Home Historical Novel Mannan Magal Part 1 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

103
0
Mannan Magal Ch 24 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 24 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 24 கரிகாலன் இட்ட தீ

Mannan Magal Part 1 Ch 24 | Mannan Magal | TamilNovel.in

சொற்களுக்கே வலிமை உண்டு. அதிலும் பிற மொழிச் சொற்களைவிடச் செந்தமிழ்ச் சொற்களுக்கு ஒரு தனிப்பட்ட வலிமை உண்டு. ஒரே சொல் பல சந்தர்ப்பங்களில் உபயோகப்படும் போது வெவ்வேறு பொருள் தரும். ஒரே சந்தர்ப்பத்தில் உபயோகப்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சொல் கூட சொல்பவனுக்கு ஒரு பொருளையும் கேட்பவனுக்கு ஒரு பொருளையும் தரக்கூடியதாயிருக்கும். எண்ணங்களுக்கேற்ப சொல்லின் பொருள் மாறு படுவதைத் தமிழ்க் கவிதைகளில் நாம் சகஜமாகக் காண்கிறோம். தமிழ்ச் சொற்களின் இந்தப் பல்வகைப் பெருமையால் இலக்கியத்தில் விளைந்திருக்கும் விந்தைகள் பல. அத்தகைய விந்தையொன்று அரிஞ்சயன் பேச்சினால் கரிகாலனுக்கு விளைந்தது.

“ஜெயசிம்மனைத் தொலைக்கத் திட்டமிடும் சதிகாரர் களிடம் தலையை நீட்டுவேனா?” என்று கரிகாலன் அரிஞ்சயனிடம் சாதாரணமாகத்தான் சொன்னான். ‘தொலைக்க’ என்ற சொல்லை, ‘ஜெயசிம்மனுடைய ஆதிக்கத்தைத் தெலைக்க’ என்ற பொருளில்தான் கரி காலன் உபயோகித்தான். ஆனால், கரிகாலனைவிடச் சதி காரர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமான அரிஞ்சயனின் சதி உள்ளத்துக்கு அது மிகக் கடுமையான பொருளைக் கற்பித்தது. ஜெயசிம்மனைத் தொலைத்துவிட’ என்ற சொற்களில், ‘கொன்றுவிட’ என்ற பொருளே அவன் உள்ளத்தில் திடீரென எழுந்ததால், “ஜெயசிம்ம மன்னரை வேங்கி நாட்டுப் படைத்தலைவர்கள் கொல்ல உத்தேசித்திருப்பது உனக்குத் தெரியுமா?” என்று திடீரென உளறியும் விட்டான்.
மாறுபட்ட பொருள்களைக் கொடுத்த அந்த ஒரு சொல்லால், திடீரெனத் தனக்குக் கிடைத்த தகவலைக் கண்டு ஒரு விநாடி அசந்தே போனான் கரிகாலன். சதிகாரர்களின் மனப்போக்கும் அவர்கள் ஜெயசிம்மனை வெற்றி கொள்ளக் கடைப்பிடிக்க உத்தேசித்துள்ள அற்புதத் திட்டமும் அவனை அடியோடு கலங்க வைத்தன.

ஏதோ பெரிய ரகசியத் திட்டம் என்றும், வேங்கி நாட்டுப் படைத்தலைவர் மூவர் அனுமதியில்லாமல் தன்னிடம் சொல்ல முடியாதென்றும் பிரும்ம மாராயன் மறைத்து வைத்த திட்டம் இந்தக் கொலைத் திட்டமே என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட கரிகாலன், சதிகாரர்களின் முட்டாள் தனத்தைப் பற்றிப் பெரிதும் வியந்தான். ‘ஜெயசிம்மனைக் கொலை செய்ய முயன்று அது திட்டப்படி நடந்தேறாவிட்டால் வேங்கி நாட்டில் பெருங்கிளர்ச்சி ஏற்படும். அந்தக் கொலைத் திட்டத்தின் பொறுப்பை ஜெயசிம்மன் நிரஞ்சனாதேவி மீதுதான் போடுவான். அப்படி நிரஞ்சனாதேவி மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டால் விமலாதித்தன் வம்சம் வேங்கி நாட்டு அரியணையில் அரை நிமிடம் தங்கியிருக்க முடியாது. ஏன்? பிழைத்திருக்கவும் முடியாது. ஜெயசிம்மனை மறைவிலிருந்து அம்பெய்து கொன்றுவிடலாம். ஆனால், அதனால் ஏற்படும் விளைவை லட்சம் அம்புகள் கூடத் தடுக்க முடியாதே’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்ட கரிகாலன் உள்ளத்திலே, வள்ளுவரின் அருள் வாக்கு மலர்ந்து நின்றது. ‘அறவினை யாதெனில் கொல்லாமை; கோறல் (கொல்லுதல்) பிறவினை யெல்லாம் தரும்’ என்ற குறளை உள்ளத்திலேயே உச்சரித்த கரிகாலன் அறவழியாலும் ராஜதந்திரத்தாலுமே ஜெயசிம்மனை ஜெயிக்க வேண்டுமே ஒழிய, பலத்தால் ஜெயிக்க முடியாது என்ற முடிவுக்கு வந்தான். சதிகாரர்களின் கொலைத் திட்டத்தை உடைக்கவும் தீர்மானித்தான். இந்தக் காரியத்துக்குச் சிறிது பொய் சொல்வது சாஸ்திர சம்மதம் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு அரிஞ்சயனை ஏறெடுத்து நோக்கி, “அரிஞ்சயா! கொலைத் திட்டத்தை மிக ரகசியமாக நீங்கள் வைத்திருக்கிறீர்கள். ஆனால் அது மன்னருக்கு எப்படியோ தெரிந்திருக்கிறது. அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்” என்று இது வரை சொல்லிவந்த பொய்களோடு, மற்றொரு பொய்யையும் கலந்துகொண்டான்.

“நாம் இருவர்தானே ஒற்றர்கள்? மன்னருக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் அரிஞ்சயன்.

“அவருக்குத் தெரியாதது என்ன இருக்கிறது அரிஞ்சயா?” என்று கரிகாலன் ஜெயசிம்ம சாளுக்கியனைச் சிலாகித்துவிட்டு, “அரிஞ்சயா! எப்படித் தெரிந்தால் நமக்கென்ன? நாம் நமது கடமையைச் செய்வோம்” என்று அந்தப் பேச்சுக்கு ஒரு முடிவு கட்டிவிடவே, மேற்கொண்டு எந்தத் தகவலையும் கரிகாலனிடமிருந்து பெற முடியாதென்பதை உணர்ந்துகொண்ட அரிஞ்சயன், இனி, நாம் என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினான்.

“மன்னரைத்தான் கேட்க வேண்டும்” என்று பதிலிறுத்தான் கரிகாலன்.

“மூன்றாவது ஜாமம் நெருங்கி வருகிறது; மன்னர் உறங்கிக் கொண்டிருப்பார். அவரை எப்படிப் பார்ப்பது?”

“மன்னருக்கு உறக்கமேது அரிஞ்சயா? சாதாரண மக்களாவது நிம்மதியாக உறங்கலாம். மன்னன் உறங்க முடியாது. அதுவும் ஜெயசிம்ம சாளுக்கியரைப் போல் வேங்கி நாட்டை விழுங்கத் திட்டமிடும் மன்னனுக்கு உறக்கமேது? இன்றிரவு எத்தனை நேரமானாலும் என்னை வசந்த மண்டபத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார் மன்னர்.” “வசந்த மண்டபத்துக்கா?”

“ஆமாம்.”

“அங்கு அரசகுமாரியல்லவா படுக்கிறாள்!”

“ஜெயசிம்ம மன்னருக்கு வசந்த மண்டபம் தேவை யில்லாத போதுதான், மன்னன் மகள் அங்கு படுக்கலாம்.”

“அப்படியா?”

ஆமாம், நேற்றைக்கு முந்திய தின இரவில் மன்னன் மகளுக்கு அங்கு படுக்க உத்தரவில்லை.”

அரிஞ்சயன் சற்று இரைந்தே நகைத்தான். “கரிகாலரே! மன்னன் மகளின் கதி எப்படியிருக்கிறது பார்த்தீரா! சொந்த அரண்மனை வட்டாரத்திலேயே இஷ்டப்படி உலாவ வகையில்லை; படுக்கவும் வேறு மனிதன் உத்தரவு வேண்டியிருக்கிறது!” என்று கூறினான்.

“அவர்கள் அதிர்ஷ்டம் அரிஞ்சயா! நாமென்ன செய்ய லாம்?” என்று கரிகாலனும் சிரித்துவிட்டு, “அரிஞ்சயா! நீ வசந்த மண்டபத்தின் அடைப்பட்ட பெருங்கதவு இருக்கின்றதே, அதன் வாயிலில் காத்திரு. நான் மன்னனைப் பார்த்துவிட்டு, என்ன செய்ய வேண்டுமென்பதற்கு உத்தரவு பெற்று வருகிறேன்” என்று கூறவே இருவரும் வெவ்வேறு மார்க்கத்தில் பிரிந்து சென்றனர்.

மனோவேகத்தையும் விடக் கடுகி நடந்த கரிகாலன், வசந்த மண்டபத்தை நாடு முன்பாகவே தனது திட்டத்தை ஒரு வழியாக வகுத்துக் கொண்டான். அரசகுமாரி உறக்கத் திலிருந்தாலும், அவளை எழுப்பிச் சதிகாரர்களின் கொலைத் திட்டத்தையும் அவளிடம் கூறி எச்சரிப்பதோடு, அரிஞ்சயன் வேடத்தையும் கலைத்துவிடுவதென்ற தீர்மானத்துடன், விடுவிடு என்று அரண்மனைக்குள் நுழைந்து, வசந்த மண்டபத்துக்குச் சென்ற கரிகாலனைக் காவலாளிகள் யாரும் தடை செய்யவில்லை. ஜெயசிம்மன் தன்னைப் பற்றி மிகத் திட்டமான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறான் என்பதையும், தன் மீது மிதமிஞ்சிய நம்பிக்கை வைத்திருக்கிறான் என்பதையும் காவலாளிகள் தனக்குக் காட்டிய மரியாதையிலிருந்து ஊகித்துக் கொண்டு, மிகத் துரிதமாக வசந்த மண்டபத்தை அடைந்த கரிகாலன், முதல் கூடத்தைத் தாண்டி அரசகுமாரியின் அறையை அடைந்து, சிறிதும் சப்தம் செய்யாமல் கதவைத் திறந்தான்.

“உள்ளே வா” என்று ஒரு குரல் அழைத்தது.

உள்ளே நுழைய ஒரு காலை எடுத்து வைத்த கரிகாலன் மார்பு, குதிரையைவிட அதி வேகமாக ஓடத் தொடங்கியது. கால்கள் அசையக்கூட மறுத்தன. எதற்கும் குழப்ப மடையாத அவன் புத்தியுங்கூட அடியோடு நிலை குலைந்து போகவே பிரமை பிடித்தவன் போல் நின்றான் கரிகாலன். எதிரேயிருந்த கட்டிலில் அரசகுமாரியின் அழகிய உடலுக்குப் பதில் ஜெயசிம்ம சாளுக்கியனின் திடகாத்திரமான சரீரம் அமர்ந்திருந்தது.

“ஏன் தயக்கம்? வா உள்ளே” என்று மிகக் கடுமையாக இரண்டாம் முறை ஒலித்தது, ஜெயசிம்ம சாளுக்கியனின் குரல்.

அரசகுமாரியைப் பார்க்கப் போன இடத்தில் ஜெயசிம்மன் உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவன் கரிகாலனைத் தவிர வேறு ஒருவனாயிருந்தால், அந்தக் கணமே மயக்கம் போட்டாவது விழுந்திருப்பான்; அல்லது ஒன்றுக்கொன்று ஏதாவது உளறியிருப்பான். ஆனால் சூடாமணி விஹாரத்தில் எத்தனையோ தர்க்கங்களில் கலந்துகொண்டதால், எந்த நிலையையும் சமாளித்துக் கொள்ளக்கூடிய கூரிய புத்தியுடைய கரிகாலன், தனக்கேற்பட்ட பிரமையையும் கலவரத்தையும் விநாடி நேரத்தில் சமாளித்துக் கொண்டு, அரசகுமாரியின் அறைக்குள்ளே நுழைந்தான். ஜெயசிம்ம சாளுக்கியனின் கழுகுப் பார்வையால் கூட அவன் உள்ளத்தே ஓடிய எண்ணங்களை ஊகிக்க முடியாத அளவுக்கு அவன் முகம் கல்லாய்ச் சமைந்து நின்றது.

நிஷ்களங்கமான வதனத்துடன் உள்ளே நுழைந்த கரிகாலனை ஏற இறங்க ஆராய்ந்த ஜெயசிம்மன், “கரிகாலா! இது எதிர்பாராத சந்திப்பல்லவா?” என்று கேட்டான்.

“ஆமாம் மன்னவா!” என்று ஒப்புக்கொண்டான் கரிகாலனும்.

“இங்கு அரசகுமாரியைப் பார்க்க வந்தாய்.”

“ஆமாம்.”
“எதற்காகப் பார்க்க வந்தாய்?”

“இந்தச் சதியை உடைத்தெறியக்கூடிய தகவல் கிடைத்தது.”

“என்ன தகவல்?”

“தங்களைக் கொலை செய்துவிடச் சதிகாரர்கள் திட்ட மிட்டிருக்கிறார்கள்!”

ஜெயசிம்மன் புருவங்கள் சட்டென்று உயர்ந்தன. “என்ன! இது உண்மையா?”

“முக்காலும் உண்மை.”

“இதை ஏன் அரிஞ்சயன் என்னிடம் சொல்ல வில்லை ?” |
இந்தச் சந்தர்ப்பத்தை உபயோகித்துக் கொண்ட கரிகாலன், மெள்ள ஜெயசிம்மன் மனத்தில் சந்தேக விஷத்தைப் புகுத்தத் தொடங்கி, “அசந்தர்ப்பமான கேள்வி மகாராஜா!” என்றான்.

ஜெயசிம்மன் கட்டிலிலிருந்து எழுந்து அடிப்பட்ட சிங்கம் போல் அறையில் உலாவிக்கொண்டே, “இதில் அசந்தர்ப்பம் என்ன இருக்கிறது?” என்றான்.

“அரிஞ்சயன் தங்களுக்கு வேண்டியவன். நீண்ட நாள்களாக உழைப்பவன். தங்கள் நம்பிக்கைக்குப் பாத்திர மானவன். நானோ புதியவன்” என்று இழுத்தான்.
கரிகாலன் மனத்திலோடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட ஜெயசிம்மன், “நீ நினைப்பது நியாயம், கரிகாலா! ஆனால், அவன் இந்த விஷயத்தை இதுவரை என்னிடம் சொல்லவில்லையே!” என்றான்.

அரிஞ்சயன் மன்னனுக்கு விஷயத்தைச் சொல்லாததன் காரணத்தைக் கரிகாலன் ஓரளவு ஊகித்துக் கொண்டான். திட்டம் சரியாக உருவாகவில்லை என்றும், ஏற்பாடுகள் பூர்த்தியான பின்பு மன்னனிடம் சொல்லிக் கொள்ளலாமென்றே அரிஞ்சயன் இருந்திருக்க வேண்டு மென்றும் கரிகாலன் ஊகிக்க முடிந்தாலும், அதை வெளியில் காட்டாமல், மித்திரபேதத்தைச் சரியாகச் செய்துவிடத் தீர்மானித்து, “மன்னவா! இந்த விஷயத்தைப் பற்றி அரிஞ்சயனை எதுவும் கேட்காதீர்கள்” என்று கெஞ்சுவது போல் நடித்தான்.

“ஏன்?”

“நீங்களே என்னிடம் இந்தத் தகவலைச் சொன்னதாக அவனிடம் பொய் சொல்லியிருக்கிறேன்.”

“எதற்காகப் பொய் சொல்ல வேண்டும்?”

“தங்களிடம் அரிஞ்சயன் இந்த முக்கிய விஷயத்தைச் சொல்லவில்லை. நான் அவனிடம் கூறியபோது, ‘உனக் கெப்படித் தெரியும்?’ என்று இரைந்தான். ஆகையால் அவனிடமிருந்து தப்ப, நீங்கள் சொன்னதாகவும், உங்களுக்கு முன்பே இத்தகவல் தெரியும் என்றும் கூறி விட்டேன்.”

‘’அதற்கு என்ன சொன்னான்?”

“நாம் இருவர்தானே ஒற்றர்கள்? மன்னனுக்கு இது எப்படித் தெரியும்?” என்று சீறினான்.

ஜெயசிம்மன் கோபமும் எல்லை மீறியது. அரிஞ்சயன் அயோக்கியன். சதிகாரர்களில் இவனும் ஒருவனாக இருக்க வேண்டும். அவன் எங்கே இப்பொழுது?” என்று கூச்சலிட்டான்.

“இந்தக் கோட்டைப் பின்புறப் பெருங் கதவுக்கருகில் காத்துக் கொண்டிருக்கிறான்.”

கரிகாலன் வைத்த சந்தேகத் தீ வெகு உக்கிரமாகப் பிடித்துக் கொண்டது. உள்ளே உதயமான கோபம் திடீரென எரிமலை போல் வெடிக்கத் தொடங்கவே, அந்த அயோக்கியனை இப்பொழுதே ஒழித்துக் கட்டுகிறேன்’ என்று இடியென் வார்த்தைகளை உதிர்த்த ஜெயசிம்மன், அறையை விட்டு வெளியே சரசரவென்று நடந்து! சென்றான்.

Previous articleMannan Magal Part 1 Ch 23 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here