Home Historical Novel Jala Mohini Ch5 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch5 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

111
0
Jala Mohini Ch5 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch5 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch5 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 5. ஸித்தி அஹமத்

Jala Mohini Ch5 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

கப்பல் தளம் இவ்வளவு தடபுடல் பட்டும், அதன் காரணத்தை அறியாத பீம்ஸிங் கவலையேதுமில்லாதவராய், கீழ் அறையில் மிகக் குதூகலமாகப் பத்மினியுடன் பேசிக் கொண்டிருந்தார். பீம்ஸிங்குக்கு மட்டும் லவலேசம்
புத்தியிருந்திருக்குமானால் கப்பலிருக்கும் நிலைமையைப் பற்றி வெகுஎளிதில் புரிந்துகொண்டிருக்கலாம். அப்படிப் புரிந்து கொள்ளுவதற்கு வசதியான அறிகுறிகள் யதேஷ்டமாக இருந்தன. அப்பொழுது காலை நேரமானதால்
சாளரத்தின் வழியாகவும் வெயில் உள்ளே அடித்துக் கொண்டிருந்தது. கப்பல் திசை திரும்பியதும் மெள்ள இடம் மாறி எதிர்ப் பக்கத்தில் விழ ஆரம்பித்தது. சாதாரண அறிவுள்ளவன்கூட இதிலிருந்து கப்பல் திசை திருப்பிவிட்டதை
உணர்ந்து கொண்டிருப்பான். பீம்ஸிங் இதைத்தான் கவனிக்கவில்லையென்றால், மாலுமிகள் தளத்தில் தடதடவென்று ஓடும் சத்தம் அவர் தலைக்கு மேலேயே கேட்டுக்கொண்டிருந்ததே; அதையாவது கவனித்திருக்கலாம். பீம்ஸிங் தலை
பரம காலியாயிருந்ததால், இந்தச் சத்தத்தைப் பற்றியோ, மாலுமிகள் நடமாட்டத்தைப் பற்றியோ சிறிதும் கவலை கொள்ளவேயில்லை. சாளரத்தின் வழியாக வெளியே இருந்த ஆழ் கடலைப் பார்த்து உற்சாகப்பட்டதோடு நில்லாமல்
இயற்கையில் தனக்குள்ள ரஸிகத்தன்மையைப் பத்மினிக்கும் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தார்.
முதலில் கதிரவனின் கிரணங்கள் கடலில் பாய்ந்து வருவதைப் பற்றிப் பிரஸ்தாபித்தார். அந்த ஒளியில் சமுத்திர மீன்கள் துள்ளி மேலெழுந்து மீண்டும் தண்ணீரில் விழும் காட்சியிலிருக்கும் அற்புதத்தைச் சிலாகித்தார். வெய்யில்
மறைந்ததும், தூரத்தே ஒரு பெரிய கப்பல் கண்ணுக்குப் புலப்பட்டதைக் கண்டு, “ஆஹா! ஆஹா!” என்று ஆச்சரியப்பட்டார். அவர் பேச்சை அதுவரையில் பொறுத்துக் கொண்டிருந்த பத்மினி, அந்த ‘ஆஹா’ சத்தத்தின் காரணத்தை
அறியவேண்டி, “எதைப் பார்த்து அப்படி ஆச்சரியப்படுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“நீயும் வந்து பார். எப்பேர்ப்பட்ட கண் கொள்ளாக் காட்சி? அப்பப்பா! எத்தனை பெரிய கப்பல்! கப்பலென்றால் அப்படியல்லவா இருக்க வேண்டும்! நாமும் பிரயாணம் செய்கிறோமே, இதுவும் ஒரு கப்பலா!” என்று பத்மினியை அழைத்தார்
பீம்ஸிங்.
பத்மினியும் சாளரத்துக்கருகில் வந்து தூரத்தே தெரிந்த கப்பலை நோக்கினாள். பீம்ஸிங் தமக்கும் கப்பல் விவ காரங்கள் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள தூரத்தே வந்து கொண்டிருந்த கப்பலின் உயர்வைப் பற்றி மேலும்
சிலாகித்துப் பேசலானார். பாய்மரங்களை வெளேரென விரித்துக் கொண்டு பாய்ந்து வரும் அக்கப்பலை எப்படி ஒரு கடற் பறவைக்கு ஒப்பிடலாமென்பதை எடுத்துக் காட்டினார். அதன்மீது காலை வெயில் விழுந்திருப்பது எத்தனை தூரம்
கண்ணைக் கவருகிறது என்பதையும் பத்மினியிடம் விவரித்தார். “அந்தக் கப்பல் அருகில் வரட்டும்; அதன் யந்திர வசதி முதலிய மர்மங்கள் பூராவையும் உனக்கு எடுத்துச் சொல்கிறேன்”
ஆனால், தன் மர்மத்தை பீம்ஸிங் எடுத்துரைக்கும் வரையில் தூரத்தே வந்துகொண்டிருந்த கப்பல் காத்துக் கொண்டிருக்கவில்லை. தன் பீரங்கிகளில் ஒன்றைப் பயங்கரமாக முழக்கி மர்மத்தை பீம்ஸிங்கிற்குப் புரிய வைத்து விட்டது.
எதிரியின் பீரங்கி வீச்சினால் ஜலமோகினி திடீரென ஒரு ஆட்டம் கொடுத்ததும் அறையின் ஒரு மூலைக்குப் போய் விழுந்தார் பீம்ஸிங். மிகுந்த அவஸ்தைப் பட்டு அவர் பூதாகாரமான உடலைத் தூக்கிக் கொண்டு மீண்டும் எழுந்து
நின்ற நிலையைக் கண்டு பத்மினியின் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. “இப்படிச் சற்று வந்து அந்தக் கப்பலைப் பற்றிய இதர தகவல்களையும் சொல்லுங்கள்” என்று பரிகசித்தாள்.
அவள் அப்படித் தன்னைப் பரிகாசம் செய்தது பீம்ஸிங்குக்கு அடியோடு பிடிக்கவில்லையென்றாலும், அதைப் பற்றிச் சிந்தனையிலிறங்க பீம்ஸிங்கின் புத்தி அப்பொழுது இடங்கொடுக்கவில்லை. எதிரியின் பீரங்கியால்
ஜலமோகினியைவிட பீம்சிங்கின் உள்ளம் பெரிதும் ஆட்டங் கொடுத்துவிட்டது. தாம் பெரிதும் சிலாகித்துக் கொண்டிருந்த கப்பல் தங்களுக்கு வந்திருக்கும் ஒரு பெரிய யமன் என்பதையும், பெரிய ஆபத்து தங்களைச் சூழ்ந்து
கொண்டிருக்கிற தென்பதையும் பீம்சிங்கூட புரிந்துகொண்டார். இந்த உணர்வு ஏற்பட்டதன் விளைவாக, அவர் முகத்தில் பயத்தின் சாயையும் துரிதமாகப் படரலாயிற்று. இருந்தாலும் தன்னைச் சமாளித்துக் கொண்டு “பத்மினி! இந்தக்
கப்பல் ஆபத்தில் சிக்கிக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது. தளத்துக்குப் போய் விஷயம் என்னவென்பதைப் பார்த்து வருகிறேன்” என்றார்.
“விஷயத்தை அறிந்து நாமென்ன செய்யப்போகிறோம்? ஆபத்தைத் தவிர்க்க நம்மால் முடியுமா?” என்றாள், பத்மினி லேசாகச் சிரித்துக் கொண்டே. ஆபத்தைக் கண்டு அவள் நகைப்பது பீம்ஸிங்குக்கு எந்த விதமான ஆச்சரியத்தையும்
அளிக்கவில்லை. ராஜபுத்ர ஸ்திரீகளின் இயற்கைக் குணத்தையே அவள் காட்டுகிறாளென்பதை அவர் தெரிந்து கொண்டார். இருந்தபோதிலும் பத்மினி அவளுடன் தன்னையும் சேர்த்து ‘நாம் என்ன செய்யப் போகிறோம்’ என்று
பொதுப்படையாகப் பேசியது பீம்ஸிங்குக்கு மிகவும் கஷ்டமாயிருந்தது. பத்மினி வேண்டுமென்றே தம்மையும் பெண்ணினத்தில் சேர்த்துப் பேசியிருப்பதாக நினைத்து வெட்கத்தால் குன்றிய பீம்ஸிங், “எதற்கும் தளத்திற்குப் போய் என்ன
நடக்கிறதென்று பார்க்கிறேன்” என்று கிளம்பினார்.
“தனியாகப் போக வேண்டாம். நானும் துணை வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே, பத்மினியும் தளத்துக்குச் செல்லக் கிளம்பினாள். அவள் பேச்சில் மீண்டும் தொனித்த ஏளனத்தைக் கவனித்தும் கவனிக்காததுபோல் பாசாங்கு
செய்து தளத்துக்குச் செல்லும் படிகளில் பீம்ஸிங் ஏறத் தொடங்கினார்.
தளத்துக்கு வந்து, இருந்த நிலைமையைக் கண்டதும், பீம்ஸிங் மட்டுமின்றி, பத்மினியும் ஸ்தம்பித்துப் போனாள். தளம் முழுவதும் போருக்கு ஆயத்தமாயிருப்பதையும், பாய்மரக் கயிறுகளையும் பீரங்கிச் சங்கிலிகளையும் ரகுதேவின்
உத்தரவுப்படி மாலுமிகள் அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டு ஓடுவதையும் கவனித்த அவ்விருவருக்கும், எதிரி யார் என்பதை அறிந்துகொள்ள ஆவல் அதிகமாயிருந்தாலும், அந்த ஆவலைப் பூர்த்தி செய்வார் யாருமில்லை.
மாலுமிகள் வேலையில் மும்முரமாயிருந்ததால், தளத்துக்கு வந்த முக்கியஸ்தர்கள் இருவரையும் கவனிக்கவில்லை. கப்பல் கயிறுகளை இழுத்துக் கொண்டு ஓடிய ஓரிரு மாலுமிகள் மட்டும் பீம்ஸிங் குறுக்கே நின்றிருந்ததால் சிறிது
சங்கடப்பட்டு அவரைத் தள்ளி நிற்கும்படி எச்சரித்தார்கள்.
பத்மினி ரகுதேவையே கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் சொக்காய்களையெல்லாம் கழற்றிவிட்டு வெத்து உடம்போடு கண்ணில் வைத்த தூரதிருஷ்டிக் கண்ணாடியை அகற்றாமல் எதிரிக் கப்பலைப் பார்த்துக்
கொண்டிருப்பதையும், பீரங்கிகளுக்கு அருகிலிருந்த மாலுமிகள் அவனையே உற்றுப் பார்த்து நிற்பதையும் கண்ட பத்மினிக்கு, ஜலமோகினியை அவன் நடத்துகிறானா அல்லது கப்பல் தலைவன் தான் நடத்துகிறானா என்பதில் சந்தேகம்
ஏற்பட்டது. இத்தனை கலவரத்திலும் அவள் கண்கள் அந்த வீரனின் உடலிலிருந்த வாளிப்பையும், தோள்களின் திண்மையையும், ஒல்லியாய் இருந்தாலும் உடலமைப்பிலிருந்த கம்பீரத்தையும் கவனிக்கத் தவறவில்லை.
தளத்துக்கு வந்த அவ்விருவரையும் மாலுமிகள் கவனித்தாலும் கவனிக்காவிட்டாலும் யந்திர அறைக்கு அருகில் நின்று கொண்டிருந்த கப்பல் தலைவன் மட்டும் கவனிக்கத் தவறவில்லை. அவர்கள் மாலுமிகளின் அலுவலுக்குப்
பேரிடைஞ்சலாக குறுக்கே நிற்பதைக் கண்ட கப்பல் தலைவன், “அவ்விருவரையும் கீழே போகச் சொல்” என்று இருந்த இடத்திலிருந்தே கூவினான். அசட்டுப் பிடிவாதத் தால் அந்த உத்தரவை அலட்சியம் செய்த பீம்ஸிங்கை நோக்கி
ஆத்திரத்துடன் ஓடிவந்த கப்பல் தலைவன், “யார் உங்களைத் தளத்துக்கு வரச் சொன்னது?” என்று மிகுந்த கோபத்துடன் கேட்டான்.
பத்மினிக்கு எதிரில் கப்பல் தலைவன் தம்மைத் துரும்பு போல் நடத்தியதைச் சகிக்காத பீம்ஸிங், தமது பிடிவாதத்தை மேலும் காட்டினார். “நானும் மகாராஷ்டிரப் படையில் ஒரு தளபதி. இங்கு நடக்கும் விஷயத்தை அறிந்து கொள்ள
எனக்கும் உரிமையிருக்கிறது.” என்று ஆரம்பித்தார்.
“உரிமையிருக்கிறதா! சீக்கிரம் நீங்கள் கீழே போகாவிட்டால் மாலுமிகளைவிட்டு இழுத்துக்கொண்டு போய் அறையில் போட்டுப் பூட்டச் செய்வேன்” என்று அடிக்காத தோஷமாய்ச் சொன்ன கப்பல் தலைவன், பத்மினியைப்
பார்த்ததும் தன் கோபத்தைச் சிறிது தணித்துக் கொண்டான். “அம்மா! கப்பல் பெரிய ஆபத்திலிருக்கிறது. அதோ வருவது ஸித்தி அஹமதின் கப்பல். அவன் குண்டு வீசவும் ஆரம்பித்துவிட்டான். நீங்கள் கீழே போய் அறையிலிருப்பது
தான் நல்லது. போய்விடுங்கள். இந்தத் தளபதி மட்டும் இங்கேயே இருந்து பிடிவாதத்தால் பிராணனை விடட்டும்” என்று சொல்லிவிட்டுப் பழையபடி தான் இருந்த ஸ்தானத்துக்கு போய்விட்டான்.
ஆத்திரம் எல்லை கடந்திருந்தாலும் அதைக் காட்டச் சக்தியற்றிருந்த பீம்ஸிங்கின் மேல் பரிதாபங் கொண்ட பத்மினி, அவரை ஆசுவாசப்படுத்த முயன்று, “நாம் இவர்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறோம். வாருங்கள் கீழே போவோம்.
வேண்டாத இடத்தில் நமக்கென்ன வேலை?” என்றாள். வேண்டா வெறுப்பாகப் பீம்ஸிங் அவளைத் தொடர்ந்து கீழே சென்றார்.
அவர்கள் வந்ததையோ போனதையோ கவனிக்காமல் காரியத்திலேயே கண்ணாயிருந்த ரகுதேவ், எதிரிக் கப்பல் குண்டு வீசியும் தன் பீரங்கிகளைப் பிரயோகிக்கத் தலைவன் வசதியளிக்காதிருப்பதைக் கண்டு வெகுண்டான். சற்று
நேரம் காத்திருந்துவிட்டு கப்பல் தலைவனிருந்த இடத்துக்குச் சென்று, “நான் சொன்னபடி கப்பல் முனையை ஏன் திருப்பவில்லை? எத்தனை நேரம் பீரங்கிகளைக் குறிவைத்து நான் காத்திருப்பது?” என்று கேட்டான்…
“எப்பொழுது கப்பலைத் திருப்புவதென்று எனக்குத் தெரியும்?” என்றான் கப்பல் தலைவன் பதிலுக்கு.
“எப்பொழுது திருப்புவீர்கள்! எதிரிக் கப்பல் நமது கப்பலுடன் மோதி, ஸித்தி அஹமதின் வீரர்கள் நம் கப்பலுக்குள் பாய்ந்த பிறகா?”
இந்தக் கேள்வியிலிருந்த இகழ்ச்சியைக் கப்பல் தலைவன் உணர்ந்தாலும், தன் பிடிவாதத்தையும் விட்டுக் கொடுக்கவில்லை. “கப்பல் போரில் எனக்கும் அனுபவ முண்டு. ஸித்தி அஹமத் ஒரே ஒரு பீரங்கியை முழங்கி. விட்டுச்
சும்மாயிருப்பதைக் கவனி” என்றான்.
“கவனித்தேன். அவன் சும்மாயிருப்பதற்குக் காரணம், அவன் பீரங்கி சுடும் தூரத்தில் நாமில்லை என்று நினைக்கிறீர்கள். சுத்தத் தவறு. இந்தக் கப்பலைச் சேதமில்லாமல் விழுங்கப் பார்க்கிறான் ஸித்தி அஹமத். அவன் அடுத்த குண்டு
பாய்மரத்தில் விழும். அப்புறம் கப்பல் அவன் வசம்தான். பிறகு நமது பீரங்கிகளைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. சீக்கிரம் கப்பலைத் திருப்புங்கள்” என்று கூறிவிட்டு மீண்டும் தன் ஸ்தானத்திற்கு வந்து பீரங்கிகளைத் தயாராக
வைத்தான்.
கோழைத்தனத்தால் நிதானத்தை இழந்து விட்டிருந்த கப்பல் தலைவன் புத்தியில் ரகுதேவின் யோசனை சிறிதும் ஏறவில்லை. ‘நமது பீரங்கிகள் சுட்டுக் குறி தவறி விட்டால் நம்மைத் துவம்சம் செய்துவிட ஸித்தியால் முடியுமே’ என்ற
நினைப்பினால், சுக்கானை ஒரே மார்க்கத்தில் வைத்து ஓடித் தப்புவதிலேயே முனைந்தான் கப்பல் தலைவன். ஆனால் ரகுதேவின் ஊகம் எத்தனை சரியென்பதை வெகு சீக்கிரம் புரிந்துகொண்டான். ஸித்தி அஹமதின் கப்பலிலிருந்து
முழங்கிய இன்னொரு பீரங்கி ஜலமோகினியின் ஒரு பாய்மரத்தைத் தடாலென முறித்து வீழ்த்தியது. அவன் கப்பலும் ஜலமோகினிக்கு வெகு அருகில் வந்துவிட்டது. ஸித்தியின் கொள்ளைக்காரர்கள் தங்கள் கப்பல் முனையில்
நின்றுகொண்டு பெரிதாகக் கூச்சல் போட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தான் ரகுதேவ். அவர்கள் கைகளில் நீண்ட கயிறுகளும், கயிறுகளின் முனையில் இரும்புக் கொக்கிகளும் இருப்பதைப் பார்த்தான். ஜலமோகினியின் மீது சீக்கிரம்
அக்கொக்கிகளை வீசி, எதிரிகள் கப்பலைத் தங்கள் கப்பலுக்கருகில் இழுத்துக் கொள்வார்களென்பதையும் அறிந்து காரியம் மிஞ்சி விட்டதை உணர்ந்தான். மாலுமிகளைக் கூப்பிட்டு, “இனி நாம் செய்யக் கூடியது எதுவுமில்லை. ஒரு
கோழையினிடம் பணி செய்ய முயன்ற பலனை நீங்கள் அனுபவிக்கத்தான் வேண்டும்” என்று சொல்லி விட்டுக் கப்பல் தலைவனைச் சபித்துக் கொண்டே தடாலென்று பக்கத்திலிருந்த கம்பிகளில் தொத்திக் கீழ் அறைச் சாளரத்துக்குள்
மறைந்து விட்டான்.
கீழ் அறையில் பத்மினியுடன் மிகுந்த கலவரத்துடன் நின்றிருந்தார் பீம்ஸிங். தம்மைக் கப்பல் தலைவன் இழிவாக நடத்தியதால் ஏற்பட்ட அவமானம் ஒருபுறமும், தங்களைத் தாக்க வருவது ஸித்தி அஹமத்தின் கப்பல் என்பதை
அறிந்ததால் ஏற்பட்ட கிலி ஒருபுறமும் அவரைப் பிடித்து வாட்டிக் கொண்டிருந்தன. பத்மினியைப் பற்றிய கவலையும் அவர் புத்தியைச் சூழ்ந்துகொண்டது. “ஸித்திகள் கையில் அகப்பட்டால் பத்மினி சீரழிந்துவிடுவாளே, என்ன
செய்வது?” என்று ஏங்கினார். இப்படி அவர் ஏங்கிக் கொண்டிருந்த சமயத்தில்தான் அரை நிர்வாணமாக சாளரத்தின் வழியாக அறைக்குள் குதித்தான் ரகுதேவ்.
பீம்ஸிங்குக்கு இருந்த கலவரத்தில் குதித்தவன் எதிரிகளிலொருவனோ என்று நினைத்துத் தமது வாளை உறையிலிருந்து உருவத் தொடங்கினார். ரகுதேவைப் பார்த்ததும் தம்மைச் சற்று நிதானப்படுத்திக் கொண்டு. “உள்ளே நுழைய
இதுதானா வழி” என்று வினவினார்.
“இதுதான் குறுக்கு வழி. சரியான வழியில் வர நேரமில்லை. எதிரிக் கப்பல் நமது கப்பலுடன் இன்னும் சில நிமிஷங்களில் மோதப் போகிறது” என்றான் ரகுதேவ்.
தைரியசாலியான பத்மினிகூட இந்தச் செய்தியைக் கேட்டுத் திகிலடைந்து, “ஏன் தப்ப வழி ஏதுமில்லையா?” என்று கேட்டாள்.
“இருந்தது. கோழையான கப்பல் தலைவன் வழியை உபயோகித்துக் கொள்ளவில்லை. கப்பலை ஓட்டவே லாயக் கில்லாத ஒருவனுக்குத் தலைவன் உத்தியோகமும் கிடைத்து விட்டால் பலன் இதுதான்” என்று சொல்லி விட்டுத் தன்
அறையை நோக்கி நடந்தான் ரகுதேவ். இவர்
சற்று நேரத்திற்கெல்லாம் ஸித்தியின் கப்பலால் பத்மினி அறையின் சாளரமும் மறைக்கப்பட்டது. மேலே கொள்ளைக்காரர்கள் தடால் தடாலென்று தாவிக்குதிக்கும் சத்தமும் அவர்கள் இடும் பேரிரைச்சலும் கேட்டன.
கொள்ளைக்காரர்களின் விரஸமான வார்த்தைகளும், வெற்றியுடன் கூடிய சிரிப்பொலியும், ஜலமோகினி மாலுமிகளின் மரணக் கூச்சலுடன் கலந்து மிகக் கோரமாக எங்கும் எதிரொலி செய்தன. பத்மினி நடுநடுங்கினாள். பீம்ஸிங்
வெலவெலத்து நின்றான். அந்தச் சமயத்தில் ரகுதேவ் புது ஆடைகளால் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு வந்து சேர்ந்தான். அவன் புதிதாக முகத்தைக் கழுவி கோபீ சந்தனம் இட்டிருப்பதையும், தலை வாரிக்
கொண்டிருப்பதையும், நல்ல சரிகை வேலைப் பாடுகளுடன் கூடிய பட்டுச் சொக்காய் சராய் முதலியவற்றை அணிந்திருப்பதையும் கண்ட பீம்ஸிங்குக்கு எரிச்சல் தாங்காமல், “மரணச் சமயத்திலும் அலங்காரத்தை நிறுத்த மாட்டீர்கள்
போலிருக்கிறது” என்றார்.

.
சாதாரண நேரமாயிருந்தால் ரகுதேவ் சிரித்திருப்பான். ஆனால், அந்தச் சமயத்தில் பீம்ஸிங்கின் வார்த்தையை அவன் லக்ஷியம் செய்யவில்லை. பத்மினிக்கு அருகில் சென்று அவள் முதுகில் கையை வைத்து, “நான் உயிருடன் இருக்கும்
வரையில் உங்களைக் காப்பாற்றிவிட என்னா லானதைச் செய்கிறேன்” என்றான். நன்றி ததும்பும் கண்களுடன் பத்மினி அவனை நோக்கினாள்.
பத்மினியை அவன் தொட்டுப் பேசியதை விரும்பாத பீம்ஸிங், “உன்னால் என்ன செய்துவிட முடியும்?” என்று உஷ்ணமாகக் கேட்டார்.
“எவ்வளவோ செய்ய முடியும். ஆனால், அதற்கு உங்கள் உதவியும் அவசியம். நான் எதைச் சொன்ன போதிலும் மறுத்துப் பேச வேண்டாம். பேசாமலே இருந்தால் மிகவும் நல்லது. உங்கள் மெளனத்தால் நாம் பிழைக்க மார்க்கமிருக்கிறது.
மௌனமாயிருப்பதாக வாளின் மேல் ஆணையிடுங்கள்” என்றான் ரகுதேவ். வேண்டா வெறுப்பாக அவன் கேட்டபடி ஆணையிட்டுக் கொடுத்தார் பீம்ஸிங்.
ரகுதேவ் பிறகு ரஜினிகாந்தைக் கூப்பிட்டுக் காலைச் சிற்றுண்டியைத் தயார் செய்யும்படி கூறிவிட்டு, அறையின் வாயிற்படியில் நின்றுத் தளத்திலிருந்து வந்த சப்தங்களை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்தான். கொள்ளைக்காரர்களின்
சிரிப்பொலி வானத்தைப் பிளக்கவே சண்டை சமாப்தியாகிவிட்டதென்ற முடிவுக்கு வந்தான். அறையிலிருந்த தளத்திற்குச் செல்லும் படிகளில் உச்சியிலிருந்த கதவு திடீரெனத் திறக்கப்பட்டது. குடியால் வெறிபிடித்துச் சிவந்த கண்களுடன்
கையில் கத்திகளுடன் கொள்ளைக்காரர்கள் தட தடவெனப் படிகளில் இறங்கி வந்தனர். முதல் கொள்ளைக்காரன் நாலைந்து படிகளில் இறங்கியதும், ரகுதேவின் குரல் கணீரென ஒலித்தது. “அங்கேயே நில். ஒரு அடி முன்னால் எடுத்து
வைத்தாலும் பிணமாகிவிடுவாய்” என்றான். இச் சொற்களைக் கேட்ட கொள்ளைக்காரன் சற்று நிதானித்து எதிரே நோக்கவே, கைத்துப்பாக்கியுடன் சுடத் தயாராக ரகுதேவ் நின்று கொண்டிருப்பதைக் கண்டான்.
“என் பெயர் ரகுதேவ் பஸல்கார்! உங்கள் தலைவன் அஹமத்தை நான் அழைப்பதாகச் சொல்” என்று முன்னை விட அதிகாரத் தோரணையில் கூறினான் ரகுதேவ்.
கொள்ளைக்காரர்கள் சற்று நேரம் ஏதோ தங்களுக்குள் கலந்து பேசிக் கொண்டார்கள். பிறகு அவர்களில் ஒருவன் தளத்துக்கு ஓடினான். சிலவிநாடிகள் கழிந்தன “எங்கே அவன்?” என்று கூச்சலிட்டுக் கொண்டே பிருமாண்டமான
சரீரத்துடனும், குரூரமான பார்வையுடனும் ஸித்தி அஹமத் படிகளில் திடுதிடுவென இறங்கி வந்தான். வந்தவன் ரகுதேவைப் பார்த்ததும் ஒருகணம் ஸ்தம்பித்து நின்றான். அடுத்த விநாடி அவன் கண்கள் வாயிற்படியைத் தாண்டி உள்ளே
இருந்த பத்மினி மீது பதிந்தது.
அவளைப் பார்த்த ஸித்தி அஹமத், “ஹாஹ்… ஹாஹா” என்று பயங்கரமாக நகைத்து, “கப்பலில் இந்தச் சரக்கும் இருக்கிறதா? விடு வழியை” என்று சொல்லிக் கொண்டே பத்மினியை நோக்கிச் செல்லத் தொடங்கினான்.

Previous articleJala Mohini Ch4 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch6 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here