Home Historical Novel Mannan Magal Part 1 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

100
0
Mannan Magal Ch 12 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 12 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 பிரும்ம மாராயன்

Mannan Magal Part 1 Ch 12 | Mannan Magal | TamilNovel.in

உருவிய வாள்களுடனும் பிணைக் கயிறுகளுடனும் தன்னை நெருங்கிய வீரர்களையும், தன்னைப் பிடித்துக் கொட்டடியிலடைக்கும்படி உத்தரவிட்ட ராட்சத உருவத்தையும் மாறிமாறிப் பார்த்த கரிகாலன் கண்களில் பயத்துக்குப் பதில் வியப்பே மிகுந்து நின்றது. அத்துடன் எதிரே இரண்டு வீரர்களுக்கிடையில் கட்டுண்டு, ‘அவன் என் நண்பன்தான். அவனை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்’ என்று கூவிவிட்டுத் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சைவத்துறவியைக் கண்டதும், அவன் வியப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. இவன் எப்படி இவர்களிடம் சிக்கிக்கொண்டான்? இவன் செங்கதிர் மாலையை அபகரித்தது ஒருவேளை பிரும்ம மாராய னுக்குத் தெரிந்திருக்குமோ!’ என்று கரிகாலன் தன்னைத் தானே கேட்டுக்கொண்டதுமன்றி, அதே செங்கதிர் மாலை அந்த நேரத்தில் தன் மடியிலிருப்பதைப் பிரும்ம மாராயன் உணர்ந்தால் என்ன ஆகும் என்பதைப்பற்றியும் யோசித்தான். என்ன ஆகும் என்பதில் அதிகச் சந்தேகமும் இல்லை கரிகாலனுக்கு. மாலை தன்னிடமிருப்பது தன்னைத் தோழன் என்று சைவத்துறவி குறிப்பிட்டதை ஊர்ஜிதப்படுத்தும் என்பதிலோ, அப்படி ஊர்ஜிதப் படுத்தும் பட்சத்தில் பிரும்ம மாராயன் சைவத்துறவியோடு தன்னையும் சேர்த்துக் கட்டி வைத்துத் தோலை உரித்து விடுவானென்பதிலோ சிறிதும் சந்தேகப்படாத கரிகாலன், ‘இந்நிலையில் இவர்களிடம் சச்சரவு வைத்துக் கொள்வது உசிதமல்ல’ என்ற முடிவுக்கு வந்தான். அப்படியே சச்சரவு செய்ய முற்பட்டு வாளை உருவினாலும், முடிவு என்ன வாகுமென்பதையும், சுற்றிலும் ஒருமுறை கண்ணைச் சுழல விட்ட பின் புரிந்துகொண்டான். தன்னை நெருங்கி வரும் இரண்டு வீரர்களைத் தான் சமாளித்தாலும், மதில் சுவருக்கும் மாளிகைக்கும் இடையேயுள்ள பிராந்தியத்தில் உலாவும் வீரர்களும், குதிரைகளைத் தேய்த்துவிட்டுக் கொண்டும், வேல்களுக்கு எண்ணெயிட்டுப் பளபளவெனத் துடைத்துக்கொண்டும் ஆங்காங்கு பல பணிகளைப் புரிந்துகொண்டிருந்த வீரர்களும் தன்னைச் சூழ்ந்துகொள்வார்களென்பதையும், குறைந்தபட்சம் நூறு வீரர்களையாவது ஒரேசமயத்தில் தான் சமாளிக்க வேண்டியிருக்குமென்பதையும் சந்தேகமறத் தெரிந்து கொண்ட கரிகாலன் அந்தச் சமயத்தில் சண்டை பயனற்றது என்ற முடிவுக்கு வந்தான்.

உள்ளுக்குளேயே ஏற்பட்ட இத்தகைய நினைப்புக் களாலும் முடிவினாலும், நிதானம் இழக்காமலும் அலட்சியமான பார்வையுடனும் வாயிற்படியில் நின்ற ராட்சத உருவத்தை ஏறெடுத்து நோக்கிய கரிகாலன், “என்னைப் பிடித்துக் கொட்டடியில் அடைக்கும்படி உத்தரவிட உனக்கு என்ன துணிச்சல்?” என்று சற்று அதிகாரத்துட னேயே கேட்டான்.

அவன் வீரர்களைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் நின்ற தோரணையையும், தன்னைப் பார்த்துச் சொன்ன வார்த்தைகளிலிருந்த அதிகாரத் தொனியையும் கண்ட ராட்சத உருவத்தின் முகத்திலும் ஆச்சரியத்தின் சாயை சற்றே படர்ந்தது. அந்த மனிதனுடைய விசாலமான முகத்திலிருந்த கரிய புருவங்கள் அந்த ஆச்சரியத்துக்கு அறிகுறியாக லேசாக மேல்நோக்கியும் எழுந்தன. அவன் கேள்விக்குச் சொன்ன பதிலில் இகழ்ச்சியும் ஓரளவு கலந்து நின்றது.

“ஏன், தாங்கள் இந்த ஊர் மகாராஜாவோ? தங்களைச் சிறை செய்ய மிகுந்த துணிச்சல் வேண்டுமாக்கும்!” என்றான் அந்த ராட்சதப் பிரகிருதி.

அத்தனை இகழ்ச்சியுடன் தன்னைப் பார்த்துப் பேசிய அந்த மனிதனைக் கரிகாலன் மீண்டும் அளவெடுத்தான். அந்த மனிதனுடைய சரீரம் பூதாகாரமாக இருந்தாலும், நல்ல சிவப்புடன் பளபளப்பாகத் தளதளவென்றிருந்தது. இடுப்பில் நல்ல பட்டாடையைப் பஞ்சகச்சமாகக் கட்டியிருந்தாலும், நல்ல தடிப்பான பூணூல் ஒன்று அவன் மார்புக்குக் குறுக்கே பாய்ந்து சென்றதாலும், அவன் கழுத்தில் தங்கத்தில் பதிக்கப்பட்ட பெரிய ருத்திராட்சமொன்று தங்கச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுத் துலங்கியதாலும், அவன் ஓர் அந்தணன் அல்லது க்ஷத்திரியனாயிருக்க வேண்டுமென்று கரிகாலன் நினைத்தான். அந்தப் பஞ்ச கச்சப் பட்டு வேஷ்டியில் வயிற்றுக்குக் குறுக்கே செருகப்பட்டிருந்தது ஒரு வாள். மேலே அவன் அணிந்திருந்த பட்டுச் சரிகை அங்கவஸ்திரம் உடலின் பெரும்பாகத்தை மறைக்காததால் அவன் உடலெங்குமிருந்த காயத் தழும்புகளைக் கவனித்த கரிகாலன், அந்த மனிதன் பல போர்க்களங்களைக் கண்ட பெரிய மாவீரன் என்று தீர்மானித்துக் கொண்டான். வாயிற்படியை அடைத்து நின்ற அந்த மனிதன், நெற்றியில் பெரும் விபூதிப் பட்டையுடனும் குங்குமத்துடனும் சிவந்த கண்களுடனும் அசல் ருத்திரமூர்த்தியாகவே காட்சியளித்தான். அவன் கண்கள் பார்த்த பார்வையிலிருந்து, அவன் பயமென்பதை வாழ்க்கையில் அறியாதவன் என்பதைக் கரிகாலன் சந்தேகமறத் தெரிந்துகொண்டதால், அத்தகைய பேர்வழியோடு அதிக விளையாட்டை வைத்துக்கொள்ளக் கூடாதென்ற நினைப்பு ஒரு பக்கம் ஏற்பட்டாலும், அந்த மனிதன் கேட்ட கேள்வியை முன்னிட்டுத் தானும் இடைவெட்டாகவே பேசத் தொடங்கி, “தாங்கள் இந்த ஊர் மகா ராஜாவைத் தவிர, வேறு யாராயிருந்தாலும் சிறை செய்து விடுவீர்கள் போலிருக்கிறது?” என்று வினவினான்.

இந்தப் பதிலைக் கேட்ட அந்த மனிதன் முகத்தில், முதலில் ஏற்பட்ட ஆச்சரியம் பதின் மடங்காகவே, “யாரப்பா நீ? காலையில் பிராணனை விடுவதற்காகவே இங்கு வந்திருக்கிறாயா? நான் யாரென்பது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டான்.

“நீ யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை, நான் சந்திக்க வந்தது சோழநாட்டுப் படைத்தலைவரை. இஷ்ட மிருந்தால் அவரிடம் அழைத்துப்போ. இல்லாவிட்டால் என்னைத் தடை செய்ததன் பலனைப் பின்னால் அநு பவிக்க நேரிடும்” என்றான் கரிகாலன், அதிகாரம் சிறிதும் தணியாத குரலில்.

“பலனை அனுபவிக்க நேரிடுமா? ஏன் சோழ நாட்டுப் படைத் தலைவருக்கும் உனக்கும் நெருங்கிய உறவோ?”

“ஆமாம்.”

“நீண்ட நாள் உறவோ?”

“இல்லை. சமீபகால உறவுதான்.”

“சமீப காலமென்றால்?”

“சில நாழிகை நேர உறவு.”
“உறவு ஏற்பட்டு எத்தனை நாழிகைகள் இருக்கும்?”

இந்தப் பதிலைக் கேட்ட அந்த மனிதன் முகத்தில் கொடுமை மறைந்தது. இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. கரிகாலன் மேலும் என்னென்ன சொல்லப் போகிறான் என்பதை அறியும் ஆசையால், “உறவு எத்தன்மையது? அவர் நீண்ட நாள் பந்துவோ?” என்று விசாரித்தான்.

“இல்லை குறுகிய கால நண்பர்.”

“காலம் ரொம்பக் குறுகலோ?”

“அதுதான் எட்டு நாழிகை இருக்குமென்று முன்னமே சொன்னேனே.”

“நண்பர் தங்களைப் பார்த்திருக்கிறாரா?”

“பார்த்ததில்லை.”

“உங்களைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா?”

“அதுவும் இல்லை.”

“அப்படியானால்?”

“நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.”

“நீங்கள் அவரை நண்பராகப் பாவித்துவிட்டீர்களாக்கும்?”

“ஆமாம்.”

“என்ன ஒருதலைப்பட்சமான நட்பு!”

“என்னை அவர் பார்த்தால் இருதலைப் பட்சமாகி விடும்.”

இதைக் கேட்ட அந்த மனிதன் இடியென நகைத்தான். அடுத்த விநாடி நகைப்பு இருந்த இடத்தில் கோபம் குடி கொண்டது. “அட அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? இரு. உனக்கு சரியான பாடம் கற்பிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு அதுவரை தங்கள் சம்பாஷணையின் காரணமாகக் கட்டளையை நிறைவேற்றாமல் நின்ற வீரர்களை நோக்கி, “பிடியுங்கள் இந்தப் போக்கிரியை” என்று, இடியையொத்த குரலில் கூவினான்.

“என்னைப் பிடித்துக் கட்டு, சிறையில் வேண்டுமானாலும் அடை. ஆனால் எனது நண்பர் பிரும்ம மாராயர் உன்னை ஒருக்காலும் சும்மா விடமாட்டார். உன்னுடைய இந்தச் சதைப் பிண்டத்தை அறுத்து நூறு கழுகுகளுக்காவது இரையாகப் போடுவார். என்னைச் சிறை செய்து விட்டு அவரிடம் சென்று பச்சைக்கல் மோதிரத்தைப் பற்றி நினைப்பூட்டு; பிறகு தெரியும் உன் கதி” என்று கரிகாலன் இரைந்தான்.

எதிரே நின்ற மனிதனுடைய போக்கில், கரிகாலன் சொற்கள் பிரமிக்கத்தக்க மாறுதலை உண்டாக்கின. கரிகாலனை நோக்கிய அவன் கண்களில், பிரமிப்பும் சந் தேகமும் கலந்து நின்றன. முந்திய விநாடி இட்ட உத்தரவை மாற்றத் துடித்த அவன் உதடுகள், “டேய் சற்றுப் பொறுங்கள்,” என்று வார்த்தைகளை உதிர்த்து, கரிகாலனை அணுகி வந்த வீரர்களைத் தடையும் செய்தன. அந்தப் பிரம்ம ராட்சதன் முகபாவத்தில் ஏற்பட்ட மாறுதல் மற்றொருவன் முகத்திலும் ஏற்பட்டது. பச்சைக்கல் மோதிரத்தைப் பற்றிப் பிரஸ்தாபித்த சொற்கள், சைவத்துறவியின் காதிலும் விழுந்ததால், அவனும் தன் கண்களை உயர்த்திக் கரிகாலனையும், வாயிற்படியில் நின்ற ராட்சதப் பிரகிருதியையும் நோக்கினான். பச்கைக்கல் மோதிரத்தைப்பற்றிக் கேட்ட மாத்திரத்தில் வாயிற்படியில் நின்ற மனிதன் முகம் மாறுபட்டதைக் கண்ட சைவத்துறவியின் மனத்தில் பல எண்ணங்கள் எழுந்து பிரவகிக்கத் தொடங்கின. அப்படியானர்ல் அவனுக்குக் கரிகாலன் பிறப்பு ரகசியம் தெரியுமா? தெரிந்தால் விவகாரம் விபரீதமாக முடியுமே. இந்த மனிதன் பச்சைக்கல் மோதிரத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டானோ? பார்த்திராவிட்டால் அதன் பெயரைக் கேட்டதும் ஏன் மலைக்கிறான்? பார்த்திருநதால் கரிகாலனை இன்னானென்று ஏன் இவன் புரிந்து கொள்ளவில்லை? கரிகாலனும் இவனை யார் என்று புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையே. அப்படியானால் இவனை ஏன் பார்க்க வந்தான்? கும்பகோணம் மடாலயத்தில் தஞ்சைத்துறவி இவனை பார்க்கச் சொன்னது அரையன் இராஜராஜனைத்தானே? அப்படியிருக்க அவன் பிரும்ம மாராயனிடம் எதற்காக வந்தான்? நேற்று இரவு வரை நம்முடனிருந்தவனுக்கு இந்த ஊர் நிலவரமும் பிரும்ம மாராயன் இருப்பிடமும் எப்படித் தெரியவந்தன? இவனை வீரர்கள் துரத்திச் சென்றார்களே அவர்களிடமிருந்து எப்படித் தப்பினான்? தவிர உடையும் ராஜ உடையாகத் தெரிகிறதே. இதை இவனுக்கு யார் கொடுத்தார்கள்?” என்று பலவாறாக யோசித்து, ஏதும் புரியாமல் துடித்த சைவசத்துறவி அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள இஷ்டப்பட்டவனாய், “அப்பா கரிகாலா, நாம் பார்க்க வந்த பிரும்ம மாராயர் உன் எதிரில் நிற்பவர் தான். அவரிடம் உன் பச்சைக்கல் மோதிரத்தோடு உன் னிடமுள்ள செங்கதிர் மாலையையும் கொடுத்துவிடு” என்று கூவினான்.

அயோக்கியத்தனமும் பித்தலாட்டமும் கலந்து நின்ற சைவத்துறவியின் சொற்களைக் கேட்டுக் கரிகாலன் கண நேரம் சொல்லவொண்ணா பிரமிப்பை அடைந்தான். பிறகு அவன் கண்கள் ஒரு முறை எதிரே பிரம்மாண்டமாக நின்ற சோழநாட்டுப் படைத்தலைவனான பிரும்ம மாராயனை ஏற இறங்க நோக்கின. ஒரு முறை சைவத் துறவியை ஊடுருவிப் பார்த்தன. மறுபடியும் பிரும்ம மாராயனை நோக்கிய கரிகாலன் பார்வையில் மிதமிஞ்சிய மதிப்பு நிறைந்து நின்றது.

“சோழநாட்டுப் படைத்தலைவர் இன்னாரென்று அறியாமல் பலவிதமாகப் பேசிவிட்டேன், மன்னிக்க வேண்டும்” என்று தலைவணங்கிக் கூறிய கரிகாலன், துறவியின் பக்கமாகக் கண்களைச் செலுத்தி, “இவன் யார் தெரியவில்லையே! என் பெயரை எப்படியோ தெரிந்து வைத்திருக்கிறான். ஏதோ மாலையைப் பற்றிப் பேசுகிறான்; எதுவும் புரியவில்லையே” என்று வினவினான்.

“இவன் சேரநாட்டு ஒற்றன் ஜெயவர்மன். சைவத் துறவியாக வேஷம் போட்டுச் சோழப் பேரரசர் பொக் கிஷத்திலிருந்து செங்கதிர் மாலையை களவாடி விட்டான்” என்றான் பிரும்ம மாராயன்.

“செங்கதிர் மாலையா” என்று ஏதும் அறியாதது போல் கேட்டான் கரிகாலன்.

இந்தக் கேள்வி சைவத்துறவியின் கோபத்தைக் கிளறி விடவே, “அட அயோக்கியப்பயலே! என் மாலையை வைத்துக் கொண்டிருப்பதுமல்லாமல் ஏதுமறியாதது போல் பாசாங்கு செய்கிறாயா?” என்று கூவினான்.

பிரும்ம மாராயன் தன்னைச் சோதனை செய்ய முற் பட்டால் விவகாரம் எப்படி முடியுமென்பதைக் கரிகாலன் அறிந்தேயிருந்ததால் சைவத்துறவியின் கூச்சலால் அவனுக்கு ஓரளவு அச்சம் ஏற்பட்டாலும், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், “படைத்தலைவரே! நானே உம்மைத் தேடி வந்திருக்கிறேன். அதுவும் வெறுங்கையுடன் வரவில்லை காணிக்கையுடன் வந்திருக்கிறேன். முதலில் இதைப் பிடியுங்கள்” என்று கூறிவிட்டுத் தனது கச்சையிலிருந்து, அரசகுமாரி அளித்த பச்சைக்கல் மோதிரத்தை எடுத்துக் கொடுத்தான்.

பிரும்ம மாராயனுக்கு அதுவரை கரிகாலன் விஷயத்தில் சந்தேகம் ஏதாவதிருந்தால் அந்தப் பச்சைக்கல் மோதிரம், அதை அடியோடு பறக்கடித்துவிட்டது. அந்த மோதிரத்தைக் கையில் பயபக்தியோடு வாங்கிக் கொண்ட படைத்தலைவன், “கரிகாலரே! இவனால் அரை விநாடி உங்கள் மீதுகூடச் சந்தேகம் விழுந்தது எனக்கு. மன்னிக்க வேண்டும். பேச வேண்டியதை உள்ளே போய்ப் பேசுவோம்; வாருங்கள்!” என்று கூறிவிட்டு, சைவத்துறவியைப் பிடித்து நின்ற வீரர்களை நோக்கி, “இவனைக் கொட்டடியில் அடைத்து வையுங்கள். இன்றிரவு ஊரடங்கியதும் கசையடிக்காரனைச் சித்தமாயிருக்கச் சொல்லுங்கள். நான் வந்து இவன் தோலை உரித்து உண்மையைக் கக்க வைக்கிறேன்” என்று உத்தரவிட்டு மாளிகைக்குள் நுழைந்தான்.
மேற்கொண்டு எதுவும் பேசாமல், பிரும்ம மாராயனைப் பின் தொடர்ந்த கரிகாலன், அந்த மாளிகையின் பலத்த சுவர்களையும் பெருந்தூண்களையும் பார்த்துச் சாளுக்கியர்களின் கட்டட நிர்மாணத் திறமையை வியந்து கொண்டே சென்றான். இரண்டாவது உப்பரிகையிலிருந்த விசாலமான ஓர் அறைக்கு வந்ததும், கரிகாலனை நோக்கித் திடீரெனத் திரும்பிய பிரும்ம மாராயன், “நிரஞ்சனாதேவி என்ன சொல்லியனுப்பினார்கள்? அதுவும் ராஜராஜ நரேந்திரன் உடையில் எதற்காக அனுப்பினார்கள்? அவர்களுக்கென்ன புத்தி பிசகிவிட்டதா?” என்று கேட்டான்.

“படைத்தலைவரே! அரசகுமாரி எதையும் யோசித்தே செய்கிறார்கள். விமலாதித்தன் மகளின் அறிவு எத்தகைய தென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். வருஷக்கணக்கில், கூட இருந்து அவர்களை நன்றாக அறிந்தவர்களுக்குத்தான் அவர்கள் செய்கை புலப்படும்” என்று கரிகாலன், தான் அரசகுமாரியிடம் நீண்டநாள் பழகியவனைப்போல் பேச ஆரம்பித்தான்.

“அப்படியா!” என்று இகழ்ச்சியாகத் தலையை அசைத்த பிரும்ம மாராயன், “அத்தனை யோசனையுள்ள அரசகுமாரி உம்மை இந்தச் சமயத்தில் என்னிடம் அனுப்பலாமா? அதுவும் பச்சைக்கல் மோதிரத்தைக் கொடுத்து அனுப்பலாமா?” என்று வினவினான்.

அனுப்பினால் என்ன?” என்று கேட்டான் கரிகாலன்.

“அவர்களிடம் போய் வந்துகொண்டிருந்த அரிஞ்சயன், ஏன் அவர்களிடம் மீண்டும் தலைகாட்டவில்லை?” என்று பதில் கேள்வியொன்றை வீசினான் பிரும்ம மாராயன்.

“காரணம் என்ன? அதைத்தான் முதலில் அரசகுமாரி கேட்கச் சொன்னார்கள்” என்று கரிகாலன் பதிலிறுத்தான்.

காரணத்தைச் சொன்னான் பிரும்ம மாராயன்: அதைக் கேட்ட கரிகாலன் தலையில் இடியே இறங்கிய மாதிரி இருந்தது!

Previous articleMannan Magal Part 1 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here