Home Historical Novel Mannan Magal Part 1 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

104
0
Mannan Magal Ch 20 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 20 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 20 பள்ளியறையில் பஞ்சபாணங்கள்

Mannan Magal Part 1 Ch 20 | Mannan Magal | TamilNovel.in

மன்மதன் யாருக்காவது பயந்து வில்லையும் பஞ்ச பாணங்களையும் அந்தப் பஞ்சணையில் உதறிவிட்டு ஓடிவிட்டானா? ஆம், அப்படித்தானிருக்க வேண்டும்!

கதவு திறந்த ஓசை கேட்டதும் சற்றே திரும்பி, தன்னைக் கண்டதும் உடலை வளைத்துக் குறுக்கிக் கொண்டு பஞ்சணையில் நெளிந்து படுத்த பைங்கிளி யாளைப் பார்த்ததும், அப்படித்தான் நினைத்தான் கரிகாலன்.

ஆண்பிள்ளை யாரும் இல்லையென்ற சுதந்திரப் புத்தியால் உடலை இஷ்டப்படி அலையவிட்டு, நன்றாக மலர்ந்த செந்தாமரை போல் உள்ளழகுகளும் ஓரளவு, தெரியப் படுத்துக் கிடந்த அந்தப் பேரழகி, கரிகாலனைக் கண்டதும், சட்டென்று கால்களை மடக்கியும், இடையிலிருந்து கழுத்து வரை பூவுடலை வளைத்தும் படுத்து, சரேலென இதழ்களைக் குவித்துக்கொண்ட பங்கஜம் போல் மாறினாள். இதென்ன அதிசயம் என்று வியந்தான் கரிகாலன். ‘இரவில் தாமரை மலர்ந்து கிடக்காது. அட, மலர்ந்துதான் கிடந்தது; இன்னும் சற்று நேரம் அப்படியே இருக்கக்கூடாதா? மலர்ந்த தாமரை இத்தனை அவசர அவசரமாக மூடிக்கொள்ளவா வேண்டும்? கண்ணுக்குத் தெரிந்த இன்பக் காட்சிகள் இத்தனை சீக்கிரமாக மறையவா வேண்டும்? இன்பம் மின்னல் போல் மறையக் கூடியது என்ற தத்துவத்திற்கும் விளக்கம் இதுதானா?” என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டான்.

எழிலெல்லாம் ஒருங்கே திரண்டது போல் வளைந்து பஞ்சணையில் கிடந்த நிரஞ்சனாதேவியின் உடல் அமைப்பைப் பார்த்த கரிகாலன், மன்மதன் தன் கரும்புவில்லை அந்தப் பஞ்சணையில் எறிந்துவிட்டுத்தான் ஓடியிருக்க வேண்டும் என்று நினைத்தான். வளைந்து கிடந்த அந்தக் கரும்பிலினியாளின் கன்னிப் பூவுடலிலும் கணுக்கள் பல இருக்கத்தான் செய்தன. கழுத்து, இடை, முழங்கால், இன்னும் எத்தனை எத்தனையோ கணுக்கள்! ஒவ்வொரு கணுவையும் அடுத்து. இன்பரசம் சொட்ட வல்ல எத்தனைப் புஷ்டிப் பிரதேசங்கள்!

கரும்பு வில்லுக்கு வண்டுகளான நாண் வேண்டுமே! ஆ அதுவும்தான் அதோ துவண்டு கிடக்கிறதே! அலை அலையாகத் தலையிலிருந்து சுருண்ட மயிர்கள் பின்னால் விரிந்தோடி பின்னப்பட்டதால் நீளமாகக் கிடந்த அவள் ஜடை பல வண்டுகள் ஒன்றை ஒன்று கவ்விக்கொண்டு மாரன் வில்லின் நாணைப் போலவே காட்சியளித்தன. ஆனால், வளைந்து படுத்த அவள் உடலுக்குப் பின்புறத்தில் கிடந்த பின்னலைப் பார்த்த கரிகாலன், ‘நாண் வில்லின் பின்புறம் கிடக்குமா?’ என்று யோசித்தான். சாதாரணமாக இருக்காதுதான். ஆனால் அந்தப் பயங்கொள்ளி மன்மதன் வில்லைப் போட்டு ஓடிய வேகத்தில் நாணையும் பூட்டாது தாறுமாறாக எறிந்துவிட்டுப் போயிருக்க வேண்டும்’ என்று, கரிகாலன் தன் கவிமனத்தால் சமாதானப்படுத்திக் கொண்டான். இதுமட்டுமா, அதோ மாரனின் பஞ்ச பாணங்கள்! அவனுடைய தாழைமலர்க் கத்தி வேறு! எல்லாம் அந்தப் பஞ்சணையில் அவன் கண்முன்னே கிடந்தன.

அரவிந்தம், அசோகம், மாம்பூ, முல்லை, நீலோற்பலம் ஆகிய ஐந்து மலர்க் கணைகளும் அங்கே சிதறிக் கிடந்தன. நிரஞ்சனாதேவியின் முகம் அரவிந்தம், அசோகத்தை வெல்லும் நீண்ட தளிர் விரல்கள், மாம்பூவைப் பழிக்கும் விரல் நகங்கள், முல்லையை எள்ளி நகையாடவல்ல தந்த வரிசைகள், நீலோற்பலத்தைவிட ஜாஜ்வல்லியமாகப் பிரகாசிக்கும் அழகிய கண்கள். அத்தனையும் கண்ட கரிகாலன், தன் கண்களின் மூலம் இதயத்தையே அந்தப்பஞ்சணையில் அலையவிட்டான். பஞ்சபாணங்கள்தான் இப்படிச் சிதறிக் கிடந்தன. ஆனால் மாரன் வாளான தாழை மலர் மட்டும் நிரஞ்சனாவின் உடல் பூராவும் பரவிக் கிடந்தது. தாழம்பூவின் மஞ்சள் நிறத்தையும் வழவழப்பையும் பெற்ற அவள் தங்க நிற மேனியின் திறந்த பாகங்களைக் கண்ட கரிகாலன் ஏதோ சொர்ண பூமியில் தானிருப்பதாகவே நினைத்தான். அந்தப் பஞ்சணையிலிருந்து எழுந்த நறுமணம் அவள் தலையில் சூடியிருந்த மலர்களிலிருந்து எழுந்ததா அல்லது அவள் தாழம்பூ மேனியிலிருந்து எழுந்ததா என்பதை அவனால் ஊகிக்க முடியவில்லை.

இரவு நடுச்சாமத்தை எட்டிக் கொண்டிருந்தாலும் கிருஷ்ண பக்ஷம் நன்றாக முற்றிவிட்டது காரணமாக, நிலவு வரும் நேரம் தள்ளிப் போயிருந்தபடியால், அறையிலிருந்த வெண்கலப் பாவை விளக்கின் வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சம் அந்த அறையில் கிடையாது. திறந்த சாளரங் களுக்கு வெளியே கும்மிருட்டாகவே இருந்தது. வானில் பிரமாதமாக ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்கள், பூமியில் எந்த வெளிச்சத்தையும் வீசமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தன. நிரஞ்சனாவின் பள்ளியறையிலிருந்த வெண்கல விளக்கு மிக மங்கலாகவே இருந்தாலும், அறையில் அது தனி அரசு புரிந்துகொண்டு அற்பமான நட்சத்திர வெளிச்சத்தை உள்ளே அணுகவொட்டாமல் தடுத்துவிட்டபடியால், சாளரத்துக்கு வெளியே ஏற்கெனவே இருந்த மையிருட்டு இன்னும் அதிகமாகக் கறுத்துவிட்டது போல் தோன்றியது.

அந்தச் சூழ்நிலையில் அறைமூலையில் நிறுத்தப் பட்டிருந்த வெண்கலப் பாவையின் மங்கலான வெளிச்சம் அந்த அறை முழுவதும் பரவி அறையை ஏதோ சொப்பன உலகம் போல் செய்திருந்தது. அதன் ஒளி, கட்டில் கால்களின் தங்கச் சிங்கத் தலைகளில் பாய்ந்து, சிங்கத் தலைகளின் சோபையைப் பன்மடங்கு அதிகப்படுத்தியதுமல்லாமல், பஞ்சணைமீது விரிக்கப்பட்டிருந்த மஞ்சள் நிறப் பட்டு விரிப்புகளின் மீதும் பிரவேசித்து, அவற்றிற்கும் தங்க முலாம் பூசிவிடவே, தங்கத் தகடுகளின் மீது சயனிக்கும் தேவ கன்னியைப் போலக் கிடந்தாள் நிரஞ்சனாதேவி. மிகுந்த வழவழப்புடனும் பூரிப்புடனுமிருந்த அவள் மாம்பழக் கன்னங்களிலொன்றை விளக்கொளி தடவிச் சென்றதால் மினுமினுப்புடன் ஜொலித்த அந்த மஞ்சள் நிறக் கதுப்பில் சற்று வெட்கச் சிவப்பும் சேர்ந்துகொண்டு, தங்கத்தில் பதிப்பிக்கப்பட்ட விலையுயர்ந்த கெம்புக் குவியல் போல் காட்சியளித்தது. விளக்கொளி அத்துடன் விட்டிருந்தாலும் கரிகாலன் கொஞ்சம் நிதானத்திலிருந் திருப்பான். ஆனால் அந்தப் பொல்லாத சுடரின் ஒளி வீச்சுகள் அவள் மெல்லிய புடவையையும் சில இடங்களில் ஊடுருவியிருந்தது.

அவளது அழகிய மார்பகத்தைத் தழுவிச் சென்ற புடவையின் மேல் தலைப்பு முன்புறத்தில் மட்டுமின்றிப் பின்புறத்திலும் நழுவிக் கிடந்ததால் அந்தப் பிரதேசங்களில் பாய்ந்த விளக்கொளி கருத்தை அப்படியே குலைத்துவிடக் கூடிய காட்சியைச் சிருஷ்டித்திருந்தது. இனி படுத்துறங்கு வதைத் தவிர வேறு அலுவல் இல்லையென்ற எண்ணத்தால் ரவிக்கையின் மேல் பாகத்திலிருந்த பட்டுக் கயிறு களைக்கூட நிரஞ்சனாதேவி சரியாகவே முடியாததால், அவள் மார்பகத்தின் ஓரங்கள் பருவத்தின் வெறியைக் காட்டிக் கொண்டு, நன்றாக எழுந்து நின்று விளக்கொளியில் பளபளத்தன. கீழ்ப்பாகங்கள் துணிக்குள் மறைந்து தான் கிடந்தன. ஆனால் மனித ஊகம் கண்களில் கண்டதோடு திருப்தியடைகிறதா? தெரிந்ததைவிடத் தெரியாத விஷயங்களில் கற்பனை அதிகமாக ஓடுகிறது. கற்பனை ஓட்டத்திலே காணும் இன்பக் கனவுகள் பல. பாதி திறந்தும் பாதி மறைந்தும் இருக்கும் அம்சங்களில் கற்பனை. வெறிபிடித்து ஓடுகிறது. மறைத்து நிற்கும் திரைச் சீலையைக் கிழித்தெறிய மனம் துடிதுடிக்கிறது.

இயற்கையின் இந்த வெறியிலே துடித்த கரிகாலனை அவளுடைய இதர எழிலம்சங்களும் படாத பாடு படுத்தின. அவள் கால்களை வளைத்து முழங்கால்களை வயிற்றுக்காக மடித்துப் படுத்திருந்ததால், பின்புறத்தில் பெரிதாக எழுந்த அழகிய பகுதிகளின் மீது ஓடிய கரிகாலன் கண்கள், தாமரை மலர்களால் சிருஷ்டிக்கப்பட்ட குன்றுகளைக் கண்டுவிட்டன போல் பிரமை பிடித்து நின்றன. அலங்கோலமாகச் சேலை நெகிழ்ந்ததால் சற்று அளவுக்கு அதிகமாகவே தெரிந்த கால்கள், நன்றாகக் கடையப்பட்ட இரு பெரும் தந்தங்கள் போல் கிடந்தாலும், அவற்றுக்கு மேல் புறத்திலிருந்த சேலை தொடைகளில் பாய்ந்து பதுங்கிய காரணத்தால், மனம் செய்த ஊகத்தாலும் கரிகாலன் நிலை கொள்ளாது தவித்தான். இந்தத் தவிப்பு, ஓரளவு நிரஞ்சனாதேவிக்கும் இருக்கத்தான் செய்தது.

திடீரென்று கரிகாலன் உள்ளே நுழைந்ததால், தான் இருந்த அலங்கோல நிலையை மிகத் துரிதமாகத்தான் சரி செய்துகொண்டாள் நிரஞ்சனாதேவி. ஆனால், அந்தச் சில விநாடிகளுக்குள்ளாகவே கரிகாலன் கண்கள் பாயக்கூடாத இடங்களிலெல்லாம் பாய்ந்துவிட்டதையும், அதன் காரணமாக அவன் நிலைகுலைந்து நிற்பதையும் கண்டுகொண்ட அரசகுமாரி, ‘அப்பா! இந்த ஆண் பிள்ளைகளுக்குத்தான் எத்தனை துடுக்குக் கண்கள்!’ என்று அலுத்துக்கொள்ள முயன்றாள். ஆனால் உள்ளம் அந்த அலுப்புக்கு இடந்தராமல், கரிகாலன் பிரமை பிடித்து நிற்பதைக் கண்டு பெருமிதமே கொண்டது.

பெண் உள்ளமே ஓர் அலாதி. ஆண் பிள்ளைகள் தங்கள் அங்க லாவண்யங்களைப் பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயம் உண்டு. ஆனால், பார்க்க வேண்டும் என்ற ஆசையும் உண்டு. பார்த்துவிட்டால் வெளியில் கோபம் உண்டு! பார்த்து மலைப்பது கண்டு உள்ளே மகிழ்ச்சி உண்டு, நாணமுண்டு, அந்த நாணத்தை உடைக்க ஓர் ஆண்மகன் வரமாட்டானாவென்ற ஏக்கமும் உண்டு. இத்தகைய பயம், ஆசை, கோபம், நாணம், ஏக்கம், ஆகிய வேறுபட்ட உணர்ச்சிகளின் அலை மோதல்தான் காதலின்பம். அந்த இன்பத்திற்கு வசப்படாத பெண், உலகத்தில் என்றும் பிறந்ததில்லை; இனி பிறக்கப் போவது மில்லை. உணர்ச்சிகள் எல்லோருக்கும் சமம். இந்த உணர்ச்சிகளை அந்தஸ்தோ, சாதியோ, சமயமோ, எதுவுமே கட்டுப்படுத்த முடியாது. அந்தஸ்தும் சமயமும் சாதியும் கடலையும் காற்றையும் கட்டுப்படுத்த முடியுமா? இயற் கையின் இந்தச் சக்திகளைப் போலத்தான் உணர்ச்சிகளும். செயற்கைச் சிருஷ்டிகள் இயற்கைகளைக் கட்டுப்படுத்த முடிவதே இல்லை.

அந்தச் சக்தியினால் சிக்கித் தவித்தாள் வேங்கி நாட்டு மன்னன் மகளும். அந்த கிருஷ்ணபட்சத்து இரவிலே, மங்க லான வெளிச்சமும் மலர்களின் நறுமணமும் சூழ்ந்து கிடந்த அந்தப் பள்ளியறைப் பஞ்சணையிலே, கதவைத் திறந்துகொண்டு வாயிற்படியிலே நின்ற கரிகாலனை, அவளும் தன் மலர் விழிகளால் நோக்கினாள். ஆனால், அன்று அவள் பார்த்த முறை வேறு. முதல்நாள் சந்தித்த போது நிர்ப்பயமாயிருந்த பார்வையல்ல அது. தூதனை எதிர்பார்த்திருந்ததால் சதி நிரம்பிய உள்ளத்தோடு பார்த்த பார்வையல்ல அது. ஆண்மகனொருவன் தன்னை அலங் கோலமாகப் பார்த்துவிட்டானே என்ற சங்கடப் பார்வை அது. தன் உடலின் மர்மப் பகுதிகளிலெல்லாம் கண்களை ஓட்டி மகிழ்ந்துவிட்டானே என்ற எண்ணத்தினால் ஏற்பட்ட வெட்கப் பார்வை அது. அந்த வெட்கத்தினால் உடல் பூராவும் மின்சாரம் போல் ஊடுருவிச் சென்ற மகிழ்ச்சி வெள்ளத்தின் அலைகள், அந்தப் பார்வையில் திரும்பத் திரும்ப மோதின.

வெட்கத்தினால் ஓரப் பார்வையாகக் கரிகாலனைப் பார்த்ததால், அவன் எத்தனை அழகாயிருக்கிறான் என்பதை அன்றுதான் நன்றாகக் கவனித்தாள் மன்னன் மகள். அந்த வாயிற்படியின் உயரம் போதாமையால், தலையைச் சற்றே சாய்த்தும் கால்களை வளைத்தும் நின்றிருந்த கரிகாலனுடைய கை, கால்கள் எத்தனை மெல்லியதாக அழகாயிருக்கின்றன என்பதைக் கவனித்த நிரஞ்சனாதேவி, நல்ல உயரமான அவன் உடல் மெல்லியதாக இருந்தாலும் எத்தனை கம்பீரமாயிருக்கிற தென்பதையும், அவன் தலையில் சுருண்டு தொங்கிய கறுமயிர்கள் அவன் முகத்தைச் சூழ்ந்து நின்றதால் இயற்கையாக இருந்த முகத்தின் எழில் எவ்வளவு தூரம் அதிகப்பட்டு விட்டதென்பதையும் கவனித்தாள். பார்ப்பதற்குக் குழந்தை முகம் போலிருந்தாலும், ஈட்டிகளை விடக் கூர்மையாக இருந்த விழிகளில் வீரமும், ஆராய்ச்சி மனப்பான்மையும் கலந்து வீசுவதைக் கண்ட நிரஞ்சனாதேவி, காலக்கிரமத்தில் கரிகாலன் பெரும் வீரனாக மாறுவான் என்று சந்தேகமறத் தீர்மானித்துக் கொண்டாள். வீரமும், அழகும் கலந்து தோன்றிய அந்த முகத்துக்கு, அவன் இதழ்களின் ஓரத்தில் சதா தொக்கி நின்ற ஒரு விஷமப் புன்முறுவல் தனிச் சோபையை அளித்துக் கொண்டிருந்தது. பெண்களின் இடுப்புப் போல் குறுகிக் கிடந்த இடுப்பில் கட்டப்பட்ட கச்சையிலிருந்து பாதம் வரையில் தொங்கிக் கொண்டிருந்த மிக நீளமான வாளைப் பார்த்த நிரஞ்சனாதேவி ‘இவ்வளவு பெரிய வாளை இந்த மெல்லிய கரம் சுழற்ற முடியுமா?’ என்று நினைத்துப் புன்முறுவலும் கூட்டினாள்.

அவள் மனத்தே ஓடிய நினைவுகளை விநாடி நேரத்தில் புரிந்துகொண்டு, “அரசகுமாரி! வாளைச் சுழற்ற கை பருமனாயிருக்க வேண்டியதில்லை. கையில் உரம் வேண்டும். லாவகம் வேண்டும், அவ்வளவுதான்” என்றான் கரிகாலன்.

“மன்னிக்க வேண்டும், உங்கள் வீரத்தைப் பற்றி நான் சந்தேகிக்கவில்லை.”

“கை வலுவைப் பற்றிச் சந்தேகித்தீர்களாக்கும்?” இதைச் சொன்ன கரிகாலன் குரலில் ஏளனம் தொனித்தது.

“ஆமாம்.”

“இயற்கையை அரசகுமாரி சரியாகக் கவனிக்கவில்லை போலிருக்கிறது.”

“அளவக்கு மீறிய கவனிப்புத் தங்களிடம் இருப்பதைக் கவனித்தேன்” என்றாள் அரசகுமாரி. அவள் வார்த்தைகளின் உள்ளர்த்தத்தைப் புரிந்து கொண்ட கரிகாலன், சிறிது திணறினாலும், பிறகு சமாளித்துக் கொண்டு சொன்னான்: “எதிர்பாராத விதமாகப் பொக்கிஷம் திறந்து கிடந்தால் அங்குள்ள வைர வைடூரியங்களில் கவனம் செல்லத்தானே செல்லும்.”

“பொக்கிஷம் பிறருடையதாயிருந்தாலுமா?”

“பொக்கிஷத்தைப் பார்த்து மலைப்பது மனித இயற்கை. உடையவன் ஒருவன் உண்டு என்று தெரிந்தாலே அப்படி யாரும் இல்லையென்றால் கைப்பற்ற முயலுவதும் மனித இயற்கை.”

“கைப்பற்றுவதா, களவாடுவதா? எது மனித இயற்கை?”

“இரண்டும்தான். கைப்பற்றுவதற்குக் களவும் ஒரு வழி.”

அந்த வழியையும் கற்றிருக்கிறீர்களோ?”

“எல்லாவற்றையும் கற்க வேண்டிய அவசியமில்லை. சில இயற்கையாகவே வரும்.”

“களவு தங்களுக்கு இயற்கையாக வரும் போலிருக்கிறது!”

“எனக்கென்ன! என்னைவிடப் பெரியவர்களுக்கெல் லாம் வந்திருக்கிறது.”

“யாரது?”

“ஓர் உதாரணம் – கிருஷ்ண பகவான்.”

“அவன் திருடினானா?”

“ஆம்.”

“எதை?”

“யாரை என்று கேளுங்கள்.”

“சரி, யாரை?”

“ருக்மணியை.”

கலகலவென்று நகைத்தாள் நிரஞ்சனாதேவி. அந்தச் சமயத்தில், அவள் உள்ளத்தில் சதி மறைந்தது. தம்பி மறைந் தான். வேங்கி நாடு மறைந்தது. ஜெயசிம்மனைப் பற்றிய பயம் மறைந்தது. அரிஞ்சயன், பிரும்ம மாராயன் அத்தனை பேருமே மறைந்தார்கள்! நின்றவன் எதிரேயிருந்த கரிகாலன் மட்டும்தான். ஆறடி உயரத்துக்குக் குழந்தை முகத்துடனும் கவர்ச்சிக் கண்களுடனும் நின்ற அந்த ஆண்மகன் ஒருவன்தான். அரசகுமாரி மெள்ளப் பஞ்சணையிலிருந்து எழுந்து, சாளரத்தை நோக்கிச் சென்று வெளியே எட்டிப் பார்த்தாள். இருட்டும் அன்று அழகாகத் தெரிந்தது அவளுக்கு. புராணம் பேசும் அந்தத் தர்க்க சாஸ்திரியை நினைத்து மீண்டும் சிரித்தாள் அவள்.

“ஏன் சிரிக்கிறீர்கள் அரசகுமாரி?” அவள் காதருகில் ரகசியமாக ஒலித்தன அந்த வார்த்தைகள். சற்றுத் திரும்பினாள் நிரஞ்சனாதேவி. வேல் விழிகளைக் கவ்வி நின்றன, மற்றுமிரண்டு வேல்கள். கரிகாலன் அவளுக்கு வெகு அருகில் நின்றுகொண்டிருந்தான். அவள் கண்கள் அவன் கண்களை நோக்கி மிரண்டு விழித்தான். அவள் கன்னங்களை அவன் நாசியிலிருந்து வந்து கொண்டிருந்த உஷ்ணக்காற்று தடவிச் சென்றது. அவள் உடலில் அனல் வாரிக் கொட்டிக் கொண்டிருந்தது. அதற்கு அறிகுறியாக அவள் கன்னங்கள் தீக்குழம்பைப் போல் சிவந்து ஜொலித்தன. இன்னும் சற்றுத் திரும்பினாலும், தன் உடல் அவன்மீது உராயும் என்பதை அறிந்த நிரஞ்சனா, நெளியக்கூட முடியாமல் தவியாய்த் தவித்தாள்.

Previous articleMannan Magal Part 1 Ch 19 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here