகத்திலும் தோன்றவில்லை. “போய் வர
உனக்குச் சம்மதமா ரஹீம்?” என்று இறுதியாக ரஹீமைக் கேட்டான் கலிபுல்லா.
“போகலாம், வர முடியாது. நம்மையெல்லாம் ஒழித்துக் கட்ட சபதம் செய்திருக்கும் கனோஜி ஆங்கரே அங்கு செல்லும் யாரையும் முதலில் தூக்கில் மாட்டி விட்டுத்தான் மறுவேலை பார்ப்பான்” என்றான்.
“பின் யார்தான் போவது?” என்று கலிபுல்லா வினவினான்.
“நாங்கள் யாரும் போக முடியாது” என்று ஒருமுகமாக எழுந்தது மாலுமிகளிடமிருந்து பதில்.
“ரகுதேவ் போகட்டுமே!” என்றான் ரஹீம்.
கலிபுல்லாவின் மங்கலான கண்கள் ரகுதேவை ஏறெடுத்துச் சந்தேகத்துடன் நோக்கின. ஆனால், ரகுதேவின் பதிலைக் கேட்டதும் அந்தச் சந்தேகம் கண்களிலிருந்து மறைந்தது.
“நான் போக முடியாது. என் நிலைமையைத் தான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லியிருக்கிறேனே” என்றான் ரகுதேவ்.
“ஆனால், இதற்கு வழி என்ன?” என்று கலிபுல்லா வினவினான்.
ரகுதேவ் நீண்டநேரம் ஏதோ யோசித்துப் பெரு மூச்சொன்றை வெளிப்படுத்திக் கொண்டு சொன்னான்: “கலிபுல்லா; வேறு வழியில்லை. என் மனைவியைக் கனோஜி ஆங்கரேயிடம் தூது அனுப்புகிறேன். பெண்கள் மீது ஆங்கரே தன்
கோபத்தைக் காட்டமாட்டான் என்பது உலகப் பிரசித்தம். அவளிடம் நமது தூதைச் சொல்லி அவளுக்குப் படகை ஓட்டிச் செல்ல என் மைத்துனனையும் என் சேவகன் ரஜனிகாந்தையும் அனுப்பிப் பார்ப்போம்” என்றான்.
இந்த யோசனைக்கு எல்லா மாலுமிகளும் ஒப்புக் கொள்ளவே பத்மினியும் பீம்ஸிங்கும் ரஜனிகாந்தும் நீர்க் கரைக்குத் துரிதமாக வரவழைக்கப்பட்டார்கள். மாலுமிகள் புடைசூழ நின்றிருந்த ரகுதேவ் அத்தனை பேருக்கும் எதிரில்
பத்மினியின் கைகளைப் பிடித்துக் கொண்டு, “பத்மினி! உன்னை ஆங்கரேயிடம் தூதனுப்ப மாலுமிகளிடம் ஒப்புக் கொண்டேன். தயவுசெய்து போய்வா. எங்கள் அனைவர் உயிர்களும் உன் கைகளில் இருக்கின்றன” என்றான்.
பத்மினி உணர்ச்சி மிகுதியால் தவியாய்த் தவித்தாள். “நான் எதைச் சொன்னாலும் செய்” என்று ரகுதேவ் சற்று முன்பாகச் சொன்னது அவள் காதுகளில் அப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருந்தது. ஆகவே அதிகமாக எதுவும் பேசாமல்
“ஆணையிடுங்கள்” என்றாள்.
ரகுதேவ் சொன்னான்: “இதோ உனக்குப் படகு தயாராக இருக்கிறது. அதை ஓட்டிச் செல்ல ரஜனிகாந்தும் உன் சகோதரன் பீம்ஸிங்கும் இருக்கிறார்கள். கனோஜி ஆங்கரேயிடம் செல். சென்றதும் இங்குள்ள மாலுமிகள் யாரும் அவர்
கப்பலைக் கண்டு அஞ்சவில்லையென்று சொல். அவர் ஏதாவது நடவடிக்கை மேற்கொண்டால் அதைச் சமாளிக்க எங்கள் பீரங்கிகள் காட்டுமுனையில் மரங்களின் மறைவில் தயாராகப் பொருத்தப்பட்டிருப்பதாகத் தெரிவி. எங்களிடம்
உணவுப் பொருள்களும் பீரங்கி வெடிமருந்தும் ஏராளமாக இருப்பதாகவும், அவர் எங்களை அணுக முயன்றால் நாங்கள் காட்டுக்குள் போய் பீரங்கிகளை அரணாகக் கொண்டு அவரையும் அவரது மாலுமிகளையும் நிர்மூலப்படுத்தி
விடுவோமென்றும் சொல். அப்படியின்றி அவர் சமாதானமாக வந்த வழியே திரும்ப இஷ்டப்பட்டால் அவர் வெகுநாளாகத் தேடிவரும் ஸித்தி அஹமத்தின் தலையை வெட்டி அவரிடம் ஒப்படைப்பதாகக் கூறு.”
இந்தச் செய்தியைக் கேட்ட மாலுமிகள் முகத்தில் சந்தோஷக் குறி தோன்றலாயிற்று. மாண்டுபோன ஸித்தியின் தலையை அவன் கொடுப்பதாகச் சொன்னதிலிருந்த ஹாஸ்யத்தையும் அவர்கள் பெரிதும் ரஸித்தனர். இப்பேர்ப்பட்ட
புத்திசாலி தங்களைச் சமயத்தில் காப்பாற்ற முன் வந்தது பற்றி அவனை வாயாரப் புகழவும் செய்தனர்.
பத்மினியோ அவனைப் பிரிய மனமில்லாமலே பிரிந்து மிக மெதுவாக நடந்து சென்றாள். பீம்ஸிங்கின் நடையில் என்றுமில்லாத கம்பீரம் இருந்தது. படகில் மிக மிடுக்காகவே உட்கார்ந்து கொண்டார். ரஜனிகாந்த் வழக்கம் போல் எந்த
உணர்ச்சிகளையும் காட்டாமல் படகில் ஏறி உட்கார்ந்து படகின் துடுப்புகளை ஜலத்தில் துழவினான். தமக்கும் அந்த வித்தை தெரியும் என்ற கர்வத்தால் பீம்ஸிங்கும் துடுப்புகளை அலட்சியமாக எடுத்து நீரில் பாய்ச்சி வேகமாக இழுத்தார்.
படகும் வெகு வேகமாகச் சென்று கனோஜி ஆங்கரேயின் கப்பலை அடைந்தது.
படகு வருவதைத் தூரத்திலேயே கவனித்த கனோஜி ஆங்கரே அதிலிருந்தவர்களைக் கப்பலுக்குள் ஏற்றுவதற்கான உத்தரவுகளைப் பிறப்பித்திருந்தபடியால் படகு கப்பலை அணுகியதும் நூலேணியொன்று கீழே தொங்கவிடப்,
பட்டது. பத்மினி, அதில் முதலில் ஏறிச் சென்றாள். பின்னால் ரஜனிகாந்தும் அவனுக்குப் பின்னால் பீம்ஸிங்கும் ஏறினார்கள். ஏதோ வெகுநாள் பழகியவளைப் போல் ஏறி வந்த பத்மினி கப்பலின் பக்கப் பலகையில் கையை வைத்து ஏறி
உள்ளே இறங்கிக் கப்பலைச் சுற்றித் தன் கண்களை வீசினாள்.
கனோஜி ஆங்கரேயின் கப்பல் தளம் பிருமாண்டமாக இருந்தது. ஏராளமான மாலுமிகள் கப்பலில் தங்கள் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். பீரங்கிகள் பல, பக்கப் பலகைக் கணவாய்களில் மட்டுமின்றி உயரமான
ஸ்தலங்களிலும் பொருத்தப்பட்டிருந்தன. இவற்றையெல்லாம் கவனித்துப் பிரமித்து நின்று கொண்டிருந்த பத்மினியை ஆக்சரியம் ததும்பும் கண்களுடன் கவனித்த ஆங்கரே, அவள் அருகில் வந்து பயங்கரமாக இடிஇடி என்று சிரித்து
பக்கத்திலிருந்த குருஜீயை நோக்கி “குருஜீ! தூதுவரைப் பார்த்தீரா!”, என்றார்.
கள்ளர்களிடமிருந்து தூது வர இத்தகைய உயர்குல மங்கையை எதிர்பார்க்காத குருஜீயும், “ஆமாம், நீ எப்படியம்மா இவர்களிடம் சிக்கிக் கொண்டாய்?” என்று ஆதரவாக வினவினார்.
“கால வசத்தால் சிக்கிக் கொண்டேன். மகாராஷ்டிர தளபதியிடம் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்…” என்றாள்.
“இவர்தான் ஆங்கரே! சொல்லம்மா” என்றார் குருஜீ.
ஆங்கரேயின் மீது ஓர் விநாடி கண்களை ஓட்டிய பத்மினி, அவர்கள் கண்களிலிருந்து உதிர்ந்த விஷமக் குறியைச் சகிக்காதவளாய்க் கண்களை மீண்டும் கீழே சாய்த்துக் கொண்டு கூறினாள்: “தளபதியவர்களே! நான்
கடற்கொள்ளைக்காரர்கள் சார்பாகப் பேச வந்திருக்கிறேன். ஆனால், தூதைச் சொல்லியனுப்பியவர் கொள்ளைக் காரரல்ல; தங்களுக்குத் தெரிந்தவர். மிகவும் நல்லவர்.”
கனோஜி ஆங்கரேயின் கண்களில் கேள்விக்குறி தொக்கி நின்றது. தயங்கித் தயங்கிப் பேச்சை மீண்டும் ஆரம்பித்த பத்மினி, “அவர் பெயர்…”
“ரகுதேவ்” என்று முடித்தார் ஆங்கரே. பெரிய கல்லைத் தூக்கித் தலையில் போட்டிருந்தால்கூட அடைய முடியாத அதிர்ச்சியைப் பத்மினி அந்தப் பதிலால் அடைந்தாலும், அதை மேலுக்குக் காட்டாமலே கேட்டாள்: “அதெப்படி
உங்களுக்குத் தெரியும்?” என்று.
“அந்த அயோக்கியனைப் பிடித்துக்கொண்டு போக நான் வந்திருக்கிறேன்” என்றார் ஆங்கரே விஷமம் ததும்பிய குரலில்.
பத்மினியின் உடல் ஒருமுறை நடுங்கியது. அதோடு கண்களில் கோபமும் துளிர்க்கவே அவள் சொன்னாள்: “அவர் அயோக்கியரல்ல” என்று.
பதிலுக்குப் பயங்கரமாகச் சிரித்த ஆங்கரே குருஜீயை நோக்கி, “குருஜீ! பார்த்தீர்களா! இந்தப் பெண் அந்த அயோக்கியனுக்குப் பரிந்து பேசுகிறாள். அவனை இங்கு வரவழைத்துத் தண்டனை கொடுக்க வேண்டியது அவசியந்தானே”
என்றார்.
“மிகவும் அவசியம்” என்று குருஜீயும் ஒப்புக் கொண்டார்.
“அவசியம் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன்” என்று குரலைக் கேட்டுத் திரும்பிய ஆங்கரே தமக்கு எதிரே பீம்ஸிங் நிற்பதைக் கண்டார். பெரிய மாமிச பிண்டமாக நின்ற பீம்ஸிங்கைக் கண்ட ஆங்கரேயின் கண்களில் கோபம்
பிரமாதமாக ஜொலித்தது. “உன் அபிப்பிராயத்தை யார் கேட்டது?” என்று அதட்டலாகவும் மரியாதைக் குறைவாகவும் கேட்டார்.
“மரியாதை தப்பிப் பேசுகிறீர்கள். நான் சைன்னியத்தில் ஒரு உபதளபதி” என்று இறுமாப்புடன் சொன்னார் பீம்ஸிங்.
“யார் உமக்கு அந்த வேலை கொடுத்தது?” என்று வினவினார் ஆங்கரே.
இதைக் கேட்ட குருஜீ பெரிதாகச் சிரித்தார். ஆங்கரே அதற்கு மேல் அவருடனோ பத்மினியுடனோ எந்தச் சம்பாஷணையையும் வைத்துக் கொள்ளாமல் தமது உபதளபதியைக் கூப்பிட்டு, “நீ பத்து மாலுமிகளுடன் தமானாவின்
கரைக்குப் போய் ரகுதேவைப் பிடித்துக் கொண்டுவா. அவனை அனுப்பாவிட்டால் கொள்ளைக்காரர்கள் அனைவரையும் சுட்டுப் பொசுக்கி விடுவேன் என்று சொல்” என்று உத்தரவிட்டார்.
“ஐயோ! அவர் அனுப்பிய செய்தியைக்கூட நீங்கள் கேட்கவில்லையே” என்று கூவினாள் பத்மினி.
“அவசியமில்லை” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்ட ஆங்கரே கப்பலின் மறுபக்கத்துக்குச் சென்று தமது அலுவல்களைக் கவனிக்கத் தொடங்கினார்.
பத்மினி நடுங்கிக் கொண்டு கப்பலின் பக்கவாட்டில் சாய்ந்து கொண்டு தமானா கரைமீது கண்களை ஓட்டிய வண்ணம் நின்றாள். எப்படியும் கொள்ளைக்காரர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ரகுதேவை ஆங்கரேயிடம் பலி
கொடுத்து விடுவார்கள் என்பதில் அவளுக்குச் சம் சயமேயில்லை. பீம்ஸிங்குக்கு மட்டும் மெள்ள மெள்ள சுரணை வர ஆரம்பித்தது. ரகுதேவின் வாழ்க்கைச் சகாப்தம் சீக்கிரம் முடிந்துவிடப் போகிறதென்ற களிப்பால் புன்னகை
சொட்டிக் கொண்டு தமானாவைப் பார்த்த வண்ணம் நின்றார்.
பத்மினி எதிர்பார்த்தபடியே காரியங்கள் நடந்தன. கொள்ளைக்காரர்கள் ரகுதேவை ஆங்கரேயின் உபதளபதியிடம் ஒப்படைத்துவிட்டார்கள். அடுத்த சில நிமிஷங்களில் கப்பலுக்கு வந்து சேர்ந்த ரகுதேவை ஆங்கரேயும் குருஜீயும்
வரவேற்றார்கள். ரகுதேவுக்குக் கிடைத்த வர வேற்பைக் கண்ட பத்மினி மட்டுமின்றி பீம்ஸிங்கும் பிர மித்துப் போய் இதன் மர்மம் என்னவாயிருக்குமென்ற ஆலோசனையில் இறங்கினார்கள். மர்மம் வெளியாக அதிக நேரமில்லை.
“ரகுதேவ்! பேஷ்! எடுத்த காரியத்தைச் சாதித்து விட்டாயே” என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார் குருஜீ.
“ரகுதேவ்! அஹமத் என்ன ஆனான்?” என்று வினவினார் ஆங்கரே.
“நேற்றே அவனைக் கொன்றுவிட்டேன்.”
“ஏன்…?”
“அவன் முறை தவறி நடந்து கொண்டான்.”
“யாரிடம்” என்று கேட்ட ஆங்கரே பத்மினிக்காகக் கண்களை ஓட்டிப் பெரிதாக நகைத்ததல்லாமல், “ரகுதேவ், நீ பால்யத்தில் துரதிஷ்டசாலியாக இருந்தாலும் இப்பொழுது அதிர்ஷ்டசாலியாகிவிட்டாய்” என்றும் கூறினார். ரகுதேவ் மிகுந்த
சங்கடத்தால் பதில் சொல்லத் தெரியாமல் திண்டாடினான். பிறகு சம்பாஷணையை வேறு மார்க்கத்தில் திருப்பி ஆங்கரேயைப் பார்த்து, “ஆமாம், விஜயதுர்க்கம் என்ன ஆயிற்று?” என்று வினவினான்.
“நமது ஏற்பாட்டின்படி முந்தா நாளே அதைப் பிடித்து விட்டேன். பிறகு உன்னிஷ்டப்படி தமானாவுக்கு வந்தேன்” என்றார் ஆங்கரே.
“இவரிஷ்டப்படியா!”என்று ஆச்சரியத்துடன் இடையே புகுந்தார் பீம்ஸிங்.
“ஆமாம் பீம்ஸிங், இவர்களுக்கு நாமிருப்பதை உணர்த்தத்தான் ரஜனிகாந்த் காட்டில் புகை போட்டான். வடக்கத்திக் காற்று திரும்பியதுமே இவர்கள் கப்பல் துரிதமாக வந்து சேரும் என்று எங்களுக்குத் தெரியும். தவிர தூரதிருஷ்டிக்
கண்ணாடியாலும் அடிக்கடி கவனித்துக் கொண்டிருந்தோம்” என்று விளக்கினான் ரகுதேவ்.
ஆனால், பீம்ஸிங்கைப்பற்றி சட்டை செய்யாத ஆங்கரே, “ஆமாம் ரகுதேவ்! நீ இவர்களை எப்படிச் சந்தித்தாய்?” என்று பீம்ஸிங்கையும், பத்மினியையும் சுட்டிக் காட்டிக் கேட்டார்.
“இவர்கள் ஏறி வந்த ஜலமோகினியில் பிரயாணம் செய்து மால்வானுக்கு வந்து அங்கு ஒரு கப்பலையும் மாலுமிகளையும் அமர்த்திக் கொண்டு ஸித்தி அஹமத்தைச் சந்திக்க இருந்தேன். ஆனால், அந்த முட்டாள் வழியிலேயே வந்து
என்னிடம் சிக்கிக் கொண்டான். நான்தான் உங்களிடமிருந்து விலகிவிட்டதாகவும் சில பொக்கிஷக் கப்பல்கள் வரப்போவதாகவும் சொல்லி அவன் கண்களில் மண்ணைத் தூவிவிட்டேன். அது கிடக்கட்டும், நான்தான் ஸித்தி
அஹமத்தைக் கொன்று விட்டேனே. பந்தயப்படி பத்தாயிரம் பொன்னைக் கீழே வைக்கிறீர்களா?” என்றான் ரகுதேவ்.
“உனக்கு எது வேண்டும்?” என்று வினவினார் அங்கரே.
“ஜலமோகினிதான்” என்றான் ரகுதேவ்..
“காரணம் எனக்குத் தெரியும். சொல்லட்டுமா?” என்றார் ஆங்கரே விஷமமாகப் பத்மினிக்காகக் கண்களை ஓட்டி.
“வேண்டாம் வேணடாம். சும்மாயிருங்கள்” என்று அவரை அடக்கினான் ரகுதேவ்.
இருவர் சம்பாஷணையையும் கேட்ட பீம்ஸிங்குக்கு எரிச்சல் எரிச்சலாக வந்தது. தளபதி சுத்தக் காட்டு மிராண்டிப் பயல் என்று தீர்மானித்தார். பத்மினியின் முகத்தில் மட்டும் வெட்கச் சிரிப்பு ஓடியது.
“அடுத்தபடி என்ன செய்ய வேண்டும்?” என்றார் ஆங்கரே.
“கொள்ளைக்காரர்களை அப்படியே தமானாவில் விட்டுவிடுவோம். கப்பலிழந்து தலைவனையும் இழந்த அவர்கள் இனி ஒன்று சேர்ந்து கொள்ளையடிக்க முடியாது. கரையிலுள்ள பீரங்கிகளை மட்டும் ஜலமோகினியில் பொருத்த
உத்தரவிடுங்கள்” என்றான். அவன் உத்தரவுப்படி வேலைகள் மிகத் துரிதமாக நிறைவேறின.
நாட்கள் இரண்டு சென்று மூன்றாம் நாள் இரவும் வந்தது. ஜலமோகினியின் அடித்தள அறையில் பத்மினி உட்கார்ந்து சாளரத்தின் வழியாகத் தொடுவானத்தை நோக்கி ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள். யோசனை
பலமாயிருந்தபடியால் அறைக்குள் ரகுதேவ் வந்ததையோ அவன் தனக்கு வெகு அருகில் நின்றதையோ அவள் கவனிக்கவில்லை. கனோஜி ஆங்கரே அவளுக்கு வெகு மதியாகக் கொடுத்திருந்த கூண்டிலிருந்த ஜோடிப் புறாக்களும்
அவள் யோசனையை என்னவென்றறிய ஆவலுள்ளவைபோல் கூர்ந்து நோக்கின.
ரகுதேவ் அவளுக்கு வெகு அருகில் நின்றிருந்தாலும் அவளைத் தொடாமலே கேட்டான்: “என்ன அப்பேர்ப்பட்ட யோசனை பத்மினி?” என்று.
பத்மினி அவனை நோக்கித் திரும்பிச் சற்று உற்றுப் பார்த்துவிட்டு “என் பிற்காலத்தைப் பற்றி யோசனை?” என்றாள்.
“அதில் யோசனை செய்ய என்ன இருக்கிறது? இன்னும் இரண்டு நாட்களில் காண்டேரித் தீவை அடைந்து விடுவோம். அப்புறம்.”
“அப்புறம்?”
“உன்னையும் பீம்ஸிங்கையும் உங்கள் உறவினரிடம் அனுப்பிவிடுகிறேன்.”
“பீம்ஸிங்கை அனுப்பிவிடுங்கள்.”
“நீ?”
அந்த ஒற்றைச் சொல் கேள்விக்கு அவள் பதிலேதும் சொல்லாமல் எழுந்து அவனுக்கு வெகு அருகில் வந்து அவன் தோள்மீது இரு கைகளையும் போட்டுக் கொண்டு அவன் கண்களோடு தன் கண்களைச் சற்று நேரம் உறவாட
விட்டாள். ரகுதேவின் உணர்ச்சிகள் புரட்சி காலக்கடலைப் போலப் புரண்டு எழவே, “வேண்டாம் பத்மினி! பிடிவாதம் செய்யாதே” என்று கூறினாலும் அவன் கரம் அவள் இடையை இறுக்கிப் பிடித்தது. அவள் மோகனச் சிரிப்பு ஒன்றை
உதிர்த்துக் கொண்டே மீண்டும் மஞ்சத்தில் உட்கார்ந்து, “பிடிவாதம் செய்வது நீங்கள் தான்” என்று கொஞ்சிக் கொண்டே தன் இரு கரங்களாலும் அவன் தலையைத் தன் முகத்துக்காக இழுத்தாள். இதைக் கண்ட கூண்டிலிருந்த ஆண்
புறாவும் பெண் புறாவை மூக்கால் திரும்பத் திரும்பக் கொத்தத் தொடங்கியது. கீழேயிருந்த காதற் புறாக்கள் பரஸ்பரப் பிணைப்பில் உலகத்தை அடியோடு மறந்து தங்களுக்கே சொந்தமான ஒரு சொர்க்க பூமியில் சஞ்சரித்துக்
கொண்டிருந்தன.

Previous articleJala Mohini Ch31 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Deepam Part 1 Ch1 | Read Jala Deepam Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here