Home Historical Novel Mannan Magal Part 1 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

81
0
Mannan Magal Ch 17 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,

Mannan Magal Part 1 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 17 எதிர்பாராத சந்திப்பு

Mannan Magal Part 1 Ch 17 | Mannan Magal | TamilNovel.in

வேங்கி நாட்டு மன்னன் மாளிகையின் உதய தாரைகள் பலமாக முழங்கியதால், சுரணை வந்து விழித்துக் கொண்ட கரிகாலன் கண்களுக்கு, எதிரே கிருஷ்ணா நதியின் ஜலப் பிரவாகம் மிக ரம்மியமாகக் காட்சியளித்தது. அதன் நீர்மட்டத்தைக் காலைக் கதிரவனின் இளம் கதிர்கள் தழுவிச் சென்றதால், பிரவாகத்தில் வட்ட மிட்டு நின்ற நீர்ச்சுழல்களின் ஒளி ஊடுருவிப் பளபளத்த தன்றி, கரையோரச் சிற்றலைகளும் பல கண்ணாடிகள் போல் ஜொலித்துக் கொண்டிருந்தன. பிரவாகம் பலமாக இருந்ததால் செக்கச் செவேலென்றிருந்த அந்தத் தங்கநிற நீரில் ஸ்நானம் செய்து, இடுப்பளவு ஜலத்தில் நின்ற அந்தணர்கள் இரு கரங்களிலும் நீரை உயர ஏந்தி மந்திரங்களை ஓதி அர்க்கியம் விட்டுக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் நீராட்டத்தை முடித்துக்கொண்டு, வெண்கலச் செம்புகளை நன்றாகத் துலக்கி, கிருஷ்ணா நதியின் புனித நீரை மொண்டு கொண்டு, வேதமோதிக் கொண்டே இல்லம் நோக்கி விரைந்து கொண்டிருந்தனர். பொழுது விடிந்துவிட்டதால், தங்கள் தொழிலை நடத்த விரைந்த மீனவர்கள் தங்கள் படகுகளை ஆற்றுக்குக் குறுக்கே செலுத்திக் கொண்டே வலைகளை விசிறி மீன்களைத் தேடலாயினர். உழவர்களும் தோள்களில் கலப்பையுடன் சாரி சாரியாக ஆற்றின் கரையோரமாகச் சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைவிட வேலையில் அதிக ஊக்கத்தைக் காட்டுவன போல் ஜோடிக் காளைகள் பல கழுத்துகளிலிருந்த வெண்கல மணிகள் இன்னொலி எழுப்ப, உழவர்களுக்கு முன்னால் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தன. இடையே நின்று ஒன்றை ஒன்று முட்டத் தொடங்கிய ஓரிரு காளைகளை உழவர்கள் அடிக்கடி விலக்கி ஓட்டினர். கிருஷ்ணா நதியில் ஸ்நானம் செய்துவிட்டுக் கரைமீது நடந்து சென்ற காரிகை யரின் இன்ப மேனிகளிலும், அவர்கள் கழுத்திலிருந்த ஆபரணங்களிலும் கதிரவனின் கதிர்கள் பாய்ந்து பிரமை தட்டும் மெருகை அளித்து, அவர்களை ஏதோ தேவகன்னிகள் போலத் துலங்கச் செய்தன.

ஆதவன் எழுந்துவிட்டதால் உயிர்களும் எழுந்து விட்டன. அவன் கிரணங்கள் தாக்கத் தாக்க உயிர்களின் நடமாட்டமும் வேகம் பெற்றது. பஞ்ச பூதங்களிலும் உயிர் கலந்திருப்பதாகத் தான் சாஸ்திரங்கள் போதிக்கின்றன. ஆனால், நித்தம் உயிர்களைத் தட்டி எழுப்பும் பணியை ‘மாத்திரம் தீப்பிழம்பான கதிரவனே ஏற்று உலகை ஆட்டும் மர்மம் என்ன? ஆதவன் மறைந்ததும் உயிர்கள் படுப்பானேன்? அவன் எழுந்ததும் உயிர்கள் எழுந்திருப்பானேன்? காற்றுக்கும் நீருக்கும் ஆகாசத்துக்கும் இல்லாத இந்த மாபெரும் சக்தியை அவன் மட்டும் அடைவானேன்.

‘கிருஷ்ணா நதியின் இன்பத் தோற்றமும் உயிர்களின் அசைவும் தர்க்கசாஸ்திரியான கரிகாலன் மனத்திலே இந்தமாதிரி பலப்பல எண்ணங்களை எழுப்பவே, அவன் முந்திய நாளிரவு தான் தலையில் அடிபட்டு விழுந்ததைப் பற்றியோ தன் வாழ்க்கையில் ஏற்பட்ட இதர நிகழ்ச்சி களைப் பற்றியோ சிறிதும் சிந்திக்காமல், கிருஷ்ணா நதி தீரத்தையே நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். பிறகு மெள்ள அருகேயிருந்த இடங்களில் அவன் கண்களை ஓட்டவே, அவன் நினைப்பு உயிர் தத்துவங்களை எண்ணுவதிலிருந்து சற்று விலகி, அரசியல் விவகாரங்களிலும் வட்டமிடலாயிற்று. தான் இருந்த இடத்துக்கு வெகு அருகே தெரிந்த இடைச் சுவரையும் அதை அடுத்து நின்ற வசந்த மண்டபத்தையும் நோக்கிய கரிகாலன், தான் இருக்குமிடம் மன்னன் மாளிகையாகத் தான் இருக்க வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டான். அத்துடன் பூமி மட்டம் மிகவும் கீழே இருந்தாலும் வெகு தூரம் வரை தனது கண்ணோட்டம் செல்வது சாத்தியமாயிருந்தாலும், அரண்மனையின் மேல் உப்பரிகை அறையொன்றில் தான் இருப்பதையும் உணர்ந்தான். இல்லாவிட்டால் எதிரேயிருந்த அந்தப் பெரிய சாளரத்தின் மூலம் தான் கண்ட அத்தனை இன்பக் காட்சிகளைக் காணுவது சாத்தியமல்லவென்று புரிந்துகொண்ட அவன், தான் படுத்திருந்த இடத்தில் சற்றே புரண்டான்.

படுக்கை மெத்தென்றிருந்தது. சாளரத்தின் மரச் சட்டத்தின் மட்டத்தையொட்டிப் படுக்கை கிடந்ததால் உயர்ந்த ஒரு மஞ்சத்தின் மீது தான் படுத்திருந்தது தெரிந்தது கரிகாலனுக்கு. முந்திய இரவில் வசந்த மாளிகையில் தன்னை மண்டையிலடித்தவன் யாராயிருந்தாலும் தனக்குப் படுக்கும் வசதியை மட்டும் நன்றாகச் செய்திருந்ததை அறிந்த கரிகாலன் ‘மண்டையில் அடிப்பானேன்? பின்னர் மலர்ப்படுக்கையில் கிடத்துவானேன்?’ என்று எண்ணித் தனக்குள்ளேயே லேசாக நகைத்துக் கொண்டான். பிறகு மெள்ளத் தலையில் அடிபட்ட இடத்தைத் தடவிப் பார்த்துக் காயம் ஏதும் ஏற்படவில்லை என்பதையும், அடித்தவன் மயக்கம் வரும் தினுசில் இடம் பார்த்து அடித்திருக்கிறானே யொழிய, தன்னைக் கொல்லும் நோக்கம் அவனுக்கில்லை யென்பதையும் ஊகித்துக் கொண்டான். அடிபட்ட இடத்தில் லேசாக எழும்பியிருந்தது, அவ்வளவுதான். அவனுடைய சுருண்டிருந்த மயிர்களும் அதை மறைத்து நின்றதால், எழும்பி இருந்த இடமும் வெளியில் தெரியவில்லை .
மெள்ளச் சமாளித்துக்கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்த கரிகாலன், அந்த அறையைச் சுற்றுமுற்றும் நோக்கினான். அறைச் சுவர்களிலிருந்த சித்திர வேலைப் பாடுகளும், ஆங்காங்கு போடப்பட்டிருந்த மஞ்சங்களும், அந்த அறை மன்னருக்காகவோ அல்லது அவரைச் சேர்ந்த

உறவினர்களுக்காகவோ ஏற்பட்டிருக்க வேண்டுமென்பதை நிரூபித்தன; மஞ்சங்களின் கைகளின் முகப்புகளிலிருந்த சிங்கத் தலைகளையும், மஞ்சங்களின் பிற்பகுதியில் உடல் சாயும் இடங்களுக்கு மேலே செதுக்கப்பட்டிருந்த வேங்கி நாட்டு ராஜ முத்திரைகளையும் கவனித்த கரிகாலன், இது மன்னர் தங்கும் அறையாகத்தான் இருக்குமென்று தீர்மானித்தான். தன்னை மண்டையிலடித்தவன் மன்னர் அறையில் தன்னைக் கிடத்த வேண்டிய அவசியமென்ன என்று யோசித்துப் பார்த்தான். அவனுக்கு ஏதுமே விளங்க வில்லை. அறையின் ஒரு மூலையில் தொங்கிக்கொண்டிருந்த திரைச்சீலையில் நெய்யப்பட்டிருந்த சித்திர மொன்றும், திரைச்சீலை காற்றில் ஆடியதால் அசைந்து அசைந்து அவன் குழப்பத்தைக் கண்டு நகையாடியது.

கரிகாலன் மெள்ளப் பஞ்சணையிலிருந்து கீழே இறங்கி அறையில் தீவிர யோசனையுடன் நீண்ட நேரம் உலாவினான். அதிர்ஷ்டத்தைத் தொடர்ந்து துரதிர்ஷ்டம் எப்படி வருகிறது என்பதை நினைந்து பெரிதும் வியப்பும் அடைந்தான். ‘சைவத் துறவியிடம் கத்தியைக் கொடுத்துவிட்டு வந்த நான், பிரும்ம மாராயன் என் கச்சையைக் கவனித்த தும் எனக்கு முடிவு காலம் வந்துவிட்டதென்றே நினைத்தேன். ஆனால், அங்கி, இராஜராஜ நரேந்திரனுடைய அங்கியாகையாலும், அரசர்கள் அங்கியில் எப்பொழுதும் பாதுகாப்புக்கு வாள் ஒன்றும் இருப்பது வழக்கமானதாலும் நரேந்திரனுடைய சிறுவாள் எனக்குக் கிடைத்தது. அதைக் காட்டித் தப்பினேன். ஆனால் வசந்த மண்டபத்தில் மன்னன் மகள் என்னை எதிர்பார்த்திருப்பாளென்று நினைத்து வந்தேன். காரிகையைப் காணப் போன இடத்தில், கட்டாரி தலையில் இறங்கியதுதான் மிச்சம். அப்பா! ஒரு கண்டத்திலிருந்து தப்பினால் அதைவிடப் பெரிய கண்டத்திலா அகப்பட்டுக் கொள்ள வேண்டும்?’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

“மறுநாள் நள்ளிரவில் வசந்த மண்டபத்துக்கு என்னை வரச்சொன்ன மன்னன் மகள், ஏன் அங்கு இல்லை? அவள் இல்லாதிருக்க, அவள் சொன்ன நேரத்தில் கோட்டைக் கதவைத் திறந்து வைத்தவர்கள் யார்? அரசகுமாரி என்னிடம் செய்தி சொல்லியனுப்பிய போது பணிப்பெண் மாலினியைத் தவிர வேறு யாரு மில்லையே! அப்படியிருக்க நான் நள்ளிரவில் வரப் போகும் விஷயம் மற்றவர் களுக்கு எப்படித் தெரிந்தது?’ என்று ஏதேதோ யோசித்துப் பார்த்து, விடையேதும் கிடைக்காததால் உலாவுவதை நிறுத்திக்கொண்டு தன் கச்சையைச் சோதித்துப் பார்த்தான். கச்சையிலிருந்த இரண்டு மோதிரங்களும், செங்கதிர் மாலையும், தஞ்சைத் துறவி கொடுத்த ஓலையும் அப்படியே இருந்ததைக் கவனித்தான். கரிகாலன் மித மிஞ்சிய வியப்பால் பிரமித்தான். தன்னைத் தலையிலடித்துக் கொண்டு வந்தவன், தன்னைச் சிறிதும் சோதனை செய்யவே இல்லையென்பதையும் கூட உணர்ந்தும், தன்னைக் கொணர்ந்தவன் நோக்கந்தான் எதுவாயிருக்கும் என்பதைச் சிந்தித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், அறைக் கதவு திறந்து காவலாளி ஒருவன் உள்ளே நுழைந்து கரிகாலனை மிகவும் பயபக்தியுடன் வணங்கி நின்றான்.
“யாரப்பா நீ?” என்று விசாரித்தான் கரிகாலன்.

“தங்கள் அடிமை!” என்றான் காவலாளி.

“காவலில் வைக்கப்படுகிறவர்களுக்கு அடிமைகள் இருப்பதுண்டா?”

“ஆகா உண்டு. யார் காவலில் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. பதவிக்குத் தகுந்த மரியாதை.”

“எனக்கு அப்படி என்ன உயர் பதவி இருக்கிறது?”

“எனக்குத் தெரியாது எசமான். ஆனால் தங்களை மிகவும் மரியாதையாக நடத்துமாறு எனக்கு உத்தரவு. தங்களுக்கு எந்தப் பணிவிடையும் செய்ய வேண்டு மென்பது கட்டளை.” “யார் கட்டளை?”

“நீங்கள் பல் துலக்கி ஸ்நானபானாதிகளை முடித்துக் கொண்டதும் அழைத்து வர உத்தரவிட்டிருக்கிறார்கள்.”

“உத்தரவிட்டது யார் என்று கேட்கிறேன்” என்று சற்றுக் கோபத்துடன் கேட்டான் கரிகாலன். ஆனால் காவலாளி சிறிதும் மசியாமலே பதில் சொன்னான்.

“புரிந்தது எசமான். ஆனால் யார் என்பது எனக்குத் தெரியாது. மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாக அரண்மனைத் தலைமைக் காவலாளி சொன்னார். அதிகமாகத் தங்களிடம் பேச வேண்டாமென்றும் உத்தரவிருக்கிறது. ஸ்நானத்திற்குத் தயார் செய்துவிட்டேன் புறப்படுங்கள்.”
“வேறு ஆடையில்லையே எனக்கு” என்றான் கரிகாலன்.

“அதற்கெல்லாம் ஏற்பாடாகியிருக்கிறது” என்ற காவலாளி, தன்னைத் தொடரும்படி கரிகாலனுக்குச் சமிக்ஞை செய்தான். அவனைத் தொடர்ந்து சென்ற கரிகாலனுக்கு ஆச்சரியத்தின் மேல் ஆச்சரியம் காத்திருந்தது. ஓர் அரசன் ஸ்நானம் செய்வதற்கு வேண்டிய சகல வசதிகளும் ஸ்நான அறையில் இருந்தன. ஸ்நானத்தை முடித்ததும் அவனுக்குக் கொடுக்கப்பட்ட உடை, முந்திய நாளன்று வசந்த மண்டபத்தில் மன்னன் மகள் தனக்கு அளித்தது போன்ற உடையாக இருக்கக் கண்டு, ‘இராஜ ராஜ நரேந்திரன் உடையை நமக்கு அளிக்கக்கூடியது யாராயிருக்கும்? அரசகுமாரிதான் இங்கு நம்மைக் கொண்டு வந்திருக்கிறாளோ? அப்படியானால்? மண்டையிலடித்து, கொண்டு வருவானேன்? அழைத்தால் நானாக வரமாட்டேனா?’ என்று நினைத்துக்கொண்டு, உடையை அணிந்து கொண்டு மோதிரங்களையும் செங்கதிர் மாலையையும் தஞ்சைத் துறவியார் சோழர் படைத்தலைவனான இராஜ ராஜ அரையனுக்குக் கொடுத்த ஓலையையும் கச்சையில் பத்திரப்படுத்திக் கொண்டு, மீண்டும் பழைய அறைக்கு வந்தான். அங்கு வந்ததும் காலை போஜனமும் அளிக்கப்பட்டது.

நிம்மதியான ஸ்நானமும் சுவையான சிற்றுண்டியும் கிடைத்ததன் காரணமாகப் பழைய நிலையை அடைந்து விட்ட கரிகாலன், தன்னை அரண்மனைக்குக் கொண்டு வந்தவரைச் சந்திக்கும் நேரத்தை எதிர்பார்த்து நின்றான். ஒரு ஜாம நேரத்திற்கெல்லாம் அரண்மனை ஆலாட்சி மணி முழங்கியது. அதன் சப்தத்தோடு குதிரை வீரர்கள் படு வேகத்தில் பாய்ந்து வந்து அரண்மனை இராக் காவலரை அனுப்பி வைத்ததால் உண்டான கோஷமும் கலந்து கொள்ளவே, மன்னர் குடிகளுக்குப் பேட்டி கொடுக்கும் நேரம் வந்துவிட்டதென்பதைக் கரிகாலன் அறிந்து கொண்டான். ஆலாட்சி மணி ஒலித்த அடுத்த சில விநாடிகளுக்கெல்லாம் அவனுக்கு அழைப்பு வந்தது.

பாதம் வரையில் தொங்கும் நீண்ட கத்தியுடன், அறைக்குள் நுழைந்த கம்பீரமான வீரன் ஒருவன், “தாங்கள் புறப்படச் சித்தமா?” என்று விசாரித்தான்.

“எங்கு போக வேண்டும்?” என்று கேட்டான் கரிகாலன்.

வந்தவன் மிகுந்த பணிவைக் காட்டினாலும், அவன் குரல் மட்டும் சற்றுக் கண்டிப்பாகவே இருந்தது. “என்னைத் தொடர்ந்து வர வேண்டும்” என்றான் வீரன் பதிலுக்கு.

அவனை மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்பதில் அர்த்தமில்லை என்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்ட கரிகாலன் பதிலேதும் சொல்லாமல், அவனைப் பின்தொடர்ந்தான். அரண்மனை உப்பரிகையின் நீண்ட தாழ்வாரங்களின் வழியாகவும் வளைந்து வளைந்து கீழே இறங்கிய படிகளின் வழியாகவும், கரிகாலனை அழைத்துச் சென்ற வீரன் அரண்மனைக்கு முற்புறமிருந்த பசும் புற்றரையையும் கடந்து, எதிரேயிருந்த பிரம்மாண்டமான மற்றொரு மாளிகையை நோக்கி நடந்தான்.

மாளிகையின் மூன்று வாயில்களிலும் காவல் பலமா யிருந்தது. குதிரைகளில் அமர்ந்து பெரும் வேல்களைத் தாங்கி நின்ற வீரர்கள் – பலர் சிலைகள் போல் நின்றிருந்தார்கள். ராஜ உடைகளை அணிந்த பலர் வாகனங்களில் வந்திறங்கி, மாளிகைக்குள் போய்க்கொண்டும் வந்து கொண்டுமிருந்தார்கள். சாதாரணக் குடிமக்கள் தங்கள் குறைகளைத் தெரிவித்துக்கொள்ள வாசலில் குவிந்து கிடந்தார்கள். இந்தக் கூட்டங்களையெல்லாம் தாண்டிக் கரிகாலனை அழைத்துச் சென்ற வீரன் மாளிகைக்குள் எந்தவிதத் தடையுமின்றிச் சென்றான். மாளிகையின் முன் மண்டபத்தில் பேட்டிக்குக் காத்துக் கொண்டிருந்த பல பிரபுக்களைக்கூட லட்சியம் செய்யாமல் அவன் உள்ளே தன்னை அழைத்துச் சென்றதைக் கண்ட கரிகாலன், மன்னன் சன்னிதானத்துக்குத்தான் செல்வதாகவே நினைத்தான். மாளிகையின் முதல் உப்பரிகையில் சென்றதும், ஓர் அறை வாசலில் அவனைச் சற்று நேரம் நிற்க வைத்த வீரன் அங்கிருந்த காவலாளியின் காதில் ஏதோ கிசுகிசுவென்று சொன்னான். அதைக் கேட்டதும், ஏதோ புரிந்து கொண்டது போல் தலையசைத்த அந்தக் காவலாளி, உள்ளே சென்று விலையுயர்ந்த ஆடைகளைத் தரித்துக் கொண்டிருந்த ஒரு பெரிய மனிதருடன் திரும்பி வந்தான். அவருடைய உடையிலிருந்தும், இடுப்பில் பட்டையாக வளைத்துக் கட்டப்பட்டிருந்த சரிகைப் பட்டையிலிருந்தும், அவர் அரண்மனை ஸ்தானிகராயிருக்க வேண்டுமென்று தீர்மானித்த கரிகாலனை சிறிது நேரம் அவர் கூர்ந்து நோக்கினார். பின்னர் தம்முடன் உள்ளே வரும்படி தலையை அசைத்து வழிகாட்டிச் சென்றார். அறை மிக நீளமாயிருந்தது. அதன் விஸ்தீரணத் தையும் உயரத்தையும், அழகையும் கண்டு இது அறையா, மண்டபமா என்று பிரமித்துக் கொண்டே நடந்த கரிகாலன், அந்த விஸ்தீர்ணமான அறைக்கு உள்ளேயிருந்த மற்றோர் அறை வாசலில் சிறிது நேரம் நிற்க வைக்கப் பட்டான். அந்த உள் அறைக்குள் சென்று, கண்ணி மைக்கும் நேரத்தில் திரும்பி வந்த ஸ்தானிகர், “மன்னர் உங்களைக் காண்பார் வாருங்கள்!” என்று கூறி அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தார். மன்னர் என்றதும் இராஜராஜ நரேந்தினைக் காணப்போவதாக எண்ணி அறைக்குள் நுழைந்து தலை தூக்கிப் பார்த்த கரிகாலன், அந்த அறையிலிருந்த மகராசனத்தில், நடுத்தர வயதுள்ள திடகாத்திரசாலியான ஒரு மனிதன் உட்கார்ந்திருப்பதைக் கண்டு பிரமித்துப் போனான். அப்படி அவன் பிரமை யடைந்து நிற்பதைக் கண்ட ஸ்தானிகர் நடுங்கும் குரலில், “மன்னருக்குத் தலை வணங்குங்கள்” என்று காதுக்கருகே முணுமுணுத்தார்.

“இவரா மன்னர்?” என்று கேட்டான் கரிகாலன் மெதுவாக.

“ஆமாம் ஜெயசிம்ம சாளுக்கிய மன்னர் இவர்தான். சீக்கிரம் தலைதாழ்த்துங்கள்” என்றார் ஸ்தானிகர்.

கரிகாலன் தலைவணங்கி, மீண்டும் தலைதூக்கி ஜெய சிம்ம சாளுக்கியனை நோக்கினான். வல்லூரின் கண்களைப் போல் ஜொலித்த இரண்டு கூர்விழிகள் அவன் இதயத்தையே ஊடுருவின போல் நோக்கிக் கொண்டிருந்தன. மேற்குத் திசையில் சோழ நாட்டை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டிருந்தவனும் வேங்கி நாட்டு அரசியலின் தலைவிதியை நிர்ணயிக்க முனைந்திருப்பவனும், நிரஞ் சனாதேவியின் பரம எதிரியுமான ஜெயசிம்ம சாளுக்கியன் எதிரில் தான் நிற்பதை உணர்ந்துகொண்ட கரிகாலன், பலதரப்பட்ட உணர்ச்சிகளுக்கு வசமானான். மிகத் திறமை சாலியும் ஏராளமான ஒற்றர்களை வைத்திருப்பவனும் சோழர் படைத்தலைவனுமான பிரும்ம மாராயனுக்கும் தெரியாமல் வேங்கி நாட்டுத் தலைநகருக்குள் நுழைந்து விட்ட ஜெயசிம்ம சாளுக்கியனின் இணையற்ற திறமையை எண்ணிப் பிரமித்துப் போன கரிகாலனை, ஜெயசிம்ம சாளுக்கியனின் இதழ்களில் தோன்றிய புன்முறுவலொன்று இன்னும் அதிகமாகப் பிரமிக்க வைத்தது. ஜெயசிம்மன் வாயிலிருந்து அடுத்தபடி உதிர்ந்த வார்த்தைகள் அந்தப் பிரமிப்பை உச்ச நிலைக்குக் கொண்டு போய்விடவே, கற்சிலையெனச் சமைந்து நின்றான் கரிகாலன்.

Previous articleMannan Magal Part 1 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here