Home Historical Novel Mannan Magal Part 1 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

82
0
Mannan Magal Ch 33 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 33 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 33 நீரோடையும் நிலமங்கையும்

Mannan Magal Part 1 Ch 33 | Mannan Magal | TamilNovel.in

ஆண்டவன் படைப்பில் விசித்திரங்கள் பல. அவற்றுள் பெண்மையின் தத்துவம் மகா விசித்திரமானது.

பெண்களின் உடல் வாகுக்குத் தகுந்தபடி உள்ளம் அசைந்து கொடுப்பதில்லை. உள்ளத்துக்குத் தகுந்தபடி உடல்வாகு அசைந்து கொடுக்கிறது. பருவ எழில்கள் புஷ் பித்துக் குலுங்கும் நிலை வந்துவிட்டாலும், உள்ளம் மலர்ந்தாலொழிய உடலில் உணர்ச்சிகள் பிரவாகிப்பதில்லை.

பெண்மையின் உதயத்துக்கும் பெண்மையின் பூர்ணத்துவத்துக்கும் இடைக்காலம் ஒன்று உண்டு. அது கற்பனைக் காலம். அந்தக் காலத்தின் கற்பனை தலை தெறித்து ஓடினாலும், விவரம் விளங்காததால், உணர்ச்சிகள் கட்டுக்கடங்கியே நிற்கின்றன. அந்தக் கற்பனையை உடைத்துப் பூர்ணத்தை அளிப்பது ஸ்பரிசம். இதற்கு அறிவாளிகள், தொட்டால் சிணுங்கிச் செடியை உதாரணமாகக் கூறுகிறார்கள்.

தமிழ்நாட்டின் நதியோரங்களில் ஏராளமாக மண்டிக் கிடக்கும் சிறு செடியொன்று ‘தொட்டால் சிணுங்கி’ யென்று கூறப்படுகிறது. சாதாரணமாகத் தன் சின்னஞ்சிறு இலைகளை மெல்லிய கிளைகளில் தாங்கிப் படர்ந்திருக்கும். இச்செடி மீது கையை வைத்தால் போதும். இலைகள் உடனே கூசிக் குறுகி மூடிக் கொள்கின்றன. அவை மீண்டும் சுய நிலைக்கு வர வெகு நேரம் பிடிக்கிறது. அந்தச் செடியை நாம் எத்தனை முறை தொட்டாலும் இதே கதிதான். ஸ்பரிசத்தின் வேகம் அச்செடியில் அத்தனை தீவிரமாக ஊடுருவிச் செல்கிறது.

பெண்மையின் தன்மையும் அநேகமாக இதுதான். ஆனால் ஒரு மாறுபாடும் உண்டு. ஸ்பரிசத்துக்குப் பிறகு தான் பெண்மை உள்ளம் நெகிழ்ந்து வாழ்க்கை விவரம் புரிகிறது. பெண்மையில் இயற்கையாகவே அடங்கியுள்ள நாணம் முதலிய உணர்ச்சிகள் ஸ்பரிசத்தால் உடலைக் குறுகிக் கூன வைத்து, அழகைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்கின்றன. பார்வையில் மிரட்சி, நடையில் தளர்ச்சி முதலியன ஏற்பட்டு விடுகின்றன. ஆனால் பெண் உடல் தொட்டால் சிணுங்கியைப் போல் சதா சிணுங்கியே நிற்ப தில்லை. சிணுங்கிய பின் மலர்கிறது. அந்த மலர்ச்சியில் எத்தனையோ இன்ப அலைகள்! எத்தனையோ கற்பனைகள்! சில வேளைகளில் அந்தக் கற்பனைகளின் பூர்த்தி யும்கூட! எல்லாம் உள்ளத்தின் அசைவின் நினைவுகள்!

அந்த விளைவுகள் பல செங்கமலச் செல்வியிடமும் நாளாவட்டத்தில் தெரியலாயின. அரையன் ராஜராஜன் பாசறைக்குக் கரிகாலன் வந்த பத்துப் பதினைந்து நாள்களுக்குள்ளாகவே அவள் நடையுடை பாவனைகளில் எண்ணற்ற மாறுதல்கள் ஏற்பட்டதைப் படை வீரர்கள் கண்டார்கள். அதுவரை அலங்காரம் என்ன என்பதையே அடியோடு அறியாத அரையன் ராஜராஜன் மகள், பிரதி தினமும் அலங்காரத்தில் ஏகநேரம் செலவழிப்பதைக் கண்ட பாசறைக் காவல் வீரர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எதிராளிகளைக் கொல்வதைத் தவிர, வேறெதிலும் பயிற்சி பெறாத படை வீரர்களுக்கு, அவளுடைய இந்த மாற்றம் புரியாத பெரும் புதிராயிருந்தது.

அழகான அங்கலாவண்யத்தைப் படைத்த செங்கமலச் செல்வி, தினம் தினம் விதவிதமான ஆடையா பரணங்களைத் தரிக்கலானாள். தென்னிந்தியாவின் முக்கால்வாசி இடங்களில் திக்விஜயம் செய்த அரையன் ராஜராஜன் பெட்டிகளில் ஆடைகளுக்குத்தான் குறைவா? அதுவரையில் பெட்டிகளில் கேட்பாரற்றுச் சிறைப்பட்டுக் கிடந்த ஆடையாபரணங்களுக்குக் கரிகாலன் வரவு திடீரென விடுதலையளிக்கவே அவை பெட்டியிலிருந்து கிளம்பி அவள் அறை முழுவதும் பரவிக் கிடந்து, சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்தன. ‘இதை உடுத்தினால் நன்றாயிருக்குமா அதை உடுத்தினால் நன்றாயிருக்குமா?” என்று ஒவ்வொரு சேலையாகத் தன் மீது போட்டு நிலைக் கண்ணாடியில் அழகு பார்த்து வீசி வீசி எறிந்ததால், அறையில் ஏராளமான புடவைகளும் ரவிக்கைகளும் சிதறிக் கிடந்தன. இந்த அலங்கோலத்தின் காரணம் யாருக்கும் புரிந்தாலும் புரியாவிட்டாலும் செல்வியுடன் வந்திருந்த அவள் செவிலித்தாய்க்கு மட்டும் நன்றாகப் புரிந்திருந்தது. செல்வியின் அலங்கார விநோதங்களையும் அவற்றுக்குப் பூர்வாங்கமாக அவள் அறையில் தினம் தினம் ஏற்பட்ட அமர்க்களத்தையும் கண்ட செவிலித்தாய் உள்ளுக்குள்ளேயே நகைத்துக் கொண்டாள். குழந்தையி லேயே தாயைப் பறிகொடுத்த அந்தப் பெண்ணை அறியா பருவத்திலிருந்து எடுத்து வளர்த்த பாசத்தால், அவள் ஆண்களைப் போல் வேட்டுவக் கோலமணிந்ததையும், அடங்காமல் வெளியே சுற்றியதையும் வெறுத்து அடிக்கடி கண்டித்து வந்த செவிலித்தாய், கரிகாலன் பாசறைக்கு வந்த சில நாள்களுக்குள் அவளிடம் ஏற்பட்ட மாறுதலைக் கண்டு மனம் மகிழ்ந்தவளாய், ‘எந்த வித்தாரக் கள்ளிக்கும் ஒரு வித்தகனைக் கடவுள் படைத்துத்தான் இருக்கிறான்’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.

செங்கமலச் செல்வியின் மனத்திலே உதித்த இந்தப் பெண்மை பூர்ணத்துவம் பெறுவதற்கான முயற்சிகளையும் செவிலித்தாய் மன மகிழ்ச்சியுடனேயே செய்ய முற்பட்டு அவளுக்குத் தினம் தினமும் யார் கண்கண்டாலும் பிரமிக்கும்படியான அலங்காரங்களைச் செய்து வந்தாள். ஒருநாள் தன் வளர்ப்பு மகளின் வனப்புப் பிரதேசங்களைக் காஞ்சி மாநகர் பட்டுப் பீதாம்பரத்தால் மறைத்தாள். மற்றொரு நாள் மதுரையின் வண்ணப் புடவையைக் கொண்டு மூடினாள். இன்னொரு நாள் சேரநாட்டு வெண்பட்டும் வேங்கி நாட்டுத் தங்கத் தகடியும் அவள் இணையற்ற எழிலை வளைத்துச் செல்ல உதவின. தலையில் பட்டுக் கட்டிய பாண்டிய நாட்டு முத்துச் சுட்டி சில நாள்கள் தொங்கி அவள் வசீகர வதனத்தின் உச்சியை முகந்து நிற்கும். இன்னும் சில நாள்கள் சோழ நாட்டுப் பொற்கொல்லர் செய்த நாகர் நாட்டு நாகரத்தினப் பதக்கம் அவள் மார்பகத்தே புரண்டும் படுத்தும் கிடக்கும். கையொன்றில் வைரமும் மரகதமும் பதித்த வங்கியொன்று சில நாள்கள் ரவிக்கையை இறுகப் பிடித்துக் கையின் சதையை சிறிதே கீழ்ப்புறமும் ஓடவிட்டிருக்கும். எங்கிருந்தோ அபூர்வமாக அரையன் ராஜராஜன் கொண்டு வந்திருந்த பச்சைக்கல் மூக்குப்பொட்டு ஒன்று செண்பக மொட்டைப் பழிக்கும் நாசியின் ஒரு பகுதியிலே நின்று பிரமாதமாக ஒளி வீசும்.

இப்படிப் பலப்பல அலங்காரங்களைச் செய்து மகளைக் கரிகாலனுடன் அவ்வப்போது வேட்டைக்கு அனுப்பி வைத்த செவிலித்தாய், அவ்விருவரும் ஜதையாய்ப் புரவிகளில் சென்றதைக் கண்டு மகிழ்ச்சிக் கடலிலே மூழ்கி வந்தாள். செங்கமலச் செல்வியின் நடையுடை பாவனைகளில் ஏற்பட்டு வந்த ஒவ்வொரு மாறுதலையும் கவனித்து வந்த செவிலித்தாய்க்கு அவள் உள்ளத்திலே ஏக்கமும் கலந்து நிற்பதைக் காணத்தான் அவ்வப்பொழுது பரம சங்கடமாயிருந்தது. இரவுகளில் வெகுநேரம் விழித்தே பஞ்சணையில் கிடந்தாள் செங்கமலச் செல்வி. வரவர அவள் பேச்சிலும் பெரிய மாறுதல் ஏற்பட்டிருந்தது. எதற் கெடுத்தாலும் வெடுக்கு வெடுக்கென்று பதில் சொல்லக் கூடிய சுபாவமுடைய செங்கமலச் செல்விக்குச் செவிலித்தாயின் கேள்விகளே சில வேளைகளில் காதில் விழ வில்லை. கேள்வி எழுந்த சில விநாடிகளுக்குப் பிறகு தூக்கிப் போட்டவள் போல், “என்னம்மா கேட்டாய்?” என்று விசாரிப்பாள். சில வேளைகளில் கேள்விக்குப் பதிலும் வராது. செவிலித்தாயும் அவள் மனநிலை அறிந்து மேற்கொண்டு எதுவும் கேட்க மாட்டாள்.

செங்கமலச் செல்வியின் துடுக்குத்தனம் சில தினங் களுக்குள்ளாகவே எங்கோ சென்று ஒடுங்கிவிட்டது; அவள் உணர்ச்சிகளை அடக்கம் பெரிதும் ஆட்கொண்டது. இதற் கெல்லாம் மூலகாரணம் எது என்று செங்கமலச்செல்வியே சில சமயங்களில் தன்னைக் கேட்டுக் கொண்டாள். அவள் அறிவு நிறைந்த சித்தத்துக்கு விடை கிடைக்கவும் அதிக நாள் ஆகவில்லை. ‘காரணம்’ வேட்டுவச் சத்திரத்தில் அன்றிரவு ஏற்பட்ட அந்த நிகழ்ச்சிதான். ‘திடீரென என் கையைத் துணிவுடன் பிடித்துக் காதுக்கருகில் சேதி சொன்னாரே அந்த நிகழ்ச்சிதான். அவர் கைபட்டதும் என் உடலில்தான் எத்தனை கூச்சம்! அவர் சேதி சொல்லக் காதுக்கருகில் வந்ததும் அவர் உதடு கன்னத்தில் பட்டுவிட்டால் என்ன செய்வது என்று எத்தனை பயம்!’ என்று தனக்குத்தானே விஷயத்தை விளக்கிக்கொண்டாள், செங்கமலச் செல்வி. அவர் தனது அண்ணன் என்று சொல்லியதும் சற்றே அடங்கிய அந்த உணர்ச்சி, அவன் தனது சொந்த அண்ணனல்ல என்று தெரிந்ததும், மீண்டும் எப்படிக் கட்டுக்கடங்காமல் பிரவாகிக்கத் தொடங்கி விட்டது என்பதை நினைத்துப் பார்த்ததும், இணையற்ற ஆனந்த சாகரத்தில் மூழ்கினாள் அரையன் ராஜராஜன் மகள். அத்தனைக்கும் கரிகாலனுக்கு மட்டும் தன் மனோநிலை புரியாதிருந்தது அவள் உள்ளத்தில் ஓரளவு வேதனையையும் விளைவித்திருந்தது. இப்படி வேதனையும் மகிழ்ச்சியும் நிறைந்ததைத்தான் காதல் என்று பாடு கிறார்களா என்ற விசாரத்திலும் இறங்கினாள் அவள்.

உண்மையில் கரிகாலன் மனோநிலை வேறுவிதமாகத் தான் இருந்தது. முதன் முதலில் வேட்டுவச் சத்திரத்து மாடி அறையில் அவளைச் சந்தித்த சமயத்தில், அவளுடைய அபரிமிதமான அங்கலாவண்யங்களைக் கண்டு அடியோடு மதி மயங்கிப்போன கரிகாலன், பின்னால் மெள்ளத் தன் மனத்தைப் பெரிதும் சமாதானப் படுத்திக் கொண்டான். ‘நான் அரையன் ராஜராஜனுக்கு வளர்ப்பு மகனென்றால், அவள் எனக்குத் தங்கையாகத் தானே இருக்க முடியும்? வேறு உறவு நீதிக்கு ஒவ்வாதது அல்லவா?’ என்று தர்மத்தைப்பற்றித் தனக்குத்தானே உபதேசித்துக் கொண்டு அந்த அண்ணன் தங்கை உறவு முறையை வளர்க்க முயன்றான். அத்தகைய உறவு முறையை அவன் வளர்க்க இஷ்டப்பட்டதற்கு முக்கியக் காரணமாயிருந்தவை, அவன் உள்ளத்தே சதா காட்சி அளித்துக் கொண்டிருந்த வேங்கி நாட்டு மன்னன் மகளின் வேல்விழிகள்!

அரையன் ராஜராஜன் பாசறையில் தங்கி அந்தப் பதினைந்து நாள்களுக்குள், எத்தனை எத்தனையோ முறைகள் நிரஞ்சனாதேவியின் எழிலையும், செங்கமலச் செல்வியின் அழகையும் இணைத்துப் பார்த்து எடை போட முயன்றான். கரிகாலன். எத்தனை முறை எடை போட்டாலும் துலாக்கோலின் எந்தத் தட்டு தாழ்கிறது, எது உயர்கிறது என்பதை மட்டும் நிர்ணயிக்க முடியாமல் திண்டாடினான். சிருஷ்டி மனிதமனத்தின் துலாக்கோலுக்கும் அப்பாற்பட்டதல்லவா? செண்பகப் பூ சிறந்ததா, செங்கழுநீர்ப் பூ சிறந்ததா? ஜாதிமல்லிகை சிறந்ததா, மகிழம் பூ சிறந்ததா? இந்தக் கேள்விகளுக்குப் பதிலில்லை. எடை போட்டு முடிவுக்கு வர முடியாத புதிர் இது.

சிருஷ்டியின் பிரிவு எதிலும் ஒரு தனி அழகு திகழ்கிறது. போதிய உயரத்துடனும், அளவுக்கு அடங்கி நின்ற அங்க அமைப்புகளுடனும், வீட்டுக்கொடிபோல் துவண்டு வளைந்து நின்றது நிரஞ்சனாதேவியின் எழிலுருவம். நல்ல உயரத்துடனும், படைத்தலைவன் பாசறையிலேயே வளர்ந்ததன்றிப் போர்ப் பயிற்சியும் நன்றாகப் பெற்றிருந்ததால், நல்ல கட்டுடைய உடலமைப்புடனும், செழுமை பெற்ற காட்டு மலரைப்போல் விளங்கினாள் செங்கமலச் செல்வி. இந்த இரு மாதர்களின் உருவங்கள் நித்தம் சித்தத்திலே எழுந்து நடனமிட்டதால், மிகுந்த மனத்தொல்லைக் குள்ளான கரிகாலன் தன் சுய நிலை புரியாமல் திண்டாடினான்.

என்னதான் தங்கையென்று உறவு கொண்டாட முயன்று, மனத்தில் கல்மிஷத்தை அண்டாமல் தடுக்க முயன்றாலும், கரிகாலனை இயற்கை உணர்ச்சிகள் வாட்டத்தான் செய்தன. அவை மூட்டிய நெருப்பைச் செங்கமலச் செல்வியின் செயல்களும் நன்றாக விசிறி கொண்டு விசிற ஆரம்பித்தன. அவனுக்கு வில்வித்தை பயிலுவிக்கும் நேரங்களில் அவள் நடந்துகொண்ட முறை களும், பார்த்த பார்வைகளும், நிஷ்களங்கமான அவன். மனத்தை வாட்டத் தொடங்கின.

விற்போர் முறைகளைக் கற்றுக் கொடுக்கச் செங்கமலச் செல்வி வேண்டுமென்றே காட்டுப் பகுதியைப் பொறுக்கினாள். காட்டில் இரண்டு நாள்கள் வித்தை கற்றதன் பயனாக, மனோதிடத்தை இழந்த கரிகாலன், மூன்றாம் நாள் காட்டுக்குப் போக மறுத்து, “செல்வி! வில்வித்தையை இங்குதான் சொல்லிக் கொடேன். காட்டுக்கு எதற்காகப் போக வேண்டும்?” என்றான்.

“ஏன்! போனாலென்ன?” என்று கேட்ட அவள் குரலில் தொனித்த கோபம், பார்வையிலும் தெரிந்தது.

“போனால் எதுவுமில்லை செல்வி! ஆனால் எதற்காக அவ்வளவு தூரம் போக வேண்டும்? இங்கேயே இடமிருக்கிறதே.”

“இங்கு இடம் மாத்திரமா இருக்கிறது?” தயக்கத்துடன் கேட்டாள் அவள்.

“வேறென்ன இருக்கிறது செல்வி?” “மனிதர்களும் இருக்கிறார்கள்.”

“இருந்தாலென்ன?”

“இருந்தாலென்னவா? நான் ஒரு பெண்; உங்கள் கையைத் தொட்டு நாணைப் பிடிக்கவும், அம்பைக் குறிவைக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டாமா! இதை நாலு பேர் எதிரில் செய்ய முடியுமா?” “செய்தாலென்ன! நீ என் தங்கைதானே?”

அவள் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது. “இப்படியும் ஒரு பைத்தியம் இருப்பீர்களா! உங்களை நான் அண்ண னென்றும் நீங்கள் என்னைத் தங்கையென்றும் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் உலகம் ஒப்புமா?”

“ஏன் ஒப்பாது? உன் தந்தை ஒப்புக்கொண்டு விட்டாரே!”

“தந்தை மாத்திரம் உலகமல்ல. தந்தை வீரர்களின் நாவைக் கட்டுப்படுத்தலாம். மனத்தையும் கண் பார்வையையும் கட்டுப்படுத்த முடியாது. பேசாமல் வாருங்கள்” என்று விடாப்பிடியாக அவனைப் புரவிமீது ஏறச் செய்து காட்டுக்கு அழைத்துச் சென்றாள்.

காட்டின் ரம்மியான பிரதேசங்கள் பலவற்றைச் செங்கமலச் செல்வி அவனுக்குக் காட்டிக் கொடுத்ததல் லாமல், காட்டு மரங்களின் மீது பரண் கட்டவும் சொல்லிக் கொடுத்தாள். அந்த மரப்பரண்களின் மீது அவனுடன் தானும் நெருங்கி உட்கார்ந்து மிருகங்கள் மீது வேலெறியவும் வில் கொண்டு துஷ்டப் பறவைகளை அடித்து வீழ்த்தவும் போதித்தாள். காலையில் காட்டுக்குள் புகுந்து பகல் வரை வேட்டையாடிக் களைத்த பின்பு, காட்டின் நீரோடையொன்றுக்கு அவனை நீராட அழைத்துச் செல்வாள்.

நீராட்டத்துக்குப் பிறகு இருப்பிடத்துக்குப் போக அவள் இஷ்டப்பட்டால் அவன் போகலாம். இல்லாவிடில் கனி வர்க்கங்களைப் பறித்து அவனுக்கும் கொடுத்துத் தானும் உண்பாள். பிறகு நீரோடைக் கரையின் பசும் புற்றரையில் வெகுநேரம் படுத்து ஆகாயத்தைப் பார்த்துக் கொண்டேயிருப்பாள். மரமல்லி மரங்கள் காற்றிலாடி அவள்மீது புஷ்பங்களை உதிர்க்கும்.

அத்தனை புஷ்பங்களில் எதையுமே விலக்காமல் படுத் திருப்பாள் செல்வி. கடைசியாக அவள் எழுந்திருப்பதும் கரிகாலன் கட்டாயத்தின் மேல்தான். பாசறைக்குத் திரும்பு வதற்கும், கலக்கமும் திகிலும் நிறைந்த அவள் பரிதாப விழிகளே காரணமாயிருந்தன. இப்படி இரு காட்டுப் பறவைகளைப்போல் சுதந்திரமாகத் திரிந்து வந்த அவர்கள் வாழ்வில் திடீரென ஒருநாள் நேர்ந்த நிகழ்ச்சியொன்று கரிகாலன் வாழ்க்கைப் பாதையை மீண்டும் வேறு திசையில் திருப்புவதற்குக் காரணமாயிற்று.

அன்று இருவரும் காட்டில் வேட்டையாடி முடிய வெகு நேரமாகிவிட்டதால், பகலவன் மறையும் சமயம் நெருங்கி விட்டதென்பதைச் சற்று முன்னதாகவே கிளம்பி விட்ட அரைமதி நிரூபித்தான். அதற்குப் பிறகும் வீட்டுக்குத் திரும்ப எத்தனிக்காமல், நீராட நீரோடைக்குச் சென்று நீண்ட நேரம் நீந்திக்கொண்டும் இருந்தாள் செல்வி. ஓடையின் வேறொரு புறத்தில் குளித்துவிட்டு, வஸ்திரங்களை அணிந்து புறப்படச் சித்தமாக நின்று கொண்டிருந்த கரிகாலன், பகலவன் மறைந்து விட்டதையறிந்து துடியாய்த் துடித்து, “செல்வி, நீந்தியது போதும் கிளம்பு” என்று அதட்டினான்.

அவள் நீரில் மல்லாந்து நீந்தியபடியே நகைத்தாள். வாயில் சிறிது நீரை உறிஞ்சி வாணம் போல் ஆகாயத்தில் ஊதினாள். அரைமதியும் தன் குளிர்க் கிரணங்களை அந்த நீர் வாணத்தின் மீதும் நீரில் மிதந்து கிடந்த அந்த நில மங்கையின் மீதும் பாய்ச்சினான். ஓடை நீர் பளபளத்தது. அதில் ஏதோ படகுபோல் ஆடிக்கொண்டிருந்த செங்கமலச் செல்வியின் கவர்ச்சியான உருவம் தண்ணீரில் லேசாக அமிழ்ந்து அமிழ்ந்து எழுந்தது. காண முடியாத அந்தக் காட்சியிலே திளைத்துவிட்ட கரிகாலன் மனமும் உணர்ச்சி ஓடையிலே அமிழ்ந்து எழுந்தது.

வெகுநேரம் இப்படி அவனை ஆட்டி வைத்த எழில் மங்கை கடைசியாக நனைந்த துண்டுடன் கரையேறி, மார்பிலே கைகளைப் புதைத்த வண்ணம் பக்கத்திலிருந்த ஒரு புதரை நோக்கி நடந்தாள். நனைந்த உடையில் வெளிப்பட்ட வசீகர எழிலையும் நடையினால் ஏற்பட்ட அசைவுகளின் வகையையும் கண்ட கரிகாலன் உணர்ச்சிகள் ஊசி முனையில் நின்றன. புதரருகில் சென்ற அவள் துண்டை எடுத்தெறிந்து சேலையை மாற்றிக்கொண்டாள். கரிகாலன் அவள் இருக்குமிடத்தைப் பார்க்க இஷ்டப்படாமல், வேறு பக்கம் திரும்பி நின்றுகொண்டான். சில விநாடிகள் பறந்தன. பின்னால் காலடி ஓசை கேட்டது. கரிகாலன் அசையாமலே நின்றான். அழகிய பூங்கரமொன்று பின்னால் நின்றபடியே அவன் தோளில் புரண்டது. முதுகில் அழுந்தித் துவண்டது, ஒரு பூவுடல். எங்கிருந்தோ வந்த காட்டு மலர்களின் சுகந்தம் விபரீத நிலையைச் சிருஷ்டித்தது. அவன் கன்னத்தில் மெள்ள உராய்ந்தது மற்றொரு கன்னம். என்ன செய்வது, ஏது செய்வது என்று தெரியாமல், விபரீத நிலையில் திகைத்து நின்றான் கரிகாலன். தோள் மீது முதலிலிருந்த கரம் கீழ் இறங்க, மற்றொரு பூங்கரம் அவன் இடைவழியாக மேல் நோக்கி அவன் உடலில் தவழ்ந்து சென்றது. இரண்டு புஷ்பஹாரங்களால் கட்டுண்டவன் போல் இரு கரங்களுக்குமிடையே திணறினான் கரிகாலன். இனி நீ எங்கே தப்பப்போகிறாய்? என்று கிளைகளை ஆட்டிக் கரிகாலனை நகைத்த மல்லிமரம், தன் நீண்ட மலர்களை அவன் மீது பொல பொலவெனத் தூவியது. துஷ்ட சந்திரனும் கிளை இடுக்குகளின் வழியாக மெள்ள எட்டிப் பார்த்தான். அது மட்டுமா! “ஏன் பேசாமலிருக்கிறீர்கள்! கோபமா?” என்று பாம்பை நோக்கி ஊதப்படும் மகுடியின் புன்னாகவராளி ஸ்வரங்களைப் போல், செல்வியின் இனிய குரல் அவன் காதுகளில் ஒலித்தது. அவள் குரல் குழைந்தது. பவள இதழ்கள் லேசாக அந்தக் குழந்தை முகத்தில் அழகிய கன்னத்தை நோக்கித் திரும்பின.

Previous articleMannan Magal Part 1 Ch 32 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here