Home Historical Novel Mannan Magal Part 1 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

79
0
Mannan Magal Ch 10 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 10 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 தந்தப் பேழை

Mannan Magal Part 1 Ch 10 | Mannan Magal | TamilNovel.in

நிகழ்ச்சிகள் துரிதமாக நடந்தேறியதால், வான வெளியில் வெள்ளி முளைத்து விடியும் நேரம் நெருங்கிவிட்டதையோ அதற்கு அறிகுறியாக வெண்மதி வெள்ளலத்திப் புஷ்பம் போல் வெளிறிட்டுத் தன் ஒளியைக் குறைத்துக் கொண்டதையோ விமலாதித்தன் மகள் உணரவில்லை. அன்றிரவில் அடுத்தடுத்து எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சம்பவங்களால் அவள் மனம் புயலில் சிக்கிய மரக்கலம் போல் ஆடிக்கொண்டிருந்தது. மனத்தின் அத்தனை அலைச்சலையும் சிந்தனையில் ஏற்பட்ட விவரிக்க முடியாத சிதறல்களையும் அவள் முகம் மாத்திரம் எள்ளளவும் எடுத்துக் காட்டாமல் அமைதியையே பிரதிபலித்துக் கொண்டிருந்தது. ஆகவே, இராஜராஜ நரேந்திரன் திடீரென அங்கு முளைத்து, தனக்கும் தான் இன்னாரென்றறியாத வாலிபனுக்கும் இடையே நிகழ்ந்துகொண்டிருந்த சம்பாஷணையில் குறுக்கிட்ட போது, உணர்ச்சிகளை அவள் அதிகமாக வெளிக்குக் காட்டவில்லை. ஆரம்பத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியைக் கண்ணிமைக்கும் நேரத்தில் மறைத்துக் கொண்டாள். ஆச்சரியத்திற்கு அறிகுறியாக அவள் புருவங்கள் சற்றே எழுந்து தாழ்ந்தனவேயொழிய, வேறு உணர்ச்சிகளின் அறிகுறியேதும் அவள் வதனத்தில் தோன்றவேயில்லை. ஆகவே, உறுதியான பார்வை யொன்றை இராஜராஜ நரேந்திரன் மீது செலுத்திய நிரஞ்சனாதேவி, திடமான குரலில் கேட்டாள், “தம்பி, இந்த நேரத்தில் இங்கு எதற்காக வந்தாய்?” என்று.

ஆட்டம் கண்டிருந்த வேங்கி நாட்டு அரியணையில் அமர்ந்து திண்டாடிக் கொண்டிருந்த இராஜராஜ நரேந்திரன், அந்த அறையிலிருந்த மூவரையும் நோக்கிவிட்டுச் சிறிது நேரம் சிலையென நின்றான். பிறகு கள்ளங்கபடமற்ற குழந்தை போல் சிரிப்பொன்றை உதிர்த்துவிட்டு, “அரச குமாரிக்கு வசந்த மண்டபத்தில் துணையேதுமிருக்காதென்று வந்தேன். துணை கிடைத்துவிட்டது போலிருக்கிறதே!” என்று கரிகாலனை நோக்கிப் பார்வையொன்றையும் செலுத்தினான். அந்தப் பார்வையைச் சந்தித்த கரிகாலன் கண்கள், இராஜராஜ நரேந்திரனைச் சுற்றி வந்து எடை போடவும் தொடங்கின. அரசர்கள் மணிமுடி சூடும்போது கையில் கட்டப்படும் மந்திரக் கவசம், பட்டைச் சங்கிலியில் பொருத்தப்பட்டு வட்ட வடிவில் வாசற்படியில் நின்ற வாலிபனின் வலது கரத்தில் அந்தச் சமயத்திலும் ஆடிக்கொண்டிருந்ததால், ‘இவன் தான் இராஜராஜ நரேந்திரனாயிருக்க வேண்டும்’ என்று கரிகாலன் ஊகித்துக் கொண்டான். தவிர, அந்த வாலிபன் உதிரவிட்ட சிரிப்பின் ஒலியிலிருந்தும், பார்த்த மருண்ட பார்வையிலிருந்தும், வேங்கி நாட்டு மன்னனுக்குப் புத்தி இன்னும் பக்குமடையவில்லை யென்பதையும், அவன் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்க முடியுமென்பதையும் கரிகாலன் சந்தேகமறப் புரிந்துகொண்டான். மெல்லிய தாகத் துவண்டு வாயிற்படியில் சாய்ந்து நின்ற உடலில் பலமும் அதிகமில்லாததைக் கவனித்த கரிகாலன், மன்னர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி, வாள் பயிற்சி முதலியன அவனுக்குச் சரிவர அளிக்கப்படவில்லையென் பதையும் அறிந்துகொண்டான். வேங்கி நாட்டு மன்னன் கை தன்னை மீறி ஓங்கக் கூடாதென்பதற்காக, ஜெயசிம்ம சாளுக்கியன் அதை எத்தனை பலவீனமாக உபயோக மற்றதாக அடித்திருக்கிறான் என்பதை நன்றாகத் தெரிந்து கொண்ட கரிகாலனுக்கு, இராஜராஜ நரேந்திரன் மீது ஓரளவு அனுதாபமும் ஏற்பட்டது. இத்தனைக்கும் இராஜராஜ நரேந்திரன் அடியோடு முட்டாளல்ல என்பதையும் அவன் உடலில் ஊறியிருந்த சோழ நாட்டு ரத்தத்தின் காரணமாகக் கொஞ்சம் விஷமமும் அவன் வார்த்தைகளில் கலந்திருப்பதையும் கரிகாலன் கவனித்தான். ஆகவே, இராஜராஜ நரேந்திரன் தன்னைக் குறிப்பிட்டு அரசகுமாரிக்குத் துணை கிடைத்துவிட்டதாகச் சொன்ன விஷமப் பேச்சுக்குக் கரிகாலனே பதில் சொல்லத் தொடங்கி, “மன்னவா! இது அரசகுமாரி எதிர்பார்த்த துணையல்ல; எதிர்பாராத துணை!” என்றான்.

இராஜராஜ நரேந்திரனின் குழந்தைக் கண்கள் கரி காலன் முகத்தில் மீண்டும் பதிந்தன. “எதிர்பாராமல் கிடைக்கும் எதிலும் இன்பம் கலந்திருக்குமென்று சொல்வார்கள்…” என்ற நரேந்திரன், வாசகத்தை முடிக்காமல் மென்று விழுங்கினான்.

அதை இடையே வெட்டிய கரிகாலன், “தவறு மன்னவா! உலகத்தில் இன்பமும் துன்பமும் கலந்தே நிற்கின்றன. என் சம்பந்தப்பட்ட வரையில் இதுவரை எதிர் பாராமல் ஏற்பட்ட நிகழ்ச்சிகளில் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய அம்சம் மிகச் சொற்பம். என் பெற்றோரைக் கண்டு பிடிக்கக் கிளம்பினேன். எதிர்பாராமல், காவிரிக் கரையில் ஒரு துறவியைச் சந்தித்தேன். அவன் துறவியல்ல; அவனால் இன்னலே நேர்ந்தது. மேற்கே போக வேண்டிய என்னைக் கிழக்கே இழுத்து வந்தான். அதனால் தங்கள் வீரர்களிடம் சிக்கிக்கொள்ள இருந்தேன். அரசகுமாரியின் உதவியில்லா விட்டால், தங்களை இந்த நேரத்தில் இங்கு சந்திக்கும் பாக்கியம் கிடைத்திருக்காது” என்றான்.

“துன்பமான கதை. இதில் இன்பத்தின் கலப்பே யில்லையே!” கரிகாலனின் தத்துவத்தில் ஏதோ தவறு கண்டுபிடித்து விட்டதைப் போலப் புன்முறுவல் செய்தான்.

“ஏன் இல்லை மன்னவா? வேங்கி நாட்டு மன்னன் மகள், அழகுக்கும் அறிவுக்கும் பெயர்போன நிரஞ்சனா தேவியவர்களைச் சந்தித்தேன். சம்பிரதாயப் படாடோபங் களின்றி, அரண்மனையில் நாள்கணக்கில் காத்திராமல், மன்னனையும் பேட்டி கண்டுவிட்டேன். இவற்றைவிட என்ன வேறு இன்பம் வேண்டும்? இவையெல்லாம் சாதாரணமாகக் கிடைக்கக்கூடியதா?” என்று கேட்டான் கரிகாலன்.

அவன் பகிரங்கமாகத் தம்பி மீதும் தன் மீதும் புகழ்ச்சி வலையை எடுத்து வீசுவதைக் கண்ட நிரஞ்சனாதேவி சம்பாஷணையில் குறுக்கிட்டு, மன்னனை நோக்கி, “சொற் போர் பிறகு நடத்தலாம். இங்கு எதற்காக வந்தாய்? நேரடியாகப் பதில் சொல்” என்றாள், சற்றுக் கடினமான குரலில்.

அந்தக் குரலின் கடுமை வேங்கி நாட்டு மன்னனைப் பெரிதும் அடக்கிவிடவே, “இங்கு வீரர்கள் வந்து வசந்த மண்டபத்தைச் சோதனை போட்டதாகக் காவலாளி சொன்னான். உனக்கேதாவது ஆபத்து வரப்போகிறதே என்று பயந்து வந்தேன்” என்றான்.

“பயந்து வந்தாயா நரேந்திரா? மன்னன் பேசும் பேச்சா இது? ஆம், வீரர்கள் இங்கு வந்து சோதனைதான் போட்டார்கள். நான் தடுத்தும் கேட்கவில்லை. உன் அரசாட்சியில் வேறென்ன நடக்கும்?” என்று சீறினாள் மன்னன் மகள்.

“நான் என்ன செய்வேன் அக்கா?”

“என்ன செய்வாயா? உன் அதிகாரத்தை உபயோகி நரேந்திரா! இராஜேந்திர சோழன் மருமகனாக நடந்து கொள். ஜெயசிம்ம சாளுக்கியனை நாட்டை விட்டுத் துரத்து.”

“துரத்த முடியுமானால் இத்தனை நாள் சும்மாயிருப்பேனா அக்கா? அவன் நம்மைத் துரத்தாமல் இருக்கிறானே என்று சந்தோஷப்பட வேண்டாமா? இந்த அரண்மனையில் இருக்கும் வீரர்களில், மன்னன் சொற்படி நடக்கும் பேர்வழிகளைக் கைவிரல் விட்டு எண்ணிவிடலா மென்பது உனக்குத் தெரியாதா?”

இந்தப் பதிலைக் கேட்ட மன்னன் மகள் ஆயாசங் கலந்த பெருமூச்சு ஒன்றை விட்டாள். இராஜராஜ நரேந்திரன் மெல்ல அவளை அணுகி வந்து, தன் மெல்லிய கரங்களிலொன்றால் அவள் கழுத்தை வளைத்து “அக்கா! கலங்காதே; ஜெயசிம்மனுக்கு நாம் பாடம் கற்பிக்கும் காலம் வரும்!” என்றான் ஆறுதலாக.

“என்று வரும்?”

“யார் சொல்ல முடியும்?”

“முயற்சி இருந்தால் நீயே சொல்ல முடியும்.”

“அக்கா! உன் எண்ணம் எனக்குத் தெரியாததல்ல! ஜெயசிம்மனுக்கு எதிராகச் சதி செய்யச் சொல்லுகிறாய். அது பலிக்காது அக்கா.”

“பேடிகளுக்குப் பலிக்காது. ஆனால் நரேந்திரா, உன் அக்காள் உடலில் இன்னும் விமலாதித்தன் ரத்தம் ஓடுகிறது. அது பயத்தினால் இன்னும் உறைந்துபோக வில்லை. சிறிது காலம் பொறுத்திரு. பிறகு கவனி, ஜெயசிம்மன் கதியை?” என்ற நிரஞ்சனாதேவி, திடீரென மஞ்சத்திலிருந்து எழுந்திருந்து, “நரேந்திரா, நீ அரண்மனைக்குப் போ. எனக்குத்தான் துணை இருக்கிறது பார். இவர் எனக்கு மிகவும் தெரிந்தவர்” என்று, அவனைச் சமாதானப் படுத்தி அனுப்ப முயன்றாள்.

இராஜராஜ நரேந்திரன் மீண்டும் கரிகாலனை ஒரு முறை ஏறெடுத்துப் பார்த்து, நிரஞ்சனாதேவிக்காகக் கண்களைத் திருப்பி, “இவர் உனக்கு வேண்டியவர் என்பதை வந்தவுடனே தெரிந்துகொண்டேன்” என்றான்.

“எப்படித் தெரிந்துகொண்டாய் நரேந்திரா?” அரச குமாரியின் வாயிலிருந்து உணர்ச்சியின்றி வார்த்தைகள் உதிர்ந்தன.

“என் உடையையே இவருக்கு அளித்துவிட்டாயே” என்றான் மன்னன்.

“காரணத்தை நான் சொல்கிறேன்” என்று இராஜராஜ நரேந்திரன் அறைக்கு வந்தபோது சொன்ன வார்த்தைகளையே, கரிகாலன் திருப்பினான் மன்னனை நோக்கி.

“காரணமா? என்ன காரணம்?” என்று வினவினான் மன்னன்.

“இங்கு வேறு உடையில்லை” என்று விளக்கினான் கரிகாலன்.
“உடையில்லை என்பது உனக்கு எப்படித் தெரியும்?”

“இந்த உடையைக் கொடுத்ததிலிருந்து.”

இரவில் அரசகுமாரியின் வசந்த மண்டபத்தில் காணப்பட்டதற்கே மரண தண்டனை கிடைக்கும். தவிர வீரர்களுக்குத் தப்பி ஓடி வந்திருக்கிறான். இத்தனைக்கும் போதாதென்று அரச உடையை வேறு தரித்துக் கொண் டிருக்கிறான். இத்தனை குற்றத்தையும் புரிந்துவிட்டுத் தன் னெதிரே நின்று தர்க்கம் பேசும் கரிகாலனை ஆச்சரியம் ததும்பும் விழிகளால் நோக்கிய மன்னன், அவனுடன் சம்பாஷிப்பதில் ஏற்பட்ட கவர்ச்சியால், “இந்த நேரத்தில் புது உடை தரிக்க வேண்டிய அவசியமென்னவோ?” என்று விசாரித்தான்.

“நீராடிய பின் பழைய உடையை அணியும் பழக்கம் சோழ நாட்டில் கிடையாது.”

“நீராட்டம் முடிந்துவிட்டதோ?”

“முடிந்துவிட்டது.”

“எங்கே?”

“இங்கேதான்.”

“என்ன, இங்கேயா!” இதைச் சொன்ன நரேந்திரன் கண்களில் ஆச்சரியத்தோடு கோபமும் கலந்து நின்றன.

ஆம் இங்கேதான், கிருஷ்ணா நதியில்!” என்றான் கரிகாலன், அவன் சந்தேகத்தை நீக்க.

நம்ப முடியாத விழிகளை நரேந்திரன் அவன் மீது நாட்டி, “இதை நான் நம்புவேனென்று நினைக்கிறாயா?” என்று வினவியதோடு, நிரஞ்சனாவையும் பார்த்து, “அக்கா! இந்த உண்மை விளம்பியை எங்கிருந்து பிடித்தாய்?” என்று கேட்டான்.

“அவர் சொல்வது உண்மைதான் நரேந்திரா!” என்றாள் நிரஞ்சனா.

“ஆம் மன்னவா!” என்றாள், அதுவரையில் ஏதும் பேசாமலிருந்த பணிப்பெண்ணும்.

நரேந்திரன் மூவரையும் மாறி மாறிப் பார்த்து, “கிருஷ்ணாவின் இந்தப் பிரவாகத்தில், அதுவும் இரவில், ஒரு மனிதன் நீராடி என் எதிரில் உயிரோடு நிற்கிறான் என்பதை நம்ப நான் முட்டாளா? இது என்ன கட்டுக் கதை! இந்தக் கதையை எதற்காகச் சிருஷ்டிக்கிறீர்கள்?” என்று இரைந்தான்.

கரிகாலனே அவனுக்குப் பதில் சொன்னான்: “பதற்றம் வேண்டாம் மன்னவா. நான் விரும்பி நீராடவில்லை.”

“விரும்பி நீராடவில்லை, யாராவது நீராட்டி வைத்தார் களா?” என்ற மன்னன் குரலில் இகழ்ச்சி கலந்து நின்றது.

“நீராட்டி வைக்கவில்லை. நீராடத் தூண்டினார்கள்.”

“யார்?”
“ஜெயசிம்மன் வீரர்கள்.”

இந்தப் பதிலைக் கேட்ட இராஜராஜ நரேந்திரன் சிறிது நேரம் யோசித்தான். மெள்ள மெள்ள அவனுக்கு உண்மை உதயமாகவே வருத்தம் கலந்த சிரிப்பொன்றை உதிர விட்டான். அப்படியா! படித்துறையில் மறைந்து கிடந்தாயா? அப்படியா! அதுவும் எவ்வளவு ஆபத்து! எத்தனை ஆபத்தானால் என்ன? ஜெயசிம்மனுக்குப் பயந்து ஓடுபவர்கள் கிருஷ்ணா நதிக்குள் குதித்துப் பிராணனை விட்டாலும் விடுவார்களே யொழிய, ஒரு நாளும் அவன் கையில் சிக்கிச் சித்திரவதைக்குள்ளாக இஷ்டப்படமாட்டார்கள். சரி, போகட்டும்” என்று கரிகாலனை நோக்கிச் சொல்லிவிட்டு, “நான் வருகிறேன் அக்கா. வசந்த மண்டபத்தைச் சோதனை போட்டதாகக் கேள்விப்பட்டு, உனக்கு ஏதாவது ஆபத்து நேரிடப் போகிறதே என்றுதான் ஓடிவந்தேன். ஒரு விஷயம் அக்கா! நீ ஏதோ சதியில் ஈடு பட்டிருப்பதாக ஜெயசிம்ம சாளுக்கியன் பேசிக்கொண்டி ருப்பதாகக் கேள்வி. அப்படி எதுவும் செய்து அகப்பட்டுக் கொள்ளாதே. இவனை வீரர்கள் துரத்தியதிலிருந்தும், நீ இவனை மறைத்து வைப்பதிலிருந்தும் ஒருவேளை அது உண்மையாக இருக்கும்போல் தோன்றுகிறது. அப்படி ஏதாவதிருந்தால் இவனை முதலில் துரத்திவிடு. சதியில் சம்பந்தப்பட்ட ஆள் களை உன்னோடு சேர்த்துக் கொள்ளாதே!” என்று கூறிவிட்டுச் சென்றான் இராஜராஜ நரேந்திரன்.

அவன் சென்றதும், அறையில் சிறிது நேரம் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கரிகாலனே உடைத்து, “அம்மணி! நேரமாகிறது. இனி நான் இங்கு தாமதிப்பது பிசகு” என்றான்.

“உண்மை!” என்றாள் நிரஞ்சனா.

“செய்தி ஏதாவது சொல்கிறீர்களா?”

“யாருக்கு?”

“பிரும்ம மாராயருக்கு.”

“யாரவர் தெரியுமா உங்களுக்கு?”

“பார்த்ததில்லை; அவரைப் பற்றிச் சூடாமணி விஹாரத்தில் பேச்சு நிரம்ப அடிபட்டிருக்கிறது. இங்குள்ள ராஜீய நிலையை வைத்துப் பார்க்கும்போது, அவர் அந்தப் பிரும்ம மாராயராகத்தான் இருக்க வேண்டும்.”

“விளக்கிச் சொல்லுங்கள்.”

“அரசகுமாரி, சோழநாட்டு பிரும்ம மாராயர் ஒருவர் தான். இராஜேந்திர சோழனின் மிகச் சிறந்த தண்டநாயகர்களில் ஒரவரான பிரும்ம மாராயரை அறியாதவர்கள் யார் இருக்க முடியும்? அவர் இங்கு சோழ நாட்டுத் தூதராக இருப்பதும் எனக்குத் தெரியும். ஜெயசிம்ம சாளுக்கியன் ஆதிக்கத்தை உடைக்க உங்களுக்கு உதவக்கூடிய நெஞ்சுத் திடமும், வசதியும் உடையவர் இந்நாட்டில் வேறு யார் இருக்க முடியும்?” என்று வினவினான்.

அவன் விவேகத்தைக் கண்டு வியந்த நிரஞ்சனாதேவி, அவன் விஷயத்தை இத்தனை தூரம் ஊகித்திருக்கிறா னென்பதை அறிய விரும்பி, “வேங்கி நாட்டை நோக்கிப் பாய்ந்து வரும் இரு வேல்களுக்கிடையில் நானிருப்பதாகக் கூறினீர்களே, அவற்றில் ஒரு வேல் சோழ நாடு அல்லவா? அத்துடன் நான் உறவாடுவேனா? வேங்கி நாட்டைச் சாளுக்கியர் ஆதிக்கத்திலிருந்து சோழ நாட்டு ஆதிக்கத்துக்கு மாற்றுவதில் எனக்கென்ன லாபமிருக்கிறது?” என்று வினவினாள்.

“அரசகுமாரி! சோழ தூதரின் ஒத்துழைப்பை ஜெய சிம்ம சாளுக்கியன் பலத்தை முறிப்பதற்கு மட்டும் நீங்கள் விரும்புகிறீர்கள். இல்லாவிட்டால் ரகசியம் எதற்கு? பிரும்ம மாராயரிடம் ஒரு வார்த்தை சொன்னால், சோழப் படைகள் நாளைக்கே வேங்கி நாட்டுக்குள் புகுந்துவிடுமே! சோழ நாட்டு உதவி உங்களுக்குத் தேவை; ஆனால் ஓரளவுக்குத்தான் தேவை. என்னைப் பரிட்சை பார்க்கவே, இத்தனையும் கேட்கிறீர்கள். நான் பரிட்சையில் தேறி விட்டேனா?” என்று வினவினான் கரிகாலன்.

“நன்றாகத் தேறிவிட்டீர்கள். ஆனால் இத்தனையும் ஊகிப்பதற்கு…” என்று அரசகுமாரியின் வார்த்தைகளை இடையில் வெட்டிய கரிகாலன், “ஆதாரமாயிருந்தது பிரும்ம மாராயர் பெயர், வேங்கி நாட்டு நிலை, அவற்றில் உங்கள் சம்பந்தம் – இம்மூன்றையும் இணைத்துப் பார்த்தேன். பிரும்ம மாராயரிடமிருந்து நீங்கள் ஏதோ செய்தியை எதிர்பார்க்கிறீர்கள். இத்தகைய செய்திகளை வழக்கமாகக் கொண்டு வருபவன் அரிஞ்சயன். அவனை எதிர்பார்த்து அவனுக்காகக் கோட்டைக் கதவைத் திறந்து வைத்துக் காத்திருந்தீர்கள். அவனுக்குப் பதில் நான் வந்ததாக நினைத்து, என்னைக் காப்பாற்றினீர்கள். ஒரு சிறு தவறு ராஜகுமாரி! அதனால் என் தலையே தப்பியது. அதுமட்டுமா? என் வாழ்வில் ஒரு புது சகாப்தமும் துவங்குகிறது!” என்றான்.
“என்ன சகாப்தம் அது?” என்று வினவினாள் நிரஞ்சனா.

“வேங்கி நாட்டு மன்னன் மகளுக்கு அடிமையாகும் சகாப்தம்” என்றான் கரிகாலன்.

“எனக்கே தெரியாது அரசகுமாரி. உங்களுக்கு உதவ, என் உயிரைக் காப்பாற்றிய உங்கள் நலனுக்கு என் உயிரை அர்ப்பணிக்க உள்ளம் தூண்டுகிறது” என்றான் கரிகாலன் உணர்ச்சி பொங்க.

“உங்களை உதவும்படி நான் கட்டாயப்படுத்தவில்லை.”

“நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டாம். ஆனால்…”

“ஆனால்?”

“நான் தமிழன்.”

“இருந்தாலென்ன?”

“தமிழன் நன்றி மறக்காதவன். உங்களுக்குப் பதில் உதவி செய்வது என் கடமை. தயங்காமல் சொல்லுங்கள் அரசகுமாரி, பிரும்ம மாராயரிடம் நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டான் கரிகாலன்.

நிரஞ்சனாதேவி நீண்ட நேரம் அறையில் உலாவினாள். கடைசியாக ஏதோ முடிவுக்கு வந்தவள் போல், பணிப் பெண்ணை நோக்கி, “சரி, மாலினி, தந்தப் பேழையை எடுத்து வா!” என்று உத்தரவிட்டாள். தந்தப் பேழையை பணிப்பெண் எடுத்து வந்ததும் அதைத் திறந்த அரசகுமாரி, “இதோ பார்த்தீர்களா?” என்று அவனிடம் பேழையை நீட்டினாள்.

அதிலிருந்த பொருளைக் கண்ட கரிகாலன் கண்கள் பிரமை தட்டின. அதுவரை திடமாகத் தரையில் ஊன்றி நின்ற கால்கள் ஆட்டங் கண்டன. தலையும் சுழலும் ஸ்திதிக்கு வந்துவிட்டது.

Previous articleMannan Magal Part 1 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here