Home Historical Novel Mannan Magal Part 1 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

81
0
Mannan Magal Ch 21 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 21 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 21 இந்த வாள் உங்கள் அடிமை

Mannan Magal Part 1 Ch 21 | Mannan Magal | TamilNovel.in

இயற்கை தூண்டிவிட்ட உணர்ச்சிகளின் வசப்பட்டு இவ்வுலகையே மறந்து நின்ற அந்த இருவரின் மனப்போக் குக்கு, சாளரத்துக்கு வெளியேயிருந்த காரிருளும், அறைக்கு உள்ளேயிருந்த வெண்கலப் பாவையின் சிறு சுடரொளியும் பெரிதும் துணை செய்தன. வெளியேயிருந்த காரிருளை விடக் கருமையான நிரஞ்சனாதேவியின் கண்கள், வானத்தில் கண்களைச் சிமிட்டிப் பரிகசித்துக் கொண்டிருந்த விண்மீன்களை ஆராய முயன்றாலும், அவள் மனக்கண் மட்டும் பின்னாலிருக்கும் அந்தப் புருஷன் என்ன செய்கிறான் என்பதை அறிவதிலேயே நாட்டம் கொண்டு நின்றதால், அவளுடைய விழிகளின் பார்வையில் மயக்கமே தேங்கி நின்றது. அந்த மயக்கத்துக்கு இன்னும் ஆக்கம் தர முயன்ற தென்றலும், நந்தவனத்தில் சற்றுத் தூரத்தேயிருந்த செண்பக மலர்களின் நறுமணத்தைத் தாங்கி வந்து அவளைத் தழுவிச் சென்றது. மணம் நிறைந்த அந்தத் தென்றல் விளைவித்த இன்பத்தாலும், மனம் நிறைந்த உணர்ச்சிகளின் பிரவாகத்தாலும், நிரஞ்சனாதேவி லேசாக நெளிந்து ஒரு பெருமூச்சும் விட்டாள்.

அவளுக்கு வெகு அருகில் பின்னால் நின்ற கரிகால னும், அவள் நெளிவையும் பெருமூச்சையும் கவனிக்கத் தான் செய்தான். அவற்றைத் தொடர்ந்து அவள் தன் வலக் கரத்தைச் சற்றே உயர்த்திச் சாளரத்தின் நடு மரக்கட்டையைப் பிடித்துக் கொண்டதையும் பார்த்தான். அந்த அழகியின் உள்ளம் அடியோடு பலவீனப்பட்டிருக்கிற தென்பதையும் நொடிப் பொழுதில் உணர்ந்துகொண்ட கரிகாலன், அவள் மீது அன்பும் பரிதாபமும் கலந்த பார்வையொன்றை ஓடவிட்டான். அறைக்குள்ளேயிருந்த விளக்கின் மங்கிய ஒளியில் கூட சேலை நெகிழ்ந்து கிடந்ததால் நன்றாகத் தெரிந்த அவள் கழுத்தின் பின்புறம், தந்தம் போல் வெளேரென்று காட்சியளித்தது. அந்தத் தந்தத்தின் வெண்மையை அதிகப்படுத்திக் காட்டவோ என்னவோ கழுத்துக்குச் சற்று மேலிருந்த அடர்த்தியான கறுத்த மயிர்களில் ஒன்றிரண்டு குறுக்கே விழுந்து கிடந்தன. முன் புறத்தில் பட்டுக் கயிறுகள் கட்டப்பட்டதால், பின்புறத்திலிருந்த கழுத்து மட்டுமின்றி அதற்குக் கீழுள்ள முதுகின் ஒரு சிறு பாகமும் கரிகாலன் கண்களுக்கு விருந்தளித்தன. அவள் தலையில் சூடியிருந்த முல்லைச்சரம் சற்றே அவிழ்ந்து கிடந்ததால், அதன் நுனி தலையிலிருந்து நேராகத் தொங்கிச் சற்றே தெரிந்த வெண்மையான அவள் முதுகின் மேல்பாகத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்தது. அந்த முல்லை செய்த பாக்கியத்தை எந்த ஆடவன் செய்திருக்கிறானோ என்று எண்ணிய கரிகாலன் இதயத் திலிருந்தும் பெருமூச்சொன்று கிளம்பி, அவள் கழுத்தையும் அதை அடுத்துச் சற்று மேலேயிருந்த கன்னத்தையும் தடவிச் சென்றது.

பின்னால் நிற்கும் அந்த வாலிபன் தன்னை அக்கக்காக அலசிக் கொண்டிருக்கிறான் என்பதை நிரஞ்சனா தேவி சந்தேகமறப் புரிந்து கொண்டுதானிருந்தாள். அதில் அவளுக்கு ஓரளவு ஆனந்தமும் இருக்கத்தான் செய்தது. பெண்களின் இயற்கை இது. ஆண்மக்கள் தங்கள் அழகில் சிக்கி அடிமையாகிறார்கள் என்ற நினைப்பைவிட, அவர்களுக்கு ஆனந்தம் அளிக்கவல்லது உலகத்தில் எதுவுமேயில்லை. கரிகாலன் மட்டும் அந்த விநாடியில் நிரஞ்சனா தேவியின் முகத்தைப் பார்க்க முடிந்திருந்தால், அந்த ஆனந்தத்தின் சாயை அவள் முகம் பூராவும் பரவிக் கிடந்ததைப் பார்த்திருப்பான். அதன் விளைவாக அவள் பவள இதழ்கள் சிறிது குறுநகை காட்டியதையும் கவனித்திருப்பான். கவனித்திருந்தால் அடுத்த விநாடி உணர்ச்சிகளின் பிரவாகம் அந்த இருவரையும் எங்கு இழுத்துச் சென்றிருக்குமோ என்று சொல்ல முடியாது. நீர்ச்சுழல் போன்றது தானே உணர்ச்சிச் சுழலும்! அதில் சிக்குபவர்கள் அமிழ்ந்து போவதில் ஆச்சரியமென்ன இருக்கிறது!

கரிகாலனுடைய உணர்ச்சிகளை நிரஞ்சனாவின் பின்னழகே பெரிதும் ஆட்டிவைத்ததால், அவன் அவள் முதுகுப்புறத்தில் மேலும் கீழும் கண்களை ஓட்டியதோடு நின்றுவிட்டானே தவிர, அவள் முகத்தைப் பார்க்க இஷ்டமோ தைரியமோ அற்றவனாகத் திண்டாடினான். அந்தத் திண்டாட்டத்துடன் தனக்கும் அரசகுமாரிக்கும் இருந்த அந்தஸ்தின் வித்தியாசமும் அவன் உள்ளத்தில் மெல்ல மெல்ல வேர்விடவே, மெள்ள அவன் தன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டதன்றி, தான் அங்கு வந்த காரியத்தைப் பற்றியும், அரசகுமாரியை எதிர்நோக்கியிருந்த பேராபத்தைப் பற்றியும் யோசிக்கலானான்.

சில நாழிகைகளுக்கு முன்பாக அரிஞ்சயன் நந்தியா வட்டச் செடிகளின் மறைவில் அரசகுமாரியுடன் பேசிய விஷயங்கள் அவன் சித்தத்தே எழுந்து நின்றன. அரிஞ்சயன் முன்னுக்குப் பின் முரணாக உளறியதையும் அதை அரசகுமாரி கவனிக்காமலே அவன் கேட்டபடி ஓலை எழுதிக் கொடுக்க ஒப்புக் கொண்டதையும் எண்ணிப் பார்த்த கரிகாலன், அரசகுமாரியின் தலைமீது பேரிடியை இறக்கி, அவளையும் அவள் தம்பியையும் அழித்துவிடவே அரிஞ்சயன் ஏற்பாடு செய்திருக்கிறான் என்பதை சந்தேகமறப் புரிந்து கொண்டான். ஆகவே அரிஞ்சயனுடைய நடவடிக்கைக்கு ஒரு முடிவு கட்டித் தீருவதென்று தீர் மானித்துக் கொண்டு மெல்ல அது விஷயமாக அரசகுமாரியுடன் பேச்சு கொடுக்கவும் தொடங்கி, “அரசகுமாரி!” என்று அழைக்கவும் செய்தான்.

திரும்பி அவனைப் பார்க்கச் சக்தியற்றிருந்த அரச குமாரி பதிலேதும் சொல்லாமல் ஒரு ‘ஹும்’ கொட்டினாள்.

“ஏன் அரசகுமாரி மௌனமாயிருக்கிறீர்கள்?”

மீண்டும் கேட்ட கரிகாலன், அவள் திரும்புவதற்கு வசதியளிப்பதற்காக இரண்டடி பின் நகர்ந்தான்.

அவன் நகர்ந்ததால் ஏற்பட்ட காலடி அவள் காதிலும் விழுந்திருக்க வேண்டும். அதனால் ஏற்பட்ட சுதந்திரத்தால் உணர்ச்சிகளின் வேகமும் ஓரளவு தடைப்பட்டிருக்க வேண்டும். அரசகுமாரி சற்றே திரும்பிக் கரிகாலனைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். அவள் முகத்தில் மறுபடியும் பழைய கம்பீரமும் உறுதியும் குடிகொண்டு விட்டதைக் கவனித்த கரிகாலனுக்கு ஓரளவு மன நிம்மதி ஏற்படத்தான் செய்தது. அவள் கண்கள் அவனைத் தைரியமாக ஏறெடுத்துப் பார்த்தன. பவள இதழ்களும் லேசாக விரிந்து வார்த்தைகளை உதிர்த்தன.

“மௌனம் சிந்தனைக்கு இடம் தருகிறதல்லவா?” என்றாள் அரசகுமாரி.

“எதைப்பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள்?” என்று கரிகாலன் கேட்டான்.
பதில் சொல்ல வெட்கமாயிருந்தது அவளுக்கு. ‘உன்னைப் பற்றித்தான் எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்’ என்று எப்படித்தான் சொல்லுவாள் அவள்? அவன் கேள்வியின் காரணமாகவும், அதற்குப் பதில் சொல்ல முடியாததால் ஏற்பட்ட சங்கடம் காரணமாகவும், அவள் கன்னங்களில் வெட்கச் சிவப்பு சற்றே தட்டியது. இருந்தாலும் மெள்ளச் சமாளித்துக் கொண்டு பேச்சை மாற்றி னாள் அவள்.

“எதைப் பற்றிச் சிந்திப்பேன் கரிகாலரே! என் நாட்டின் கதியைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். வேறு சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று கேட்டாள் அரசகுமாரி.

கரிகாலன் இதழ்களில் புன்முறுவல் அரும்பியது. ‘மனோதத்துவ சாஸ்திரத்தை தலைகீழாகப் படித்திருக்கும் என்னையே ஏமாற்றப் பார்க்கிறாயே அரசகுமாரி!’ என்று மனத்திற்குள் நினைத்தாலும், அதை வெளியில் காட்டாமல் அவள் சென்ற பாதையையே தானும் பின்பற்றி, “ஆமாம் அரசகுமாரி! சிந்திப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? நானும் அதைப் பற்றித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்” என்றான் கரிகாலனும்.

“மிகவும் நன்றி.”

“நன்றி எதற்கு அரசகுமாரி?”.

“எங்கள் நாட்டின் விஷயத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தைக்கு.”

“நாட்டின் விஷயத்தில் அல்ல அரசகுமாரி, உங்கள் விஷயத்தில் என்று சொல்லுங்கள்.”

“என் விஷயத்திலா?”

“ஆமாம் அரசகுமாரி! நீங்கள் என்னை வீரர்களிடமிருந்து காப்பாற்றினீர்கள். அந்த நன்றிக்கு நான் கைம்மாறு செலுத்த வேண்டாமா?”

“கைம்மாறு நான் கோரவில்லையே!”

“நீங்கள் கோராவிட்டால் என்ன? என் கடமையை நான் செலுத்த வேண்டாமா? நன்றி மறப்பது தமிழன் பண்பல்லவே.”

“செய்த உதவிக்குக் கைம்மாறு கேட்பதும் வேங்கி நாட்டுப் பண்பல்ல, கரிகாலரே.”

“அவரவர் பண்பு அவரவர்களுக்கு. கைம்மாறு கோரா திருப்பது உங்கள் பண்பு. நன்றி மறக்காதிருப்பது எங்கள் பண்பு. அந்தப் பண்பை உத்தேசித்து நான் உங்களுக்கு அடிமையானேன், அரசகுமாரி! இந்த வேங்கி நாடு உங்கள் எதிரியின் பிடியிலிருந்து முழுதும் விடுபட்டு உங்கள் தம்பி இராஜராஜ நரேந்திரன் உறுதியாக அரியணையில் அமரும் வரை இந்த வாள் உங்களுக்கு அடிமையாயிருக்கும்” என்று உணர்ச்சியுடன் தன் வாளை வலதுகையால் தட்டிக் காட்டிய கரிகாலன், ஓர் அடி முன்னுக்கு நடந்து அரச குமாரியின் வலக்கரத்தைத் தைரியமாக எடுத்துத் தன் இடக்கரத்தில் வைத்துக்கொண்டு, தனது வலது கையை அவள் உள்ளங்கையில் வைத்து அழுத்தி, “இது சத்தியம்!” என்று ஆணையும் இட்டான்.

அப்படித் திடீரென அவன் தன் கையைப் பற்றியதால் ஒரு விநாடி அசந்துபோன அரசகுமாரி, அவன் ஆணையிடவே அந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டானென்பதை அறிந்ததும், மெள்ளச் சமாளித்து, கையை இழுத்துக் கொண்டு, “வீரர்கள் வாளின் மேல் ஆணையிட்டாலே போதுமே கரிகாலரே!” என்றாள்.

அவள் வார்த்தைகளில் தொனித்த எச்சரிக்கையையும் கண்டிப்பையும் கவனித்த கரிகாலன், நன்றாகப் பின்னால் நகர்ந்து, அவளுக்கும் தனக்குமிருந்த இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டான். சிறிது நேரம் ஏதோயோசித்துக் கொண்டே உலாவிவிட்டுச் சட்டென்று அறை நடுவே நின்று அரசகுமாரியை நோக்கி, “அரசகுமாரி, என்னிடம் உங்களுக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறதா?” என்றான்.

“ஏன் நம்பிக்கையில்லாமலென்ன?” என்று அரசகுமாரி கேட்டாள்.

“நம்பிக்கையை உடைத்தெறியக்கூடிய விஷயங்கள் நடந்திருக்கின்றன.”

‘’ஆமாம்!”

“உங்கள் பரமவிரோதி ஜெயசிம்ம சாளுக்கியனை அணுகியிருக்கிறேன்.”

“நீங்களாக அணுகவில்லையே!”
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்?”

“உங்களை நேற்றிரவு அங்கு வரச் சொல்லியிருந்தேன் அல்லவா?”

“ஆமாம்.”

“நானும் வர முயன்றேன். ஜெயசிம்ம சாளுக்கியன் உத்தரவால் நான் மாளிகையை விட்டு நகர முடிய வில்லை.”

“உங்களைக் கட்டுப்படுத்த அவருக்கு என்ன உரிமை?”

“அவருக்கில்லாத உரிமை எங்கள் அரண்மனையில் யாருக்கு இருக்கிறது? பெயருக்குத்தான் என் தம்பி அரசன். ஆள்பவன் ஜெயசிம்மன்தான். நேற்று வசந்த மண்டபத்தில் ஜெயசிம்மன் சில தூதர்களை அந்தரங்கமாக சந்தித்துப் பேசப்போவதாகவும், நாங்கள் அங்கு போகக்கூடா தென்றும் அரண்மனை ஸ்தானிகர் கூறிவிட்டார். காரணத்தை உணர்ந்துகொண்டேன். உங்களை எச்சரிக்கவும் துடித்தேன்; முடியவில்லை. என் மீதும் மாலினி மீதும் ஒற்றர்கள் கண்ணோட்டமிருந்தது. ஆகவே பேசாமலிருந்து விட்டேன். நீங்கள் அரண்மனைக்குக் கொண்டு வரப் பட்டதைக் காலையில்தான் அறிந்தேன்.”

“பிறகு நடந்தது தெரியுமா?”

“தெரியும். ஆனால் விளங்கவில்லை.”

“ஏன்?”
“ஜெயசிம்மன் உங்களை ஏன் சிறையிலடைக்காமல் அரண்மனையில் இருத்தினான்? பிறகு எப்படி உங்களை அரையன் ராஜராஜன் மகனென்று ஒப்புக்கொண்டான்? யோசித்துப் பார்த்தேன்

“உம், சொல்லுங்கள் அரசகுமாரி.”

“உங்களைச் சந்தேகிக்கக்கூடச் சந்தேகித்தேன். ஒரு வேளை நீங்கள் ஜெயசிம்மன் பக்கம் திரும்பிவிட்டீர்களோ என்றுகூட நினைத்தேன்.”

“பிறகு எப்படிச் சந்தேகம் விலகியது?”

“அரிஞ்சயன் சொன்னான், உங்களைச் சந்தேகிக்க வேண்டாமென்று.”

“அரிஞ்சயனிடம் உங்களுக்கு அவ்வளவு நம்பிக்கையா?”

“அசையா நம்பிக்கையிருக்கிறது.”

மீண்டும் யோசனையிலாழ்ந்தான் கரிகாலன். நிலைமை மிகச் சங்கடமாகி வருவதை உணர்ந்தான். விஷப் பூச்சியான அரிஞ்சயனிடம் அரசகுமாரிக்குள்ள அசையா நம்பிக்கையை உடைப்பது சாத்தியமல்ல வென்பதை அறிந்த கரிகாலன், தான் காலை எந்தப் பக்கம் வைத்தாலும் கிடுகிடு பாதாளம் இருப்பதை உணர்ந்துகொண்டான். ஆகவே, அபாயமான குறுகிய பாதையில் தான் வெகு ஜாக்கிரதையாக நடந்து செல்ல வேண்டுமன்ற எண்ணத்துடன், “அரசகுமாரி, நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்” என்று பேச்சை மீண்டும் துவங்கினான்.
“அப்படி என்ன குற்றத்தைச் செய்துவிட்டீர்கள்?”

“ஒட்டுக் கேட்பது குற்றமல்லவா?”

“எதை ஒட்டுக் கேட்டீர்கள்?”

“சற்று முன்பு நீங்களும் அரிஞ்சயனும் பேசியதை ஒட்டுக் கேட்டேன்.”

நிரஞ்சனாதேவியின் மைவிழிகள் சரேலென அவன் முகத்தை நோக்கின. “ஒட்டுக் கேட்டீர்களா?” என்று கேட்டு, மேலும் ஏதோ சொல்ல முயன்று முடியாமல் வார்த்தைகளை உள்ளே விழுங்கினாள்.

“ஆமாம்.”

“நீங்கள் அப்பொழுது எங்கிருந்தீர்கள்?”

“தற்செயலாக அந்தப் பக்கம் வந்தேன். உங்கள் குரல் கேட்டது. சிறிது நேரம் பாதையிலே நின்றேன். பேச்சு சுவாரஸ்யத்தில் என்னைக் கவனிக்கவில்லை. பேச்சு முடியும் சமயத்தில், நான் பக்கத்திலிருந்த செடியில் மறைந்துகொண்டேன்.”

“ஏன்?”

“அரிஞ்சயன் பேச்சு எனக்கு ரசிக்கவில்லை. சில விஷயங்கள் புரியவில்லை.”

“எது ரசிக்கவில்லை? எது புரியவில்லை?”

“ரசிக்காததற்கு அவனைப் பற்றிய என் அபிப்பிராயம் காரணமாயிருக்கலாம். அதை நீங்கள் ஒப்புக்கொள்ள மாட்டீர்கள். ஆனால், புரியாததற்கு மட்டும் விளக்கம் தருகிறேன்.”

“எதற்கு விளக்கம் தேவை?”

“பேச்சை நடந்தபடி நான் திருப்பிச் சொல்கிறேன். நன்றாகத் தொகுத்துப் பாருங்கள். முதலில் உங்களை அவன் ஏன் பார்க்கவில்லையென்று கேட்டீர்களா?”

“ஆமாம்.”

“சிறையிலிருந்ததால் பார்க்க முடியவில்லை என்றான்…”

“ஆமாம்.”

“பிரும்ம மாராயர் என்ன திட்டமிட்டிருக்கிறார் என்று கேட்டீர்கள்…”

“கேட்டேன்.”

“பிரும்ம மாராயரையும் தான் பார்க்கவில்லை யென்றும் உங்களைப் பல நாள்களுக்கு முன்பு பார்த்த போதுதான், அவரைப் பார்த்ததாகவும் சொன்னான்.” “அப்படித்தான் சொன்னான்.”

“அப்படி அவன் பிரும்ம மாராயரைப் பார்க்கவில்லை யென்றால், என்னைப் பற்றிய விவரங்களை எப்படி யார் மூலம் அறிந்தான்? என்னை நம்பச் சொல்லி உங்களுக்கு உபதேசம் செய்தானே, எப்படிச் செய்தான்? என்னை நம்பலாமென்று பிரும்ம மாராயரே தன்னிடம் சொல்லியதாக அரிஞ்சயன் சொன்னானல்லவா…?”

அரசகுமாரியின் முகத்தில் பிரமையும் கலவரமும் ஏறிக்கொண்டிருந்தன.

“ஆமாம் சொன்னான்” என்று தழுதழுத்த குரலில் பதில் சொன்னாள் அரசகுமாரி.

“இவன் பிரும்ம மாராயரைப் பார்க்கவேயில்லை யென்றால் பிரும்ம மாராயர் என்னைப்பற்றி இவனிடம் எப்படிப் பேசியிருக்க முடியும்?” என்று வினவிய கரிகாலன் குரலில் சந்தேகம் பலமாயிருந்தது.

“ஆமாம்! அரிஞ்சயன் பேச்சு முன்னுக்குப் பின் முரணாகத்தான் இருக்கிறது. நான் இதைக் கவனிக்க வில்லையே!” என்றாள் அரசகுமாரி.

கரிகாலன் அவளுக்கருகில் மீண்டும் சென்று, அவள் கைகள் இரண்டையும் தன் கைகளால் பற்றிக்கொண்டு, அவள் கண்களை உற்றுநோக்கிக் கொண்டே சொன்னான்: “அரசகுமாரி! வேங்கி நாட்டு அரசியல் சதுரங்கத்தில் பல காய்கள் நகர்ந்து வருகின்றன. நகர்த்துபவன் மிக சாமர்த்தியசாலியாயிருக்கிறான். இந்த ஆட்டத்திலிருந்து நீங்கள் தள்ளி நில்லுங்கள். என்னை ஆடவிடுங்கள். வெட்டுக் கொடுக்க வேண்டிய காய்களை நான் வெட்டுக் கொடுத்து ஆட்டத்தை ஜெயித்துத் தருகிறேன். இது பெண்கள் சம்பந்தப்படக்கூடிய விஷயமல்ல. என்னை நம்புங்கள். எனக்கெதிரே எத்தனை அத்தாட்சிகள் உங்கள் கண்முன்பாக எழுந்தாலும், நம்பாதீர்கள். இந்த உடலில் உயிர் இருக்கும் வரையில், நான் படித்த கௌடில்யனின் அர்த்தசாஸ்திர அறிவு என் மூளையை விட்டு அகலாத வரையில், இந்த நிலைமையை நான் சமாளிக்கிறேன். என்ன! சொல்லுங்கள் அரசகுமாரி, என்னைப் பூரணமாக நம்புவீர்களா? இரண்டு நாள்களுக்கு முன்புதான் நான் தங்களுக்கு அறிமுகமானேன். ஆனால் இருபது வருஷங்களாக அறிமுகமானால் கூட ஏற்படாத அத்தனை பாசம், என்னுடைய ரத்தத்தில் இன்று ஓடுகிறது. உங்களுக்கு உதவ என் இதயம் துடிக்கிறது.”

அவன் ஆவேசத்தையும் கண்களில் ஏற்பட்ட ஒளியையும் அவள் கண்டாள். அரிஞ்சயன் சொன்ன தகவலில் இருந்த முரண்பாடும் அவள் மூளையைக் குழப்பிக்கொண்டிருந்தது. அவள் இதயம்மட்டும் எதிரேநிற்கும் இந்த வாலிபனை நம்பு’ என்று உந்தியது. இதயத்தின் சொல்லுக்கே இறுதியில் இடங்கொடுத்த அரசகுமாரி, “கரிகாலரே! எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை. ஆனால் உங்களை நம்புகிறேன். உங்களிஷ்டம் போல் செய்யுங்கள். வேங்கி நாட்டின் கதியை உங்கள் கரங்களில் ஒப்படைக்கிறேன்” என்று கூறி மெள்ளக் கட்டிலுக்காக நகர்ந்தாள்.

“அப்படியானால் நான் வருகிறேன் அரசகுமாரி! இனி நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நிம்மதியாய் தூங்குங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிய கரிகாலன், ஏதோ நினைத்துக்கொண்டு, “ஏன் அரசகுமாரி, மாலினி எங்கே?” என்றான்.

“பக்கத்தறையில் படுத்திருக்கிறாள். ஏன்?”

“இல்லை, நீங்கள் தனித்திருக்கிறீர்களே என்று பார்த்தேன்.”

“தனிமையை நாடித்தான் அவளைப் பக்கத்து அறைக்கு அனுப்பினேன்.”

“கூப்பிட்டுத் துணைக்குப் படுத்துக்கொள்ளச் சொல் லுங்கள்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான் கரிகாலன்.

“இப்பொழுது எங்கே போகிறீர்கள்?” என்று வினவி னாள் அரசகுமாரி.

“சதுரங்கத்தில் சில காய்களை வெட்டுக் கொடுக்க எனறு கூறிவிட்டுச் சிரித்துக்கொண்டே வெளியேறிய கரிகாலன், அரண்மனையைக் கடந்து, பல தெருக்களையும் தாண்டி, பிரும்ம மாராயன் மாளிகைக்கு வந்து சேர்ந்தான்.

இரவு மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்தாலும், மாளிகை விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. வாயிற் காவலரும் அவனைத் தடை செய்யாமலே உள்ளே விட்டார்கள். உள்ளே அவன் நுழைந்து முதற்கூடத்துக்கு வந்ததும் திடீரென இரண்டுபேர் அவன் மீது பாய்ந்து அவனைக் கீழே தள்ளினார்கள். அவன் எழுந்து தப்பி யோட முடியாதபடி, இன்னுமிரண்டு பேர் அவன் கைகள் மீதும் கால்கள் மீதும் உட்கார்ந்துகொண்டார்கள். “சரி அந்தத் துரோகியை ஒழித்துவிடுங்கள்” என்றது கடுமையான பிரும்ம மாராயன் குரல். அந்த ஆணையை நிறை வேற்றச் சித்தமாக எதிரே நின்ற ஒருவன் கையிலிருந்த கட்டாரியைக் கரிகாலன் மார்புக்காகக் குறி வைத்து ஓங்கினான்.

Previous articleMannan Magal Part 1 Ch 20 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here