Home Historical Novel Mannan Magal Part 1 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

89
0
Mannan Magal Ch 5 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 5 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 5 சொர்க்கத்தின் கதவு

Mannan Magal Part 1 Ch 5 | Mannan Magal | TamilNovel.in

கரிய வானிலே, கறுப்புக் கம்பளியில் வாரி இறைக்கப் பட்ட பல்லாயிரம் வைரங்களைப் போல, ஜாஜ்வல்லிய மாகப் பிரகாசித்துக்கொண்டிருந்த நட்சத்திரக் கூட்டங்கள் நகைத்து அறிவுறுத்திய உண்மையால் ஒருகணம் அறிவைக் கோபத்துக்கு அடகு வைத்த கரிகாலன், கத்தியின் முனை யொன்று கழுத்தில் லேசாகத் தடவத் தொடங்கியதும் கோபத்தைச் சரேலென்று உதறிவிட்டு, விநாடி நேரத்தில் உணர்ச்சிகளைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டான். கத்தி கழுத்தில் முதலில் லேசாகத் தடவிய போதோ , ‘சிறிதும் அசையாதே’ என்று எச்சரிக்கைக்கு அறிகுறியாக அதன் நுனி கழுத்தில் இடப்புறத்தில் சற்று அழுத்தியபோதோ, எத்தகைய பதற்றத்துக்கும் இடம் கொடுக்காத கரிகாலன், தன் கண்களை இடதுபுறமாகச் சாய்த்து கத்தி அழுந்தி நின்ற இடத்தையும் அதைப் பிடித்து நின்ற கையையும் கவனித்து, கத்திக்கு உடையவன் யாரென்பதைத் தீர்மானித்துக் கொண்டான். காரிருளில் பளபள வென ஒளிவீசிய அந்த உடைவாளின் அமைப்பையும், அதைப் பிடித்து நின்ற கைவிரல்களுக்கிடையே தெரிந்த பிடியின் வேலைப்பாட்டையும் கடைக்கண்ணால் கவனித்து, கத்தியைப் பிடித்து நிற்பவர் தனக்குத் துணையாக வந்த சைவத்துறவியே என்பதை கணநேரத்தில் உணர்ந்துகொண்ட கரிகாலன் உதடுகளில் லேசாகப் புன்னகையொன்றும் அரும்பியது. அவருடைய அந்த நடவடிக்கைக்கும் எச்சரிக்கைக்கும் காரணத்தைப் புரிந்துகொள்ளவும் கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை .

மேலைச் சாளுக்கியர்களின் இடைதுறை நாட்டுக்கு எதிரில், சோழ நாட்டின் வடமேற்கு எல்லையில் பெரும் படையுடன் தங்கியிருந்த அரையன் இராஜராஜனிடம் தன்னைக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய சைவத் துறவி, வேண்டுமென்றே வழியை மாற்றி, கீழைச்சாளுக்கியர்களின் ஆட்சிக்குட்பட்ட வேங்கி நாட்டின் முன்பாக, சோழ நாட்டின் வடகிழக்கு எல்லையில் கொண்டுவந்து நிறுத்திவிட்டாரென்பதை, நட்சத்திரங்கள் இருந்த அமைப் பிலிருந்து புரிந்து கொண்ட கரிகாலன், தனக்கு உண்மை புலனாகிவிட்டதைச் சைவத்துறவி புரிந்து கொண்டு விட்டாரென்பதையும், ஆகவே முன்னெச்சரிக்கையாகத் தம்மை மடக்கியிருக்கிறாரென்பதையும் நிமிஷ நேரத்தில் அறிந்து கொண்டான். தான் உண்மையை உணர்ந்து கொண்ட காரணத்தால் இனிமேல் தன்னுடனிருப்பது உசிதமல்லவென்பதைச் சைவத்துறவி சந்தேகமறத் தெரிந்து கொண்டிருக்க வேண்டுமென்றும், ஆகவே தன் கச்சையி லுள்ள செங்கதிர் மாலையைத் தட்டிக்கொண்டு போகவே முயற்சி செய்கிறார் என்பதையும் அறிந்துகொண்டான் கரிகாலன். இருந்த போதிலும், ஏதும் நடக்காதது போலவே பேச்சுக் கொடுக்கத் தொடங்கி, “சுவாமிகளுக்கு இன்னும் தூக்கம் வரவில்லை போலிருக்கிறது?” என்று கழுத்தை அப்புறம் இப்புறம் திருப்பாமலே கேட்டான்.

பதிலுக்குக் கத்தி அவன் கழுத்தில் சற்றுக் கடுமை யாகவே ஊன்றியது. “கரிகாலா! சிறிதும் அசையாதே! அசைந்தால் எந்த ஆகாசத்தைப் பார்த்து இத்தனை நேரம் மலைத்தாயோ, அதே ஆகாசத்தை நோக்கி உன் உயிர் சிட்டாய்ப் பறந்துவிடும்” என்றார் துறவி.

“சுவாமிக்கு இத்தகைய கொலைத் தொழில் நீண்ட நாளாகப் பழக்கமோ?” என்று மீண்டும் வினவினான் கரிகாலன்.

அந்தக் கேள்வியில் பட்டவர்த்தனமாகத் தொனித்த கேலியைச் சைவத்துறவியும் உணராமலில்லை. ஆகவே அவர் தமக்கும் சிறிது நகைச்சுவை உண்டு என்பதைக்காட்ட, “அப்பனே! பாவத் தொழில் புரிந்து பாரில் மாயும் மக்களின் உயிர்களை அரன் அடி சேர்ப்பது அடியார்களின் கடமை. ஆனால் உன்னைப் போன்ற ஒரு வாலிபனை இந்தச் சிறிய வயதில் சிவபதம் சேர்க்க இந்த அடிய வனுக்குக்கூட மனம் வரவில்லை. ஆகவே, அந்தப் பணியில் ஈடுபட என்னைத் தூண்டாதே. உன் கச்சையிலுள்ள மாலையை எடுத்து என்னிடம் கொடுத்துவிடு” என்றார்.

“ஏது சுவாமி மாலை?” என்று கேட்டான் கரிகாலன் நின்ற இடத்திலிருந்து அசையாமலே.

“என்னுடைய மாலைதான் கரிகாலா! உன் கச்சையில் பத்திரமாக வைத்திருக்கிறேன், எடு!” என்றார் துறவி.

“ருத்திராட்ச மாலையா? அதற்கெதற்கு சுவாமி இத்தனை பத்திரம்?” என்று ஏதுமறியாதது மாதிரி மீண்டும் கேட்டான் கரிகாலன்.

“ருத்திராட்சமா! சை!” என்று அலுத்துக்கொண்டார் சைவத்துறவி. துறவியார் அப்படி ருத்திராட்சத்தைத் துச்சமாக மதித்து ‘சை’ என்று சப்புக் கொட்டியது, அவருடைய உண்மை சொரூபத்தை நன்றாக அறிந்து கொண்டிருந்த கரிகாலனுக்குச் சிறிதும் ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை யாயினும், துறவியின் புத்தியை அஜாக்கிரதைப் படுத்துவதற்காகவே மேலும் பேச்சுக் கொடுத்து, “என்ன ருத்திராட்சத்தைப் பற்றி அப்படி அலட்சியமாகப் பேசிவிட்டீர்கள்? வேறு என்ன மாலை என்னிடம் இருக்கிறது?” என்றும் ஒன்றும் அறியாதவன் போல் வினவினான்.

சைவத்துறவியும் லேசாகச் சிரித்தார். “பைத்தியக்காரா! ருத்திராட்சங்கள் தெருவில் இறைந்து கிடந்தாலும் பொறுக்குவதற்கு இந்த நாளில் யாரிருக்கிறார்கள்? அப்படி யிருக்க ருத்திராட்ச மாலையைப் பத்திரப்படுத்துவேனா?” என்று கேலியும் குரூரமும் தொனிக்கும் குரலில் பேசிய சைவத்துறவி, “அதல்ல கரிகாலா! உன் கச்சையிலிருப்பது விலை மதிப்பிட முடியாத பொக்கிஷம். தமிழ்நாட்டின் சரித்திரப் பிரசித்தி பெற்ற இரத்தின மாலை. சீக்கிரம் எடு அதை” என்று உத்தரவிட்டார்.

அதை எடுக்க எந்த முயற்சியும் செய்யாத கரிகாலன், “துறவியாகிய உங்களுக்கு எதற்காக இரத்தின மாலை? அது என்னிடம்தான் இருக்கட்டுமே!” என்றான்.

சைவத் துறவியிடமிருந்து அடுத்தபடி எழுந்த சொற் களில் கோபம் எல்லையற்றுத் தாண்டவமாடத் தொடங்கியது. “டேய் அதிகப்பிரசங்கி! பேசாமல் மாலையை எடுத்துக் கையில் கொடுத்துவிடு. இல்லையேல்…” என்று கூறிய துறவி வாசகத்தை முடிக்காமல், இல்லையேல் என்ன நடக்குமென்பதை ஊகத்திலேயே விட்டு மிரட்டினார்.

துறவி முடிக்காமல் விட்ட வாக்கியத்தைத் தானே முடிக்கத் தொடங்கி, “இல்லையேல் கழுத்தில் கத்தியைப் பாய்ச்சி விடுவீர்களாக்கும்?” என்று கேட்டான் கரிகாலன்.
கரிகாலன் வீணாகப் பேசிக் காலத்தை ஓட்டுவதைக் கண்டு மேலும் சகிக்காத சைவத்துறவி, “கரிகாலா! வீணாகப் பேசிக் காலத்தை ஓட்டினால் சைவத்துறவி ஏமாந்துவிடுவாரென்று மனப்பால் குடிக்காதே. சீக்கிரம் எடு மாலையை. நான் இந்த விநாடியே பயணப்பட வேண்டும்” என்றார்.

“என்னை விட்டுவிட்டா போகப்போகிறீர்கள்?” என்று பயப்படுபவன் போல் கேட்டான் கரிகாலன்.

“ஆம்.”

“பிறகு எனக்குத் துணை?”

“துணை இனித் தேவையில்லை. உன்னை எங்கு கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ. அங்கு சேர்த்து விட்டேன்.”

“அப்படியானால் உங்கள் பணியைத் தீர்த்து விட்டீர்கள்?”

“ஆமாம்.”

“உண்மையாகவா சொல்லுகிறீர்கள்?”

“சத்தியமாக!”

“அரன் மேல் ஆணையாகச் சொல்வீர்களா?”

“ஆணை! யார் மேல் வேண்டுமானாலும் ஆணை செய்வேன்.”

“அப்படியானால் அரையன் இராஜராஜன் பாசறை?”

“இங்கு அருகில் தான் இருக்கிறது.”

இந்தக் கோட்டைப் புளுகைக் கேட்ட கரிகாலன் இதழ் களில் மீண்டும் புன்னகை அரும்பியது. ஆனால் அந்தப் புன்னகையையோ, அதைத் தொடர்ந்தோ அவன் கரிய விழிகளில் உதித்த ஒரு விசித்திரப் பார்வையையோ அவனுக்குப் பின்னால் நின்றிருந்த சைவத் துறவியால் பார்க்க முடியவில்லை. ஆகையால் கரிகாலன் மன ஓட்டத்தைப் புரிந்து கொள்ளாதவராய், “சரி, எடு மாலையை” என்று மீண்டும் அவசரப்படுத்தினார்.

“இதோ எடுத்துத் தருகிறேன் சுவாமி!” என்று சொல்லிக் கச்சையைப் பிரிக்க முயன்ற கரிகாலன் கச்சையை அந்தப்புறமும், இந்தப்புறமும் அசைக்கத் தொடங்கினான். பலமுறை முயன்றும் அதன் முடிச்சை அவிழ்க்க முடியாமல் திண்டாடிச் சற்றுத் தலையைச் சரேலெனக் குனிந்தான். அந்த அசைவைத் தொடர்ந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் நடந்தேறின. அடுத்த விநாடி சைவத்துறவியின் உடைவாள் ஆகாசத்தில் பறந்து கொண்டிருந்தது. துறவியார் மண்ணில் புரண்டு கொண்டிருந்தார்.

நிகழ்ச்சிகள் அத்தனை துரிதமாக நடக்குமென்றோ. கரிகாலனுடைய அந்த மெல்லிய இளங்கரங்களில் அத்தனை வலு இருக்குமென்றோ கனவிலும் ‘கருதாத சைவத்துறவி, மண்ணில் புரண்டதும் சொல்லவொண்ணாத ஆச்சரியத்தால் அடியோடு பிரமித்துப் போனார்.

கச்சையை அவிழ்க்கும் பாவனையில் அந்த வாலிபன் சட்டென்று தலையைக் குனிந்து தனது கத்தியின் குறியிலிருந்து விநாடி நேரத்தில் தப்பிக்கொண்டதும் அடுத்தகணமே அந்தக் கத்தியைப் பிடித்திருந்த தம் கையில் அவன் கொடுத்த அடி இரும்புச் சலாகையால் அடிப்பது போல் பாய்ந்து கத்தியை விண்ணில் பறக்கவிட்டதும், மார்பில் விழுந்த ஒரு குத்து தம்மை மண்ணில் சாய்த்து விட்டதையும் எண்ணிப் பார்த்து, ‘பையன் புத்த விஹாரத்தில் வளர்ந்திருந்தாலும் சண்டையில் கைதேர்ந்தவனாக வளர்க்கப்பட்டிருக்கிறான்’ என்பதை நினைத்த சைவத் துறவியார், அடுத்தபடி என்ன நேரிடுமோ?’ என்று கலங்கினார். மின்னல் வேகத்தில் தொடர்ந்த நடவடிக்கைகளால் மண்ணில் கிடந்த சைவத்துறவி, அடுத்தபடியாகக் கரிகாலன் தம்மீது உட்காருவானென்றோ, கத்தியை உருவிக் குத்திவிடுவானென்றோ நினைத்திருந்திருந்தால் ஏமாந்தே போனார். ஏதும் நடக்காதது போலவே கரிகாலன் அவர் முன்பாகச் சிறிது நேரம் நின்றான். இடையிலிருந்த உடைவாளைக்கூட அவன் கரம் நாடவில்லை. கண்கள் மட்டும் சைவத்துறவியின் முகத்தில் ஆழப் பதிந்து கிடந்தன. அந்தப் பார்வையைச் சந்திக்கச் சக்தியற்ற துறவியின் கண்கள் பயத்தால் இப்படியும் அப்படியும் உருண்டோடின.

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, துறவி விஷயத்தில் காட்டி வந்த போலி மரியாதையை அடியோடு கைவிட்ட கரிகாலன், “டேய் எழுந்திரு” என்று உத்தரவிட்டான்.

கரிகாலனுடன் சகவாசம் செய்த அந்தப் பதினேழு நாள்களாக, இத்தகைய அவமரியாதைப் பேச்சை அவன் வாயிலிருந்து கேட்காத அந்தப் போலித்துறவி, “கரிகாலா! இது நியாயமல்ல.” என்று ஆரம்பித்தார்.

அவருடைய வார்த்தையைப் பாதியிலேயே வெட்டிய கரிகாலன், “எது நியாயமல்ல? நீ போலித் துறவியென்பதையும், சேர நாட்டு ஒற்றன் என்பதையும் அறிந்திருந்தும், உன்னைக் கும்பகோணம் மடாலயத்திலேயே பிடித்துக் கொடுக்காததா? அல்லது இராஜேந்திர சோழ தேவன் போரிட்டுச் சேரனிடமிருந்து பெற்ற மாலையை நீ திருடிக் கொண்டு வந்திருக்கிறாய் என்பதைக் கும்பகோணம் மடாலயத்தில் நாம் தங்கிய முதல் நாளிரவே அறிந்த நான், உன்னை அன்றே காட்டிக் கொடுக்காததா? அல்லது நீ அயோக்கியனென்று உணர்ந்தும், உன்னைத் துணைக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேனே அதுவா? மேற்குச் சாளுக்கிய நாட்டு எல்லைக்கு அழைத்துப் போக வேண்டிய நீ வேங்கி நாட்டு எல்லையில் என்னைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறாயென்பதை அறிந்தும், உன்னை இன்னும் கொல்லாதிருக்கிறேனே அதுவா? எது நியாயமல்ல?” என்று குரலில் கோபம் பூரணமாகத் தொனிக்கக் கேட்டான்.

“நான் போலியா! நான் துறவியல்லவா? நாம் இருக்கும் இடம் வேங்கி நாடா!” என்று ஏதுமறியாதது போல் பாசாங்கு செய்தார் துறவி.

அந்தப் பாசாங்கைக் கண்ட கரிகாலன் பெரிதாக நகைத்தான். “டேய் துறவி! கரிகாலனை அடிமுட்டா ளென்று நினைத்துக் கொண்டாயா? மனிதனுடைய அயோக்கியத்தனத்தைப் பொய்த்தாடியும் மீசையும் மறைத்துவிடுமா? அகத்தினழகு முகத்தில் தெரியும் என்ற தமிழ்ப் பழமொழியை நீ கேட்டதில்லையா? காவிரிக்கரையில் உன்னைச் சந்தித்தபோதே உன்னைப் பற்றிப் பெரிதும் சந்தேகித்தேன். உன் கண்கள் சொல்லின உன் கதையை. அத்துடன் உன் கன்னத்தில் அதோ இருக்கும் வெட்டுக் காயம் கதையை ஊர்ஜிதப்படுத்தியது. மனோதத்துவ சாஸ்திரத்தை நான் படிக்கவில்லையென்று நினைக்கிறாயா? சூடாமணி விஹாரத்தின் தந்தை எனக்குச் சகலத்தையும் போதித்திருக்கிறார். வெளி உலகத்துடன் நான் பழகவில்லை. ஆனால் அதைப்பற்றி நிரம்பப் படித்திருக்கிறேன் சரித்திரத்தில். உன்னைப் போன்ற வனைக் கண்டதும் ஏமாந்திருப்பேனென்று நினைக்கிறாயா? உன்னைக் கண்டதும் உன் யோக்கியதையை உணர்ந்துகொண்டேன். என்னுடன் புத்த மடாலயத்துக்கு வர ஒட்டிக் கொண்டதும் எச்சரிக்கையாயிருந்தேன். அன்றிரவு நான் தூங்கிவிட்டதாக நினைத்து தலைமயிரை யும் தாடியையும் கலைத்துவிட்டுக் காவிப் பையிலிருந்து செங்கதிர் மாலையை எடுத்து அழகு பார்த்தாயே, அதையெல்லாம் நான் கவனிக்கவில்லையென்றா நினைத்தாய்? சோழ வீரர்கள் பிடித்துக்கொண்டால் நீ தப்பிவிடுவதற்காக மாலையை என் கச்சையில் பத்திரப்படுத்தியதை நான் பார்க்கவில்லையென்றா மனப்பால் குடித்தாய்? அத்தனையும் பார்த்தேன். மாலை என்னிடமிருந்ததால், அன்று முதல் நீ என்னை நிழல் போல் பிடித்துக் கொண்டதும் எனக்குத் தெரியும். அரையன் இராஜராஜன் இருக்குமிடம் சென்று அகப்பட்டுக் கொண்டால், இரத்தின மாலை மீண்டும் சோழ மன்னன் பொக்கிஷத்துக்குப் போய்விடுமே என்பதற்காக, வேங்கி நாட்டுக்கு என்னைக் கொண்டு வந்துவிட்டாய்! நான் ஆகாயத்தை ஆராய்ந்து இருப்பிடத்தை அறிந்துகொண்டு விட்டேனென்பதை உணர்ந்ததும் கத்தியைக் காட்டி பயமுறுத்தி மாலையை வாங்கிக்கொண்டு ஓடிவிடலாமெனத் திட்டம் போட்டாய். ஆனால், எந்தத் திட்டத்துக்கும் ஒரு முடிவு உண்டு. உன்திட்டத்துக்கு முடிவு இன்று வந்துவிட்டது!” என்று விளக்கிய கரிகாலன், எழுந்திரு என்பதற்கு அடையாளமாகத் தன் விரலைத் துறவியை நோக்கி அசைத்தான்.

எழுந்திருந்த அந்தப் போலித்துறவி ஒரு விநாடி ஆச்சரியம் ததும்பும் கண்களுடன் கரிகாலனை நோக்கி விட்டு, “இது வேங்கி நாடு என்று உனக்கு எப்படித் தெரிந்தது?” என்று கேட்டான்.

“வரும்போதே கிருஷ்ணா நதியைக் கவனித்தேன். மேலைச் சாளுக்கிய நாட்டின் எல்லையாயிருந்தால், துங்கபத்திரா நதி தீரத்தில் இருக்க வேண்டும். ஆனால் கிருஷ்ணா நதி தீரத்துக்கு வந்துவிட்டோம்…” என்ற கரிகாலன் பேச்சை இடைமறித்து வெட்டிய துறவி, “இது கிருஷ்ணா நதியென்று எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“துங்கபத்திரா இத்தனை அகலமுள்ளதல்ல. கிருஷ்ணாவின் ஆழமும் அதற்குக் கிடையாது” என்று விளக்கிய கரிகாலன், “தவிர, இதோ பார், நாம் வடமேற்கு எல்லையிலிருந்தால் அதோ புஷ்பக்கொத்து போல் தெரியும் புஷ்ப நட்சத்திரக் கூட்டம் அந்த இடத்தில் இருக்காது. சப்தரிஷி மண்டலமும் இப்படித் தலைகீழாகத் திரும்பியிருக்காது” என்று ஆகாயத்தையும் சுட்டிக் காட்டினான்.

சேரநாட்டு ஒற்றனான சைவத்துறவி மிரள மிரள விழித்தார். “சரி உள்ளே சென்று உன் காவிப் பையை எடுத்துக் கொண்டு வா” என்று விரட்டினான் கரிகாலன்.

“எங்கு அழைத்துப் போகப் போகிறாய்?” என்று வினவிய போலித் துறவியின் குரல், சற்றே ஆட்டம் கொண்டிருந்தது. “நாம் போக வேண்டிய இடத்துக்கு.”

“போக வேண்டிய இடம் எது?”

“மேலைச் சாளுக்கிய நாட்டு எல்லை. அரையன் இராஜராஜன் பாசறை.”

அது மேற்குக் கோடி. நாம் கிழக்குக் கோடியிலிருக்கிறோம்.”

“செய்த தவற்றைத் திருத்த உனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுக்கிறேன். கரிகாலனுடைய இந்தப் பதிலில் அடங்கிய உறுதியைக் கவனித்த துறவி, வேறு வழியில்லாமல் காவிப்பையை எடுத்துவர ஓர் அடி எடுத்து வைத்தவர் சட்டென்று அது என்ன சப்தம்?” என்றார்.

கரிகாலனும் சப்தம் வந்த திக்கை நோக்கித் திரும்பி னான். குதிரைகளின் குளம்படிச் சப்தம் வெகு பலமாகக் கேட்டது. “குதிரை வீரர்கள் போல் இருக்கிறது” என்றான் அமைதியாக.

அந்த அமைதி போலித்துறவிக்கு இல்லாது போகவே அவர் நெஞ்சு படபடத்தது. “இதோ வந்துவிட்டேன். அவர்கள் வருமுன்னர் இந்த இடத்தைவிட்டு ஓடிவிட வேண்டும்” என்று கூறிக்கொண்டு சத்திரத்திற்குள் ஓடினார். அவர் வெளியே வருவதற்கும், குதிரை வீரர்கள் பத்துப் பேர் அந்தச் சத்திரத்திற்கு வருவதற்கும் சரியா யிருந்தது. வெளியில் காவிப்பையுடன் வந்த துறவியைக் கண்ட அந்தக் குதிரை வீரர்களின் தலைவன், “அதோ இருக்கிறான் பிடியுங்கள் அவனை” என்று கூவினான்.

தலைவனை நோக்கிய துறவி, “அப்பனே! சிவனடியார் களை மரியாதைக் குறைவாகப் பேசுவதும், அவர்களைப் பிடித்துத் தொந்தரவு கொடுப்பதும் வேங்கி நாட்டுப் பழக்கமோ!” என்றார்.

“ஆமாம் துறவியை எதற்காக இம்சை செய்ய வேண்டும்?” என்று அதற்குள் அங்குக் கூடிவிட்ட கூட்டத்திலிருந்து ஒருவர் பரிந்துகொண்டு முன்வந்தான்.

“இவன் திருடன்!” என்றான் குதிரை மீதிருந்த தலைவன்.

“நான் திருடனல்லப்பா! வேண்டுமானால் என்னுடன் வந்திருக்கும் தம்பியைக் கேள்” என்று கரிகாலனைச் சுட்டிக்காட்டினார் துறவி.

கரிகாலன் மீது கண்களை ஓட்டிய வீரர்கள் தலைவன் “சரி இவனையும் சிறை செய்யுங்கள்” என்றான்.

“நான் அவனுக்குத் தோழனல்ல” என்று கோபத்துடன் கூரிய கரிகாலனைப் பார்த்து, வீரர்கள் தலைவன், “நீங்கள் இந்தப் பக்கம் வரும் தகவல் நேற்றே கிடைத்துவிட்டது. மரியாதையாக வந்துவிடு” என்று சொல்லிவிட்டுத் தன் வீரர்களை நோக்கி, “இவர்களைப் பிடித்துக் கொண்டு வாருங்கள். இரத்தின மாலை இவர்களிடம்தான் இருக்கிறது” என்று உத்தரவிட்டான்.

கரிகாலனுக்குத் தன் நிலைமை நன்றாகப் புரிந்து விட்டது. இரத்தினமாலை தன்னிடமிருப்பதால், தான் குடலைப் பிடுங்கிக் காட்டினாலும் யாரும் நம்பமாட்டார் களென்று தீர்மானித்துக் கொண்டதால் அங்கிருந்து தப்புவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்து, பக்கத்திலிருந்த குதிரை வீரன் மீது பாய்ந்து, அவன் வாளை உறையிலிருந்து ஒரே நொடியில் உருவிக்கொண்டதன்றி, அவனையும் கீழே தள்ளிவிட்டு, அந்தப் புரவியின் மேல் பாய்ந்து அதைத் தட்டிவிட்டான். புரவியும் கூட்டத்தில் பாய்ந்து, மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.

கூட்டத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துறவியும் மறைந்துவிட்டதால், கோபம் தலைக் கேறிய வீரர்கள் தலைவன், குதிரைமீது ஓடியவனையாவது பிடிப்போமென்று கரிகாலன் சென்ற திக்கில் தன் குதிரையையும் தட்டிவிட்டான்.

துரிதமாகக் கரிகாலன் பெரியதொரு கோட்டைச் சுவருக்கருகில் வந்து சேர்ந்து, எதிரே நோக்கி, இனி தப்ப வழியில்லை என்பதை அறிந்து திகைத்து நின்றான். கோட்டைச் சுவர் வீதியை அடைத்து நின்றது. எதிர்ப் பக்கம் போனால் வீரர்கள் வாயில் நுழைய வேண்டும். என்ன செய்வதென்று அறியாது திகைத்த கரிகாலன், குதிரை மீதிருந்து கீழே குதித்துக் கோட்டைச் சுவரிலிருந்த பெரிய மரக்கதவின்மீது சாய்ந்தான்.

திடீரென்று திறந்தது அந்தக் கோட்டைக் கதவு. கரிகாலன் பிரமித்து, உள்ளே நுழைந்து, கதவைச் சாத்தி, பெரிய இரும்புத் தாழ்ப்பாளை எடுத்து மாட்டினான். கதவு திறந்த விந்தையைவிட இன்னும் பெரிய அதிசயம், அவன் பிரவேசித்த இடத்தில் காத்துக் கொண்டிருந்தது. கண்களை அப்படியே பறிக்கும்படியான எழிலுடன் கதவுக்கு அப்பால் நின்றிருந்தாள் ஒரு பேரழகி. அவளுடைய அபார எழிலைக் கண்டு சித்தம் ஸ்தம்பிக்க, அப்படியே சிலை யென நின்றுவிட்டான் கரிகாலன். “திறந்தது கோட்டைக் கதவல்ல, சொர்க்கத்தின் கதவு போலிருக்கிறது” என்று மனத்திற்குள் சொல்லிக்கொண்டான். நின்றிருந்த அழகி, அவனைக் கிட்டே வரச்சொல்லிச் சைகை செய்ததும், கொஞ்சநஞ்சமிருந்த சுய உணர்வையும் அடியோடு இழந்த கரிகாலன், ஏதோ மந்திரத்தால் இழுக்கப்பட்ட மரப் பாவையைப்போல், அவளை நோக்கி மெல்ல இரண்டடி எடுத்து வைத்தான்.

Previous articleMannan Magal Part 1 Ch 4 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here