Home Historical Novel Mannan Magal Part 1 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

95
0
Mannan Magal Ch 34 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 34 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 34 மந்திராலோசனை

Mannan Magal Part 1 Ch 34 | Mannan Magal | TamilNovel.in

இன்பத்தையெல்லாம் கொள்ளை கொள்ளையாக அள்ளிக் கொட்டிய இயற்கையின் இணையற்ற அந்தச் சூழ்நிலையில், செங்மலச் செல்வியின் சேஷ்டைகளால் கனல் பொறிகள் கணக்கின்றி உடலெங்கும் வாரித் தெளித்ததன் காரணமாகப் பெரும் கலக்கத்தையும் குழப்பத்தையும் அடைந்த கரிகாலன் சற்று நேரம் செயலற்று நின்றான்.

அவன் படித்த தத்துவங்கள் எங்கோ காற்றில் பறந்து கொண்டிருந்தன. அவன் சாஸ்திரஞானம் அஞ்ஞானத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தது. தர்க்கத்தில் அவனுக்கு இருந்த ஞானம் ஏதோ தர்க்கங்களை அள்ளிக் கொட்டிக் கொண்டிருந்ததேயொழிய அவன் சித்தத்தில் தெளிவைச் சிருஷ்டிக்கவில்லை. காமத்தின் சுழலில் சிக்கு கிறவன் கண்ணில்லாதவன் என்று இதனால்தான் பெரியோர்கள் எழுதியிருக்கிறார்களா என்ற கேள்வி கரிகாலன் புத்தியிலே உதயமானாலும், அந்தக் கேள்வியைத் தொடர்ந்து செயலாற்றும் வலிமையைச் செங்கமலச் செல்வியின் பூவுடல் பறித்துச் சென்றுவிட்டது. சூடாமணி விஹாரத்திலிருந்து விதி மட்டும் வேங்கி நாட்டுக்கு அழைத்துச் செல்லாமல் நேராக அரையன் ராஜராஜன் பாசறைக்கு இழுத்து வந்திருந்தால் கரிகாலன் வாழ்க்கை வரலாறும் நாட்டின் இந்தக் கட்டத்தோடு முடிந்து போயிருக்கும். பிற்காலத்தில் அவனுக்கு ஏற்பட்ட புகழ்ச்சியும் விருதுகளும் காட்டின் அந்த நிகழ்ச்சிகளிலேயே புதைபட்டுப் போயிருக்கும். எவரும் நிலைகுலைந்து போகக்கூடிய இந்த நிகழ்ச்சியிலிருந்தும், வேங்கி நாட்டு மன்னன் மகளே அவனைக் காப்பாற்றினாள்.

செல்வி தனக்குப் பின்னால் நின்று ஏதோ வார்த்தை களை தன் காதுக்கருகில் உதிர்த்ததை மெள்ள மெள்ளச் சிந்தித்த கரிகாலன் மனம், சிலநாள்கள் பின்னோக்கி ஓடி, வேங்கி நாட்டிலிருந்த வசந்த மண்டபத்தை அடைந்தது.

காமனின் கரும்பு வில்லைப்போலும், பஞ்ச பாணங் களைப் போலும் பஞ்சணையில் கிடந்த பைங்கிளியைப் பற்றி அவன் மனம் சிந்திக்கலாயிற்று. அந்த இரவுக்கும் இந்த இரவுக்கும் இருந்த நேர் எதிரான வித்தியாசத்தையும் நினைத்துப் பார்த்ததன் காரணமாக, அதுவரை சிலையென இருந்த கரிகாலன் முகத்தில் கூட மகிழ்ச்சியின் குறிகள் லேசாகப் படர்ந்தன. இதழ்களும் புன்முறுவல் கூட்டிச் சிறிதே விரிந்தன.

‘அன்று சாளரத்தின் மூலமாக வெளியே நோக்கிக் கொண்டு அவள் நின்றாள். அவளுக்குப் பின்னால் நெருங்கி நான் நின்றேன். நான்தான் பேசினேன். இன்று எனக்குப் பின்னால் இவள் நிற்கிறாள். கிள்ளை மொழிகளை என் காதிலே இந்தக் கள்ளி உதிர்க்கிறாள். அன்று காரிருள்; அந்தக் காரிருளிலும் என் இதயத்தே பெருநிலவு படர்ந்து கிடந்தது. இன்று பெருநிலவுதான். ஆனால் இதயத்தில் நிலவு இல்லையே. இருள் சூழந்து கிடக்கிறதே! அன்று அவளும் நானும் உணர்ச்சிவசப்பட்டு நின்றோம். ஆனால், அன்று இருவருக்கும் ஒருமித்த உணர்ச்சி; இன்றோ இருவருக்கும் மாறுபட்ட உணர்ச்சிகள்! அன்று அவள் பின்னால் நான் செல்ல, இன்று என் பின்னால் இவள் வர, என்ன சங்கிலித் தொடர் போன்ற சம்பவங்கள்! வாழ்க்கையே ஒரு சங்கிலித் தொடர்தானா?’ என்று விஷயங்களை வரிசையாகக் கோத்துப் பார்த்த கரிகாலன் மனம், மெள்ள மெள்ளச் சுய உணர்ச்சியை அடையவே, அவயவங்களும் அதற்கேற்ப அசைந்தன. தன்னைத் தழுவி நின்ற செங்கமலச் செல்வியின் இரு கைகளையும் மெள்ளத் தன் கைகளால் அகற்றித் தன்னை விடுவித்துக்கொண்டு அவளை நோக்கித் திரும்பினான் கரிகாலன்.

அவள் கண்கள் அவனை ஒரு விநாடிதான் பார்த்தன. பிறகு நேருக்கு நேர் சந்திக்கச் சக்தியற்றுக் கீழே தாழ்ந்தன. அவள் உள்ள உணர்ச்சிகளைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட கரிகாலன் தன் கரங்களிரண்டையும் அவள் தோள் மீது ஆதரவுடன் வைத்தான். பிறகு ஒரு கையால் அவள் கன்னங்களை இருபுறமும் பற்றித் தாக்கிக் கண்களைக் கூர்ந்து நோக்கி, “இது சரியல்ல செல்வி! உனக்குப் புரியவில்லையா?” என்றான். பதிலுக்கு அவள் உதடுகள் ஏதோ முணுமுணுத்தன. ஆனால் குரலின் பலவீனத் தாலோ என்னவோ, அவள் என்ன சொன்னாள் என்பது அவன் காதில் விழவில்லை. எதையும் திடமாகவும் வெடுக் வெடுக்கென்றும் பேசக்கூடிய செல்வியின் குரல், உணர்ச்சியால் பலவீனப்பட்டுக் கிடந்ததைக் கண்ட கரிகாலன் அந்தப் பலவீனத்தை அழிக்க எண்ணி, அவள் தோளை ஒரு முறை அசக்கி, “செல்வி! சொல்வதைத் தைரியமாகச் சொல்லேன், என்னிடம் உனக்கு பயமென்ன?” என்று வினவினான்.

ஸ்பரிசத்தின் உணர்ச்சி பலமானதுதான். ஆனால் அது அளவுக்குமீறிப் போகும்போது மென்மையான உணர்ச்சிகள் உடலை ஊடுருவுவதில்லை. சாதாரண நிலையையே அடைகிறோம். கரிகாலன் கைகள் தன்னைப் பலமாக அசக்கியதாலும், கன்னத்தைப் பிடித்துத் தூக்கியதாலும் ஓரளவு சாதாரண நிலையை அடைந்துவிட்ட அரையன் ராஜராஜன் மகளும் அவனை விட்டுச் சிறிது விலகி நின்று “உங்களிடம் எனக்குப் பயம் எதற்கு?” என்று பதிலுக்கு ஒரு கேள்வியை வீசினாள்.

“பயமில்லாவிட்டால் இரைந்து பேசுவதுதானே?” என்றான் கரிகாலன், ஏதோ சம்பாஷணையைத் தொடர வேண்டும் என்பதற்காக.

“எதற்காக இரைந்து பேச வேண்டும்? இங்கே படைகள் திரண்டு நிற்கின்றனவா? அவற்றுக்கு உத்தரவு போட வேண்டுமா? நீங்களும் நானும் தனிமையில் இருக்கிறோம். இங்கே கூச்சலுக்கு அவசியமில்லையே!” என்றாள் அவள்.

“நான் கூச்சலா போடச் சொன்னேன்?”

“வேறென்ன சொன்னீர்கள்?”

“பேசுவதைக் காது கேட்கும்படி சொல்வதுதானே” என்றேன்.

“காதுக்கு ஏதும் பழுதில்லையே?”

“எத்தனை குறும்பு உனக்கு! வா இப்படி.”

“வரமாட்டேன்.”

“வரமாட்டாய்?”

“ஊஹூம்.”

அவன் அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான். அவள் பின்னுக்கு நகர்ந்தாள். அவன் கால்கள் துரிதமாக நடந்தன. அவள் ஓடினாள்; அவனும் அவளைத் துரத்தி ஓடிக் கடைசியாகக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து புரவிகளுக்கு அருகில் நிறுத்தி, “உம், ஏறு” என்றான்.

“எதற்கு?”

“பாசறைக்குச் செல்ல வேண்டும்.”

“என்ன அவசரம்?”

“உனக்கு என்ன பைத்தியம் பிடித்திருக்கிறதா?”

“பைத்தியம் எனக்கல்ல; உங்களுக்குத்தான். காலையில் வேட்டையாட வந்த வாலிபனும் மங்கையும் திரும்பப் பாசறைக்கு இருட்டி ஒரு நாழிகைக்குப் பின் சென்றாலென்ன, பத்து நாழிகைக்குப் பிறகு சென்றாலென்ன இரண்டும் ஒன்றுதானே?” என்று சொல்லிச் சிரித்தாள் அவள்.

தன்னுடைய நிலைமையைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட கரிகாலன், திக்பிரமை பிடித்து நின்றான். இரு வரும் அத்தனை நாழிகைக்குப் பிறகு சைன்னியங்களின் இடையே ஒன்றாகச் சென்றால், படைவீரர்கள் என்ன நினைப்பார்கள், என்ன பேசுவார்கள் என்பதையெல்லாம் நினைத்துப் பார்த்து, செங்கமலச் செல்வி தன்னை எத்தனை இக்கட்டான நிலையில் கொண்டு வந்து வைத்து விட்டாள் என்பதை எண்ணிச் சொல்லவொண்ணாத கோபம் கொண்டான். தன்னை மகனாக ஏற்றுக்கொண்ட அரையன் ராஜராஜன், தான் மருமகன் பதவிக்கு ஏற்பாடு செய்வதாக நினைத்துக் கொண்டால், தன்னைப்பற்றி என்ன கேவலமான அபிப்பிராயத்துக்கு வருவார் என்பதை எண்ணியதால் மனம் புண்ணாகிச் செல்வியுடன மேற் கொண்டு எதுவும் பேசாமல் பலவந்தமாக அவளைப் புரவி மீது தூக்கி உட்கார வைத்துத் தானும் புரவி மீது ஏறி அரையன் ராஜராஜன் பாசறையை நோக்கிக் குதிரையை நடத்தினான். செல்வியின் குதிரையும் கரிகாலன் மனஓட்டத்தை அறிந்துகொண்டது போல அவன் குதிரைப் பக்கத்திலேயே சென்றது. பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் காலையில் வேட்டைக்கு வந்த அவ்விரு வரும், பேச்சோ சிரிப்போ இன்றி, மௌனத்தின் அடிமைகளாக அரையன் ராஜராஜன் பாசறைக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.

உணர்ச்சிவசப்பட்ட அவ்விருவரது வாய்கள் பேச வில்லையே தவிர உள்ளங்கள் பேசிக்கொண்டிருந்தன. ஏதோ இரு பதுமைகள் போலக் கூடாரங்களுக்கிடையே சென்ற அந்த இருவரையும் படைவீரர்கள் பார்த்ததோ, கிசுகிசுவென்று பேசிக்கொண்டதோ, உள்ளங்களின் உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கியிருந்த அவ்விருவரின் கண்களிலோ காதுகளிலோ படவில்லை. நேராகத் தங்கள் இருப்பிடத்துக்குச் சென்ற அவ்விருவரும், மாளிகையின் வாசலிலேயே பிரிந்து உள்ளே சென்றார்கள். அன்று இரவின் உணவு இருவருக்கும் வேம்பாயிருந்தது. ஆனால் படுக்கச் சென்றபின் ஏற்பட்ட தனிமையில் மட்டும் பெருத்த வித்தியாசமிருந்தது. பஞ்சணையில் தனியே படுத்துக் கிடந்த செங்கமலச் செல்வி, சாளரங்களைத் திறந்து வைத்துக்கொண்டு வானத்திலோடிய வெண் மதியையே நோக்கிக் கொண்டிருந்தாள். காட்டில் நடந்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் அவள் உள்ளத்துக்குப் பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருந்தது. ‘அப்பா! பார்வைக்கு மெல்லியதாயிருக்கும் அவர் உடல் எத்தனை இரும்பாயிருக்கிறது. அதைச் சுற்றி வளைத்த என் கைகள் எவ்வளவு வலியெடுத்துவிட்டன! நான் அவர் கன்னத்தில்-‘ என்று நினைத்துக் கொண்டுபோன அவள் சிந்தையை வெட்கம் சிறிது அறுத்தது. ஆனால் மீண்டும் நினைவைத் தொடர்ந்தாள். ‘எதற்காக அவர் என் கன்னத்தை அப்படிப் பிடித்து உயர்த்திக் கண்களைப் பார்த்தார்? ஆமாம், அதென்ன நான் குழந்தையா, என்னை அத்தனை சுலபமாகத் தூக்கி குதிரையின் மீது உட்கார வைக்க! நானும் போர்ப்பயிற்சி செய்தாலும் ஆண்களைவிட எனக்குப் பலம் குறைவுதானோ? ஆகா அவர் பேசிய அழகு! இது சரியல்ல செல்வி! உனக்குப் புரியவில்லையே! என்ன அசட்டுத்தனமான கேள்வி! என்று பலப்பல விதமாகச் சிந்தித்த அவள், நித்திரை வராமலே பஞ்சணையில், இல்லை, இன்ப அலைகளில் புரண்டாள்.

ஆனால் கரிகாலன் எண்ணங்கள் வேறு திசையில் ஓடிக்கொண்டிருந்தன. காட்டின் நிகழ்ச்சிகள் அவன் இதயத்திலே பேரதிர்ச்சியை விளைவித்திருந்தன. சூடாமணி விஹாரத்தில் தான் நன்றாக வளர்க்கப்பட்டதற்குக் காரணபூதனான அரையன் ராஜராஜனுக்குத் துரோகம் செய்வது, எந்தத் தர்மத்துக்கும் ஒவ்வாது என்ற முடிவுக்கு வந்தான் கரிகாலன். மன்னன் மகளிடம் ஏற்கெனவே மனத்தைப் பறிகொடுத்துவிட்ட அவனுக்கு, அந்தக் கணத்திலே இரு மங்கையருக்கு இடமில்லை என்பதை அறிய அதிக நேரம் பிடிக்கவில்லை. அத்துடன் செங்கமலச் செல்வியின் மனோநிலையும் அவனுக்குப் புரிந்தே இருந்தபடியால், அவன் உள்ளத்தே வேதனையும் நிரம்பிக் கிடந்தது. உள்ளத்தை ஒருவனுக்குக் கொள்ளை கொடுத்த அந்தக் கிள்ளை மொழியாளின் பிற்கால வாழ்க்கை ‘எந்த வழியில் திரும்பும்’ என்றும் தன்னைக் கேட்டுக் கொண்டான். ‘எந்த வழியில் திரும்பினாலும், அவள் பாதை வேறு, என் பாதை வேறு. என் வாள் விமலாதித்தன் மகளுக்கு அடிமை. ஜெயசிம்மன் ஆதிக்கத்தை வேங்கி நாட்டில் உடைத்து, இராஜராஜ நரேந்திரனை உண்மையான மன்னன் ஆக்கி, நிரஞ்சனாதேவிக்குச் சாந்தியளிக்கும் வரையில் என் வாழ்க்கையின் கடமை நிறை வேறாது. அதுவரை காதலில்லை, மணமில்லை, எதுவுமே இல்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டான் கரிகாலன். காட்டின் நிகழ்ச்சிகள் சிருஷ்டித்துவிட்ட நிலையில் தான் அதிக நாள் அரையன் ராஜராஜன் பாசறையில் தங்கியிருப்பதிலும் அர்த்தமில்லை என்பதைச் சந்தேகமறப் புரிந்து கொண்ட கரிகாலன், தன் வாழ்க்கையைப் போர்ப் பாதையில் திருப்பத் தீர்மானித்தான். இந்த முடிவுக்கு வந்த அவன், சூடாமணி விஹாரத்திலிருந்து புறப்பட்ட காரியத்தை அறவே மறந்தான். பிறப்பு மர்மத்தை அறியும் பணிஇரண்டாம் பட்சமாயிற்று. அரையன் ராஜராஜன் பாசறையை அடைய அவன் பட்ட கஷ்டங்களெல்லாம் அவன் சித்தத்திலிருந்து மறைந்து, எப்படியாவது அந்தப் பாசறையை விட்டு அகன்றால் போதும் என்ற தீர்மானத்துக்கு வந்த அவன், மறுநாளே அதைப்பற்றி அரையன் ராஜராஜனிடம் பிரஸ்தாபிக்கவும் முற்பட்டான்.

மறுநாள் உணவு அருந்தும் வேளையில், மெள்ளப் பேச்சைத் துவக்கிய கரிகாலன், “தந்தையே! போர்ப் பயிற்சியை நான் எப்பொழுது பெறுவது?” என்று கேட்டான்.

எங்கோ யோசித்துக்கொண்டு உணவருந்திக் கொண் டிருந்த அரையன் ராஜராஜன், இந்தக் கேள்வி காதில் விழுந்ததும், சரேலென நிமிர்ந்து தன் கூரிய விழிகளைக் கரிகாலன் மீது நாட்டி, “என்ன போர்ப் பயிற்சியா! உனக்குப் போர்ப் பயிற்சி அளிக்கப்படவில்லை?” என்று ஆச்சரியத்துடன் வினவினான்.

“இல்லை தந்தையே!” என்றான் கரிகாலன்.

இதைக் கேட்ட அரையன் ராஜராஜன், தன் விழிகளைக் கரிகாலனிடமிருந்து தன்னுடைய மற்றொரு பக்கத்தில் உட்கார்ந்திருந்த செங்கமலச் செல்விமீது திருப்பி, “செல்வி, இவனுக்கு நீ பயிற்சியளிக்கவில்லையா?” என்று வினவினான்.

செங்கமலச் செல்வி கண்களை மேலுக்குத் தூக்கா மலும், தந்தையையோ கரிகாலனையோ பார்க்காமலுமே பதில் சொன்னாள்: “பயிற்சியளிக்கிறேன்; தினந்தான் சொல்லிக் கொடுக்கிறேன்” என்று.

இதைக்கேட்ட கரிகாலன் இதழ்களில் சிறுநகை அரும்பியது. “பயிற்சி கிடைக்கிறது தந்தையே! ஆனால் அது நான் விரும்பும் பயிற்சியல்ல” என்ற கரிகாலன் பேச்சில், சிறிது விஷமமும் கலந்திருந்தது.

மிகத் தீட்சண்யமான புத்தியுடைய அரையன் ராஜராஜன், அந்த இருவருக்குமிடையில் ஏதோ மனத்தாங்கல் இருக்கிறது என்பதை உணர்ந்துகொண்டாலும், அது என்ன என்று அறியமாட்டாதவனாய் இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டுக் கடைசியாகக் கரிகாலனை நோக்கி, “நீ விரும்பும் பயிற்சி எது கரிகாலா?” என்று வினவினான்.

சோழர் படைத்தலைவன் கண்கள் தன்னையும் செல்வியையும் மாறி மாறிப் பார்த்ததையும், அவற்றில் எழுந்த சந்தேகச் சாயையும கவனித்த கரிகாலன், அவனிடம் அதிகக் கேலியை வைத்துக் கொள்வதில் பேராபத்து இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு, பேச்சை வேறு திசையில் திருப்பி, “தந்தையே! செல்வி விற்போர்ப் பயிற்சி அளித்திருக்கிறாள். வேறு சில படைத் தலைவர்கள் வேலெறிவதையும் யானையை நடத்தும் முறையையும் கற்பித்திருக்கிறார்கள். ஆனால் படைகள் அணிவகுப்பு, அவற்றை நடத்தும் முறைகள் இவற்றை யாரும் கற்பிக்கவில்லையே” என்றான்.

அரையன் ராஜராஜன் உணவை முடித்துக்கொண்டு எழுந்து, சிறிது நேரம் அறையில் நடமாடிக்கொண்டே கரிகாலனை நோக்கினான். கடைசியாக அவன் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் மிக நிதானமாக வெளிவந்தன. “கரிகாலா! படைகளை நடத்தும் முறைகளைக் கற்பிக்க நான் ஏற்பாடுகளைச் செய்யாததற்குக் காரணமிருக்கிறது” என்றான் சோழர் படைத்தலைவன்.

“என்ன காரணம்?” என்று கேட்டான் கரிகாலன்.

“காரணத்தைச் சொல்ல முடியாது.”

“ஏன்?”

“அதில் பல அரசியல் சிக்கல்கள் பிணைந்து கிடக் கின்றன.”

“காரணத்தைச் சொல்லவும் முடியாது; படைகளை அணிவகுத்து நடத்தக் கற்பிக்கவும் முடியாது. உங்கள் பேச்சு விசித்திரமாயிருக்கிறது. படைகளை அணிவகுத்து நடத்துவது என் பிறப்புரிமை இதை நான் பயில வேண்டுமென்று சூடாமணி விஹாரத் தலைவர் சொன்னாரே.”

‘’அது அவர் அபிப்பிராயம்.”

‘’அப்படியானால் இந்த இடத்திலிருந்து செல்ல எனக்கு விடையளியுங்கள்.”

“எங்கு போகப் போகிறாய்?”

“வாழ்க்கையில் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் இடத்திற்கு.”

“அப்படி இடம் இருக்கிறதா?”

“ஏன் இல்லை? வேங்கி நாடு இல்லையா?”

அரையன் ராஜராஜன் மீண்டும் கரிகாலனை உற்றுப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, “கரிகாலா! விதி விசித்திரமானது. என் வாயைக் கட்டியதோடு நில்லாமல், உன் வாழ்க்கையையும் என்னுடன் பிணைத்துவிட்டது. அதற்கு நான் படியத்தான் வேண்டியிருக்கிறது. உன்னை நான் இங்கிருந்து அனுப்ப முடியாது. ஆனால், போர்ப் பயிற்சி அளிக்கிறேன் ஒரு நிபந்தனையின் மேல்” என்றான்.

“நிபந்தனை என்ன தந்தையே?”

“உன் பிறப்பு மர்மத்தை அறிய எந்தவித முயற்சியிலும் நீ ஈடுபடக் கூடாது.”

“இதற்கும் நான் படைகளை நடத்தப் பயிற்சி பெறு வதற்கும் என்ன சம்பந்தம்?”

“நிரம்ப இருக்கிறது. மேற்கொண்டு எதுவும் பேசாதே. நிபந்தனைக்கு ஒப்புக்கொள்கிறாயா?”

“வேறு வழிதான் இல்லையே” என்று பதில் சொன்ன கரிகாலன், அரையன் ராஜராஜன் கேட்டபடி ஆணையிட்டும் கொடுத்தான். அந்த ஆணையிட்ட மறுநாளே கரிகாலனைத் தனது பாசறையிலிருந்து படைகளின் முன்னணிக்கு அனுப்பி வைத்தான் அரையன் ராஜராஜன். படைகளின் அணிவகுப்பைப் பற்றி ஏட்டுச் சுவடிகளில் ஏராளமாகப் படித்திருந்த கரிகாலன், அவர்களிடம் பயிற்சி பெற்றதோடல்லாமல், அவர்கள் வியூகங்களை அமைக்கும் முறைகளிலிருந்த குறைபாடுகளையும் உணர்ந்து கொண்டான். படை அணிவகுப்பில் அவனுக்கிருந்த பேரறிவைக் கண்டு வியந்துபோன அரையன் ராஜராஜனின் உபதளபதிகளும், “இவனுக்கு எதற்காகப் பயிற்சி?” என்று தங்களுக்குள்ளேயே விவாதித்துக் கொண்டார்கள். இந்த விஷயம் அரையன் ராஜராஜன் காதுக்கும் எட்டவே, தன்னுடைய மந்திராலோசனை சபையிலும் கரிகாலனுக்கு இடம் கொடுத்தான் சோழப் படைத்தலைவன்.

வேங்கி நாட்டின் மீது எப்படிப் படையெடுப்பது, எந்த இடத்தில் தாக்குவது என்பதைப் பற்றிய மந்திராலோசனை அது. அந்த மந்திராலோசனை மண்டபத்தில் சோழர் படைத்தலைவர்கள் எல்லோருமே கூடியிருந்தார்கள். பிரும்ம தேசத்தை ஆண்டவனும், இராஜேந்திர சோழ தேவனின் அத்தை குந்தவையின் கணவனும் இராஜேந்திர சோழதேவன் பிரதானப் படைத்தலைவர்களில் ஒருவனுமான வல்லவரையன் வந்தியத்தேவனும், கரிகாலனால் பல உபத்திரவங்களுக்கு ஆளானவனும் பிரும்மாண்ட மான சரீரம் படைத்தவனுமான பிரும்ம மாராயனுங்கூட அந்தச் சபையிலே வீற்றிருந்தார்கள். அந்தச் சபையிலே, கையிலே ஒரு கரித்துண்டை எடுத்துக்கொண்ட அரையன் ராஜராஜன், எதிரேயிருந்த மரப்பலகையில் வேங்கி நாடு, இடைதுறை நாட்டு இடங்களைக் கோடுகளாக இழுத்து, சோழர் படைகள் எந்த இடத்தில் தாக்க வேண்டும் என்பதை விவரிக்கலானான்.

“இதோ இருக்கிறது வேங்கியின் தலைநகர், இதோ இருக்கிறது இடைதுறை நாடு. இரண்டுக்கும் மத்தியில், கிருஷ்ணா நதியின் சரிபாதி இடத்தில், அக்கரையிலும் இக்கரையிலும் படைகளை நிறுத்தினால், இடைதுறை நாடும் வேங்கி நாடும் துண்டித்துப் போகும். அப்படித் துண்டித்த பிறகு, படைகளின் இரு பகுதிகளும் கிழக்கிலும் மேற்கிலும் அதாவது நேர் எதிர் திக்குகளில் நகர்ந்தால், வேங்கியையும் இடைதுறை நாட்டையும் ஏககாலத்தில் தாக்கலாம்” என்ற அரையன் ராஜராஜன், மற்றப் படைத் தலைவர்களைத் திரும்பிப் பார்த்தான்.

அரையன் ராஜராஜன் போர் திட்டத்தைப் படைத்தலைவர்கள் ஆமோதித்தார்கள். ஆனால் அந்தத் தலையாட்டம் அடுத்த விநாடி நின்றது. ஏதோ பெரிய இடியே அந்த மந்திராலோசனையின் தலையில் விழுந்துவிட்டது போன்ற உணர்ச்சி சபையில் ஏற்பட்டது. “இந்தத் திட்டத்தில் ஒரு குறை இருக்கிறது” என்று நீரில் விழுந்த கல்லைப் போல அமைதியைக் குலைத்தது ஒரு மெல்லிய குரல். ஈட்டிகள் போன்ற இருபது கண்கள் கரிகாலன் மீது பாய்ந்தன. ‘போரைக் கண்ணால் கூடப் பார்த்திராத இந்தச் சிறு பயலுக்கு என்ன துணிவு. பல போர்களைக் கண்டு வெற்றி வாகை சூடிய அரையன் ராஜராஜன் திட்டத்தில் குறைபாடு காண?’ என்று அவர்கள் உள்ளத்திலே எழுந்த கோப ஜ்வாலை முகங்களிலும் கொழுந்துவிட்டு எரிந்தது. “இன்னும் ஒரு முறை வாயைத் திறந்தால் வேங்கி நாட்டில் உன்னை வெட்டாத நான் இங்கு வெட்டிப் போடுவேன்” என்று இரைந்து எழுந்த பிரும்ம மாராயன், தன் கையை வாளுக்காகவும் கொண்டு போனான்.

முதல் பாகம் முற்றும்

Previous articleMannan Magal Part 1 Ch 33 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here