Home Historical Novel Mannan Magal Part 1 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

78
0
Mannan Magal Ch 22 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 22 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 22 இருட்டில் நகர்ந்த உருவம்

Mannan Magal Part 1 Ch 22 | Mannan Magal | TamilNovel.in

சற்றும் எதிர்பாராதவிதமாகப் பிரும்ம மாராயனுடைய மாளிகையின் முதற்கூடத்திலே தனக்குக் கிடைத்த மரியாதையாலும், இரண்டு முரட்டு ஆள்களும் தன் மீது பலமாக உட்கார்ந்து அழுத்தியபடியாலும் ஒருவிநாடி திக்பிரமையடைந்த கரிகாலன், “இந்தத் துரோகியைத் தொலைத்துவிடு” என்று பிரும்ம மாராயன் கூவிய மாத்திரத்தில் சுயநிலையைப் பூரணமாக அடைந்து விட்டபடியால் எதிரேயிருந்த வீரன் தன்னை விண்ணுலகத்துக்கு அனுப்பக் கட்டாரியை ஓங்கியபொழுது, இம்மி யளவு அச்சத்தைக் காட்டாமலும், மிகத் திடமான குரலிலும், பிரும்ம மாராயனைப் பார்த்து, “படைத் தலைவரே! இந்தக் கொலைத் தொழிலை ஒரு விநாடி தள்ளிப் போட முடியுமா?” என்று கேட்டான்.

பிரும்ம மாராயன் தன் பெரிய கண்களை உருட்டி ஒருமுறை கரிகாலனை நோக்கிவிட்டுக் கட்டாரியை ஓங்கிய வீரனைப் பார்த்து, “சற்றுப் பொறு அரிஞ்சயா! இவன் என்ன சொல்கிறானென்று விசாரிப்போம்” என்றான்.

“விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது படைத்தலைவரே? எல்லாம் வெட்ட வெளிச்சமாக நமக்குக் தெரிந்ததுதானே!” என்று பிடிவாதம் பிடித்த அரிஞ்சயன் மீண்டும் கட்டாரியை ஓங்கினான்.

இப்படி இரண்டாந் தடவையாக அரிஞ்சயன் கட்டாரியை ஓங்கியபொழுது, கரிகாலன் லவலேசங்கூடக் கவலைப்படாமல் புன்முறுவலே செய்தான். முதலில் பிரும்ம மாராயன் தன்னைத் தொலைத்துவிடும்படி உத்தர விட்டது முதல், அரிஞ்சயனுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கவனித்துக் கொண்ட கரிகாலன், அரிஞ்சயனுடைய மனப்போக்கைப் பூரணமாகப் புரிந்துகொண்டான். பிரும்ம மாராயன் தன்னைக் கொல்லும்படி உத்தர விட்டவுடனேயே அரிஞ்சயன் கட்டாரியை ஓங்கினாலும், ஓங்கிய வேகத்தில் கட்டாரி கீழே இறங்கவில்லையென் பதையும், சற்று நேரம் அநாவசியமாக மேலேயே நின்று விட்டதையும் கவனித்த கரிகாலன், அரிஞ்சயன் தன் மரணத்தை அடியோடு விரும்பவில்லை யென்பதைப் புரிந்து கொண்டான். அரிஞ்சயன் இரண்டாம் முறையாகக் கொலை செய்துதான் தீருவேனென்று பிடிவாதம் பிடித்துக் கட்டாரியை ஓங்கியதும், அங்குள்ள மற்றச் சதிகாரர்களைத் திருப்தி செய்யவே ஒழியத் தன்னைக் கொலை செய்யும் நோக்கம் அவனுக்கு அடியோடு கிடையாதென்றும் தீர்மானித்துக் கொண்டான். அரிஞ்சயனுடைய நடத்தைக்குக் காரணமும் வெட்ட வெளிச்சமாகத் தெரிந்தது கரிகாலனுக்கு. ‘அரிஞ்சயன் உண்மையில் ஜெயசிம்மனுடைய ஒற்றன்; இந்தச் சதிகாரர் களின் நடவடிக்கைகளைக் கவனித்து அடிக்கடி தனக்குத் தகவல் கொடுக்கவும், மன்னன் மகள் சதி செய்யும் விஷயத்தைப் பற்றிச் சரியான சாட்சியம் தயாரிக்கவுமே ஜெயசிம்மன் இவனை நியமித்திருக்கிறான். நம்மையும் ஜெயசிம்மன் இதே பணிக்கு ஏவியிருக்கிற விஷயம் அரிஞ் சயனுக்குத் தெரிந்திருக்க வேண்டும். ஒற்றன் சகோதர ஒற்றனைக் கொல்லுவானா? ஆகையால்தான் தாமதிக்கிறான் என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான் கரிகாலன். அவன் ஊகம் சரியென்பதை அரிஞ்சயனின் அடுத்த நடத்தை தெளிவாக்கியது. ஊகத்துக்கு அத்தாட்சிகளும் ஏராளமாகக் குவிந்து கிடப்பதை நினைத்துப் பார்த்தான்.

இரண்டாம் முறையாக அரிஞ்சயன் கட்டாரியை ஓங்கிய போதும், பெரிதும் நிதானித்து பிரும்ம மாராயன் உத்தரவை எதிர்பார்ப்பது போல் படைத்தலைவனை நோக்கிக் கண்களை ஓடவிட்டான். அரிஞ்சயனின் நிதானத்துக்குக் காரணத்தை அறிந்துகொண்ட கரிகாலன் மெள்ளப் புன்சிரிப்பொன்றை உதிர்த்தான். மரணம் எதிர் நோக்கியிருந்த அந்தச் சமயத்திலும் அவன் சிரித்தது பிரும்ம மாராயனுக்குப் பெரும் கோபத்தை விளை விக்கவே, “எதற்காகச் சிரிக்கிறாய்?” என்று கத்தினான்.

“சோழ நாட்டுப் படைத்தலைவருக்கும் அவரது சகாக்களுக்குமுள்ள ரத்தவெறியைக் கண்டு சிரித்தேன்” என்றான் கரிகாலன்.

“ரத்த வெறியல்ல கரிகாலா! உனக்கு நீதி வழங்கப் படுகிறது” என்று சொல்லிய பிரும்ம மாராயன், தன் பெருங் கண்களால் கரிகாலனை உற்று நோக்கி, அவன் மனத்திலோடும் எண்ணங்களை ஆராய முயன்றான்.

கரிகாலன் புருவங்கள் ஆச்சரியத்தால் சற்றே உயர்ந்தன. “என்ன நீதி வழங்கப்படுகின்றதா?” என்று விசாரித்தான் குரலில் வியப்புத் தொனிக்க.

“ஆம்” என்றான் பிரும்ம மாராயன் உறுதியுடன்.

“தாங்கள் சோழ நாட்டுப் படத்தலைவர்தானே?”

“அதிலென்ன சந்தேகம்?”

“நேற்று வரையில் சந்தேகமில்லை.”
“இன்று சந்தேகம் ஏற்பட்டுவிட்டதோ?”

“ஆமாம்.”

“காரணம்?”

“சோழ நாட்டில் நீதி வழங்கும் முறை வேறு.”

கரிகாலனுடைய இந்தச் சொற்களைக் கேட்ட பிரும்ம மாராயன் ஒருகணம் ஸ்தம்பித்துப் போனான். கரிகாலனின் வார்த்தைகளிலிருந்த நியாயம் அவனுக்கு நன்றாக விளங்கியது. எப்பேர்ப்பட்ட குற்றவாளியாயிருந்தாலும் அவன் கட்சியைக் கேட்காமல் நீதி வழங்கும் வழக்கம் தமிழ் மன்னர்களின் ஆட்சியில் கிடையாது. அதுவும் இராஜேந்திர சோழதேவன் ஆட்சியில் கிடையாது. அப்படியிருக்க, தான் கரிகாலனை அடியோடு விசாரிக்காமல், ஒருதலைப்பட்சமாகக் கிடைத்த செய்திகளைக் கொண்டு அவனைக் கொன்றுவிடுவது சரியாகாது என்ற ஞானோதயம் படைத்தலைவனுக்கு மெள்ள மெள்ள ஏற்படவே, அரிஞ்சயனை நோக்கி, “அரிஞ்சயா! இவன் சொல்லுவதிலும் நியாயம் இருக்கிறது. இவன் என்னதான் சொல்லுகிறானென்று கேட்போமே” என்றான்.

“நம்மிடம்தான் அப்பழுக்கில்லாத அத்தாட்சிகள் இருக்கின்றனவே” என்று முரண்டினான் அரிஞ்சயன்.

கரிகாலன் மீது உட்கார்ந்திருந்த இருவரும் கூட “ஆமாம் படைத்தலைவரே! அநாவசியமாக நாம் ஏன் பொழுதை ஓட்ட வேண்டும்?” என்று அரிஞ்சயனுடன் சேர்ந்துகொண்டார்கள்.

“தங்களிடம் அத்தாட்சிகள் பலமாயிருக்கலாம். ஆனால் இருவர்தம் சொல்லையும் ஏழுதரம் கேட்டு நீதி செலுத்துவது சோழ நாட்டுப் பழக்கம்; படைத்தலைவர் கூட எங்கள் நாட்டில் இஷ்டப்படி கொலை செய்துவிட முடியாது. ஆனால் பிரும்ம மாராயர் சாளுக்கியர்கள் நாட்டில் நீண்ட காலம் இருந்திருக்கிறார். இப்பொழுது அவர் பழக்கம் எப்படியோ?” என்று இழுத்தான் கரிகாலன்.

சாதாரணமாகவே நிமிட நேரத்தில் கோபம் தலைக் கேறக்கூடிய சுபாவம் வாய்ந்த பிரும்ம மாராயன் சினத்தின் உச்சியை அடைந்தான். அவன் கண்கள் கரிகாலனை எரித்துவிடுவது போல் பார்த்தன. “டேய்! உனக்கு ஏதாவது சமாதானம் சொல்ல முடியுமானால் சொல். வீண் விஷயங்களைப் பேசாதே!” என்று இரைந்தான் பிரும்ம மாராயன், கீழே கிடந்த கரிகாலனை நோக்கி.

“இந்த இரண்டு பிரமுகர்களையும் தூக்கிக்கொண்டு பேசுவது கஷ்டமாயிருக்கிறது. இவர்களைச் சற்று இறங்கச் சொல்லுங்கள்; அவசியமானால் பிறகு சவாரி செய்யலாம்” என்று, தன்மீது உட்கார்ந்திருந்த இரண்டு வீரர்களையும் கண்களால் குறிப்பிட்டான் கரிகாலன்.

அவன் வார்த்தைகளை உபயோகித்த முறையிலிருந்தும் அவன் குரலில் இருந்த ஏளனத்திலிருந்தும், அவன் தங்களைப் பார்த்து நகைக்கிறானென்பதை அறிந்து கொண்ட வீரர்களும், பிரும்ம மாராயன் உத்தரவுக்குக் காத்திராமல் தாங்களாகவே எழுந்துவிட்டார்கள். இதனால் கைகால்கள் சவாதீனத்திற்கு வந்த கரிகாலனும் மெல்ல எழுந்திருந்து வீரர்களின் முரட்டுத்தனத்தின் விளைவாகக் கசங்கியிருந்த ஆடைகளைச் சரிப்படுத்திக் கொண்டு, கலைந்திருந்த தலை மயிரையும் கோதிவிட்டுக் கொண்டான். அவன் ஏற்பாடுகளைக் கண்ட பிரும்ம மாராயனுக்கு எரிச்சல் பற்றிக்கொண்டது. ‘ஏதோ கல்யாணப் பந்தலுக்கு போவதுபோல் எதற்காகச் சிங்காரித்துக் கொள்கிறான்’ என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்ட பிரும்ம மாராயன், “கரிகாலா, உன் நடவடிக் கைக்கு நீ சொல்ல வேண்டிய சமாதானம் ஏதாவது இருந்தால் உடனே சொல்லிவிடு” என்று ஆணையிட்டான்.

“உடனே சொல்லிவிட வேண்டுமா? ஆமாம்; கொலை செய்வதில் தாமதம் கூடாதல்லவா? சொல்லிவிடுகிறேன். ஆனால் அதற்கு முன்பாக இங்கிருப்பவர்கள் எல்லோரும் யார் யார் என்று தெரிந்துகொள்வது அவசியமல்லவா?” என்று கேட்ட கரிகாலன், அந்தக் கூட்டத்திலிருந்தவர்கள். மீது கண்களை ஓடவிட்டான்.

அரிஞ்சயனையும் பிரும்ம மாராயனையும் தவிர மூன்று பேர்தான் அந்தக் கூட்டத்திலிருந்தார்கள். அந்த மூன்று பேர்களில் இருவர் தன்மீது உட்கார்ந்திருந்தவர்கள். அந்த மூன்று பேர்களுடைய உடைகளைக் கவனித்த கரிகாலன், அவர்கள் சாதாரண வீரர்களாயிருக்க முடியாதென்றும், சதியில் சேர்ந்திருப்பதாகப் பிரும்ம மாராயன் முன்பு தன்னிடம் சொன்ன மூன்று படைத்தலைவர்களாகவே இருக்க வேண்டும் என்றும் தீர்மனித்துக் கொண்டான்.

கரிகாலன் கண்கள் செய்த ஆராய்ச்சியைக் கண்ட அரிஞ்சயன், “கரிகாலரே! இவர்கள் மூவரும் வேங்கி நாட்டுப் படைத் தலைவர்கள். அரசகுமாரிக்காக உயிரை விடச் சித்தமாயிருக்கிறார்கள்? என்று அறிமுகம் செய்வித்தான்.
“சித்தமாயிருக்க வேண்டியதுதான்” என்ற கரிகாலன் இதழ்களில், இளநகையொன்று படர்ந்தது.

“என்ன! உயிர் விடச் சித்தமாயிருக்க வேண்டுமா?” என்று கேட்டான், வேங்கி நாட்டுப் படைத்தலைவன் ஒருவன்.

“ஆமாம் படைத்தலைவரே! நாம் எல்லோரும் சித்த மாயிருக்க வேண்டியதுதான். என்னை வேண்டுமானால் முதலில் நீங்கள் கொல்லலாம். ஆனால் நாளைக்குள் நீங்களும் உயிரை ஜெயசிம்மன் சிறையில் அர்ப்பணிக்க வேண்டியதாயிருக்கும். ஆகவே, நீங்களும் நானும் மேல் உலகத்தில் சந்திக்க இருக்கும் இடைவெளி பன்னிரண்டு நாழிகைகள் தான்” என்றான் கரிகாலன்.

கரிகாலன் பேச்சு படைத்தலைவர்களிடையே பெரும் திகிலை உண்டாக்கிவிட்ட படியால், அவர்கள் பிரும்ம மாராயனை நோக்கினார்கள். பயம் என்பதை அறவே அறியாத பிரும்ம மாராயன் மட்டும் கரிகாலன் பேச்சைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல், அவனைப் பார்த்துக் கேட்டான்: “அப்படியானால் உன் குற்றத்தை ஒப்புக் கொள்கிறாயா கரிகாலா?”

“குற்றச்சாட்டு என்னவென்று தெரிந்தாலல்லவா பதில் சொல்லலாம்?”

“நீ இப்பொழுது எங்கிருந்து வருகிறாய்?”

“ஏன் அரண்மனையிலிருந்துதான்.”

அரண்மனையில் யாரைப் பார்க்கச் சென்றாய்?”

“அரசகுமாரியைப் பார்க்கப் போயிருந்தேன்.”

“பார்த்தாயா?”

“இல்லை.”

“வேறு யாரைச் சந்தித்தாய்?”

“மேலைச் சாளுக்கிய மன்னரை.”

“யார் ஜெயசிம்ம சாளுக்கியனையா?”

“ஆமாம்.”

இந்த பதிலைக் கேட்ட படைத்தலைவர் மூவரும் மீண்டும் கரிகாலனை நோக்கி நகர ஆரம்பித்தார்கள். கரிகாலன் அவர்கள் முன்பு மிகக் கம்பீரமாக நின்று, இகழ்ச்சி ததும்பும் பார்வையொன்றையும் அவர்கள் மீது வீசி, அவர்களை மேற்கொண்டு நகர வேண்டாமென்பதற்கு அறிகுறியாகக் கையை நீட்டி எச்சரிக்கவும் செய் தான். “என்ன அவசரம் படைத்தலைவர்களே! கொலை ஆவலைச் சற்றுத் தணித்துக் கொள்ளுங்கள். நான் எங்கும் போய்விடமாட்டேன். உண்மையைத் தெரிந்து கொண்டு, பிறகு உங்கள் கைங்கரியத்தை நிறைவேற்றுங்கள்” என்று கூறினான்.

“உண்மைதான் தெரிந்துவிட்டதே!” என்றான் ஒரு படைத்தலைவன்.
“என்ன உண்மை தெரிந்துவிட்டது உங்களுக்கு?” என்று கேட்டான் கரிகாலன்.

“அரண்மனைக்குப் போனதாகவும், ஜெயசிம்மனைப் பார்த்ததாகவும் நீயே ஒப்புக்கொண்டிருக்கிறாய்” என்றான் இன்னொரு படைத்தலைவன்.

“அதைத் தவிர வேறு தகவல்களும் எங்களிடம் சிக்கி யிருக்கின்றன” என்று அதுவரை மௌனம் சாதித்த அரிஞ் சயனும் இடையே புகுந்து பேசினான்.

கரிகாலன் தன் கண்களை அரிஞ்சயன் மீது ஓட்டி, “வேறு என்ன தகவல்கள் கிடைத்திருக்கின்றன?” என்று கேட்டான்.

“உங்களுக்கு மன்னர் விருந்தளித்திருக்கிறார்.”

பிறகு?”

“நீங்கள் அரையன் ராஜராஜன் மகனென்றும், உங்களை மிகக் கௌரவத்துடன் நடத்த வேண்டுமென்றும் பறை சாற்றியிருக்கிறார்.”

“அதனாலென்ன?”

“அதனாலென்னவா?” ஆச்சரியத்துடன் கேட்டான் பிரும்ம ‘மாராயன். “உன்னிடம் ஜெயசிம்மன் ஏன் இத்தனை கருணை காட்டினான்?” என்று வினவினான்.

“அரையன் ராஜராஜன் மகனை வேறு எப்படி நடத்த முடியும்?” என்று கரிகாலன் வினவினான்.

பிரும்ம மாராயனுடைய விழிகளில் ஆச்சரியமும் கோபமும் கலந்து நின்றன. “நீ அரையன் ராஜராஜன் மகனா?” என்று அடக்கத்தைப் பறக்கவிட்டுப் பதற்றத்துடன் இரைந்தான், சோழ நாட்டுப் படைத்தலைவன்.

கரிகாலன் அவனை நன்றாக ஏறெடுத்துப் பார்த்து விட்டு, பதற்றம் எதற்குப் படைத்தலைவரே! சந்தேகமிருந் தால் இதைப் பாருங்கள்” என்று தன் மடியிலிருந்த ஓலையை எடுத்து, பிரும்ம மாராயனிடம் நீட்டினான்.

விளக்கொளியில் பிரும்ம மாராயன் ஓலையைப் படித் ததும் பெருங்குழப்பத்துக்கு உள்ளானான். “அரிஞ்சயா! இதென்ன எனக்கு ஒன்றுமே விளங்கவில்லையே” என்று அரிஞ்சயனிடம் ஓலையை நீட்டினான் சோழநாட்டுப் படைத்தலைவன்.

ஓலையைப் படித்த அரிஞ்சயன் முகத்தில் மட்டும் எந்தவிதக் குழப்பமும் ஏற்படவில்லை. ஓலையைப் பழைய படி சுருட்டிக் கரிகாலனிடம் கொடுத்துவிட்டு “கரிகாலரே! நீங்கள் யார் மகன் என்பதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. முதலில் அரசகுமாரியின் தூதராக இங்கு வந்தீர். இங்குள்ள சதி விவகாரங்கள், இதில் ஈடுபட்டிருப்பவர்களின் பெயர்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். அப்பேர்ப்பட்ட நீங்கள் ஜெயசிம்மனைச் சந்தித்திருக்கிறீர்கள். அவனோ உங்களிடம் பூரண நம்பிக்கை வைத்து, உங்களை இஷ்டப்படி நடமாட விட்டிருக்கிறான். காரணமில்லாமல் அப்படிச் செய்யமாட்டான் ஜெயசிம்மன்” என்றான் அரிஞ்சயன்.
“காரணம் எதுவாயிருக்குமென்று ஊகிக்கிறீர்கள்?”

“ஒரே காரணம்தான். சதியைப் பற்றியும், சதியில் ஈடு பட்டிருப்பவர்களைப் பற்றியும், நீர் அவனிடம் கூறியிருக்க வேண்டும்.”

அரிஞ்சயன் பேச்சைக் கேட்ட கரிகாலன், அன்றைய இரவில் முதன் முதலாக வாய்விட்டுச் சிரித்தான். அத்துடன் பிரும்ம மாராயனைப் பார்த்தும் சொன்னான்: “படைத்தலைவரே! முட்டாள்தனத்துக்கும் ஓர் அளவு இருக்க வேண்டும்!” என்று.

“எது முட்டாள்தனம் கரிகாலா?” என்று வினவினான் பிரும்ம மாராயன்.

“படைத்தலைவரே! ஜெயசிம்மனிடம் சதி விவரங்களை நான் அறிவித்து விட்டேனல்லவா?”

“ஆம்.”

“அறிவித்துவிட்டு, தலையைக் காவு கொடுப்பதற்காக உங்களிடம் அவசர அவசரமாக வந்திருக்கிறேன்; இது தானே உங்கள் ஊகம்?”

மெள்ள மெள்ள உண்மை பிரும்ம மாராயன் மனத்திலும் உதயமாயிற்று. ‘ஆமாம் இவன் நம்மைக் காட்டிக் கொடுத்திருந்தால் இங்கு வருவானா?” என்று யோசித்தான் பிரும்ம மாராயன்.

கரிகாலன் பிரும்ம மாராயனையும் மற்றவர்களையும் நோக்கி மீண்டும் சொன்னான்: “அன்பர்களே! ஜெயசிம்மனிடம் உங்களைக் காட்டிக் கொடுத்திருந்தால், இங்கு நான் வந்திருக்கமாட்டேன். எனக்குப் பதில், வேங்கி நாட்டுப் படைத்தலைவன் வந்திருப்பான் வீரர்களுடன் உங்களைக் கட்டிக்கொண்டு போய்க் கோதண்டத்தில் மாட்ட.”

“ஆம். சந்தேகமில்லை. இதை நாம் யோசிக்க வில்லையே” என்றான் அரிஞ்சயன் மற்றவர்களை நோக்கி.

கரிகாலன் மேலும் சொன்னான்: இன்னும் யோசித்துப் பாருங்கள். நான் ஜெயசிம்மனைப் பார்க்க ரகசியமாகப் போகவில்லை. ஊரறியப் பகிரங்கமாகப் போயிருக்கிறேன். ஜெயசிம்மன் பகிரங்கமாக எனக்கு விருந்தளித்திருக்கிறான். இந்த விஷயம் ஊர் பூராவும் தெரியும். ஆகவே, உங்களுக்கு மட்டும் தெரியாது என்று நான் மனப்பால் குடிப்பேனென்று நினைக்கிறீர்களா? அப்படித் தெரிந்துகொண்ட நான், உங்களிடம் உயிரைக் கொடுக்க ஓடிவர அத்தனை முட்டாளா?”

கரிகாலன் வார்த்தைகளும், அவன் விஷயங்களைத் தெளிவாக்கிய முறையும், பேசிய தோரணையும் பிரும்ம மாராயனையும் மற்றவர்களையும் சிந்தனையில் ஆழ்த்தின. அவன் சொல்லிய விஷயங்களில் உண்மை நிரம்பிக் கிடப்பதைக் கிலி பிடித்த வேங்கி நாட்டுப் படைத்தலைவர்கள் கூட உணர்ந்து கொண்டார்கள். பிரும்ம மாராயன் மட்டும் நீண்ட நேரம் அந்தக் கூடத்தில் உலாவிக் கொண்டே யோசித்தான். கடைசியாக, ஏதோ முடிவுக்கு வந்தவன் போல், மற்றவர்களை நோக்கி, “இதைப்பற்றித் தீர விசாரித்த பின் ஒரு முடிவுக்கு வருவோம். அதுவரை இவன் கை கால்களைக் கட்டி மேல்மாடி அறையில் போட்டு வையுங்கள்” என்று உத்தரவிட்டான்.
வேங்கி நாட்டுப் படைத்தலைவர் மூவரும் அவன் கைகளை மாத்திரமின்றிக் கால்களையும் கயிறுகளைக் கொண்டு பிணைத்தார்கள். “கால்களைக் கட்டினால் நடக்க முடியாதே” என்றான் கரிகாலன்.

“கவலைப்பட வேண்டாம். நாங்கள் தூக்கிக் கொண்டு போகிறோம்” என்றான் படைத்தலைவன்.

“ஏன் கோயிலில் வாகனங்களைத் தூக்கிப் பழக்கமோ?” என்று நகைத்தான் கரிகாலன்.

அவன் நகைத்ததை லட்சியம் செய்யாமல், அவனைக் கயிறுகளால் நன்றாகப் பிணைத்துத் தூக்கிக்கொண்டுபோய், மாளிகையின் மேல்மாடியிலிருந்த சிறு அறையில் போட்டுப் பூட்டிவிட்டுச் சென்றார்கள் படைத்தலைவர் மூவரும்.

இரவு மெல்ல நகர்ந்து மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்தது. பிரும்ம மாராயன் மாளிகையில் நிசப்தம் குடி கொண்டது. கயிறுகளால் பிணைக்கப்பட்டுத் தரையில் கிடந்ததால், கரிகாலன் மட்டும் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். அந்த அறையிலிருந்த சிறு விளக்குகூட் கிருஷ்ணா நதியிலிருந்து வந்த காற்றில் அணைந்துவிட்ட படியால், அறையில் காரிருள் சூழ்ந்து கிடந்தது. இப்படி எத்தனை நேரம் சென்றிருக்குமோ தெரியாது. கரிகாலன் நினைவு, நாகப்பட்டிணத்தில் சூடாமணி விஹாரத்திலிருந்து அன்றைய இரவு வரை நடந்த நிகழ்ச்சிகளில் சுற்றிச் சுற்றி வந்து சுழன்றுகொண்டிருந்தது. கடைசியாக அவன் நினைப்பு, அரசகுமாரியின் மீது நிலைத்தது.

உலகை மறந்து அந்தக் காரிருளில் கிடந்த கரிகாலன், திடீரென்று சிந்தனைகளை அடக்கிப் புலன்களை அறை வட்டாரத்தில் உலவவிட்டான். அந்தக் காரிருளில் அதே அறையில் யாரோ இருப்பதை அவன் உணர்ந்தான். தான் படுத்திருந்த இடத்துக்கு வெகு அருகில் யாரோ அசையும் சப்தம் அவன் காதுகளில் விழுந்தது. அறையின் சுவர் ஓரத்தில் ஓர் உருவம் பதுங்கிப் பதுங்கிச் சென்றது.

Previous articleMannan Magal Part 1 Ch 21 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here