Home Historical Novel Mannan Magal Part 1 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

130
0
Mannan Magal Ch 13 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 13 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 வேங்கி நாட்டுக் கோதண்டம்

Mannan Magal Part 1 Ch 13 | Mannan Magal | TamilNovel.in

சோழ நாட்டு மாபெரும் படைத்தலைவர்களில் ஒருவனும், சாளுக்கியர்களின் சரித்திர ஏடுகளிலே ராஜ ராஜ பிரும்ம மகாராஜன் என்று மதிப்புடன் அழைக்கப் பட்டவனும், இறுதியில் வேங்கி நாட்டு அரியணையில் ராஜராஜ நரேந்திரனை இருத்துவதற்காகப் போர்க்களத்தில் தன் உயிரையே துறந்தவனும், அந்தணனுமான பிரும்ம மாராயன், அன்று காலை நேரத்திலே, வேங்கி நாட்டு மாளிகையிலே, அரிஞ்சயன் அரசகுமாரியிடம் தலை காட்டாத காரணத்தைச் சொன்னதும், எதற்கும் கலங்காத கரிகாலனும் ஓரளவு கலங்கத்தான் செய்தான். “அரிஞ்சயன் சாளுக்கியர்கள் சிறையில் கிடக்கிறான்!” என்று நான்கே வார்த்தைகளில், உள்ள நிலையை உடைத்த பிரும்ம மாராயன் முகத்திலும் கவலைக்குறி பெரிதாகப் படர்ந்தே நின்றது. அந்த நேரத்தில் பிரும்ம மாராயனுடைய பெரிய உருவத்தையும் விசாலமான கவலை தோய்ந்த கண் களையும் கண்ட கரிகாலன், பெரிய பெரிய காரியங்களைச் சாதிக்கவல்லவர்கள் கூடச் சின்னஞ் சிறு காரியங்கள் தங்களை மீறி நடந்துவிடும்போது, எத்தனை தூரம் நிலை குலைந்து விடுகிறார்கள் என்பதைக் கவனித்தான். போர்க் களத்தில் பெரும் வேல்களைத் தாங்கி எறிந்து, எத்தனை தூரம் வேண்டுமானாலும் குறிவைத்து எதிரிகளை மாய்க்க வல்ல வல்லமை உடையவனென்றும் கலியுகத் துரோண னென்றும் சோழர்களால் போற்றப் பெற்றவனும், பெரும் படைகளை எதிர்த்து நிற்கும் காலங்களில் அச்சமென்பதை அறவே அறியாதவனுமான பிரும்ம மாராயன், அரிஞ்சயன் சிறைப்பட்டதால் ஓரளவு அச்சமும் அடைந்திருக்கிறா னென்பதை அவன் முகபாவத்திலிருந்தே அறிந்து கொண்ட கரிகாலனுக்கு, அவன் அச்சத்துக்குக் காரணமும் புரிந்துதானிருந்தது.

“விஷயம் சிறியதுதான். ஆனால் விளைவு எத்தனை பெரிது!” என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான் கரிகாலன். அரிஞ்சயன் சிறைப்பட்டிருக்கிறானென்றால் அரசகுமாரியின் சதித் திட்டத்தைப் பற்றிய திட்டமான தகவல் ஏதாவது ஜெயசிம்ம சாளுக்கியனுக்கு எட்டித் தானிருக்க வேண்டுமென்பதிலோ, அப்படி எட்டியிருக்கும் பட்சத்தில் பூராத் தகவல்களையும் கக்கவைக்க வேங்கி நாட்டுச் சிறையில் அரிஞ்சயனுக்குச் சிசுருஷை நடக்கு மென்பதிலோ, கரிகாலனுக்குச் சந்தேகம் சிறிதுமில்லை. அப்படிப் பூராத் தகவல் கிடைக்கும் பட்சத்தில் தகவல் எத்தன்மையதாயிருக்கும்? அரசகுமாரிக்கு உதவும் ஜெயசிம்ம சாளுக்கியன் ஆதிக்கத்தை வேங்கி நாட்டி லிருந்து நீக்கவும் என்ன ஏற்பாடுகளைச் சோழ நாட்டுப் படைத்தலைவர் செய்திருப்பார்?’ என்று திரும்பத் திரும்ப யோசித்த கரிகாலன், சரியான விடையேதும் கிடைக்காதவனாய் பிரும்ம மாராயரை நோக்கி, “நிலைமை சங்கட மானதுதான் படைத்தலைவரே!” என்றான்.

பிரும்ம ராட்தன் போல் எதிரே நின்ற பிரும்ம மாராயனும், தன் கண்களை ஒரு விநாடி கரிகாலன் மீது பதியவிட்டு, “இப்பொழுது புரிகிறதா உங்களுக்கு அரச குமாரியின் செய்கை எத்தனை அசந்தர்ப்பமானது என்று!” என வினவினான்.

“புரிகிறது, படைத்தலைவரே! ஆனால் அரிஞ்சயன் சிறைப்பட்ட விஷயம் அரசகுமாரிக்குத் தெரியாதல்லவா?” என்றான் கரிகாலன்.

“ஜெயசிம்ம சாளுக்கியன் ஆதிக்கம் வேங்கி நாட்டின் மீது இருக்கும்போது எத்தகைய விபரீதத்தையும் எதிர் பார்க்க வேண்டியது அரசகுமாரியின் கடமையல்லவா? கரிகாலரே! சாதாரண நிலையிலுள்ள அரசகுமாரிகளுக்கே ஆபத்துக்கள் பல உண்டு. ஆகவே சதியில் ஈடுபடும் அரச குமாரிகளின் நிலை என்னவென்பதைப்பற்றி எதுவும் சொல்லத் தேவையில்லை. ஏற்கெனவே அரசகுமாரியின் செய்கை ஒவ்வொன்றையும் ஜெயசிம்மனின் ஒற்றர்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். போதாக்குறைக்கு உமக்கு வேறு அரசகோலம் போட்டு இங்கு என்னிடம் அனுப்பியிருக்கிறார்கள் அரசகுமாரி” என்று வெறுப்பும் கோபமும் கலந்த சொற்களைக் கொட்டிய பிரும்ம மாராயன், கோபத்தைச் சாந்தப்படுத்திக்கொள்ள அறையில் சற்று உலாவவும் செய்தான்.

கோபம் மிகுந்த பிரும்ம மாராயன் வார்த்தைகளில் கடைசிப்பகுதி, கரிகாலன் உதடுகளில் சிறிது புன்னகையை வரவழைத்தது. ‘போதாக்குறைக்கு உமக்கு வேறு அரச கோலம் போட்டு இங்கு என்னிடம் அனுப்பியிருக்கிறார்கள்’ என்ற பிரும்ம மாராயன் சொற்களை எண்ணிப் பார்த்த கரிகாலன், “ஏன் பிரும்ம மாராயரே! இந்தக் கோலத்துக்கு என்ன? அரசகோலம் எனக்குப் பொருத்தமாயில்லையா?” என்று வினவினான்.

பிரும்ம மாராயன் ராஜ தோரணையில் நின்ற கரிகால னையும், அவன் உடையையும் நன்றாக ஆராய்ந்தான். ராஜ ராஜ நரேந்திரன் உடை அவனுக்குச் சரியாகப் பொருந்தி யிருப்பதையும், அந்த உடை ஏதோ அவனுக்காகவே பிரத்தி யேகமாகத் தைக்கப்பட்டது போலிருப்பதையும் கண்டான் பிரும்ம மாராயன். கரிகாலன் உயரம், உடை முதலிய வற்றை ஆராய்ந்த பிரும்ம மாராயன் கண்கள், கடைசியாக அவன் முகத்திலும் நிலைத்தபோது, ஏதோ, சந்தேகச் சாயை அவன் கண்களில் உதயமானது போலத் தோன்றவே, “இன்னும் தங்களுக்கு என் மீதுள்ள சந்தேகம் விடவில்லை போலிருக்கிறது?” என்று, இன்னொரு கேள்வியை வீசினான் கரிகாலன்.

“சந்தேகம் ஏற்படத்தான் செய்தது. ஆனால் தாங்கள் அரசகுமாரியின் தூதுவரா அல்லவா என்பதைப் பற்றிய தல்ல” என்றான் பிரும்ம மாராயன்.

“வேறு எதைப்பற்றி?”

“எதைப் பற்றியதாயிருந்தாலும், அதைப்பற்றி இப்பொழுது பேசவேண்டிய அவசியமில்லை.”

“பின் எப்பொழுது பேசலாம்?”

“எப்பொழுது பேசலாமென்று எனக்குத் தோன்றுகிறதோ அப்பொழுது.”

“தங்களுக்கு எப்பொழுது தோன்றுமோ?”

“நிச்சயமாகச் சொல்ல முடியாது. உங்களைப் பார்த்த வுடன் வேறு சில நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன. பல வருடங்களுக்கு முன்பு நடந்த சில அரசியல் நிகழ்ச்சிகள். ஆனால் அவை பழங்கதை அவை எதற்கு இப்பொழுது?”

பிரும்ம மாராயன் பேசிய பேச்சிலிருந்தும் அவன் முகத்தில் பிரதிபலித்த உணர்ச்சிகளிலிருந்தும் ஏதோ பெரிய ரகசியத்தை அவன் மறைக்கிறான் என்பதைக் கரிகாலன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். அந்த ரகசியத்தில் தன் பிறப்பு ரகசியமும் ஒருவேளை புதைந்து கிடக்கலாமோ என்ற சந்தேகமும் உண்டாகவே, பிரும்ம மாராயனை வற்புறுத்திக் கேட்கவும் தொடங்கினான்.

“படைத்தலைவரே! உம்மை வற்புறுத்தி எதையும் கேட்க எனக்கு இஷ்டமில்லை…” என்று மெள்ளத் துவங்கினான் கரிகாலன்.

“அப்படியானால் கேட்காமல் இருந்து விடுங்களேன்.”

அப்படி இருக்க ஆசை இடங் கொடுக்கவில்லை.”

“எதைப் பற்றிய ஆசை?”

“தாங்கள் குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி அறிய எனக்கு உண்டாகியிருக்கும் ஆசை.”

“அதைப்பற்றி இப்பொழுதென்ன? ஏதோ நடந்து போன கதை.”

“நடந்துபோன கதைகளில் எத்தனை ருசி இருக்கிறது! இல்லையேல் சரித்திரமே ருசிக்காதே.”

“உண்மை கரிகாலரே! ஆனால் நடந்துபோன அந்தக் கதைக்கும், நம்மை எதிர்நோக்கியிருக்கும் பெரிய சிக்கலுக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை.”

“சம்பந்தமில்லாவிட்டாலும், எனக்கு லேசாக அதைப் பற்றித் தெரிவித்தால் தானென்ன?”

“தெரிவிக்க எனக்கு உரிமையில்லை. தவிர அதைத் தெரிவிக்க இப்பொழுது அவசியமுமில்லை. உங்களைக் கண்டதும் யார் நினைவோ வந்தது எனக்கு!”

இந்தப் பதிலைக் கேட்ட கரிகாலன் கண்களில் நம்பிக்கை ஒளி தாண்டவமாடியது. “யார் நினைவு? சொல்லுங்கள் படைத்தலைவரே, சொல்லுங்கள்!” என்று கெஞ்சினான் கரிகாலன்.

பிரும்ம மாராயன் அந்தக் கெஞ்சலுக்குச் சிறிதும் மசியாமல் பேச்சை மாற்றத் தொடங்கி, “கரிகாலரே! இந்த உடை உமக்குப் பொருத்தமாயிருக்கிறதா இல்லையா என்று கேட்டீர்களல்லவா?” என்று வினவினான்.

பிரும்ம மாராயன் முகத்தில் சில நிமிடங்களே உலாவிய கருணையும் கனிவும் மறைந்து, மீண்டும் முகம் கல்லாகிவிட்டதையும், அவனிடமிருந்து மேற்கொண்டு தகவல் ஏதும் வராதென்பதையும் தீர்மானித்துக் கொண்ட கரிகாலன், சோகம் கலந்த பெருமூச்சொன்றை விட்டு அவர் கேள்வியின் போக்கிலேயே சம்பாஷைைணயைத் தொடர்ந்து, “ஆமாம் கேட்டேன்” என்றான்.

“உடை பொருத்தமாகத்தானிருக்கிறது. ஆனால், இதைத் தொடர்ந்து நீர் அணிந்து கொண்டால் வேறொன்றும் பொருத்தமாயிருக்கும்” என்றான் பிரும்ம மாராயன்.

“எதுவோ?”

“வேங்கி நாட்டுப் பிணைக்கயிறு.”

“என்னைப் பிடித்துக் கட்டவா?”

“பிடித்துக் கட்டினாலும் உடலுக்குப் பொருத்தமா யிருக்கும். ஆனால், உங்கள் விஷயத்தில் ஜெயசிம்ம சாளுக்கியன் வேறு விதமாக உபயோகிப்பான்.”

“எப்படிப் படைத்தலைவரே?”

“உமது கழுத்துக்கு உபயோகிப்பான். வேங்கி நாட்டில் கொலை பலவிதமாக நடக்கிறது. பிணைக்கயிற்றைக் கழுத்தில் சுற்றி மனிதனை மரத்தில் தொங்கவிடுவது ஒரு முறை. அந்த மாதிரிப் பிணங்கள் சாலையில் ஊசலாடுவது வேங்கி நாட்டில் சர்வ சகஜம்.”

“சாலையில் ஊசலாட விடுவானேன்? கொட்டடி இல்லையா?”

“இருக்கிறது. ஆனால், ஜெயசிம்ம சாளுக்கியன் மக்களை எச்சரிக்க இந்த வைபவங்களைச் சாலையிலேயே நடத்துகிறான். சதியில் யார் இறங்கினாலும் கதி என்ன வென்பதை வலியுறுத்தவே இது நடக்கிறது.”

இதைக் கேட்ட கரிகாலன் மனம், வேங்கி நாட்டுக் கொட்டடியிலிருக்கும் அரிஞ்சயனை நாடியது. ஜெய சிம்மன் அரிஞ்சயனை அச்சுறுத்தத் தூக்குக் கயிற்றைக் காட்டும் பட்சத்தில் அவன் உள்ளதை உளறிவிட்டால் என்ன செய்வது என்ற நினைப்பாலும் அப்படி உளறும் பட்சத்தில் அரசகுமாரியின் கதியாதாகுமோ என்ற நினைப்பாலும் கவலை மீறிவிட்டவனாய், “அரிஞ்சயனையும் தூக்கில் மாட்டிவிடுவார்களோ?” என்று பிரும்ம மாராயனைக் கேட்டான்.

“கடைசியில் அந்தச் சிட்சைதான். ஆனால் முதலில் தூக்கில் மாட்டமாட்டார்கள். அதற்குப் பூர்வாங்கமாகப் பல சிசுருஷைகள் உண்டு.”

“என்னென்ன சிசுருஷைகளோ?”

“முதலில் கிட்டி கட்டி அடிப்பார்கள்.”

“உம்.”

“பிறகு மணிக்கயிறுகளை நரம்புகளில் கட்டி அழுத்து வார்கள்.”

“அதற்குப் பிறகு?”

“வேங்கி நாட்டுக் கோதண்டம் இருக்கவே இருக்கிறது.”

‘அதென்ன வேங்கி நாட்டுக் கோதண்டம்?”

“வில்லைப் போல் வளைந்த இருப்புச் சலாகை யொன்று பெருந்தூண்களுக்கிடையே கட்டப்பட்டிருக்கும். அதன் இரு முனைகளிலும் சிறைப்பட்டவன் கைகள் உயரத் தூக்கிக் கயிறுகளால் பிணைக்கப்பட்டிருக்கும். அந்நிலையில் மனிதன் மேலேயிருந்து தொங்குவான். “பிறகு?”

“அவன் கால்களிலிரண்டிலும் பெரிய கயிறுகள் கட்டப்பட்டு மல்லர்களால் இருபுறமும் இழுக்கப்படும்.” “கால்கள் பிய்ந்து போகுமே.”

“பிய்ந்துதான் போகும். அதுவும் ஒரே அடியாகப் பிய்க்கமாட்டார்கள்; சிறிது சிறிதாகக் கயிறு இழுக்கப்படும். ஒவ்வோர் இழுப்பும் கால் நரம்புகளுக்கு மரண வலி கொடுப்பதோடு, இடுப்புப் பக்கத்தில் சுரீல் சுரீலென்று கத்தியைப் பாய்ச்சுவது போன்ற சொல்லவொண்ணா இம்சையையும் அளிக்கும். இந்தக் கோதண்டத்தில் அகப்படும் எவனும், இதுவரை உண்மையைச் சொல்லத் தவறிய தில்லை. அரிஞ்சயன் மட்டும் எப்படித் தப்புவான்?”

பிரும்ம மாராயன் பதில்களைக் கேட்ட கரிகாலன், வேங்கி நாட்டுச் சிறைக் கொடுமைகளைக் கேட்டு வெறுப்பு மேலிட்டவனாய், “சாளுக்கியர்கள் என்ன ராட்சதர்களா? மனிதர்களா?” என்று சற்று உரக்கவே சொன்னான். அத்துடன் பிரும்ம மாராயனையும் நோக்கி, “தங்களுக்கெப்படி இத்தகவல்கள் தெரியும்? வேங்கி நாட்டுக் கோதண்டம் தெரியுமா? பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டான்.

“பார்த்திருக்கிறது மட்டுமா? ஒன்று நானும் செய்து வைத்திருக்கிறேன்!” என்றான் பிரும்ம மாராயன்.

கரிகாலன் முகத்தில் வியப்பும் வெறுப்பும் கலந்த சாயை பெரிதாகப் படர்ந்தது. ‘இவன் அந்தணனா, அல்லது அரக்கனா?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான். பிரும்ம மாராயன் அடுத்தபடியாகச் சொன்ன வார்த்தைகள் அவன் வெறுப்பை அதிகப் படுத்தின. “கோதண்டம் இந்த மாளிகையிலேயே இருக்கிறது. அதுவும் பாதாள அறையில் அமைத்திருக்கிறேன். அதில் மாட்டப்படும் மனிதன், என்ன கத்தினாலும் வெளி யுலகத்துக்குச் சிறிதும் கேட்காது. இன்றிரவு வேண்டு மானால் நீங்கள் பார்க்கலாம்” என்றான் சோழ நாட்டுப் படைத்தலைவன்.

“ஏன் இன்றிரவு அதற்கு வேலை இருக்கிறதா?” என்று கரிகாலன் வினவினான்.

“இருக்கிறது. இன்று உம்மைக்கூட நண்பன் என்று சொன்னானே சேர நாட்டு ஒற்றன், அவனை அதில் மாட்ட உத்தேசித்திருக்கிறேன்.”

“அவனுக்குக் கசையடி கொடுக்கப் போவதாகச் சொன்னீர்களே!”

“முதலில் கசையடிதான். அதற்கு மசியவில்லை யென்றால்தான் வேங்கி நாட்டுக் கோதண்டம்” என்றான் பிரும்ம மாராயன். அடுத்தபடி ஏதோ கேட்க வாயெடுத்த கரிகாலனை, பிரும்ம மாராயன் மேற்கொண்டு பேச விடாமல், “கரிகாலரே, நீங்கள் நீராடிவிட்டு உணவருந்தி இளைப்பாருங்கள். நாம் மீண்டும் இன்றிரவு மீதி விஷயங்களைப் பேசுவோம். இது என் சொந்த அறை. இங்கேயே நீங்கள் தங்கலாம். என்னைக் கவனிக்கும் வேலையாளே உங்களுக்குச் சகல வசதிகளையும் செய்து கொடுப்பான்” என்று கூறிவிட்டு, “டேய், யாரங்கே?” என்று கூவினான். அடுத்த விநாடி, அறையில் தலைநீட்டிய பணி யாளனை நோக்கி, “இவருக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடு” என்று கூறிவிட்டு, விடுவிடு என்று அறையை விட்டு வெளியேறினான்.

பகல் துரிதமாக ஓடிக்கொண்டிருந்தது. பிரும்ம மாராயன் அறையில் பெரும் பஞ்சணையில் அமர்ந்திருந்த கரிகாலன் மனத்தில் எத்தனை எத்தனையோ கவலை அலைகள் எழுந்து மோதின. இரவில் வேங்கி நாட்டுக் கோதண்டத்தில் சைவத்துறவியான ஜெயவர்மன் உண்மையை உளறிவிட்டால் தன் கதி என்னவென்று கரிகாலன் எண்ணிப் பார்த்தான்.

அரசகுமாரி அளித்த பச்சைக்கல் மோதிரம் தனக்குத் தற்காலிகமாகப் பாதுகாப்பை அளித்திருந்தாலும், இரவில் கும்பகோணம் காவிரிக்கரையில் தன்னைச் சந்தித்தது முதல் அன்றுவரை நடந்ததையெல்லாம் கோவையாக ஒப்புவித்தானானால், பிரும்ம மாராயன் மனத்தில் தன்னைப் பற்றி நிச்சயம் சந்தேகம் ஏற்படும் என்பதைக் கரிகாலன் நன்றாக அறிந்து கொண்டான். அப்படிச் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் என்ன நேரிடும் என்பது பற்றிய சிந்தனையும் அவன் சித்தத்தில் உதிக்கவே, அவன் நரம்புகளில் லேசாக ஒரு நடுக்கம் ஊடுருவிச் சென்றது. அவன் கண்முன்னே வேங்கி நாட்டுக் கோதண்டம் பயங்கரமாக எழுந்து நின்றது.

Previous articleMannan Magal Part 1 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here