Home Historical Novel Mannan Magal Part 1 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

95
0
Mannan Magal Ch 23 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 23 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 23 உனக்குத் தெரியுமா?

Mannan Magal Part 1 Ch 23 | Mannan Magal | TamilNovel.in

கைகளும் கால்களும் நன்றாகச் சேர்த்து இறுகப்பட் டிருந்ததால், நகரக்கூட முடியாமல் அந்த மேல்உப்பரிகை அறையின் தரையில் கிடந்த கரிகாலன், அதே அறையில் இந்த அர்த்தராத்திரியில் தன்னைத் தவிர வேறு ஓர் உருவம் இருப்பதையும், அது சுவர் ஓரமாக அசைவதையும் கண்டதும், மிகவும் சிரமப்பட்டு ஒருமுறை புரண்டு, அறையின் மற்றொரு சுவரின் ஓரமாகச் சாய்ந்துகொண்டு, அந்த உருவத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிக்க முற்பட்டான். அறையில் காரிருள் கவ்விக் கிடந்ததால் கண்ணுக்கு எதுவும் திட்டமாகத் தெரியாவிட்டாலும், நிழல்போல் அந்த உருவம் நகர்ந்து நகர்ந்து எதையோ பரிசோதிப்பதையும், திடீர் திடீரென அது நின்று எதையோ உற்றுக் கேட்க முயலுவதையும் கண்ட கரிகால னுக்கு, மெள்ள மெள்ள உண்மை உதயமாயிற்று. ‘சீ! இத்தனை யோசனைகூடவா எனக்கு இல்லாமல் போய் விட்டது? அவனைத் தவிர வேறு யார் இந்த அறைக்கு வர முடியும்? எதற்காக வர வேண்டும். படித்த லட்சணம் வரவர எனக்கு புத்தி மந்தமாகிக் கொண்டு வருகிறது. நல்லவேளை இப்பொழுதாவது தெரிந்துகொண்டேனே உண்மையை!’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டே கரிகாலன், அதி ஜாக்கிரதையாக, “இதோ பார் அரிஞ்சயா! இந்த மூலையில் இருக்கிறேன்” என்று, அறையின் மற்றொரு கோடியில் நகர்ந்துகொண்டிருந்த உருவத்தை, மிக மெல்லிய குரலில் அழைத்தான்.

அந்த உருவம் மெள்ளச் சுவர்களைத் தடவிக்கொண்டு, கரிகாலன் இருக்கும் பக்கமாக வந்து, தரையை இரண்டு மூன்று முறை தடவிக் கரிகாலன் உடல் மேல் கையை வைத்து, “கரிகாலரே! வந்தது நான்தானென்று உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டது.

“வேறு யாருக்கு என் மீது அக்கறையிருக்க முடியும் அரிஞ்சயா?”

“கரிகாலரே!”

“உஷ்…”

“ஏன் யாராவது வருகிறார்களா?” என்று அரிஞ்சயன் சம்பாஷணையைச் சற்றே நிறுத்தி, கதவுப்புறம் கண்களை ஓடவிட்டான்.

“யாரும் வரவில்லை அரிஞ்சயா!” என்று அவனைச் சமாதானப்படுத்தினான் கரிகாலன்.

“பின் எதற்காக ‘உஷ்’ என்று எச்சரிக்கை செய்தீர்கள்?” என்று வினவினான் அரிஞ்சயன்.

“எச்சரிக்கைச் சத்தமல்ல அது; ஆட்சேபணைச் சத்தம்.”

“எதற்கு ஆட்சேபணை?”

“கரிகாலரே, கரிகாலரே என்று எதற்கு மரியாதையாக அழைக்கிறாய் அரிஞ்சயா? நாம் இருவரும் ஜெயசிம்ம சாளுக்கியனுடைய ஊழியர்கள். இருவரும் ஒரே பணியில் ஈடுபட்டிருக்கிறோம்” என்று கரிகாலன் பதில் சொன்னதைக் கேட்ட அரிஞ்சயன்கூடச் சற்று நிலை தடுமாறி விட்டான். அடுத்தபடி அவன் பேசியபோது, அவன் குரலில் சகோதர பாவம் எல்லை கடந்து நின்றது. “கரிகாலா! அப்பா! இப்படிக் கூப்பிட இன்னும் கூட எனது நாவு அஞ்சுகின்றது. உன்னை முதன் முதலாக இந்தச் சதிகாரர்கள் கூட்டத்தில் இன்றுதான் கண்டேன். ஆனால் அவர்களைப் பார்த்த பார்வையையும், அவர்களை நோக்கி நீ இகழ்ச்சியாகப் பேசிய பேச்சையும் யார் பார்த்தாலும், நீ பெரிய அரச வம்சத்தில் பிறந்ததாகச் சொல்வார்களே யொழியக் கேவலம் என்னைப் போலக் கீழ்க்குலத்தில் பிறந்தவனாக மதிக்கமாட்டார்கள். உன் தோரணையைக் கண்டு நானே அயர்ந்துவிட்டேன். இன்னும்கூட உன்னைப் பெயர் சொல்லி அழைக்க நெஞ்சு துணியவில்லை” என்ற அரிஞ்சயன் குரலில், சற்றுப் பயத்தோடு சந்துஷ்டியும் கலந்து நின்றது.

அவனுடைய அந்த உவகையை இன்னும் அதிகப் படுத்தி அவனைக் கைப்பொம்மையாக்கிக் கொள்ளத் திட்டமிட்ட கரிகாலன், மேலும் சம்பாஷணையைத் தொடர்ந்து, “குலத்தில் என்ன இருக்கிறது அரிஞ்சயா? ‘குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்ற பழமொழிக்கும் உண்மைக்கும் எத்தனை தூரம்! கீழ்க்குலத்தில் பிறந்த எத்தனை பேரிடம் சிறந்த குணங்களைக் காண்கிறோம்! மேற்குலத்தில் உதித்த எத்தனை பேரிடம் அற்ப குணங்களைப் பார்க்கிறோம். குலத்துக்கும் குணத்துக்கும் சம்பந்த மிருப்பதாகச் சொல்வது அனுபவத்துக்கு ஒத்ததல்ல. உதாரணமாக, நீ இருக்கிறாய்; உன் உயிரையும் அற்பமாக மதித்து என்னைக் காப்பாற்ற வந்திருக்கிறாய். உன் குலமோ கீழ்க்குலம் என்கிறாய். இந்த மாளிகையிலுள்ள சோழ நாட்டுத் தடியன் பிரும்ம மாராயன் இருக்கிறானே, அவன் மேற்குலத்தான். உன் குணம் சிறந்ததா, அவன் குணம் சிறந்ததா என்று யோசித்துப் பார்” என்றான்.

காரணங்களை அடுக்கிக் காட்டி, கரிகாலன் தன்மீது தூவிய புகழ்ச்சி மலர்களால் சுய நிலையை அறவே மறந்த அரிஞ்சயன், “கரிகாலா! உன்னைப் போன்ற ஒற்றனைப் பெற்றிருப்பதற்கு ஜெயசிம்ம சாளுக்கியன் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்” என்றான்.

“உண்மைதான், சந்தேகமில்லை!” என்று கரிகாலனும் ஒப்புக்கொண்டான். அரிஞ்சயன் மட்டும் புத்திக்கூர்மை உடையவனானால் கரிகாலனுடைய குரலிலிருந்த ஏளனத்தைக் கவனித்திருப்பான். புத்திக் கூர்மையில்லாத தோடு யாராவது வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சமும் கலந்திருந்த அரிஞ்சயன் அறிவுக்கு, கரிகாலன் பேச்சின் போக்கையோ அவன் குரலில் தொக்கி நின்ற கேலியையோ கவனிக்கத் திராணியில்லாததால், அவன் மேற்கொண்டு ஏதும் பேசாமல், “கரிகாலா, உம் சீக்கிரம் ஒருமுறை புரண்டு படு” என்று சொல்லியதல்லாமல், அவன் புரளுமுன்பாகத் தன் இரு கைகளையும் கொடுத்துக் கரிகாலனைப் புரட்டவும் செய்தான். பிறகு மடியிலிருந்த கத்தியை எடுத்துக் கரிகாலன் கைகளிலும் கால்களிலும் கட்டப்பட்டிருந்த கயிறுகளைச் சரசர வென்று அறுத்தான்.

கட்டுகள் அறுபட்டதால் கைகால்கள் சுதந்திர மடைந்து விட்டாலும், வெகு நேரமாகக் கட்டுண்டு கிடந்தது காரணமாக அடியோடு சுவாதீனத்துக்கு வராமல் இம்சை கொடுத்தன. கரிகாலன் மணிக்கட்டுகள் உடைந்துவிடுவன போல் விண்விண்ணென்று தெறித்தன. கால்கள் மரத்துக் கிடந்தபடியால் எழுந்து நின்று சற்று ஊன்றியதும், முதலில் அவை மரக்கட்டை போல் தோன்றி, பிறகு ஆயிரக்கணக்கான முட்கள் குத்துவன போன்ற வேதனையை அளித்தன. இயற்கை சிருஷ்டித்த இந்த உபாதைகளிலிருந்து விடுபடச் சற்று நேரம் கரிகாலன் அறையிலேயே உலாவினான். கைகளைச் சொடுக்கெடுத்து மணிக்கட்டுகளை முறித்துவிட்டுக் கொண்டான். கால்களை மீண்டும் மீண்டும் உதறினான். கரிகாலன் நிதானத்தையும் ஏற்பாடுகளையும் கண்ட அரிஞ்சயனுக்கு மாத்திரம் உள்ளூர கிலி பிடித்துக் கொண்டது. யாராவது வந்துவிட்டால் கரிகாலன் உயிரோடு தன் உயிரும் சேர்ந்து விண்ணுலகப் பயணம் செய்யுமென்பதை உணர்ந்து கொண்டிருந்த அரிஞ்சயன், “கரிகாலா! தாமதிக்க நேரமில்லை. அந்தக் கொலைகாரப் படுபாவிகள் விழித்துக் கொண்டால் நம் இருவரையும் சேர்த்து ஒழித்துவிடுவார்கள். இந்தா, இதை வைத்துக்கொள்” என்று எச்சரித்துக் கரிகாலனிடம் ஒரு கட்டாரியையும் கொடுத்தான். பிறகு கதவை மெள்ளத் திறந்து வெளியே எட்டிப்பார்த்து, “சரி வா” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு, அடிமேலடி வைத்துப் பூனைபோல் நடந்தான்.

கரிகாலன் மிகுந்த எச்சரிக்கையுடன் அவனைப் பின் தொடர்ந்து சென்றான். இரண்டு பேரும் சுவர்கள் பக்கமாகச் சாய்ந்து சாய்ந்து பதுங்கியும், இடையிடையே சுவர்களில் எரிந்துகொண்டிருந்த விளக்குகளை அணைத்து ஆங்காங்கு இருட்டைப் பூரணமாகச் சிருஷ்டித்துக்கொண்டும் உப்பரிகைப் படிகளில் இறங்கி வந்து மாளிகையில் முதல் தளத்துக்கு வந்து சேர்ந்ததும், அரிஞ்சயன் தளத்தின் கோடியிலிருந்த ஓர் அறைக்குக் கரிகாலனை அழைத்துச் சென்றான்.

“கரிகாலா! கதவைத் தாழிடு!” என்று சொல்லிய அரிஞ்சயன், அறையின் ஒரு மூலையிலிருந்த கட்டிலிலிருந்து ஒரு பெரிய பனைநார்க் கயிற்றுச் சுருளை எடுத்து வந்தான். கரிகாலன் அரிஞ்சயன் உத்தரவுப்படி கதவைத் தாழிட்டு அறைச் சாளரத்தை நோக்கினான். சாளரத்தின் கம்பிகளிரண்டு அறுக்கப்பட்டு விட்டதையும், அரிஞ்சயன் பனை நார்க் கயிற்றுச் சுருளை எடுத்ததையும் கண்ட கரிகாலன், அந்த ஏற்பாடுகளின் காரணத்தைப் புரிந்து கொண்டான். இருப்பினும், “ஏன் அரிஞ்சயா! வாயில் வழியாகச் செல்ல மார்க்கமில்லையா?” என்று வினவினான்.

“போவது அபாயம்.”

“இப்படிச் சாளரத்தின் வழியாக இறங்கினால் அபாய மில்லையா?”

“இல்லை.”

“காவல்காரர்கள்?”

“இந்தப் பக்கம் காவல் கிடையாது.”

“இறங்கியபின் யாராவது பிடித்துக் கொண்டால்?”

“அதற்கும் ஏற்பாடு செய்திருக்கிறேன். கட்டிலில் என் தலையணைக்குக் கீழ் வேங்கி நாட்டுப் படைத்தலைவர் அணியும் உடை ஒன்று இருக்கிறது! அதை அணிந்து கொள்.”

அவனுடைய முன்னேற்பாடுகளைக் கவனித்த கரிகாலன், ஒரு விநாடி பிரமித்தானானாலும், ‘இதில் என்ன ஆச்சரியமிருக்கிறது! எந்த ஒற்றன் சகோதர ஒற்றனைத் தியாகம் செய்ய ஒப்புக்கொள்வான்?’ என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு, அரிஞ்சயன் கூறியவண்ணமே உடையை மாற்றிக் கொண்டான். அதற்குள் அரிஞ்சயனும் பனைநார்ச் சுருளின் ஒரு நுனியை சாளரத்தின் கம்பியில் வலிய இழுத்துக் கட்டி, மீதிப் பாகத்தை மெள்ள மெள்ளத் தரையை நோக்கித் தொங்கவிட்டான். இவ்விதம் ஏற்பாடுகளைப் பூர்த்தி செய்த அரிஞ்சயன் கரிகாலனை நோக்கி, “கரிகாலா! நான் முன்னால் இறங்கிக் கீழே ஏதாவது காவல் வருகிறதா என்று கவனிக்கிறேன். வராத பட்சத்தில் இப்படிச் சைகை செய்கிறேன்” என்று அடையாளம் காட்டிவிட்டுக் குரங்கு போல் சாளரத்தில் தொத்தி ஏறிக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு சரசரவென்று இறங்கிப் பூமியில் குதித்து அப்புறமும் இப்புறமும் நோட்டம் பார்த்துவிட்டுக் கையை ஆட்டிக் கரிகாலனுக்குச் சைகை செய்தான்.

கரிகாலனும் அரிஞ்சயனுடைய முறையைப் பின்பற்றி இறங்கிக் கால்களைத் தரையில் ஊன்றி, ‘அப்பாடி’ என்று ஆயாசம் விலகியதற்கு அறிகுறியாகப் பெருமூச்சு விட்டான். “சரி சரி, வா” என்று கரிகாலனை அவசரப்படுத்திய அரிஞ்சயன், அவனை அழைத்துக்கொண்டு மாளிகையின் மதில் சுவருக்காகச் சென்றான். அவன் உத்தரவைப் பிரும்ம மாராயன் வீரர்கள் சிரசால் வகித்து நடப்பதைக் கண்ட கரிகாலன் பிரும்ம மாராயனை அந்த நேரத்தில் மனமாரச் சபித்தான். ‘சோழ நாட்டுப் படைத்தலைவனுக்கு உடல் பருமனாயிருக்கிறதே யொழிய மூளை சுத்தக் களிமண்; அரிஞ்சயைனைப் போன்ற ஓர் அபாயமான ஒற்றனை மடியிற் கட்டிக்கொண்டு அரசகுமாரிக்கு உதவச் சதி செய்கிறானே, மடையன்!’ என்று மனத்துக்குள்ளேயே தூற்றிக் கொண்டான். ‘நல்ல வேளை! சமயத்தில் நானாவது விஷயத்தைப் புரிந்து கொண்டேன்; இல்லாவிட்டால், விமலாதித்தன் மகள் கதி என்னவாகியிருக்கும்?’ என்று ஓரளவு சமாதானப்படுத்திக் கொண்டான்.

அரிஞ்சயனைக் கண்ட மாத்திரத்தில், பிரும்ம மாராயன் மாளிகைக் கதவுகள் தாமாகவே திறந்தன. வீரர்கள் தலை வணங்கி, அரிஞ்சயனுக்கும் கரிகாலனுக்கும் வழி விட்டார்கள். மாளிகை மதிலைத் தாண்டி, சிறிது தூரம் இருவரும் மௌனமாகவே நடந்தார்கள். அப்படி நடந்த இருவர் மனங்களும், இருவித பிராந்தியங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. ஊர் முழுவதும் உறங்கித் தான் கிடந்தது. ஆனால் அந்த இருவர் உள்ளங்கள் மட்டும் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், பற்பல சிந்தனைகளை எழுப்பிக் கொண்டிருந்தன. ‘நல்லவேளை, கரிகாலனைக் காப்பாற்றி விட்டோம். இல்லாவிட்டால் ஜெயசிம்ம சாளுக்கியன் நம்மைச் சும்மா விடமாட்டான். எந்த நேரத்தில் ‘கரிகாலனும் நம்மைச் சேர்ந்தவன்தான். அவன் மீதும் ஒரு கண் வைத்துக்கொள்’ என்று உத்தரவிட்டாரோ அந்த நேரத்திலிருந்து, இவனைக் காக்கும் பொறுப்பு நமக்கேற்பட்டு விட்டது. நேற்று அந்த ராட்சசன் பிரும்ம மாராயனுக்கு இருந்த வெறியைப் பார்த்தால், கரிகாலனை ஒழித்துக்கட்டி விடுவானென்று நினைத்தேன். பாதக. மில்லை, கரிகாலனும் எமப்பயல்தான். விஷயங்களைத் திரித்துச் சொல்லித் தப்பிவிட்டான்’ என்று நடந்த விஷயங் களைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டு நடந்தான் அரிஞ்சயன்.

ஆனால், கரிகாலன் உள்ளத்தில் வேறு பல எண்ணங்கள் பிரவகித்துக் கொண்டிருந்தன. ‘மரணத்தின் வாயிலிலிருந்து மீண்டுவிட்டேன். ஆனால் நான் மீண்டு என்ன பயன்? இந்த அரிஞ்சயனை ஒழிக்காத வரையில் நிரஞ்சனாதேவியையும் இராஜராஜ நரேந்திரனையும் சதா ஆபத்து சூழ்ந்துதானே நிற்கும்? இவனை ஒழிப்பது அத்தனை சுலபமல்லவே. வாள்போருக்கு அழைத்துத் தீர்த்து விடலாமென்றால், கத்தி ஓசை கேட்டதும் பாராக்காரர்கள் ஓடிவந்து பிடித்துக்கொண்டால் என்ன செய்வது? உண்மை ஜெயசிம்மனுக்குத் தெரிந்துவிட்டால், நம்மைக் கோதண்டத்தில் மாட்டித் தோலை உரித்துவிடுவானே! ஆகவே, அடுத்தபடி என்ன செய்யலாம்!’ என்ற யோசனை பலமாக ஏற்படவே, ஏதும் பேசாமல் நடந்த கரிகாலனுக்கு இறுதியாக ஒரு வழி புலப்பட்டது. அந்த வழி புலப்பட்டதற்கு அடையாளமாக அவன் முகத்தில் ஒரு புத்தொளியும் பிறந்தது. அதன் விளைவாகச் சற்று தைரியத்துடன் பேச்சைத் துவக்கினான் கரிகாலன்.

“அரிஞ்சயா!”

“ஹும்.”

“நாம் அடுத்தபடி செய்யவேண்டியது என்ன?”

“அதைத்தான் நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.”

“யோசிக்க வேண்டியதில்லை, அரிஞ்சயா!”

“ஏன் யோசிக்க வேண்டியதில்லை?”

“மன்னரே உத்தரவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.”

“யார்? ஜெயசிம்ம சாளுக்கியரா?”
“ஆமாம்.”

“எப்பொழுது சொன்னார்?”

“நான் பிரும்ம மாராயன் மாளிகைக்கு வருவதற்கு முன்பு.”

அரிஞ்சயன் சட்டென்று திரும்பி நின்று கரிகாலனை நோக்கினான். அவன் முகத்தில் சந்தேகச் சாயை பெரிதும் படர்ந்து நின்றது. “என்ன மன்னர் சொன்னாரா? என்னிடம் எதுவும் சொல்லவில்லையே?” என்றான் அரிஞ்சயன், முகத்தில் உதயமான சந்தேகம் குரலிலும் தொனிக்க.

“உனக்குப் பிறகுதானே நான் வந்தேன் அரிஞ்சயா?”

“ஆமாம் அதனாலென்ன?”

“கடைசியாக அவரிடம் விடைபெற்றுக்கொண்டவன் நான். அவர் சொல்லாவிட்டால் அந்த அரக்கர்களிடம் வந்து சிக்கிக்கொள்ள நான் என்ன முட்டாளா?”

“அவரா வரச்சொன்னார் உன்னை?”

“ஆமாம். இல்லாவிட்டால், எல்லோரும் அறியும்படியாக அரண்மனையில் நுழைந்து மன்னருடன் உறவாடி விட்டு, அவரைத் தொலைக்கத் திட்டமிடும் சதிகாரர்களிடம் தலை நீட்டுவேனா?”

இந்தப் பதில் அரிஞ்சயனுக்குப் பெருத்த அதிர்ச்சியை விளைவித்தது. பெரும் ரகசியமெனச் சதிகாரர்கள் மறைத்து வைத்திருந்த கொலைத் திட்டம், இவனுக்கு எப்படித் தெரிந்தது என்று பிரமித்துப் போனான் அரிஞ்சயன். “என்ன ஜெயசிம்ம அரசரை வேங்கி நாட்டுப் படைத் தலைவர்கள் கொல்ல உத்தேசித்திருப்பது உனக்குத் தெரியுமா?” என்று வியப்பும் அச்சமும் கலந்து தொனித்த சொற்கள், அவன் உதடுகளிலிருந்து உதிர்ந்தன.

Previous articleMannan Magal Part 1 Ch 22 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here