Home Historical Novel Mannan Magal Part 1 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

86
0
Mannan Magal Ch 16 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 16 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 இருளில் இறங்கிய இடி

Mannan Magal Part 1 Ch 16 | Mannan Magal | TamilNovel.in

சாதாரண சமயத்தில் கரகரப்புத் தட்டிக் கடுமையாக ஒலிக்கும் தன்மை வாய்ந்த பிரும்ம மாராயன் குரல், கோபமும் கலந்துவிட்டதன் காரணமாக மிகப் பயங்கரமாகச் சப்திக்கத் தொடங்கிவிட்டதையும், இயற்கையாகவே பெரிதாகக் கோவைப்பழம் போலிருந்த கொடூர விழிகளிலும், செவ்வரி சற்று அதிகமாகவே படர்ந்துவிட்டதையும் கவனித்த கரிகாலன், தான் பேராபத்தில் சிக்கிவிட்டதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டான். சிறைக்கூடத்தில் வீரனை எச்சரித்ததன் மூலம் தன் குற்றத்துக்கு ஓரளவு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொண்டதால், சைவத்துறவி தப்பியோடியது தெரிந்தாலும், குற்றத்தின் சாயை தன்மீது பாயாது என்று திட்டமாக நம்பியிருந்த கரிகாலன், தன் இடையிலிருந்து வாள் மறைந்துவிட்டதைப் பிரும்ம மாராயன் அத்தனை உன்னிப்பாகக் கவனிப்பானென்று எதிர்பார்க்கவில்லை. ஆகவே, எதிர்பாராதவிதமாக அந்தத் திக்கில் தாக்குதல் ஏற்படவே, என்ன பதில் சொல்வதென்று விளங்காததால், பஞ்சணையில் சற்று அசைந்து உட்கார்ந்து தான் அணிந்திருந்த அரச அங்கியின் வலது பக்கத்தைச் சற்று இறுக்கவும் பிடித்துக் கொண்டான். அடுத்த விநாடி அவன் முகத்தில் ஏதோ சிந்தனைகள் ஓடியதற்கான அறிகுறிகள் மாத்திரமன்றி, மனம் பெரிய புயலிலிருந்து மீண்டும் ஓரளவு சக்தியை அடைந்துவிட்டதற்கான சாயையும் படரலாயிற்று.

எதையும் ஊடுருவிப் பார்க்கும் சக்தி வாய்ந்த படைத்தலைவன் கண்கள் கரிகாலன் முகத்தில் தோன்றிய பலதரப்பட்ட உணர்ச்சிக் குறிகளைக் கவனிக்கத் தவற வில்லை. தான் வாளைப் பற்றிக் கேட்டதும், அவன் முகத்தில் திகில் லேசாகத் தோன்றியதையும், பிறகு ஏதோ சிந்தனை நிலவியதையும், அடுத்த விநாடி சாந்தி படர்ந்துவிட்டதையும் கண்ட படைத்தலைவனுக்கு, எதிரே பஞ்சணையில் உட்கார்ந்திருந்த கரிகாலன் பெரிய புதிராயிருந்தான். முதலில் ஏற்பட்ட திகிலுக்குக் காரணத்தைப் படைத்தலைவன் திட்டமாக அறிந்துகொண்டிருந்தான். ஆனால், அந்தத் திகிலை ஒட்டி ஓடிய சிந்தனைகள் என்ன வாயிருக்கலாம்? திகில் மறைவதற்குக் காரணம் எதுவாயிருக்கும்? என்ற கேள்விகளுக்கு விடை கண்டுபிடிக்க முடியாமல் திணறிய பிரும்ம மாராயன், எதற்கும் விஷயத்தைப் பூராவும் விசாரித்துப் பார்ப்போம் என்ற எண்ணத்தால், “கரிகாலரே! நான் கேட்ட கேள்வி காதில் விழுந்ததா இல்லையா?” என்று மீண்டும் கேட்டான், கடுமை சிறிதும் தணியாத குரலில்.

கரிகாலன் இதழ்களில் லேசாகப் புன்னகை படர்ந்தது. “காதில் விழாமல் எப்படியிருக்க முடியும் படைத் தலைவரே! இடி இடித்தால் காதில் விழாதிருக்குமா?” என்று பதில் சொன்னான் கரிகாலன்.

பிரும்ம மாராயன் மிதமிஞ்சிய ஆச்சரியத்துடன் கரி காலனை நோக்கினான். மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்த அவன், தன் முன்பாகப் பஞ்சணையில் ராஜ தோரணையில் உட்கார்ந்துகொண்டு, தன் குரலைப் பற்றி ஏளனமாகவும், பேசத் தொடங்கியதைக் கண்ட பிரும்ம மாராயன், கரிகாலனுடைய நெஞ்சுரத்தை உள்ளுக்குள் ளேயே மெச்சிக்கொண்டான். இருப்பினும் வெளியில் கடுமையைக் குறைக்காமலேயே, விசாரணையைத் தொடர்ந்து, “கரிகாலரே! இடி காதில் மட்டுமல்ல, சில வேளையில் தலையிலும் இறங்குவதுண்டு” என்றான்.
“எல்லாம் விதியைப் பொறுத்தது” என்று கரிகாலன் பதில் சொன்னான்.

“உமது தலைவிதி தற்சமயம் எப்படி இருக்கிறது?” என்று விசாரித்தான் பிரும்ம மாராயன்.

“ஏன் நன்றாகத்தானிருக்கிறது. நான் வேங்கி நாட்டு அரசகுமாரியின் தூதுவன். சோழ நாட்டுப் படைத்தலை வரின் பாதுகாப்பிலிருக்கிறேன். எனக்கென்ன குறைச்சல்?”

“உமக்கென்ன குறைச்சலா? நான் கேட்ட கேள்விக்குப் பதில் சரியாகக் கிடைக்காவிட்டால் உமக்கென்ன குறைச்சல் ஏற்படுமென்பதைச் சீக்கிரம் புரிந்து கொள்வீர்.”

“என்ன குறைச்சல் ஏற்படுமோ?”

“அவயவங்களில் ஏதாவது இரண்டொன்றுக்குக் குறைவு. ஏற்படலாம். சில வேளைகளில் உடலிலிருந்து உயிர் குறைவதும் உண்டு” என்று தன் நகைச்சுவையைக் காட்டிப் பெரிதாக நகைத்தான் பிரும்ம மாராயன்.

கொடூரமான காரியங்களில் சோழ நாட்டுப் படைத் தலைவனுக்கு இருக்கும் உற்சாகத்தைக் கவனித்த கரிகாலன் உடல், ஒரு விநாடி வெறுப்பால் சிலிர்த்தது. அவசியமானால் கை காலை வெட்டவோ அல்லது தலையையே சீவி எறியவோ பிரும்ம மாராயன் தயங்க மாட்டான் என்பதையும், அத்தகைய பணிகளில் அவனுக்கு ஓரளவு உவகையும் உண்டென்பதையும் கண்ட கரிகாலன், அரசகுமாரி தன் சதிக்கு உதவியாகச் சரியான பேர்வழியைத்தான் பிடித்தாள் என்று தீர்மானித்துக் கொண்டான்.

கரிகாலன், தான் கேட்ட கேள்விக்கு நேரிடையான பதில் சொல்லாமல் ஏதோ யோசிப்பதைக் கண்ட பிரும்ம மாராயன், “கரிகாலரே! நான் கேட்ட கேள்விக்கு இன்னும் உம்மிடமிருந்து பதில் வரவில்லை” என்று நினைவு படுத்தினான்.

“என்ன பதிலை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கரிகாலன் வினவினான்.

“உமது கச்சையிலிருந்த சிறு வாள் எங்கேயென்று’ கேட்டேன். அதற்குப் பதில் எதிர்பார்க்கிறேன்.”

“அந்த வாளைப்பற்றி என்ன அத்தனை கவலை உங்களுக்கு?”

“கரிகாலரே! சேர நாட்டு ஒற்றனான ஜெயவர்மன் சிறையிலிருந்து தப்பியிருக்கிறான் – இன்னொருவன் உதவி யுடன் தப்பியிருக்கிறான். இன்று சிறைக்கூடத்திற்கு உம்மைத் தவிர வேறு யாரும் போகவில்லை.”

“ஆகையால் நான் அவனைத் தப்புவித்துவிட்டே னென்று முடிவு கட்டுகிறீரா?”

“நான் ஒரு முடிவும் கட்டவில்லை. முடிவு கட்டியிருந் தால், உமக்கும் இதற்குள் ஒரு முடிவு கட்டியிருப்பேன். உமக்குச் சாதகமான அம்சங்களும் இதிலிருப்பதால்தான் விசாரிக்க வேண்டியிருக்கிறது.” “அப்படியா?” “ஆமாம் கரிகாலரே! சிறைக்கூடக் காவலனான வீரனை விசாரித்துவிட்டேன். நீர் சிறையைப் பார்த்துத் திரும்பி வந்ததன்றி, ஜெயவர்மனை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ளும்படி எச்சரித்ததாகவும், அணைந்த விளக்கைக்கூட ஏற்றும்படி கூறியதாகவும் வீரன் சொன்னான்.

“இருந்தும் உமது சந்தேகம் விடவில்லை போலி ருக்கிறது.”

“இல்லை!”

“ஏன்?”

“குற்றத்தை மறைக்க இந்தத் தந்திரங்களை நீர் கையாண்டிருக்கலாம். ஜெயவர்மன் உம்மை நண்பனென்று காலையில் அழைத்திருக்கிறான். அப்படி நீர் நண்பரா யிருந்தால் அவனை விடுவிக்க முயன்றிருக்கலாம். அவன் தப்பிச் செல்வதற்கு வேண்டிய உதவியைச் செய்தபின்பு, உம்மீது சந்தேகம் விழாதிருப்பதற்காக, வீரனை எச்சரித்து விட்டு வந்திருக்கலாம்” என்றான் பிரும்ம மாராயன்.

உள்ளதை உள்ளபடி தினையளவும் சந்தேகத்துக்கு இடமின்றிப் படைத்தலைவன் உடைத்துவிட்டதைக் கவனித்த கரிகாலன், பிரும்ம மாராயனுடைய கூறிய அறிவை எண்ணிப் பெரிதும் வியந்தான். ஆனால், வியப் புக்கோ பிரும்ம மாராயனைப் பாராட்டுவதற்கோ அப்பொழுது சமயமில்லையாகையால், பிரும்ம மாராயன் சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் பணியில் இறங்கி, “பிரும்ம மாராயரே! என்னைக் குற்றவாளி ஸ்தானத்தில் நிறுத்தி விட்டீர். இதிலிருந்து நான் விலகிக்கொள்ள எத்தகைய அத்தாட்சியை எதிர்பார்க்கிறீர்கள்?” என்று கேட்டான்.

“உங்கள் அங்கிக் கச்சையிலிருந்த வாளைக் காட்டி னால் போதும்” என்றான் படைத்தலைவன்.

“அது எப்படி உள்ள சிக்கலை அவிழ்க்கும்?” என்று கரிகாலன் வினவினான்.

“சிறையிலிருந்த கயிற்றைத் துண்டிக்க ஜெயவர் மனுக்குக் கத்திதான் உபயோகப்பட்டிருக்கிறது. கத்தி ஒன்றின் உதவி இல்லாவிட்டால் அவன் தப்பியிருக்க முடியாது என்பதுதான் கேள்வி” என்று பிரும்ம மாராயன் விளக்கினான்.

கரிகாலன் பஞ்சணையிலிருந்து சிறிது நேரம் எழுந்து அறையில் அங்குமிங்கும் உலாவினான். பிறகு பிரும்ம மாராயனை நோக்கிய கண்களில் அசட்டையோடு அதிகாரமும் கலந்திருந்தது. “படைத் தலைவரே! நீர் யாரை விசாரணை செய்கிறீர் என்பதைப் புரிந்துகொண்டிருக் கிறீரா?” என்று கேட்டான் கரிகாலன்.

“ஏன் உம்மைத்தான்.” “நான் அரசகுமாரியின் அந்தரங்கத் தூதுவன்.” “அதனாலென்ன?” “அவர் என்மீது நம்பிக்கை வைப்பதற்கு அடையாள மாக அவருடைய மோதிரத்தையே கொண்டு வந்திருக் கிறேன்.”

“இருக்கட்டுமே.” “அப்படியிருந்தும் ஏதோ சாதாரணக் குற்றவாளியைப் போல் என்னை விசாரிக்கிறீர்.”

“கரிகாலரே! குற்றவாளிகளில் சாதாரணக் குற்றவாளி, அசாதாரணக் குற்றவாளி என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. குற்றம் செய்பவன் யாராயிருந்தாலும் குற்ற வாளிதான். அரசகுமாரியின் தூதுவர் குற்றம் செய்தாலும் குற்றம் குற்றம்தானே. தவிர வேறொன்றையும் நீர் மறந்துவிட்டீர்.”

“என்ன படைத்தலைவரே?”

“நான் சோழநாட்டுப் படைத்தலைவன்.”

“அதனால்?”

“வேங்கி நாட்டு மன்னன் மகளைவிடச் சோழ நாட்டுப் பணி எனக்கு முக்கியம்.”

“நியாயம்தான்.”

“ஜெயவர்மன் சோழ மன்னருக்குச் சொந்தமான செங் கதிர் மாலையைக் களவாடிவிட்டான். அவன் தப்பாதிருந்தால், அது இருக்கும் இடத்தை இன்றிரவு அவனைக் கக்க வைத்திருப்பேன். அவன் தப்பிவிட்டான். அவனைத் தப்ப வைத்த யாரும் சோழ நாட்டுக்குத் துரோகம் செய்தவர் தான். வேங்கி நாட்டு மன்னன் மகள் தூதராயிருந்தாலும் அவரை இந்த ஒரு விஷயத்தில் மன்னிப்பது மிகவும் கஷ்டம்.”

“நீங்கள் சொல்வதில் நியாயமிருக்கிறது படைத்தலை வரே. உம்மைத் தவிர வேறு யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் நான் பதில் சொல்லியிருக்க மாட்டேன். ஆனால் நம்மிருவர் நாட்டு நலமும் இதில் அடங்கியிருக்கிறது. நானும் சோழ நாடுதான். நம்மிடையே பரஸ்பரம் அவநம்பிக்கை ஏற்படுவதில் அர்த்தமில்லை. தவிர இருவரும் சதியில் சிக்கியிருக்கிறோம். உமது சந்தேகம் இத்துடனாவது உடைகிறதா என்று பாரும்” என்று, அங்கியின் பக்கவாட்டுப் பையிலிருந்து ஒரு சிறு வாளை உறையுடன் எடுத்துப் பஞ்சணைமீது விட்டெறிந்தான் கரிகாலன்.

பஞ்சணை மீது ‘தட்’ என்ற சத்தத்துடன் விழுந்த சிறு வாளைக் கண்ட பிரும்ம மாராயன் பெருவிழிகள் சற்று நேரம் மலைத்து நின்றன. அந்த வாளை எடுத்து உறையை விலக்கிக் கத்தியை இரண்டு விநாடிகள் பரிசோதித்த படைத்தலைவன் முகத்தில் குழப்பம் தாண்டவமாடத் தொடங்கியது. மீண்டும் கரிகாலன் முகத்தில் நிலைத்த கண்களிலிருந்த கோபம் அடியோடு மறைந்துவிட்டாலும், குழப்பம் மட்டும் எஞ்சி நின்றது.

அவன் குழப்பத்துக்குக் காரணத்தைப் புரிந்துகொண்ட கரிகாலன், அவன் உள்ளத்தில் ஏதாவது சந்தேகம் மிஞ்சி யிருந்தால் அதையும் தொலைக்க உறுதி கொண்டவனாய், “ஏன் படைத்தலைவரே, என்ன யோசிக்கிறீர்கள்? என் அவயவங்களை வெட்டித் தள்ளவோ, தலையைச் சீவவோ சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று யோசிக்கிறீர்களா?” என்று கேட்டான் லேசாகச் சிரித்துக் கொண்டே.

ஏளனம் தொக்கி நின்ற அந்தச் சிரிப்பையும் அவன் வாயிலிருந்து உதிர்ந்த வார்த்தைகளையும் கேட்ட பிரும்ம மாராயன் போக்கில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. “மன்னித்துவிடுங்கள் கரிகாலரே! காரணமின்றி உங்களைக் கண்டபடி பேசிவிட்டேன்” என்றான் படைத்தலைவன்.

“இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது படைத் தலைவரே! சேரநாட்டின் பெரிய ஒற்றன் தப்பிவிட்டான். சந்தர்ப்ப சாட்சியங்கள் என்னைக் குற்றவாளியாகச் சுட்டிக் காட்டின. நீங்கள் சந்தேகித்தீர்கள். அதில் தவறேதுமில்லை. உம்முடைய நிலையில் நான் இருந்தால் இப்படித் தான் நடந்து கொண்டிருப்பேன்” என்று சமாதானப்படுத்தினான் கரிகாலன்.

பிரும்ம மாராயனுக்கு ஓரளவுதான் சமாதானமேற்பட்டது. கரிகாலன் விஷயத்தில் உண்டான சந்தேகம் மறைந்ததே யொழிய, ஜெயவர்மனுக்கு உதவிய பேர்வழி யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என்ற கோபம் மட்டும் தணியவில்லை. மாளிகையிலிருந்த அத்தனை வீரர்களையும் விசாரித்தும் நிலைமை தெளிவு படவில்லை. இதனால் வெகுண்டிருந்த படைத்தலைவனுக்கு இரவு வெகு நேரம் மட்டும் மனம் நிம்மதியில்லாமலே கிடந்தது. இரவு முற்றி வருவதைக் குறிப்பிட்டுக் கரிகாலன் கேட்ட கேள்விகளுக்குச் சரியான பதில் சொல்லக்கூடப் பிரும்ம மாராயனுக்கு அப்பொழுதிருந்த மனோநிலை இடம் கொடுக்கவில்லை. இரவு பெரிதும் முற்றிவிட்டதைக் கண்ட கரிகாலன், “படைத்தலைவரே! நான் போக வேண்டிய நேரம் வந்துவிட்டதே!” என்றான்.

அப்பொழுது தோட்டத்தில் ஆழ்ந்த சிந்தனையுடன் உலவிக் கொண்டிருந்த பிரும்ம மாராயனுக்குக் கரிகாலன் பேச்சு பெரும் தலைவேதனையாயிருந்தது. “எங்கு போக வேண்டும்?” என்று கேட்டான் படைத்தலைவன் அதிகச் சலிப்புடன்.

“அரசகுமாரியிடம் போக வேண்டாமா?” என்று கரிகாலன் வினவினான்.

“என்ன அவசரமோ?”

“அரசகுமாரி வரச் சொல்லியிருக்கிறார்கள்.”

“எதற்கு?”
“தங்கள் பதிலை அறிய.”

“எதற்குப் பதில்?”

“சதித்திட்ட ஏற்பாடுகள் எத்தனை தூரம் முன்னேறி இருக்கின்றன என்பதை அறிந்துவரச் சொல்லியிருக்கிறார்கள். தவிர, அரிஞ்சயன் ஏன் வரவில்லையென்றும் கேட்கச் சொன்னார்கள். அரிஞ்சயன் வராத காரணத்தைத் தெரிந்து கொண்டுவிட்டேன். ஏற்பாடுகள் எந்த நிலையில் இருக்கின்றன என்பது தெரியவில்லையே.” “ஏற்பாடுகள் சரியாகத்தான் நடந்து வருகின்றன.”

“என்ன ஏற்பாடுகளோ? விவரம் சொன்னால் அரச குமாரியிடம் சொல்கிறேன்.”

“விவரம் சொல்லும் அளவில் ஏற்பாடுகள் உருவாகவில்லை.”

“எப்பொழுது உருவாகும்?”

“ஜெயசிம்ம சாளுக்கியன் தலைநகர் வந்தபிறகுதான்.”

“ஏற்பாட்டின் தன்மை எப்பேர்ப்பட்டதென்று சொல்ல முடியுமா?”

“தற்சமயம் சொல்ல முடியாது.”

“ஏன்?”

“சொல்ல எனக்கு உரிமையில்லை.”

“யாருக்கு உரிமை இருக்கிறது?”

“இந்தச் சதியில் கலந்துகொள்ள வேங்கி நாட்டுப் படைத்தலைவர் மூவர், அரிஞ்சயன், இவர்கள் அனுமதி யில்லாமல் நான் எதையும் சொல்ல முடியாது.”

“அரசகுமாரி ஆணையிட்டால் கூடவா?”

“ஆம்.”

“விசித்திரமாயிருக்கிறது படைத்தலைவரே.”

“இதில் விசித்திரம் ஏதுமில்லை கரிகாலரே. ஜெயசிம்ம சாளுக்கியனுக்கு எதிராகச் சதி செய்து, அவன் பலத்தை உடைப்பதென்பது அவ்வளவு சுலபமல்ல. விஷயம் அம்பல மானால் அரசகுமாரி உட்பட எல்லாரையும் ஒழித்து விடுவான் ஜெயசிம்மன். இந்த விஷயத்தில் அரச குமாரிக்குக் கவலை வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். ஜெயசிம்மனை ஒடுக்கவும் நரேந்திரன் அரியணை ஆடாமல் திடப்படுத்தவும் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று சொல்லுங்கள். இது ஆண்கள் சம்பந்தப்பட்ட விவகாரம். பெண்கள் தலையீடு இருந்தால் காரியம் நடவாது” என்றான் பிரும்ம மாராயன்.

பிரும்ம மாராயன் திட்டம் எத்தன்மையது என்பதை அறிய, கரிகாலன் எவ்வளவோ முயன்றும் பலன் ஏதும் ஏற்படவில்லை. அதற்குள் நள்ளிரவும் நெருங்கத் தொடங்கி விட்டதால், பிரும்ம மாராயனிடம் விடை பெற்றுக் கொண்டு அரசகுமாரியைச் சந்திக்கக் கிளம்பினான் கரிகாலன். கிளம்பு முன்பாகப் பிரும்ம மாராயனை நோக்கி, “படைத்தலைவரே! அரிஞ்சயன் சிறையிலிருப்பது நமக்கு அபாயமல்லவா?” என்று கேட்டான்.

“ஆமாம்.”

“அப்படியானால் அவனை விடுதலை செய்ய முயற்சி எடுக்க வேண்டாமா?”

இதைக் கேட்ட பிரும்ம மாராயன் இடிஇடியென்று சிரித்தான். “கரிகாலரே! ஜெயசிம்மன் சிறையிலிருந்து அரிஞ்சயனை விடுவிப்பதா? நல்ல யோசனை. சாளுக்கியர் சிறைக்கூடத்தை நீர் பார்த்ததில்லை போலிருக்கிறது. எமன் கையிலிருந்து உயிரை மீட்டாலும் மீட்கலாம். சாளுக்கியர் சிறையிலிருந்து யாரையும் மீட்க முடியாது” என்றான் பிரும்ம மாராயன்.

‘அப்படிச் சிறை மீட்காவிட்டால் அரசகுமாரிக்குப் பேராபத்தாயிற்றே’ என்ற கவலையுடன் பிரும்ம மாராயனின் மாளிகையை விட்டு வெளியேறிய கரிகாலன், பல வீதிகளைச் சுற்றிக்கொண்டு கோட்டைச்சுவரின் பெரும் கதவிடம் வந்து நின்று, கதவை அழுத்தித் திறந்தான். அரச குமாரி கூறியது போலக் கதவு திறந்தேயிருந்தது. உள்ளே சென்று மிகுந்த ஜாக்கிரதையுடன் இரும்புத் தாழ்ப்பாளைப் போட்டுக் கதவை அடைத்துவிட்டு, வசந்த மண்டபம் நோக்கி நடந்தான்.

எங்கும் காரிருள் சூழ்ந்து நின்றது. இருப்பினும் கோட்டைச் சுவர் மீது நடமாடிக் கொண்டிருந்த காவ லாளிகளின் கண்களில் படக்கூடாதென்பதற்காக மிகுந்த எச்சரிக்கையுடன் மரங்களின் நிழல்களில் ஒதுங்கி நடந்து வசந்த மண்டபத்தையடைந்த கரிகாலன், மண்டபத்தின் வாயிற்கதவு அடைக்கப்படாமல் ஒருக்களித்து வைக்கப் பட்டிருந்ததைக் கவனித்து, உள்ளே புகுமுன் ஒருகணம் தாமதித்தான். அங்கிருந்த சூழ்நிலை அவன் மனத்தில் பற்பல சந்தேகங்களைக் கிளப்பிவிட்டது. ‘முதல் நாள் அரிஞ்சயனுக்காக நந்தவனத்தில் காத்திருந்த அரசகுமாரி, இன்று ஏன் எனக்காகக் காத்திருக்கவில்லை? மிகுந்த எச்சரிக்கையுடன் அரசகுமாரி அன்று தாழிட்ட வசந்த மண்டபக் கதவை, இன்று ஏன் திறந்து வைத்திருக்கிறாள்?” என்றெல்லாம் யோசித்தான். இத்தனையும் போதாதென்று வசந்தமண்டபம் பூராவிலும் இருள் சூழ்ந்து கிடந்தது. அரசகுமாரி ஒருவேளை உறங்கிவிட்டாளோ என்று நினைத்த கரிகாலன் எதற்கும் எச்சரிக்கையாக இருப்போமென்று, தன் நீண்ட வாளை உறையிலிருந்து உருவிக் கையில் பிடித்துக்கொண்டு, கதவை மெள்ளத் திறந்து உள்ளே நுழைந்து ஓர் அடி நடந்ததும், கதவு பட்டென்று சாத்தப்பட்டது. என்ன நடக்கிறது என்பதை அவன் நினைத்துப் பார்க்கும் முன்பு அவன் கையிலிருந்த வாள் சரேலென்று பிடுங்கப்பட்டது. தலையிலும் பலமான அடியொன்று இடிபோல் விழுந்தது. கரிகாலன் ஒருமுறை தள்ளாடினான். அடுத்த விநாடி அவன் கால்கள் சுரணையற்றுப் போயின; கண்கள் சுழன்றன. பிரக்ஞை பறந்தோடிவிட்டது.

Previous articleMannan Magal Part 1 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here