Home Historical Novel Jala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

102
0
Jala Mohini Ch9 Jala Mohini Sandilyan, Jala Mohini Online Free, Jala Mohini PDF, Download Jala Mohini novel, Jala Mohini book, Jala Mohini free, Jala Mohini,Jala Mohini story in tamil,Jala Mohini story,Jala Mohini novel in tamil,Jala Mohini novel,Jala Mohini book,Jala Mohini book review,ஜலமோகினி,ஜலமோகினி கதை,Jala Mohini tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini ,Jala Mohini full story,Jala Mohini novel full story,Jala Mohini audiobook,Jala Mohini audio book,Jala Mohini full audiobook,Jala Mohini full audio book,
Jala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

Jala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஜலமோகினி – சாண்டில்யன்

அத்தியாயம் – 9. இசையும் நிலவும்

Jala Mohini Ch9 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

ஆனந்தம் எங்கிருக்கிறது? சுதந்திரத்திலா அடிமைத் தனத்திலா? வாழ்க்கையில் விடை சொல்ல முடியாத பல கேள்விகளில் இதுவும் ஒன்று! சுதந்திர வாழ்வில்தான் சுகமிருப்பதாக மனிதன் எண்ணுகிறான். அடிமைத் தனத்தில்
அதைவிட ஆனந்தமிருப்பதை ஆண்டவன் அடிக்கடி அவனுக்கு எடுத்துக் காட்டுகிறான். இருந்தாலும் மனிதன் தனக்கு இயற்கையாக உள்ள அகம்பாவத்தினால் உண்மையை உணர மறுக்கிறான்.
சுதந்திரம் அளிக்கக்கூடிய ஆனந்தத்தின் எல்லை மிகக் குறுகியது. மனிதனுக்கும் மனிதனுக்கும் ஏற்படக்கூடிய சில விவகாரங்களில் மட்டுமே சுதந்திரம் ஆனந்தத்தை அளிக்க வல்லது. எசமானிடத்திலிருந்து கிடைக்கும் சிறு சுதந்தி
ரத்தை எண்ணிச் சேவகன் ஆனந்தப்படுகிறான். ஆள். பவனிடமிருந்து கிடைக்கும் பேச்சு, எழுத்துச் சுதந்திரங்களை எண்ணிப் பிரஜை ஆனந்தப்படுகிறான். வயது வந்ததும் தகப்பனிடமிருந்து கிடைக்கும் சுதந்திரத்தை நினைத்து
பிள்ளைகூட சில சமயங்களில் சந்தோஷப்படுகிறான். இத்தகைய சகல சந்துஷ்டிகளின் எல்லையும் மனிதனுக்கும் மனிதனுக்கும் உள்ள பொய்யான புற சம்பந்தங்களைப் பற்றியவை. இந்த ஆனந்தம் புறத்தோடு நின்றுவிடுகிறது.
ஆனால், ஆண்டவனின் அகண்ட சிருஷ்டியில் அடிமைப்படுவதால் அகத்தே எற்படும் ஆனந்தம், எல்லை யில்லாததோர் வானக்கடல் போலவே பரந்து நிற்கின்றது. ஆண்டவனிடத்தில் அடிமைப்பட்டு நிற்பதில் சொல்ல முடியாத
ஆனந்தத்தை அடைந்திருப்பதாக அடியார்கள் சொல்லுகிறார்கள். மனுஷ்யானந்தம், பிரம்மானந்தம் என்று ஆனந்தத்தை அளவிடச் சென்ற வேதங்கள் கூட ஆண்டவனிடத்தில் அடிமைப்படுவதால் ஏற்படும் ஆனந்தத்தின் அழத்தைக்
காணமுடியாமல் திரும்பிவிட்டதாக வேத வாக்கியமே சொல்லுகிறது.
இது வேதாந்தம் என்று நினைக்கலாம். வேதாந்தமும் அனுபவ உண்மைகளும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்று தான். இன்னும் சற்றுத் தாழ வந்தாலும் குருவுக்கு அடிமையாயிருப்பதில் சீடனும், புருஷனுக்கு அடிமையாயிருப்பதில்
பதிவிரதைகளும், பதிவிரதைகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நிற்பதில் நெறியுள்ள புருஷனும் எல்லையற்ற இன்பத்தை எய்தி நிற்பதைக் காண்கிறோமல்லவா?
தெய்வத்துக்கும் மனிதனுக்குமுள்ள சம்பந்தத்தையும் குரு-சீட முறையையும், நாயக நாயகி வேதாந்தத்தையும் தள்ளிப் போட்டு மாநிலத்தில் கண்ணை ஓட்டினாலும் அடிமைத்தனத்தில் எத்தனையோ ஆனந்தத்தை ஆண்டவன்
அள்ளித் தெளித்திருப்பதைப் பார்க்கிறோம். இயற்கையின் சக்திகளுக்கு அடிமைப்படுவதால் எத்தனை ஆனந்தத்தை அனுபவிக்கிறோம். தென்றலின் வீச்சு, அலை கடல் பரபரப்பு, நிலவின் குளுமை இவற்றுக்கெல்லாம் அடிமைப்பட்டு
ஆழ்ந்து ஆழ்ந்து மீண்டும் சுதந்திர உணர்ச்சிகளை அடைய இஷ்டப்படாமலே மெய்மறந்து பரவசப்பட்டு நிற்பதில் உள்ள ஆனந்தத்தை அளவிட முடியுமா? முடியாது. முடியாது என்பதற்கு அத்தாட்சி வேண்டுமென்றால் ஜலமோகினியின்
தளத்துக்கு ஏறிவந்து மேல் தளத்துக்குச் செல்லும் படிகளின் கைப்பிடியில் சாய்ந்து நின்ற கட்டழகி பத்மினியைச் சுட்டிக் காட்டலாம்.
எங்கும் பரந்து கிடந்த பால் நிலவுக்கும், எதிரே எழுந்து மிதந்து வந்து கொண்டிருந்த இசையமுதத்துக்கும் அடிமைப்பட்டுத் தன்னிலை மறந்து நின்றாள் பத்மினி. சலனப்பட்டு நின்ற கடல் நீரில் பிரதிபலித்த வெண்மதியின்
கிரணங்களில் பளிச்சென்று எழுந்து மின்னி மின்னி மீண்டும் அலைகளில் கலந்து கலந்து நின்றன. ஆயிரமாயிரம் கண்ணாடிகள் ஒளி காட்டுவது போலிருந்த அந்த மனோகரக் காட்சியிலிருந்து தளத்துக்குக் கண்களைத் திருப்பினாள்
பத்மினி. வெளேரென்ற தளத்தில் கூட்டமாக உட்கார்ந்திருந்த மாலுமிகளின் உருவங்கள், பக்கவாட்டுகளிலிருந்த மரங்களில் பலவிதமான நிழல்களைப் பாய்ச்சி, உட்கார்ந்த கோணத்தையொட்டிக் குட்டையாகவும் நீண்டும் அகன்றுமிருந்த
பல சித்திரங்களைத் தீட்டியிருந்தன. உட்கார்ந்திருந்த மாலுமிகள் அனைவரும் ரகுதேவின் பாட்டைக் கேட்பதில் முனைந்திருந்தாலும் இடை இடையே இசையைப் பாராட்ட எழுப்பிய, “அச்சா அச்சா” குரல்களும், “வாரேஹ்வா” சப்தங்களும்
மட்டுமே தளத்திலிருந்த அமைதியை அவ்வப்பொழுது சற்றுக் கலைத்தன.
கப்பலின் பக்கம் கம்பிகளுக்கும் மேல்தளப் படிகளின் கைப்பிடிக்குமாகச் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த இரட்டைக் கயிறுகளில் உட்கார்ந்து ஆடியபடியே ‘ஸாரங்கி’ வாத்தியத்தை வாசித்துக் கொண்டே மெல்லிய குரலில் பாடிக்
கொண்டிருந்தான் ரகுதேவ். வில்லை அழுத்திக் கொடுத்து ஸாரங்கியின் நரம்புகளைத் தடவித் தடவி விரல்களால் அவன் எழுப்பிய ஸ்வர வரிசைகள் இனிமையா அல்லது அவன் குரலிலிருந்து எழுந்த சப்தங்கள் இனிமையா என்பதைத்
தீர்மானிக்க முடியாத நிலைமையில் அசைவற்று நின்றிருந்தாள் பத்மினி. ரகுதேவ் பாடியது சில்லறை மராட்டி உருப்படிதான். ஆனால், உருப்படியான வித்வான் சில்லறை உருப்படிகளைக்கூட எப்படிப் பாடிப் பிறரைப் பரவசமடையச்
செய்ய முடியும் என்பதைப் பத்மினி உணர்ந்தாள். மேல் தளத்தின் கைப்பிடிக்கருகில் அவள் நின்றிருந்தபடியால் ரகுதேவ் உட்கார்ந்திருந்த கயிற்றின் ஓர் ஓரம் அவன் ஆடிப் பாடப்பாட அவள் கைகள் மேல் லேசாக உராய்ந்து உராய்ந்து
சென்றது. இசையின் ஆனந்தம் உள்ளத்தை வருட, ரகுதேவ் உட்கார்ந்திருந்த கயிறு அவள் கரங்களைத் தடவ, ஏதோ சொர்க்க லோகத்திலிருப்பது போல் நினைத்துக்கொண்டாள் பத்மினி.
கீழே உட்கார்ந்திருந்த மாலுமி ஒருவன் ரகுதேவின் பாட்டுக்கு லேசாகத் தபலா வாசித்துக் கொண்டிருந்தான். அந்த மாலுமியுடன் போட்டி போடுவதைப்போல் சமுத் திரமும் தன் அலைக்கரங்களை அம்மரக்கலத்தின் பக்க வாட்டுகளில்
தட்டித்தட்டித் தாளம் போட்டுக் கொண்டிருந்ததும் அவ்வப்பொழுது பத்மினியின் காதில் விழுந்து கொண்டிருந்தது. இந்தச் சூழ்நிலையால் மந்திரத்தால் கட்டுண்ட சர்ப்பம்போல் பத்மினி மௌனமாகவே நீண்ட நேரம் நின்றிருந்தாள்.
அவள் வந்து வெகு நேரமாகியும் ரகுதேவ் அவளைக் கவனிக்கவேயில்லை. இருவருக்குமிடையே சிறிது தூரமிருந்தது உண்மைதான். ஆனால், உருவம் கண்ணுக்குப் புலப்படாத அத்தனை தூரத்தில் அவள் நிற்கவில்லை. தவிர, நிலா
வேறு பட்டப்பகல் போல் காய்ந்துகொண்டிருந்தது. முழுக் குருடாயிருந்தாலொழிய பத்மினியைப் போனற் ஓர் எழிலுருவம் விழிகளில் விழாதிருக்கக் காரணமில்லை. இசையின் இன்ப ஜாலம் மனிதனைக் குருடாக அடித்து விடுகிறது.
இசையின் ஒலிகள் ஆயிரம் மின்னல்களாகக் கிளம்பி உணர்ச்சிகளில் பளிச்சிடுவதால் சகல இந்திரியங்களையும் தன் வசப்படுத்திப் புறத்தே போக வொட்டாமல் செய்துவிடுகிறது. இதனால் பாடுபவனும் கேட்பவனும் ஒருங்கே மயங்கி
நிற்கிறார்கள். பூதப் பொருள்கள் கண்ணுக்குப் புலப்படுவதில்லை.
பாடுவதில் அவனும் பாட்டைக் கேட்பதில் அவளுமாக மெய் மறந்திருக்க, பொழுது போவது தெரியாமல் ஓடிக் கொண்டிருந்தது. பாட்டு முடிந்ததும் சுயநிலைக்கு வந்த ரகுதேவை இன்னொரு பாட்டுப் பாடும்படி மாலுமிகள்
கூச்சலிட்டார்கள். ஆனால், பாட்டைவிட மனத்தைப் பரவசப்படுத்தக்கூடிய பத்மினியின் அழகிய உருவம் எதிரே காட்சியளித்ததைக் கண்ட நகுதேவ் கயிற்றை விட்டுக் கீழே குதித்தான். குதித்தவன் இரண்டே அடியில் தனக்கும் பத்மினிக்கும்
இருந்த இடைவெளியைத் தாண்டி வந்து, “பத்மினி நீ எப்பொழுது தளத்துக்கு வந்தாய்? நான் பார்க்கவேயில்லையே” என்றான்.
“பார்க்க உங்களுக்குக் கண்ணில்லை” என்றாள், பத்மினி உதடுகளில் புன்முறுவல் துலங்க.
“கண்களில்லையா! உன்னைப் பார்க்கவா?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான் ரகுதேவ்.
“பாட்டில் லயித்துப் பரவசப்பட்டிருந்தீர்கள். அதனால் வெளிப்பார்வை தடைப்படுவது இயற்கைதானே” என்று கூறிய அவள், மகாவீரனான அந்த புருஷன் தன் எதிரில் ஸாரங்கியும் கையுமாகத் தெருப் பாடகனைப்போல் நிற்பதைக்
கண்டு லேசாகச் சிரித்தும் விட்டாள். அவள் கண் ஸாரங்கிக்காகச் சென்றதையும், தன் நிலையை அளந்ததையும், அதனால் சிரித்ததையும் கண்ட ரகுதேவும் அவளுடன் சேர்ந்துகொண்டு சிரித்தான்.
ஒருவரையொருவர் விழுங்கிவிடுவதைப் போல் பார்த்துக் கொண்டிருந்த அந்த இருவரும் தாங்கள் இருந்த சூழ்நிலையைக் கவனிக்கவில்லை. இப்படி ஒருவருக்கொருவர் பேசிச் சிரித்ததை வேடிக்கை பார்த்த கொள்ளைக்கார
மாலுமிகள் பரிகாசமாகப் பல்லை இளித்தார்கள். அவர்களில் ஒருவன் சற்று இரைந்து, “இனிமேல் எசமான் பாடமாட்டார்” என்று கூறவே, ‘கொல்’லென்று சிரிப்பும் எழுந்தது.
அதுவரை மாலுமிகளோடு தானும் ஒரு மாலுமியாகச் சற்றும் வித்தியாசமின்றிப் பேசிச் சிரித்துப் பாடிக் களிப் பூட்டிக் கொண்டிருந்த ரகுதேவ், இந்தச் சிரிப்பொலியைக் கேட்டதும் சரேலென, அவர்களுக்காகத் திரும்பி, “யாரது
சிரித்தது?” என்றான் மிகக் கடுமையான குரலில். சற்று நேரம் இனிமையாக இசை பொழிந்த குரலெங்கே? கட்டளைத் தொனி உதிர்க்கும் இந்தக் கடுமையான சப்தமெங்கே? தென்றலும் புயலும்போல மாறும் அவன் குரலையும்
சுபாவத்தையும் கண்ட பத்மினி ஆச்சரியப்பட்டாள். அதட்டிய அவன் குரலைக்கேட்ட மாலுமிகள் பயத்தால் ஸ்தம்பித்து நின்றுவிட்டதைக் கண்ட அவளுக்கு அந்த மாலுமிகளை இஷ்டப்படி ஆட்டி வைக்க ரகுதேவிடம் என்ன
மந்திரமிருக்கிறது என்பது மட்டும் புரியவில்லை.
எசமானன் என்ற நிலைக்கும் ஊழியன் என்ற நிலைக்கும் பெரு வித்தியாசமுண்டு. எசமானனாயிருப்பவன் தன்னிடம் ஊழியம் செய்பவர்களிடத்தில் மதிப்பைப் பெறவேண்டுமானால் சற்று விலகியே நிற்கவேண்டும். அதிகப் பேச்சோ
கலகலப்போ வைத்துக்கொள்ளாமலிருந்தால்தான் எசமானைக் கண்டதும் உழியர்கள் பயப்படுகிறார்கள். ஊழியர்கள் பரஸ்பரம் இருக்கக்கூடிய நிலை வேறு. ஊழியர்கள் கூடிப் பேசிச் சிரிக்கலாம். ஒருவருக்கொருவர் தட்டிக்
கொடுக்கலாம். கட்டிப் புரளலாம்.
மேற்கூறிய இரண்டு நிலைகளிலும் ஒரு மனிதன் இருப்பது மட்டும் முடியாத காரியம். ஆனால், அந்த முடியாத காரியத்தை ரகுதேவ் சாதித்துக் கொண்டிருந்ததை ஆரம்ப முதலே பார்த்து வந்திருந்தாள் பத்மினி. திடீரெனக் கடுமையான
குரல்களில் உத்தரவுகளை வீசி, மாலுமிகளை நடுங்க வைத்தும், திடீரென அவர்களுடன் கலந்து பேசி விளையாடி அவர்கள் அன்புக்குப் பாத்திரமாகியும் அவன் காலங் கடத்துவதைப் பார்த்த பத்மினிக்கு அவனிடம் ஏதோ ஒரு அபார
சக்தியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லாதிருந்தது. அப்படி ஏதாவது கொஞ்ச நஞ்ச சந்தேகம் இருந்திருந்தாலும் அன்று அவன் நிலையைக் கண்டபிறகு சந்தேகம் அடியோடு பறந்து விட்டது. சற்றுமுன் ஆடிப்பாடி சகஜமாயிருந்த
அவன் ஒரு விநாடியில் எசமானப் பதவியை அடைந்து விரட்டியதையும் அதைக் கண்டு ஊழியர்கள் பயந்ததையும் பார்த்த அவள், மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்த்துக் கொண்டு பேசர்மல் நின்றாள்.
“யாரது சிரித்தது?” மீண்டும் கேள்வியைத் திருப்பினான் ரகுதேவ். கொள்ளைக்கார மாலுமிகளிடத்திலிருந்து பதிலேதும் இல்லை. சிலர் தலையைக் கவிழ்த்துக் கொண்டார்கள். சிலர் ஏதோ முணுமுணுத்தார்கள். ஓரிருவர் மெள்ள
நழுவிக் கப்பலின் ஓரத்துக்குச் சென்றார்கள். “பெண்களின் முன்னிலையில் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்று எத்தனை முறை சொல்லியிருப்பேன்,” என்றொரு கேள்வியை வீசிய ரகுதேவ் மேற்கொண்டு அவர்களை விரட்ட
இஷ்டப்படாமல், “சரி சரி, அவரவர் வேலையைச் செய்ய வேண்டிய இடத்துக்குச் செல்லுங்கள்!” என்றான். அடுத்த விநாடி மாலுமிகள் தளம் அதிரப் பறந்துவிடவே ரகுதேவும் பத்மினியும் மட்டும் மேல்தளக் கைப்பிடிக்கருகில் தனித்து
நின்றார்கள்.
ரகுதேவ் பத்மினியை மெள்ள ஏற இறங்கப் பார்த்தான். ஏதோ பேச வாயெடுத்த பத்மினி ஒன்றும் சொல்லாமல் நகைத்தாள். பிறகு அதையும் அடக்கிக் கொண்டாள்.
“ஏன் பாதி சிரித்து நிறுத்தி விட்டீர்கள்?” என்றான் ரகுதேவ்.
“சிரிக்கப் பயமாயிருக்கிறது?”
எதற்குப் பயம்?”
“யாரோ சிரித்ததற்கு நீங்கள் விரட்டிய விரட்டலை இப்பொழுதுதானே பார்த்தேன்.”
“அந்தச் சிரிப்பு வேறு. சிரித்த ஆசாமி வேறு. சிரித்த காரணம் வேறு.”
“காரணத்தையும் ஆசாமியையும் ஒட்டித்தான் உங்களால் சிரிப்பை ரசிக்க முடியுமா?”
“ஆமாம், சிரிப்பில் பல ரகங்கள் உண்டல்லவா?”
“அப்படியா?”
“சந்தேகமென்ன? அவலச் சிரிப்பு. அசந்தர்ப்பச் சிரிப்பு. இகழ்ச்சிச் சிரிப்பு. கோபச் சிரிப்பு. பைத்தியச் சிரிப்பு.”
இங்கே அவனைத் தடைசெய்த பத்மினி, “கடைசியில் நீங்கள் சொன்னது என்ன சிரிப்பைக் குறிக்கிறதாக்கும்?” என்றாள்.
“இல்லை… நீங்கள் அவசரப்பட்டு விட்டீர்கள்” என்றான் ரகுதேவ்.
“அப்படியானால் என் சிரிப்பு எந்த வகையைச் சேர்ந்தது?”
“ஒரு வகையல்ல. இரண்டு மூன்று ரகங்களைச் சேர்ந்தது!”
“அவற்றையுந்தான் தெரிந்துகொள்ளுகிறேனே.”
“சொல்லட்டுமா?”
“உம்… சொல்லுங்கள்.”
சற்று நிதானித்த ரகுதேவ் குரலைச் சற்றுத் தாழ்த்தி, “மோகனச் சிரிப்பு. மயக்கச் சிரிப்பு.” என்று மேலும் போகு முன் பத்மினி இன்னொரு முல்லைச் சிரிப்பை உதிர்த்து. “நல்ல கெட்டிக்காரர். போதும் போதும், முகஸ்துதி” என்றாள்.
அத்துடன் “பாட்டில்தான் வல்லவர் என்று பார்த்தேன்…” என்று ஆரம்பித்தாள்.
“நான் உளறிக் கொட்டியதைப் பாட்டு என்கிறீர்கள்.”.
“பாட்டின் தரம் கேட்பவர்களைப் பொறுத்திருக்கிறது. இங்கு எத்தனை நேரமாக நின்றிருக்கிறேன் தெரியுமா?”
“பாவம்! காலை வலிக்குமே.”
“மனத்தில் அயர்ச்சியிருந்தால்தான் மற்ற அவயவங்கள் வலிக்கும். பாட்டுதான் கள்வெறியளிக்குமே.
“கள்ளை அள்ளித் தரும் மரமேறிக்கு இணையாக்கி விட்டீர்கள் என்னை” என்று சொல்லிச் சிரித்த ரகுதேவ், “வாருங்கள் மேல்தளத்துக்குப் போவோம்” என்று சொல்லி அவளைக் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு மேல்
தளத்தின் படிகளில் ஏறிச் சென்றான். இருவரும் செல்ல முடியாத அந்தப் படிகளில் ஒருவர் சரீரம் இன்னொருவர்மீது உராய ஏறிச் சென்ற அவ்விருவரும் மெல்ல மெல்ல ஏதோ ஒரு கனவுலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார்கள்.
மேல்தளத்திற்குச் சென்றதும்தான் ஜலமோகினிக்கு வந்த முதல் நாளன்று இருந்த இடத்திலேயே பழைய மஞ்சம் போடப்பட்டிருந்ததைக் கவனித்தாள் பத்மினி. அதில் பட்டு மெத்தை விரிக்கப்பட்டிருப்பதையும் தலையணைகளும்
சாத்தப்பட்டிருந்ததையும் கண்ட பத்மினி, “இது யாருக்கு?” என்றாள்.
“எனக்கு.”
“இரவில் இங்கேயா படுக்க உத்தேசித்திருக்கிறீர்கள்?”
“வேறு இடம் எங்கிருக்கிறது?”
“உங்கள் அறை.”
“கீழே இருக்கும் அறை இரண்டு. ஒன்று உங்களுக்கு; இன்னொன்று பீம்ஸிங்குக்கு.”
இந்தப் பதிலைக் கேட்ட பத்மினி ஸ்தம்பித்து நின்றாள். தனக்காக இந்தப் புருஷன் தன் வசதிகளை எவ்வளவு தூரம் தியாகம் செய்கிறான் என்பதைச் சிந்திக்கச் சிந்திக்க அவள் உள்ளம் உருகிக் கண்களில் நீர் லேசாகத் தேங்கியது. அவள்
உருக்கத்தைக் கண்ட ரகுதேவ் அவளுக்குத் தைரியமூட்டுவதற்காக அவளை இரு கைகளாலும் பிடித்து, “இப்படி உட்காருங்கள்” என்று தன் படுக்கையில் உட்காரவைத்து, “என் ஜன்மம் சாபல்யமாகி விட்டது பத்மினி. ஆனால், ஒரு உத்தம
ஸ்திரியின் கண்ணீரையோ கருணையையோ பெற நான் தகுந்த வனல்ல” என்றான், அவள் எதிரில் நின்றபடி.
கண்களில் எழுந்த நீரைப் புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்ட பத்மினி, “உங்களைப் பற்றிய தீர்ப்பைப் பிறர்தான் சொல்ல வேண்டும்” என்று கூறி அவனுக்குப் படுக்கையில் சிறிது இடம் விட்டு மஞ்சத்தில் நகர்ந்து
உட்கார்ந்தாள். அந்த அழைப்பை ஏற்ற ரகுதேவ் அவள் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு அவள் பூங்கரமொன்றை எடுத்துத் தன் கைகளில் வைத்துக் கொண்டான். கண்களைக் கீழே தாழ்த்திய வண்ணம், “பத்மினி! என் கடந்த காலக்
கதையை நீங்கள் அறியமாட்டீர்கள்; அறிந்தால் என்னிடம் மதிப்பு வைக்கமாட்டீர்கள்” என்றான். அவன் சொல்வதை அவள் நம்பவில்லையென்பதற்கு அறிகுறியாக அவன் கைகளில் சிறைப்பட்டுக் கிடந்த அவள் கை, அவன் உள்ளங்
கைகளிலொன்றை லேசாக அழுத்திக் கொடுத்தது. “தவறு பத்மினி. உங்களருகே உட்காரக்கூட எனக்குத் தகுதியில்லை. இதோ என் கதையைக் கேளுங்கள்” என்று ரகுதேவ் தன் கதையைச் சொல்லலானான்.

Previous articleJala Mohini Ch8 | Jala Mohini Sandilyan | TamilNovel.in
Next articleJala Mohini Ch10 | Jala Mohini Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here