Home Historical Novel Mannan Magal Part 1 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

97
0
Mannan Magal Ch 26 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 26 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 26 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 26 வளையல் கரமும் வாள்வீச்சும்

Mannan Magal Part 1 Ch 26 | Mannan Magal | TamilNovel.in

காதோடு காதாக கரிகாலன் ஓதிவிட்ட மந்திரச் சொற்களால் அவநம்பிக்கை அடியோடு உடைந்து விட்டாலும், அத்தனை பெரிய அலுவலை அரசர் தன்னிடம் ஒப்படைத்து விட்டாரே என்பதால், மிகுந்த மனத்தாங்கலை அடைந்த அரிஞ்சயன், பொழுது விடிந்த பிறகும்கூட மௌனமாகவே தன் குதிரையை நடத்திச் சென்றான். அவன் மனத்திலோடிய எண்ணங்களைப் பூரணமாக அறிந்து கொண்ட கரிகாலனும், அவனுடன் பேச்சுக் கொடுக்காமல் தன் சுயசிந்தனைகளில் மனத்தை அலைய விட்டு மௌனமாகவே பிரயாணம் செய்தான். ஆனால் இருவர் மௌனமும் கதிரவன் உதித்த சிறிது நேரம் வரைக்குமே நிலைத்தது. வேங்கி நாட்டு அரசியல் சிக்கல்களைப் பற்றிப் பலவிதமாக அலசிக்கொண்டு வந்த அரிஞ்சயன் மனத்தில், அரசர் திட்டம் ஒழுங்கானதுதானா என்ற சந்தேகம் சற்று ஏற்படவே, தனது மௌன விரதத்தைக் கலைத்துக் கரிகாலனை நோக்கி, “கரிகாலா! அரசர் உன்னிடம் சொல்லியுள்ள திட்டம் முதல் தர மானதுதான். ஆனால் அது அவ்வளவு சுலபமாக நிறை வேறக்கூடியதா?” என்று விசாரித்தான்.

“அதைப்பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும், அரிஞ்சயா? அரசர் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை மேலைச்சாளுக்கிய நாட்டிலிருந்து அழைத்துவர உத்தர விட்டிருக்கிறார். அதைச் செய்து முடித்தவுடன் நமது கடமை தீர்ந்துவிட்டது. மேற்கொண்டு காரியத்தைச் சாதிக்க வேண்டியது மன்னர் பொறுப்பு” என்றான் கரிகாலன்.

“விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை அரியணையில் ஏற்றிவிட்டால், மக்கள் சும்மாயிருப்பார்களா கரிகாலா?” என்று மீண்டும் வினவினான் அரிஞ்சயன்.

“மன்னர் அப்படித்தான் நினைக்கிறார். நினைப்பதில் தவறுமில்லை. இராஜராஜ நரேந்திரன் பலமில்லாதவன்; வாள்போரிலும் அதிகப் பரிச்சயமில்லாதவன்; மாதர்கள் உறவிலேயே காலத்தைக் கழிப்பவன் என்றும் பெயர் இருக்கிறது. ஆனால் இராஜராஜ நரேந்திரனின் ஒன்று விட்ட தம்பியும் சாளுக்கிய ரத்த ஓட்டம் உடலில் பூரணமாக உள்ளவனுமான விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன் பெரிய வீரன் என்று பிரசித்தி பெற்றவன். வாள் போரில் நிகரற்றவன். மாசுமறு இல்லாத நடத்தை உள்ளவனென்று பெயர் வாங்கியவன். இவர்கள் இருவரில் யாரை. மக்கள் விரும்புவார்கள்? கண்டிப்பாய், சாளுக்கியர் இளவலைத் தான்” என்று கரிகாலன் பதில் சொன்னான்.

“தவறு கரிகாலா! இடையில் ஒரு முக்கிய விஷயத்தை நீ மறந்துவிட்டாய்” என்று அரிஞ்சயன் குதிரை ஓட்டத்தைச் சற்று தளர்த்திக் கரிகாலனை ஏறெடுத்துப் பார்த்தான்.

அரிஞ்சயன் எதைக் குறிப்பிடுகிறானென்பதைக் கரிகாலன் உணர்ந்து கொண்டிருந்தாலும் அதை வெளியில் காட்டாமல், “என்ன அத்தனை முக்கிய விஷயம் அரிஞ்சயா?” என்று கேட்டான்.

“மன்னன் மகளைப்பற்றி நீயும் மறந்துவிட்டாய். மன்னரும் மறந்துவிட்டார்.”

“யார் நிரஞ்சனாதேவியா?”

“ஆம்.”

“இதில் அவர்கள் என்ன செய்ய முடியும்?”

“நீயும் மன்னரும் நினைப்பதுபோல் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை வேங்கி நாட்டு அரியணையில் உட்கார வைப்பது சுலபமென்றால், இத்தனை நாள் நான் அதை ஏன் செய்யவில்லை?”

“ஏன்?”

“நிரஞ்சனாதேவியிடம் மக்களுக்குள்ள எல்லையற்ற அன்புதான் அதற்குப் பெருந்தடையாயிருந்திருக்கிறது. அவள் கரம் இன்னும் இராஜராஜ நரேந்திரனைக் காத்து நிற்கிறது. நாளையே அவள், மக்கள் முன்பாக வந்து ஜெய சிம்ம சாளுக்கியன் வேங்கி நாட்டு அரியணையில் தன் கைப்பொம்மையை அமர்த்தச் சூழ்ச்சி செய்கிறான் என்பதைச் சொன்னால் மக்கள் அவளைத்தான் நம்புவார்கள். பிறகு மக்கள் எழுச்சி நிச்சயம்! அந்த நிலைமை ஏற்படாமலிருக்கத்தான், மன்னர் நிரஞ்சனாதேவியின் சதித் திட்டத்தை அம்பலமாக்கி மக்களிடம் அவளுக்குள்ள செல்வாக்கை உடைக்கப் பார்க்கிறார்?”

“அப்படியா விஷயம்?” என்று ஏதுமறியாதது போல் கேட்டான் கரிகாலன்.

“ஆம் கரிகாலா! ஜெயசிம்மன் திட்டத்தில் மூன்று படிகளுண்டு. இராஜராஜ நரேந்திரனை உபயோகமற்றவனாக அடிப்பது திட்டத்தின் முதல்படி; அது நிறைவேறி விட்டது. விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனைப் பெரிய வீரனாக்குவது இரண்டாவது படி; அந்தப் படியையும் தாண்டிவிட்டோம். ஜனங்கள் தெய்வம் போல் பாவிக்கும் நிரஞ்சனாதேவியை மிகக் கேவலமான சதிகாரியென்றும் கொலைகாரியென்றும் நிரூபித்து, மக்கள் அவளை வெறுக்கும்படிச் செய்வது மூன்றாவது படி; அதை ஜெயசிம்மன் இன்னும் தாண்டவில்லை. அதைத் தாண்டாதவரையில் மேலைச்சாளுக்கியர்கள் ஆதிக்கம் வேங்கி நாட்டில் ஏற்படவே முடியாது. அப்படியிருக்க, மன்னர் திடீரென்று விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை ஏன் வரவழைத்து முடிசூட்ட இஷ்டப்படுகிறார்?” என்று கவலை தோய்ந்த குரலில் கேட்டான் அரிஞ்சயன்.

“மன்னன் மகள் சதியில் ஈடுபட்டுள்ளதற்கு அத்தாட்சி உன்னிடமில்லையா அரிஞ்சயா?” என்று வினவினான் கரிகாலன்.

“இன்னும் பூரணமாக இல்லை. வேங்கி நாட்டுப் படைத்தலைவர்களைச் சதியில் சேர்க்க எனக்கு அனுமதி யளித்து, ஓலை எழுதிக் கொடுக்கும்படி அவளைக் கேட்டேன். அவள் கொடுக்கவில்லை. கொடுத்தால் அதை அத்தாட்சியாக வைத்துக்கொண்டு பிரும்ம மாராயன் முதலானவர்களையும் விசாரணைக்குக் கொண்டுவந்து, நிரஞ்சனாதேவியின் முகத்தில் கரியைப் பூசிவிடலாமென்று தான் திட்டம் போட்டேன். ஆனால், திட்டம் பூர்த்தியாகு முன்புதான் அரசர் இப்படிக் கட்டளையிட்டுவிட்டாரே!” என்றான் அரிஞ்சயன்.

கரிகாலன் மேற்கொண்டு சம்பாஷணையை வளர்த்த இஷ்டப்படாததால், “இதெல்லாம் பெரிய ராஜதந்திர மாயிருக்கிறது அரிஞ்சயா! இதில் எனக்குப் பழக்கமேது? எது எப்படியாவது போகட்டும்; அரசர் கட்டளையை நாம் நிறைவேற்றுவோம்” என்று ஒருவிதமாகச் சம்பா ஷணையை முடித்துவிட்டுக் கரிகாலன் தன் எண்ணங்களை எங்கெங்கோ பறக்கவிட்டான்.

உண்மையில் ஜெயசிம்ம சாளுக்கியன் தங்களை மேலைச் சாளுக்கிய நாட்டுக்குப் போகச் சொல்லவில்லை என்பதையும் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை அழைத்து வரச் சொன்னதும் முழுப் பொய்யென்பதையும் அரிஞ்சயன் அறிந்தால், விவகாரம் எத்தனை விபரீதத்தில் போய் முடியும் என்பதை எண்ணிப் பார்த்த கரிகாலன், உள்ளுக்குள்ளேயே நகைத்துக் கொண்டான். ஜெயசிம்ம சாளுக்கியனும் அரிஞ்சயனும் விரித்த அபாய அரசியல் வலையிலிருந்து அரசகுமாரியைத் தான் காப்பாற்றிவிட்டதை நினைத்ததால் எல்லையற்ற ஆனந்தமும் அவன் உடலில் ஊடுருவிச் சென்றது. அப்படி அரசகுமாரியைத் தான் காப்பாற்றியிருந்தாலும், தான் திடீரென வேங்கி நாட்டிலிருந்து மறைந்துவிட்டதால், தன்மீது அரசகுமாரி என்ன அபிப்பிராயம் கொள்ளுவாளோ என்ற நினைப்பு அந்த ஆனந்தத்தில் சிறிதளவு துக்கத்தையும் கலந்துவிட்டது. ‘பிரும்ம மாராயனோடு சேர்ந்து சதி செய்து ஜெயசிம்ம சாளுக்கியன் ஆதிக்கத்தை வேங்கி நாட்டில் உடைத்து விடுவேன் என்று என்னை நம்பியிருந்தாளே அரசகுமாரி. அப்பேர்ப்பட்டவள், சொல்லாமல் கொள்ளாமல் ஓடி விட்டானே என்று நினைக்கமாட்டாளா? அந்த நினைப்பு ஏற்படும் போது என்னைச் சதிக்குப் பயந்த பேடியென்று நினைப்பாளோ? ஜெயசிம்மன் கையாளான சுத்த அயோக்கியன் என்று நினைப்பாளோ?” என்றெல்லாம் யோசித்த கரிகாலன், ‘இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்; அரசகுமாரிக்கு என் கடமையைச் செய்கிறேன்’ என்று தன்னைத்தானே தேற்றிக்கொண்டான்.

அந்தக் கடமை எங்கிருந்து எழுந்தது? அபலையான ஒரு பெண்ணின் அபாய நிலையினால் ஏற்பட்ட அநுதாபத்திலிருந்தா? அல்லது சதா துயரம் தோய்ந்து நின்ற அவள் அம்புஜ விழிகளிலிருந்தா? இந்தக் கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்லக் கரிகாலன் மனம் மறுத்தது. அவனை எப்படியோ சொக்கி மயங்கச் செய்துவிட்ட அரசமகளின் சொர்ணபிம்பம் இந்தக் கடமையைத் தூண்டிவிட்டதென்பதுதான் உண்மை. ஆனால் கரிகாலன் மனம் உண்மையை மறுத்தே பேசியது. ‘இல்லை, இல்லை! அவள் அழகின் மயக்கமல்ல கடமையைத் தூண்டியது; நிர்க்கதியிலிருக்கும் ஓர் அபலைக்கு வீரன் செய்ய வேண்டிய கடமையையே நான் செய்கிறேன்’ என்று கரிகாலன் தனக்குள்ளே சொல்லிக் கொண்டாலும், அவன் சித்தமென்னவோ அந்தச் சித்தினிப் பெண்ணின் சிற்றிடையையும் மாம்பழக் கன்னங்களையும், அவற்றையும் தோற்கடிக்கும் இதர கவர்ச்சிப் பிரதேசங்களையும் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அடுத்த இரண்டு நாள் பயணத்திற்குள்ளாக, அரசகுமாரியின் உருவம் தத்ரூபமாக அழிக்க முடியாதபடி தன் இதயத்தில் பதிவாகிவிட்டதென்பதைக் கரிகாலன் உணர்ந்து கொண்டான். அந்த உணர்ச்சியால் ஏற்பட்ட இன்ப அலைகள் உடலெங்கும் மோத, பயணத்தைச் சிறிதும் களைப்பின்றிச் செய்தான்.

மேற்குச் சாளுக்கிய நாட்டெல்லையைப் பற்றிய விவரங்கள் கரிகாலனுக்கு நிச்சயமாகத் தெரியாவிட்டாலும், சூடாமணி விஹாரத்தில் தான் கற்ற சரித்திரப் பாடங்களைக் கொண்டே அந்த எல்லையையும் போக வேண்டிய திசையையும் ஒருவிதமாக ஊகித்துக் கொண்டு, கிருஷ்ணா நதியின் கரையோரமாக, மேற்கு நோக்கிப் பயணம் செய்தான். மேற்கே செல்லச் செல்லக் கிருஷ்ணாவின் இடை குறுகி மெலிந்தாலும், பயணம் செய்த பிராந்தியங்கள் மிகத் தெய்வீகமாகக் காட்சி அளித்தன. சில இடங்களில் சாலை வெட்டும் பாறைகள், மற்றும் சில இடங்களில் கண்ணுக்கெட்டும் தூரம் பெரிய சமவெளி. இப்படிப் பலவிதமாகக் கண்ணுக்கு விருந்தளித்த தக்ஷிணத்துப் பீடபூமியில் பிரயாணம் செய்த கரிகாலனும் அரிஞ்சயனும் சரித்திரப் பிரசித்தி பெற்ற கூடல் சங்க மத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.

புண்ணிய நதிகளான துங்கபத்ராவும் கிருஷ்ணாவும் ஒன்று கூடும் இடந்தான் கூடல் சங்கமம். கூடல் என்றாலும் இணைவதுதான். சங்கமம் என்றாலும் இணைவது தான். ஒன்று வடமொழி. இன்னொன்று தமிழ் மொழி. ஆனால் இரண்டு புண்ணிய நதிகள் கலப்பது போலவே இரண்டு தெய்வீக மொழிகளும் கலந்து, அந்த இடத்துக்குக் கூடல் சங்கமம் என்ற பெயர் உலவலாயிற்று.

பிற்காலத்தில் வீரராஜேந்திர சோழன் சாளுக்கியர்களை முறியடித்த அந்தக் கூடல் சங்கமத்தில் கிருஷ்ணா சற்று வடமேற்காகப் பிரிந்துவிட்டதால் துங்கபத்ராவின் கரைமேல் நின்று வெகுநேரம் அந்த இணைப்பைப் பார்த்து பிரமித்து நின்றான் கரிகாலன். அப்பொழுது சூரியன் மலைவாயிலில் விழும் நேரம். துங்கபத்ராவின் தெள்ளிய நீர் கிருஷ்ணாவின் கலங்கிய செந்நீரில் இணைந்தாலும், அவற்றின் மீது கதிரவன் தங்கநிறப் பாளங்கள் பாய்ந்து மின்னியதாலும் ஏற்பட்ட இந்திர ஜாலத்தைக் கண்டு அதிசயித்து நின்ற கரிகாலனை நோக்கிய அரிஞ்சயன், “கரிகாலா! நேரமாகிறது. மேலைச் சாளுக்கிய நாட்டுக்குப் போகவேண்டுமானால், நாம் சற்று மேற்கே சென்று, துங்கபத்ராவைப் படகின் மூலம் தாண்ட வேண்டும்” என்றான்.

கரிகாலன் சற்று நேரம் ஏதோ யோசித்துவிட்டு, “அரிஞ்சயா! இன்று இனிமேல் பயணம் செய்ய என்னால் முடியாது. இங்கு பக்கத்து ஊரில் சத்திரம் இருந்தால் தங்குவோம்” என்றான்.

“இங்கு பக்கத்தில் ஊர் கிடையாது. அதோ, அந்தக் காடு தெரிகிறது பார். அது சாளுக்கிய அரச குடும்பத்தினர் வேட்டையாடும் இடம். அதற்கு அருகில் அரச குடும்பத்தினர் தங்க ஒரு சத்திரம் உண்டு. அதில் நம்மைத் தங்க அனுமதிக்கமாட்டார்கள்” என்றான் அரிஞ்சயன், சற்றுத் தூரத்திலிருந்த ஒரு காட்டைச் சுட்டிக்காட்டி.

“ஜெயசிம்ம சாளுக்கியனுடைய ஊழியர்களுக்கு இட மில்லை என்று யார் சொல்ல முடியும்? வா அரிஞ்சயா!” என்று அவனை அழைத்துக்கொண்டு, அந்தக் காட்டின் முகப்பிலிருந்த சத்திரத்துக்குச் சென்றான் கரிகாலன்.

கரிகாலன் ஊகம் சரியாகவே இருந்தது. ஜெயசிம்மன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சத்திரக்காரன் நடுங்கினான். கீழேயிருந்த அறைகளில் நல்ல அறையொன்றும் அவர்களுக்கு ஒழித்துவிடப்பட்டது. குதிரைகளைக் கவனிக்கச் சத்திரக்காரன் சகல ஏற்பாடுகளையும் செய்தான். நன்றாக நீராடி உணவருந்திய கரிகாலன், சத்திரத்து நடுமுற்றத்தை அடுத்திருந்த கூடத்திலிருந்த மஞ்சத்தில் உட்கார்ந்துகொண்டு, “அரிஞ்சயா! இத்தனை நாளைக்குப் பின் நாம் இன்று நிம்மதியாகத் தூங்கலாம்” என்று சொல்லிவிட்டு மஞ்சத்தில் படுத்துக் கொண்டான். அரிஞ்சயனும் பக்கத்திலிருந்த அறைக்குச் சென்று சயனித்துக் கொண்டான்.

இரவு மெள்ள மெள்ள ஏறத் தொடங்கியது. எங்கும் அமைதி நிலவத் தொடங்கியது. ஆனால் வேங்கி நாட்டிலிருந்து பல காதங்களுக்கு அப்பாலிருந்த அந்தச் சத்திரத்திலும் கரிகாலனுக்கு நிம்மதி கிடைக்கவில்லை. கரிகாலன் படுத்து உறங்கிய சில நாழிகைகளுக்கெல்லாம், மாடியிலிருந்து நாலைந்து பேர் தடதடவென்று இறங்கி முற்றத்துக்காக வந்து வெளியே செல்ல முயன்றனர். வெளியேயிருந்து மிகுந்த வேகத்துடன் பத்துப் பதினைந்து பேர் உள்ளே நுழைந்து அவர்களை வழிமறித்தார்கள்.

“விலகி நில். இல்லையேல் வெட்டிப் போடுவேன்!” என்ற ஒரு குரலைக் கேட்டுத் திடுக்கிட்ட கரிகாலன் கூடத்துத் தூண்களில் மறைந்தவண்ணம் முற்றத்தருகில் வந்தான். அங்கே கண்ட காட்சி அவனைத் திக்பிரமை யடையச் செய்தது. இரண்டு வாள்கள் சரேலென்று மோதின. ஒரு வாளைப் பிடித்திருந்த கையில் வளையல்கள் பல கலகலவென் ஒலித்து அமிருதகீதம் பொழிந்தன. மெல்லிய அந்தப் பெண் கரத்தில் வீரர்களையும் நடுங்கச் செய்யும் வேகமிருந்ததையும், எதிராளியின் வாள் அவள் வாளின் உராய்விலிருந்து தப்ப முடியாமல் திணறு வதையும் கண்ட கரிகாலன், ஆச்சரியத்தால் அடியோடு செயலற்று நின்றான்.

Previous articleMannan Magal Part 1 Ch 25 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here