Home Historical Novel Mannan Magal Part 1 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

129
0
Mannan Magal Ch 28 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 28 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 28 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 28 செங்கமலச் செல்வி

Mannan Magal Part 1 Ch 28 | Mannan Magal | TamilNovel.in

அரச பரம்பரையினர் வேட்டையாடுவதற்காக மேலைச் சாளுக்கிய மன்னர்கள் துங்கபத்ராவின் காட்டு முகப்பிலே கட்டிவைத்த அந்த வேட்டுவ மாளிகையின் மாடியறையிலே, முதன்முதலாக அந்தக் கட்டழகியைக் கண்ணெடுத்து ஆராய்ந்த கரிகாலனின் மனம் படாதபாடு பட ஆரம்பித்தது. அவள் ஒரு காலை எடுத்துக் கட்டிலின் மேல் ஊன்றி, முழங்காலுக்குக் கீழும் கணுக்காலுக்கு மேலும் கட்டப்பட்டிருந்த மான் தோல் கச்சையை அவிழ்க்க முற்பட்டுக் குனிந்து நின்றிருந்ததால், அவள் உடல் வானவில்லைப் போல் வளைந்திருந்தது. ‘ஆனால் சிறு தூற்றல் ஏற்படும்போது சூரியக் கிரணங்களால் உதயமாகும் அந்த வானவில்லில் இத்தனை வர்ணஜாலங்கள் எங்கேயிருக்கின்றன’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்ட கரிகாலன், ‘ஒருகாலும் இல்லை’ என்ற முடிவுக்கே வந்தான். தான் உள்ளே வந்த சத்தம் கேட்டுத் திடீரெனத் திரும்பிப் பார்த்ததால், அவள் விழிகளில் தெரிந்த பிரகாசத்தில் ஓர் இம்மிகூட வானவில்லில் என்ன, இயற்கையின் எந்தச் சிருஷ்யிலும் இருக்க முடியாது என்று கரிகாலன் நினைத்தான்.

கட்டிலின் மேல் வைத்த ஒற்றைக்காலை எடுக்காமலே, அவள் அவனைப் பக்கவாட்டில் பார்த்தபடியாலும் அறையின் தூங்காவிளக்கு, சற்று அவளைத் தள்ளியே தொங்கிக் கொண்டிருந்தபடியாலும், விளக்கின் வெளிச்சம் அவள் முகத்தின் ஒரு பாகத்தில் மட்டும் அடித்தது காரணமாக, ஏதோ செடிகளில் மறைந்து ஒளிந்து விளையாடி ஒரு பாதி முகத்தைக் காட்டும் வனமோகினி போல் விளங்கினாள் அந்தக் கட்டழகி. செண்பகப்பூவின் மஞ்சள் நிறத்தையே தோற்கடிக்கவல்ல அவளுடைய கன்னத்தைத் தடவிய விளக்கொளிகூட அந்தக் கன்னத் தின் மினுமினுப்புக்கு முன்னால் பளபளக்கமாட்டாமல் சற்று மங்கியே கிடந்ததாகத் தோன்றியது கரிகாலனுக்கு. கருமை பாய்ந்த இமைகளாலும் இமைகளுடன் இணைந்து நின்ற சின்னஞ்சிறு பட்டுச் சருமக் குழிகளாலும் பாது காக்கப்பட்ட அவளுக்கு இரு விசால விழிகளும் சிப்பியால் பாதுகாக்கப்பட்ட பாண்டி நாட்டின் பெரு முத்துக்களைப் போல் பளபளப்பதைக் கண்ட கரிகாலன், முத்தினிடையே கரும்புள்ளி இருந்தால் குறைபாடு என்று சொல்வார்களே, அது என்ன முட்டாள் தனம்! அதோ அவள் இமைக்குள்ளே பதுங்கிக் கிடக்கும் இரண்டு பெரும் முத்துக்கள் எத்தனை அழகாக இருக்கின்றன!’ என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டான். இப்படி ஒரு முறை பார்த்த பார்வையிலேயே அவள் கண்களால் பலவந்தமாக இழுக்கப்பட்ட கரிகாலன் விழிகள், பெரிய சமுத்திரத்தில் விழுந்துவிட்ட துரும்புகள் போல் அவளுடைய சௌந்தரிய சாகரத்தின் சுழல்களில் சிக்குண்டும் அலைகளால் தூக்கி எறியப்பட்டும் திணறின.

அவள் விசாலமான நெற்றியில் இட்டிருந்த திலகம் வேட்டையாடிய காரணமாகச் சிறிது அழிந்து கிடந்தாலும் அதிலும் ஒரு தனிச்சிறப்பு இருந்ததையும், அது அழிந்து சற்றுக் கீழே இறங்கியிருந்த வகையே முகத்துக்கு இணையற்ற கம்பீரத்தைக் கொடுக்க முற்பட்டதையும் கண்டான் கரிகாலன். அந்த நெற்றிக்கு மேலே அவள் எடுத்துக் கட்டியிருந்த கார்மேகக் குழல் தன்னை வளைந்து நின்ற கதம்ப மலர்ச் சரத்தைப் பல இடங்களில் ஊடுருவி உதிரி உதிரியாகத் தொங்கிக் கொண்டிருந்ததால், சிவபிரானுடன் நாட்டியமாடிக் களைத்துவிட்ட சக்தியே இந்த உலகத்தில் வந்து குதித்துவிட்டாளோ என்ற பிரமையை ஏற்படுத்தியது. வழவழப்பும் செழுமையும் நிரம்பிய அவள் கன்னங் களின் ஓரங்களைத் தொட்ட வண்ணம், செண்பக மொட்டையும் பழிக்கும் நாசிக்கும் கீழே அமைந்திருந்த செவ்விய உதடுகள் இருக்க வேண்டிய அளவுக்குமேல் கொஞ்சம் பெரிதாயிருந்தபடியாலும் அவற்றின் அசாத்தியச் சிவப்பை அவற்றிலிருந்த நீரோட்டம் இன்னும் அதிகமாகக் காட்டியபடியாலும் இரண்டு உதடுகளும் பிரமாத நீரோட்டமுள்ள கெம்புக் கற்களின் வரிசையைப் போல் பிரகாசிப்பதைக் கரிகாலன் கண்டான்.

உறுதியாக அழகாக் கீழ்நோக்கி இறங்கிய கழுத்தில், அவள் அதிக நகைகளை அணியாமல் ஒரே ஒரு முத்து மாலையை மட்டுமே அணிந்திருந்தாள். அதைக் கண்ணுற்ற கரிகாலன், அவை செய்த பாக்கியத்தை எந்தப் புருஷன் செய்திருக்கிறானோ என்று நினைத்து, அந்த நினைப்பின் காரணமாக ஒரு முறை பெருமூச்சும் விட்டான்.

வளைந்த அவள் உடலின் விலாப்புறத்தில் தெரிந்த அவளுடைய இடையின் உறுதியைக் கவனித்த கரிகாலன் அந்தப் பெண் சதா போர்ப் பயிற்சியிலும் வேட்டையிலும் காலத்தை செலவிட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டதோடு, அத்தனை திண்மையிலும் அந்த இடை மிகவும் குறுகிக் கிடந்ததைப் பார்த்து, ‘நல்ல வேளை! இத்தனை போர்ப் பயிற்சியிலும் பெண்மை குன்றவில்லையே’ என்று சந்தோஷப்பட்டுக் கொண்டான்.

ஆனால், குறுகிப்போன இடையை இயற்கை வேறு இடங்களில் ஈடு செய்திருந்ததையும், இடையை அடுத்து இலங்கிய பிரதேசங்களில் அளவோ அழகோ இம்மியும் குறையாமல் எதேஷ்டமாக மண்டிக் கிடந்ததையும் கண்ட கரிகாலன், இயற்கையைவிடச் சிறந்த வள்ளல் யாரும் இருக்க முடியாது என்று தீர்மானித்துக் கொண்டான்.

இயற்கை செப்பனிடும் எதிலும் மர்மமும் புதைந்து கிடக்கிறது. வெளிப்படையாகச் சிலவற்றையும் மர்மமாகச் சிலவற்றையும் தோற்றுவிக்கின்றன இயற்கையின் காட்சிகள். மேகத்தைச் சிருஷ்டிக்கும் இயற்கை அதன் கருமையைக் கண்ணுக்குக் காட்டுகிறதேயொழிய, அதில் கர்ப்பமாயிருக்கும் நீரைக் கண்ணுக்குத் தோற்றுவிப்பதில்லை. உலகத்தின் சிருஷ்டி எதிலும் தெரிவது பாதி, தெரியாதது பாதி. தெரிந்ததை மட்டும் அறிந்து திருப்தி அடைகிறான் அறிவு குறைந்தவன்; ஆராய்ச்சிக்காரன் தெரியாததிலும் ஊகத்தைச் செலுத்த முற்படுகிறான். அந்த ஊகத்திலும் ஆராய்ச்சியிலும் விளையும் இன்ப துன்பங்கள் அனந்தம். சில ஆராய்ச்சிகளில் துன்பமும் இன்பமா யிருக்கும். இன்பமும் துன்பமாயிருக்கும். இணையற்ற இன்பத்தையும் வேதனையையும் கலந்து தருவது எழில் ஆராய்ச்சி. அதுவும் பெண்ணின் எழிலில் ஓர் ஆண்மகன் ஊகத்தைச் செலுத்தும் போது, எத்தனை மனவேதனைகள்! எத்தனை இன்ப அலைமோதல்! எத்தனை கொந்தளிப்பு! சொல்லுக்கே அடங்காத மகா விசித்திரம் அது!

வேட்டையாடும் யானைகளின் துதிக்கையைப் பழிக்கும் அவள் அழகிய தொடைகளுக்குக் கீழேயிருந்த முழங்காலையும், முழங்காலுக்குக் கீழேயிருந்த ஆடு சதை அமைந்து இறங்கிய மாதிரியையும் கவனித்த கரிகாலன், இவற்றுக்கெல்லாம் கவிகள் சொன்ன உவமை சரியா என்றுகூட யோசித்தான். யானைத் துதிக்கையின் கடினம் எங்கே? இவற்றின் வழவழப்பு எங்கே? கவிகள் எத்தனை குருடர்களாயிருக்கிறார்கள்! என்று கவிகளைக் கண்டிக் கவும் தொடங்கினான். இந்தக் கண்டிப்புடன் ஓடிய கரிகாலன் கண்கள், அவள் இடையில் வரிந்து கட்டப்பட்டிருந்த சேலையைக் கண்டன. மனமோ எதற்காக இவ்வளவு வரிந்து கட்ட வேண்டும்? பூவைவிட மென்மையான இடை கன்றிப் போகாதா?’ என்று கோபத்தால் கொந்தளித்தது. இப்படி எழிலை ரசிக்க அக்கக்காக அலசியதால் அவள் உணர்ச்சிகள் கனவேகத்தில் சுழன்றன. உயிர் அணுக்கள் ஊசி முனையில் நின்றன.

கால் கச்சையை அவிழ்க்க முயன்று அவனை நோக்கித் திரும்பிய அந்தப் பெண், அவன் கலக்கத்தை ஒரு நொடிப் பொழுதில் கண்டு கொண்டாளானாலும், அதைப் பற்றிச் சிறிதும் லட்சியம் செய்யாமல், கால் கச்சைகளை நிதானமாகவே அவிழ்த்து முடித்தாள். தோளிலிருந்த புலிக்கச்சையையும் எடுத்துவிட்டுச் சேலையைப் பிரித்து உடலை மூடிக்கொண்டதால், முழுப் பெண் உருவம் கரிகாலன் கண்ணுக்கெதிரே எழுந்தது. அவள் நிதானமாகத் தன் வேட்டுவக் கோலத்தைக் களைந்து அவனை நோக்கி ஒரு முறை புன்முறுவல் செய்துவிட்டுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டாள். அப்படி உட்கார்ந்து கொண்டவள் எதிரே ஓர் ஆண்மகன் நிற்கின்றானே என்ற நினைப்புச் சிறிதும் இல்லாமலும், அவனை உட்காரக்கூடச் சொல்லாமலும், “சரி, வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்” என்று கட்டளை யிடும் தோரணையில் பேசினாள்.

அவள் தன் கையில் பூரணமாகச் சிக்கியிருந்த நேரத் திலும், அத்தனை தைரியமாகத் தன்னை ஓர் அடிமை போல் பாவித்துப் பேசியதைக் கண்ட கரிகாலனின் இதழ்களில் புன்முறுவலொன்று அரும்பியது. அவன் அப்படிப் புன்முறுவல் செய்யும் நேரங்களில் அவன் முகத்தில் உதயமாகும் விஷமம் அந்தச் சமயத்திலும் உதயமாகியதைக் கண்ட அந்தப் பெண் சற்றுக் கோபமே அடைந்து, “என்ன அப்படிப் பார்க்கிறீர்கள், நான் பெண்தான்” என்று கூறினாள் குரலில் லேசாகக் கோபம் தொனிக்க.

“உடை மாற்றத்துக்குப் பின் அந்த உண்மை தெளிவாகப் புலப்படுகிறது…” என்று இழுத்தான் கரிகாலன்.

“அதற்கு முன்பு ஆண்பிள்ளையென்று நினைத் தீர்களோ?”

“இல்லை; அப்படி நினைக்கவில்லை.”

“ஏன்?”

“எந்த ஆண் பிள்ளைகளுக்கும் இத்தனை துணிவு கிடையாது. சற்றுமுன்பு ஓர் ஆண்மகன் தங்களிடம் அகப் பட்டுத் திணறியதைக் கவனித்தேன்.”

“அப்படியானால் என்னை யாரென்றுதான் நினைத் தீர்கள்?”

“எதுவும் நினைக்க முடியவில்லை. புரியாத பெரும் புதிராய் இருக்கிறீர்கள் நீங்கள். நான் ஏதோ இந்தச் சத்திரத்தில் இராப்பொழுதைக் கழிக்கலாமென்று வந்தேன். இங்கு நீங்கள் ஓடிவருவதும், உங்களை மடக்க விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன் படையைத் திரட்டிக் கொண்டு வருவதும் எல்லாமே ஏதோ புராணக் கதை போலிருக்கிறதேயொழிய உண்மைச் சம்பவமாகத் தெரியவில்லை” என்று கூறிய கரிகாலன், உள்ளுக்குள்ளே மெள்ள நடந்து, அவள் உட் கார்ந்திருந்த இடத்தை நோக்கி வந்தான். “சரி, இனி என்ன செய்வதாக உத்தேசம்? சொல்லுங்கள்” என்று கடைசியாக ஒரு கேள்வியையும் அவளை நோக்கி வீசினான்.

அவள் விழிகள் அவனை ஆச்சரியத்துடன் நோக்கின. “சொல்வதற்கு என்ன இருக்கிறது? படுத்து உறங்க வேண் டியதுதான்” என்று உதடுகளும் முணுமுணுத்தன.

“உறங்குவதா? உங்களுக்குச் சித்தப்பிரமை ஏது மில்லையே?” என்று தொடர்ந்து கேட்டான் கரிகாலன்.

“என்னைப் பார்த்தால் உங்களுக்கு எப்படித் தோன்று கிறது?”

“நிதான புத்தியோடு இருப்பதாகத்தான் தோன்றுகிறது.”

அப்படியே வைத்துக் கொள்ளுங்கள்.”

இந்தப் பதிலைக் கேட்டதும் இந்த இடக்குப் பெண்ணை எப்படிச் சமாளிப்பது என்பதை அறியாமல் சங்கடப்பட்ட கரிகாலனுக்கு ஓரளவு கோபமும் ஏற்படவே, “அடுத்து நடக்க வேண்டியதைக் கவனிக்க வேண்டாமா?” என்று அதட்டலாகக் கேட்டான்.

“கவனிக்க வேண்டியது நீங்கள்!”

“நானா?”

“ஆமாம் நீங்கள்தானே என்னை அன்பினால் வசப்படுத்தி நாளைக் காலையில் அந்த மடையனிடம் ஒப்படைப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள்?”

“நீ பேசுவதைப் பார்த்தால் ஒப்படைக்கமாட்டேன் என்ற நம்பிக்கை உனக்கிருப்பதாகத் தோன்றுகிறது.”

“ஆம்; அந்த நம்பிக்கை இருக்கிறது.”

“எதிலிருந்து அந்த நம்பிக்கை உண்டாயிற்று?”

“உங்கள் முகத்திலிருந்து. உங்களைப் பார்த்ததும் நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது. எந்தத் தமிழனும் அரையன் ராஜராஜன் மகளைச் சாளுக்கியர்களிடம் ஒப்படைக்கமாட்டான் என்ற உறுதி எனக்கு உண்டு .”

“அரிஞ்சயன் சொன்னது சரியாகப் போய்விட்டது. நீ அரையன் ராஜராஜன் மகளா?”

“ஆம்!”

“எதற்காக இப்படித் தனிமையில் வேட்டையாட வந்து விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனிடம் சிக்கிக் கொண்டாய்?”

இதற்கு அவள் உடனே பதிலேதும் சொல்லவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து அறையில் சிறிது நேரம் உலாவினாள். பிறகு, கரிகாலனைப் பார்த்துச் சொன்னாள்: “இதோ நாமிருக்கும் இந்த வேட்டுவச் சத்திரமும் இந்தக் காடும் ஒரு காலத்தில் மேலைச் சாளுக்கியருக்குச் சொந்தமாயிருந்தன. என் தந்தை துங்கபத்திரையின் அக்கரைக்கு அவர்களை விரட்டியபிறகு, இங்கு யாரும் வருவதில்லை. இந்தக் காட்டுக்கு அப்புறத்தில் தந்தை தங்கியிருக்கிறார். அதனால் வேட்டையாட நான் இங்கே அடிக்கடி வருவேன். இந்தச் சத்திரத்தில் சில நாள்கள் தங்குவேன். இதை ஒற்றர்கள் மூலம் அறிந்த விஜயாதித்தன் இருமுறை என்னை இங்கு வந்து மடக்கினான். இரு முறையும் என்னிடம் வீரர்கள் அதிகமாயிருந்ததால் அவனை விரட்டிவிட்டேன். இனி அவன் வரமாட்டானென்ற தைரியத்தில் நான்கு வீரர்களை மட்டுமே இம்முறை அழைத்து வந்தேன். அவனுக்கு இது எப்படியோ தெரிந்திருக்கிறது. இம்முறை பதினைந்து பேருடன் மடக்கிக் கொண்டான். நீங்கள் தடுத்திராவிட்டால் என்னை இன்றிரவு கொண்டு போயிருப்பான். என்னை என்ன, இடைதுறை நாட்டுக்கு அழிவைக் கொண்டு போயிருப்பான். என் தந்தை அதை அறிந்த அடுத்த நிமிடம், சோழ நாட்டுப் படைகள் துங்கபத்ராவைத் தாண்டிவிடும்.”

ஏதோ பெரும் கதையைச் சொல்பவள் போல் அவள் தன் கதையைச் சொன்னாள். மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கரிகாலனை நோக்கிக் கடைசியாகக் கூறினாள்: “உங்கள் சம்பாஷணையிலிருந்து நீங்கள் ஜெயசிம்மனுடைய தூதனென்று அறிந்துகொண்டேன். அப்படியிருந்தாலும் என்னை விஜயாதித்தனிடம் ஒப்படைப்பது உமது மன்னனுக்கோ அவன் நாட்டுக்கோ எந்தவிதத்திலும் நன்மை பயக்காது.”
கரிகாலன் நீண்ட நேரம் யோசித்தான். அவனும் அறையில் சற்று உலாவினான். திடீரென அவன் முகத்தில் ஏதோ யோசனை பிறக்கவே அந்தப் பெண்ணை நோக்கி, “பெண்ணே! உன் பெயரென்ன?” என்று வினவினான்.

“செங்கமலச் செல்வி” என்றாள் அவள்.

“செங்கமலச் செல்வி, இப்படி வா!” என்று அழைத் தான் அவன்.

அவள் முகத்தில் சந்தேகச் சாயை பலமாகப் படர்ந்தது. உணர்ச்சியால் திடீரெனத் தூண்டப்பட்ட கரிகாலன், “சந்தேகப்படாதே; இப்படி வா!” என்று அவள் கையைப் பிடித்துத் தனக்காக இழுத்து அப்புறம் இப்புறம் பார்த்து விட்டு, அவள் காதுக்கருகில் ஏதோ விடுவிடுவென்று வார்த்தைகளை உதிர்த்தான். அவள் விழிகளிலிருந்த சந்தேகம் மறைந்தது. “இது உண்மையா?” என்று வின வினாள் அவள்.

“உண்மைதான்.”

“தெரியாமல் ஏதேதோ பேசிவிட்டேன். மன்னிக்கவும்…” என்று மேலே ஏதோ சொல்லப்போனாள் செங்கமலச் செல்வி. அவள் வாயைச் சட்டென்று பொத்திய கரிகாலன் “உஸ்! சும்மா இரு. கதவுக்கருகில் யாரோ ஒண்டிக் கேட்கிறார்கள்” என்றான். கதவுக்கருகிலிருந்த அந்த உருவமும் உள்ளேயிருந்தவர்கள் தன்னைக் கவனிக்கிறார் களென்பதை அறிந்ததும், மெள்ள அப்புறம் நகரலாயிற்று.

Previous articleMannan Magal Part 1 Ch 27 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here