Home Historical Novel Mannan Magal Part 1 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

92
0
Mannan Magal Ch 4 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 4 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 4 நட்சத்திரங்கள் நகைத்தன

Mannan Magal Part 1 Ch 4 | Mannan Magal | TamilNovel.in

கும்பகோணம் புத்த மடாலயத்திற்குக் கரிகாலன் வந்து சேர்ந்த இரண்டாம் நள்ளிரவின் ஆரம்ப ஜாமத்தில், அந்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷீவின் அந்தரங்க அறையில், தஞ்சைத் துறவியார் பரீட்சை செய்யத் தொடங்கிய அந்தப் பச்சைக்கல் மோதிரம் சாளரத்தருகே மறைந்து நின்றபடி உள்ளே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த சைவத் துறவியின் உடலை ஓர் உலுக்கு உலுக்கியேவிட்டது. எத்தனை பெரிய ரகசியம் அந்த மோதிரத்தில் புதைந்து கிடக்கிறது என்பதைக் கண நேரத்தில் புரிந்துகொண்ட காரணத்தால், பேசவோ அசையவோ சக்தியற்று ஒருவிநாடி கல்லாய்ச் சமைந்த சிலையென நின்றுவிட்ட அவருடைய தேகத்தில், அடுத்தவிநாடி பல பயங்கர அலைகள் பாய்ந்து சென்றன. உணர்ச்சி மிகுந்ததால் நரம்புகள் சற்றே தளர்ச்சி கொடுத்து உடலில் நடுக்கத்தைக் கொடுத்தன. அந்த நடுக்கத்தின் போது, ‘அவன் மகனா இவன்!’ என்று உச்சரித்த சொற்களும் நடுங்கியே உதிர்ந்தன. இந்த ரகசியம் வெளியானால் என்ன விளையும்?’ என்பதை நினைத்துப் பார்த்த சைவத் துறவி, அதிகமான பீதியால் மேற்கொண்டு எதையும் நினைக்காமலும் மனத்தில் எழுந்த கேள்விக்குப் பதில் தம் உள்ளத்தில் கூட எழவொட்டாமலும் அடக்கி விட்டு, அறைக்குள்ளே மேற்கொண்டு என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்கலானார்.

மோதிரத்தைப் பற்றியும் மோதிரத்தின் ரகசியத்தைப் பற்றியும் சைவத்துறவியார் அவ்வளவு தூரம் நடுங்கினாரே தவிர, தஞ்சையிலிருந்து வந்த புத்தத்துறவி எந்தவிதப் பயத்தையோ வேறெவ்வித உணர்ச்சியையோ முகத்தில் காட்டாமலே, ஏதோ நகை வியாபாரி நோட்டம் பார்ப்பது போல மோதிரத்தை நீண்ட நேரம் பரிட்சை செய்தார். பிறகு அந்த மோதிரத்தை அறையின் கோடியில் புத்தர் சிலைக்குப் பக்கத்திலிருந்த ஒரு விளக்குக்கருகில் கொண்டு போய் அதன் உட்பக்கத்திலிருந்த வரிகளை மிக நிதானமாகப் படித்தார். மோதிரத்தின் உட்பக்கத்தில் வெட்டப்பட்டிருந்த ‘கரிகாலன்’ என்ற ஒரு வார்த்தையைப் படிக்க எதற்காக அத்தனை நேரம் ஆக வேண்டும் என்று கரிகாலன் நினைத்து வியந்தான். புத்த விஹாரத்தின் தலைமைப் பிக்ஷக்குக்கூட அது ஆச்சரியமாகத்தா னிருந்தது. தஞ்சைத்துறவி வீண் விஷயத்திற்குக் காலத்தை நீட்டுகிறார் என்று நினைத்த விஹாரத் தலைவர், “ஏன் சுவாமி! அதில் அத்தனை தூரம் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று சலிப்புடனே கேட்டார்.

அவர் குரலில் கண்ட சலிப்பையும், கரிகாலனுக்கும் தலைமைப் பிக்ஷவுக்கும் இருந்த அவசரத்தையும் தஞ்சைத் துறவி உணர்ந்துகொண்டாலும், அவர்களது சலிப்பையோ அவசரத்தையோ லட்சியம் செய்யாமல் மிக நிதானமாகவே ஆராய்ந்தார். பிறகு தலைமைப் பிக்ஷவை நோக்கி, “மான்தோல் ஒரு துண்டு கொண்டுவரச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார்.

“மான் தோலா? எதற்காக?” என்று வினவினார் தலைமைப் பிக்ஷ.

“மடாலயத்தில் நாய்த்தோல் எங்கே கிடைக்கப் போகிறது?” என்று பதில் சொன்னார் தஞ்சைத்துறவி.

இதைக் கேட்டதும் சாந்த சொரூபியான தலைமைப் பிக்ஷவின் முகத்திலும் கோபக்குறிகள் தோன்றத் தொடங்கின. குரலிலும் சற்று உஷ்ணம் தொனிக்கப் பேசத் தொடங்கிய தலைமைப் பிக்ஷீ, “நாய்த்தோல் மட்டும் போதுமா? அல்லது வேறு ஏதாவது மிருகங்களின் சருமங்களும் சுவாமிக்குத் தேவையாக இருக்குமா?” என்று கேட்டதுமல்லாமல், “இதை வேட்டைக்காரன் வீடு என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் போலிருக்கிறது? இது புத்த விஹாரம் சுவாமி. இங்கு எந்த மிருகங்களையும் கொல்வதில்லை” என்று சற்று அழுத்தமான குரலிலும் சொன்னார்.

தஞ்சைத் துறவியார் புத்தரின் விளக்குக்கு அருகி லிருந்தே திரும்பி, தலைமைப் பிக்ஷவைப் பார்த்துப் புன் முறுவல் செய்து, “சுவாமி தவறாக அர்த்தம் செய்து கொள்ளாதீர்கள். இந்த மோதிரத்தில் ஒரு முக்கியக் குறியைக் காணோம். உட்பக்கத்தில் ஓர் இடத்தில் பொட்டாகத் தெரிகிறது. அதைத் தேய்த்துப் பார்த்தால் ஒரு வேளை நான் எதிர்பார்ப்பது அதில் இருக்கலாம். நகைகளைச் சுத்தம் செய்ய நாய்த்தோல்தான் உபயோகப்படும். சில வேளைகளில் மான்தோலும் பயன்படும். விஹாரத்தில் நாய்த்தோல் கிடைக்காதே என்பதற்காக மான்தோல் கேட்டேன்” என்று வினவினார்.

“ஓஹோ! அப்படியா!” என்று சற்று ஆசுவாசப்பட்ட தலைமைப் பிக்ஷ, “மான் தோல் மட்டும் புத்த விஹாரத்தில் எங்கிருந்து கிடைக்கும்?” என்று கேட்டார்.

அதுவரை இந்தச் சச்சரவில் ஈடுபடாதிருந்த கரிகாலன், அவர்களிருவரையும் சமாதானப்படுத்த முற்பட்டு, “சுவாமி இந்த மான் தோலுக்காக எதற்காக இத்தனை சண்டை? என்னுடன் வந்த சைவத் துறவியாரிடம் மான் தோல் இருக்கிறது. வேண்டுமானால் கொண்டு வருகிறேன்” என்றான்.

தஞ்சைத் துறவியார் அதற்குச் சம்மதிக்கவில்லை. “வேண்டாம் தம்பி! மோதிரத்தைத் துலக்கிப் பார்க்க வேறு வழி இருக்கிறது” என்று சொல்லிவிட்டு, அகல் விளக்கின் எண்ணெய்க் கசண்டைச் சிறிது கட்டை விரலால் எடுத்து மோதிரத்தின் உட்புறத்தில் தடவி, தமது காவி வஸ்திரத் தால் அதைப் பலம் கொண்ட மட்டும் தேய்த்துவிட்டு, மீண்டும் விளக்கில் பரிசோதித்தார். அவர் மறுபடியும் தலையைத் தூக்கிக் கரிகாலனையும் தலைமைப் பிக்ஷவையும் பார்த்தபொழுது, அவர் முகத்தில் எல்லையற்ற திருப்தியும் மகிழ்ச்சியும் குடி கொண்டிருப்பதைக் கண்ட மற்ற இருவரும் தஞ்சைத் துறவியார் தேடிய குறி கிடைத்துவிட்டதென்பதைப் புரிந்து கொண்டனர். ரகசியத்தைத்தாம் புரிந்து கொண்டதோடு நிற்காத தஞ்சைத் துறவியார், தலைமைப் பிக்ஷவையும் விளக்கிடம் வரும்படி அழைத்து, மங்கலான அந்த விளக்கொளியில் மோதிரத்தின் அடிப்பாகத்தில் ஓர் இடத்தைச் சுட்டிக் காட்டினார். தலைமைப் பிக்ஷவைத் தொடர்ந்து சென்று கரிகாலனும் மோதிரத்திலிருந்த அந்தக் குறியைக் கண்டானானாலும், அதில் அந்த இரு பிக்ஷக்களும் பிரமிக்கும்படியான விசித்திரம் என்ன இருக்கிறதென்று அவனுக்குச் சிறிதும் புரியவில்லையாகையால், “சுவாமி! இதில் என்ன அப்பேர்ப்பட்ட விசித்திரம் இருக்கிறது?” என்று தஞ்சைத் துறவியை நோக்கி வினவினான்.

தஞ்சைத் துறவி பதிலேதும் சொல்லாமலே மற்ற இருவரும் பின்தொடர அறையின் நடுவுக்கு வந்து தலைமைப் பிக்ஷவையும் கரிகாலனையும் மஞ்சங்களில் உட்காரச் சொல்லிவிட்டுச் சற்றுநேரம் அவர்கள் எதிரில் மௌனமாகவே நின்று நீண்ட நேரம் சிந்தனையில் ஆழ்ந் தார். பிறகு கரிகாலனை நோக்கி, “தம்பி! மோதிரத்தின் விசித்திரம் என்ன என்பதை ஒரு காலத்தில் நீயே புரிந்து கொள்வாய். இன்று நான் அதைப்பற்றி எதுவும் சொல்லாத தன் காரணமும் அன்று உனக்குத் தெரியும். தற்சமயம் அதைப்பற்றி மூச்சுக்கூட விட முடியாத நிலையில் நான் இருக்கிறேன்” என்று கூறினார்.

கரிகாலனுடைய கண்கள் தஞ்சைத் துறவியின் முகத்தை ஏறெடுத்து நோக்கின. “சுவாமி! தங்கள் திருவாக்கிலிருந்து இதைக் கேட்பதற்காகவா சூடாமணி விஹாரத்திலிருந்து இங்கு வந்தேன்?” என்று அவனிடமிருந்து வெளிவந்த சொற்களிலும், கோபம் சற்றே தொனித்தது.

தஞ்சைத் துறவியாரின் முகத்தில் சாந்தமும் அநுதாப முமே நிலவிக் கிடந்தன. கருணை சொட்டும் விழிகளைக் கரிகாலன் மீது நாட்டிய அந்தத் துறவி, பரிதாபம் கலந்த குரலில், “தம்பி! உன் பிறப்பைப் பற்றிய வரலாற்றை மறைத்து வைக்க வேண்டிய அவசியமில்லாவிட்டால், இந்த விநாடியே முழுத் தகவலையும் உன்னிடம் சொல்லி விடுவேன். ஆனால் அப்படிச் செய்ய இப்பொழுது எனக்கு அநுமதியில்லை. நன்றாக யோசித்துப் பார். உன் பிறப்பைப் பகிரங்கப்படுத்த முடியுமானால், உன் தந்தையோ அல்லது அவருடன் சம்பந்தப்பட்டவர்களோ உன்னை எதற்காகச் சூடாமணி விஹாரத்தில் ஒளித்து வைக்க வேண்டும்? உன் பிறப்பின் கதையைச் சொல்லும் இந்த மோதிர அடையாளத்தை மட்டும் எதற்காக விஹாரத்தின் தலைமைப் பிக்ஷவிடம் கொடுத்துச் செல்ல வேண்டும்? இப்படி மர்மம் நிறைந்த உன் பிறப்பு வரலாற்றை நான் அவ்வளவு சுலபமாக உடைத்துச் சொல்லிவிட முடியும் என்று நினைக்கிறாயா? உன் மோதிரத்தில் நான் சுட்டிக் காட்டி னேனே – ஒரு கிரீடத்தின் சிறு குறி, அந்தச் சின்னத்தை எதற்காக அவ்வளவு சிறிதாக, அவ்வளவு இலாவகமாக வெட்டி இருக்கிறார்கள்? முத்திரைகளை மோதிரத்தின் மேல் பொறிப்பதுண்டு. கற்கள் வைத்துக் குறிபோல் கட்டுவது உண்டு. மோதிரத்தின் உட்புறத்தில் முத்திரையைப் பொறித்திருப்பதை நீ பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டார்.

கரிகாலன் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து ஊசலாடின. மோதிரத்தில் கண்ட முத்திரை யாதாயிருக்கும் என்று ஆராயப் பார்த்தான். தான் படித்த அத்தனை படிப்பிலும் இத்தகைய முத்திரையைப் பற்றிய தகவலேதும் இல்லாததை எண்ணிய கரிகாலன், படிப்புக்குப் பூர்த்தி என்பது ஒன்று கிடையாது என்று பெரியவர்கள் சொல்வது எவ்வளவு சரியாயிருக்கிறது என்று நினைத்துப் பார்த்துப் பெருமூச்சொன்றும் விட்டான்.

அவன் அடிவயிற்றிலிருந்து எழுந்த அந்த சோகப் பெரு மூச்சின் காரணத்தை நன்றாக உணர்ந்த கும்பகோணம் மடாலயத்தின் தலைமைப் பிக்ஷ, தஞ்சைத் துறவியை நோக்கி, “சுவாமி, தம்பி சோகத்தால் உருகிப் போகிறானே, அவன் பிறப்பைப் பற்றிய பூரா உண்மையைச் சொல்லாது போனாலும், ஓரளவு கோடியாவது காட்டக்கூடாதா?” என்ற அநுதாபம் பரிபூரணமாகத் தொனிக்கும் குரலில் கேட்டார்.

“சுவாமி! கோடி காட்டுவதும் அபாயம். தம்பி சாஸ்திரங் களில் கைதேர்ந்தவன் என்பதைச் சூடாமணி விஹாரத் தலைவர் பலமுறை எழுதியிருக்கிறார்; அவன் புத்தி சூடம் போன்றது, விளக்கைச் சற்று அருகில் கொண்டுபோனால் ஜ்வாலை பிடித்துக்கொள்ளும்’ என்று ஏற்கெனவே எச்சரித் திருக்கிறார். ஆகவே, இது விஷயத்தில் நாம் எச்சரிக்கை யாகவே நடந்து கொள்ள வேண்டும்” என்றார் தஞ்சைத் துறவி.

தஞ்சைத்துறவி விளக்க விளக்க, அவர் சொன்ன வார்த்தைகள் மர்மத்தை அதிகப்படுத்தினவே தவிரக் குறைக்கவில்லை என்பதைக் கவனித்த கரிகாலன் முகம் கோபத்தால் சிவந்தது. இணையற்ற அழகுடன் விளங்கிய அவன் முகம் அவசியமான சமயத்தில் எத்னை பயங்கர மாக மாற முடியும் என்பதைக் கோபம் பொங்கியதால் ஈட்டிகளைப் போல் விளக்கொளியில் ஜொலித்த அவன் கண்கள் நிரூபித்தன. அவன் உதடுகளிலிருந்து. உதிர்ந்த சொற்களிலும் உக்கிரம் தீவிரமாகத் துளிர்த்து நின்றது. “எதற்காக இந்த அநாவசிய எச்சரிக்கை? என் பிறப்பு மர்மம் தெரிந்தால் தலையா போய்விடும்?” என்று இரைந்த கரிகாலன், ஆசனத்திலிருந்து சட்டென்று எழுந்தான்.

தஞ்சைத்துறவி அவன் பதற்றத்தையோ, உக்கிரத் தையோ லட்சியம் செய்யாமலேயே, அவனை உற்றுநோக்கி “தலை போவதாயிருந்தால் நான் கவலைப்படமாட்டேன், தம்பி! தலைகள் உருளும். ஆயிரக்கணக்கான தலைகள் உருளும்!” என்று கூறினார்.

“ஏன் உருள வேண்டும்?” என்றான் கரிகாலனும் விடாப்பிடியாக.

“போர் மூண்டால் தலைகள் தரையில் உருளாமல் அவரவர் தோள்கள் மீதா உட்கார்ந்திருக்கும்?” என்று துறவியும் குத்தலாகச் சொல்லி, தமக்குச் சிறுது நகைச்சுவையும் உண்டு என்பதைக் காட்ட லேசாகப் புன்னகையும் செய்தார்.
கரிகாலன் ஸ்தம்பித்து நின்றான். “போர் மூளுமா!” என்ற சொற்கள் அவன் வாயிலிருந்து மெதுவாக வெளி வந்தன.

“ஆம் தம்பி! போர் மூளும்; நீ உயிரோடிருக்கிற விஷயம் தெரிந்தால், நிகழக்கூடிய அனர்த்தங்கள் பல. அதை விவரித்துச் சொல்ல எனக்கு உரிமையில்லை. சோழ நாட்டின் பிற்கால அந்தஸ்து, விஸ்தரிப்பு, பெருமை, இராஜேந்திர தேவனுடைய வாழ்க்கை லட்சியத்தின் பூர்த்தி, இத்தனையுடன் உன் பிறப்பின் ரகசியமும் பிணைந்து கிடக்கிறது. ஆகையால், அதைப்பற்றி எதையும் கேட்காதே. சரியான சந்தர்ப்பத்தில், நானே வந்து உன்னை யார் என்று பகிரங்கப்படுத்துகிறேன். அதுவரை பொறுத்திரு.”

“நான் எதற்காகப் பொறுக்க வேண்டும்? பெற்ற தாய் தந்தையரை அறிந்துகொள்ளும் உரிமையை எதற்காகத் தியாகம் செய்ய வேண்டும்?”

“சோழ நாட்டின் நன்மைக்காக, பெரிய பேரரசின் க்ஷேமத்திற்காக, சூரிய வம்சத்தில் வந்த சோழர்களின் ஒளி பார் முழுவதிலும் கடல் கடந்தும் வீசுவதற்காக, அவர்கள் சாம்ராஜ்யம் நாற்புறத்திலும் பரந்து செழித்தோங்குவதற் காக, புலிக்கொடியின் நிழலில் தங்கும் மக்கள் இதர நாட்டு நரிகளால் தீண்டப்படாதிருப்பதற்காக” என்று தஞ்சைத் துறவியார் ஆவேசத்தோடு பேசினார்.

கரிகாலன் அவருக்கு ஏதும் பதில் சொல்லவே இல்லை. தன் பிறப்பை அறிவதில் இத்தனை சங்கடம் இருக்குமென்பதையோ சாந்த சொரூபியான தஞ்சையின் புத்தத் துறவிக்கே ஆவேசத்தை ஊட்டக்கூடியதாக இருக்கு மென்றோ அவன் எண்ணவேயில்லை. ஆதலால், அவருக்குப் பதிலேதும் சொல்ல வழியில்லாமல் அசை வற்று அறைநடுவில் நின்றான். தஞ்சைத் துறவியின் உறுதியைப் பார்த்தபிறகு, அதை உடைப்பதென்பது நடவாத காரியமென்பதைப் பரிபூரணமாக அறிந்து கொண்ட கரிகாலன், கடைசியாக அவரை நோக்கி, “சுவாமி! அடுத்தபடியாக என் வாழ்க்கை திரும்ப வேண் டிய வழி என்ன? வழியை நீங்கள் சொல்வீர்களென்று சூடாமணி விஹாரத்திலிருந்த தந்தையார் சொன்னார். என்ன வழி?” என்று வினவினான்.

“சூடாமணி விஹாரப் பெரியவர் சொன்னதில் தவறேதுமில்லை. தம்பி! உன் வாழ்க்கைக்கு வழி காட்டுவது என் கடமை. அது நாட்டுக்குச் செய்ய வேண்டிய பணி. அதைப் புரிவதற்குச் சித்தமாகவே நான் வந்திருக்கிறேன்” என்று கரிகாலனை நோக்கிக் கூறிய தஞ்சைத் துறவி பக்கத்திலிருந்த தலைமைப் பிக்ஷவை நோக்கி, “சுவாமி! ஓர் ஓலையும் எழுத்தாணியும் வேண்டும்” என்றார். தலைமைப் பிக்ஷு ஆகட்டுமென்பதற்காகத் தமது தலையை ஒருமுறை ஆட்டிவிட்டு அறைக்கு வெளியே சென்று, சற்று நேரத்திற்கெல்லாம் ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வந்தார். அவற்றை வாங்கிக் கொண்ட தஞ்சைத்துறவி, புத்த பகவானுக்கு எதிராகத் தரையில் சப்பளிக்க உட்கார்ந்து, ஓலையைத் தமது தொடையில் வைத்துக்கொண்டு எழுத்தாணியால் அசக்கி அசக்கி எழுதலானார். அவர் மிகுந்த யோசனையுடன் ஓலையை எழுதிய மாதிரியிலிருந்தும், இடையிடையே அவர் யோசித்த விதத்திலிருந்தும், ஓலை யாரோ ஒரு முக்கிய மான பேர்வழிக்கு எழுதப்படுகிறது என்பதை உணர்ந்து கொண்டான் கரிகாலன். துறவியும் ஓலையை எழுதி முடித்துக்கொண்டு எழுந்திருந்து தலைமைப் பிக்ஷவிடம் தந்து, “சுவாமி! விலாசம் சரிதானே?” என்றார்.

விலாசத்தைப் படித்த தலைமைப் பிக்ஷவின் முகத்தில் மட்டுமென்ன, கரிகாலன் முகத்திலும் ஆச்சரியமும், பிரமையும் கலந்து தாண்டவமாடின.

“இவரையா நான் சந்திக்க வேண்டும்?” என்று நம்பிக்கை பூரணமாகப் பிறக்காத குரலில் கேட்டான் கரிகாலன்.

“ஆமாம் தம்பி! இவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக் கிறாயா?” என்று கேட்டார் தஞ்சைத் துறவி.

“இவரைப் பற்றித் தெரியாதவர்கள் சோழ மண்டலத் தில் இருக்க முடியுமா?” என்றான் கரிகாலன்.

“உண்மை தம்பி! நேராக இந்த ஓலையைக் கொண்டு போய் அவரிடம் கொடு. உன் வாழ்க்கை சரியான பாதையில் செலுத்தப்படும்” என்று கூறிய தஞ்சைத்துறவி, தமது காரியத்தைச் சாதித்துவிட்டதற்கு அறிகுறியாகப் பெருமூச்சும் விட்டார்.

அறையில் நடந்த நிகழ்ச்சிகள் பூராவையும் சாளரத் தருகே நின்று கவனித்துக் கொண்டிருந்த சைவத் துறவியார் ஓலையில் கண்ட விலாசம் யாருடையது என்று அறிந்து கொள்ளத் துடித்தார். ஆனால், விலாசத்தில் கண்ட பெயரை மட்டும் அறையிலிருந்த மூவரும் உச்சரிக்கவிலை. கடைசியாக தலைமைப் பிக்ஷீ அந்தப் பெயரை உச்சரித்த போது, பெரிய இடியே தலையில் இறங்கிவிட்டது போன்ற உணர்ச்சி ஏற்பட்டது சைவத்துறவிக்கு.
“அரையன் இராஜராஜனை அணுகுவது அவ்வளவு சுலபமென்று நினைக்கிறீர்களா?” என்று சற்றுச் சந்தேகத் துடன் வினவினார் தலைமைப் பிக்ஷீ.

“என் ஓலையை அவர் அலட்சியம் செய்ய முடியாது. என் கையெழுத்து. அரண்மனைகளையே திறந்துவிடும் என்பது உமக்குத் தெரியாதா?” என்று தஞ்சைத் துறவியார் கேட்டார்.

அரண்மனைக் கோட்டைகளைவிடப் பலமான சேனை அரண் அரையன் இராஜராஜனைச் சூழ்ந்து நிற்கிறதே!” என்று மீண்டும் சந்தேகக் குரலை எழுப்பினார் தலைமைப் பிக்ஷீ.

“அந்தப் படை அரணையும் இந்த ஓலை உடைக்க வல்லது சுவாமி!” என்று தலைமைப் பிக்ஷவை சமா தானப்படுத்திய தஞ்சைத் துறவியார், “தம்பி! அரையன் இராஜராஜன் பெரும்படையுடன் மேலைச் சாளுக்கியர் எல்லையில் தங்கியிருக்கிறான்! அங்கு போய் அவனைப் பார். பிரயாணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை நான் கவனிக்கிறேன். நாளைக் காலையிலேயே நீ புறப்பட வேண்டும்” என்றார்.

மறுநாள் காலை அவன் பயணப்பட்டபோது சைவத் துறவியாரும் அவனுடன் கிளம்பினார். கரிகாலன் அவரைத் தட்டிக் கழிக்கச் செய்த முயற்சிகள் எதுவும் பலிக்கவில்லை. சைவத்துறவியின் மர்மத்தைப் புரிந்து கொள்ளாத தலைமைப் பிக்ஷ, தம்பிக்குச் சோழநாட்டு வட எல்லை வழிகள் தெரியாதாகையால் அவனுக்குத் துணையாக இருக்கட்டுமென்று சைவத்துறவிக்கு மடாலயத்திலிருந்த ஒரு புரவியையும் இரவலாகக் கொடுத்தார்.

கும்பகோணம் மடாலயத்திலிருந்து கிளம்பிய இரு வரும் பதினைந்து நாள்கள் விடாமல் வடக்கே பயணம் செய்த பிறகு, கிருஷ்ணா நதிக்கு அருகிலிருந்த ஒரு நகரத்தை அடைந்தனர். அன்றிரவு அந்த நகரத்தின் சத்திரத்தில் தங்கியிருந்த கரிகாலன் மனத்தில் பெரியதொரு சந்தேகம் கிளம்பவே, நள்ளிரவில் சைவத்துறவியின் நித்திரையைச் சோதித்துச் சத்திரத்தை விட்டு வெளியேறி ஆகாயத்தை நோக்கினான். நிலவு அற்ற ஆகாயத்தில் ஆயிரம் ஆயிரம் விண்மீன்கள் ஜொலித்தன. அவற்றை ஆராய்ந்த கரிகாலன் கண்களில் கோபம் பீறிட்டெழுந்தது.

இந்தக் கரிகாலன் எத்தனை தந்திரமாகச் சைவத் துறவியால் ஏமாற்றப்பட்டான் என்ற கதையைச் சொல்லிச் சொல்லி விண்மீன்கள் கண்சிமிட்டிச் சிரித்தன. அந்தச் சிரிப்பினால் வெகுண்டுதானோ என்னவோ கரிகாலன் கை அவன் இடையிலிருந்த உடைவாளை நோக்கிச் சென்றது. அந்த உடைவாளை அவன் உருவுவதற்கு முன்பாக மற்றொரு உடைவாள் அவன் கழுத்தைத் தடவிக்கொண்டு நின்றது.

Previous articleMannan Magal Part 1 Ch 3 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here