Home Historical Novel Jala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

119
0
Jala Mohini Ch4 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 4. அபாயம் நெருங்குகிறது!

Jala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

எதிர்பாராத விதமாகத் திடீரென்று எதிர்நோக்கி வந்த அபாயத்தைக் கண்டு கலங்கிக் கைகளில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கப்பல் தலைவனின் அதைரியத்தைப் போக்க முயன்ற ரகுதேவ். “அபாயத்தை அதைரியத்தினால்
சமாளிக்க முடியாது. இப்பொழுது வேண்டியது திடபுத்தி, தைரியம்” என்று கூறினான்.
இதைக் கேட்ட கப்பல் தலைவன் தனது முகத்தைச் சிறிது உயர்த்தி ரகுதேவை ஏறெடுத்துப் பார்த்து, “தைரியத்துக்கும் அளவிருக்கிறதல்லவா? இந்த வியாபாரக் கப்பல் ஸித்தி அஹமதின் கப்பலுக்குக் கொசுவுக்குச் சமானம். நிமிஷ
நேரத்தில் இதை அழித்துவிட எதிரியால் முடியும்” என்றான். இந்தப் பதிலைச் சொன்னபோது கப்பல் தலைவனின் குரலில் தொனித்த பயத்தையும் அவநம்பிக்கையையும் கண்ட ரகுதேவ், “அதைரியத்தோடு அவநம்பிக்கையும்
சேர்ந்துவிட்டால் மனிதன் உருப்படுவது பிரம்மப் பிரயத்தனம்” என்றான்.
ரகுதேவின் சொற்கள் கப்பல் தலைவனின் கோபத்தைக் கிளறினவே யொழிய அதைரியத்தை அழிக்கவில்லை. ஆகவே “இப்பொழுதிருக்கும் நிலைமையில் நம்பிக்கைக்கு இடம் ஏது?” என்று சினத்துடன் வினவினான். ரகுதேவ் தன்
நிதானத்தை இழக்காமல் பதில் சொன்னான்: “நம்பிக்கை மனிதனிருக்கும் நிலையைப் பொறுத்ததல்ல. உள்ளத்தைப் பொறுத்தது” என்று.
“நம்பிக்கை இருந்தால் இந்த அசுரனை ஜெயித்துவிட முடியுமா?”
“நம்பிக்கையால் இதைவிடப் பிரமாதமான காரியங்கள் சாதிக்கப்பட்டிருப்பதைப் புத்தகங்களில் படிக்கிறோம்.”
“ஏட்டுச் சுரைக்காய்…”
“கறிக்கு உதவாதிருக்கலாம். ஆனால் ஏடுகளிலிருந்து உள்ளத்துக்குக் கிடைக்கும் உணவு அதிகம். அந்த உண வினால் உரம் பெற்று அமானுஷ்யமான காரியங்களைச் சாதித்த வீரர்கள் சரித்திரத்தில் அனந்தம். சமீப காலத்தில் நமது
சத்ரபதி சிவாஜியையே எடுத்துக் கொள்ளுங்களேன். ஸமர்த்த ராமதாஸிடம் ராமாயணம் படித்தார். அதனால் உரம் பெற்ற உள்ளத்தால் ஹிந்து மதம், ஹிந்து நாகரிகம், ஹிந்து சமூகம் வளர்ச்சியடையவில்லையா? ஏன் கல்வியறிவில்லாத
மலைவாசிகளைக் கொண்டு பெரிய சாம் ராஜ்யத்தையே அவர் ஸ்தாபித்து விடவில்லையா?” என்று பேசிக் கொண்டே போனான் ரகுதேவ்.
அபாயம் துரிதமாக வந்து கொண்டிருக்கும்போது ரகுதேவ் தொடங்கிய சரித்திரப் பிரசங்கம் பெரிய தலை வேதனையாகயிருந்தது கப்பல் தலைவனுக்கு. ஆகவே, ரகுதேவின் பேச்சைப் பாதியிலேயே வெட்டி, “அது கிடக் கட்டும் ரகுதேவ்,
முதலில் இப்பொழுது நடக்க வேண்டிய காரியத்தைக் கவனிப்போம்” என்று சொல்லி மீண்டும் கண்களில் தூரதிருஷ்டிக் கண்ணாடியை வைத்துக்கொண்டு ஸித்தி அஹமதின் கப்பலை ஆராய முற்பட்டான். ஆராய்ச்சி முடிந்ததும் அவன்
ரகுதேவை மறுபடியும் நோக்கியபோது அவன் முகத்தில் திகில் முன்னைவிடச் சற்று அதிகமாயிருந்ததை ரகுதேவ் கவனித்தான். கப்பல் தலைவனின் அடுத்த சொற்கள் அந்தக் கிலியின் காரணத்தைத் தெள்ளென விளக்கின. “ஸித்தி
அஹமதின் கப்பலில் குறைந்தபட்சம் பன்னிரண்டு பீரங்கிகளாவது இருக்கவேண்டும். நமக்கு நேர் எதிரில் தெரியும் கப்பல் முனையிலிருந்து ஒரு பக்கத்துச் சரிவில் மட்டும் பீரங்கித் துவாரங்கள் மூன்றைப் பார்த்தேன். அதைப் போல்
நான்கு மடங்கு பீரங்கிகளாவது கப்பலில் பொருத்தப்பட்டிருக்கு மென்பது நிச்சயம். தவிர, ஸித்தி கப்பலின் பாய் மரங்கள் என் பாய் மரங்களைவிட இரண்டத்தனை பெரியவை. போதாக் குறைக்கு எதிரிக் கப்பல் நமது மார்க்கத்தைத்
துண்டிக்கும் நோக்கத்துடன் குறுக்கே பாய்ந்து வருகிறது” என்றான் கப்பல் தலைவன். ரகுதேவ் இதற்குப் பதிலேதும் சொல்லாமல் தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் கைகளில் வாங்கிக் கொண்டு எதிரிக் கப்பலைத் தானே ஆராய
முற்பட்டான்.
பக்கவாட்டுகளில் பச்சை வர்ணம் தீட்டப்பட்டுப் பிருமாண்டமாகக் காட்சியளித்த அந்த மரக்கலத்தின் அடிப் பாகங்களை நீண்ட நேரம் கவனித்தான் ரகுதேவ். பிறகு கண்ணாடியைச் சற்று மேலே தூக்கிப் பாய் மரங்களைப் பார்த்து ஏதோ
யோசனை செய்தான். பிறகு தளங்கள் ஒவ்வொன்றையும் கூர்மையாகக் கவனித்தான். கடைசியாக மீண்டும் கண்ணாடியை அடிப்பாகத்துக்கே திருப்பினான். மரக்கலத்தின் பக்கங்களில் தெரிந்த பீரங்கித் துளைகளைத் தீவிரமாக
ஆராய்ந்து, அவற்றின் குறுக்களவைக் கணக்குப் போட்டு, பீரங்கிகளின் பரிமாணத்தைப் பற்றியும், அவை குண்டு வீசக்கூடிய வேகத்தைப்பற்றியும் திட்டமான ஒரு முடிவுக்கு வந்தான். பீரங்கித் துளைகளிலிருந்து மீண்டும் கண்களை
அடிப்பாகத்துக்கே ஓட்டி வெகு நேரம் வரை ஊன்றிப் பார்த்துக் கொண்டேயிருந்தான். கடைசியாகக் கண்களிலிருந்து கண்ணாடியை அகற்றிக் கப்பல் தலைவனை அவன் ஏறிட்டுப் பார்த்த போது, அவன் கண்களில் நம்பிக்கை
தாண்டவமாடியது.
“இந்த அபாயத்திலிருந்து தப்ப வழியிருக்கிறது” என்றான் ரகுதேவ், கப்பல் தலைவனை நோக்கி.
“என்ன வழி?”
“நமது பாய்மரங்களில் இரண்டை மட்டுமே பறக்க விட்டிருக்கிறீர்கள். மூன்றாவுதையும் அவிழ்த்து விடுங்கள். கப்பல் போகிற திசையிலே போகட்டும்.”
“அதனால் என்ன லாபம்? நமது பாய் மரங்களைவிட
அதன் பாய் மரங்கள் பெரியவை. எண்ணிக்கையும் அதிகம். நம்மை இன்னும் இரண்டு மணி நேரத்தில் அவன் பிடித்து விடலாம்.”
“பிடிக்க முடியாது. ஸித்தி அஹமதின் கப்பலின் பக்க மரங்களின் அடிப்பாகத்தை நீங்கள் சரியாகக் கவனிக்கவில்லை. அடிப்பாகத்தில் அரையடி கனத்துக்குக் கடற் பாசியும் நுரையும் கிளிஞ்சலும் சங்கும் ஒட்டிக்கிடக்கின்றன. இதனால்
கப்பலின் வேகம் பெரிதும் தடைப்பட்டிருக்கிறது. ஸித்தி அஹமதின் கப்பல் நீண்ட நாட்களாகக் கடல் சஞ்சாரத்திலேயே இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இவ்வளவு பாசி பிடித்து வேகம் தடைப்படக் காரணமில்லை. ஆகவே போகிற
மார்க்கத்திலேயே போவோம். தெற்கத்திக் காற்றும் நமக்கு அனுகூலமாயிருக்கிறது.”
பயத்தால் கலவரமடைந்திருந்த கப்பல் தலைவனுக்கு, நீண்ட காலம் கடற் போரில் அனுபவம் பெற்ற ரகுதேவின் யோசனை எந்தவித சாந்தியையும் அளிக்கவில்லை. ஆகவே, “இந்தக் காற்று இப்படியே நீடிக்குமென்பது என்ன நிச்சயம்?”
என்று கோபத்துடன் கேட்டான்.
“இருக்கிற நிலைக்குத்தான் நான் பரிகாரம் சொல்ல லாம். இயற்கையின் போக்கைப்பற்றி என்னைக் கேள்வி கேட்டால் நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?” என்றான் ரகுதேவ்.
கப்பல் தலைவன் சிறிது நேரம் யோசித்துவிட்டுக் கப்பல் திசை திருப்பும் சுங்கானைக் கூப்பிட்டு, “கப்பலை வந்த வழியே திருப்பு” என்று உத்தரவிட்டான்.
இந்த உத்தரவு அதுவரை சாந்தமாயிருந்த ரகுதேவின் அமைதியை அடியோடு கலைத்துவிடவே. அவன் கப்பல் தலைவனை நோக்கி, “இது சுத்தப் பைத்தியக்கார நடவடிக்கை. மீண்டும் வந்த வழி திரும்பாதீர்கள். யந்திரத்தை என்ன
வேகமாக முடுக்கினாலும் எதிர்க்காற்று உங்கள் வேகத்தைக் குறைக்கும். ஸித்தி அஹமத் கப்பலின் அடிப் பாகம் என்னதான் பாசிப் பிடித்துக் கிடந்தாலும், அவன் யந்திரங்கள் பெரியவை. உங்களை அவன் கண்டிப்பாய்ப் பிடித்து
விடுவான். உத்திரவை மாற்றுங்கள். கப்பல் போகிற திசையிலேயே போகட்டும்.” என்றான்.
எதிரியிடம் நடுக்கத்தால் நிதானமிழந்துவிட்ட கப்பல் தலைவன், ரகுதேவின் ஆலோசனைக்குச் செவிசாய்க்காமல், பிடிவாதத்துடன் தன் உத்தரவை இட்டே தீர்த்தான். அத்துடன் ரகுதேவைப் பார்த்து “ரகுதேவ்! தீர யோசித்தே இந்த
முடிவுக்கு வந்திருக்கிறேன். அருகிலிருப்பது மால் வானாயிருந்தாலும் ஸித்திகளும் உட்புகக் கூடிய இடம். அதையும் தாண்டினால் ஸித்தி அஹமத்தின் சொந்தப் பிரதேசமான விஜயதுர்க்கம். இந்த இரண்டு இடங்களையும் ஒரே மூச்சில்
தாண்டிச் சென்று தப்பி விடமுடியாது. ஆகவே திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை” என்றான்.
ரகுதேவின் முகத்தில் கோபக்குறி மிகத் தீவிரமாகப் படர்ந்தது. இந்த முட்டாளுடன் என்ன செய்வதென்று. உள்ளூறக் குமுறினான். “ஸித்தி அஹமதின் வாயில் நுழையவே வழி செய்கிறீர்கள். இயற்கை அளிக்கும் சக்தியை அலட்சியமாகத்
தூக்கியெறிகிறீர்கள். கடவுள் அளித்துள்ள இந்தக் காற்று வசதியைவிட உங்களைக் காப்பாற்றக் கூடிய சக்தி தற்சமயம் வேறு எதுவுமில்லை. காற்று மார்க்கத்திலேயே போனால் உங்கள் மரக்கலம் சிறிதாகையாலும், இதன் அடிப்பாகம் பாசி
பிடிக்காமல் சுத்தமாகயிருப்பதாலும் சீக்கிரம் எதிரியிடமிருந்து தப்பலாம். மார்க்கத்தைத் திருப்பினால் கலத்தின் வேகம் கண்டிப்பாய் குறையும். இதை எதிரி உபயோகப்படுத்திக் கொள்ளத் தவற மாட்டான்’ என்று ரகுதேவ் மீண்டும்
மன்றாடிப் பார்த்தான். கப்பல் தலைவன் கேட்கவில்லை. அவன் உத்தரவுப்படியே ஜலமோகினி மீண்டும் விங்குர்லாவை நோக்கித் திரும்பி ஓட ஆரம்பித்தது. கப்பலின் யந்திரங்கள் முழுவேகத்தில் முடுக்கப்பட்டன.
ரகுதேவும் கப்பல் தலைவனும் விவாதித்துக் கொண்டிருந்த சமயத்தில், தூரத்தே ஒரு மரக்கலம் வருவதைப் பார்த்த தளத்து மாலுமிகள் அது யார் கப்பலாயிருக்கக் கூடும் என்று யோசித்தார்கள். ஆனால், சிறிது நேரத்திற்கெல்லாம்
கப்பல் தலைவன் இட்ட உத்தரவும், அந்த உத்தரவின் காரணமாக ஜலமோகினி வந்த வழியே திரும்பியதையும் கண்ட மாலுமிகளின் சந்தேகம் அடியோடு பறந்துவிட்டது. “யாரோ எதிரி முன்பாக நாம் ஓட்டம் பிடிக்கிறோம்” என்று உணர்வு
ஏற்படவே, தளத்தில், பரபரப்பு ஏற்பட்டது. தலைவன் உத்தரவால் மாலுமிகள் அனைவரும் தங்கள் ஸ்தானங்களில் நின்று கடமையைச் செய்ய ஆரம்பித்தார்கள். தளம் முழுவதும் ஒரே ரகளையாக மாறியது. ரகுதேவ் மட்டும் இந்த ரகளையில்
கலந்து கொள்ளாமல் தூரதிருஷ்டிக் கண்ணாடியைக் கண்களில் பொருத்தி, ஸித்தி அஹமதின் கப்பலைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஜலமோகினி தன் திசையைத் திருப்பியதும், ஸித்தி அஹமதும் தன் கப்பலின் திசையைத் திருப்பி
விட்டதையும், புறாவை நோக்கிப் பாயும் பருந்து போல் ஸித்தி அஹமதின் கப்பல் ஜலமோகினியை நோக்கிப் பாய்ந்து வருவதையும் கண்டான் ரகுதேவ்.
இந்த ஓட்டமும் பிடியும் அரை மணி நேரம் நடந்தது. அவ்வப்பொழுது தூரதிருஷ்டிக் கண்ணாடியை ரகுதேவிடமிருந்து வாங்கி எதிரிக் கப்பலை ஆராய்ந்து கொண்டிருந்த ஜலமோகினியின் தலைவன், ஜலமோகினிக்கும் ஸித்தி
அஹமதின் கப்பலுக்கும் இடையே உள்ள தூரம் மிகக் குறைந்து வருவதைக் கண்டான். அதைக் காணக் காண “ஒருவேளை ரகுதேவின் புத்தியைக் கேட்டிருந்தால் தப்பியிருக்கலாமோ” என்ற அபிப்பிராயம் லேசாகக் கப்பல் தலைவன்
மூளையில் உதயமாகவே, மீண்டும் ரகுதேவை நோக்கி “ரகுதேவ்! இரண்டு கப்பல்களுக்குமிடையில் இருக்கும் தூரம் துரிதமாகக் குறைந்துகொண்டு வருகிறதே” என்றான் மெள்ள.
“ஆம்! நானும் கவனித்தேன்” என்று பதிலளித்தான் ரகுதேவ்.
“இனி என்ன செய்யலாம்?” என்று கப்பல் தலைவன் கேட்டான். இதைக் கேட்டபோது கப்பல் தலைவன் குரலிலிருந்த பணிவைப் பார்த்த ரகுதேவ். சிறிது நேரம் சிந்தித்தான். “முன்பு ஓட்டத்தால் ஜெயிக்க மார்க்கமிருந்தது இப்பொழுது அது
மாத்திரம் போதாது” என்று இழுத்த ரகுதேவைப் பார்த்த கப்பல் தலைவன், ஏதும் புரியாதவனாய், “இப்பொழுது செய்ய வேண்டியதென்ன?” என்று வினவினான்.
“ஓடவும் வேண்டும். சண்டை போடவும் வேண்டும்.”
“சண்டை போட எப்படி முடியும்? என்னிட மிருப்பதை விட இரண்டத்தனை பீரங்கிகள் எதிரிக் கப்பலில் இருக்கின்றன. ஆகையால் பீரங்கியால் சுட்டு ஜெயிக்க முடியாது. கப்பல்கள் முட்டி ஒன்று சேர்ந்தாலோ ஆள் பலம் எதிரிக்குத்தான்
அதிகம். என்னிடமிருப்பவர் இருபது மாலுமிகள். ஸித்தி அஹமதின் கப்பலில் இருநூறு மாலுமிகளாவது இருப்பார்கள். ஒரு நொடியில் எதிரிகள் நம்மை அழித்துவிட முடியும். அது யுத்தக் கப்பல். இது சாதாரண வியாபாரக் கப்பல்.
வெடிமருந்தும் நம்மிடம் அதிகமில்லை.”
“உங்கள் அதைரியத்துக்குக் காரணம் கப்பற் போரில் அனுபவமில்லாமைதான். இதைவிடச் சிறிய கப்பல்களை வைத்துக் கொண்டு, ஸித்தி அஹமதின் கப்பலை விடப் பெரிய கப்பல்களை நான் பலமுறை முறியடித்திருக்கிறேன்.”
“இப்பொழுது அது மாதிரி ஏதாவது செய்ய முடியுமா?”
“முடியும். ஆனால் அதற்குத் தேவையான அதிகாரம் வேண்டும்.”
“என்ன அதிகாரம் வேண்டுமோ கேள், தருகிறேன். இந்த ஆபத்திலிருந்து மாத்திரம் காப்பாற்றிவிடு” என்று கெஞ்சினான் கப்பல் தலைவன்.
“அப்படியானால் பீரங்கிகளமைக்கப்பட்டிருக்கும் அந்த நடுத்தளத்தை நான் நிர்வாகித்துக் கொள்கிறேன். யந்திர அறையை நீங்கள் கவனித்துக் கொள்ளுங்கள். நம்மிருவர் ஒத்துழைப்பும் சரியாயிருந்தால், ஸித்தி அஹமதின் கப்பலை
ஆடாமல் அசையாமல் செய்துவிடலாம்.”
ரகுதேவ் சொன்னதின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் தத்தளித்தான் கப்பல் தலைவன். ரகுதேவ் விளக்கமாகத் தன் திட்டத்தை எடுத்துச் சொன்னான். “கடற்படைப் போரில் முக்கியமான அம்சங்கள் இரண்டு. ஒன்று
மரக்கலத்தின் வேகம். இரண்டு பீரங்கிகளைக் காலம் பார்த்து உபயோகித்தல். இப்பொழுது நாம் முதலில் செய்ய வேண்டியது எதிரிக் கப்பலின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அதை எப்படிச் செய்வது? பீரங்கிகளை உப யோகித்து அவன்
யந்திர வசதியை உடைக்க நம்மால் முடியாது. ஆனால், சரியான குறிவைத்து அவன் பாய் மரங் களை உடைத்துத் தள்ளலாம். பாய் மரங்களை உடைத்தால் கப்பல் வேகம் முக்கால்வாசிக்கு மேல் குறைந்துவிடும்” என்றான்.
“இதற்கு நான் செய்ய வேண்டியதென்ன?” என்று கப்பல் தலைவன் கேட்டான்.
“பீரங்கிகளைச் சரியானபடி பிரயோகிக்க எனக்குச் சந்தர்ப்பமளிக்க வேண்டும். இயந்திரங்களைச் சரியாகக் கையாண்டு நமது கப்பலை எதிரியின் பாய்மரங்களுக்குக் குறி வைக்கும் முறையில் திடீரெனத் திருப்ப வேண்டும். நாம்
கப்பலைத் திருப்புவதாகவோ, பீரங்கியைப் பாய் மரத்துக்காகக் குறி வைப்பதாகவோ எதிரி ஊகிக்கு முன்பே காரியம் முடிய வேண்டும்.”.
ரகுதேவின் திட்டத்தை ஒப்புக்கொண்ட கப்பல் தலைவன் தள மாலுமிகளைக் கூப்பிட்டு, இருக்கும் நிலைமையை விளக்கினான். “தூரத்தில் வருவது ஸித்தி அஹமதின் கப்பல். அவனிடம் நாம் அகப்பட்டுக் கொண்டால் முடிவு
என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள். அதிர்ஷ்டவசமாக இந்த அபாயத்தைச் சமாளிக்கக்கூடிய ஒருவர் நம்முடன் இருக்கிறார். ரகுதேவ் பஸல்காரின் கடற் போர்த் திறமையைப் பற்றி நான் உங்களுக்கு ஏதும் சொல்லத் தேவையில்லை. இந்தப்
பீரங்கித் தளத்தை நிர்வகித்து எதிரியிடம் போரிடும் பொறுப்பை அவர் மேற் கொண்டிருக்கிறார். என்னிடம் எவ்வளவு பணிவுடன் நடந்துகொள்வீர்களோ, அவ்வளவு பணிவுடன் அவரிடமும் நடந்து கொள்ள வேண்டும். இந்தக்
கப்பலில் பிரயாணம் செய்பவர்களின் உயிர் உங்கள் கைகளிலிருக்கிறதென்பதை நினைவில் வைத்துக் கொண்டு கடமையைச் செய்யுங்கள்” என்று கூறினான்.
கப்பல் தலைவன் இவ்வாறு உத்தரவிட்டு முடிந்ததும் ரகுதேவ், தன் ஊழியனான ரஜினிகாந்தை வரவழைத்துத் தன் சொக்காய் உருமால் எல்லாவற்றையும் அவனிடம் கழற்றிக் கொடுத்தான். கால்சராயைத் தவிர மற்ற எல்லாவற்றையும்
கழற்றிவிட்டு, அரை நிர்வாணமாக நின்று கொண்டு மாலுமிகள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பீரங்கியிடம் நிறுத்தினான். பீரங்கிகளை எத்தனை உயரத்திற்குத் தூக்கி வைக்க வேண்டும் என்பதற்கும் உத்தரவிட்டான். பீரங்கிக்கு
நெருப்பிடும் வாய்களைச் சுத்தம் செய்து தயாராயிருக்குமாறு எச்சரித்தான்.
இந்த ஏற்பாடுகளைச் செய்து முடித்ததும் கப்பல் தலைவனை நோக்கிய ரகுதேவ், “என் தலையில் பெரிய பொறுப்பைச் சுமத்தியிருக்கிறீர்கள். நான் என் கடமையைச் சரியாகச் செய்ய வேண்டுமானால், எதிரிக் கப்பல் அருகில் வந்ததும் நம்
கப்பலைத் திடீரென அதன் முனைப் பாகத்துக்காகத் திருப்ப வேண்டும். அதன் பாய் மரங்களின் மீது குண்டு வீச வசதி செய்து கொடுங்கள். நான் உங்களுக்கு வெற்றியைத் தருகிறேன்” என்றான்.
கப்பல் தலைவன் பதிலுக்குத் தலையை அசைத்தான். ரகுதேவ் மீண்டும் அவனை எச்சரித்தான். “அபாயம் அதிகமாயிருக்கும்போது துணிச்சலும் அதிகம் வேண்டும். ஜாக்கிரதைக்கு இது சமயமல்ல. துணிச்சலுக்குத்தான் சமயம்!”
என்றான்.
கப்பல் தலைவன் தன் பணியைச் செய்யச் சென்றான்: ரகுதேவின் உத்தரவுப்படி மாலுமிகள் பந்தங்களைக் கொளுத்திக் கொண்டு பீரங்கிகளுக்கு வெடி வைக்கத் தயாராக இருந்தார்கள். நடுத்தளத்தில் பீரங்கிகளுக்கு இடையில் முட்டி
போட்டு உட்கார்ந்திருந்த ரகுதேவ், ஸித்தி அஹமதின் கப்பல், பீரங்கி வெடி தாக்கும் தூரத் துக்கு வந்துவிட்டதை அறிந்து மாலுமிகளை எச்சரித்துப் பீரங்கிகளை எதிரியின் பாய்மரத்துக்காகக் குறி வைத்து, ஜலமோகினி திரும்பும்
நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த நேரம் வரவில்லை. கோழையான கப்பல் தலைவன் ஓட்டம் பிடிப்பதிலேயே கண்ணாயிருந் தான். கடற் போரில் இணையற்ற ஸித்தி
அஹமத் சும்மாயிருக்கவில்லை. அவன் பீரங்கிகளிலொன்று பெரிதாக முழங்கியது. அதன் விளைவாக ஜலமோகினி ஒருமுறை பயங்கரமாக ஆட்டம் கொடுத்தது. தளத்திலிருந்த மஞ்சங்கள் உருண்டு ஒடின. தளத்தில் எதையும்
பிடிக்காமல் நின்றிருந்த இரு மாலுமிகள் தடாரென மல்லாந்து விழுந்தனர்.

Previous articleJala Mohini Ch3 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch5 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here