Home Historical Novel Mannan Magal Part 1 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

191
0
Mannan Magal Ch 19 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 19 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 19 பஞ்சணையில் ஓர் அஞ்சுகம்

Mannan Magal Part 1 Ch 19 | Mannan Magal | TamilNovel.in

அரண்மனையை அடுத்து நின்ற செடிக் கும்பல்களின் மறைவில், அரசகுமாரியுடன் பேசியவன் யாரென்பதை அறிந்தவுடன் ஓரளவு திகைப்பும், அந்தத் திகைப்பைத் தொடர்ந்து எண்ணங்களின் அலைமோதலும் சித்தத்தில் ஏற்பட்டதால், செடிகளில் வெள்ளை வெளேரென்று நூற்றுக்கணக்கில் புஷ்பித்துக் கிடந்த நந்தியாவட்டை மலர் களின் நறுமணம்கூடக் கரிகாலன் உணர்ச்சிளைத் தொடச் சக்தியற்றதாயிற்று. காவியங்களை நன்றாகப் படித்ததால் இயற்கையின் இன்பக் காட்சிகளின் சூட்சுமங்களை உணர்ந்து அவற்றை அனுபவிக்கக்கூடிய பரம ரசிகனான கரிகாலன், செடிகளின் மறைவில் நடந்த சம்பாஷணையின் காரணமாகத் தன்னைச் சூழ்ந்து நின்று இணையற்ற இன்ப ஜாலங்களை அள்ளி வீசிக்கொண்டிருந்த இயற்கை மீது கண்களைச் சிறிதும் ஓட்டாமல், பூதலத்தைப் பீடிக்கும் அரசியல் சிக்கல்களிலும், அரசகுமாரியின் கதி என்ன ஆகுமோ என்ற பீதியிலும் மனத்தைச் சிக்கவிட்டுத் தீர்க்கா லோசனையில் இறங்கினான். அந்தத் தீர்க்காலோசனையைச் செடி மறைவிலிருந்து இரண்டாம் முறையாக எழுந்த அரசகுமாரியின் குரல் துண்டித்துவிடவே, அலைந்துகொண்டிருந்த தன் எண்ணங்களை ஒரு கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து சம்பாஷணையை உற்றுக் கேட்கத் தொடங்கினான் கரிகாலன்.

“அரிஞ்சயா!” என்று இரண்டாம் முறை ஒலித்தது அரசகுமாரியின் குரல். அதில் எல்லையற்ற கவலையும் கலந்திருந்தது.

“அரசகுமாரி!” என்று எழுந்தது மிகக் குழைவான ஒரு குரல். இனிமை மிகுந்த குரல்தான். ஆனால் குழைவு அளவுக்கு அதிகமாக இருந்ததால், இந்தக் குரலை உடைய அரிஞ்சயன் மீது கரிகாலனுக்கு ஓரளவு நம்பிக்கை குறையத்தான் செய்தது. ஆனால் அரிஞ்சயனைப் பூராவும் எடை போடு முன்பு, சம்பாஷணையைக் கவனிப்போ மென்று அதில் நாட்டத்தைச் செலுத்தினான் கரிகாலன்.

“அரிஞ்சயா! நீ இத்தனை நேரம் சொல்லியதெல்லாம் நான் அறிந்ததுதானே? பிரும்ம மாராயர் என்னிடமும், என் தம்பியிடமும் கொண்டிருக்கும் அக்கறை எத்தனை என்பது எனக்குத் தெரியாதா? நான் கேட்பது அவருடைய அபிப்பிராயங்களைப் பற்றியல்ல; அந்த அபிப்பிராயங்களை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை அறியவே ஆசைப்படுகிறேன்” என்றாள் அரசகுமாரி.

“தங்கள் ஆசையைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பது தான் என் ஆசையும். ஆனால், பிரும்ம மாராயர் குணம் உங்களுக்குத் தெரியாததல்ல. சொல்ல இஷ்டமில்லாததை ஆயிரம் தடவை கேட்டாலும் சொல்லமாட்டார். நானும் எவ்வளவோ முயன்று பார்த்தேன், அவருடைய திட்டம் என்னவாயிருக்குமென்பதை அறிய. மனிதன் கல்லுப் பிள்ளையாராயிருக்கிறான். வாயிலிருந்து ஒரு வார்த்தை கூட உதிரமாட்டேனென்கிறது” என்றான் அரிஞ்சயன். அரிஞ்சயன் பேச்சு தடைப்பட்டுத் தடைப்பட்டு வந்ததைக் கரிகாலன் கவனித்தான். ஏதோ யோசித்து அளந்து பேசு பவனாகவே அவன் காணப்பட்டானே யொழிய, உண்மையை உள்ளது உள்ளபடி பேசுபவனாகத் தெரிய வில்லை.

இந்தப் பதிலுக்குப் பிறகு ஏதும் பேசாமல் சற்று நேரம் யோசனையிலாழ்ந்த விமலாதித்தன் மகள், கடைசியாக ஆயாசம் கலந்த பெருமூச்சொன்றை விட்டாள். அதைக் கவனித்த அரிஞ்சயன், அவளைத் தேற்றத் தொடங்கி, “ஆயாசத்துக்குக் காரணமில்லை அரசகுமாரி. தாங்கள் நினைப்பதைவிடத் துரிதமாகவே காரியங்கள் நடைபெற்று வருகின்றன. சில நாள்களுக்குப் பொறுத்துக் கொண் டிருங்கள்” என்றான்.

“பொறுமையை யாரும் எனக்குப் போதிக்கத் தேவை யில்லை. விமலாதித்தனுக்குப் பிறந்த வேங்கி நாட்டுப் பெண்ணுக்குத் தைரியத்துக்கும் குறைவில்லை. ஆனால் ஜெயசிம்மனுடைய ஆதிக்கத்திலிருந்து வேங்கி நாட்டை மீட்க நீங்கள் செய்து வரும் ஏற்பாடுகள் என்ன என்பது திட்டமாகத் தெரியவில்லை. ஏதாவது ஏற்பாடு நடக்கிறதா என்பதே சந்தேகத்திலிருக்கிறது!”

“பிரும்ம மாராயரிடமும், என்னிடமும் உங்களுக்காக அபாயமான சதியிலிறங்கியிருக்கும் வேங்கி நாட்டுப் படைத்தலைவர் மூவரிடமும் உங்களுக்கு நம்பிக்கை யில்லையா?”

“நம்பிக்கையிருக்கிறது அரிஞ்சயா, நம்பிக்கையிருக் கிறது. ஆனால் வெறும் நம்பிக்கையால் ஜெயசிம்மனை ஜெயித்துவிட முடியுமா? மேலைச் சாளுக்கியத்தில் பூரண வெற்றியடைய முடியாமல், அரையன் ராஜராஜனையே ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் மன்னன் ஜெயசிம்மனுடைய பிடியிலிருந்து வேங்கி நாட்டையும், அதன் மன்னனும், என் தம்பியுமான ராஜராஜ நரேந்திரனையும் விடுவிக்க, வெறும் நம்பிக்கையும், கூடிக்கூடி நடத்தப்படும் கவைக்குதவாத பேச்சும் பயன்தர முடியாது. திட்டம் வேண்டும்; செயல்கள் வேண்டும்.”

“உண்மைதான் அரசகுமாரி! எதற்கும் காலம் வர வேண்டுமல்லவா?”

“காலம் நம்மைத் தேடி வராது; காலத்தைத் தேடி நாம் செல்ல வேண்டும். சந்தர்ப்பம் நம்மை நாடி வராது! சந்தர்ப்பத்தைத் தேடி நாம் செல்ல வேண்டும். அதற்குத் தான் முயற்சி என்று பெயர். அந்த முயற்சி ஏதாவது நடந்திருக்கிறதா?”

அதிக அவசரம் அபாயத்தில் இறங்கிவிடும் அரசகுமாரி.”

“அபாயத்திற்கு அஞ்சுபவர்கள் சதியிலிறங்கக்கூடாது. சுகமாகக் குழந்தை குட்டிகளுடன் வீட்டிலிருக்க வேண்டும். இது வீரர்கள் சம்பந்தப்பட வேண்டிய விஷயம். அபாயம் வீரனுக்கு விருந்து.”

“போர்க்களத்தில் தாங்கள் சொல்வது சரி.”

“வேங்கி நாடே இப்பொழுது போர்க்களம்தான். வாள்கள் உராயவில்லை; வேல்கள் எறியப்படவில்லை. இருந்தாலென்ன? வாள்களையும் வேல்களையும் விடக் கூரிய ஆயுதங்களை ஜெயசிம்மன் பிரயோகித்துக் கொண்டிருக்கிறான்.”

“அது என்ன ஆயுதம்?”

“சொல்.”

“சொல்லா?”

“ஆமாம் அரிஞ்சயா! ‘ராஜராஜ நரேந்திரன் அரச பீடத்தில் இருக்கத் தகுதியற்றவன்’ என்ற சொற்களை மக்களிடம் பரப்பிவிட்டிருக்கிறான் ஜெயசிம்ம சாளுக்கியன். மனிதர்களை ஆளவேண்டிய நரேந்திரனுக்கு வாள் பயிற்சி இல்லை. அவனைச் சுற்றி ஜெயசிம்ம சாளுக்கியன் வீரர்களை நிறுத்தவில்லை! பெண்களை நிறுத்தியிருக்கிறான். மன்னனுக்குச் சிலம்பக் கூடமில்லை; நாட்டியக் கூடமிருக்கிறது. இந்த நாட்டு மன்னன் கேளிக்கையிலும், வேடிக்கையிலும், மதுவிலும், மங்கையர் உறவிலும் காலத்தைக் கழிக்கிறானென்ற பேச்சு நாடெங்கும் பரவி வருகிறது. இதில் தனக்குப் பொறுப்பேதுமில்லை போல் நடிக்கிறான் ஜெயசிம்மன். இந்த நாட்டு அரியணை விஷயத்தில் தனக்குச் சொந்த சிரத்தை ஏதுமில்லை என்பதை நிரூபிக்க, தன் மருமகனான விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனையும் மேலைச் சாளுக்கிய நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டான். அங்கு அவனுக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்கு அவன் நல்ல பயிற்சி பெற்றுத் திரும்புவதற்கும், மக்களின் வெறுப்பு நரேந்திரன் மீது பூர்த்தியாவதற்கும் சரியாயிருக்கும். அந்த நிலையில், ஜெயசிம்மன் நரேந்திரனை அரியணையிலிருந்து அகற்றா விட்டாலும், மக்கள் அகற்றிவிடுவார்கள். அவர்களைச் சித்தம் செய்யும் பிரசாரம் நன்றாக நடக்கிறது. ஜெயசிம்மன் போடும் அஸ்திவாரம் பலமானது. அதை அவன் போட்டுவிட்டால், அவன் மேலே நிர்மாணிக்க உத்தேசித்திருக்கும் கோட்டையை உங்களால் தகர்க்கவே முடியாது. புரிகிறதா?”

“புரிகிறது அரசகுமாரி! அதற்கு என்ன செய்ய வேண்டு மென்கிறீர்கள்?”
‘’அஸ்திவாரத்தை உடைக்க வேண்டும்.”

“எப்படி?”

அதைத்தான் அப்பொழுதிலிருந்து நான் கேட்கிறேன். எப்படி உடைக்க உத்தேசம்? அதற்கு என்ன ஏற்பாடு நடக்கிறது?”

அரிஞ்சயன் பதிலேதும் சொல்ல முடியாமல் திணறி னான். “ஏன் விழிக்கிறாய்? ஏற்பாடு ஏதும் இல்லையா? திட்டம் ஏதுமின்றித் தினம் கூடிக்கூடிப் பிரும்ம மாராயரிடம் பேசுகிறீர்களா?” என்று கேட்டாள் அரசகுமாரி, வெறுப்பு பூரணமாகக் கலந்த குரலில்.

அரிஞ்சயன் மெள்ள மென்று விழுங்கினான். “ஏற்பாடு ஏதோ நடந்திருக்க வேண்டும் அரசகுமாரி. பிரும்ம மாராயர் திட்டமில்லாமல் வேலை செய்வாரா?” என்றான்.

கீழே உதிர்ந்த சருகுகள் சலசலவென்று அசைந்ததி லிருந்து, அரசகுமாரி அதிர்ச்சியடைந்து திரும்புகிறாளென் பதைக் கரிகாலன் ஊகித்தான். அந்த அதிர்ச்சி அவள் அடுத்துக் கேட்ட கேள்வியிலும் உதித்தது! “ஏற்பாடு ஏதோ நடந்திருக்க வேண்டுமென்றால் உனக்கு அதைப்பற்றி எதுவும் தெரியாதா?” என்று கேட்டாள் மன்னன் மகள்.

“தெரியாது அரசகுமாரி.”

“ஏன் தெரியாது?”

“நான் பிரும்ம மாராயரைப் பார்த்துப் பல நாள்கள் ஆகின்றன.”

“இங்கு வந்தும் பல நாள்கள் ஆகின்றனவே!”

“முன்பு உங்களைப் பார்த்தபோதுதான், அவரையும் பார்த்தேன்.”

“ஏன் எங்களைப் பார்க்கவில்லை?”

“பார்க்க முடியவில்லை?”

“ஏன்?”

“சிறையிலிருந்தேன்.”

அரசகுமாரி மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டாள். “சிறையிலிருந்தாயா? இந்த ஊர்ச் சிறையிலா?”

“ஆம், அரசகுமாரி!”

“எனக்குத் தெரியாதே.”

“யாருக்கும் தெரியும்படியாகக் காரியம் செய்யும் பழக்கம் ஜெயசிம்மனுக்குக் கிடையாதல்லவா?”

“ஜெயசிம்மனா சிறையிலடைத்தான்? அப்படியானால் சதி விஷயம்…”

அவருக்குத் தெரியாது.”

“தெரியாமல் எப்படி இருக்க முடியும்? உன்னைக் கோதண்டத்தில் மாட்டி உண்மையைக் கக்க வைத்திருப் பார்களே!”

“கோதண்டத்தில் மாட்டினால் கக்கி இருப்பேன். ஆனால் அதற்கு அவர்களுக்குச் சந்தர்ப்பம் கிடைக்க வில்லை.”

“ஏன்?”

“சிறையிலிருந்து தப்பிவிட்டேன்.”

“சாளுக்கியர் சிறையிலிருந்து தப்புவதா? நல்ல கதை இது!” அரிஞ்சயன் சொன்னதை அரசகுமாரி நம்பவில்லை யென்பதை அவள் குரல் எடுத்துக் காட்டியது.

அந்த அவநம்பிக்கையை அரிஞ்சயன் கவனிக்காமலே சொன்னான்: “உண்மைதான் அரசகுமாரி. கதை போலத் தான் தோன்றும் உங்களுக்கு. சாளுக்கியர் சிறையிலிருந்து ஒருவன் தப்பியதாகச் சொன்னால் கட்டுக்கதையைப் போலத்தான் இருக்கும். ஆனால் இதைவிடப் பெரிய கடுமையான சிறைகளிலிருந்து பலர் தப்பியதற்குச் சரித்திரச் சான்றுகள் இருக்கின்றன. அவைகூடத் தேவையில்லை! நாளைக் காலையில் ஏன் இன்னும் சில நாழிகையில் இந்தத் தலைநகரில் ஏற்படக்கூடிய பரபரப்பே நான் தப்பியதற்குச் சரியான சான்றாகும்.”

“பரபரப்பு ஏற்படக் காரணம்!”
“சிறைக்காவலாளிகள் இருவரைக் கொன்றுவிட்டேன்.”

“கொன்றாலும் சிறையைச் சுற்றியிருக்கும் மதில் வாசல் களில் காவலிருக்கிறதே!”

“என் சொந்த உடையில் வந்தால் வெளியே விட மாட்டார்கள். இந்த உடையைப் பாருங்கள்.”

சற்று நேரம் மௌனம் நிலவியது. அரசகுமாரி அவன் உடையை அப்பொழுதுதான் கவனித்ததாகத் தோன்றியது “இது சிறைக்காவலர் உடையல்லவா?” என்றாள் அரச குமாரி.

“ஆம் அரசகுமாரி!”

“இறந்த சிறைக்காவலன் ஒருவனின் உடையை அணிந்து வந்தாயா அரிஞ்சயா?”

“வேறு வழியில்லை. பாருங்கள்.”

அடுத்தபடி, அரசகுமாரியின் வாயிலிருந்து உதிர்ந்த சொற்களில் அநுதாபம் மண்டிக் கிடந்தது. “அரிஞ்சயா, உன் நிலைமை அபாயமானதல்லவா?” என்றாள் அரச குமாரி.

“அபாயம் வீரனுக்கு விருதென்று தாங்கள் தானே சொன்னீர்கள்?” என்றான் அரிஞ்சயன்.

“ஆமாம் அரிஞ்சயா! உன் மனத்தைப் புண்படுத்தும் படி ஏதாவது நான் சொல்லியிருந்தால் என்னை மன்னித்துவிடு.”

“மன்னிப்பதற்கு ஏதுமில்லை அரசகுமாரி. கவலையால் கருத்தைச் சிறிது அலையவிட்டீர்கள். அதனாலென்ன, உங்களுக்குப் பணி செய்வது என் கடன்.”

“இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? மீண்டும் நாம் எப்போது சந்திப்பது?”

“நாளை வசந்த மண்டபத்தில் சந்திக்கிறேன். அதற்குள் நீங்கள் என்னை உங்கள் பிரதிநிதியாக அங்கீகரித்து அத்தாட்சி ஓலை ஒன்று எழுதி வையுங்கள்; உங்கள் முத்திரையும் சேர்ந்திருந்தால் நல்லது” என்றான் அரிஞ்சயன்.

“எதற்கு அத்தாட்சி ஓலை?” என்று கேட்டாள் மன்னன் மகள்.

“ஜெயசிம்மன் தன் ஏற்பாடுகளைச் செய்துகொண்டு போகும்போது நாமும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டு மென்று நீங்கள் தானே சொன்னீர்கள்?”

“ஆமாம்.”

“இப்பொழுது மூன்று படைத்தலைவர்களே நம்முடன் சேர்ந்திருக்கிறார்கள். மற்றவர்களையும் சேர்க்க வேண்டும். தங்கள் பக்கத்துக்கு வீரர்களைத் திரட்ட வேண்டும். அத்தாட்சியின்றி நான் போய்ச் சதியில் சேர் என்று சொன்னால் யார் சேருவார்கள்? தங்கள் அனுமதி எனக்கு இருக்கிறது என்று சொன்னால் வீரர்கள் சேருவார்கள். தங்களை மக்கள் தெய்வம் போல் நினைக்கிறார்கள் என்பது தங்களுக்குத் தெரியாதா?”

அரசகுமாரி சிறிது நேரம் யோசித்தாள். அரிஞ்சயன் சற்று சலிப்பான குரலில் கேட்டான். “ஏன் அரசகுமாரி! என்னிடம் நம்பிக்கையில்லையா உங்களுக்கு?”

“நம்பிக்கையில்லாமலென்ன? ஓலை ஜெயசிம்மன் கையில் சிக்கினால் ஆபத்தாயிற்றே என்று யோசிக்கிறேன்.”

“ஆபத்துக்குப் பயப்படுகிறீர்களா?”

அரசகுமாரியின் குரல் மிகக் கடுமையாக ஒலித்தது. “விமலாதித்தன் மகளிடம் பயத்தைப் பற்றிப் பேச உனக்கு என்ன துணிச்சல்? ஆபத்தைப் பற்றி பயமில்லை அரிஞ்சயா. ஓலை எதிராளி கையில் விழுந்தால் நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளைப் பற்றித்தான் யோசிக்கிறேன். ஓலையை ஆதாரமாகக் கொண்டு, சதி நடக்கிறதென்று பகிரங்கப்படுத்தி என் தம்பியை ஒழித்துவிடுவான் ஜெயசிம்மன்” என்றாள் நிரஞ்சனா.

“அரசகுமாரி! இந்த அரிஞ்சயன் உடலில் உயிர் இருக்கும் வரை, ஓலை எதிரியிடம் சேராதென்பது தங்களுக்குத் தெரியாதா? தவிர அத்தாட்சியில்லா விட்டால் என் சொல்லை மட்டும் நம்பிச் சதியில் யார் சேருவார்கள்?”

அரசகுமாரி மீண்டும் ஒரு விநாடிதான் யோசித்தாள். அந்த விநாடியில் ஒரு முடிவுக்கு வந்து, சரி அரிஞ்சயா! ஓலை எழுதி வைக்கிறேன். நாளை இரவு வசந்த மண்டபத்தில் சந்திப்போம்” என்று சொல்லிவிட்டுச் செடி மறைவிலிருந்து கிளம்பினாள். சற்றுத் தள்ளி நின்ற செடிகளின் மறைவில் கரிகாலன் மறைந்து கொண்டான்.
செடி மறைவை விட்டு வெளியே வந்த அரசகுமாரி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, “யாரும் இல்லை அரிஞ்சயா! வெளியே வா!” என்றாள். அரிஞ்சயன் பூனை போல் நடந்து வெளியே வந்து அரசகுமாரியிடம் விடைபெற்றுச் செல்ல முயன்றவன் மீண்டும் திரும்பி வந்து, “அரசகுமாரி! நீங்கள் கரிகாலன் என்பவனைப் பிரும்ம மாராயரிடம் அனுப்பினீர்களா?” என்று விசாரித்தான்.

“ஆமாம் அனுப்பினேன். ஆனால், அவன் ஜெய சிம்மன் பக்கம் சேர்ந்துவிட்டானே!” என்றாள் அரசகுமாரி.

“இல்லை, அரசகுமாரி இல்லை. அவன் பூரணமாக நம்பத் தகுந்தவன். பிரும்ம மாராயரே என்னிடம் சொன்னார்.”

“அவனுக்கு ஜெயசிம்மன் இன்று விருந்து நடத்தினான் தெரியுமா?”

“தெரியும் அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். காரணமாகத்தான் அவன் ஜெயசிம்மனிடம் சேர்ந்திருக்கிறான். அதற்குப் பிரும்ம மாராயர்தான் ஏற்பாடு செய்தார். அவன் சொல்லுகிறபடி நடவுங்கள்,” என்று

சொல்லிவிட்டு அரசகுமாரியைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டுச் சென்றான் அரிஞ்சயன்.

அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம், அரண் மனைக்குள்ளிருந்து பணிப்பெண் மாலினி அரச குமாரியைத் தேடிக்கொண்டு வந்தாள். அரசகுமாரி நடுப் பாதையில் நந்தியாவட்டைச் செடிகளுக்கருகில் ஆகாயத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு நிற்பதைக் கண்ட மாலினி, “நட்சத்திரங்களை எண்ணுகிறீர்களா?” என்று கேலியாகக் கேட்டாள்.

ஆமாம் மாலினி” என்ற நிரஞ்சனாதேவியின் குரலில் கவலை நிரம்பத் தோய்ந்திருந்தது.

“ஏன் அரசகுமாரி!”

“ஜெயசிம்மனை ஜெயிப்பதைவிட நட்சத்திரங்களை எண்ணுவது எளிதாக இருக்கும் போல் தோன்றுகிறது.”

அரசகுமாரியின் கவலை இன்னதென்பதைப் புரிந்து கொண்ட மாலினி, அவள் நோக்கத்தை வேறு திசையில் திருப்ப இஷ்டப்பட்டு, “நேரமாகிறது தேவி. எங்கே படுக்கப் போகிறீர்கள்” என்று கேட்டாள்.

நிரஞ்சனாதேவி சிறிது நேரம் யோசித்து விட்டுக் கேட்டாள், “இன்று வசந்த மண்டபத்துக்குப் போவதில் தடை ஏதேனும் இருக்கிறதா?” என்று.

“இல்லை அரசகுமாரி. அவசியமானால் தாங்கள் அங்கும் படுக்கலாம்.”

எப்படித் தெரியும் உனக்கு?”

“அரண்மனை ஸ்தானிகரே வந்து சொன்னார்.”

“அப்படியா! நேற்று ஏன் படுக்கக் கூடாதென்று சொன்னார்கள்.”

“காரணம் சொல்ல மறுக்கிறார், ஸ்தானிகர்.”

அரசகுமாரி பெருமூச்செறிந்தாள். “வேங்கி நாட்டு மன்னன் மகள் நான். ஆனால் இஷ்டப்படி உலாவவும் படுக்கவுமே சுதந்திரமில்லையே மாலினி… உம்” என்று அலுத்துக்கொண்ட அரசகுமாரி, “சரி. போவோம் வா” என்று சொல்லி, அரண்மனைக்கும் தோட்டத்துக்கும் இடையேயிருந்த கதவை நோக்கி நடந்தாள்.

அவர்கள் கண்ணுக்கு மறைந்ததும் மறைவிடத்தை விட்டு, வெளியே வந்த கரிகாலன் முகத்திலே கவலையும் திகிலும் படர்ந்து கிடந்தன. சற்று அப்பாலிருந்த ஒரு பாறை மீது உட்கார்ந்து, தலையை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந் தான் கரிகாலன். அவனது கூரிய அறிவுக்கு உண்மை தெள்ளெனப் புலப்பட்டது. அரசகுமாரியின் புத்தியில் ஊகிக்க முடியாத விஷயங்கள் அவனுடைய ஆராய்ச்சி அறிவு அரங்கத்திலே எழுந்து தாண்டவமாடின. அரிஞ்சயன் எத்தனை அயோக்கியன் என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்ட கரிகாலன், அரிஞ்சயன் திட்டத்தைத் தவிடுபொடியாக்கி, அவன் வீசும் வலையிலிருந்து மன்னன் மகளை மீட்கத் தீர்மானித்துக் கொண்டான். அந்தத் தீர்மானத்தின் ஆரம்ப நடவடிக்கையை அந்த விநாடியே தொடங்க நிச்சயித்த அவனும், இடக்கதவைத் தாண்டி வசந்த மண்டபத்தை நோக்கி விரைந்தான்.

வசந்த மண்டபத்தின் வாயிற்கதவு முந்தியநாள் போல் திறந்தேயிருந்தது. ஆனால் முந்திய நாள் இருந்த இருள் இல்லை. அரசகுமாரியின் அறையிலிருந்த விளக்கின் மங்கிய ஒளி வாயிலை அடுத்த கூடத்திலும் வீசிக் கொண்டிருந்தது. கூடத்தைக் கடந்து அறையை அணுகிய கரிகாலன் கதவை மெல்லத் திறந்தான். பஞ்சணையில் குப்புறப் படுத்துக் கொண்டிருந்த நிரஞ்சனாதேவி கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டதும் சற்றே பஞ்சணையில் நெளிந்து திரும்பித் தன் அஞ்சன விழிகளைக் கரிகாலன் மீது திருப்பினாள். காந்தத்தின் சக்தி அற்புதமானது என்பதை சாஸ்திரம் படித்த கரிகாலன் அறிந்திருந்தான். கண்களுக்கும் அந்தச் சக்தி உண்டு என்பதை அந்தக் கணத்தில் அவன் உணர்ந்தான். அவன் படித்த சாஸ் திரங்கள் பல; ஆனால் நிரஞ்சனா பஞ்சணையில் கிடந்த கோலத்தைக் கண்ட கரிகாலன் படிப்பிற்கு அப்பாற்பட்ட சாஸ்திரமும் ஒன்று இருக்கிறதென்பதை அறிந்தான். அந்த அநுபவ சாஸ்திரத்தை அளந்தறியும் எண்ணத்துடன், அவன் ஆராய்ச்சி விழிகள் பஞ்சணையில் கிடந்த அந்த அஞ்சுகத்தின் எழிலலைகள் மீது கடலலைகளைத் தாவிச் செல்லும் கடற் பறவைகளைப் போலத் தாவிச் சென்றன.

Previous articleMannan Magal Part 1 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here