Home Historical Novel Jala Mohini Ch8 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch8 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

106
0
Jala Mohini Ch8 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch8 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch8 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 8. இலவு காத்த கிளி

Jala Mohini Ch8 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

திடீரென்று பலவந்தமாகக் கட்டியணைக்கப்பட்ட பத்மினி, மிதமிஞ்சிய அதிர்ச்சியால் எதுவும் செய்யவோ சொல்லவோ சக்தியற்றவளாய்ச் செயலற்று நின்றாள். தான் இருந்தது துன்ப நிலையா இன்ப நிலையா, என்பதை ஊகிக்கும்
அளவுக்குக்கூட அவள் உணர்ச்சிகள் இயங்க மறுத்தன. துன்பமும் இன்பமும் அவள் உடலில் மின்னல் வேகத்தில் மாறி மாறி அலைபாய்ந்து நின்றன. மிகக் கண்ணியமானவனென்று நான் நினைத்திருந்த ரகுதேவ், இப்படி மிருகத்திலும்
கேவலமாகவே நடந்துகொள்கிறானே என்ற எண்ணம் அவள் உள்ளத்தில் பெருநெருப்பாக எழுந்து நெஞ்சத்தை ஒரு வினாடி கருக்கியது. அவள் அழகிய உடலை வளைத்துச் சென்ற அந்தப் பரபுருஷனின் கரங்களால் ஏற்பட்ட ஸ்பரிசம்,
அடுத்த விநாடி இன்பத் தாரையை வர்ஷித்துத் துன்ப அக்னியை அணைக்க லாயிற்று. இத்தகைய மாறுபட்ட உணர்ச்சிகளுக்கு இலக் காகி – அடியோடு நிலை குலைந்து நின்றாலும், பத்மினியின் மனம் இறுதியில் ரகுதேவின் செய்கைக்கு
நியாயமான ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பதிலேயே முனைந்தது. சொந்த உயிரையும் பொருட்படுத்தாமல் தன்னை அபிஸீனிய அரக்கர்களிடமிருந்து காப்பாற்றியுள்ள ரகுதேவ், ஒரு நாளும் இழிவான காரியத்தைச் செய்யமாட்டான்
என்று பத்மினி நினைத்தாள். அப்பொழுது செய்யும் அந்தக் கேவலாமான செய்கைகூட காரியார்த்தமான நாடகமாக இருக்குமோ என்றுகூட எண்ண முற்பட்டாள். அவள் நினைத்தது முற்றிலும் சரியென்பதற்கு அவள் மனம்
ஆதாரங்களையும் கண்டுபிடித்துக் கொடுத்தது.
தாங்களிருவரும் அப்பொழுதிருந்த நிலையை மூன்றாவது மனிதர் பார்த்தால், ஏதோ இறுகத் தழுவி நிற்பதைப் போலப் புலப்படுமேயொழிய, ரகுதேவ் ஓரளவு விலகியே இருப்பதையும், அவன் சரீரம் பூராவாகத் தன்மீது
படாமலிருப்பதையும் பத்மினி கவனித்தாள். இடுப்புச் சேலைக்குச் சற்று மேலேயும் மார்புக் கச்சைக்குக் கீழேயும் வெளேரென்று வழவழப்புடன் தந்தம்போல் பிரகாசித்த இடைவெளிப் பிரதேசத்தில் பதிந்திருந்த அவன் கைகள் கூட,
எந்தவிதத் துராக்கிரகத்திலும் ஈடுபடாமல் கேவலம் மரக்கட்டைகள் போல் சலனமற்றிருந்ததையும் பத்மினி உணர்ந்தாள். இத்தகைய உணர்வினால் முதலில் ஏற்பட்ட சந்தேகத்தைச் சிறிது சிறிதாக விலக்கிக் கொள்ளவும் ஆரம்பித்தாள்.
அந்தச் சமயத்தில்தான் ரகுதேவ் தன் கன்னத்தை அவள் கன்னத்தோடு ஒட்டினான். பிறகு லேசாகத் தன் இதழ்களை அவள் மலர்க் கன்னத்துக்காகத் திருப்பினான்.
மூச்சு நின்றுவிடும் போலிருந்தது பத்மினிக்கு. பருவ மடைந்தபின் புதிதாக ஏற்பட்ட அந்த அனுபவத்தால் அவள் உடலில் விவரிக்க இயலாத ஓர் உணர்ச்சி பாய்ந்து அவளைத் தத்தளிக்க வைத்தது. அந்தத் தத்தளிப்பிலிருந்து ரகுதேவ்
அவளை மறுகணம் விடுவித்தான். குவித்து வைத்த தாமரை இதழ் போன்ற அவள் கன்னத்துக்காகத் திரும்பிய அவன் இதழ்கள், அந்த மலர்ப்படுக்கையில் பதியாது காதருகில் சென்று, “பத்மினி! பயப்படாதே. என்னிடம் சரசமாடுவதுபோல்
பாசாங்கு செய். என்னை நம்பு” என்று முணுமுணுத்தான்.
பத்மினியின் உள்ளத்திலிருந்த சந்தேகங்களை அந்த ஓரிரண்டு சொற்கள் படீரென்று உடைத்தெறிந்து விட்டன. அதே சமயத்தில் படீரென்ற சத்தத்துடன் அக்கம் பக்கத்திலிருந்த இரண்டு கதவுகளும் திறந்தன. பக்கத்தறைக் கதவைத்
திறந்து கொண்டு உக்கிரகாரமான கோபத்துடன் பீம்ஸிங் உள்ளே நுழைந்தார். படிகளுக்குச் செல்லும் கதவைத் திறந்துகொண்டு ரஹீம் நின்றான். அவனுக்குப் பின்னால் இன்னொரு அபிஸீனியனும் நின்று கொண்டிருந்தான்.
பத்மினியைப் பிடித்திருந்த கைகளைச் சரேலென விலக்கிய ரகுதேவ், “பீம்! உன் தலையிலிருப்பது மூளையா களிமண்ணா? உன்னை யார் சமய சந்தர்ப்பமறியாமல் உள்ளே வரச் சொன்னது?” என்று பீம்ஸிங்கின்மேல் எரிந்து
விழுந்துவிட்டு, ரஹீமை நோக்கித் திரும்பி “உன்னை யார் இங்கே வரச் சொன்னது?” என்று சீறினான்.
இருந்த நிலை ரஹீமுக்கும் சிறிது சங்கடத்தை விளைவித்திருக்க வேண்டும். ஆகவே பேச்சு வராமல் சற்று திணறிவிட்டு, “ஸித்தி அஹமத்தின் உத்தரவுப்படி வந்தேன்” என்றான்.
“என் மனைவியுடன் தனித்திருக்கும்போது உள்ளே நுழையச் சொல்லி ஸித்தி அஹமத் உத்தரவிட்டிருக்கிறானா?” என்றான் ரகுதேவ், கோபம் சிறிதுகூடத் தணியாத குரலில்.
“அந்த மாதிரி உத்தரவு எதுவும் இல்லை. இந்த அசந்தர்ப்பமான சமயத்தில் வந்தது என்னுடைய தவறு தான். ஆனால் நான் இவ்வளவு பட்டப்பகலில் இந்த மாதிரி அந்தரங்கமான நிலையை எதிர்பார்க்கவில்லை.” என்றான் ரஹீம்,
இகழ்ச்சியாகச் சிரித்துக் கொண்டே. ரஹீமின் பதில் அவனுக்குப் பின்னால் நின்றவனின் மனத்திலும் நகைச்சுவையைக் கிளப்பிவிட, அவன் பயங்கரமாகப் பல்லை இளிக்க ஆரம்பித்தான். ஆனால் ரகுதேவின் ஒரு பார்வை அந்த
நகைச்சுவையை ராவிவிடவே, வந்தவன் மீண்டும் வாயைக் குவித்துக்கொண்டான்.
ரகுதேவ் மேற்கொண்டு அனாவசியமான பேச்சு எதற்கும் இடங்கொடாமல், “சரி! அதிருக்கட்டும். நீ வந்த வேலையென்ன? ஸித்தி அஹமத்துடன் நீ உன் கப்பலுக்கு ஏன் போகவில்லை?” என்று கேட்டான்.
“இனிமேல் இதுதான் என் கப்பல்” என்றான் ரஹீம்.
“என்ன!”
“ஆம்! இந்தக் கப்பலில்தான் இனி எனக்கு வேலை. ஜலமோகினியில் உங்களுக்கு ஊழியம் செய்ய உபதலைவன் வேண்டுமல்லவா?”
“அதற்காக ஸித்தி அஹமத் உன்னை அனுப்பியிருக்கிறானா?”
“ஆமாம். உங்களுக்கு உபதலைவன் வேண்டியிருக்குமோ இருக்காதோ என்று முதன்முதலில் நானும் சந்தேகப்பட்டேன். ஆனால் இங்கு வந்து பார்த்த பிறகு உபதலைவன் ஒருவன் அவசியமாகவே தோன்றுகிறது.”
“அப்படியா!”
“ஆம்; தங்களுக்கு வேறு பல அலுவல்கள் இருக்கின்றன. கண்ணோட்டத்தையெல்லாம் கப்பல் மேலேயே விடுவதும் சாத்தியமல்ல.”
இத்தனை நேரம் பொறுமையாயிருந்த ரஹீமின் நண்பன் கடைசி பதிலைக் கேட்டதும் வாய்விட்டு உரக்கச் சிரித்துவிட்டான். ரகுதேவின் கோபம் எல்லை மீறியது. “யார் அந்த மடையன்?” என்று ரஹீமை நோக்கிக் கேட்டான்.
“சுக்கான் வேலை பார்க்க வந்திருக்கிறான். இந்தக்… கப்பலின் சுக்கான்தான் போரில் இறந்துவிட்டானே” என்று ரஹீம் விவரித்தான்.
“இவனையும் அஹமத்தான் அனுப்பியிருக்கிறானா?”
“தங்களுக்கு இந்த நிலையில் உதவி செய்ய ஆட்களை அனுப்ப வேறு யாரால் முடியும்? யாருக்கு அக்கறையிருக்கிறது?”
உள்ள நிலைமையைத் தெளிவாகப் புரிந்துகொண்டான் ரகுதேவ். கப்பலில் வேலைக்கு அனுப்பும் பாவனையில் ஸித்தி அஹமத் தனக்கு இரு காவலாளிகளை அனுப்பியிருக்கிறானென்பதையும், தன்னுடைய ஒவ்வொரு
நடவடிக்கையும் மிக ஜாக்கிரதையாகக் கவனிக்கப்படுமென் பதையும் சந்தேகமற அறிந்து கொண்டாலும், அதைச் சிறிதும் வெளிக்குக் காட்டாமல், “சரி! நீங்களிருவரும் தளத்திலிருங்கள். நான் சற்று நேரத்தில் வருகிறேன்” என்றான்.
இகழ்ச்சியான புன்முறுவலொன்றை வீசிவிட்டு ரஹீம் படிகளில் ஏறிக் சென்றான். அவன் அழைத்து வந்த மற்றொரு கொள்ளைக்காரனும் அவனைத் தொடர்ந்து படிகளில் ஏறி மறைந்தான்.
அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும், ரகுதேவ் தலையிலிருந்து பெரிய சுமையொன்றை இறக்கியவன்போல், ஆயாசங் கலந்த பெருமூச்சொன்றை விட்டு அறையில் இருந்த ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு, தன் இரு கைகளிலும்
முகத்தைப் புதைத்துக் கொண்டான். வெகு நேரம் வரையில் அந்த அறையில் சம்பூர்ணமான மௌனமே குடிகொண்டிருந்தது. சாதாரணமாக எதையாவது உளறிக் கொட்டும் சுபாவமுள்ள பீம்ஸிங்கூட, எதையும் பேசாமல் தீவிர
யோசனையிலிருந்தாலும் அடிக்கடி ரகுதேவையும் பத்மினியையும் மாறி மாறிக் கவனிக்க மட்டும் தவற வில்லை. என்ன கவனித்தும் அவ்விருவர் மனத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்களை மட்டும் சிறிதும் புரிந்து
கொள்ளமுடியாமல் பீம்ஸிங் சங்கடப்பட்டார். பத்மினியின் முகம் கற்சிலை போலிருந்தது. முகத்தில் உணர்ச்சிகள் ஓடிக் கொண்டிருந்தாலே பெண் மனத்தை அறிவது பிரம்மப் பிரயத்தனம். முகபாவமும் உள் எண்ணமும் ஒன்றாகத்தான்
இருக்க வேண்டும் என்ற இயற்கை நியதிக்குப் பெண்கள் பெருவிலக்காக இருக்கிறார்கள். அகத்தினழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி பெண்களிடத்தில் சில சமயம் பலிக்கலாம். ஆனால், பலிக்காத சமயங்களும் பல உண்டு. முகத்தில்
பாவம் நிரம்பிய சமயங்களே இப்படியென்றால் முகம் உணர்ச்சியற்ற வெறும் கல்லாக இருக்கும்போது எப்படி ஒரு பெண் மனத்தைப் புரிந்து கொள்வது?
பத்மினியின் முகத்தைப் பார்த்த பீம்ஸிங் எதுவும் புரிந்து கொள்ள முடியவில்லையென்றால், ரகுதேவின் முகத்தைப் பார்க்க அவருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. “எதற்காக இவன் இப்படி முகத்தை மறைத்துக் கொண்டு
உட்கார்ந்திருக்கிறான்? தன் அயோக்கியத் தனத்தை மறைக்க ஏதாவது வேஷம் போடுகிறானோ?” என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டார். அவர் புத்தியில் கல்மிஷம் பூராவாகப் படர்ந்திருந்தமையால் தான் நினைத்ததே சரியென்ற
முடிவுக்கு வந்ததுமின்றி, ரகுதேவை இப்படியே விட்டுக் கொண்டு போனால் விவகாரம் மிஞ்சிவிடுமென்ற அச்சத்தால் அவனைக் கண்டிக்கவும் தீர்மானித்தார். ஆகவே அறையில் நிலவிய மௌனத்தை அவரே கலைப்பதற்காகப்
பிரயத்தனப் பட்டு, பாடப்போகும் சங்கீத வித்வானைப்போல தொண்டையை இருமுறை கனைத்துக் கொண்டார். அதையும் லட்சியம் செய்யாமல் ரகுதேவ் உட்கார்ந்திருக்கவே, “ரகுதேவ்!” என்று பெயர் சொல்லியும் அழைத்தார்.
ரகுதேவ் மெள்ள தலை நிமிர்ந்தான். அந்தச் சமயத்தில் அவனை நோக்கி ஒரு பார்வையை வீசிய பத்மினி, அவன் முகத்தில் துன்பச் சாயை படர்ந்திருப் பதையும் மிகுந்த கவலை வாட்டியதற்கு அறிகுறியாகக் கண்களும்
அயர்ந்திருப்பதையும் கண்டாள். அவன் நிலை, அவள் உள்ளத்தில் தீராத துயரத்தை அள்ளிக்கொட்டவே அவளிடமிருந்தும் பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது. கோபத்தால் கொதித்திருந்த பீம்ஸிங் அதைச் சிறிதும் கவனிக்காமல்
ரகுதேவை நோக்கித் தம் கேள்விகளை வீசலானார். அதற்குப் பூர்வாங்கமாக, “இந்த அறையில் நடந்ததை நான் கவனித்தேன்” என்று ஆரம்பித்தார்.
“ரொம்ப சந்தோஷம்” என்றான் ரகுதேவ் பதிலுக்கு. அவன் குரலில் சலிப்புடன் வெறுப்பும் கலந்திருந்தது.
“பீம்ஸிங்குக்குக் கோபம் எல்லை மீறவே, “உன் சந்தோஷம் அதிக நேரம் நிலைக்கப் போவதில்லை” என்றார் உக்கிரத்துடன்
ரகுதேவ் பதிலேதும் சொல்லாமல் அவரை வெறித்துப் பார்த்தான். “ஏன் நான் சொல்வது புரியவில்லையா? பத்மினியைப் போன்ற ஒரு பெண்ணுக்கு நீ செய்த அவமரியாதையை, என் போன்ற ராஜபுத்திரன் சகித்துக்
கொண்டிருப்பானென்று நினைக்கிறாயா? என்னிடம் வாளொன்று இருப்பது உனக்குத் தெரியுமல்லவா?” என்று வினவினார் பீம்ஸிங்.
“தெரியும்” என்றான் ரகுதேவ், எந்தவித உணர்ச்சியையும் தொனிக்காத குரலில்.
“வாளை நான் உருவினால் என்ன விளையும் என்பது மட்டும் உனக்குத் தெரியாது.”
“அதுவும் தெரியும்.”
“என்ன” பீம்ஸிங் கோபத்தில் ஆச்சரியமும் கலந்து கொண்டது.
“நீர் வாளை உருவினால் பல விளைவுகள் ஏற்படலாம். முதலாவதாக நான் ரஹீமைக் கூப்பிட்டு உம்மைத் தளத்துக்கு இழுத்துச் சென்று தூக்கில் போடும்படி உத்தரவிடலாம். அந்தக் கொட்டாப்புளி கழுத்துக்கேற்ற கயிறு கப்பல்களில்
யதேஷ்டம்.” என்று பேசிக்கொண்டு போன ரகுதேவை இடைமறித்த பீம்ஸிங். “என்னை மிரட்டப் பார்க்கிறாயா? நானும் ஒரு தளபதியென்று உனக்குத் தெரியுமா?” என்று சீற ஆரம்பித்தார்.
“இத்தனை ஆபத்திலும் நீங்கள் உத்தியோகத்தையும் அந்தஸ்தையும் மறக்காதிருக்கிறீர்களே” என்று ஏளனமாகச் சிரித்த ரகுதேவ். “பீம்ஸிங்! அப்படி நான் உத்தரவிடா விட்டாலும் உங்கள் உயிர் தப்புவது கஷ்டம். ஒரு வேளை உங்களுக்கு
உண்மையாக வாளைப் பிடிக்கத் தெரிந்திருந்து என்னைக் கொல்வதாக வைத்துக்கொண்டாலும், அடுத்த படி என்ன நடக்குமென்று நினைக்கிறீர்கள்?” என்று தொடர்ந்து கேட்டான்.
பீம்ஸிங் விழித்தார். ரகுதேவ் கேள்விக்குப் பதிலையும் சொல்லத் தொடங்கி, “நானோ இந்தக் கொள்ளைக் காரர்களுக்குப் பொக்கிஷக் கப்பல்களைப் பிடித்துத் தருவதாகச் சொல்லியிருக்கிறேன். அப்பேர்ப்பட்ட என்னை நீர்
கொன்றால், இவர்கள் உங்களைச் சின்னா பின்னமாக வெட்டிப் போடுவார்கள். எப்படி இருந்தாலும் தளபதியான தங்களுக்கு முடிவு ஒன்றுதான். ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை” என்றான்.
“பின் எதைப் பற்றிக் கவலைப்படுகிறாய்?”
“பத்மினியின் கதி என்னவாகுமென்ற கவலை ஒன்று தான் எனக்கு.”
“இவ்வளவு கவலை உனக்குப் பத்மினியிடம் உண்டாகக் காரணம்?”
“ஹிந்து மதம்.”
“என்ன ஹிந்து மதமா?”
“ஆம்; பெண்களைக் காப்பாற்றுவது ஆண்களின் கடமையென்று ஹிந்து மதம் சொல்லவில்லையா!”
ரகுதேவைப் போன்ற ஓர் அயோக்கியன் ஹிந்து மதத்தைப் பற்றியும் தர்மத்தைப் பற்றியும் பேசுவது பீம்ஸிங் குக்குக்கூடப் பெரிய விந்தையாக இருந்தது. “கொள்ளையடிக்கக்கூட ஹிந்து மதத்தில் சொல்லியிருக்கிறதா? அனாதையாக
நிற்கும் பர ஸ்திரீகளைத் தீண்டுவதும் ஹிந்து தர்மப் படிதானோ?” என்றொரு வெடியை எடுத்து
வீசினார்..
அதுவரை சாவதானமாகப் பேசி வந்த ரகுதேவின் கண்கள் திடீரெனக் கோபப் பொறியைக் கக்கின. ஆசனத்தை விட்டுச் சரேலென எழுந்த ரகுதேவ், பீம்ஸிங்கை நெருங்கி விழித்துப் பார்த்து, “முட்டாள்! பகலில் பக்கம் பார்த்துப் பேசு.
இந்தக் கப்பல் பூராவும் கொள்ளைக்காரர்கள். உன் மடத்தனத்தினால் நம்மிருவர் உயிர் மட்டுமல்ல, பத்மினியின் கற்பும் காற்றில் பறக்கும் ஸ்திதிக்குக் கொண்டு வராதே. பர ஸ்திரீயை நான் தொட்டால் காரணமாகத்தான்
தொட்டிருப்பேன்” என்றான்.
“என்ன காரணம்?” என்று பீம்ஸிங் கேட்டார், வீம்பை விடாமல்.
“இப்படி வா, காட்டுகிறேன்” என்று சொல்லிப் பீம்ஸிங்கை அறையின் நடுவுக்கு இழுத்துச் சென்றான்.
“இதோ அந்த மரத்தூணில் மாட்டியிருக்கும் கண்ணாடியைப் பார்” என்றான். பீம்ஸிங் பார்த்தார். ஏதும் புரியாமல், கண்ணாடியில் என்ன தெரிகிறது?” என்றார்.
“நன்றாகப் பார். கண்ணாடியில் தளத்திலிருந்து வரும் படிகள் தெரிகின்றன அல்லவா?”
“ஆம்.”
“நான் உன்னை அறைக்கு இழுத்துச் சென்று தள்ளியிருந்தபோது எங்கு நின்றிருந்தேன்.”
“கண்ணாடிக்கெதிரில்தான்.”
“ஆகவே அறைக்கதவு திறந்திருந்த படிகளில் யாராவது – இறங்கி வந்தால் எனக்குத் தெரியுமல்லவா?”
இந்த விளக்கத்துக்குப் பின் பீம்ஸிங்கின் மூளையிலும் உண்மை ஓரளவு ஏறத் தொடங்கியது. “அப்படியனால் ரஹீம் வருவதை முன்னாலேயே பார்த்துவிட்டாய். ஆகவே பத்மினியை நீ…” என்று பேச ஆரம்பித்த பீம்ஸிங்கைச் சட்டென்று
இடைமறித்து, “நிறுத்து; எல்லாம் அவசியத்தை முன்னிட்டு நாடகம். இந்த நாடகத்துக்குப் பின் பத்மினி என் மனைவி என்பதில் அவர்களுக்குச் சந்தேகமிருக்காது. இருந்த போதிலும் நாம் மிகவும் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். உன்
அசட்டுத்தனத்தைக் கொஞ்சநாள் மூட்டை கட்டி வைத்துவிட்டுச் சொல்கிறபடி நடந்துவா. எதற்கும் காரணம் கேட்காதே” என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேறி விடுவிடென்று படிகளில் ஏறிச் சென்று விட்டான் ரகுதேவ்.
அவன் சென்ற பின்பு பீம்ஸிங் மெள்ள பத்மினிக்காகத் திரும்பி, “இவன் சொல்வதை நம்பலாமா?” என்று கேட்டார்.
“ஏன் நம்பக்கூடாது?” என்று பதிலுக்குக் கேட்டாள் பத்மினி.
“உன்னிடம் மனைவி உறவு முறை கொண்டாடுவது உன்னைக் காப்பாற்றத்தான் என்பது என்ன நிச்சயம்?”
“என்னைக் கெடுக்க எண்ணம் இருந்தால் என்னை மாத்திரம் காப்பாற்றியிருந்தால் போதுமே.”
“என்ன?”
“மைத்துனனென்று சொல்லி உங்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன?”
“அவசியத்தைக் கண்டுபிடிக்க முடியாமல் பீம்ஸிங் திணறினார். பத்மினி ரகுதேவிடம் கொண்டுள்ள நம்பிக்கையை எண்ணி மனம் புழுங்கினார். தாம் என்னென்னவோ திட்டம் போட்டுக் கொண்டு ஜலமோகினிக்கு வர, இடையில்
வந்தவன் தமது ஏற்பாடுகளை அடியோடு உடைத்துவிடுவான் போலிருக்கிறதே என்று நினைத்து ஏங்கினார். அந்த ஏக்கத்திலேயே பகல் முழுவதையும் கழித்தார்.
மெள்ள மெள்ள இரவும் நெருங்கிப் பால் நிலவும் காய ஆரம்பித்தது. அது சமுத்திரத்தில் பிரதிபலித்த அழகைக் கண்டு பத்மினி வியந்தாள். அந்தச் சமயத்தில் தளத்திலிருந்து இனிமையான கானமொன்று எழுந்தது.
“யார் பாடுகிறது?” என்று பத்மினி பீம்ஸிங்கைக் கேட்டாள்.
அப்பொழுதுதான் உள்ளே வந்த ரஜினிகாந்த் “எசமான் பாடுகிறார்” என்றான்.
“என்ன இனிமையான சாரீரம்!” என்று சொல்லிக் கொண்டே எழுந்த பத்மினி பீம்ஸிங்கிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் அறையைக் கடந்து படிகளில் ஏறித் தளத்துக்குச் சென்றாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே இலவு காத்த கிளியென நின்றார்.

Previous articleJala Mohini Ch7 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here