Home Historical Novel Mannan Magal Part 1 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

111
0
Mannan Magal Ch 30 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 30 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 30 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 30 விஷயம் புரிந்தது

Mannan Magal Part 1 Ch 30 | Mannan Magal | TamilNovel.in

அரையன் ராஜராஜன் மகளின் கூரிய வாள் தன் கழுத்தைத் தடவி நின்றதாலும், தன் கைகளும் அவள் வீரர்களால் பலமாகப் பிணைக்கப்பட்டதாலும், ஏற்கெனவே மாடியறை முன்பாக மறைந்து நின்று தான் கண்ட காட்சியின் காரணமாகவும், ‘ஒருவேளை இது காரிகாலன் சதியாயிருக்குமோ’ என்று சந்தேகித்த அரிஞ்சயன், பக்கவாட்டில் கண்களைச் செலுத்திக் காரிகாலன் நிலையைக் கண்டதும் சந்தேகத்தை அடியோடு உதறி எறிந்ததன்றி, இந்த இக்கட்டிலிருந்து தப்பப் புத்திசாலியான கரிகாலன் ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிப்பான்’ என்று நம்பிக்கையும் கொண்டான். ஆனால் அந்த நம்பிக்கையில் அடியோடு மண்ணைப் போடும் முறையில் செங்கமலச் செல்வி அடுத்த விநாடி உத்தரவுகளைப் போட்டாள்.

“விஜயாதித்தன் ஆட்களைக் கட்டிப் போட்டீர்களா?” என்று செங்கமலச் செல்வி, உருவிய வாளும் கையுமாக நின்றிருந்த தன் வீரர்களில் ஒருவனைக் கேட்டாள்.

“கட்டிப் போட்டுவிட்டோம்” என்று பதில் சொன்னான் அவன்.

“சரி! அவர்கள் எல்லோரையும் சத்திரத்துப் பின் புறத்து அறையில் அடைத்து அறைக்கதவைப் பூட்டி விடுங்கள். சத்திரத்துக் காவல்காரன் கையையும் காலையும் கட்டி இந்தக் கூடத்திலேயே உருட்டுங்கள். ஓர் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வாருங்கள்” என்று மளமளவென உத்தரவுகளை வீசினாள் செங்கமலச் செல்வி.

அவர் வீரர்கள் கட்டளைகளை நிறைவேற்ற நாற் புறமும் பறந்தார்கள். அவள் இட்ட உத்தரவுகளைக் கேட்டுக் கொண்டும், மிதமிஞ்சிய வியப்புடன் அவளைப் பார்த்துக் கொண்டும் உருண்டு கிடந்தான் கரிகாலன். கைகள் பின்னால் பிணைக்கப்பட்டிருந்ததன் காரணமாக, முதுகுப் பக்கம் திரும்பிப் படுக்க முடியாமல் ஒருக்களித்தே படுத்திருந்தாலும், பக்கவாட்டில் கண்களைச் செலுத்தி அவளை நன்றாகப் பார்த்த காரிகாலன், ‘இவள் ஒரு பெரிய தளபதியின் மகள் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். அழகும் கம்பீரமும் நிறைந்த அவள் தோரணையும், அவள் அந்தச் சமயத்தில் கொண்டிருந்த வேட்டுவக் கோலமும் அவன் சித்தத்திலே பலப்பல காவியங்களையும் புராணங்களையும் புரள வைத்தன.

‘அதோ அவள் தோளைத் தழுவி நிற்கும் அந்தப் புலித் தோல் அங்கியும், காலை அணைத்துக் கிடக்கும் மான் தோல் கச்சையும், முன்னால் எடுத்துப் போடப்பட்டிருக் கும் கொண்டையும், தினைப்புலம் காத்த குறவள்ளியைத் தான் நினைப்பூட்டுகின்றன. ஆனால் அவள் கையிலிருந்தது ஆலோலத்தின் கவண்கல்; இவள் கையிலிருப்பது உயிரையே ஓட்டக்கூடிய வீரவாள். அவள் பயந்தவள். இவள் அச்சத்தையே அறியாதவள். அவள் விழிகள் அருள் விழிகள். இந்த விழிகளோ அக்கினியைக் கக்கும் அபாய விழிகள்’ என்று கரிகாலன் அவளைப் புராண மங்கையருக்கு ஒப்பிட்டுச் சர்ச்சை செய்து கொண்டிருந்த சமயத்தில் அவள் வீரர்கள் தங்கள் கடமைகளைச் சரசர வென்று செய்து கொண்டிருந்தார்கள்.

கைகள் மாத்திரமன்றிக் கால்களும் பிணைக்கப்பட்ட விஜயாதித்தன் வீரர்கள், அவன் கண்ணுக்கெதிராகவே சரசரவென்று முற்றத்தில் இழுத்துச் செல்லப்பட்டு, பின் புறத்து அறையில் திணிக்கப்பட்டார்கள். சற்று நேரத்துக்கெல்லாம் சத்திரக்காரனும் செங்கமலச் செல்வியின் முன்பாகக் கொண்டுவந்து நிறுத்தப்பட்டான். சத்திரக்காரன் கணக்குப் பெட்டி உடைக்கப்பட்டு ஓலையும் எழுத்தாணியும் கொண்டுவரப்பட்டன. பக்கத்திலிருந்த ஒரு வீரனைப் பந்தத்தைப் பிடிக்கச்சொல்லி, மற்றொரு வீரனை ஓலையில் எழுதும்படி உத்தரவிட்டு, என்ன எழுதுவதென்பதை நின்று கொண்டே அதிகாரத் தோரணையில் சொல்லிக் கொண்டு போனாள் சோழர் படைத்தலைவன் மகள்; “மேலைச்சாளுக்கிய நாட்டில் உறையும் கீழைச்சாளுக்கிய நாட்டு இளவரசர் விஷ்ணுவர்த்தன விஜயாதித்த பூபதி அவர்களுக்கு மதுராந்தகனான இராஜேந்திர சோழ தேவனின் பிரதம படைத்தலைவர் அரையன் ராஜராஜன் மகள் செங்கமலச் செல்வி எழுதிக்கொள்வது:

“நீர், பெண்மானென்று நினைத்து பெண் வேங்கையை, வேட்டையாட வந்தது முதல் முட்டாள்தனம். அப்படி நேர்ப்பட வந்ததும் கையாலாகாத இரண்டு அறிவிலிகளிடம் அந்த வேங்கையை ஒப்படைத்துப் போனது இரண்டாவது முட்டாள் தனம்..

“உம்முடைய அறிவீனத்துக்காக உமது வீரர்களை நான் கொல்ல விரும்பவில்லை. ஆனால், என்னை உம்மிடம் ஒப்படைப்பதாகச் சொன்ன அறிவிலியையும், அவன் தோழனையும் மாத்திரம் என்னுடன் அழைத்துச் செல்கிறேன். மற்ற வீரர்கள் பின்புறத்து அறையில் பத்திரமாக இருக் கிறார்கள். அந்த அறைச்சாவியும் இந்த ஓலையுடனிருக்கிறது. என் நடவடிக்கை எதற்கும் சத்திரக் காரன் பொறுப்பாளி அல்ல. அவனை ஒன்றும் செய்ய வேண்டாம். இன்னொரு முறை நாம் வேட்டுவச் சாத்திரத்திலல்ல போர்க்களத்திலேயே சந்திப்போம்” என்று கூறி முடித்த செங்கமலச் செல்வி, அந்த ஓலையை வாங்கித் தன் கையெழுத்தையும் பொறித்துவிட்டு, “இதை அந்த முற்றத்துத் தாழ்வாரத்தின் ஓரத்தில் வைத்து, அதன் மீது ஒரு கல்லையும், அதன் பக்கத்தில் அறைச் சாவியையும் வையுங்கள். ஓர் அகல்விளக்குச் சற்று தூரத்தில் எரியட்டும். இனிச் சத்திரக்காரனைக் கட்டுங்கள்” என்று தனது வீரர்களுக்கு உத்தரவிட்டாள்.

அவள் சொன்னபடி அலுவல்கள் படு துரிதமாக நடந்தேறின.

“இனி இவர்களை இவர்கள் புரவிகள் மீது வைத்துப் பிணையுங்கள்” என்று உத்தரவிட்டாள் அரையன் ராஜ ராஜன் மகள், அரிஞ்சயனையும் கரிகாலனையும் சுட்டிக் காட்டி. அவள் உத்தரவுப்படியே வீரர்கள் அரிஞ்சயனையும் கரிகாலனையும் எழுந்திருக்கச் செய்து, வாயிலுக்காக நடத்திச் சென்று, அங்கு தயாராக நிறுத்தப்பட்டிருந்த குதிரைகள் மீது அவர்களை ஏற்றி, இடுப்புகளில் கயிறு எறிந்து கால்களைக் குதிரைகள் வயிற்றில் சேர்த்து நன்றாக அசைய முடியாதபடி கட்டினார்கள். குதிரைகளின் சேணங்கள் அவற்றின் கழுத்துகளிலேயே சுற்றப்பட்டன. அடுத்தபடியாக, செல்வியின் உத்தரவுப்படி பிரயாணத்தை உத்தேசித்துப் பந்தங்கள் கொளுத்தப்பட்டன. இரண்டு வீரர்கள் பந்தங்களைப் பிடித்துக்கொண்டு முன்னே குதிரைகளிற் செல்ல, பின்னே இரு குதிரை வீரர்கள் உருவிய வாள்களுடன் காவல் வர, இடையே அரிஞ்சயன் புரவியும் கரிகாலன் புரவியும் நடந்து செல்ல, சற்றுத் தள்ளி மாசு மறு இல்லாத முழு வெள்ளைப் புரவியொன்றன் மீது அமர்ந்து, சிறைப்பட்ட இருவர் மீதும் ஒரு கண்ணை வைத்துக்கொண்டு சென்றாள் செங்கமலச்செல்வி.

இரவு அர்த்த ஜாமத்தைச் சிறிதே தாண்டியிருந்ததால் வெள்ளிகூட முளைக்கவில்லை. நல்ல இருட்டின் காரணமாக ஆகாயத்தில் நட்சத்திரங்கள் பிரகாசித்துக் கொண்டிருந்தாலும், காடு அடர்த்தியாயிருந்ததால், அந்த வெளிச்சம்கூடச் சரியாகத் தெரியவில்லை. அடிக்கடி சாளுக்கியப் படையினரால் உபயோகப் படுத்தப்பட்டிருந்தாலும், காட்டின் பாதைகள் கூட ஒழுங்காக அமையவில்லை. குறுக்கும் நெடுக்குமாகச் சில ஒற்றையடிப் பாதைகள் சென்றன. அந்தப் பாதையில் கூட மழைக்காலத்தில் துளிர்விட்ட சந்தனச் செடிகள் இடுப்பளவு வளர்ந்து குறுக்கே தடை செய்து நின்றன. பிரமாண்டமாக வளர்ந் திருந்த சந்தன மரங்களின் நல்ல வாசனை, காடு முழுதும் பரவிக்கிடந்தாலும், அந்த இன்பத்தை யாரும் அனுபவிக்க விடாமல் தடுத்த துஷ்டமிருகங்கள் பலவித ஓலங்களைக் கிளப்பிக்கொண்டிருந்தன. இரைதேடி இரவிலே காட்டில் நடமாடிய ஓரிரண்டு சிறுத்தைகள் வீரர்களின் பந்தங்களைப் பார்த்ததும் நெருப்புக்குப் பயப்பட்டு அலறி ஓடின. தொலை தூரத்தில் சிம்மத்தின் கர்ஜனை ஒன்று பலமாகக் கேட்டது. நரிகள் ஏதோ மூலைகளில் ஊளையிட்டுக் கொண்டிருந்தன. இவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு மரங்களிலிருந்து பட்சி ஜாலங்களும் சப்தித்துக் கொண்டிருந்தன.

காவிய ரசனையுள்ள கரிகாலன், காட்டின் இந்த அற்புதங்களில் மனத்தைப் பறிகொடுத்து கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தான். அவன் சிந்தனையில் தீவிர மாக ஈடுபட்டிருந்ததைக் கண்ட அரிஞ்சயன் மனத்தில் நம்பிக்கை சற்று உதயமாகவே, “ஏதாவது வழியிருக்கிறதா?” என்று மெள்ளக் கேட்டான்.

“வழியா! எதற்கு?” என்றான் கரிகாலன், அரிஞ்சய னுக்கு மட்டும் கேட்கும் குரலில்.

“எதற்கு? தப்புவதற்குத்தான்!”

“அதைப்பற்றி நான் யோசிக்கவில்லையே.”

“பின் எதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்?”

“சிருஷ்டி விசித்திரத்தைப் பற்றி.”

இந்தப் பதிலைக் கேட்ட அரிஞ்சயனுக்கு எரிச்சல் தாங்க முடியாததால், “ஓகோ! தாங்கள் காவியங்களைப் படித்தவர்களல்லவா!” என்று ஏளனமாகப் பேசினான்.

“ஆம், அரிஞ்சயா! அதனால்தான் சிந்தனைக்கு இடமிருக்கிறது. வள்ளுவர் என்ன சொல்கிறார் தெரியுமா?” என்று கரிகாலன் வினவினான்.

அரிஞ்சயன் படித்தவனல்ல; அதுவும் வேங்கி நாட்டைச் சேர்ந்தவன், தமிழ் மொழியைச் சரியாக அறியாதவன். ஆகவே கேட்டான், “யார் அது வள்ளுவர்?” என்று.

“தமிழர்களின் தெய்வீகப் புலவர். வாழும் வழிநூல் வகுத்தவர்.”

“ஓகோ! அவர் என்ன சொல்கிறார்?”

“தொட்டனைத்து ஊறும் மணற்கேணி; மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு” என்றார். அதாவது மண்ணைத் தோண்டுமளவுக்குத்தான் ஊற்றில் நீர் சுரக்கும்; படித்த அளவுதான் சிந்தனையும் ஊறும் என்பது அந்தப் பெரியார் வாக்கு.”

“சரி. நீ நன்றாகப் படித்திருக்கிறாயல்லவா?”

“ஆகா!”

“சரி, அதை உபயோகப்படுத்திச் சிந்தனையைக் கிளறித் தப்புவதற்கு ஏதாவது வழி கண்டுபிடியேன்.”

“அதற்குத்தான் வழி தெரியவில்லை; தவிர சிந்தனை அதிலும் ஓடவில்லை!”

“பின் எதில் ஓடுகிறது?”

“இதோ இந்த ஆரண்யத்தின் சூழ்நிலையில் எங்கும் உயிர்களுக்குப் பலன் தரும் தருக்கள். அவற்றுடன் எங்கும் உயிரை அழிக்கும் துஷ்ட மிருகங்களின் நடமாட்டம். அதோ, குயில் கிள்ளைகளின் இன்பக் கூச்சல்! அவற்றுடன் அதோ சிங்கம், புலி இவற்றின் கர்ஜனை! அமைதியைக் கலைக்கக் கிளம்பியுள்ள பயங்கரக் கதம்ப ஒலிகள்! சிருஷ்டியின் இரண்டு பாகங்களையும் இந்தக் காட்டில் பார்க்கிறேன். ஒன்று ஆக்கம், இன்னொன்று அழிவு. இரண்டுமே சம பாகத்திலிருப்பதால்தான் உலகம் ஜீவிக்கிறது.”

என்ன காரணத்தாலோ கடைசியாகச் சொன்ன வேதாந்தத்தைச் சற்று உரக்கவே சொன்னான் கரிகாலன். அதைக் கேட்ட செங்கமலச் செல்வியின் இதழ்களில் புன்னகை அரும்பியது. ஆனால் அரிஞ்சயன் உள்ளத்தில் மட்டும் உக்கிராகாரமான கோபம் பொங்கி எழவே அவனும் இரைந்தே கேட்டான், “இந்தக் காட்டில் நீ பார்ப்பது இருக்கட்டும். இந்தக் காடு முடிந்ததும் எதைப் பார்க்கப் போகிறாய் தெரியுமா?”

“தெரியாதே.”

“நான் சொல்லட்டுமா?”

“சொல்லேன்.”

“சொர்க்கம்.”

“அப்படியா?”

“ஆமாம்; அரையன் ராஜராஜன் தாட்சண்யம் பார்ப்பவனல்ல. இரண்டு பேரையும் சொர்க்கத்துக்கு அனுப்பி விடுவான்.”

“அனுப்பலாம்; ஆனால் சொர்க்கத்துக்கு என்று சொல்ல முடியாது அரிஞ்சயா! நம்மைப் போன்ற ஒற்றர்களுக்குக் காத்திருப்பது நரகம்தான். அதுவும் மேதையான விமலாதித்தன் மகளை வஞ்சித்து ஜெயசிம்மனிடம் ஒப்படைக்க முயன்ற நம்மைப் போன்றவர்களுக்குச் சொர்க்கம் கிடைப்பது மிகத் துர்லபம். சாத்திரம் அப்படி யிருக்கிறது!” என்றான் கரிகாலன்.

“அந்தச் சாத்திரத்தில் இடிதான் விழ வேண்டும்!” என்று சபித்த அரிஞ்சயன், அத்துடன் வாயை மூடினான். அதற்குப் பின்பு யாரும் பேசாமல் பயணம் மௌனமாகவே நடந்தது.

போகப்போகப் பாதையும் கடுமையாகிக்கொண்டு வந்ததால், வீரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அரிஞ்சயனையும் கரிகாலனையும் நன்றாக நெருங்கியே வந்தார்கள். வெள்ளி முளைத்துச் சிறிது நேரம் ஆனபிறகுதான், காட்டின் முகப்பும் அதற்குச் சற்று தொலைவிலிருந்த அரையன் ராஜராஜன் படைகளும் தெரிய ஆரம்பித்தன.

எதிரேயிருந்த காட்சியைக் கண்டு எதற்கும் அசையாத கரிகாலன் மனங்கூடச் சற்று அசைந்தது. கண்ணுக் கெட்டிய தூரம் வரையில் பந்தங்கள் தெரிந்தன. கூடாரங்களில் படுத்துறங்கிய வீரர்களைக் காக்க உலவி வந்த வீரர்களின் நடமாட்டம் எதிரேயிருந்த பரந்த வெளியின் அமைதியைக் கலைத்துக் கொண்டிருந்தது. சங்கிலியால் பிணைக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த போர் யானைகள் கண்ணுக்குத் தெரியவில்லையானாலும், அவற்றின் பிளிறல் ஆகாயத்தைக் கிழித்துக் கொண்டு சென்றது. காலை நெருங்கிவிட்டதால், எழுந்து உடலை உதறிவிட்டுக் கொண்ட புரவிகளின் கனைப்பும் கரிகாலன் காதில் விழுந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களின் இடையே செப்பனிடப்பட்டிருந்த பாட்டைக்குள் நுழைந்த செங்கமலச் செல்வியைக் கண்ட காவல் வீரர்கள், அவளுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அரிஞ்சயனையும் கரிகாலனையும் காவலில் வைக்கும்படி காவலாளிகளுக்கு உத்தரவிட்ட செங்கமலச் செல்வி, குதிரையை வேகமாகத் தட்டிவிட்டுத் தூரத்தே தெரிந்த தந்தையின் பாசறையை நோக்கிச் சென்றாள்.

கரிகாலனையும் அரிஞ்சயனையும் அழைத்துச் சென்ற காவலாளிகள், அவர்கள் கட்டுகளை அவிழ்த்துவிட்டுக் கூடாரமொன்றில் காவல் வைத்தார்கள்.

பொழுது புலர்ந்ததும் அவர்களே வியக்கக்கூடிய முறையில் காரியங்கள் நடந்தன. இருவரும் பெரிய மன்னர் களைப் போல நடத்தப்பட்டார்கள். ஸ்நான போஜன வசதிகளும் பிரமாதமாயிருந்தன. இதற்கெல்லாம் காரணம் அரிஞ்சயனுக்கு அடியோடு புரியாததால் “என்ன கரிகாலா?” என்று வினவினான்.

“எங்கள் பக்கத்தில் இப்படித்தான் வழக்கம்” என்றான் கரிகாலன்.

“ஓகோ!”

“மாரியம்மனுக்குக் கிடாவைப் பலி கொடுக்கும் முன்பு அதற்கு நன்றாகக் குளிப்பாட்டி அலங்காரம் செய்து உணவளித்து பிறகுதான் வெட்டுவார்கள்” என்று சொல்லிச் சிரித்தான் கரிகாலன்.

அரிஞ்சயன் முகத்தில் பயத்தால் வியர்வைத் துளிகள் அரும்பின. “பயப்படாதே அரிஞ்சயா! சாவு ஒரு பெரும் உறக்கம். அதற்குப்பின் மீண்டும் பிறப்பு உண்டு. உடல்தான் அழிகிறது! உயிர் அழிவதில்லை. நீ இறந்த பின்னும் ஜீவிப்பாய்” என்று வேதாந்தம் பேசினான் கரிகாலன்.

அந்த வேதாந்தம் அரிஞ்சயனுக்கு நாராசமாயிருந்தது. எந்த விநாடி அரையன் ராஜராஜனிடமிருந்து அழைப்பு வருமோ என்று நடுங்கிக் கொண்டிருந்தான் அரிஞ்சயன். அழைப்பு வந்தது. ஆனால் அரிஞ்சயனுக்கு அல்ல.

கரிகாலனையே முதலில் காவலாளர்கள் அழைத்துப் போனார்கள். அவன் திரும்பும் நேரத்தை எதிர்பார்த்துக் கூடாரத்தில் காத்திருந்தான் அரிஞ்சயன். பொழுது ஏறியதே தவிர கரிகாலன் வரவில்லை. மெள்ள ஒரு வீரனை வரவழைத்துக் காரணத்தை விசாரிக்க முற்பட்ட அரிஞ்சயன், “ஏனப்பா! போனவர் என்ன ஆனார்?” என்று கேட்டான்.

“அவர் விஷயம் முடிந்துவிட்டது” என்றான் வீரன்.

“அப்படியானால் என்னைக் கூப்பிடுவார்களா?” என்று மீண்டும் கேட்டான் அரிஞ்சயன்.

“மாட்டார்கள்!” திட்டமாக வந்தது பதில், வீரனிடமிருந்து.

“ஏன்?”

“உன் விஷயமும் முடிந்துவிட்டது.”

“என்ன உளறுகிறாய்?”

“சீக்கிரம் புரிந்து கொள்வாய்.”

விவரத்தைப் புரியவைக்க வந்தான் ஒரு தூதுவன், அதைப் புரிந்து கொண்டதும் அடியோடு இடிந்து போனான் அரிஞ்சயன்.

Previous articleMannan Magal Part 1 Ch 29 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 31 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here