Home Historical Novel Mannan Magal Part 1 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

178
0
Mannan Magal Ch 18 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 18 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 18 இரண்டு வைரங்கள்

Mannan Magal Part 1 Ch 18 | Mannan Magal | TamilNovel.in

ஐந்தாவது விக்கிரமாதித்தன் மகனும், பாரத நாட்டின் சரித்திரத்திலே அழியாத இடம் பெற்றவனும், பாவலர் பலரால் பாடப்பெற்றவனும், எதிரிகளான சோழர்களாலேயே ‘மாவீரன்’ எனப் புகழ்ந்து போற்றப் பெற்றவனுமான ஜெயசிம்ம சாளுக்கியனை எதிர்பாராது சந்திக்க நேர்ந்தபடியாலும், அதைவிட எதிர்பாராத விதமாக அவனிடமிருந்து எழுந்த கேள்வியாலும், கல்லெனச் சமைந்து நின்ற கரிகாலன் சில விநாடிகளில் தன்னைக் கவ்விக்கொண்ட பிரமையை உதறித் தள்ளிவிட்டு எதிரேயிருந்த சாளுக்கிய மன்னன் மீது தனது ஆராய்ச்சி விழிகளை ஓட்டினான்.

ஆறடிக்கும் மேலாக நல்ல உயரத்துடன் இருந்த ஜெய சிம்மன், அப்புறமோ இப்புறமோ சாயாமல் மகராசனத்தின் நடுவே திடமாக உட்கார்ந்திருந்தான். நீண்ட அவன் கால்கள் கூட அசதி காட்டி வளைந்து கிடக்காமல் உறுதியுடன் அடியில் கிடந்த பட்டுத் தலையணையின் மேல் பதிந்து கிடந்தன. எந்த இடத்திலும் அதிகப் பருமனோ இளைப்போ இல்லாமல் ஒரே சீராக இருந்த அவனுடைய தங்க நிற மேனியில், சதை அழுத்தமாகப் பிடித்துத் திட காத்திரமான உருவத் தோற்றத்தை அவனுக்கு அளித்திருந்தது. திண்மையான அவன் கைகள் முழுவதும் அங்கியால் மூடப்படாததால் முழங்கைக்குக் கீழேயிருந்த பகுதியில், வெட்டுக் காயங்கள் பல தெரிந்து, அவன் பல போர்களைக் கண்ட மாபெரும் வீரன் என்பதைப் பறைசாற்றின. சற்று நீளமான முகம்தான். இருந்தாலும் பரம்பரையாக வந்த ராஜகளை அதில் ஜொலித்துக் கொண்டிருந்தது. நடுத்தர வயதை அவன் லேசாகத் தாண்டிவிட்டதையும், ராஜரீகத்தில் அவனுக்கிருந்த தொல்லைகளாலேற்பட்ட கவலையையும் அறிவுறுத்த, அவன் தலையில் ஓடியிருந்த ஓரிரு நரை மயிர்களும் மற்ற கேசங்களின் கறுமையில் கலந்து நின்றமையால் அவனது முகம் உள்ள வயதைவிட ஓரிரண்டு ஆண்டுகளைக் குறைத்தே காட்டியது. கம்பீரமான அந்த முகத்தில் காணப்பட்ட பெரும் மீசைகூட அவன் அழகைக் குறைக்கச் சக்தியற்றிருந்தது. அவனுடைய விசாலமான நெற்றியும் கூர்மையான நீண்ட நாசியும் அவன் பழைய ஆரிய வமிச பரம்பரையில் வந்தவன் என்பதை நிரூபித்தன. பருந்தின் கண்களைவிடக் கூர்மை யாகப் பார்க்கும் சக்தி வாய்ந்த அவன் கண்களில் ஏதோ ஒரு புதிய ஒளி இருந்துகொண்டே இருந்தது. அந்த ஒளி கண்ணுக்கு அழகைவிடச் சூழ்ச்சி நிரம்பிய பார்வையை அளித்ததால், ஜெயசிம்ம சாளுக்கியனிடம் பேசும்போது ஓரளவு எச்சரிக்கையுடனேயே பேச வேண்டுமென்பதைக் கரிகாலன் தீர்மானித்துக் கொண்டான்.

கரிகாலன் தன்னைக் கண்டு கல்லாய்ச் சமைந்து விட்டதையும், பிறகு சமாளித்துக்கொண்டு தன்னை ஆராய முற்பட்டதையும் கவனித்த ஜெயசிம்மனின் இதழ்களில் குரூரமான புன்முறுவல் ஒன்று படர்ந்தது. எதிரே தன்னைக் கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்த கரிகாலன் முக ஜாடையைப் பார்த்த ஜெயசிம்ம சாளுக்கியன் முகத்தில் திடீரென அந்தப் புன்முறுவல் மறைந்து, ஒருவிதச் சந்தேகச் சாயை படரலாயிற்று. ஆனால் எந்த உணர்ச்சிகளையும் நிமிஷ நேரத்தில் மறைத்துக் கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்த ஜெயசிம்ம சாளுக்கியன், அந்தச் சந்தேகக் குறியையும் வெளியில் காட்டாமல் உள்ளடக்கிக் கொண்டு, “கரிகாலா! விமலாதித்தன் மகள் நேற்றிரவு வசந்த மண்ட பத்திற்கு உன்னை எதற்காக வரச்சொன்னாள்?” என்று மீண்டுமொரு முறை தன் கேள்வியை வீசினான்.

ஜெயசிம்மனை ஏறெடுத்துப் பார்த்து, அவனை ஓரளவு எடை போட்டுக் கொண்டதால் அதிகப் பொய் அவனிடம் பலிக்காதென்பதைக் கவனித்த கரிகாலன் பொய்யையும் உண்மையையும் கலந்து பேச ஆரம்பித்தான். மன்னன் மகள் சதியில் சிக்கியிருக்கிறாளென்பதற்குச் சரியான சாட்சியம் மட்டும் கிடைக்குமானால், ஜெயசிம்ம சாளுக்கியன் அவளை ஒழித்துவிடுவானென்பதையும், தன் மூலம் அந்த சாட்சியத்தைச் சிருஷ்டிக்கவே அவன் முயல் கிறானென்பதையும் லவலேசமும் சந்தேகமில்லாமல் புரிந்துகொண்ட கரிகாலன் மிகுந்த எச்சரிக்கையுடனேயே பதில் சொல்லத் துவங்கி, “விமலாதித்தன் மகளா! நிரஞ்சனா தேவியைத்தானே தாங்கள் குறிப்பிடுகிறீர்கள்?” என்று வினவினான்.

“ஆம்!” ஒரே வார்த்தையில் வந்தது ஜெயசிம்ம சாளுக் கியனின் பதில், மிகக் கண்டிப்பான குரலில். அவன் பார்வை அவன் மேற்கொண்டு பேச இஷ்டப்படவில்லை யென்பதையும், தகவலைக் கரிகாலனிடமிருந்தே எதிர் பார்ப்பதையும் வலியுறுத்தியது.

“மன்னவா! தங்கள் கேள்வி தவறாயிருக்கிறது. திருத்திப் பதில் சொல்ல அனுமதி உண்டா?” என்று மிகப் பணிவுடன் கேட்டான் கரிகாலன்.

இந்தப் பதில் ஜெயசிம்மனுக்கு வியப்பைக் கொடுத் திருந்தாலும், அதை அவன் முகம் வெளியில் காட்ட வில்லை.

“கேள்வி தவறா?” என்ற கேள்வி மிகச் சாதாரணமாகவே ஒலித்தது. குரலில் முதலிலிருந்த கடுமை கூட இல்லை.

இன்னொலி ஒலிக்க மிக அபாயமான மனிதனிடம் தான் சிக்கியிருப்பதைக் கரிகாலன் உணர்ந்துகொண்டான். ஜெயசிம்மன் குரலில் ஏற்பட்ட மாறுதல், புதிதாகத் தொனித்த இன்னொலி, கண்டிப்பும் கடமையும் நிறைந்த முதல் ஓசையைவிடக் கெடுதலானதென்பதையும், குரலில் ஒலிக்கக் கண்களில் கபடப் பார்வை ஏறுவதால், மன்னன் தன்னைச் சரியானபடி சோதிக்கத் தீர்மானித்திருக்கிறா னென்பதையும் தான் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொண்டாலொழியத் தலை தப்புவது தம்பிரான் புண்ணியம் தானென்பதையும் திட்டமாகத் தெரிந்து கொண்ட கரிகாலன், “ஆமாம் மன்னவா! கேள்வியில் ஒரு சிறு தவறு இருக்கிறது!” என்றான்.

“என்ன தவறு?”

“மன்னன் மகள் என்னை வசந்த மண்டபத்திற்கு வரச் சொன்னதாகக் குறிப்பிட்டீர்கள்…”

“ஆமாம் உண்மை அதுதானே?”

“அதல்ல மன்னவா!”

“அப்படியா! உண்மை சற்று மாறுபட்டிருக்கிறதா?”

“ஆமாம் மன்னவா!”

“உன்னை வசந்த மண்டபத்துக்கு வரச்சொல்லி நிரஞ்சனா தேவியிடமிருந்து ஆணையில்லை?”

“இல்லை.”

“அரச மகளிர் வேனிற் காலத்தில் உறங்கும் வசந்த மண்டபத்தை வேடிக்கை பார்க்கப் போயிருக்கிறாய்.?”

“வேடிக்கை பார்க்கப் போகவில்லை மன்னவா.”

“திருடவா?”

இந்தக் கேள்வி கரிகாலனுடைய நிதானத்தையும் ஓரளவு குலுக்கவே, அவன் கண்களில் கோபம் லேசாகத் துளிர்த்தது. தான் சமாளிக்க வேண்டிய மனிதனை உத்தே சித்துக் கோபத்தை அடக்கிக் கொண்டு புன்முறுவலை வரவழைத்துக் கொண்டான். “சாளுக்கிய மன்னர்களுக்குத் திருடர்களிடம் பழக்கமுண்டென்று இதுவரை கேள்விப் பட்டதில்லை” என்ற அவன் பதிலில், பரிகாசமும் கலந்திருந்தது.

“எனக்குத் திருடர்களிடம் சம்பந்தமா?” என்று கேட்ட ஜெயசிம்ம சாளுக்கியன் குரலில், ஆச்சரியம் தொனித்ததே தவிர கோபச் சாயை இம்மிகூட இல்லாததைக் கண்ட கரிகாலனே வியப்பினால் அசந்து போனான். இருந்தாலும் உணர்ச்சிகளை வெளியில் காட்டாமல், “சம்பந்தம் மட்டுமல்ல மகாராஜா! அவர்களிடம் தங்களுக்குள்ள மதிப்பும் அளவற்றதாயிருக்கிறது” என்றான். “திருடர்களிடம் எனக்கு மதிப்பா!”

“ஆம் மகாராஜா! திருடனுக்கு நேற்றிரவு படுக்க மலர்ப்படுக்கை அளித்திருக்கிறீர்கள். காலையில் ராஜ ஸ்நானமும், அரச போஜனமும், விலை உயர்ந்த பட்டாடையும் கிடைத்திருக்கிறது. என்னைப் போன்ற திருடனிடத்தில் தங்களுக்கு எத்தனை மதிப்பு!” என்றான் கரிகாலன்.

ஜெயசிம்ம சாளுக்கியனுக்குக் கரிகாலன் வார்த்தை களால் கோபம் இம்மியளவும் ஏற்படவில்லை. “உன்னைத் திருடன் என்று சொல்லவில்லை கரிகாலா! மன்னன் மகள் உன்னை வரச் சொல்லவில்லையென்று சொன்னாய்; நீயாகப் போனதாகக் கூறினாய்” என்று வாத்தைகளை முடிக்காமல் விட்ட ஜெயசிம்மனை இடைமறித்த கரிகாலன், “மன்னவா, நானாகப் போனால் திருடத்தான் போக வேண்டுமா?” என்று வினவினான்.

“சந்தர்ப்பச் சாட்சியங்கள் அப்படித்தான் சுட்டிக் காட்டுகின்றன” என்றான் ஜெயசிம்மன் சாவதானமாக.

“சந்தர்ப்பச் சாட்சியங்களா!”

“ஆமாம் கரிகாலா! உன்னுடைய நண்பனாக இந்நகருக் குள் வந்த சேர நாட்டு ஒற்றனான ஜெயவர்மன் பெரிய திருடன். சோழ மன்னன் பொக்கிஷத்திலிருந்தே சரித்திரப் பிரசித்தி பெற்ற செங்கதிர் மாலையைக் களவாடி விட்டவன். உன்னையும் உன் தோழனையும் என் வீரர்கள் சுற்றிக் கொண்டதும், எப்படியோ தப்பியோடிவிட்டீர்கள். ஜெயவர்மன் மறைந்துவிட்டான்; நீயோ நள்ளிரவில் மன்னன் மகள் வசந்த மண்டபத்துக்குள் நுழைந்திருக்கிறாய். நீயோ திருடனுடைய நண்பன்” என்று வாசகத்தை முடிக்காமலே விட்டான், ஜெயசிம்ம சாளுக்கியன்.

தன் உண்மை நிலை கரிகாலனுக்கு அப்பொழுதுதான் நன்றாகப் புரியலாயிற்று. இந்த நாட்டில் காலடி வைத்த திலிருந்து ஜெயசிம்மனுடைய ஒற்றர்கள் தன்னைக் கவனித்து வந்திருக்கிறார்கள் என்பதையும், தன்னுடைய ஒவ்வொரு நடவடிக்கையையும் அவ்வப்பொழுது ஜெயசிம்மனுக்கு அறிவிக்கப் பட்டிருக்கிறதென்பதையும் சந்தேகத்துக்குச் சிறிதும் இடமின்றித் தெரிந்துகொண்டான் கரிகாலன். ஜெயசிம்மன் நோக்கப்படி தான் நடக்காவிடில், தன்னைத் திருடனென்று தூக்கில் மாட்டிவிட ஜெயசிம்மனிடம் தகுந்த அத்தாட்சியிருப்பதையும், அதையே ஜெயசிம்மன். சுட்டிக் காட்டுகிறானென்பதையும் புரிந்து கொண்ட கரிகாலன் கேட்டான், “மன்னவா! என்னைத் திருடனென்று தாங்கள் நம்புகிறீர்களா?” என்று.

“நான் எதையும் நம்பவில்லை. அரசமகளிர் தனித் திருக்கும் வசந்தமண்டபத்தில் நீ நள்ளிரவில் நுழைந்திருக் கிறாய். அத்தனை ரகசியமாக நுழையக் கூடியவர்கள் இருவர். ஒன்று, நீ மன்னன் மகளிடம் வந்த ரகசியத் தூதனாயிருக்க வேண்டும். அல்லது திருடனாய் இருக்க வேண்டும். இருவரில் நீ யார்?” என்று கேட்டான் ஜெய சிம்மன்.

இந்த இடத்தில் கொஞ்சம் உண்மையைக் கலந்து கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்த கரிகாலன் “தூதன் மகாராஜா!” என்று பதில் சொன்னான்.

“யாருடைய தூதன்?”

“சோழ நாட்டுத் தூதருடைய தூதன்.”

“யார், பிரும்ம மாராயர் தூதனா?”

“ஆம் மகாராஜா!”

“யாரிடம் தூது அனுப்பினார்?”

“அது தங்களுக்குத் தெரிந்ததுதானே?”

“இருக்கட்டும் கேட்பதற்கு பதில் சொல்.”

“மன்னன் மகளிடம்தான்.”

“எதற்காக?”

“அவர்கள் அபிப்பிராயத்தை அறிந்துகொள்வதற்காக.”

“எதைப் பற்றி அபிப்பிராயம்?”

“தங்கள் ஆதிக்கத்தை வேங்கி நாட்டிலிருந்து அகற்றப் பிரும்ம மாராயன் முயற்சி செய்கிறார்.” இந்தப் பதிலைச் சொன்ன கரிகாலன் ஜெயசிம்மனைக் கூர்ந்து நோக்கினான். ஜெயசிம்மன் முகத்தில் எந்தவித உணர்ச்சியும் தோன்றவில்லை. ஏதோ நண்பனுடன் பேசுவது போன்ற சாதாரணக் குரலிலேயே ஜெயசிம்மன் கேள்விகளைத் தொடர்ந்து கேட்டான்.

“அது சகஜம்தான். பிரும்ம மாராயன் சோழ நாட்டுத் தூதர். சோழ நாடும் மேலைச் சாளுக்கிய நாடும் போரில் இறங்கியிருக்கின்றன. மேலைச் சாளுக்கியர்களின் கையை வேங்கி நாட்டில் ஓங்கவிடாதிருப்பது சோழர் தூதர் கடமைதான். அதைப்பற்றி நான் கேட்கவில்லை. அவர் முயற்சிக்கு மன்னன் மகள் பதில் எப்படியிருக்கிறது?” என்று வினவினான் ஜெயசிம்மன்.

“மன்னவா! தங்களிடம் அதைப்பற்றிச் சொல்வது நம்பிக்கைத் துரோகமல்லவா?” என்று ஏக்கத்தைக் காட்டினான் கரிகாலன்.

ஜெயசிம்மன் புருவங்கள் லேசாக ஒன்று கூடின. கரிகாலனை அருகில் வரும்படி அவன் கை சைகை செய்தது. கிட்டே நெருங்கி வந்த கரிகாலனை நோக்கிய ஜெயசிம்மன், “கரிகாலா! உண்மையைச் சொல். வேங்கி நாட்டில் யாருக்கும் கிடைத்தற்கரிய பதவியை உனக்குத் தருகிறேன்” என்றான்.

இந்தப் பதிலைக் கேட்ட கரிகாலன், உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாலும், வெளியே காட்டாமல், “மன்னவா! பதவி எதற்கு? தங்கள் தயவிருந்தால் போதும். பிரும்ம மாராயர் தங்களைத் தீர்த்துக்கட்டச் சதியிலிறங்கியிருக்கிறார். அவருடன் இந்த நாட்டின் மூன்று படைத் தலைவர்களும் சேர்ந்திருக்கிறார்கள். அத்துடன் யாரோ அரிஞ்சயனாம், அவனும் சேர்ந்திருக்கிறதாகக் கேள்வி” என்றான்.

இந்தத் தகவல்கள் ஜெயசிம்மனுக்கு இம்மியளவு வியப் பையும் அளிக்கவில்லை. இந்தத் தகவல்களை அவன் ஏற் கெனவே அறிந்திருப்பானென்ற நம்பிக்கையிலேயே இவற்றைக் கரிகாலன் அரசனிடம் சொன்னான். ஒன்றரை நாளுக்கு முன்வந்த தன் நடவடிக்கைகளையே கவனித் திருக்கும் ஜெயசிம்மனின் ஒற்றர்கள், பிரும்ம மாராயன் நடவடிக்கைகளை நிச்சயம் கவனித்திருப்பார்கள் என்பதில் கரிகாலனுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. தான் அன்றிரவு வசந்த மண்டபத்துக்கு வரப்போவது தன்னைத் தவிர பிரும்ம மாராயனுக்கும் மன்னன் மகளுக்குமே தெரியுமென்பதையும், மன்னன் மகளோ பிரும்ம மாராயனோ இந்த விஷயத்தை வெளியிடக் காரணமில்லை யாகையால், இந்த மர்மத்தில் இன்னொருவனும் கலந்திருக்க வேண்டுமென்பதையும் கரிகாலன் தீர்மானித்துக் கொண்டான். அப்படிக் கலந்திருப்பவன் ஒருவன், சதி செய்பவர்களில் ஒருவனாயிருக்க வேண்டுமென்றும் நிர்ணயித்துக் கொண்டான். அவன் யார்?’ என்ற கேள்வி கரிகாலன் உள்ளத்தே எழுந்து திரும்பத் திரும்ப ஒலித்தது. அதற்கு விடையேதும் காணாது தத்தளித்த கரிகாலனை நோக்கி, ஜெயசிம்ம சாளுக்கியன் கேட்டான். “அது கிடக்கட்டும் கரிகாலா! சதியிலிறங்கும்படி பிரும்ம மாராயர் நிரஞ்சனாதேவியைக் கேட்டாரா?” என்று.

“பிரும்ம மாராயர்தான் கேட்டார்.”

“உனக்கெப்படித் தெரியும் அது?”

நான் நிரஞ்சனாதேவியைத் தேடிவருவது இது இரண்டாம் தடவை.”

“முதல் தடவை எப்போது பார்த்தாய்?”

“நேற்றுக்கு முந்திய நாள் இரவு.”

“நேற்றுக்கு முன் தினம்தானே இந்த ஊருக்கு வந்தாய்?

“ஆமாம் மகாராஜா! நேற்று முன்தினம் வந்தேன். தங்கள் வீரர்கள் துரத்தினார்கள். நான் தப்பிப் பிரும்ம மாராயன் மாளிகைக்குள் ஓடிவிட்டேன். நான் சோழ நாட்டவனென்று தெரிந்ததும், பிரும்ம மாராயர் என்னை மறைத்துவிட்டார். பிறகு, மன்னன் மகளிடம் தூது போய்வரவும் அனுப்பினார்.”

“உன்னைப் பிரும்ம மாராயருக்கு முன்பே தெரியுமா?”

“தெரியாது.”

“முன்பின் தெரியாத ஒருவனை எப்படி இந்த விஷயமாகத் தூதனுப்பினார்.?”

இந்தக் கேள்வி கரிகாலனை அயர வைக்குமென்று ஜெயசிம்மன் எதிர்பார்த்திருந்தால் அவன் ஏமாந்துதான் போனான். மன்னனை மிகவும் நெருங்கி வந்த கரிகாலன், தன் மடியிலிருந்த ஓர் ஓலையை எடுத்து ஜெயசிம்ம சாளுக் கியனிடம் கொடுத்தான். ஓலையிலிருந்த விலாசத்தைக் கண்டு, அதுவரை எதற்கும் அசையாத ஜெயசிம்ம சாளுக்கியன் உணர்ச்சிகளும் அசைந்து கொடுத்தன. “அரையன் ராஜராஜன்” என்று அவன் பெரிய இதழ்கள் முணு முணுக்க, அவற்றுக்கு மேலேயிருந்த மீசையும் பயங்கரமாக அசைந்தது.

ஆம் மகாராஜா! அது என் தந்தையின் பெயர்தான். நாகப்பட்டணத்துச் சூடாமணி விஹாரத்தில் கல்வி பயின்றுவிட்டு, அவரிடம் போகிறவன், வழியில் இங்கு அகப்பட்டுக் கொண்டேன். அவசியமானால், ஓலையைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்” என்றான் கரிகாலன்.

ஓலையிலுள்ள முத்திரைகளை ஜாக்கிரதையாக உடைத்து ஓலையைப் படித்த ஜெயசிம்மனின் கண்களில் ஆச்சரியமும் குழப்பமும் ஒருங்கே படர்ந்தன. “பல வருஷங்களுக்கு முன்னால் நீங்கள் விட்டுப்போன குழந்தை இவன். பல கல்விகளும் பயின்று மீண்டும் உங்களிடம் வருகின்றான். – தஞ்சை புத்தாலயத்துத் தலைவன் பிரும்மானந்தன்” என்று இரண்டு வரிகளே இருந்தன. ஓலையின் கீழே பொறிக்கப்பட்டிருந்த முத்திரையில் புத்த மடாலயச் சின்னம் நன்றாகப் பொறிக்கப்பட்டிருந்தது.

“இதிலிருந்து நீ அரையன் ராஜராஜன் புதல்வனென்று திட்டமாகத் தெரியவில்லை.” என்றான் ஜெயசிம்மன்.

“வேண்டாம், வளர்ப்புப் பிள்ளை என்றாவது வைத்துக் கொள்ளலாமல்லவா?” என்று கரிகாலன் கேட்டான்.

அது சாத்தியம்” என்றான் ஜெயசிம்மன்.

எது சாத்தியமாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், என்னைத் தூது அனுப்புவதற்கு வேண்டிய நம்பிக்கையை இந்த ஓலை ஊட்டியது. தூது சென்றேன்.”

“நிரஞ்சனாதேவி என்ன சொன்னாள்?”

“சதிக்குத் தான் உடன்பட முடியாதென்று திட்டமாகச் சொல்லிவிட்டார். கிழக்குச் சாளுக்கியர்களான வேங்கி நாட்டு ராஜ பரம்பரைக்கும் மேலைச் சாளுக்கியர்கள் பரம்பரைக்கும் ரத்த சம்பந்தமிருக்கிறதென்றும், எதிரிகளான சோழர்களுடன் தான் எந்தவிதச் சம்பந்தமும் வைத்துக்கொள்ள முடியாதென்றும் கூறிவிட்டார்.

இந்தக் கோட்டைப் புளுகைக் கேட்ட ஜெயசிம்மன் கூட அயர்ந்துபோய், ஆசனத்திலிருந்து எழுந்து அறையில் நீண்ட நேரம் உலாவினான். கரிகாலன் மேற்கொண்டு பேச்சைத் துவக்கி, அந்தப் பதிலைப் பிரும்ம மாராயரிடம் சொன்னேன். அவர் கோபத்தால் துடித்தார். தங்கள் சதித்திட்டத்துக்கு இசையாவிடில் நிரஞ்சனாதேவியையும் அகற்றிவிடத் திட்டம் தயாரிக்கப்படுமென்று எச்சரிக்க, என்னை நேற்றிரவு அனுப்பினார். பிறகுதான், தாங்கள் எனக்குத் தலையில் பிரசாதம் கொடுத்துப் பஞ்சணையில் கிடத்திவிட்டீர்கள்” என்றான்.

கரிகாலன் பேசியதை ஜெயசிம்மன் காதில் வாங்கிக் கொள்ளாமலே, வெகு நேரம் அறையில் உலாவினான். பிறகு கரிகாலனை நெருங்கி, “கரிகாலா! நிரஞ்சனாதேவி உன்னிடம் சொல்லியனுப்பிய பதிலிலிருந்து உன்னை அவள் நம்பவில்லையென்று தெரிகிறது. இன்னுமொரு முறை முயன்று பார். அவள் மனம் மிக ஆழமானது. அளப்பது மிகவும் கஷ்டம். அதை மட்டும் அளந்துவிடு. உண்மையைக் கண்டுபிடி. பிறகு ஜெயசிம்ம சாளுக்கியன் கர்ணன் என்பதை அறிந்துகொள்வாய். நிரஞ்சனாதேவி இந்தச் சதியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறாள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அத்தாட்சி இல்லை. அத்தாட்சியை நீ கண்டுபிடிக்க வேண்டும். நிரஞ்சனா தேவியுடன் நெருங்கிப் பழகு” என்றான் ஜெயசிம்மன்.

“அவர்களை எப்படி அணுகுவது?”

“அணுகுவதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்.”

“என்ன ஏற்பாடு?”

“நீ அரையன் ராஜராஜனுடைய மகன் என்று சொல்கிறாய். அது பொய்யோ நிஜமோ? அவன் மகனாக உன்னை நான் ஏற்றுக்கொள்கிறேன். எதிரியின் மகனா னாலும், பெரிய படைத்தலைவன் மகன் என்ற முறையில் உனக்கு அரண்மனையில் சகல வசதிகளும் அளிக்கப்படும். நானே உன்னை அரையன் ராஜராஜன் மகனாக ஏற்றுக் கொண்ட பிறகு, அரண்மனையில் உலவ உனக்கு எத்தடையுமிருக்காது. அரசகுமாரியை எத்தனை தடவை வேண்டுமானாலும் சந்திக்கலாம் புரிகிறதா?” என்று சொல்லிய ஜெயசிம்மன் கரிகாலனைக் கூர்ந்து நோக்கினான். கரிகாலனும் அவனை நோக்கினான். இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டனர். “மன்னவா! தாங்கள் என்னிடம் இத்தனை நம்பிக்கை வைக்கும் காரணம்?” என்று கடைசியாக வினவினான் கரிகாலன்.

“காரணம் இருக்கிறது. இப்பொழுது கேட்காதே. பிறகு ஒருமுறை சொல்லுகிறேன்” என்று சொல்லிய ஜெயசிம்மன் பேட்டி அத்துடன் முடிந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகக் கைகளைத் தட்டி ஸ்தானிகரை அழைத்தான். வைரமும் வைரமும் ஒன்றையொன்று அறுக்க முயல்வது போல், சொற்களால் பரஸ்பரம் ஆழம் பார்த்துக் கொண்ட அவ்விருவரும் அன்று அத்துடன் பிரிந்தனர்.

ஜெயசிம்ம சாளுக்கியன் தன் வார்த்தைப்படி நடந்து கொண்டான். அரையன் ராஜராஜன் மகன் வந்திருக் கிறான் என்ற பேச்சு, அரண்மனையெங்கும் காட்டுத் தீப் போலப் பரவிற்று. எதிரியின் மகனுக்குப் பெரிய விருந்தும் அளித்தான் ஜெயசிம்மன். விருந்து முடிந்தாலும், கவலை முடிவுறாத மனத்துடன், எல்லோரையும் பிரிந்து அரண்மனைத் தோட்டத்துக்குள் நுழைந்த கரிகாலன், எங்கெங்கோ சிந்தனைகள் பறந்தோட மெள்ள நடந்து சென்றான். இப்படி யோசித்துக் கொண்டே நடந்த அவன் பக்கத்திலிருந்த நந்தியாவட்டைச் செடிகளின் மறைவில், யாரோ இருவர் பேசுவதைக் கேட்டுச் சட்டென்று நின்றான். ஒன்று நிரஞ்சனாதேவியின் குரலென்று நிச்சயமாகத் தெரிந்தது. இன்னொன்று யார் குரலென்று நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் அரசகுமாரி, அடுத்த இன்னொருவனைப் பெயரிட்டு அழைத்ததும் திக்பிரமை அடைந்தான் கரிகாலன். ‘என்ன விந்தை இது! இவன் இங்கு எப்படி வந்தான்?’ என்ற கேள்வியும், தொடர்ந்து பல எண்ணங்களும் அலைபோல எழுந்து தாக்கவே, மன்னன் மகளின் கதி அதோகதியாகிவிடுமோ என்ற நினைப்பால் அவன் உடலில் திகிலும் ஊடுருவிச் சென்றது.

Previous articleMannan Magal Part 1 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here