Home Historical Novel Mannan Magal Part 1 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

126
0
Mannan Magal Ch 15 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 15 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 15 எங்கே அந்த வாள்

Mannan Magal Part 1 Ch 15 | Mannan Magal | TamilNovel.in

சிறைக் கூடத்தின் குறுகிய தாழ்வாரச் சுவரில் பதிக்கப் பெற்றிருந்த சிறு விளக்கு அந்த இரவின் மையிருளை அடியோடு கிழிக்கச் சக்தியற்று மங்கலான வெளிச்சத்தையே வீசிக்கொண்டிருந்ததால், பக்கத்திலிருந்த அறையில் இருளே பெரிதும் படர்ந்திருந்தது. இருள்படராத அறைப் பகுதிகளிலும் குறுக்கே கம்பிகள் வெளிச்சத்தைத் தடுத்து நின்றதன் காரணமாக, கம்பிகளின் நிழல்கள் பட்டை பட்டையாக அறைக்குள் பாய்ந்து, சிறைக்குள் இன்னொரு சிறையிருப்பது போன்ற பிரமையை உண்டாக்கியிருந்தன. இத்தனையும் போதாதென்று, கிருஷ்ணாந்திப் பக்கத்திலிருந்து வந்துகொண்டிருந்த காற்று வேறு விளக்கின் சுடரை அலைக்கழித்ததால் சிறைக் கம்பிகளின் நிழல்கள் அப்படியும் இப்படியும் அலைந்தும், எழுந்தும், நின்றும் வெவ்வேறு கோணங்களில் பாய்ந்தும், இந்திர ஜாலவித்தை செய்துகொண்டிருந்தன. இப்படி அலைந்து அலைந்து நின்ற கம்பிகளின் நிழற்பட்டைகள் தன்மீது விழ உடலில் வரியிட்ட பெரும் புலிபோல் பளிச் சிட்ட திருட்டுக் கண்களுடன் நின்ற சைவத்துறவி, அத்தனை மங்கலான வெளிச்சத்திலும் நிழலாட்டத்திலும் கரிகாலன் காட்டிய குறிப்பை விநாடி நேரத்தில் புரிந்து கொண்டான். கரிகாலன் கண்கள் பாய்ந்த திக்கையும் அதைத் தொடர்ந்து அவன் தன் கைகளில் சிறு வாளைத் திணித்ததையும் எண்ணிப் பார்த்த சைவத்துறவிக்குத் தான் பெரிய திருடனா அல்லது கரிகாலன் பெரிய திருடனா என்பதில் பெரிதும் சந்தேகமுண்டாயிற்று. சுவரில் நல்ல வலுவான முறுக்குக் கயிறு ஒன்று சுருணையாக ஆணியில் மாட்டப்பட்டிருந்ததைக் கவனித்த சைவத்துறவி, அடுத்த படியாகக் கரிகாலன் கண்கள் சிறைச்சுவரின் மேல்பாகத்திலிருந்த சிறு சாளரத்தின் மீது பாய்வதையும் பார்த்து, அவன் மனத்திலோடிய எண்ணங்களைத் திண்ணமாகப் புரிந்து கொண்டான்.

சிறையில் படுப்பதற்காகப் போடப்பட்டிருந்த மரப் பலகையைச் சாளரத்துக்காக இழுத்துப் போட்டுக் கொண்டு ஏறி நின்றால் சாளரம் கைக்குத் திட்டமாக எட்டுமென்பதையும், தேவையான அளவுக்கு முறுக்குக் கயிற்றை அறுத்து இரண்டு கம்பிகளில் கட்டி இருபுறமும் பலமாக இழுத்தால் கம்பி வளைந்து ஆள் நுழையும் அளவுக்கு வழியும் ஏற்படுமென்பதையும் உணர்ந்து கொள்ளப் பலநாள் திருடனான சைவத்துறவிக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. கயிற்றை அவசியமான அளவுக்குத் துண்டிக்கவும், அதற்குப் பின் தப்பியோடும்போது தற்காப்புக்காகவும் தன்னிடம் சிறு வாளும் கொடுக்கப்பட்ட தென்பதையும் சைவத்துறவி சந்தேகமறப் புரிந்து கொண்டான்.

இத்தனையும் புரிந்து கொண்ட சைவத் துறவிக்குக் கரிகாலன் தன்னைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பது மட்டும் சற்றும் விளங்காததால், சந்தேகமான பார்வையொன்றைக் கரிகாலன் மீது வீசினான். கரிகாலன் இதழ்களில் புன்முறுவலொன்று லேசாக ஒரு விநாடி அரும்பி நின்றது. பிறகு எச்சரிக்கைக்கு அறிகுறியாக அவன் இதழ்கள் மீண்டும் மூடியதன்றிக் கண்களிலிருந்து பார்வையும் ‘காரணம் கேட்காதே. தப்பிவிடு’ என்று எச்சரித்தது. ஆனால் சைவத்துறவி அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், மெல்லக் கேட்டான், “நாம் மீண்டும் எங்கு சந்திப்பது?” என்று.

கரிகாலன் கண்கள் ஒருமுறை தாழ்வாரத்தின் கோடிப் பக்கமாகப் பாய்ந்தன. பிறகு மிக மெதுவான குரலில் “வேங்கி நாட்டில் அரைக் கணமும் தாமதிக்காதே. ஓடிவிடு. சந்தர்ப்பம் வரும்போது சந்திப்போம்” என்று கரிகாலன் கூறினான்.

சைவத் துறவி ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். அந்த யோசனையைக் கண்ட கரிகாலன் கண்களில் மிதமிஞ்சிய இகழ்ச்சி உதயமானதன்றி, வெறுப்புக் கலந்த உஷ்ணமான சொற்களும் அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. “இரவில் உனக்குக் கோதண்டம் சித்தமாயிருக்கிறது. வேண்டுமானால் இங்கேயே இரு. துறவிகள் கோரும் இறைவனடி இன்றிரவே உனக்குக் கிட்டிவிடும்” என்று சொல்லிவிட்டு இரண்டடி எடுத்து வைத்த கரிகாலனை, “உஷ்!” என்று சப்தம் செய்து தடுத்த சைவத்துறவி, “செங்கதிர் மாலையை என்னிடம் திருப்பிக் கொடுக்கவில்லையே!” என்று கேட்டான்.

“அதைப்பற்றிக் கவலைப்படாதே. என்னிடம் பத்திரமா யிருக்கிறது” என்றான் கரிகாலன்.

“கரிகாலா! அதை மாத்திரம் கொடுத்துவிடு. பிறகு நான் உன் வாழ்க்கையில் தலையிடமாட்டேன். அது சேரமான் குடும்பத்துக்குச் சொந்தம். சேரமானிடம் சேர்த்துவிடுகிறேன். அதற்காகவே இத்தனை அவதிகளுக்கு உள்ளாகி யிருக்கிறேன். தயவு செய்” என்று சைவத் துறவி கெஞ்சினான்.

“ஜெயவர்மா! அந்த மாலையை மட்டும் மறந்துவிடு. இப்பொழுது செங்கதிர் மாலையுடன் சரித்திரம் பிணைந்து கிடக்கிறது. சோழப் பேரரசன் யுத்தத்தில் வெற்றிவாகை சூடிப் பெற்ற பரிசு இது. அதைப்பற்றிச் சோழ நாட்டில் ராஜேந்திர சோழ தேவர் எவ்வளவோ கல்வெட்டுக்களையும் அமைத்திருக்கிறார். அது தேவையானாலும், அதைப் பெறச் சேரமானுக்கு ஒரே ஒரு வழிதானுண்டு” என்று கரிகாலன் மெள்ளச் சொன்னான்.

“என்ன வழி?” என்று துறவி ஆத்திரத்துடன் கேட்டான்.

“சேரமான் ராஜேந்திர சோழ தேவரிடம் அதைத் தரும்படி நேரில் வந்து கேட்க வேண்டும். ராஜேந்திர சோழ தேவர் வள்ளல் என்பதை உலகம் அறியும். எதிரி யாசித்தாலும் இல்லையென்று சொல்லமாட்டார்” என்று விளக்கினான் கரிகாலன்.

“யாசகம் செய்வது மன்னர்களுக்குப் பெருமை தரக் கூடியதா?” என்று துறவி விசாரித்தான் கோபத்துடன்.

கரிகாலன் இதழ்களில் மீண்டும் புன்னகை அரும்பியது. “இல்லை; அது பெருமை இல்லை. திருடர்களை விட்டுத் திருடச் சொல்வதுதான் பெருமை!” என்று இகழ்ச்சி ததும்பிய குரலில் மெதுவாகக் கூறிவிட்டு மேற்கொண்டு அங்கு பேசிக்கொண்டு நிற்பது ஆபத்தென்ற காரணத்தால் சைவத் துறவியைக் கண்களால் எச்சரித்து விட்டு மெள்ள வேளியே நடந்தான். போகும்போது ஏதோ யோசனை வரவே, அப்புறமும் இப்புறமும் பார்த்துவிட்டு சிறைத் தாழ்வாரத்திலிருந்த விளக்கை வாயால் ஊதி அணைத்துவிட்டு வெளியே வந்தான்.

வெளியே வந்த கரிகாலன் முகத்தில் மீண்டும் கவலையே பெரிதும் பாய்ந்து நின்றது. சைவத்துறவி அடைபட்டிருந்த அறை, சிறைத் தாழ்வாரத்தின் கோடியிலிருந்த படியாலும் தாங்களிருவரும் மிக மெதுவாகவே சம்பா ஷித்தபடியாலும் தங்கள் சம்பாஷணை எதுவும் காவலாளியின் காதில் விழக் காரணமில்லை என்பதைக் கரிகாலன் நன்றாக அறிந்திருந்தாலும், தன் நடவடிக்கைகளை அவன் ஓரளவு கவனித்திருந்தால் பின்னால் ஆபத்தாக முடியுமே என்ற நினைப்பால் அந்தக் காவலாளியுடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “உன் பெயர் என்னப்பா?” என்று விசாரித்தான்.

வீரன் தலைதாழ்த்தி வணங்கி, “வீரன், எசமான்” என்று மிக மரியாதையாகப் பதில் சொன்னான்.

“வீரா! நீ தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் போலிருக்கிறதே” என்று விசாரித்தான் கரிகாலன்.

“ஆம், எசமான்! அதுவும் சோழ நாடு. வேறு நாட்டவர் எவரையும் படைத்தலைவர் தன்னிடம் சேர்க்கமாட்டார்.”

“அப்படியா வீரா? மிகவும் சந்தோஷம். நானும் சோழ நாடுதான்.” “அது முன்பே தெரியும் எசமான்!”

இதைக் கேட்ட கரிகாலன் சற்று ஆச்சரியத்துடனேயே வீரனைப் பார்த்தான். “முன்பே தெரியுமா? எப்படித் தெரியும் வீரா?” என்று வினவினான்.

“நீங்கள் சோழ நாட்டவராய் இல்லாவிட்டால், படைத் தலைவர், இந்த மாளிகைக்குள் உங்களை அனுமதித்திருக்க மாட்டார். தவிர முகத்தைப் பார்த்தாலே தெரியுமே எசமான்” என்றான் வீரன். “முகத்தைப் பார்த்தாலே தெரியுமா?”

“ஆமாம் எசமான். சோழ நாட்டவருக்கு இருக்கும் களை வேறு யாருக்கு இருக்கிறது? அந்த நாட்டார் கண்களில் புத்திசாலித்தனமும் விஷமமும் சொட்டுமே எசமான்!” என்று சொன்ன வீரன் முகத்தில் பெருமைக் குறி பெரிதாகப் படர்ந்தது.

மண்ணாலும் தண்ணீராலும் ஏற்படும் பிணைப்பு எத் தன்மையதென்பதை அறிந்த கரிகாலன், பிரகிருதி விசித்திரத்தை எண்ணி வியந்தான். ஒரே நாட்டில் பிறந்த இருவர் வேறு நாட்டில் சந்திக்கும்போது எத்தனை பந்தம் ஏற்பட்டுவிடுகிறது என்பதைச் சிந்தித்துப் பார்த்தான் கரிகாலன். சோழ நாட்டில் பிறந்தவன், காவிரி நீரைக் குடித்தவன் என்பனவற்றால் ஏற்படும் உணர்ச்சியும், உள்ளக்கிளர்ச்சியும் எத்தனை அற்புதமானது, எத்தகைய நெருங்கிய உறவைச் சிருஷ்டித்துவிடுகிறது என்பதை நினைத்துப் பார்த்த கரிகாலன் உள்ளத்திலும், அந்த நாட்டுப் பற்றுப் பெருக்கெடுக்கவே அவன் விழிகள் வீரன் மீது மிகுந்த அன்புடன் லயித்தன. அவன் பார்வையை அடுத்து வந்த சொற்களும் தேனில் தோய்ந்தே உதிர்ந்தன.

“வீரா! உனக்கு மனைவி குழந்தைகள் இருக்கிறார்களா?”

“இருக்கிறார்கள் எசமான்.”

“எங்கு?”

“சோழ நாட்டில்தான்.”

“அவர்களை விட்டு தொலைதூரம் வந்துவிட்டாயே!”

“தாய் நாட்டுக் கடமைக்காக வேலையும் வாளையும் ஏந்தும் வீரன், வீட்டை நினைத்தால் முடியுமா?”
அவன் நாட்டுப் பற்றையும் அவன் நெஞ்சில் ஆழப் பதிந்துள்ள கடமை உணர்ச்சியையும் கவனித்த கரிகாலன், இராஜராஜன் காலத்திலிருந்து சோழ சாம்ராஜ்யம் விரிவடைந்த காரணத்தை எளிதில் புரிந்துகொண்டான். நாட்டுக்காக எதையும் தியாகம் செய்ய வீரன் போன்ற பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் எழுந்ததே, சோழப் பேரரசின் பெரு வெற்றிக்கும் விரிவுக்கும் காரணம் என்பதை அறிந்து கொண்ட கரிகாலன், அதனால் ஓரளவு பெருமையும் அடைந்தான். நாட்டுப் பற்றிலும் மக்களின் வீர உணர்ச்சியிலும் மனத்தை ஒருவிநாடி லயிக்கவிட்ட அவன் அகக்கண் முன்பாகச் சோழப் பேரரசு பெரிதாக எழுந்து நின்று, வட எல்லைகளில் பாய்ந்த கிருஷ்ணா நதியின் அலைகளும், தெற்கு எல்லையில் அடித்த சமுத்திர அலைகளும்கூட, அவன் சித்தத்தில் எழுந்து சிறிது நேரம் மோதின. அந்த சித்த மயக்கத்தில் வீரனுடன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் போக ஓர் அடி எடுத்து வைத்த கரிகாலன், எதையோ நினைத்துக்கொண்டு மீண்டும் திரும்பினான்.

அவன் முகத்தில் தொக்கி நின்ற கேள்வியைப் புரிந்து கொள்ள முடியாத வீரன், என்ன எசமான்?” என்று விசாரித்தான்.

“வீரா! அந்தக் கோடி அறையில் ஒரு துறவியை அடைத்திருக்கிறீர்களே, அவன் யார்?” என்று ஏது மறியாதது போல் கேட்டான் கரிகாலன்.

“யாரோ தெரியாது எசமான். அவனை மிக ஜாக்கிர தையாகப் பாதுகாக்கும்படி உத்தரவு. உங்களைத் தவிர வேறு யாராவது வந்திருந்தால் உள்ளே அனுமதித்திருக்க மாட்டேன்.”

“நான் மட்டும் என்ன விதிவிலக்கு?”
“விலக்கு என்றுதான் உத்தரவு.”

“யார் உத்தரவு?”

“படைத்தலைவர் உத்தரவுதான். இங்குள்ள சிறைக் கூடத்தலைவர் பிற்பகலில் வந்து என்னை எச்சரித்துச் சென்றார் – பிரும்ம மாராயரை நடத்துவது போல் உங்களையும் நடத்த வேண்டும் என்று.”

“அப்படி என்ன நான் உயர்வு?”

“தெரியாது எசமான். ஆனால் படைத்தலைவர் அந்த மாதிரி உத்தரவிடுவது இதுதான் முதல் தடவை.”

“ஓகோ!” என்று கரிகாலன் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தனவேயொழிய, சிந்தனை பிரும்ம மாராயனைத் தேடிச் சென்றது. தான் வந்தது முதல் தன்னைப் பிரும்ம மாராயன் நடத்தும் முறை மிக விசித்திரமாயிருந்தது கரிகாலனுக்கு. அப்படித் தன்னிடம் மிதமிஞ்சிய மரியாதையையும் நம்பிக்கையையும் காட்டி வரும் பிரும்ம மாராயனுக்குத் தான் துரோகம் செய்வது சரியாகுமா என்று கூட யோசித்தான் கரிகாலன். ‘நம்பிக்கைத் துரோகம் செய்து, சைவத்துறவியைத் தப்புவித்தால்தான் தப்பலாம். ஆனால் நாணயமா?’ என்று எண்ணிப் பார்த்தான். நாணயமில்லை என்று அவன் புத்திக்குத் திட்டமாகப் பட்டாலும், அப்படிச் சைவத் துறவியைத் தப்புவிக்காத பட்சத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் மனம் எண்ணிப் பார்த்தது. சைவத்துறவியைத் தப்புவிக்காவிட்டால் இன்றிரவு நம் சாயம் வெளுத்துவிடும். வெளுத்துவிட்டால் பிரும்ம மாராயன் நம்பிக்கை உடைந்துவிடும். அப்படி நம்பிக்கை உடைந்துவிட்டால் அரசகுமாரியின் சதி விஷயத்தில் தன் மூலமாகத் தலையிடவும் பிரும்ம மாராயன் இணங்கமாட்டான். அரசகுமாரியோ பேராபத்தில் சிக்கியிருக்கிறாள். அவளைக் காப்பாற்ற என்னைப் போன்ற ஒரு நண்பன் அவளுக்கு அவசியம். ஆனால் பிரும்ம மாராயன் உதவியின்றி எதையும் சாதிப்பது கஷ்டம். ஆகவே, தற்சமயம் படைத்தலைவனுக்கு என்னிட முள்ள நம்பிக்கையை உடைக்கக்கூடாது. ‘பெரிய நன்மையை முன்னிட்டு இந்தச் சிறு குற்றத்தைப் புரிந்ததில் தவறில்லை’ என்று தன்னைத்தானே சமாதானப்டுத்திக் கொண்ட கரிகாலன், அதற்கான ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்ய நினைத்து, வீரனை நோக்கி, “வீரா! அந்தத் துறவியைப் பார்த்தால் பெரிய திருடனாகத் தெரிகிறதே!” என்றான்.

“அப்படித்தான் சிறைக்கூடத் தலைவரும் சொன்னார்!” என்றான் வீரன்.

“நான் சென்று பார்த்தபோது அவன் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தான். எதற்கும் எல்லாம் சரியா இருக்கிறதாவென்று நீ ஒருமுறை போய்ப் பார்த்து வா?” என்று கரிகாலன் ஆணையிட்டான்.

அந்த ஆணையைச் சிரமேற் கொண்டு உள்ளே சென்று சில விநாடிகளில் திரும்பிய வீரன், “கவலை வேண்டாம் எசமான்! எல்லாம் சரியாகவே இருக்கிறது. பூட்டை இழுத்துப் பார்த்துவிட்டேன். துறவியும் மரப்பலகையில் சுருண்டு படுத்திருக்கிறான்” என்றான்.

“உள்ளே ஒரே இருட்டாயிருக்கிறதே. துறவி படுத்திருப் பது எப்படித் தெரிந்தது?” என்று கரிகாலன் வினவினான். “சாளரத்திலிருந்து வெளிச்சம் வருகிறதல்லவா?”

“சரி, சரி! விளக்கு அணைந்துவிட்டதே. ஏற்ற வேண்டாமா?”

“வேண்டாம் எசமான். இந்த விளக்கு எப்பொழுதும் இப்படித்தான். கிருஷ்ணா நதிக் காற்றில் அடிக்கடி அணைந்துவிடும். இதைக் கொளுத்த வேண்டுமானால், மாளிகைப் பக்கம் போய்த்தான் பந்தம் கொண்டுவர வேண்டும். காவலை விட்டுப் போக முடியாது.”

“வேண்டுமானால் போய் வா; நான் பார்த்துக்கொள் கிறேன்.”

“நன்றாயிருக்கிறது! தங்களைக் காவல் வைப்பதாவது! படைத்தலைவருக்குத் தெரிந்தால், இந்தத் துறவிக்குப் பதில் கோதண்டத்தில் என்னை மாட்டுவார். இந்த அறையிலிருந்து இவன் தப்ப முடியாது. அதுவும் இன்னும் சிறிது நேரம். பிறகு அவனைப் பாதாளச் சிறைக்குக் கொண்டு போய் விடுவார்கள்.”

வீரனுடன் இவ்வண்ணம் பேச்சுக் கொடுத்துப் பின்னால் தன்மேல் எத்தகைய குற்றமும் சாட்ட முடியாத நிலையைச் சிருஷ்டித்துக்கொண்ட கரிகாலன், துறவியை மிகுந்த ஜாக்கிரதையுடன் கவனித்துக்கொள்ளும்படி வீரனிடம் கூறிவிட்டு மாளிகையை நோக்கி நடந்தான். மாளிகைக்குள் நுழைந்தவன், நேராக இரண்டாவது உப்பரிகைக்குச் சென்று, பிரும்ம மாராயன் அறையில் உட்கார்ந்து மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதைப் பற்றி ஆலோசிக்கலானான். ‘சைவத்துறவி தப்பிவிடுவான். என் அபாயம் தீர்ந்தது. என் மேல் சந் தேகமும் உண்டாக வழியில்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.

ஆனாலும் விஷயம் அவன் நினைத்தபடி அத்தனை எளிதில் முடியவில்லை. சைவத்துறவி தப்பிவிட்டதும், மாளிகை அமளிதுமளிப்பட்டது. காவலர்களையெல்லாம் கண்டபடி கடிந்துகொண்டு தனது அறைக்குள் கடுங் கோபத்துடன் நுழைந்த பிரும்ம மாராயன், கரிகாலனிடம் விஷயத்தை அறிவிக்ககத் தொடங்கி, “ஜெயவர்மன் தப்பிவிட்டான்!” என்றான்.

“தப்பிவிட்டானா!” கரிகாலன் புருவங்கள் சற்றே உயர்ந்தன.

ஆம் கரிகாலரே!”

“எப்படித் தப்பிவிட்டான்?”

“குற்றவாளியைக் கட்டி அடிக்கச் சிறையில் வைக்கப் பட்டிருக்கும் முறுக்குக் கயிற்றால் கம்பிகளை வளைத்து, மரப்பலகை மீது ஏறி, சாளரத்தின் வழியாகக் குதித்தோடி விட்டான்.

‘’அப்படியா!”

‘’ஆமாம். ஆனால், அதுமட்டுமல்ல; வேறு விஷயமும் இருக்கிறது.”

“என்ன அது?”
“ஜெயவர்மன் பெரிய போக்கிரிதான். ஆனால் அவனைவிட ஒரு பெரிய போக்கிரி அவனுக்கு உதவி செய்திருக்கிறான்.”

“அப்படியா!”

“ஆமாம் கரிகாலரே! முறுக்குக் கயிறு அதிக நீள முள்ளது. அப்படியே கம்பிகளை வளைக்க முடியாது. கயிற்றின் ஒரு பாகம் வெட்டப்பட்டு இரண்டாகத் துண்டிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்தான் இருபுறங்களிலும் கம்பிகளை இழுத்து வளைக்க முடிந்திருக்கிறது.”

கரிகாலன் கண்கள் பிரும்ம மாராயனை ஏறெடுத்துப் பார்த்தன. அவன் எதிரே ராட்சதனைப் போல் நின்ற பிரும்ம மாராயன் கண்களில் ஏதோ ஒரு விபரீதப் பார்வை துளிர்த்தது. சிறிது நேரம் கரிகாலன் முகத்தில் நிலைத்த கண்கள் சற்றுத் தாழ்ந்து பெரியனவாக உருண்டு அவனது இடுப்பிலிருந்த கச்சையை நோக்கின.

அடுத்த விநாடி பிரும்ம மாராயன் குரல் கோடை இடிபோல் ஒலித்தது.

“கரிகாலரே! தங்கள் கச்சையிலிருந்த சிறு வாள் எங்கே?” என்று கட்டடமே அதிரும்படியாக இரைந்தான், சோழ நாட்டுப் படைத்தலைவனான பிரும்ம மாராயன்.

Previous articleMannan Magal Part 1 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here