Home Historical Novel Mannan Magal Part 1 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

72
0
Mannan Magal Ch 2 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 2 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 2 காவிரியின் எழிலும் துறவியின் தொழிலும்

Mannan Magal Part 1 Ch 2 | Mannan Magal | TamilNovel.in

சிருஷ்டிக் கடலிலே மனித வாழ்க்கை ஒரு மரக்கலம். அந்தக் கடலில் பயணத்தை இன்பமயமாக்கவல்ல தேமதுரத் தென்றலுண்டு, இஷ்டப்பட்ட திசையை நோக்கிப் பாய்மரங்களை உந்திச் செல்லும் பருவக் காற்றுகள் உண்டு. கரை சேராமலே கவிழ்த்துவிடும் சுழல்களுண்டு. சுழன்று சுழன்றடித்துப் பயணத்தின் திசையை மாற்றி எதிர்பாராத கரையில் கொண்டு தள்ளிவிடும் சூறாவளிகள் உண்டு. எது எப்பொழுது நேரும். வாழ்க்கைப் பயணம் எப்படித் திசை மாறும் என்று மட்டும் சொல்ல யாராலும் இயலாது. மனித புத்திக்கு அப்பாற்பட்ட சிருஷ்டி விசித்திரம் அது. அந்த விசித்திரங்களில் ஒன்றினால்தான் கரிகாலன் அந்தச் சைவத் துறவியை அன்று காவிரியின் கரையிலே சந்திக்கவும் அவருடன் சம்பாஷணையில் இறங்கவும் நேர்ந்தது.

நினைவு தெரிந்த நாளாகக் சூடாமணி விஹாரத்தையும் நாகைப்பட்டணத்துக் கடைத்தெருவையும் தவிர வேறெதையும் காணாத கரிகாலன் கண்களுக்குக் காவிரிக் கரையின் மாலை நேரம் விவரிக்க இயலாத பிரமிப்பை அளித்ததால், அவன் மனத்தைப் பரிபூரணமாகப் பொன்னியின் எழிலிலேயே லயிக்கவிட்டுக் குதிரையின் மீதே நீண்டநேரம் அசைவற்று உட்கார்ந்திருந்தான். குட மலையில் பிறந்த காவிரியன்னை, தன் சிறு பருவத்தில் அம்மலைப் பாறையில் தவழ்ந்து இறங்கி, சற்றுக் கீழேயிருந்த சிறு கற்களிலும் பாறைகளிலும் தளர்நடை புரிந்து, பிறகு துள்ளியோடி, வழியில் சரணடைந்த பூமியையெல்லாம் வளம் தந்து வாழ்வித்துச் சோணாடு வரும்போது கன்னிப் பருவமெய்தியதால் எல்லையற்ற எழிலுடனும் நாணத்துடனும் சிறிது அடக்கமாகவே அழகு நடை நடந்து வந்தாள். குடமூக்கு எனப் பழங்கவிகளால் புகழ்பெற்ற கும்பகோணத்தின் கரையிலே நின்று அவள் வனப்பைக் கண்ட கரிகாலன் இத்தகைய ஒரு சிருஷ்டி அற்புதத்தைக் காணாமல் எதற்காக இருபத்து ஓராண்டுகள் கழித்தோம் என எண்ணி ஏங்கி ஒரு பெருமூச்சு விட்டான்.

மாலை நேரத்து மஞ்சள் வெயில் மேலே பட்டதால் பசு மஞ்சளை அரைத்துப் பூசிய பருவமங்கையெனப் பளபளத்துக் கொண்டிருந்தாள் பொன்னி. அவளை இருபுறமும் தாக்கிய கரைகளிலிருந்து அவள் ஒடுங்கிச் சென்றது திருவிழாக் கூட்டத்தின் நடுவே சிக்கிய கன்னியர் நடக்கும் அழகு நடையை நினைப்பூட்டியது. அவள் சரீர அலைகளிலே கதிரவன் கிரணங்கள் பாய்ந்ததால் பளிச் பளிச்சென்று மின்னிய ஒளிகள் அவள் எத்தனை வைர வைடூரியங்களை அணிந்திருந்தாள் என்பதை நிரூபித்தன. தங்களை அணைத்தோடும் அந்தப் பெண்ணுக்கு மலர் சூட்ட எண்ணமிட்ட கரையோர மரங்கள், தென்றலில் லேசாக அசைந்தாடிப் புஷ்பங்களை அவள் மேனியிலே உதிர்த்தன. பொன்னியின் அலைக்கரங்களும் அந்தப் புஷ்பங்களைத் தாவிப்பிடித்து இடை இடையேயிருந்த குழல்களில் சேர்த்துக் குவித்து தமிழ்நாட்டின் அந்த இளவரசியின் கூந்தலுக்குச் சின்னஞ்சிறு புஷ்பக் கிரீடங்களைத் தயாரித்துக் கொண்டிருந்தன. அந்த அலங்காரத்தால் மகிழ்ந்த பொன்னியும் சில சிறு வெள்ளைத் திறைகளை லேசாக எழுப்பி மந்தகாசம் செய்தாள். அந்த மந்தகாசத்திலும் பொன்னியின் நாணம் மிகுந்த அன்ன நடையிலும் எத்தனை எத்தனை கவிப் பெருமக்கள் தங்கள் மனத்தைப் பறிகொடுத்திருக்கிறார்கள்!

பிற்காலத்தில் பொன்னி பெருக்கெடுத்த ஒரு சமயத்தில் ‘பெண்கள் நாணத்தை விடலாகாது, நாணமென்னும் கரை உடைந்தால் நாட்டுக்கு நாசம்’ என்ற பொருளை வைத்து,

“கன்னி யழிந்தனள் கங்கை திறம்பினள்
பொன்னி கரை யிழந்து போனாளென்-றந்நீர்
உரை கிடைக்க லாமோ உலகுடைய தாயே
கரை கடக்கலாகாது காண்”

என்று கம்பர் பெருமானும் பாடினார். “கன்னியாகிய குமரியைக் கடலரசன் கவர்ந்துகொண்டதால் அவள் அழிந்தனள்; கங்கையும் வழி தவறிவிட்டாள். ஆனால் உலகுக்கெல்லாம் தாயாயிருக்கும் உனக்கு, “பொன்னி கரை யிழந்து விட்டாள்’ என்ற பெயர் வரலாகாது. ஆகையால் கரை கடக்காதே, வரம்பை மீறாதே,” என்று இறைஞ்சிய இப்பாட்டினாலேயே, கம்பர் ‘கவிச்சக்கரவர்த்தி’ என்ற பட்டப்பெயரை அடைந்தார் எனப் புலவர் வரலாறு கூறும். இன்பத்தமிழ் கவிதைக்கும் அறிவுள்ள கவிப் பெரு மக்களுக்கும் அடங்கி தர்மமுள்ளளவும் கரை கடக்காமலே கட்டழகுடன் பிரவகித்து வந்த பொன்னியின் எழிலிலே மனத்தைக் கரிகாலன் பறிகொடுத்துவிட்டதில் விந்தை என்ன இருக்கிறது?

இந்தக் கதை நிகழும் காலத்தில் குடமூக்கு மிகச் சிறிய கிராமமாகவே இருந்து வந்ததால், பொன்னியாற்றைச் சுற்றிலும் வயல்கள் பெரிய மரகதப் பாய்களைப் போல் பரந்து கிடந்தன. சற்று தூரத்திலிருந்த சின்னஞ்சிறு வீடுகளை மறைத்தபடி நின்றன புஷ்பச் சோலைகள் பல. பக்கத்து வயல்களுக்குப் பாய்ந்த சின்னஞ்சிறு வாய்க்கால் நீரில் கயல்மீன்கள் துள்ளி விளையாடி, மாலைநேரத்து வெயிலில் பொன்மீன்களைப் போல் காட்சி அளித்தன். கோடைக் காலமாதலால் அந்த மாலை வேளையிலும் குடமூக்கின் இளமாதர்கள் மஞ்சள் நீராடிக் கொண்டிருந்தனர். வம்பு பேசியும் சிரித்துக் கொண்டும் கழுத்து வரையில் அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்ததால், அந்தப் பெண்களின் புடவைகள் நீர்மட்டத்தில் பெரிய குடங்களைப் போலாகி குடமூக்கு என்று அந்த ஊருக்குப் பெயர் வந்ததற்கு ஒரு காரணத்தை சிருஷ்டித்துக் கொண்டிருந்தன. இளமங்கைகளும் அந்தத் துணிக்குடங்களை விடாமல் அடியில் சேர்த்துப் பிடித்து நீரில் அழுத்தித் திளைந்ததால் காற்றுப் பொறிகள் நீர்மட்டத்தில் கிளம்பிடப் ‘புஸ்’ என்று சப்தித்தன. இந்த வேடிக்கையைக் கண்டு கலகலவென நகைத்த அந்தப் பெண்களோடு சேர்ந்து கொண்டு தனது சிற்றலைகளைப் படித்துறைகளில் மோதி க்ளுக் க்ளுக்’கென்று பொன்னியும் நகைத்தாள்.

அந்தச் சோணாட்டுப் பெண்களின் எழிலையும் பொன்னியில் நாள்தோறும் நீராடியதால் அவர்கள் மேனி யிலிருந்த மெருகையும் கண்டு கரிகாலன் பிரமிப் படைந்தான். இருபத்தொரு வருஷங்களாகப் பிரம்மச் சாரியாகப் புத்த மடாலயத்தில் காலம் கழித்த கரிகாலன் மனத்தை அந்தப் பெண்களின் உடலில் தோன்றிய அழகுச் சின்னங்கள் ஓரளவு அலைக்கழிக்கவும். தொடங்கின. இயற்கையாகவே திரண்டு எழுந்திருந்த அந்த இளமங்கை யரின் எழில் பிரதேசங்கள், ஸ்நானமும் செய்து கரையில் எழுந்து நின்றபோது ஆடை ஆங்காங்கே உடலில் ஒட்டி நின்றதால் அளவுக்கு அதிகமாகவே கண்களைத் தாக்கத் தொடங்கின. எவ்வளவோ லாவகமாக அவர்கள் புடவை களை உடலைச் சுற்றி வளைத்துக் கால்கள் மூலம் சேலையின் பெரும்பாகத்தைச் சோரவிட்டு எஞ்சியதை மார்பில் நன்றாக முடிப்பிட்டுக் கொண்டாலும், என்ன அடக்க வொடுக்கமாகப் படித்துறைகளில் புடவைகளைத் தோய்த் தாலும் சிறிதும் கட்டுத் தளராத உடலமைப்புகளை அடி யோடு மறைத்து வைக்க அந்த மங்கையரால் இயல வில்லை. இப்படி நாணத்தால் அவஸ்தைப்பட்டும் நெளிந்தும் வார்த்தையாடியும் சிரித்தும் நீராடியதால் எழுந்த இன்ப நாதத்திற்கு முன்னால் சற்றுத் தூரத்திலிருந்து புத்த விஹாரத்திலிருந்து எழுந்த புத்தம் சரணம் கச்சாமி’ எத்தனை அபச்ருதியாக இருக்கிறது,என்று எண்ணினான் வாலிபனான கரிகாலன். சங்ககால முதலாகப் பல தமிழ்க் கவிஞரும் வால்மீகி முதலாகப் பல வடமொழிக் கவிஞரும் சிருங்கார ரசத்தில் ஏன் திளைத்தார்கள் என்ற கேள்விக்கு விடையை அன்று குடமூக்கில் பொன்னியாற்றங்கரையில் புரிந்து கொண்டான் சாஸ்திரங்களைக் கரை கண்ட கரிகாலன்.

மாலை நேரம் சிருஷ்டித்த அந்த இந்திர போகத்தில் திளைத்திருந்த கரிகாலனைச் சைவத் துறவியின் அதட்டலான சொற்கள் இக உலகத்துக்கு இழுக்கவே, சற்றுக் கோபத்துடனேயே திரும்பிய கரிகாலன், துறவியை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்தான். பிறகு குதிரையைச் சற்றும் அசைக்காமலேயே கேட்டான், “இந்தப் பாதையில் செல்ல வேறு இடமேயில்லையோ?” என்று.

சைவத் துறவியின் கண்களிலும் லேசாகக் கோபம் உதயமாகத் தொடங்கியது. “இதென்ன விதண்டாவாதம் தம்பி. குதிரையைப் பாதைக்குக் குறுக்கே நிறுத்தியிருக்கிறாய்; விலக்கி ஓட்டு என்றால் வம்பு பேசுகிறாய். ராஜேந்திரன் ஆட்சியில் துறவிகளுக்குத் துன்பம் விளைவிப்பதற்கு என்ன தண்டனை தெரியுமா?” என்று பிகுவை விடாமலேயே பேசினார் சைவத் துறவியும்.

“துறவியை யார் எதிர்த்தால் தண்டனை?” என்று புன் சிரிப்புடன் கேட்டான் கரிகாலன்.

“யார் எதிர்த்தாலும் சரிதான். சாதாரணப் பிரஜையா யிருந்தாலும் படை வீரனாயிருந்தாலும் தண்டனை ஒரே தண்டனைதான். சிறைக் கோட்டத்தில் பத்து நாள்கள் போட்டுக் கிட்டி அடிப்பார்கள்!” என்று சொன்ன சைவத் துறவி, தமக்கு ராஜேந்திர சோழன் ஆட்சியிலுள்ள உயர்ந்த அந்தஸ்தைக் குறிப்பிடும் முறையில், தமது நீண்ட தாடியையும் லேசாக உருவிவிட்டுக் கொண்டார்.

துறவியின் அகந்தையைக் கண்ட கரிகாலன் உதடு களில் மீண்டும் புன்முறுவல் தவழ்ந்தது. அது சரி, ஸ்வாமி! தாங்கள் சொல்லும் தண்டனைகளெல்லாம் சாதாரண மக்களுக்கு. துறவிக்கும் துறவிக்கும் சண்டை நேர்ந்தால் தண்டனை விவரம் எப்படி?” என்று வினவினான்.

இதற்கு என்ன பதில் சொல்வதென்பதை அறியாத சைவத்துறவி, திருதிருவென்று விழித்தார். இருந்தபோதிலும் மெள்ளச் சமாளித்துக்கொண்டு, “அதைப்பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய் தம்பி?” என்று கேட்டார்.

கரிகாலன் சிரித்துக்கொண்டே குதிரையை விட்டு இறங்கிச் சேணத்தைப் பிடித்துக்கொண்டு துறவியை நோக்கி, “ஸ்வாமி! நானும் ஒரு துறவிதான்; ஆகவே நம்மிருவருக்குள் சண்டை ஏற்பட்டால் விவகாரம் எப்படி என்பதை அறிய ஆசைப்பட்டேன்” என்றான்.
“நீ துறவியா!” சைவத்துறவி அவன் மீது ஆச்சரியத்துடன் கண்களை ஓட்டினார்.

“ஆமாம் ஸ்வாமி.”

“உனது உடைக்கும் ஆசிரமத்துக்கும் சம்பந்த மில்லையே தம்பி!”

“நேற்றுதான் காவியைக் களைந்தேன். ஆசிரமத்தை இன்னும் களையவில்லை.”

“துறவி இந்த உடையை உடுத்தலாமா? அபசாரம், அபசாரம்!”

“காவி உடையில் பல அபசாரங்கள் நடக்க வில்லையா? வெள்ளை உடையில், எத்தனையோ நன்மைகள் நிகழவில்லையா? பற்றுதலுக்கும் உடைக்கும் என்ன சம்பந்தம் ஸ்வாமி? ஜடபரதன் கதை உங்களுக்குத் தெரியாததா!”

“ஜடபரதனா? அது யார்?”

துறவியின் இந்தக் கேள்வி காதில் விழுந்ததும், சற்று அதிர்ச்சியடைந்த கரிகாலன் துறவியை உற்றுநோக்கினான். அவன் கண்களைச் சந்தித்த துறவியின் கண்கள் அச்சத்தால் சலித்தன. கரிகாலனின் கூரிய கண்கள் அவர் கண்களையும் கண்கள் மூலம் உள்ளத்தையும் ஆராயத் தொடங்கின. பிறகு அவன் பார்வை துறவியின் உடல் பூராவையும் ஒருமுறை அளவெடுத்தது. மனித சுபாவதத்தை அரைநொடியில் எடை ‘போடவல்ல ஆராய்ச்சி மனப்பான்மையுள்ள கரிகாலனுக்குத் துறவியின் தோரணையில் பெரிதும் சந்தேகமுண்டாயிற்று. பொதுவில் துறவியிடம் காஷாயம் ஒன்றைத் தவிர வேறு துறவிக்குள்ள குணம் ஏதும் இல்லையென்பதைக் கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் புரிந்து கொண்டான் கரிகாலன். துறவியின் தலையில் நாலாபுறத்திலும் பிய்த்துவிட்டது போல் தொங்கிக் கொண்டிருந்த முரட்டு மயிர்களும், நீள வளர்ந் திருந்த தாடியும், சலனப்பட்ட கண்களும் அவர் முகத்துக்குப் பெரும் குரூரத்தை அளித்தன. அவருடைய நீண்ட கைகள் நன்றாக உரம் பெற்றுக் கிடந்ததன்றிச் சில இடங்களில் காயத்தின் அடையாளங்களான தழும்புகளும் தெரிந்தன. சாமியார் அவசியமானால் சண்டையும் போட வல்லவர் என்பதை உணர்ந்து கொண்ட கரிகாலன், அவர் கன்னத்தி லிருந்த வெட்டுக் காயத் தழும்பு முகத்தின் கொடூரத்தை எத்தனை தூரம் அதிகப்படுத்தியது என்பதைக் கவனித்தான். ஜடபரதனுடைய கதையைக் கூடத் தெரிந்து கொள்ளாமல் ஒருவர் எப்படித் துறவியாக முடியும்? ‘பற்றை அறுத்துக் கொள்வதற்கு உதாரணமாகச் சொல்லப்படுவது அந்தக் கதைதானே’ என்று நினைத்தான். ஆகவே அந்தத் துறவியைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள விரும்பிச் சம்பாஷணையைத் தொடர்ந்து, “என்ன ஜடபரதன் கதை உங்களுக்குத் தெரியாதா?” என்றான் வியப்புடன்.

அவன் மனத்திலோடிய எண்ணங்களை அந்தத் துறவியும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். நிலைமையைச் சமாளிக்க ஆகாயத்தை நோக்கிப் பெருமூச்சு விட்டு, “அப்பனே! இந்த அடியேன் கற்றது கைம்மண்ணளவு; கல்லாதது மலையளவு. கற்ற அகந்தை இவனிடம் இல்லை” என்றார்.

சைவத்துறவி தன் மமதையைச் சுட்டிக்காட்டித் தப்ப முயல்வதைக் கண்ட கரிகாலனும், “ஸ்வாமி! அந்தக் கைம்மண்ணளவில் ஜடபரதன் கதையும் சேருமே. துறவறம் மேற்கொண்டு காட்டுக்குச் சென்ற ஜடபரதன், மான் குட்டியிடம் ஆசை கொண்டு, பற்றுதல் மிகுந்ததால் மறு ஜன்மத்தில் மானாகப் பிறந்தான் என்பதைத் தாங்கள் அறியமாட்டீர்களா?” என்றான்.

“ஓ அதுவா? அறிவோம் அறிவோம்” என்று தலை அசைத்தார் துறவி. அடுத்தபடி தன் கச்சையிலிருந்து ஓர் ஓலையை எடுத்துப் பிரித்து அவரை நோக்கி நீட்டிய கரிகாலன், “ஸ்வாமி! இதில் குறிப்பிட்டிருக்கும் புத்த. மடாலயம் எங்கிருக்கிறது?” என்று கேட்டான். அதை ஊன்றிப் படித்த சைவத் துறவியார் ஓலையை ஒரு கையில் பிடித்துக்கொண்டு, “தம்பி! அதோ இருக்கிறதே அந்த புத்த மடாலயம்தான்” என்று தூரத்தே காவிரிக்கரையில் தனியாக நின்றுகொண்டிருந்த புத்த விஹாரத்தைச் சுட்டிக் காட்டினார்.

அடுத்த விநாடி, கரிகாலன் பெரிதாக நகைத்தான். அவன் நகைப்பைக் கண்டு துறவியின் முகத்தில் அச்சம் படரவே அவர் கேட்டார், “ஏன் தம்பி அப்படிச் சிரிக்கிறாய்?” என்று.

“ஸ்வாமி! நான் ஓலையைத் தலைகீழாகத் திருப்பிக் கொடுத்தேன்; நீங்களும் அதைச் சுவாரஸ்யமாகப் படித்தீர்கள். தங்களுக்கு எல்லாம் தலைகீழ்ப் பாடம்தான் போல் இருக்கிறது!” என்றான் கரிகாலன் நகைத்துக் கொண்டே.

“தம்பி! அடியேனுக்கு அட்சராப்பியாசம் கிடையாது. தந்தை சொல்லித்தான் படிப்பு” என்றார் துறவி.

“பிறகு எப்படி அந்தப் புத்த மடாலயத்தைச் சுட்டிக் காட்டினீர்?” என்று கேட்டான் கரிகாலன்.

“ஊகம் அப்பனே ஊகம். அட்சரத்தைக் காட்டாத ஆண்டவன், இந்த அடியவனுக்கு அறிவை ஏராளமாக அளித்திருக்கிறான். அதைத் தவிர…” என்று சற்று நிறுத்தினார் துறவி.

“தவிர?” என்று வினவினான் கரிகாலன்.

“இந்தச் சிற்றூரில் வேறு மடமே கிடையாது” என்று சொல்லிப் புன்னகை பூத்தார் துறவி.

“ஸ்வாமி! தாங்கள் பெரிய பேர்வழி!” என்றான் கரிகாலன்.

“இல்லாவிட்டால் இந்த உலகத்தில் குப்பை கொட்ட முடியாது, அப்பனே” என்றார் துறவியார். அத்துடன் துறவியைக் கத்தரித்துக்கொண்டு கிளம்ப முயன்ற கரிகாலன், “ஸ்வாமி! இந்தச் சோழ நாட்டில் தங்களைப் போன்ற துறவிகள் எத்தனை பேர் இருக்கிறார்களோ தெரியாது. எத்தனை பேரைச் சந்திக்கும் பாக்கியம் எனக்கு ஏற்படுமோ?” என்று சொல்லிக்கொண்டே, குதிரைக் கடி வாளத்தைப் பிடித்து இழுத்துத் திரும்பி இரண்டடி எடுத்து வைத்தான். “தம்பி!” என்று அவனை அழைத்து நிறுத்தினார் சைவத்துறவி.

“ஏன் ஸ்வாமி?”

“அந்தப் புத்த விஹாரத்தில் எல்லோரும் உனக்குத் தெரிந்தவர்கள்தானோ?”
“ஆமாம்.”

“அப்படியானால் ஓர் உதவி செய்ய முடியுமா?”

“என்ன ஸ்வாமி?”

“அங்கு எனக்கும் இந்த இரவு தங்க இடம் தரச் சொல்கிறாயா?”

“நீங்கள் அங்கு ஏன் தங்க வேண்டும்? கிராமத்தில் எங்கும் இடம் கிடைக்காதா?”

“கிடைக்கும் தம்பி! ஆனால் துறவிகள் இருக்கும் இடம் தான் துறவிகளுக்குச் சௌகரியம். ஆனால், நான் சைவன்.”

“அதனாலென்ன, நானும் சைவன்தான்.”

“சைவர்களுக்கும் புத்த மடாலயத்தில் தங்க இடம் கொடுப்பார்களா?”

“ஏன் கொடுக்க மாட்டார்கள்? உலகத்தில் யாருக்கு எந்தத் துன்பம் நேரிட்டாலும் இதய ரத்தத்தைக் கொட்டும் கருணை வாய்ந்த சித்தார்த்தர் வழியில் வந்த பிஷூக்கள் அண்டிவரும் யாருக்கும் இடம் கொடுக்க மறுக்க மாட்டார்கள்.”

“அப்படியானால் நானும் உன்னுடன் வருகிறேன் தம்பி!” என்று கரிகாலனுடன் ஒட்டிக் கொண்டார் துறவி.

கரிகாலன் குதிரையைப் பிடித்துக் கொண்டு முன்னே செல்ல, துறவி அதன் பின்னே மெல்ல நடந்தார். நடக்கும் போது ஒரு கையிலிருந்த கமண்டலத்தை மற்றொரு கையிலிருந்த காவிப்பைக்குள் திணித்து, கயிற்றால் பையின் கழுத்தை நன்றாக இறுகக் கட்டிப் பையை இரு கைகளாலும் சேர்த்துப் பத்திரமாகக் கட்டிக் கொண்டார்.

புத்த விஹாரத்தை அவர்கள் அடையும்போது விளக்கு வைக்கும் சமயம். விஹாரத்தின் மத்திய மண்டபத்திலிருந்த புத்த பிரான் திருவுருவத்துக்கு முன்பாக விளக்கு ஏற்றப்பட்டு மாலை பூஜை தொடங்கிவிட்டது. ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்று பிக்ஷக்கள் கோஷித்தார்கள். விஹாரத்தின் வாயிலை அடைந்த கரிகாலனும், “புத்தம் சரணம் கச்சாமி” என்று ஸ்மரித்தான். கூட வந்த சைவத் துறவி மட்டும், “சச்சிதானந்தம், சச்சிதானந்தம்!” என்று கூவினார்.

விஹாரத்தின் வாயிலில் இருந்த பூவரசன் மரத்தில் குதிரையைக் கட்டிவிட்டு உள்ளே நுழைந்த கரிகாலன் பிக்ஷுக்கள் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு வெளியே வரும்வரை மண்டபத்தின் முகப்பிலேயே காத்துக் கொண்டிருந்தான். கால் ஜாம நேரம் நடந்த பிரார்த்தனைக்குப் பிறகு வெளியே வந்த பிக்ஷுக்கள் கூட்டத்தின் நடுவே முகத்தில் திவ்விய தேஜஸ் ஜொலிக்க வந்த தலைமை பிக்ஷ மண்டப முகப்பில் நின்றிருந்த இருவரையும் நெருக்கி வந்து, “நீங்கள் யார்? என்ன் வேண்டும்?” என்று மிகுந்த மரியாதையுடனும் அடக்கத் துடனும் விசாரித்தார்.

“ஸ்வாமி! நான் சூடாமணி விஹாரத்திலிருந்து வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டே அவரை வணங்கிய கரிகாலன், தன் கச்சையிலிருந்த ஓலையை எடுத்து அவரிடம் பயபக்தியுடன் கொடுத்தான்.

ஓலையைப் படித்த தலைமைப் பிஷு நீண்ட நேரம் சிந்தித்தார். தம்பி! இதில் கண்டிருக்கும் பணியை நிறை வேற்றுவது மிகக் கடினம். இரண்டு நாள்களுக்குள் ஒரு துறவியை வரவழைக்கிறேன். அவர் சொல்லும் தகவலைக் கொண்டுதான் உன் பிரயாணம் எங்கே என்று நிர்ணயிக்க வேண்டும். இரண்டு நாள்கள் இங்கேயே தங்கி இரு. கருணைக் கடலான புத்தபகவான் சரியான வழி காட்டுவார்!” என்றார்.

“ஸ்வாமி! உங்கள் உத்தரவு. அத்துடன் இன்னும் ஒரு கோரிக்கை.”

“என்ன தம்பி?”

“இதோ என்னுடன் வந்திருப்பவர் சைவத் துறவி. எனது நண்பர். இவரும் என்னுடன் தங்க அனுமதி தர வேண்டும்.”

“அதற்கென்ன தம்பி! அப்படியே ஆகட்டும்” என்றார் பிக்ஷீ.

தலைமைப் பிக்ஷீ உத்தரவிட்டுச் சென்றதும், தம்மைத் தொடர்ந்து வரும்படி கரிகாலனுக்கும் சைவத் துறவிக்கும் சைகை செய்த ஓர் உப பிக்ஷ இருவரையும் மடாலயத்தின் கோடியிலுள்ள தனி அறையில் தங்க வைத்தார். அந்த அறையில் அன்றிரவு ஏற்பட்ட விசித்திர அனுபவங்களை நினைத்து நினைத்துப் பிற்காலத்தில் கரிகாலன் பெரிதும் வியந்திருக்கிறான்.

குடமூக்கின் காவிரிக் கரையிலே சந்தித்ததால் கரிகாலனைப் பிடித்துக் கொண்ட சைவத் துறவிக்கும் கடும் பசியாயிருந்திருக்க வேண்டும். புத்த விஹாரத்தில் அன்றிரவு படைக்கப்பட்ட அறுசுவை உண்டியைக் கண் மூடிக் கண் திறக்கும் நேரத்திற்குள் கபளீகரம் செய்ததன்றி, சாப்பிடும் போது ஒவ்வொன்றையும் ருசித்தும், ‘பிரமாதம், பிரமாதம்!’ என்று வாய்விட்டுச் சிலாகித்துக் கொண்டும், இரண்டு பேர் உண்ணக்கூடிய உணவை உண்டு தீர்த்த அந்தத் துறவியைக் கண்ட கரிகாலன், சைவத் துறவி ஒருவேளை கடோற்கசன் அவதாரமோ என்று சிரித்து வியந்தான். அவன் வியப்பு அன்றிரவு தூங்கும்போது இன்னும் அதிகமாயிற்று.

இரவு ஏறிவிட்டதால் புத்த விஹாரமே உறங்கிக் கிடந்தது போல் எங்கும் நிசப்தம் நிலவிக் கிடந்தது. அதைத் தவிர அறையில் வேறு வெளிச்சமே இல்லை. எல்லோரும் உறங்கிவிட்டார்களென்று தீர்ந்தபின், கரிகாலனுடன் படுத்திருந்த சைவத் துறவி மெல்ல எழுந்தார். அறையில் சற்று நேரம் மெல்ல உலாவினார். பிறகு அறையின் சாளரங்களை எல்லாம் நன்றாக அடைத்தார். மறுபடி படுக்கைக்கு அருகே வந்து கரிகாலன் முகத்தைக் கூர்ந்து கவனித்தார். கரிகாலன் மூச்சு ஒரே நிதானத்தில் வந்து கொண்டிருந்ததால், அவன் நன்றாக உறங்குகிறானென்று தீர்மானித்துக் கொண்ட சைவத் துறவி, “இனி இந்தச் சனியனை எடுக்கலாம்” என்று சொல்லிக் கொண்டு, தலைமயிரில் கையை வைத்து அசக்கி அசக்கிச் சடை மண்டியிருந்த தலைமயிரையும், அத்துடன் இணைக்கப் பட்டிருந்த தாடி மீசை முதலியவற்றையும் மிகுந்த சிரமப் பட்டுக் கழற்றி வைத்தார்.

உறங்குவதுபோல் பாசாங்கு செய்துகொண்டு, துறவி வேறு பக்கம் திரும்பும்போதெல்லாம் கடைக் கண்ணால் அவர் விவகாரங்களைக் கவனித்து வியப்பும் கோபமும் ஒருங்கே பொங்கப் பல உணர்ச்சிகளின் வசப்பட்டு உள்ளம் குமுறிக் கொண்டிருந்த கரிகாலனை, அப்படியே சிலையெனச் சமைத்து விடக் கூடிய இன்னொரு பணியிலும் இறங்கினார் சைவத் துறவி.

அவருடைய கடைசி நடவடிக்கையைக் கண்ட கரிகாலன் மிகுந்த பிரமிப்பாலும் கலவரத்தாலும் என்ன செய்வது என்று தெரியாமல் அடியோடு திணற ஆரம்பித்தான்.

Previous articleMannan Magal Part 1 Ch1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here