Home Historical Novel Mannan Magal Part 1 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

80
0
Mannan Magal Ch 14 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 14 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 துறவிக்குப் புரிந்தது

Mannan Magal Part 1 Ch 14 | Mannan Magal | TamilNovel.in

மனித சித்தம் எத்தனை எத்தனை பிரமைகளையோ சிருஷ்டிக்கிறது. காலத்தின் வேகத்தைப்பற்றிய நிர்ணயமும் அந்தப் பிரமைகளில் ஒன்று.

காலம் ஒரே சீராகத்தான் ஓடுகிறது. இத்தனை மாத்தி ரைகள் கொண்டது ஒரு நாழிகை, இத்தனை நாழிகைகள் கொண்டது ஒருநாள் என்று, கதிரவன் உதித்து மறைந்து மீண்டும் உதிக்கும் வரையில் உள்ள நேரம் ஒரே ஒழுங் காகத்தான் அமைந்திருக்கிறது. யாரும் அறிய இயலாத மாபெரும் சக்தி ஒன்றால், வானவெளியில் சுழன்றும் நிலைத்தும் நிற்கும் எண்ணிக்கையற்ற மண்டலங்களும், கிரகங்களும், ஒளி வீச்சுக்களும்கூட இந்தப் பூமண்ட லத்தின் காலகதியை அதிகமாகப் பாதிக்கவில்லை. ஏதோ சில பருவங்களில் பகல் நீண்டும் இரவு குறைந்தும், இரவு நீண்டும் பகல் குறைந்தும் இருக்குமேயொழிய மாத்திரை, நாழிகை இவற்றின் அளவை எள்ளளவும் பாதிக்கவில்லை. இத்தகைய நாழிகைத் தொகுப்பில் பொதுவாகப் பகலும் இரவும் சரிபாதி நேரத்தையே பெற்றிருக்கின்றன. இந்த உண்மையை வலியுறுத்தித்தான் ஆழ்வார் ஒருவரும், ‘பாதியும் உறங்கிப்போகும்’ என்று இரவை நாளின் ஒரு பாதியாகக் கணக்கெடுத்திருக்கிறார்.

காலகதியில் பாதி நேரம் பகல், பாதி நேரம் இரவு தான். அவை வேகமாகவும் ஓடுவதில்லை; அடியோடு ஆமை நடையும் போடுவதில்லை. ஆனால் மனித சித்தம் இந்த இயற்கை நிலையையும் பல சமயங்களில் மாற்றி விடுகிறது. சிந்தனையில் சுழலும் எண்ணங்களுக்குத் தக்க படி நேரம் வேகமாக ஓடுவது போலவும், ஆமை வேகத்தில் நகருவது போலவும் பிரமை மனிதனுக்கு உண்டாகிறது. சிந்தித்தால் ஏற்படும் மகிழ்ச்சி, வேதனை, கவலை ஆகிய உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடி காலமும் வேகமாகவோ, மெதுவாகவோ, நகருவதாக நினைக்கிறோம். வெறும் பிரமை தான்! இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து தப்பியவர் யாருமே இல்லை. கரிகாலன் மட்டும் எப்படித் தப்புவான்?

இரவு நெருங்கி, ஊரடங்கி, சைவத்துறவியை வேங்கி நாட்டுக் கோதண்டத்தில் பிரும்ம மாராயன் மாட்டி உண்மையைக் கக்க வைத்தானானால் ஏற்படக்கூடிய விளைவுகளை எண்ணி எண்ணி, வெகுநேரம் ஏதும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்த கரிகாலனுக்கு, நேரம் அளவுக்கு மீறிய வேகத்துடன் ஓடுவதாகத் தோன்றியது. நேரத்தின் ஓட்டத்துக்குத் தகுந்தபடி சிந்தனை ஓட வில்லையே என்ற நினைப்பால் ‘ஒருவேளை சிந்திக்கும் சக்தியை இழந்துவிட்டேனா’ என்று கூட எண்ணினான் கரிகாலன். அவன் மனம் உள்ள நிலையை திரும்பத் திரும்ப எடை போட்டுப் பார்த்தது. எந்தத் திக்கில் எண்ணம் பாய்ந்தாலும் சுற்றிலும் விடுதலைக்கு வேலியே போடப்பட்டிருப்பதைக் கண்டதால், சற்று நேரம் சிந்தனையிலிருந்து விடுவித்துக் கொள்ளக் கண்களை மூடிப் பஞ்சணையில் படுத்தான். கண் மூட்டம் எண்ணத்துக்கு அதிக ஊட்டத்தைக் கொடுக்கவே பழையபடி, கதாபாத்திரங்கள் அனைவரும் அவன் சிந்தனையில் பவனி வரத் தொடங்கினார்கள்.

மன்னன் மகளின் வருத்தம் தோய்ந்த மலர்விழிகள் அவனைக் கனிவுடன் நோக்கின. பிரும்ம மாராயனின் ராட்சச விழிகள் ஒருமுறை உருண்டு அவனைப் பயங்கரமாகப் பார்த்தன. சைவத்துறவியின் கள்ளக் கண்கள், ‘என்னை இச்சமயத்தில் கைவிட்டுவிடாதே’ என்று கெஞ்சின. இவற்றுடன் ராஜராஜ நரேந்திரனின் சலனமான நயனங்களும் இருமுறை தோன்றி மறைந்தன. இந்த ஒவ்வொரு பாத்திரத்திலும், தான் பலபடியாகச் சிக்கி நிற்பதை எண்ணிப் பார்த்த கரிகாலன், விதியின் விசித்திரச்சக்தியை நினைத்துப் பெரிதும் வியந்தான். தர்க்க சாஸ்திரியான அவன் அன்றைய சிக்கலிலிருந்து விடுதலையடையும் மார்க்கங்களைப் பற்றிப் பல முறையாகத் தர்க்கித்துப் பார்த்தும், வழியேதும் அறியாதவனாய்த் தவித்தான். தன்னையும் அரசகுமாரியையும் சுற்றி விதி பெரிய வலையை விரித்துவிட்டதை எண்ணினான் கரிகாலன். ‘அரிஞ்சயன் சாளுக்கியர் சிறையில் அகப்பட்டிருப்பதால் அரசகுமாரிக்கு ஆபத்து. அவர்கள் சதி வெளியாகிவிடும். பிரும்ம மாராயன் சிறையில் சைவத்துறவி அடைபட்டிருப்பதால் எனக்கு ஆபத்து. என் குட்டு அம்பலமாகிவிடும்’ என்று உள்ள நிலையைச் சுருக்கமாகக் கொண்டுவந்த கரிகாலன், மூடிய கண்களைச் சரேலென விழித்துத் துள்ளி யெழுந்து பஞ்சணையில் உட்கார்ந்தான். சிக்கலிலிருந்து விடுதலை பாதையொன்றும் மெல்லப் புலப்பட்டது அவனுக்கு. சைவத்துறவிக்கும் அரிஞ்சயனுக்கும் விடுதலை கிடைத்தால் தான் சிக்கலுக்கும் விடுதலை என்பதைத் தீர்மானித்துக்கொண்ட கரிகாலன், இந்த இரண்டு பேர் விடுதலையையும் எப்படிச் சாதிக்கலாம் என்பதைப் பற்றிச் சிந்திக்கலானான்.

நேரம் நடுப்பகலைத் தாண்டிப் பிற்பகலுக்குள் பாய்ந்து மாலையை எட்டிப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தது. அந்த ஓட்டத்துடன் போட்டி போடுவதுபோல் கரிகாலன் சிந்தனை வெள்ளமும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த வெள்ளத்துக்கு அணை போடவோ அல்லது ஆக்கம் கொடுக்கவோ சொல்ல முடியாது. கரிகாலன் இரண்டாவது உப்பரிகையிலிருந்த பிரும்ம மாராயனுடைய அறையின் சாளரத்தின் வழியாகத் தலையை வெளியே நீட்டி, கண் கண்ட தூரம் மட்டும் பார்வையை ஓடவிட்டான். அந்த அறையிலிருந்து வேங்கி நாட்டின் முக்கிய பகுதிகள் எல்லாமே தெளிவாகத் தெரிந்தன. ராஜராஜ நரேந்திரன் மாளிகையும் அதைச் சூழ்ந்து நின்ற பிரம்மாண்டமான கோட்டைச் சுவரும் அவன் முன்பாகப் பிரம்மாண்டமாக எழுந்து நின்றன. கோட்டைச் சுவரை ஒரு பக்கத்தில் மட்டுமே அணைத்துச் சென்ற கிருஷ்ணா நதி பூர்ணப் பிரவாகத்திலிருந்தது. கோட்டைக்குச் சற்றுத் தள்ளி ஊருக்கு வடகிழக்கில் பல கட்டடங்களை உள்ளடக்கிக் கொண்டு நின்றது ஒரு கருங்கல் மதில். அந்த மதிலின் உயரத்திலிருந்தும், அமைப்பிலிருந்தும்; வேங்கி நாட்டுச் சிறைக்கூடம் அந்த மதிலுக்குள் தான் இருக்கவேண்டு மென்றும் கரிகாலன் ஊகித்துக்கொண்டான். அவன் ஊகம் சரியென்பதைப் பின்னாலிருந்து எழுந்த ஒரு குரலும் ஊர்ஜிதம் செய்தது.

“என்ன அப்படிச் சிறைக்கூடத்தை உற்றுப் பார்த்துக் கொண்டு நிற்கிறீர்கள்!” என்று பிரும்ம மாராயன். கேட்டான்.

சிந்தனை எங்கெங்கோ திரிந்து கொண்டிருந்ததால், பிரும்ம மாராயன் உள்ளே வந்ததையோ தன்னை வெகு நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டு நின்றதையோ கவனிக்காத கரிகாலன், சாளரத்திலிருந்து திரும்பிப் பிரும்ம மாராயனைப் பார்த்தான். தன் கவலையில் ஒரு பகுதியாவது பிரும்ம மாராயனுக்கும் இருக்கும் என்றெண்ணிய கரிகாலன், அவன் முகத்தில் காலையிலிருந்த கவலைக்குறி அடியோடு மாறிவிட்டதையும் எல்லையற்ற ஆனந்தம் குடிகொண்டிருப்பதையும் கண்டு வியப்புடன் அவனை நோக்கினான்.

அவன் பார்வையில் தொக்கி நின்ற வியப்பு, பிரும்ம மாராயன் உதடுகளில் புன்முறுவலையே வரவழைத்தது. “என்ன அப்படிப் பார்க்கிறீர்களே?” என்று மீண்டும் கரி காலனை நோக்கிக் கேட்டான் பிரும்ம மாராயன்.

“எப்படிப் பார்க்கிறேன்?” என்று வினவினான் கரிகாலன்.

“ஏதோ ஆச்சரியத்தைக் கண்டுவிட்டார் போல் பார்க்கிறீர்களே?”

“ஆச்சரியமாகத்தான் இருக்கிறது!”

“எது?”

“தங்கள் போக்கு.”

“ஏன், என் போக்குக்கு என்ன?”

இதைக் கேட்ட கரிகாலன், படைத்தலைவன் முகத்தில் மீண்டும் தன் கண்களைப் பதியவிட்டு, “போக்குக்கு என்னவா! தங்களைப் பார்த்தால் ஏதோ மிதமிஞ்சிய ஆனந்தத்தில் அமிழ்ந்திருப்பதாகத் தெரிகிறதே!”

பிரும்ம மாராயன் மெள்ள நகைத்துத் தன் பெரிய விழிகளால் கரிகாலனை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்துக் கேட்டான். “ஏன்? வருத்தப்பட எனக்கு என்ன வந்து விட்டது இப்பொழுது?”

“என்ன வரவில்லை படைத்தலைவரே? அரிஞ்சயன் சாளுக்கியர் சிறையில் சிக்கிவிட்டதால் விஷயம் அம்பல மானால் அரசகுமாரிக்கு ஆபத்து; தவிர உமது தலைக்கும் தீம்பு வரும். இவற்றையெல்லாம் யோசிக்கவில்லையா நீங்கள்?” என்று வினவினான் கரிகாலன்.

“அரசகுமாரியின் தூதுவருக்குக் கவலை அளவுக்கு மிஞ்சித்தான் இருக்கிறது” என்று கூறிப் புன்முறுவலும் செய்த பிரும்ம மாராயன், “அதற்காகத்தான் அந்தச் சிறைக் கூடத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தீரா? கவலையை விடும் கரிகாலரே. இன்னும் இரண்டு நாள்களுக்கு அரிஞ்சயனைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டியதில்லை” என்றான்.

“ஏன்?”

“ஜெயசிம்மன் வேங்கிநாட்டுக்கு வர இன்னும் இரண்டு நாள்கள் பிடிக்கும்.”

“அதற்கும் அரிஞ்சயனிடமிருந்து விஷயத்தைக் கக்க வைப்பதற்கும் என்ன சம்பந்தம்?”

“நிரம்பச் சம்பந்தமிருக்கிறது. தன் ஆதிக்கத்தை வேங்கி நாட்டிலிருந்து நீக்க, விமலாதித்தன் மகள் சதி செய்கிறாள் என்பதற்குத் தீர்மானமான அத்தாட்சி இருப்பதாலேயே, அரிஞ்சயனைச் சிறையிலடைத்திருக்கிறான் ஜெயசிம்மன். அரசகுமாரியின் பெயர் இதில் பிணைந்து கிடப்பதால், எதையும் தானே நேரிடையாக அறிய ஜெயசிம்மன் விரும்புகிறான்.”

“அவன் விருப்பம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“அரிஞ்சயன் சிறைப்பட்டு இப்பொழுது நான்கு நாள்களாகின்றன. ஆனால், அரிஞ்சயனை விசாரிக்க எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. தன் ஆதிக்கத்தை உடைக்க, அரிஞ்சயனால் தூண்டப்பட்ட இன்னும் மூன்று படைத் தலைவர்களும் முன் வந்திருக்கிறார்களென்பதையும் ஜெய சிம்மன் நன்றாக அறிந்து கொண்டிருக்கிறான். இருப்பினும், அரிஞ்சயனைத் தவிர அவன் யாரையும் சிறை செய்ய வில்லை. அரிஞ்சயன் சிறைப்பட்டு நாள்கள் நான்கு ஆகியும் அவனைச் சித்திரவதை செய்து உள்ளதைக் கக்க வைக்க எந்த முயற்சியும் அடியோடு நடக்கவில்லை. ஏன் தெரியுமா?” என்று பிரும்ம மாராயன் கேட்டான்.

“ஏன்?” என்று சந்தேகம் ததும்பும் கண்களை உயர்த்தி னான் கரிகாலனும்.

“தான் வரும்வரை அரிஞ்சயனை ஏதும் செய்ய வேண்டாமென்று ஜெயசிம்மன் உத்தரவு அனுப்பியிருக்க வேண்டும். இங்குள்ள சிறைச்சாலைத் தலைவன் அவசரப் பட்டு அரிஞ்சயனை சித்திரவதை செய்து கொன்று விட்டால், சதி மர்மம் அடியோடு மறைந்துவிடுமென்று ஜெயசிம்மன் அஞ்சுகிறான்.” “அந்த அச்சத்திற்கு அத்தாட்சி!” “ஒன்று, அரிஞ்சயன் இன்னும் நிம்மதியாகச் சிறையில் படுத்துறங்குவது; இரண்டாவது, இந்தச் சதியில் சம்பந்தப் பட்டிருக்கும் மற்ற மூன்று படைத்தலைவர்களும் இன்னும் சுதந்திரமாக உலாவுவது.”

“அந்தப் படைத் தலைவர்கள் யார் என்று ஜெய சிம்மனுக்குத் தெரியுமா?”

“நன்றாகத் தெரியும்!”

“தெரிந்தும், ஏன் அவர்களை இத்தனை நாள் விட்டு வைத்திருக்கிறான்?”

“சதியின் கிளைகளை வெட்டித்தள்ள விரும்பவில்லை ஜெயசிம்மன். ஆணிவேரைக் கிளறி எறிய முயல்கிறான். அரசகுமாரிதான் அந்த ஆணிவேர். அவர் இந்தச் சதியிலீடு பட்டிருப்பதற்கான அத்தாட்சியை அரிஞ்சயன் அளிக்க முடியும். ஆகவே, அவனைத் தானே நேரில் விசாரிக்க முடிவு செய்திருக்கிறான். எப்படியும் ஜெயசிம்மன் இங்கு வந்து சேர இரண்டு நாள்கள் இருக்கின்றன” எனப் பிரும்ம மாராயன் விளக்கிவிட்டு, “இரண்டு நாள்களுக்கிடையில் பல காரியங்கள் நடக்கலாம். கவலைப்படாதீர்கள்” என்று கரிகாலனுக்குத் தைரியமும் சொல்லிவிட்டுத் தன் அலுவல் களைக் கவனிக்கச் சென்றான்.

மாலை தோன்றி மணி விளக்குகள் அந்த மாளிகை முழுவதிலும் எரியத் தொடங்கின. அரிஞ்சயனைப்பற்றிப் பிரும்ம மாராயன் கூறிய தகவல்களால், அரசகுமாரியைப் பற்றி ஓரளவு நிம்மதியடைந்த மனத்துடன் மாளிகையைச் சுற்றிலும் உலாவிய கரிகாலன், தோட்டத்தின் ஒரு கோடியிலிருந்த சிறைக்கூடத்தை அடைந்து அதையும் சுற்றிப் பார்க்கலானான். சிறைக்குள் புகும் தாழ்வாரம் மிகக் குறுகலாகவும் நீண்டும் வெளிச்சமில்லாமலும் கிடந்தது. சிறையைக் காண வந்த கரிகாலனைச் சிறைக் காவலன் தலைதாழ்த்தி வணங்கி உள்ளே செல்ல அனுமதித்தான். அவன் தன்னிடம் நடந்துகொண்ட மாதிரியிலிருந்து, தன்னைப்பற்றிய விவரம் மாளிகை பூராவும் பரவியிருக்கிற தென்றும், தனக்கு எத்தகைய தடங்கலும் விதிக்கலாகா தென்று பிரும்ம மாராயன் உத்தரவிட்டிருக்க வேண்டுமென்றும் கரிகாலன் நிச்சயித்துக் கொண்டதாலும், சோழ நாட்டுப் படைத்தலைவன் தன்னிடம் பரிபூர்ண நம்பிக்கை கொண்டதற்குக் காரணம் எதுவாயிருக்குமென்று யோசித்துப் பார்த்தான். அத்தனை சலுகைக்கு அரசகுமாரியின் மோதிரம் மட்டும் காரணமாகயிருக்க முடியாதென்றும், வேறு ஏதோ அபிப்பிராயமும் பிரும்ம மாராயன் மனத்தில் விழுந்திருக்க வேண்டுமென்றும் கரிகாலன் தீர்மானித்துக் கொண்டான். தன்னை அன்று காலையில் பிரும்ம மாராயன் கூர்ந்து நோக்கி ஏதோ அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றிப் பிரஸ்தாபித்தது அவன் நினைவுக்கு வந்ததன்றி, பிறகு அந்த நிகழ்ச்சிகளைப் பற்றிப் பிரும்ம மாராயன் எழுப்பிவிட்ட சந்தேகமும் அவன் சிந்தையில் எழுந்தது. ‘என் பிறப்பைப் பற்றிய ரகசியமொன்று படைத் தலைவனுக்குத் தெரியும்; அதனால்தான் இத்தனை சலுகை களை எனக்கு அளிக்கிறான்’ என்று சொல்லிக் கொண்டே, சிறைக்கூடத்துக்குள் சென்ற கரிகாலன் சைவத்துறவி இருந்த அறையை நோக்கினான். சிறைக்குள் அதுவரை முடங்கிக் கிடந்த சைவத்துறவியும் அவனை நோக்கி ஓடி வந்தான். அவனைப் பேசாதிருக்கும்படி எச்சரித்த கரிகாலன் கண்கள், அறைக்குள்ளிருந்த ஒரு பொருளின் மீது அரை விநாடி நிலைத்தன. அடுத்தகணம் கரிகாலன் உடையிலிருந்த சிறுவாள் கம்பிகளின் மூலமாக, சைவத் துறவியின் கைகளுக்கு மாறி, அவன் உடைக்குள் மறைந்தது. பரஸ்பரம் வெறுப்புள்ள அந்த இருவர் கண்களும் ஒரு முறை சந்தித்தன. இருவரும் ஒருவர் எண்ணத்தை மற்றொருவர் நன்றாகப் புரிந்துகொண்டனர். கரிகாலன் கண்கள் கடைசியாக ஒரு திக்கில் பாய்ந்ததைக் கவனித்த சைவத்துறவியும், “சரி” என்பதற்கு அறிகுறியாகத் தலையை ஒரு முறை அசைத்தான்.

Previous articleMannan Magal Part 1 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here