Home Historical Novel Mannan Magal Part 1 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

86
0
Mannan Magal Ch 6 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 6 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 6 நந்தவனத்து மோகினி

Mannan Magal Part 1 Ch 6 | Mannan Magal | TamilNovel.in

இரவு மூன்றாம் ஜாமத்தை எட்டிக் கொண்டிருந்ததால் பாதி தேய்ந்து போய் இரண்டாக வெட்டப்பட்ட பெரிய வெள்ளி நாணயம்போல், வான வீதியில் உதயமான கிருஷ்ண பட்சத்துச் சந்திரன், அதுவரை பிரமாதமாக ஜொலித்துக் கொண்டிருந்த நட்சத்திரங்களின் கொட்டத்தை அடக்கிப் பூமி மீதும் தன் குளிர்க் கிரணங்களை உதிர்க்கவே, கோட்டைக்குள்ளிருந்த நந்தவனப் பிரதேசம் மிக ரம்மியமாகக் காட்சி அளித்தது. எதிரே நின்றவாறு தன்னை அழைத்த அந்தப் பேரழகியை நோக்கி நகர்ந்த கரிகாலன், அவள் அழகிற்குத் தகுந்த சூழ்நிலையும் அங்கே நிலவியிருப்பதைக் கண்ட ஆச்சரியத்தில் சுற்றிலும் ஒரு முறை தன் கண்களை ஓட விட்டான்.

ஆகாயத்தை அளாவி நின்ற பிரும்மாண்டமான கோட்டைச் சுவர் வெகு தூரம்வரை வளைந்தோடுவதையும், இருபது அடி தூரத்துக்கு ஒருதரம் மேலே ஏறிச் செல்லப் பெரிய பெரிய படிகள் சுவரை அணைத்து நிற்பதையும் கண்ட கரிகாலன், ஏதோ பெரிய போர் அரணுக்குள் தான் இருப்பதைத் தெரிந்து கொண்டான். சுவரின் உச்சி மட்டம் இருந்த மாதிரியிலிருந்தும், தொலை தூரத்திற்கப்பால் இருந்த சுவரின் ஒரு பகுதியில் ஆயுதம் தரித்த வீரர்கள் பாராக் கொடுத்துக் கொண்டு நின்ற திலிருந்தும், சுவர் சுமார் நான்கடி அகலத்துக்காவது நிர் மாணிக்கப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் கரிகாலன் சந்தேகமறப் புரிந்து கொண்டான். யுத்த சாத்திரத்தை நன்றாக அறிந்த அவனுக்கு இந்தக் கோட்டை சாளுக்கியர்களின் போர் பாதுகாப்பு முறைப்படி அமைக்கப்பட்டிருக் கிறதென்பதையோ, ஆகவே தான் கீழைச் சாளுக்கியர்களின் மிக முக்கியமான ஒரு கோட்டைக்குள் சிக்கியிருப்பதையோ அறிய, அதிக நேரம் பிடிக்கவில்லை. சாளுக்கிய வீரர்களிடமிருந்து தப்பிய தன்னை விதி உந்தி, சாளுக்கியர்களின் கோட்டைக்குள் சிக்க வைத்தது எத்தனை விந்தை என்று நினைத்துப் பெருமூச்சொன்றும் விட்டான். அத்தனை ஆபத்தான நிலையிலும், அந்தக் கோட்டையின் அழகையும், சாளுக்கியர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளையும், நந்தவனப் பிரதேசத்தின் வனப்பையும் ரசிக்காதிருக்கக் கரிகாலனால் முடியவில்லை.

கோட்டையும், கோட்டைக்குள்ளிருந்த கட்டடங்களும் நந்தவனத்தின் பெரிய மரங்களும், சிறிது செடிகளும், செடிகளையும் மரங்களையும் தழுவி நின்ற கொடிகளும் வெண்ணிலவிலே கண்ணைப் பறிக்கும் எழிலுடன் விளங்கின. கோட்டைச் சுவரை அடுத்து நின்ற பெரிய நந்தவனத்துக்கு அப்பால், தூரத்தே தெரிந்த பிரும்மாண்டமான கட்டடமும் அதன் ஸ்தூபிகளும் நிலவைக் கிழித்துக் கொண்டு எழுந்த பல பாணங்கள் போல் ஆகாயத்தை நோக்கிக் கிளம்பி நின்றன. அந்தக் கட்டடத்தையும் நந்தவனத்தையும் பிரித்து நின்ற சிறிய இடைச்சுவர், தான் அந்தக் கட்டடத்தைப்போல் அத்தனை உயரமில்லையே என்ற துக்கத்தால் உள்ளம் கறுத்து அந்தக் கருமைக்கு அடையாளமாகத் தன் கறுப்பு நிழலைத் தோட்டப் பகுதியில் பாய்ச்சி நின்றது. சுற்றிலும் ஓடிய பெரிய கோட்டைச் சுவர்கூட தனக்குக் கீழே இருந்த ஆயுத அறைகளை மறைக்கும் நோக்கத்துடன் பக்கவாட்டில் நிழலை ஆங்காங்கு வீசி, கறுப்புத் திரையைப் பல இடங்களில் விரித்திருந்தது. நந்தவனத்தின் மற்றோர் ஓரத்திலிருந்த பெரிய மரங்கள் கரிகாலனுக்கு அபயம் அளிக்க வேண்டுமென்ற எண்ணத்தாலோ என்னவோ, தங்கள் இருப்பிடத்துக்குள் சந்திர கிரணங்களை வரவிடாமல் தடுக்க முயன்றன. இருப்பினும் வெண்மதிக்குத் துணையாய் நின்ற ஒரு சில கிளைகள் மட்டும் இப்படியும் அப்படியும் காற்றில் அசைந்து, இலைகளின் இடுக்குகளின் வழியாகக் கிரணங்களை உட்புகவிட்டு, “தப்பி வந்த திருடன் இதோ இருக்கிறான்” என்று காட்டிக் கொடுக்க முற்பட்டன.

ஆனால் இப்படி எதையும் ஒளிக்க இஷ்டப்படாத நந்தவனத்தின் நடுப் பிராந்தியத்தில் பலப்பல மலர்க்கொடிகள் தங்கள் புஷ்பங்களை நிலவின் அமுதத்தில் குளிப்பாட்டிக் கொண்டு நின்றன. இயற்கையின் அந்த அழகையும், இரவின் அந்தக் குளுமையையும் அநுபவிக்கக் கொடுத்து வைக்காத மயில்கள் இரண்டு சற்று தூரத்தே புல்தரையில் படுத்து உறங்கிக் கிடந்தன. அந்த மயில்களுக்கு அப்பாலிருந்த தடாகத்தின் தண்ணீர்கூட இரவின் அந்த இந்திர ஜாலத்தில் சொக்கி அசைவற்று நின்றது. தண்ணீருக்குள்ளிருந்த மீன்களுமா இரவில் நித்திரை செய்யும்! அவை நித்திரை செய்தாலும், கூம்பாமல் கண்களை அகல விரித்து நின்ற ஆம்பல்கள் ஏன் அவற்றை எழுப்பி இரவின் அந்த மகோன்னத இன்பத்தை அநுபவிக்க அழைக்கக் கூடாது? அழைக்கத்தான் இல்லையே, ஆம்பல்களாவது சற்றுத் தலைகளை அசைத்து இரவில் ஆனந்தக் கூத்தாடி, தடாகத்தின் சிற்றலைகளை எழுப்பி, பல அற்புதங்களைச் சிருஷ்டிக்கலாமே! அவையும் ஏன் அப்படிப் பிரமித்து நிற்க வேண்டும்? எங்கும் ஸ்தம்பித்துப் போன நிலை. மரக்கிளைகள் மட்டுமே சற்று விலக்கு. அந்தச் சலனமும் குறிப்பிடத்தக்க அளவுக்கு இல்லை.

தண்ணீர் நிறைந்து ஸ்தம்பித்து நின்ற அத்தத் தடாகத் துக்கு அக்கரையில் நின்றது ஒரு வஸந்த மண்டபம். நன்றாக வெள்ளை வைத்ததால் இயற்கையாகவே வெண்மை மிக்க அதன் சுவர்களும் தூண்களும் இரவின் அந்தப் பால் நிலவிலே இன்னும் அதிக வெளுப்பாகத் தெரிந்தன. அதன் தூண்களைத் தழுவி ஓடிய சம்பங்கிக் கொடிகள் மட்டும் தூண்களின் பகுதிகளைப் பச்சையாக அடித்ததன்றி மேல் தளத்தின் ஒரு பகுதியையும் கௌவிக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து தொங்கிய சம்பங்கி மலர்க் கொத்துகள், தங்கள் மஞ்சள் வாயைத் திறந்து, சுகந்தத்தை நாற்புறமும் சூழவிட்டுக் கொண்டிருந்தன.

வஸந்த மண்டபம் தடாகத்துக்கு அப்பால் சற்றுத் தள்ளி நின்றதால், கிட்டத்தட்ட கோட்டைச் சுவரின் ஒரு பகுதிக்கு அருகாமையில் இருந்ததையும், மண்டபத்திலிருந்து ஓடியபின் தளம் சுவரில் முட்டியிருந்ததையும் கவனித்த கரிகாலன், அதற்குப் பின்னால் என்ன இருக்கிறதென்பதையும் புரிந்துகொண்டான். கோட்டை மதிலின் ஒரு பகுதி கிருஷ்ணா நதியை அடுத்து நிற்க வேண்டும் என்றும், இந்த வஸந்த மண்டபத்தை அடுத்து, ராஜ ஸ்திரீகளின் ஸ்நான கட்டம் இருக்க வேண்டும் என்றும் கரிகாலன் தீர்மானித்துக் கொண்டான். அதைத் தவிர, நந்தவனத் தடாகத்திற்கும் கிருஷ்ணா நதியிலிருந்தே ஜலம் வருகிறதென்றும் ஊகித்துக் கொண்டான். “இல்லா விட்டால் இத்தனை கோடைக் காலத்தில் தடாகம் எப்படிப் பூரணமாயிருக்க முடியும்?” என்றும் தன்னைத் தானே கேட்டுக் கொண்டான்.

எதிரே நின்று தன்னை அழைத்த அந்த மங்கையின் சூழ்நிலையை அளவெடுத்ததால் மனத்தை எங்கோ, சில விநாடிகள் பறக்கவிட்ட கரிகாலன், கோட்டைக் கதவின் அருகில் திடீரென்று குதிரைகளின் காலடிச் சப்தம் வருவதைக் கேட்டு, முன் எடுத்து வைத்த காலைப் பின்னுக்கு வாங்கிச் சட்டென்று நின்று உற்றுக் கேட்கத் தொடங்கினான். அடுத்த விநாடி குதிரைகள் கதவை நெருங்கிவிட்டதற்கான ஒலிகளும், வீரர்கள் திடீர் திடீரெனக் குதிரைகளிலிருந்து குதிக்கும் சப்தமும் கேட்கவே, சற்றுத் தூரத்தில் நின்று கொண்டிருந்த அந்த ஏந்திழையை நோக்கிய கரிகாலன், அவள் முகத்திலும் கவலைக் குறிகள் படர்வதைக் கண்டு, பேசாமலிருக்கும்படி அவளுக்குச் சைகை செய்து, தொடர்ந்து வந்த வீரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை ஆராயக் கதவுப் பக்கம் சென்று சற்று உற்றுக் கேட்கத் தொடங்கினான்.

“அவன் இந்தப் பக்கம்தான் வந்தான்” என்றது ஒரு குரல். அந்தக் குரல் தன்னைப் பிடிக்க உத்தரவிட்ட வீரர்கள் தலைவனுக்குச் சொந்தம் என்று முடிவு செய்து கொண்டான் கரிகாலன்.

“இந்தப் பக்கம் வந்தால் அவன் எங்கே போயிருக்க முடியும்?” என்று வினவினான் மற்றொரு வீரன்.

“இந்தக் கதவின் வழியாகக் கோட்டைக்குள் புகுந் திருக்க வேண்டும்” என்று திட்டமாக அறிவித்தான் தலைவன்.

“இருக்க முடியாது பிரபு! இது நந்தவனத்தின் கதவு. இதை எப்போதும் திறப்பதில்லை. திறந்து உள்ளே நுழைந்தால் மரண தண்டனை கிடைக்கும்” என்றான் ஒரு வீரன்.

“எதற்கும் திறந்து பார்.”

“தண்டனை கிடைக்குமே பிரபு.”

“அரசாங்க அலுவலாக நுழைகிற வீரர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.”

அடுத்தபடி கதவைத் திறக்க முயற்சி நடந்தது. திடும் திடும் என்று நாலைந்து உடல்கள் மோதப்பட்ட சப்தங்களைக் கேட்ட கரிகாலன், தனக்குள்ளேயே நகைத்துக் கொண்டான்.

“நாலடி அகலச் சுவர் கொண்ட கோட்டையை அடைக்க எத்தனை பெரிய கதவைப் போடுவார்கள்! போதாக்குறைக்கு இரும்புச் சலாகைகள் வேறு பின்புறத்தில் அடைத்து நிற்கின்றன. இதைத் திறக்க முற்படுகிறார்களே! சாளுக்கிய வீரர்களுக்கு மூளை மட்டும் கட்டை போலிருக்கிறது!” என்று தனக்குள் பேசிக்கொண்டான் கரிகாலன். ஆனால், வெளியேயிருந்த வீரர்கள் தலைவன் இட்ட மற்றோர் உத்தரவு அவனைத் தூக்கி வாரிப் போட்டது.

“அவன் நந்தவனத்திற்குள் தான் எங்கோ இருக்கிறான். அவனைத் தப்பவிட்டால் ஒழிந்தோம். வாருங்கள், அரண் மனை வாசல் வழியாகப் புகுந்து வருவோம்” என்று உத்தர விட்டான் வீரர்கள் தலைவன். அடுத்த விநாடி குதிரைகள் வாயு வேகத்தில் பறந்து செல்லும் சப்தம் கேட்டது. மிகுந்த கலவரத்துடன் திரும்பிய கரிகாலன் தனக்கு வெகு அருகே அழகி நின்றிருப்பதையும் அவள் முகத்தில் சொல்ல வொண்ணாக் கவலை படர்ந்திருப்பதையும் கண்டான். அடுத்த விநாடி, பெருத்த ஒரு சந்தேகமும் அவனைப் பிடித்து உலுக்கத் தொடங்கியது. ‘இத்தனை ராத்திரியில் தன்னந்தனியாகத் தோட்டத்துக்குள் மரக்கிளைகளுக்கிடையே மறைந்துலாவும் இந்த மங்கை யார்? இவள் மானிடப் பெண்தானா! அல்லது மோகினிப் பிசாசா?’ என்று சந்தேகம் தலைக்கேறவே, அவள் கால்களை நோக்கித் தன் கண்களைச் செலுத்தினான்.

அவன் எண்ணங்களை அறிந்த அந்தப் பெண்ணின் வதனத்திலே புன்னகை அரும்பியது. வாயைத் திறந்து இன்னிசையின் ஸ்வர ஜாலங்களைப் போல் உதிர்ந்த வார்த்தைகளால், “பயப்பட வேண்டாம். நான் பிசாசல்ல, மானிடப் பெண்தான்” என்று தைரியமூட்டினாள்.

“அதில் சந்தேகமில்லை. பிசாசுகளின் கால் தரையில் பாவாது. நீங்கள் யார் என்பது தெரியவில்லையே” என்றான் கரிகாலன்.

“பிறகு சொல்கிறேன். உன்னைத் துரத்தியது யார்?” என்று அதிகாரத் தோரணையில் கேட்டாள் அவள்.

‘உன்னை’ என்று அவள் ஏக வசனத்தில் தன்னை அழைத்ததைக் கரிகாலன் ரசிக்காததால், சற்றே கடுப்பாகவே பதில் சொன்னான்: “யார் துரத்துவார்களோ அவர்கள் தான்.”

“இந்நாட்டு வீரர்களா?”

“ஆமாம்.”

“சரி சரி; அப்படியானால் சீக்கிரம் நீ எங்காவது மறைய வேண்டுமே!”

“மறைய வேண்டுமென்பது வாஸ்தவம். மார்க்கம்தான் தெரியவில்லை.”

“இப்படி வா” என்று சொல்லிவிட்டு, அவள் முன் நடந்தாள். கரிகாலன் பின் நடந்தான். வெகு துரிதமாக நடந்து தடாகத்தைச் சுற்றிக் கொண்டு மண்டபத்திற்கு அருகில் வந்து சேர்ந்த அவள், மண்டபத்தின் மேலேறி தளத்தைத் தாங்கி நின்ற தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு திரும்பினாள். அப்படித் திரும்பிக் கரிகாலனைப் பார்த்து ஏதோ சொல்ல வாயெடுத்த அந்த மங்கை, சட்டென்று நின்று தூரத்தேயிருந்த கட்டடத்தைத் தடுத்து நின்ற இடைச்சுவருக்காகக் கண்களை ஓட்டி “கெட்டு விட்டது குடி” என்று பதைபதைக்கக் கூறினாள். கரிகாலன் அவள் கண் சென்ற திக்கை நோக்கி, தனக்கு முடிவு காலம் வந்துவிட்டதென்று தீர்மானித்துக் கொண்டான். இடைச் சுவரின் கதவுகள் வெகு வேகமாகத் திறக்கப்பட்டன. உருவிய வாள்கள் வலக் கையிலும், பெரிய பந்தங்களை இடக்கையிலும் பிடித்த வீரர்கள் பதின்மர், படுவேகமாக வஸந்த மண்டபத்தை நோக்கிப் பாய்ந்து வந்தார்கள்.

Previous articleMannan Magal Part 1 Ch 5 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here