Home Historical Novel Mannan Magal Part 1 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

78
0
Mannan Magal Ch 3 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 3 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 3 செங்கதிர் மாலை

Mannan Magal Part 1 Ch 3 | Mannan Magal | TamilNovel.in

காவிரிக் கரையில் கண்ட விநாடியிலிருந்து அந்தக் கபட சன்னியாசியின் பார்வையிலும் போக்கிலும் கரிகாலன் கடும் சந்தேகம் கொண்டானானாலும், அந்தத் துறவி அத்தனை தூரம் போலியாயிருப்பாரென்று அவன் எள்ளளவும் கருதவில்லையாகையால், அன்றிரவு அவர் அறையின் சாளரங்களை அடைத்து, தான் உறங்குவது உண்மைதானா என்று சோதித்தபின், தலைச் சடையையும் தாடி மீசையையும் களைந்தெறிந்து தம்மை ஆசுவாசப் படுத்திக் கொண்டபோது பெரிதும் அதிர்ச்சியே அடைந்தான். துறவி வேஷத்தை ஒரு மனிதன் அத்தனை நன்றாகப் போட முடியும் என்றோ, தலையோடும் கன்னத்தோடும் ஒட்டி இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் கடுகள்வும் தெரியாத முறையில் தலைச்சடை, தாடி மீசைகளை அமைக்க முடியுமென்றோ கரிகாலன் அன்றுவரை கனவிலும் கருதவில்லையாதலால், அந்தச் சைவத் துறவி வேஷம் களைந்த முறையே பெரும் விசித்திரமாயிருந்தது அவனுக்கு. நந்தர்கள் மந்திரியான ராட்சசனை ஒழிக்கவும், சந்திரகுப்த மௌரியர்களை அரச பீடத்தில் அமர்த்தவும், அர்த்த சாஸ்திரியான சாணக்கியன் தனது சீடர்களை இதேமாதிரி வேஷம் போட்டு எதிரி நகருக்குள் அனுப்பித் துப்பு விசாரித்தான். போலி யாகம் செய்தான், இன்னும் பல தந்திரங்களைச் செய்தான்’ என்று சரித்திரத்தில் பலமுறை படித்த காலத்தில் ‘இதெல்லாம் உண்மையாயிருக்க முடியுமா? காரியத்துக்கு ஒத்து வருமா?’ என்று சந்தேகப்பட்ட கரிகாலனுக்கு, ‘சாணக்கிய தந்திர இதிகாசத்தில் எதுவும் அநுபவத்திற்கு விரோதமில்லை; அத்தனையும் கடைப்பிடிக்கக் கூடிய தந்திரம்தான்’ என்பதை வலியுறுத்தி சந்தேக நிவர்த்தி செய்யவந்த ஆசான் போல் அன்றிரவு

அந்த சைவத் துறவி விளங்கினார். அவர் எத்தனை எச்சரிக் கையுடன் நடந்து கொண்டாரென்பதையும், எத்தனை லாவகமாக வேஷத்தைக் களைந்தாரென்பதையும் கவனித்த கரிகாலன், துறவியார் இத்தகைய வேடம் தரிப்பதோ, இத்தகைய பணியில் இறங்குவதோ இது முதல் தடவையல்ல என்பதை மட்டும் சந்தேகத்துக்கு இடமின்றிப் புரிந்துகொண்டான். தமது காரியங்களில் ஈடுபட்ட அந்தத் துறவி அடிக்கடி நமட்டு விஷமமாகச் சிரித்துக் கொண்டதையும், அவர் கண்களில் இயற்கையாக இருந்த குரூரம் விளக்கொளி அவற்றின் மீது பட்ட சமயங்களிலெல்லாம் அதிகமாகச் சுடர்விட்டுப் பிரகாசித்ததையும் கண்ட கரிகாலன், தான் கவனிப்பதைத் துறவியார் அறிந்தால் கொலைக்கும் அஞ்சமாட்டார் என்பதையும் திட்டமாகத் தெரிந்து கொண்டதால், அவர் தன்னைப் பார்க்காத சமயங்களில் மட்டுமே கண்களைப் பக்க வாட்டில் அவர்மீது ஓட்டி, அவர் மேற்கொண்டு எத்தகைய பணியில் ஈடுபடுகிறார் என்பதை எச்சரிக்கை யுடன் பார்க்கத் தொடங்கினான்.

கும்பகோணம் புத்த மடாலயத்தின் அந்த அறை சற்று விசாலமாகவே இருந்தாலும், அறையின் ஒரு கோடியில் வைக்கப்பட்டிருந்த வெண்கல அகல்விளக்கிலிருந்து வெளிவந்த பிரகாசம் மிக மங்கலாகவே இருந்தபடியாலும், துறவியின் நடவடிக்கைகளைக் கவனிப்பது சிறிது கஷ்ட மாகவே இருந்தது கரிகாலனுக்கு. அந்தக் கஷ்டத்தை நிவர்த்திப்பதற்குத்தானோ என்னவோ துறவியார் அறைக் கோடிக்குச் சென்று, அங்கிருந்த வெண்கல அகலை எடுத்து வந்து கீழே படுப்பதற்காக விரித்திருந்த மான் தோலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்.

பிறகு மீண்டும் ஒருமுறை எழுந்திருந்து சாளரங்கள் சரியாக மூடப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பரிசோ தித்தார். அடுத்தபடி பூனை போல் அடிமேலடி எடுத்து வைத்துக் கரிகாலனுக்கு வெகு அருகில் வந்து அவனை நீண்ட நேரம் உற்றுப் பார்த்தார். கடைசியாக ஏதோ ஒரு முடிவுக்கு வந்துவிட்டதுபோல் தமது மான் தோலின் மேல் வந்து உட்கார்ந்துகொண்டு, பக்கத்திலிருந்த காவிப்பையை எடுத்து, அதன் கழுத்திலிருந்த கயிற்றை அவிழ்த்து வாயை அகல விரித்து உள்ளேயிருந்த கமண்டலத்தை எடுத்து எதிரே வைத்தார். மீண்டும் கையைப் பைக்குள் செலுத்திச் சிறு உடைவாளொன்றை வெளியில் எடுத்து அதன் கைப்பிடியிலும் உறையிலுமிருந்த நவரத்தின வேலைப் பாட்டைக் கண்டு பெரிதும் ரசித்தார்.

உறையிலிருந்து உடைவாளை உருவி அதன் நுனியையும் கூர் பார்த்து, இடதுகையில் பக்கவாட்டிலும் இருமுறை தீட்டிப் பார்த்தார். மற்றொரு முறை அந்த உடைவாளின் பிடியை வலது கையால் இறுகப் பிடித்து உயர்த்தி, அதை விளக்கொளியில் கவனித்து மகிழ்ந்ததல்லாமல், அதை விரல்களுக்கிடையில், அனாயாசமாகப் பலவிதமாகச் சுழற்றித் தமக்கிருக்கும் வாள் பயிற்சியின் வன்மையைக் கண்டு தாமே சந்தோஷப்பட்டார். அந்தச் சந்துஷ்டிக்கு அடையாளமாக அவருடைய இதழ்களில் புன்முறுவ லொன்றும் இலேசாகப் படர்ந்தது.

அந்தப் போலித் துறவியின் ஒவ்வொரு நடவடிக்கை யையும் வெகு ஜாக்கிரதையாகக் கவனித்துக் கொண்டிருந்த கரிகாலன், அவர் அந்த உடைவாளைப் பார்த்து மகிழ்ந்த விதத்திலிருந்தும், அதன் பிடியை விரல்களுக்கிடையில் வைத்துச் சுழற்றி விளையாடிய மாதிரியிலிருந்தும் துறவியும் உடைவாளும் இணைபிரியா நண்பர்களென்பதையும், தான் விழித்துக் கொண்டிருந்த விஷயம் தெரிந்தால், அந்த உடைவாள் தன் மார்பில் சந்தேகமறப் பாய்ச்சப்படுமென்பதையும் திட்டமாக அறிந்து கொண்டான். ஆகவே மூச்கைக்கூடத் தாராளமாக விடாமல் தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவருடைய அடுத்த நடவடிக்கையைக் கவனிக்கலானான். ஆனால், துறவி அடுத்த நடவடிக்கையை அவ்வளவு சீக்கிரத்தில் துவங்க வில்லை. காவிப்பைக்குள் கையை விட்டவண்ணம் நீண்ட நேரம் ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார். பிறகு ஒரு வழியாக முடிவுக்கு வந்நதவர் போல் தானே தலையை அசைத்துக்கொண்டு பையிலிருந்து கையை வெளியே எடுத்தார். அவ்வளவுதான், அந்த அறையே இந்திர ஜாலமாக மாறியது.

சாஸ்திரங்களை அணு அணுவாய்ப் படித்தவனும், எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இம்மிகூட இழக்காத வனுமான கரிகாலன் சிந்தனையே, அந்த இந்திர ஜாலத்தால் பெரிதும் குழம்பி நின்றது. அவன் கண்களில் சொல்ல வொண்ணாத பிரமை தட்டினாலும் கண்களை அகல விரித்துப் பார்ப்பது அபாயமானதால், அரைக் கண்னை மூடியே புத்த விஹாரத்தின் அந்த அறையின் தளத்தை அண்ணாந்து நோக்கினான். அறையே ரத்தவர்ணத்தில் ஆழ்ந்து கிடந்தது. சுவர்கள் ரத்த மயம்! சுவர்களின் மூலைகளிலும் நடுவிலும் நிறுத்தப்பட்டிருந்த தூண்கள், ரத்த மயம்! சாளரங்களுக்குத் தீட்டப்பட்டிருந்த பச்சை வர்ணத்திலும் ரத்தம் பாய்ந்தது போன்ற ஒரு பிரமையான காட்சி! அறையின் தளத்தில் ஒட்டியிருந்த கண்ணாடிக் கற்களுக்குமேல் நன்றாக அரைத்த சுண்ணாம் பினால் வழவழவென வெள்ளை வைக்கப் பட்டிருந்த இடத்தில் மஞ்சள் வர்ணம் தீட்டப்பட்டு, அதில் சில வெண்தாமரை மலர்களும், புத்தர் பிரான் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட பிம்பங்களும் எழுதப்பட்டிருந்தன. இந்த வெண்தாமரைகள் செந்தாமரைகளாக மாறின. சித்தார்த்தரின் இளம் குழவியின் மருண்ட விழிகள் கூடத் திடீரென்று சிவப்பு ஏறி நெருப்புப் பொறிகள் போல் ஜொலித்தன. சித்தார்த்தரின் மனைவியின் கண்கள் கீழ்நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்ததால் அந்த அன்னையின் கண்கள் தப்பினவேயொழிய அவள் ஆடை தப்பாமல் திடீரெனச் சிவந்து நெருப்பைக் கக்கத் தொடங்கியது. அறை முழுவதும் அக்கினியின் சொரூபம்! ரத்த வர்ணத்தின் கோரம்!

கோரத்திலும் எல்லையற்ற இன்பம் கலக்க முடியும் என்பதைக் கரிகாலன் அறிந்து கொண்டான். அத்தனை ரத்த வர்ணத்திலும் திடீரென மாறிய அந்த அறையின் அழகு எத்தனை மடங்கு ஏறியதென்பதைக் கரிகாலன் கவனித்தான். தன்மேல் தவழ்ந்து ஓடிய செவ்விய ஒளி தன் கைகளை எத்தனை சிவப்பாக அடித்ததென்பதையும், பிரயாண அலுப்பை அந்த ஒளி எத்தனை தூரம் துடைத் தெறிந்து விட்டதென்பதையும் உணர்ந்த இந்த வாலிபனுக்கு, நாகரெத்தினங்களின் மகிமையைப்பற்றிப் புராணங் களில் வர்ணித்திருப்பது எத்தனை தூரம் உண்மை என்பது தெளிவாகத் தெரிந்தது. தன் மேல் விழுந்த செவ்வொளி தன் அழகிய விரல்களைச் சிவப்பாக அடித்ததன்றி நகங்களுக்கும் மருதாணி இட்ட பிரமையை அளிப்பதைக் கண்டு வியந்தான். அத்தனை இந்திர ஜாலத்தை திடீரென விளைவித்த வஸ்து எதுவாயிருக்குமென்பதை அறிய அதுவரை ஒருக்களித்துப் படுத்திருந்தவன், சற்று மல்லாக்கப் புரண்டு துறவிக்காகக் கண்களை நன்றாக ஓட்டினான். சாதாரண சமயமாயிருந்தால், அவன் அசைந் ததைக்கூடத் துறவி கவனித்திருப்பார். ஆனால் அவன் எதைக் கண்டு பிரமித்தானோ, எதைக் கண்ட மாத்திரத் தில் அவன் கண்கள் கூசினவோ, அதை இமை கொட்டாமல் பார்த்து மனத்தை அப்படியே அந்த வஸ்துவிலேயே துறவியும், லயிக்கவிட்டிருந்தபடியால் அவன் திரும்பிய தையோ தம்மையும் தம் கையிலிருந்த அந்த இரத்தின ஆரத்தையும் பார்த்துப் பிரமித்துக் கொண்டிருப்பதையோ அவர் அடியோடு கவனிக்கவில்லை. காவிப்பையிலிருந்து எடுத்த இரத்தின ஆரத்தை இடது கையில் தூக்கிப் பிடித்தது முதல் அவரும் அதன் அழகில் ஈடுபட்டு உலகத்தையே மறந்துவிட்டிருந்தார்.

பாரதத்தின் சரித்திரத்தைக் கரதலப் பாடமாகப் படித்திருந்த கரிகாலன், அந்த இரத்தின மாலையைப் பார்த்த விநாடியிலேயே அதன் மர்மம் பூராவையும் உணர்ந்து கொண்டானாதலால், அவன் ஆச்சரியம் முன்னைவிடப் பன்மடங்கு அதிகமாகப் பெருகியது. பெரிய ருத்திராட்சத்தின் அளவுக்கிருந்த இருபத்தைந்து இரத்தினங்களுடன் சிவப்பு ஜ்வாலையை நெருப்பெனக் கக்கிக் கொண்டிருந்த அந்த அபூர்வ மாலையைப் பார்த்த கரிகாலன் மனம் ‘செங்கதிர் மாலை, செங்கதிர் மாலை’ எனப் பலமுறை உச்சரித்தன. அந்த மாலையைப் பற்றிப் புலவர் பெருமக்கள் பாடியதும், இராஜேந்திர சோழன் கல்லில் வெட்டி வைத்ததுமான ஒரு பாட்டும் அவன் சித்தத்தே சுழன்றது.

“எறிபடைக் கேரளன் முறைமையிற் சூடும்
குலதன மாகிய பலர்புகழ் முடியும்
செங்கதிர் மாலையும் செங்கதிர் வேலைத்
தொல்பெருங் கற்வல் பல்பழந் தீவும்”

என்ற வரிகள் திரும்பத் திரும்ப அவன் கருத்திலே பவனி வந்தன. பரகேசரி வர்மனான இராஜேந்திர சோழன், சேர நாட்டின் மீது படையெடுத்து, அந்நாட்டரசன் குலத்தே பரம்பரையாயிருந்த மணிமுடியையும், சூரியனுடைய காலைக்கதிர்கள் போல் ஜொலிக்கும் இயல்புடைத்தானதால் செங்கதிர் மாலை’ எனப் புகழப்பட்டதும், தெய்வீக சக்தி உடையது எனப் பாராட்டப்பட்டதுமான இரத்தின ஆரத்தையும் கைக்கொண்டு வந்தான் என்ற சரித்திர வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்ட கரிகாலனுக்கு, அதே செங்கதிர் மாலைதான் இது’ என்பதை நிர்ணயிக்க அதிக நேரம் பிடிக்கவில்லை. அவன் ஊகத்தை ஊர்ஜிதம் செய்ய அந்த மாலையின் பிரகாசமே போதும். ஆனால் சந்தேகத்துக்கு இடம் வைக்காத முறையில் இன்னொரு சாட்சியம் மாலையின் அடிப்புறத்திலிருப்பதைக் கரிகாலன் கண்கள் கண்டன.

அந்த இரத்தின மாலையின் அடிப்பாகத்தில், சுற்றிலும் பத்தரைமாற்றுப் பசும்பொன்னால் அமைக்கப்பட்ட விளிம்புடன் காட்சியளித்தது தாமரை வடிவமுள்ள பதக்கம். மாலையுடன் இணைக்கப்பட்டிருந்த அந்தப் பதக்கமும் மாலையின் அளவுக்குத் தகுந்தபடி மிகப் பெரி தாக உள்ளங்கை அகலத்துக்கு இருந்தபடியால், அதிலும் சில இரத்தினங்கள் புதைந்து கிடந்தன. அந்த இரத்தினங்களுக்கிடையே மரகதப் பச்சையையும் வைரத்தையும் மாறி மாறிப் பொருத்தியிருந்ததால் சங்கிலியின் வடிவமொன்று திகழ்ந்தது. அகல்விளக்கின் மங்கலான ஒளியில் கூட அந்த ஜாதி வைரங்களும் விலைமதிக்க முடியாத மரகதப் பச்சைகளும் பலவித வர்ணஜாலங்களைக் கிளப்பின.

இரத்தின மாலையின் அற்புதத்திலும், அறை முழுவதும் அதன் ஒளி சிருஷ்டித்த இந்திர ஜாலத்திலும், அதன் சரித்திரத்தை நினைத்துப் பார்த்ததால் சிந்தையில் எழுந்த எண்ண அலைகளாலும் நீண்டநேரம் சூழ்நிலையை மறந்துவிட்ட கரிகாலன் மீண்டும் சுயநிலைக்கு வந்து, ‘இராஜேந்திர சோழன் பொக்கிஷத்திலிருக்க வேண்டிய இந்தத் தெய்வீக மாலை இந்தப் போலித்துறவியின் கையில் எப்படி வந்தது? இவன் திருடனா, ஒற்றனா?” என்று சிந்திக்க ஆரம்பித்தான். இராஜேந்திர சோழன் பொக்கிஷத்திலிருந்து மாலையை எடுப்பதும் அவ்வளவு சுலபமல்ல என்பதைக் கரிகாலன் அறிந்திருந்தானாகையால், போலித் துறவி சேரநாட்டு ஒற்றனாகத்தானிருக்க வேண்டுமென்ற முடிவுக்கும் வந்தான். அத்துடன் இராஜேந்திர சோழனைச் சுற்றிச் சேரநாட்டு ஒற்றர்கள் இன்னும் பலர் இருக்க வேண் டும் என்ற முடிவுக்கும் வந்தான். அத்துடன் மாலையைக்கிளப்புவதும் எளிதல்லவென்றும் தீர்மானித்துக் கொண்டான். பல ஒற்றர்களுடைய உதவியால் அபகரிக்கப்பட்ட இந்த மாலையை, இந்தப் போலித்துறவி எங்கு கொண்டு போக உத்தேசித்திருக்கிறார் என்பதை அறியவும் கரிகாலன் ஆசைப்பட்டானாகையால் அந்த விநாடியில் எத்தகைய நடவடிக்கையையும் தான் எடுப்பது உசிதமல்லவென் பதையும் முடிவு செய்துகொண்டான்.

‘இரத்தின ஆரத்தைச் சோழநாட்டுக்குள் ஒளித்து வைக்க முயல்வது சூரியனைப் பைக்குள் வைத்துக் கட்டி ஒளிக்க முயல்வதற்குச் சமானம் – எப்படியும் இந்தத் துறவியைத் தேடி இராஜேந்திரன் வீரர்கள் எங்கும் திரிவார்கள். அவர்கள் வரும் வரையில் இந்தத் துறவியை நமது கண்ணிலிருந்து தப்ப விடக்கூடாது’ என்று கரிகாலன் தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.

தவிர, அந்தத் துறவி தன்னுடன் ஒட்டிக்கொண்ட காரணத்தையும், புத்தவிஹாரத்தில் தன் உதவியால் தங்க அவர் ஏற்பாடு செய்து கொண்டதற்கான அவசியத்தையும் அவன் சந்தேகமறப் புரிந்துகொண்டான். இராஜேந்திர சோழன் சைவ சமயப் பற்றுள்ளவனாயிருந்தாலும், புத்த விஹாரங்களுக்கு எத்தகைய அவமரியாதையையும் விளைவிக்கக்கூடாதெனக் கண்டிப்பாக உத்தரவிட்டிருந்தா னாகையால், புத்தவிஹாரத்தில் தங்கினால் இராஜேந்திர சோழனுடைய படைவீரர்கள் கூட இஷ்டப்படி அங்கு நுழைந்து சோதனை செய்ய முடியாதென்பதைப் போலித் துறவி நன்றாகப் புரிந்து கொண்டே, தன்னை விடாப் பிடியாகப் பிடித்துக் கொண்டாரென்பதையும் கரிகாலன் தெள்ளெனத் தெரிந்துகொண்டான். அந்த விநாடி முதல், அந்தச் சைவத் துறவியைத் தானும் விடாப்பிடியாகக் கண் காணிக்க வேண்டுமென்று தீர்மானித்துக்கொண்ட கரிகாலன், பெற்றோரைத் தேடிச் சூடாமணி விஹாரத்தி லிருந்து புறப்பட்ட அன்று மாலை முதலாகவே தான் பெரிய அரசியல் சுழலில் சிக்கிக்கொள்ள நேரிட்டதை நினைத்து வியந்தான். ‘உலகம் பொல்லாதது; அங்கு நீ எதற்காகப் போக வேண்டும்?’ என்று சூடாமணி விஹா ரத்துத் தலைமைப்பிக்க்ஷீ எச்சரித்தது எத்தனை சரியாகப் போயிற்று என்று நினைத்துப் பெருமூச்சும் விட்டான்.

சைவத்துறவியும் நீண்டதொரு பெருமூச்சை விட்டு, இரத்தின மாலையைத் தாம் உட்கார்ந்திருந்த மான் தோலில் தமக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, காவிப் பைக்குள்ளிருந்து ஒரு காய்ந்த பாக்குப் பட்டையை எடுத்து அதில் இரத்தின மாலையை வைத்து நன்றாக மடித்து, அதன் மேல் ஒரு கிழிசல் துணியையும் போட்டுக் கட்டினார். அந்தக் கிழிசல் முடிப்பை மட்டும் அப்புறமாக வைத்துவிட்டு, உடைவாள் கமண்டலம் முதலியவற்றை மீண்டும் காவிப் பைக்குள் வைத்துப் பையின் வாயைக் கயிற்றினால் கட்டிவிட்டு எழுந்தார். அகல்விளக்கை முன் போல் அறைக்கோடிக்கு எடுத்துச் சென்று வைத்துவிட்டுத் திரும்பினார். அவருடைய ஒவ்வொரு செய்கையையும் கவனித்துக்கொண்டிருந்த கரிகாலன், அவரது கடைசி நடவடிக்கையைக் கண்டதும், சொல்லவொண்ணாப் பிரமிப்பும் ஓரளவு கலவரமும் கொண்டான். போலித் துறவியார் அவனருகே மெள்ள வந்து அவன் நித்திரையை மறுபடியும் சோதித்தார். பிறகு அவன் தலையணையை இலேசாகத் தூக்கி, அதற்கடியிலிருந்த அதன் கச்சையை எடுத்து, அதன் மடிப்பில் இரத்தினமாலை முடிப்பைப் பத்திரப்படுத்தி, மீண்டும் கச்சையை அவன் தலை யணைக்குக் கீழே வைத்துவிட்டுச் சாளரங்களையும் திறந்து விட்டார். தமது படுக்கைக்குத் திரும்பி வந்ததும் கீழே கிடந்த சடைமுடி தாடி மீசைகளை எரிச்சலுடன் பார்த்து விட்டு, “அட சனியன்களே! உங்களைக் கட்டிக்கொண்டு எத்தனை நாள் தான் அழவேண்டுமோ? வாருங்கள்” என்று சற்று உரக்கப் பேசி அலுத்துக்கொண்டு, நன்றாக மல்லாந்து படுத்து ஏதும் நடக்காதது போல நித்திரை வசப்பட்டார்.

கரிகாலனுக்குத் தூக்கம் மட்டும் வரவேயில்லை. சரித்திரப் பிரசித்தி பெற்ற சேரமன்னர் பரம்பரையின் இரத்தின மாலை எதுவோ, எதை அடைவதற்காக இராஜேந்திர சோழன் சேரநாட்டின் மீது பெரும் போர் தொடுத்தானோ, எதை அடைந்ததைக் குறித்துப் பெருமை பாராட்டி, தான் முடிசூடிய ஆறாவது வருடத்திலேயே இராஜேந்திர மன்னன் கல்வெட்டு வெட்டினானோ அந்தச் செங்கதிர் மாலை தன் தலையடியில் கிடந்ததை நினைக்க நினைக்க, அவன் சித்தத்தில் ஏதேதோ எண்ணங்கள் ஓடின. எந்தக் கணத்திலும் அந்த மாலையைத் தேடிச் சோழநாட்டுப் படைவீரர் வரலாமாகையாலும், யார் வந்தாலும் தான் அகப்பட்டுக் கொள்ளக்கூடாது என்பதற் காகவே துறவி தன் கச்சையில் மாலையைப் பத்திரப் படுத்தி விட்டாரென்பதையும் அறிந்த கரிகாலன் மனம் விவரிக்க இயலாத பல உணர்ச்சிகளின் வசப்பட்டுத் தத்தளித்தது. ஆனால் எந்த அலைக்கும் ஓயும் நேரம் உண்டல்லவா? நேரம் கடக்கக் கடக்கக் கரிகாலன் கண்களும் சோர்ந்தன. நித்திராதேவி அவனையும் ஆட்கொண்டாள்.

மறுநாள் பொழுது விடிந்து வெகுநேரத்துக்குப் பின்பே கரிகாலன் எழுந்திருந்தான். அவன் கண்விழித்தபோது கதிரவனின் காலைக்கதிர்கள் அறைச்சாளரங்கள் வழியாக உள்ளே வந்துகொண்டிருந்தன. சைவத்துறவியார் விடியற் காலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, அறையின் மூலையில் தியானம் செய்துகொண்டிருந்தார். அவர் நிஷ்டையின் உக்கிரத்தைக் கண்ட கரிகாலன், முதல் நாளிரவு கண்ட தெல்லாம் கனவாயிருக்குமோ என்றுகூட ஒரு விநாடி சிந்தித்தான். ஆனால் அன்றும் மறுநாளும் நடந்த நிகழ்ச்சிகள் அது கனவல்ல, முற்றும் நனவேதான் என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபித்தன.

அன்று காலை அவன் எழுந்தது முதல், சைவத்துறவி அவனை நிழல் போலவே எங்கும் தொடர்ந்தார். புத்த விஹாரத்தின், தலைமைப் பிக்ஷவிடம் அவன் சொந்த விஷயங்களைப் பேசும்போது கூட அவனை விட்டு அகலாமல் கூடவே இருந்தார். தலைமைப் பிக்ஷவிடம் கரிகாலன் அந்தச் சைவத்துறவியைத் தனது நண்பராக அறிமுகப்படுத்தியிருந்ததால், தலைமைப் பிக்ஷவும் அவர் சம்பாஷணைகளில் கலந்து கொள்வதை ஆட்சேபிக்க வில்லை. ஆனால், இரண்டாம் நாளன்று தலைமைப் பிக்ஷவின் ஆணைப்படி தஞ்சையிலிருந்து வந்து சேர்ந்த புதுத் துறவியார் மட்டும், சைவத்துறவி முன்பாக எதுவும் பேச மறுத்துவிட்டார். “இது கரிகாலனைப் பற்றிய சொந்த விஷயம். இதை யார் முன்னிலையிலும் பேச எனக்கு அநுமதியில்லை” என்று திட்டமாகக் கூறிவிட்டார் புதுத்துறவி.

“ஆனால் நான் மட்டும் இருக்கலாமா?” என்று கேட்டார் தலைமைப் பிக்ஷீ.

“தாங்கள் இருக்கலாம் என்று உத்தரவிருக்கிறது” என்றார் புதுத்துறவி.

“யார் உத்தரவு?” என்று சீறினார் சைவத்துறவி.

“அதை நாம் உமக்குச் சொல்ல வேண்டிய அவசிய மில்லை” என்றார் புதுத்துறவி.

கடைசியில் சைவத்துறவி வெளியே அனுப்பப்பட்ட பின்பே, புதுத்துறவி வாயைத் திறந்து, “அப்பனே! எங்கே மோதிரத்தை எடு” என்றார்.

கரிகாலன் கச்சையிலிருந்து மோதிரத்தை எடுத்து அவரிடம் கொடுத்தான். புதுத்துறவி மோதிரத்தைப் பல கோணங்களிலும் திருப்பித் திருப்பி நன்றாக ஆராய்ந்தார். அவர் மட்டுமென்ன, பின் பக்கத்திலிருந்த சாளரத்தின் மறைவில் பதுங்கி நின்ற சைவத்துறவியும் அதை நன்றாகக் கவனித்தார். அந்தப் பச்சைக்கல் மோதிரத்தைக் கண்ட அவர் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. அதே மோதிரந் தான்; சந்தேகமில்லை. இந்தப் பச்சைக்கல் தமிழ் மண்டலத் தில் வேறு யாரிடமும் கிடையாது. அப்படியானால்?’ இதை நினைத்த துறவியின் கண்களில் ஆச்சரியம் மறைந்து, சொல்லவொண்ணாத பயமும் கலவரமும் தாண்டவமாடத் தொடங்கின. “அவன் மகன் இவன்!” என்ற சொற்களும், அவர் உதட்டிலிருந்து நடுங்கிய வண்ணம் உதிர்ந்தன.

Previous articleMannan Magal Part 1 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here