Home Historical Novel Mannan Magal Part 1 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

83
0
Mannan Magal Ch 11 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 11 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 சிந்தனைச் சுழல்

Mannan Magal Part 1 Ch 11 | Mannan Magal | TamilNovel.in

செந்தாமரையின் இதழ்களையும் வெட்கச் செய்யும் அழகையும் மென்மையும் படைத்த நிரஞ்சனாவின் செவ்விய விரல்கள் தந்தப் பேழையைத் திறந்து காட்டியதும், அதனுள்ளிருந்த பொருளைக் கண்டு சொல்ல வொண்ணா பிரமையையும் கலக்கத்தையும் ஒருங்கே அடைந்த கரிகாலன், பேழையின் உட்புறத்தையே நீண்ட நேரம் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். சற்றும் எதிர்பாராத விதமாகத் திடீரெனத் தன் கண் முன்னால் திணிக்கப்பட்ட அந்தப் பொருளைக் கண்ட அவன் உள்ளத்திலே எழுந்த உணர்ச்சி அலைகள் சூறாவளியால் உந்தப்பட்ட கடலலைகளைப் போல பேரிரைச்சலுடன் எழுந்து அவன் புத்தியில் திரும்பத் திரும்பத் தாக்கியதன் காரணமாக, எதற்கும் சலனமடையாத அவன் சித்தமும் சலனப்பட்டு, கண்களைச் சுழலும் ஸ்திதிக்குக் கொண்டு வந்ததால், தன்னைச் சரிப்படுத்திக் கொள்ளக் கட்டிலின் காலை இறுகப் பிடித்துக்கொண்டான் கரிகாலன். எதிரே நின்ற அந்த ஏந்திழை ஏந்தி நின்ற தந்தப் பேழைக் குள்ளிருந்த அரும்பொருள், அவன் சிந்தனையைச் சில விநாடிகள் வஸந்த மண்டபத்தின் அந்த அறைச் சூழ்நிலை யிலிருந்து சூடாமணி விஹாரத்துக்கு அழைத்துச் சென்று விட்டதால், கரிகாலன் எதிரே நின்ற எழிலுருவத்தை மறந்தான்; வஸந்த மண்டபத்தை மறந்தான்; சற்றுமுன்பு அவனே அலசிக் கொட்டின சோழ சாளுக்கிய அரசியல் சிக்கல்களை மறந்தான்; சில நாழிகைகளுக்கு முன்பாகத் தன்னைப் பனிக்கும் கேவலமாக உறைய வைத்த கிருஷ்ணா நதி நீரின் குளிர்ச்சியையும் வேகத்தையும் கூட மறந்தான். அதுவரை அவன் சிந்தனைச் சுழலில் வட்ட மிட்ட ராஜேந்திர சோழதேவன், ராஜராஜ நரேந்திரன், ஜெயசிம்ம சாளுக்கியன், பிரும்ம மாராயன் அத்தனை பேர் உருவங்களும் மறைந்தன. அந்த விநாடியிலே, அவன் கண்ணையும் கருத்தையும் கவர்ந்து நின்றது தந்தப் பேழைக்குள்ளிருந்த ஒரே பொருள். அந்தப் பொருளைக் காட்டத் தந்தப் பேழையின் மூடி திறந்ததை எண்ணிப்பார்த்த கரிகாலன், ‘திறந்தது தந்தப் பேழையின் மூடியா அல்லது தனது வாழ்க்கை மர்மத்தின் ரகசியக் கதவா?’ என்று வியந்து நின்றான்.

அவன் மனக் கண்ணில் சூழ்நிலை மறைந்து பழைய சூழ்நிலை நிலவத் தொடங்கியது. வேங்கி நாட்டு எல்லையைத் துறந்த எண்ணம் தெற்கு நோக்கிப் பறந்தோடியது. மீண்டும் நாகப்பட்டிணத்தின் அழகிய கடற்கரையும், அதை அடுத்து மிகக் கம்பீரமாக நின்ற சூடாமணி விஹாரமும் அவன் அகக்கண்ணில் எழுந்து நின்றன. அதோ, புத்த பிக்ஷுக்களின் உதயகால கோஷம். அதோ விஹாரத்தின் நந்தவன மரங்களிலுள்ள பக்ஷி ஜாலங்களின் கிலகிலா சப்தம்! அதோ, விஹாரத்தின் ஸ்தூபியின் பொந்துகளிலிருந்து தலை நீட்டும் புறாக்களின் ‘ஹும் ஹும்-ஹும்’ என்ற இன்ப நாதம்! அதோ, கேட்கிறதே புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பிக்ஷுக்களின் சரணாகதிக் குரல்! அதோ புத்த பகவான் கருணைக் கண்கள் அமைதி ஒளியை வீசுகின்றன! அவற்றின் ஒளியை நிகர்த்த குத்து விளக்குகளின் சுடர்களோ அதோ அந்த மஹானின் திருவுருவத்தின் பக்கத்தில்! அவர் பாதங்களிலே தூவப் பட்ட மலர்கள் என்ன அழகாகச் சிரிக்கின்றன!

புனிதமான அந்தச் சூழ்நிலை சிந்தனையில் உலவ உலவ கரிகாலன் உள்ளத்தைக் கலக்கி நின்ற பிரமை விலகியது. புத்த பகவானின் அருள் விழிகளின் வீச்சினால் கலக்கமும் கதறியோடி விட்டதால், உடலிலே உணர்ச்சி அலைகள் சாந்தமாகப் பாய்ந்து சென்றன. அவன் மனக் கண் எதிரே நின்ற அந்த மஹான் தலைமைப் பிக்ஷீ. அவன் வளர்ப்புத் தந்தையாரின் திருவுருவம் அவன் சாந்தியை அதிகப்படுத்தியது. துறவிகள் புடைசூழ அவர் நிற்கும் காட்சி அவன் நெஞ்சத்திலே இணையற்ற உறுதியையும் விளைவித்தது. இத்தனை உறுதியிலும் சாந்தியிலும் அவன் புறப்பட்ட தினத்தன்று ஏற்பட்ட நிகழ்ச்சிகளும் அவன் உள்ளத்தில் பவனி வந்தன. அதோ, அப்படித் தலையை அசைத்துத்தான் தலைமைப் பிக்ஷு என்னை அழைத்துச் சென்றார். கூட இருந்த துறவிகளைப் பிரிந்து, நான் எத்தனை அமைதியுடன் அவரைப் பின்தொடர்ந் தேன். அதோ, தந்தையாரின் தனி அறை! எத்தனை புனிதமான அறை! அதோ, இழுக்கிறாரே வெளியே மரப்பெட்டி, அது எத்தனை சாதாரணம்! ஒரு வேலைப் பாடுமில்லை. ஆனால் எத்தனை எத்தனை ராஜ ரகசியங்கள் அதில் புதைந்து கிடக்கின்றன! தந்தையார் பெட்டியைத் திறக்கிறார்! என்ன, பச்சைக்கல் மோதிரமா! எத்தனை பெரிய பச்சைக்கல்! பச்சைக்கல்லின் விலையே மதிக்க முடியாது போலிருக்கிறதே! அது யார் மோதிரமாயிருக்கும்! அதோ தந்தையார் அப்படித்தான் கொடுத்தார் மோதிரத்தை! அதோ அந்த மோதிரத்தின் உட்புறத்தில் வெட்டப்பட்ட எழுத்துக்கள்.

இப்படிப் பழைய காட்சிகளெல்லாம் மிக வேகத்தில் புத்தியைச் சுழற்றியதால், அதிலே லயித்த கரிகாலன் மனம் கூடப் பழையபடி அவன் பெயரை, ‘கரிகாலன், கரிகாலன்’ என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் காட்டியது. சூடா மணி விஹாரத்தில் அந்தப் பெயரை முதன் முதலாக உதிர்த்த அவன் உதடுகள், வசந்த மண்டபத்தின் அந்த அறையில் மீண்டும், ‘கரிகாலன் கரிகாலன்’ என்று முணு முணுத்தன. அப்படி முணுமுணுத்ததால், கனவுலகத்திலிருந்து விலகி நனவுலகத்துக்கு வந்த கரிகாலன் சிந்தனை ஆம், கரிகாலன் தான்! ஆனால் அந்தக் கரிகாலன் யார்? அவன் யார் மகன்?’ என்று கேட்டது. அந்தக் கேள்விக்குப் பதிலைப் பேழையிலுள்ள அந்தப் பொருள் சொல்லுமா? இந்தக் கேள்வி தொனிக்க மீண்டும் மீண்டும் பேழையிலிருந்த பொருளை நோக்கினான். பேழையிலிருந்த பச்சைக்கல் மோதிரம் அவன் உள்ளத்தின் வேதனையை உணர்ந்து கொண்டது போல், அறையின் விளக்கு வெளிச்சத்தில், தன் பச்சை ஒளியை நன்றாக வீசி அவனை விழித்துப் பார்த்தது.

பேழையிலிருந்த பச்சைக்கல் மோதிரத்தைக் கண்ட வுடன் கரிகாலன் ஒரு வினாடி அது தனக்குத் தலைமைப் பிக்ஷீ அளித்த மோதிரமாயிருக்குமா என்று நினைத்ததால் பிரமித்துப் போனான். பிரமை நீங்கி அறிவு தெளிவடையவே தன் கச்சையைத் தடவிப் பார்த்து, அது தன் மோதிரமல்ல என்பதை நிச்சயம் செய்து கொண்டதனால், ஓரளவு சாந்தியை அடைந்து, அப்படியானால் இந்த மோதிரம் வேங்கிநாட்டு மன்னன் மகளிடம் எங்கிருந்து வந்தது? யார் கொடுத்தார்கள்?” என்று யோசிக்கலானான். தனக்குத் தலைமைப் பிக்ஷீ கொடுத்த மோதிரத்துக்கும் பேழையிலிருந்த அந்த மோதிரத்துக்கும் எள்ளளவு வித்தியாசமுமில்லாதிருந்ததைக் கவனித்த கரிகாலன், ‘இரண்டையும் செய்தவன் ஒரே பொற்கொல்லனாகத்தான் இருக்க முடியும்’ என்று தீர்மானித்தான். ‘ஒரே அளவுள்ள இரண்டு மரகதக் கற்கள்! இவை இரண்டிலும் புதைந்து கிடப்பதும் ஒரேவித ரகசியமாயிருக்குமோ?’ என்று யோசித்த கரிகாலன், பேழையிலிருந்த மோதிரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு, நிரஞ்சனாவிடம் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் நேராக விளக்கிடம் சென்று, மோதிரத்தின் உட்புறத்தை அதன் ஒளியில் பரிசோதித் தான். கும்பகோணம் மடாலயத்தில் தஞ்சைத் துறவியார் தனது மோதிரத்தை விளக்கின் எண்ணெய் கொண்டு காவியால் துடைத்தபோது புலப்பட்ட அந்தச் சிறிய மகுடத்தின் அடையாளம், பேழையிலிருந்த மோதிரத்திலும் இருந்தது.

ஆனால், கரிகாலன் என்ற பெயர் மட்டும் வெட்டப் படவில்லை. இரண்டு மோதிரங்களும் ஏதோ ஒரு ராஜ குடும்பத்தின் மோதிரங்கள் என்பதை மகுடத்தின் அடையாளத்திலிருந்து புரிந்துகொண்ட கரிகாலன், ஏதோ காரணத்தை முன்னிட்டே தன் பெயர் மட்டும் ஒரு மோதிரத்தில் வெட்டப்பட்டிருக்கிறது என்பதைச் சந்தேகமறத் தெரிந்து கொண்டாலும், தன் பெயரை வெட்ட வேண்டிய அவசியமென்ன என்பதையோ, அது தன் உண்மைப் பெயர்தானா தீர்மானிக்க அல்லது தற்காலிகமாக அந்தப் பெயரைத் தனக்கு அளித்து தன் பிறப்பு வரலாற்றை மறைத்துவைக்க தலைமைப் பிக்ஷ கையாண்ட தந்திரமா என்பதையே முடியாததால், தந்தப்பேழையின் மோதிரத்தைப்பற்றி மேலும் தகவலறியவும், முடிந்தால் அந்தத் தகவலிலிருந்து தன் பிறப்பு வரலாற்றைப் பற்றி ஆராயவும் எண்ணினான். ஆகவே, விளக்கு வெளிச்சத்தில் பரிசோதனையை முடித்துக்கொண்ட கரிகாலன், மன்னன் மகளை நோக்கித் திரும்பி, “அரசகுமாரி! இந்த மோதிரம் யாருடையது?” என்று வினவினான்.

மன்னன் மகள் உடனே பதிலேதும் சொல்லவில்லை. மோதிரத்தைக் கண்டதும் கரிகாலன் பிரமித்த பிரமிப்பையும் அவன் கண்கள் திடீரெனக் கனவுலகில் சஞ்சரித்த விந்தையையும், தன்னைச் சமாளித்துக்கொள்ள அவன் கட்டிற் காலைப் பிடித்துக் கொண்டதையும், பிறகு வெறி பிடித்தவன் போல் மோதிரத்தை எடுத்துக் கொண்டு விளக்கினிடம் ஓடி ஆராய்ந்ததையும் கண்ட நிரஞ்சனாதேவி, அவன் போக்குக்கு எவ்விதக் காரணமும் கற்பிக்க முடியாதவளாய் நின்றாள். அத்துடன் அவள் மனத்தில் மீண்டும் அவனைப்பற்றிச் சந்தேகமும் எழத் தொடங்கியது. இவன் அரசியல் விவகாரங்களை நன்றாக அறிந்திருக்கிறான். நாகப்பட்டிணத்துச் சூடாமணி விஹாரத்தில் இருந்திருப்பதாகச் சொல்கிறான். இந்த மோதிரத்தைப் பார்த்து பிரமிக்கிறான். ஒருவேளை சோழ நாட்டு ஒற்றனாயிருப்பானோ?’ என்ற சந்தேகங்கள் அவள் மனத்தில் எழுந்து ஊசலாடவே, கரிகாலனை நோக்கிக் கேட்டாள், “மோதிரம் யாருடையதாயிருந்தால் உங்களுக்கென்ன?” என்று.

அவள் விழிகளிலும் குரலிலும் உதயமான சந்தேகத் தைக் கரிகாலனும் கவனிக்கத் தவறவில்லை. சந்தேகத்துக்குக் காரணம் இருக்கிறது என்பதையும், கூர்மையான அவன் புத்தியும் உணரத் தவறவில்லை. ஆகவே, அவள் மனத்திலோடிய எண்ணங்களை ஓரளவு புரிந்துகொண்டே சொன்னான்: “அரசகுமாரி! நான் சோழ நாட்டவன்; ஆனால் ஒற்றனல்ல. இந்த மோதிரம் யாருடையதாயிருந்தால் எனக்கென்ன என்று கேட்கிறீர்கள். எனக்கும் இந்த மோதிரத்துக்கும் நெருங்கிய சம்பந்தமிருக்கிறது.”

“என்ன சம்பந்தம்?” என்று கேட்டாள் மன்னன் மகள்.

“உங்களுக்குத் தெரிய வேண்டுமா அரசகுமாரி?” என்று கேட்டான் கரிகாலன், அவளைச் சற்று ஏறெடுத்து நோக்கி.

“ஆம், தெரிய வேண்டும்.”

“நான் சொன்னால் போதுமா? அத்தாட்சியும் வேண்டுமா?”

“அத்தாட்சியா?”

“ஆம், அரசகுமாரி.”

“எங்கே இருக்கிறது அந்த அத்தாட்சி?” என்று கேட்ட மன்னன் மகள் கரிகாலனைச் சற்று அலட்சியத்துடனேயே நோக்கினாள்.

அடுத்த வினாடி, அலட்சியம் நிரம்பிய கண்களில் ஆச்சரியம் நிரம்பிக் கிடந்தது. அவள் கண் முன்பாக இரண்டு பச்சைக்கல் மோதிரங்கள் ஒளிவிட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்தன. கரிகாலன் கச்சையிலிருந்து எடுத்து நீட்டிய இரண்டாவது பச்சைக்கல் மோதிரம், தன் பச்சை ஒளியை அவள் கன்னத்தில் லேசாக விழ வைத்ததால், ஒரு வாலிபனது மோதிரத்தின் ஒளி நம்மீது விழுகின்றதே என்பதாலோ என்னவோ, கன்னம் சிறிதே வெட்கத்தால் சிவந்தது. அந்த வெட்கச்சிவப்பை வெளியில் காட்டாமல், பச்சை ஒளி அவள் கன்னத்திலே திரையிட்டு நின்றது.

இரண்டு மோதிரங்களையும் தன் கையில் வாங்கித் திரும்பத் திரும்பப் பார்த்த மன்னன் மகள் பெரிதும் வியப் படைந்ததால், “ஒரே அச்சு! என்ன ஒற்றுமை!” என்று சற்று இரைந்தே சொன்னாள்.

“ஆம் அரசகுமாரி! ஒரே அச்சு! ஒரே பொற்கொல்லன் தான் இவை இரண்டையும் செய்திருக்கிறான். அதுவும் அவன்.”

“சொல்லுங்கள் அவன்?”

“சோழ நாட்டுப் பொற்கொல்லன்.”

“எப்படித் தெரியும் உங்களுக்கு?”

“நான் சோழநாட்டைச் சேர்ந்தவன் என்று என் வளர்ப்புத் தந்தை சொன்னார். ஒரு மோதிரத்தில் என் பெயர் வெட்டப்பட்டிருக்கிறது. ஆகையால் அதைச் சோழ நாட்டுப் பொற்கொல்லன்தான் செய்திருக்க வேண்டும். இன்னொரு மோதிரம் அதன் இரட்டைப் பிறப்பு; ஆகவே, அதையும் வேறு யாரும் செய்திருக்க முடியாது.”

மோதிரங்களை மீண்டும் திருப்பிப் பார்த்த நிரஞ்சனாதேவி, “உண்மைதான்” என்றாள்.

சம்பவங்கள் சிருஷ்டித்த உணர்ச்சிகளின் வேகத்தாலும், மோதிரத்தின் தகவலை அறிய ஏற்பட்ட ஆசையாலும், எதிரே நின்று மோதிரங்களைக் கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தவள் வேங்கி நாட்டு மன்னன் மகள் என்பதை அறவே மறந்த கரிகாலன், அவளுக்கு வெகு அருகில் வந்து, “அரசகுமாரி! உங்கள் மோதிரத்தின் தகவலை அறிந்துகொள்ள எனக்கு ஏன் ஆசை எழுகிறது என்று இப்பொழுது புரிகிறதல்லவா?” என்று வினவினான்.

தன் முகத்துக்கு வெகு அருகிலிருந்த அந்தக் கண்களை நிரஞ்சனாவின் நெடுங்கண்கள் நோக்கின. நான்கு விழிகள் கலந்தன. இரண்டில் ஏக்கம்! இரண்டில் பரிதாபம்! பிறப்பின் வரலாற்றை அறியத் துடித்த ஏக்கக்கண்களும், ஏக்கத்தைக் கவனித்தாலும் ஏக்கத்துக்கு முழுக் காரணத்தையும் அறியாத பரிதாபக் கண்களும் நீண்ட நேரம் பின்னிக்கொண்டு நின்றன. கடைசியாகப் பரிதாபம் காட்டிய கண்கள் வெட்கத்தால் தாழ்ந்தன. “முழுதும் புரிய வில்லை” என்ற சொற்கள், நிரஞ்சனாவின் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

கரிகாலன் அவளிடமிருந்து விலகிநின்று, “அரசகுமாரி! என் வாழ்க்கை விவரம் முழுதும் புரிந்தால், மோதிரத்தின் வரலாற்றை அறிய எனக்குள்ள உள்ளத் துடிப்பும் உங்களுக்குப் புரியும்” என்று தன் சரிதையைச் சொல்லத் தொடங்கினான்.

சூடாமணி விஹாரத்தில் வளர்ந்ததிலிருந்து, புறப்பட்ட நாள் முதல், அன்றுவரை நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் திரும்ப எண்ணிப் பார்ப்பவன் போலவே, அறையில் அங்குமிங்கும் உலாவிக்கொண்டும், நடுநடுவே நின்று, உணர்ச்சி ததும்பும் சொற்களால் தன் கதையை விவரித்தான். குருவிடம் பாடம் சொல்லும் மாணவன் போல மிகத் தெளிவான வார்த்தைகளில் தன் சோகத்தையே மன்னன் மகளிடம் ஒப்புவித்தான் கரிகாலன். அந்தசோகக் கதையைக் கேட்ட மன்னன் மகளின் கண்களில் இணையற்ற சோகம் துளிர்த்து நின்றது.

“இப்போது புரிகிறது” என்று கடைசியாக அவள் சொன்ன வார்த்தைகள் கூடச் சற்றுத் தழுதழுத்தே வெளிவந்தன.

அவளுடைய உணர்ச்சிகள் தன்பால் இளகியதால் வருத்தத்துடன் வெளிவந்த வார்த்தைகளைக் கவனித்த கரிகாலன், மீண்டும் கேட்டான், ” அரசகுமாரி! இந்த மோதிரம் ஏது தங்களுக்கு!” என்று.

“என் சிற்றனை கொடுத்தாள்.”

“எந்தச் சிற்றன்னை?”

“நரேந்திரன் அன்னை.”

“யார்? குந்தவைப் பிராட்டியாரா?”

“ஆம்!”

“அப்படியானால் இது!”

“சோழப் பேரரசர் ராஜராஜ தேவர் குந்தவைப் பிராட்டியாருக்குச் சீதனமாகக் கொடுத்த நகைக்குவியலில் இது ஒன்று.”

“அதை ராஜராஜ தேவரே செய்திருப்பாரா?”

“யார் செய்தார்கள் என்ற விவரம் தெரியாது. அவர் செய்திருக்கலாம் அல்லது அரச குடும்பத்தின் பொக்கிஷத்தில் கலந்து கிடந்ததாயிருக்கலாம்.”

“குந்தவைப் பிராட்டியாரிடம், இதற்கு விளக்கம் கிடைக்குமா?”

“கிடைக்கலாம்.”
“அவர் எங்கே இப்பொழுது?”

“சோழ நாட்டில் இருக்கிறார்கள்.”

இந்தப் பதில் கரிகாலனைத் திகைக்க வைத்தது. தன் பிறப்பின் வரலாற்றை உணர்த்தக்கூடிய ஒரே ஒருவர், சோழப் பேரரசின் மாளிகையில், அதுவும் கங்கை கொண்ட சோழபுரத்திலோ காஞ்சியிலோ இருக்கலாம். அங்கு சென்று விவரம் அறிவதும் அத்தனை எளிதல்ல. ஊர் பேர் தெரியாத தன்னை யாரும் அரண்மனைக்குள் அநுமதிக்க மாட்டார்களென்பதைக் கரிகாலன் நன்றாக உணர்ந்தான். குந்தவைப் பிராட்டியை நெருங்கி மோதி ரத்தைப்பற்றி விசாரிக்க வேண்டுமென்றால், வேங்கி நாட்டு மன்னன் மகள் மூலமாகத்தான் அது நடக்க முடியும். நிரஞ்சனாதேவி வேங்கி நாட்டிலிருக்கிறாள்; குந்தவைப் பிராட்டியோ சோழ நாட்டிலிருக்கிறார்கள். இடையே தொலைதூரம்! சாதாரண மக்களா, இஷ்டப்படி இருவரும் பயணம் செய்ய? ராஜ குடும்பப் பெண்மணிகள்! அவர்கள் பெயர்களுடன் சரித்திரம் பிணைந்து கிடக்கிறது!

இத்தகைய நிலையில் தன் பிறப்பு வரலாற்றை அறிவது மிகவும் துர்லபமென்பதை அறிந்து கொண்ட கரிகாலன், தன் ஆசையை அடக்கிக்கொண்டு, முதலில் மன்னன் மகளுக்குத் தேவையான உதவியைச் செய்ய நிச்சயித்து, அவளை நோக்கி, “அரசகுமாரி! இப்பொழுது நான் என்ன செய்யவேண்டும், சொல்லுங்கள்?” என்று கேட்டான்.

மன்னன் மகள் நீண்ட நேரம் யோசித்துவிட்டு, “உங்கள் வாழ்க்கையில் மர்மம் நிரம்பிக் கிடக்கின்றது. அதன் சிக்கலை அவிழ்க்க நீங்கள் முனைந்து நிற்கும்போது, வேறு சிக்கல்களைச் சிருஷ்டிக்க எனக்கு இஷ்டமில்லை” என்று சொன்னாள்.

“அரசகுமாரி! என் வாழ்க்கை பிறந்தது முதலே சிக்க லுடன் பிறந்தது. உங்கள் வாழ்க்கையில் சிக்கல் இப் பொழுதுதான் பிறந்திருக்கிறது. சிடுக்குடைய இரு நூற் பந்துகளுக்குமிடையே பச்சைக்கல் மோதிரமென்ற ஓர் இழையும் கலந்திருக்கிறது பாருங்கள், இந்தக் கலப்பும் விதியின் ஒரு பிணைப்பாயிருக்கலாம். யார் கண்டார்கள்? இந்தக் கலப்பே என் வாழ்க்கை மண்ணை உடைக்கும் கலப்பையாக மாறலாம். ஆகவே சொல்லுங்கள், என் உடல், பொருள், ஆவி மூன்றையும் உங்கள் சேவைக்கு அர்ப்பணிக்கிறேன். பிரும்ம மாராயரிடம் சென்று நான் என்ன சொல்ல வேண்டும்?” என்று கேட்டான் கரிகாலன்.

மீண்டும் அரசியல் சதிப்பேச்சு துவங்கியதால், மன்னன் மகளின் கண்களில் உறுதி உதயமாயிற்று. அவள் தோரணை பழையபடி அரச தோரணையாக மாறியது. “இதோ, உங்கள் மோதிரம். இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். இந்த என் மோதிரத்தைப் பிரும்ம மாராயரிடம் காட்டுங்கள். அவர் உங்களுடன் மனம் விட்டுப் பேசுவார். ஏற்பாடு எத்தனை தூரத்திலிருக்கிறது? அரிஞ்சயன் என்ன செய்கிறான்? ஏன் பல நாள்களாக அவனைக் காணவில்லை என்பதை விசாரித்துக் கொண்டு வாருங்கள்” என்றாள் நிரஞ்சனாதேவி.

“எப்பொழுது வருவது?” என்று வினவினான் கரிகாலன்.”

“நாளை நள்ளிரவு இன்று வந்தீர்களே, அதே வழியாக.”
“கோட்டைக் கதவு?”

“திறந்திருக்கும்.”

“தினசரி வசந்த மண்டபத்தில் தனித்துப் படுத்தால் சந்தேகம் வராதா?”

“வராது; வெப்பத்துக்காக அரச மகளிர் கோடை காலத்தில் படுப்பதற்காகவே கட்டப்பட்ட வசந்த மண்ட பம் இது.”

“காவலாளிகள் இல்லாமலா?”

“ஆம்! கோட்டைச் சுவரும் அதன் மீது உலாவும் காவ லாளிகளும் இருக்கும்போது, வசந்த மண்டபத்திற்குக் காவ லாளிகள் அநாவசியமென்று கூறிவிட்டேன்.”

ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, முன்னேற்பாடாக அலுவல்களைப் புரியும் அந்த அரச மகளைக் கண்ட கரிகாலன், அவள் ஆளப்பிறந்தவள் என்பதில் சந்தேகமில்லை என்பதைத் தீர்மானித்த வண்ணம் அவளிடம் விடையும் பெற்றுக் கொண்டான். புறப்பட்டவுடன், அவள் சொன்னாள். “கோட்டைக் கதவு திறந்ததும் தலையைக் குனிந்து கொண்டு செல்லுங்கள். மன்னன் உடையைப் பார்த்து, அவர்தான் செல்லுகிறாரென்று காவலாளிகள் விட்டுவிடுவார்கள். பிரும்ம மாராயர் மாளிகை, நகரின் தெற்குப் புறத்திலிருக்கிறது. யாரைக் கேட்டாலும் சொல்லுவார்கள்.”

ஏதேதோ யோசனைகள் உள்ளத்தில் விளையாடியதால் பதிலேதும் சொல்லாமல், ‘சரி’ என்பதற்கு அறி குறியாகத் தலையை மட்டும் அசைத்துவிட்டு அரச குமாரியின் கட்டளைப்படியே கோட்டையின் பின்புறக் கதவு வழியாக வெளியே வந்து, துரிதமாக நகரத்தின் பல தெருக்களையும் தாண்டி பொழுது விடிந்த சில நாழி கைக்கெல்லாம் சோழப் படைத் தலைவரான பிரும்ம மாராயர் மாளிகைக்கு வந்து சேர்ந்தான் கரிகாலன். சோழ தூதரின் மாளிகை பெரிய மதிற்சுவர்களுடன் பெரிய கோட்டை மாதிரியே இருந்ததையும், மாளிகைக்குப் பலமான காவலும் செய்யப்பட்டிருப்பதையும் கரிகாலன் கவனித்தான். மாளிகைச் சுவருக்கு உட்புறத்தில் அளவுக்கு அதிகமான சோழ வீரர்கள் உலவுவதைப் பார்த்த கரிகாலன், பிரும்ம மாராயன் சதியில் ஈடுபட்டிருந்தாலும், சொந்தப் பாதுகாப்பையும் ஓரளவு கவனித்துக் கொண் டிருக்கிறான் என்பதையும் நிச்சயம் செய்துகொண்டான். பெரிய மதில்களுக்குப் பின்னாலிருந்த மாளிகையின் முன்புறத்திலேயே காவலாளியால் தடுக்கப்பட்ட கரிகாலன், தான் அவசியம் பிரும்ம மாராயரைக் காண வேண்டுமென்று இரைந்தான். அவன் இரைச்சலுக்குப் பயப்படாத காவலாளி, “சரி சரி; போ, படைத் தலைவரைப் பிற்பகல் வரையில் பார்க்க முடியாது” என்று திட்டமாக மறுத்துவிட்டான்.

எப்படியும் சோழநாட்டுப் படைத் தலைவரைப் பார்க்காமல் போவதில்லை என்று திடசித்தத்துடன் கரிகாலனும் வந்திருந்தபடியால், இருவருக்கும் வார்த்தை தடித்தது. கை கலக்கும் கட்டம் நெருங்கிய சமயத்தில், உள்ளே ஓர் அலறல் கேட்டது. அடுத்த விநாடி மாளிகைக் கதவுகள் பெரும் சப்தத்துடன் திறந்தன. இரண்டு வீரர்கள் ஒருவனைக் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தார்கள். கரிகாலனைக் கண்டதும் கட்டுண்டு வந்தவன், “அதோ, இருக்கிறான். அவன் என் நண்பன் தான். அவனை வேண்டுமானாலும் கேட்டுப்பாருங்கள்” என்று கதறினான். வீரர்களிடையே கட்டுண்டு நின்றவனை நோக்கிய கரிகாலன், திகைத்தே போனான். கடைசியாக சைவத் துறவி இந்த இடத்திலா சிக்கிக் கொண்டான் என்று கரிகாலன் திகைத்த அந்த விநாடியில், “அப்படியா கதை? சரி, அவனையும் பிடித்துக் கட்டிக் கொட்டடியில் அடையுங்கள். இருவரையும் சாட்டையால் செம்மையாகப் புடைத்து உண்மையைக் கக்க வையுங்கள்” என்று எழுந்தது ஒரு ராட்சதக் குரல். அந்தக் குரலுக்குத் தக்க தோற்றத் துடனும் யாரையும் கலங்க வைக்கும் பார்வையுடனும் ஒரு மனிதன் உள்ளேயிருந்து வெளியே வந்தான். உத்தரவை நிறைவேற்ற இரு வீரர்கள் உருவிய வாள்களுடனும் பிணைக் கயிறுகளுடனும் கரிகாலனை நோக்கி நெருங்கி வந்தார்கள்.

Previous articleMannan Magal Part 1 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here