Home Historical Novel Mannan Magal Part 1 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

105
0
Mannan Magal Ch 25 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 25 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 25 மந்திரச் சொற்கள்

Mannan Magal Part 1 Ch 25 | Mannan Magal | TamilNovel.in

உயிர்மேல் ஆசையில்லாதவன் உலகத்தில் யாருமே கிடையாது. கூன், குருடு, நொண்டி, முடவன், பிறர் காணச் சகிக்காத ரோகமுடையவன், தள்ளாடும் கிழவன் ஆகியவர்கள் கூட உலகில் தத்தித் திரிந்தாவது ஜீவிக்க இஷ்டப் படுகிறார்களே யொழிய, பிராணனை விட யாருக்கும் மனம் வருவதில்லை. இந்தப் பிராணப் பயமும் அதனால் உயிர்மீது ஏற்படும் தீவிரப் பற்றுதலும் மனித சமுதாயத்துக்கு மட்டும் பிரத்தியேகமானதல்ல. எப்படியாவது பிழைத்திருக்க வேண்டுமென்ற முயற்சியால்தான், செடி கொடிகள் கூடத் தங்கள் வேர்களை நிலத்தின் ஆழத்துக்கு அனுப்பி நீர் நிலைகளை ஆராய்ந்து ஆகாரத்தை உறிஞ்சுகின்றன. சற்றே அடிபட்ட நாகம் சரசரவென்று நிலத்தை நோக்கி விரைவதும், வேங்கையும் சிங்கமும் மனிதர்களை நோக்கிப் பாய்ந்து கொல்ல முயல்வதும், உயிரை எப்படியாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத் தால்தான்.

உயிர் அகன்றால் உலகம் இருண்டு போகிறது. அதைப் பார்க்க ஒளி அளிக்கும் உயிரை ஆண்டவன் படைப்பிலுள்ள எந்த ஜீவராசியும் இழக்க இஷடப்படுவதில்லை. இந்த உயிரால் யாருக்கு என்ன பிரயோசனம் என்ற தத்துவ ஆராய்ச்சிகள் கூட அநேகமாக ஏட்டளவில் நிற்கின்றனவே யொழிய, அந்த எண்ணம் ஊர்வது துர்லபமென்பதைச் சரித்திரம் நிரூபித்திருக்கிறது. சமுதாயத்துக்குச் சுமையாயிருப்பவனும், தன் உயிரை மிக அபூர்வமென்றும், அது அவசியம் தன் உடலில் தங்கியிருக்க வேண்டும் என்றும் நினைக்கிறான். உணவுக்கு அடியோடு வழியில்லாதவர்கள் கூடப் பிச்சையெடுத்தோ திருடியோ உண்டு, தங்கள் அற்புத உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள்.

இவர்களுக்கே உயிர்மேல் இத்தனை ஆசையிருக்கு மென்றால், சகல சுகபோகங்களையும் அனுபவித்து வந்தவனும் மேலைச் சாளுக்கிய நாட்டையே பரிபாலனம் செய்து வந்தவனுமான ஜெயசிம்மனுக்கு உயிர்மீது ஆசை இருந்ததிலோ, அதற்கு அபாயம் நேரிடுமென்று கேட்ட மாத்திரத்தில் அவன் கோபத்தின் வசப்பட்டதிலோ என்ன ஆச்சரியமிருக்க முடியும்! ஆகவே, கரிகாலன் இட்ட தீ அவன் சித்தத்திலே வெகு சீக்கிரமாகப் பற்றி உணர்ச்சிப் புயலால் வெகு வேகமாக விசிறப்பட்டு ஜ்வாலையாக அடித்துவிடவே, இந்த முக்கிய விஷயத்தைத் தன்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்த அரிஞ்சயனை ஒருவழியாக ஒழித்துவிடக் கங்கணம் கட்டிக்கொண்டு, வெகு வேகமாக வசந்த மண்டபத்தை விட்டு வெளியே வந்தான்.

எந்தச் சமயத்திலும் நிதானத்தை இழக்காதவனென்றும் கோபத்திற்கு எந்த நிலையிலும் இடங் கொடுக்காதவ னென்றும், எந்த மனிதனையும் தீவிரமாக ஆராய்ந்து நோக்கவல்ல பார்வையுடையவனென்றும் பிரசித்தி பெற்ற ஜெயசிம்ம சாளுக்கியன், சதிகாரர்களின் கொலைத் திட்டத்தைப் பற்றிக் கேட்டமாத்திரத்தில் நிதானத்தைக் காற்றில் பறக்கவிட்டு, அப்படி வெகுண்டு ஓடினதைக் கண்ட கரிகாலன் ‘உள்ளத்தில் சற்றே பயம் உதயமாயிற்று. ஜெயசிம்ம சாளுக்கியன் அவசரப்பட்டு அரிஞ்சயனைக் கோதண்டத்தில் மாட்டினால் தன் குட்டும் ஓரளவு வெளிப்பட்டு விடும் என்பதையும், அப்படி வெளிப்பட்டால் கோதண்டத்தில் தனக்கும் இடம் ஒதுக்கப்படும் என்பதையும் கரிகாலன் சந்தேகமறப் புரிந்துகொண்டிருந் தான்.

நடந்த நிகழ்ச்சிகளைத் தர்க்க ரீதியாக அவன் மனம் ஆராய்ந்ததில், வேறு பல சிக்கல்களும் இருப்பது திட்டமாகத் தெரிய வந்தது.

ஜெயசிம்ம சாளுக்கியன் அன்று அரசகுமாரிக்குப் பதில் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்தது தன்னைச் சோதிக்கவே என்பதில் கரிகாலனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை.

‘நான் அரசகுமாரியின் பக்கத்திலிருக்கும் பட்சத்தில் அவளை நாடி வசந்த மண்டபத்துக்கு எப்படியும் வருவேன் என்பதை, ஜெயசிம்மன் ஊகித்திருக்க வேண்டும். அந்தச் சந்தர்ப்பத்தில், எதிர்பாராதவிதமாகத் தன்னைச் சந்தித்தால் நான் திடுக்கிட்டு உண்மையை உளறிவிடுவேன் என்று நினைத்திருக்கிறான். ஆனால், அரசகுமாரியைப் பார்க்கவே நான் வந்ததாகச் சொன்னது இவனுக்குத் திக்பிரமையை அளித்துவிட்டது. ஆனால், மன்னனைக் காணவே நான் வசந்தமண்டபத்துக்கு வருவதாக அரிஞ்சயனிடம் சொல்லியிருக்கிறேனே அந்த விஷயத்தை அவன் ஜெயசிம்மனிடம் சொன்னால் என் பேச்சு முன்னுக்குப் பின் முரணாகிவிடுமே. இப்படி நான் பித்தலாட்டம் செய்கிறேனென்று ஜெயசிம்மன் அறிந்தால் கழுத்தைத் திருகி விடுவானே என்று பலவிதமாக மனத்திற்குள்ளேயே நிலைமையை ஆராய்ந்த கரிகாலன், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரிஞ்சயனையும் ஜெயசிம்ம சாளுக்கியனையும் கலந்து பேசவிடக் கூடாதென்று தீர்மானித்த வண்ணம், ஜெயசிம்ம சாளுக்கியனைத் தொடர்ந்து நந்தவனத்துக்குள் சென்றான். சிறிது நேரம் மன்னனை மௌனமாகவே பின்தொடர்ந்த கரிகாலன், நந்தவனத்தின் நடுவிலிருந்த தடாகத்தினிடம் வந்ததும், மெள்ளப் பேச்சுக் கொடுக்க முற்பட்டு, “மன்னவா!” என்று ஆரம்பித்தான். ஜெயசிம்மன் தன் வேகத்தைச் சிறிது தளர்த்தி நின்று திரும்பிக் கரிகாலனை நோக்கினான். ‘என்ன?’ என்று அவன் உதடுகள் கேட்கா விட்டாலும் முகத்தில் அந்தக் கேள்வி தொக்கியே நின்றது.

“மன்னவா, ஏதோ நான் சொல்கிறேனென்று கோபிக்க வேண்டாம். எதிலும் நிதானம் நல்லது; அரசியல் விஷயங்களில் அது மிக மிக அவசியம் என்று அறிவாளிகள் சொல்கிறார்கள்.” என்று லேசாக இழுத்தான்.

ஜெயசிம்ம சாளுக்கியனின் வல்லூறு விழிகள் கரிகாலனை நன்றாக ஊடுருவிப் பார்த்தன. தன் உள்ளத்தை அரசன் அக்கக்காக அலசுவதைக் கவனித்து, மனத்தில் ஓரளவு அச்சமே உதயமானாலும், கரிகாலன் அதை வெளியில் காட்டாமல், அரசன் கண்களை நோக்கித் தன் கண்களையும் எழுப்பினான். கண்களைக் கண்கள் தாக்கி நின்றன. அந்த இருவர் பார்வையை அந்தச் சமயத்தில் யாராவது பார்த்திருந்தால் ஒரு ஜோடி ஈட்டிகள் இன்னொரு ஜோடி ஈட்டிகளுடன் போரிடும் நினைப்பே ஏற்படுமே யொழிய, ஏதோ இரண்டு. மனிதர்கள் ஒருவரை யொருவர் பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள் என்ற எண்ணம் ஏற்படாது. கரிகாலன் கண்களை நன்றாக ஊடுருவிப் பார்த்த ஜெயசிம்மன் கண்கள், கடைசியாகச் சற்றே தாழ்ந்து வேறு புறம் திரும்பின. ஜெயசிம்மன் வாயிலிருந்து வெளிவந்த சொற்களில், உறுதியும் லேசாகக் கோபமும் கலந்திருந்தன.

“ஜெயசிம்மனுக்கு இந்தவிதம் புத்திமதி சொன்னவர் களின் கதி என்ன ஆகியிருக்கிறது தெரியுமா கரிகாலா?” என்று கேட்டான் ஜெயசிம்மன்.

“பதவி உயர்ந்திருக்கும்” என்றான் கரிகாலன், ஜெய சிம்மன் கேள்வியின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளாதவன் போல.

“ஆம் இந்த உலகத்திலிருந்து மேல் உலகத்துக்கு உயர்ந்துவிட்டது.”

“மன்னவா! கடவுளுக்கு அடுத்தபடி தங்களைத்தான் சொல்ல வேண்டும்!”

“என்ன!”

“ஆம் மன்னவா! தங்களுக்குச் சேவை செய்பவர் களுக்குக் கடவுள் மோட்சம் கொடுப்பதாகச் சொல்லுகிறார்கள். நீங்களும் அதைத்தான் செய்வதாகச் சொல்கிறீர்கள்.”

“கரிகாலா! உன்னிடம் நகைச்சுவை நிரம்ப இருக்கிறது.”

“அது தமிழனின் பிரத்தியேகச் சொத்து மன்னவா.”

“அது அதிகமானால் சங்கடங்கள் பல உண்டு தெரியுமா?”

“தெரியும் மன்னவா! தங்களைப் போன்றவர்களிடம் கையாண்டால் உயிருக்கும் கேடு வரலாம்.”

“தெரிந்துமா உன் சாமர்த்தியத்தை என்னிடம் காட்டுகிறாய்?”

“மன்னவா! நீங்கள் தமிழர்களோடு போரிட்டிருக்கிறீர் களே தவிர, கலந்து பழகியதில்லை. அவர்கள் வாள் பலம், வேல் பலம் உங்களுக்குத் தெரியும். ஆனால் வார்த்தை பலம் தெரியாது. தெவிட்டாத அந்தத் தேன்மொழியில் துளித்துத் தெளிக்கும் பன்னீரைவிட இன்பம் தரும் நகைச் சுவையை நீங்கள் அறியமாட்டீர்கள். எங்கள் மொழியில் வசையிலும் நகைச்சுவை உண்டு மன்னவா! அது மொழியோடு பிறந்த குணம். அந்த மொழியோடு கலந்திருப்பது எங்கள் ரத்தம். ஆகவே, எனக்கு மட்டும் நகைச்சுவை எங்கிருந்து போய்விடும்? உயிர் வாழ்வதற்கு, மன்னவா, சிரித்து மகிழ்ந்து வாழ நகைச்சுவை தேவை. அதில்லாமல் இந்த உயிர் எதற்கு?”

“நகைச்சுவைக்கும் இடம் உண்டல்லவா?”

“ஆம் மன்னவா!”

“இது தகுந்த இடமா?”

“ஆம் மகாராஜா! இங்கு அதைப் பேசியதால் தான் தர்க்கம் வளர்ந்தது. கொஞ்சம் நிதானத்துக்கு வந்திருக்கிறீர்கள். மகாராஜா! யோசனை சொல்லுகிறவர்களுக்கு மோட்சம் கொடுத்துப் பயனில்லை. அப்படியானால் உங்கள் மந்திரிகளையெல்லாம் நீங்கள் வெட்டிச் சாய்க்க வேண்டியதுதான். அரசனுக்கு யோசனை சொல்லத்தக்க மந்திரிகள் தேவை என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.”

“இருக்கலாம். ஆனால், நீ மந்திரியா?” என்று இரைந்தான் ஜெயசிம்மன்.

“இல்லை மன்னவா. உங்கள் ஒற்றன். உங்களைக் காப்பாற்றுவதில் அக்கறையுள்ளவன்!” என்றான் கரிகாலன்.

ஜெயசிம்ம சாளுக்கியன் கண்கள் மீண்டும் அவனை ஆராய்ந்தன. மன்னன் முகத்தில் கோபம் மறைந்து இகழ்ச்சிக்குறி உதயமாயிற்று.

“என்னிடம் அவ்வளவு அக்கறையா உனக்கு?” என்று வினவினான் ஜெயசிம்மன்.

“ஆம் மன்னவா! தங்களுக்குப் பணி புரிய ஒப்புக் கொண்டு விட்டேன். அதை அறிவுடனும் ஆற்றலுடனும் ஒப்பேற்ற வேண்டியது என் கடமை.”

“இப்பொழுது என்னதான் செய்ய வேண்டுமென்கிறாய்?”

“இந்தக் கொலைத் திட்டத்தைப்பற்றி நீங்கள் அரிஞ்சய னிடம் பேசக்கூடாது; அவனுக்கு எந்தவிதத் தீங்கையும் விளைவிக்கக்கூடாது. கோபமிருப்பதாகக் கூடக் காட்டி விடாதீர்கள்.”

“ஏன்?”

“எதிரிகள் தங்களைக் கொலை செய்யத் திட்டமிட்டி ருக்கிறார்கள் என்ற தகவல்தான் இதுவரை தெரியும். அந்தத் திட்டத்தை எப்படி வகுத்திருக்கிறார்கள், எப்படி நிறைவேற்றப் போகிறார்கள் என்கிற விவரங்கள் தெரியாது. அதை நமக்குச் சம்பாதித்துக் கொடுக்கக்கூடியவன் அரிஞ்சயன் ஒருவன் தான். அவனிடம்தான் சதிகாரர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. என்னிடம் நம்பிக்கை இல்லை.”

“உன்னிடம் நம்பிக்கை இல்லையா?”

“இல்லை! என்னை ஆண்டவனிடம் அனுப்பிவிடக் கூட ஏற்பாடு நடந்தது. அரிஞ்சயன் என்னைத் தப்பு வித்திராவிட்டால், உங்களிடம் இங்கு பேசும் வாய்ப்புக் கிடைத்திருக்காது. உங்களுக்குப் பதில் எமனிடம் பேசிக் கொண்டிருப்பேன்” என்றான் கரிகாலன்.

ஜெயசிம்ம சாளுக்கியன் அடியோடு குழம்பிப் போனான். ‘வாழ்க்கையில் என்றுமே குழம்பாத என்னைக் குழப்பிக் குட்டிச்சுவராக அடிக்க அந்தத் தமிழன் எங்கிருந்து வந்தான்?’ என்று மனத்துக்குள்ளேயே கரிகாலனைச் சபித்துவிட்டு, “நாம் மேற்கொண்டு செய்ய வேண்டியது என்ன?” என்று வினவினான்.

“மன்னவா! தங்களை எப்படிக் கொல்லச் சதிகாரர்கள் யோசித்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க வேண்டும். சாப்பாட்டில் விஷம் வைத்துக் கொல்லப் போகிறார்களா? அல்லது நீங்கள் பவனி வரும்போது அம்பெய்து கொல்ல உத்தேசமா? அல்லது தனியாக வேங்கி நாட்டு வீரர்களைத் திரட்டிச் சமயம் பார்த்து உங்களைப் பிடித்து வெட்டிவிட உத்தேசமா? இவற்றில் எந்த முறையைக் கையாள உத்தே சித்திருக்கிறார்கள் என்பது தெரிய வேண்டும்” என்ற கரிகாலன் வார்த்தைகள், ஜெயசிம்ம சாளுக்கியன் மனத்தில் சுருக்கு சுருக்கென்று பாய்ந்தன. மரணத்தின் மார்க்கங்களைக் கரிகாலன் விவரிக்க விவரிக்க, ஜெயசிம்மன் முகம் பெரிதும் விகாரமடைந்து வந்தது.

இந்தச் சனியன் பிடித்த தமிழன் கிளப்பிவிட்ட இந்தச் சந்தேகங்களால், இனிமேல் தான் சரியாகச் சாப்பிடவோ உறங்கவோ முடியாதென்பதை அறிந்த ஜெயசிம்மன் மனத்தில் கோபம் உக்கிரமாகப் பொங்கி எழுந்தாலும், அதை அதிகமாக வெளியில் காட்டாமல் மௌனமாகவே இருந்தான். மன்னன் மனத்தே எழுந்த பயங்கர அலைகளை அவன் முகபாவத்திலிருந்து விநாடி நேரத்தில் ஊகித்துக்கொண்ட கரிகாலன், உள்ளுக்குள் நகைத்துக் கொண்டாலும், முகத்தில் கவலைக்குறியே அதிகமாகத் தெரியும்படி பாசாங்கு செய்து கொண்டு, “மன்னவா! நான் இருக்கும் வரையில் நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். இந்த அரிஞ்சயனை ஆயுதமாக உபயோகித்துச் சதி காரர்கள் திட்டத்தைப் பூரணமாக உடைத்து, அவர்களை உங்களிடம் ஒப்படைக்கிறேன். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதும் ஒன்றிருக்கிறது” என்றான்.

என்ன செய்ய வேண்டும்?”

“நான் சொல்கிறபடி நடக்குமாறு அரிஞ்சயனிடம் சொல்ல வேண்டும். நான் எதைச் சொன்னாலும், அவன் உங்கள் ஆணையாகப் பாவிக்க வேண்டும்.”

ஜெயசிம்ம சாளுக்கியன் ஒரு விநாடி யோசித்துவிட்டுச் சந்தேகம் ததும்பும் கண்களுடன் கரிகாலனை நோக்கினான். கடைசியாக ஏதோ தீர்மானித்துக் கொண்டு கோட்டையின் ரகசியப் பெருங்கதவை நோக்கி விடுவிடு என்று கரிகாலன் பின்தொடர நடந்தான்.
கதவை ஜெயசிம்மன் நாடும் காரணத்தை அறிந்து கொண்ட கரிகாலன், மன்னனுக்கு முன்பாக ஓடி அக்கதவின் பெரும் தாழ்களை மிகச் சிரமப்பட்டு அகற்றிக் கதவையும் திறந்துவிட்டான். கதவு திறந்ததும், “கரிகாலா!” என்று அழைத்துக்கொண்டு, உள்ளே ஓடிவந்த அரிஞ்சயன், கரிகாலனுடன் மன்னனும் இருப்பதைப் பார்த்து, ஒரு கணம் அசைவற்று நின்றான். பிறகு மிரள மிரள விழித்தான்.

கரிகாலன் தன்னை நாடி வருவான் என்று அரிஞ்சயன் நினைத்தானேயொழிய, மன்னனும் வருவானென்று நிக்ைகாததாலேயே அரிஞ்சயனுக்கு அத்தனை கலவரம் ஏற்பட்டது. ஆனால், கரிகாலன் செய்த மித்திரபேதத்தில் கலைந்து கிடந்த ஜெயசிம்மன் உள்ளத்தில், அரிஞ்சயனுடைய குற்றமுள்ள நெஞ்சுதான் முகத்திலுள்ள குழப்பத்துக்குக் காரணமென்று தீர்மானித்த ஜெயசிம்மன், அந்த அபிப்பிராயத்தை வெளியில் காட்டாமல், “அரிஞ்சயா! கரிகாலன் அனைத்தும் சொன்னான். நீ செய்யும் சேவை மகத்தானது. அதற்கும் பரிசில்லாமல் போகாது” என்று இதழ்களில் புன்முறுவல் அரும்பக் கூறினான்.

“அது தெரிந்ததுதானே மகாராஜா” என்று பதில் இறுத்தான் அரிஞ்சயன்.

“அரிஞ்சயா! மேற்கொண்டு செய்ய வேண்டியது என்னவென்பதைக் கரிகாலனிடம் சொல்லியிருக்கிறேன்: கேட்டுக்கொள். அவன் சொல்வதை என் ஆணையென்று நினைத்து நட; புரிகிறதா?” என்றான் மன்னன்.

உண்மையில் அரிஞ்சயனுக்கு எதுவும் புரியவில்லை. ஆச்சரியத்தால் அவன் கண்கள் மலர்ந்து, ஜெயசிம்மனையும் கரிகாலனையும் மாறி மாறி நோக்கின. நேற்று வந்த இவன், மன்னனுடைய நம்பிக்கைக்கு இத்தனை தூரம் எப்படிப் பாத்திரமானான்? என்று உள்ளுக்குள்ளேயே யோசித்தான். இருப்பினும், அதை ஆமோதிக்கும் முறையில் மன்னனுக்குத் தலைவணங்கினான். ஜெயசிம்மன் மேற்கொண்டு எதுவும் பேசாமலும் ஆழ்ந்த யோசனையுடனும் அரண்மனையை நோக்கி மெள்ள நடந்தான். அவன் போவதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலன், கதவை நோக்கித் திரும்பி, ‘அரிஞ்சயா! வா போகலாம்” என்று அழைத்தான்.

மன்னன் போக்கைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்த அரிஞ்சயன் கரிகாலனை நோக்கி, “எங்கு போக வேண்டும்?” என்று வினவினான்.

“வா சொல்கிறேன். முதலில் கதவை மூடுவோம்” என்று சொல்லிவிட்டு, அந்தப் பெருங்கதவின் தாழ்களை மீண்டும் போட்டான். பிறகு தாழ்கள் இருந்த இடத்திலிருந்து தரையில் குதித்து, “அரிஞ்சயா! அரண்மனை எனக்கு அதிகமாகப் பழக்கமில்லை. குதிரைக் கொட்டடி எங்கே இருக்கிறது?” என்று கேட்டான்.

“எதற்கு?”

“இரண்டு புரவிகள் வேண்டும். உனக்கும் எனக்கும்.”

“இந்த நேரத்திலா?”

“ஆமாம்.”
“எங்கு போக?”

“சொல்கிறேன். முதலில் புரவிகளை வாங்கிக்கொள் வோம்” என்றான் கரிகாலன்.

அரிஞ்சயன் பதிலேதும் பேசாமல் நடந்து, அரண் மனையிலிருந்து சிறிது தூரத்திலிருந்த குதிரைக் கொட்ட டிக்குக் கரிகாலனை அழைத்துச் சென்றான். அங்கெல்லாம் அரிஞ்சயன் வாக்கு அரச கட்டளையாயிருந்தது. இரண்டு புரவிகளுக்குச் சேணம் போட்டு ஏறிக்கொண்டு, வேங்கி நாட்டுத் தலைநகர வீதிகளில் மிக மெதுவாகச் சென்ற அவ்விருவரும் ஊர் எல்லையைக் கடக்கும் வரையில் பேசவேயில்லை. ஊரின் எல்லையைக் கடந்ததும், விண்ணை ஒருமுறை நோக்கிய கரிகாலன், நட்சத்திரங்களைப் பார்த்து மேற்குத் திக்கில் குதிரையைத் திருப்பினான்.

“எதற்கு இந்தப் பக்கம் போகிறோம்?” என்று சந்தேகத் துடன் கேட்டான் அரிஞ்சயன்.

“அரசர் கட்டளையை நிறைவேற்ற.”

“எங்கே போகிறோம்?”

“மேலைச் சாளுக்கிய நாட்டிற்கு.”

“அங்கு ஏன் போக வேண்டும்?”

“என்னைக் கேள்விகள் கேட்காதே. அரசர் ஆணைப் படி நட.”
“அப்படி என்னிடம் சொல்லக்கூடாத ரகசியமா அது?”

இந்தக் கேள்வியைக் கேட்டதும், கரிகாலன் ஒரு விநாடி யோசித்தான். பிறகு சுற்றுமுற்றும் நோக்கிவிட்டு, “அரிஞ்சயா! இப்படி வா” என்று அவனை அருகில் அழைத்துக் காதுக்கருகே ரகசியமாக எதையோ சொன்னான். அதைக் கேட்ட அரிஞ்சயன் கண்கள் மிதமிஞ்சிய ஆச்சரியத்தால் மலர்ந்தன. “மன்னர் யோசனை முதல் தரமானது கரிகாலா! இதை ஏன் அவர் என்னிடம் சொல்லவில்லை?” என்று வினவினான்.

“என்னையே சொல்லச் சொன்னார். அரிஞ்சையா! உன்னிடம் மன்னர் எத்தனை நம்பிக்கை வைத்திருக்கிறார் தெரியுமா?” என்று பதில் சொன்னான் கரிகாலன். “சரி, வா செல்வோம்” என்று குதிரையை நடத்தினான். அதற்கு மேல் பதிலேதும் பேசாமல் அரிஞ்சயனும் குதிரையைத் தட்டிவிட்டான். கரிகாலன் தன் காதில் சொன்ன அந்த மந்திரச் சொற்கள் அரிஞ்சயனது அவநம்பிக்கையை அடியோடு உடைத்தெறிந்து விட்டதால் சொல்லவொண்ணா மகிழ்ச்சி அவன் முகத்திலே தாண்டவமாடத் தொடங்கியது. அவன் முகபாவத்தைப் பார்க்காதது போல் பக்க வாட்டில் பார்த்த கரிகாலன், இப்படியும் ஒரு முட்டாள் உலகத்தில் இருக்கிறானே!’ என்று உள்ளூர நகைத்துக் கொண்டான்.

Previous articleMannan Magal Part 1 Ch 24 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here