Home Historical Novel Mannan Magal Part 1 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

103
0
Mannan Magal Ch 7 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 7 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 7 அவள் யார்?

Mannan Magal Part 1 Ch 7 | Mannan Magal | TamilNovel.in

கரிகாலனைக் கபளீகரம் செய்ய வரும் பெரிய கொள்ளிவாய்ப் பிசாசுகளைப்போல் பந்தங்கள் பயங்கரமாக நகர்ந்து வருவதைக் கண்ட அந்த நந்தவனத்து மோகினி, அவனை ஒளிக்க ஏதாவது இடமிருக்கிறதா என்பதைக் கவனிக்கத் தன் மருண்ட விழிகளை நான்கு புறங்களிலும் சுழலவிட்டாள். அந்தச் சமயத்தில் அவள் நின்றிருந்த வெண்மையான வஸந்த மண்டபத்தையும் தூரத்தே தெரிந்த நந்தவன மரக்கூட்டத்தையும் தவிர அவனை ஒளித்து வைக்க வேறு இடமில்லையென்பதைத் திட்டமாகத் தெரிந்துகொண்ட அந்த அழகி, மிதமிஞ்சிய கவலைக்கு அடையாளமாகப் பெருமூச்சொன்றையும் விட்டாள். அவள் கண்கள் நாற்புறமும் சுழன்றதையும், கவலையால் அவள் நாசியிலிருந்து வெளிப்பட்ட பெருமூச் சையும் கண்ட கரிகாலன், அநாவசியமாக ஒரு பெண்ணை அத்தகைய இக்கட்டில் சிக்கவைத்து விட்டோமே என்று எண்ணியதால், பரிதாபம் கலந்த குரலில், “இங்கு இவர்கள் கண்களிலிருந்து சிறிது நேரம் மறைந்திருக்க இடம் எதுவும் கிடையாதா?” என்று வினவினான்.

“அதோ நந்தவனத்தில் மரக்கூட்டம் இருக்கிறது. ஆனால் அங்கு நீ ஓடினால், வீரர்கள் கண்ணில் படாதிருக்க முடியாது; இந்த இடத்துக்கும் மரக்கூட்டமிருக்கும் இடத்துக்கும் வெகு தூரம் இருக்கிறது பார்” என்றாள் அவள்.

இரண்டு இடங்களுக்கும் இடையே இருந்த தூரத்தைக் கண்களால் அளவெடுத்த கரிகாலனும், அவள் சொல்வது முற்றும் உண்மை என்பதை அறிந்ததோடு, தான் தன்னந் தனியாகப் புல்வெளியில் தடாகத்தைச் சுற்றி ஓடுவதும், நேராக வீரர்கள் கையிலேயே தன்னை ஒப்படைத்துக் கொள்வதும் ஒன்றுதான் என்ற முடிவுக்கும் வந்ததால், என்ன செய்வதென்றும் அறியாமல், “ஏன், இந்த மண்டபத்திற்குள் மறைந்திருக்க இடமில்லையா?” என்று விசாரித்தான்.

“மண்டபம் எப்படியும் சோதனை செய்யப்படும். இத்தனை தூரம் வரும் வீரர்கள் இந்த இடத்தைப் பார்க்காமலா போவார்கள்?” என்று பதில் சொன்னாள் அவள்.

அவள் பதில் அவனுக்குப் பெரிதும் ஆச்சரியமாக இருந்தது. “என்ன! இந்த வசந்த மண்டபத்தைப் பார்த்தால் அரச மகளிர் தங்கும் மண்டபம் போல் இருக்கிறது. இதைக் கூடவா வீரர்கள் சோதனை செய்வார்கள்?” என்று கேட்டான்.

இதைக் கேட்ட அந்தப் பெண் வருத்தம் கலந்த சிரிப் பொன்றை உதிர்த்தாள். அந்த ஆபத்தான சமயத்தில் தான் கேட்ட சர்வ சாதாரணமான கேள்விக்கு, அவள் அப்படிச் சிரிக்க வேண்டிய அவசியமென்ன என்று யோசித்த கரிகாலன், “ஏன் இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது?” என்று வாய்விட்டும் கேட்டான்.

“நமக்குள் பரஸ்பரம் பாசாங்கு எதற்கு என்பதற்காகச் சிரித்தேன்” என்று அவள் பதில் சொல்லி அர்த்தபுஷ்டியுடன் அவனை உற்றும் நோக்கினாள்.

அவள் வார்த்தைகளில் தொனித்த அர்த்தமோ, திருஷ்டியில் கண்ட புஷ்டியோ எதுவுமே கரிகாலனுக்கு விளங்காததால், “பாசாங்கா.!” என்று ஏதோ கேட்க ஆரம் பித்தவனை மேற்கொண்டு எதுவும் பேசவிடாமல் அடக்கிய அந்த அழகி, “சரி, சரி! அதிகம் பேச அவகாசமில்லை. அதோ வீரர்கள் நெருங்கிவிட்டார்கள். உன்னை அவர்கள் இங்கு பார்த்துவிட்டால், நாம் இருவரும் ஒழிந்தோம். சீக்கிரம் எங்காவது உன்னை மறைக்க இடம் தேடுவோம்!” என்று கூறிவிட்டு, வசந்த மண்டபத்தின் உட்புறத்தில் நாலடி எடுத்து வைத்து, “மாலினி! மாலினி!” என்று இருமுறை குரல் கொடுத்தாள். அவள் குரல் கொடுத்த மறுவிநாடி வெளியே வந்த இளமங்கையை நோக்கிய கரிகாலன், அவள் உடையிலிருந்தும், அவள் நடந்துகொண்ட அடக்கத்திலிருந்தும் அவள் பணிப்பெண்களில் ஒருத்தியாயிருக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டான். ‘’அவள் பணிப்பெண்ணானால் இவள் யார்?” என்று யோசித்தான். ஆனால் அத்தகைய தர்க்கத் துக்கோ, வினாவிடைக்கோ அவகாசம் அதிகமில்லையாகையால் அவர்கள் துரிதமாக நடத்திய சம்பாஷணையில் கவனத்தைச் செலுத்தி, தன் விதியை அவர்கள் எந்தவிதத்தில் வகுக்கப் போகிறார்கள் என்பதை அறிவதில் நாட்டங்கொண்டு மௌனமாக நின்றான்.

“மாலினி இவன் வந்துவிட்டான். இவனை எங்காவது மறைக்க வேண்டும்” என்றாள் நந்தவனத்து மோகினி.

“ஏன்?” என்று ஏதுமறியாமல் கேட்ட பணிப்பெண், ஆச்சரியத்தால் கண்களை அகல விரித்தாள்.

“ஏனா? பைத்தியக்காரி! அதோ பார்.” துரிதமாக மண்டபத்தை அணுகிக்கொண்டிருந்த வீரர்களை நோக்கிக் கையைக் காட்டினாள், கரிகாலனைத் தோட்டத்தில் சந்தித்தவள்.
பணிப்பெண் அப்படியும் இப்படியும் பார்த்தாள். அசைந்தாள். மிரள மிரள விழித்தாள். அவ்வளவுதான். அவள் புத்தியில் யோசனை மட்டும் ஏதும் உதயமாகவில்லை. நல்ல வேளையாக இடைச்சுவருக்கும் வசந்த மண்டபத்துக்கும் தூரம் அதிகமிருந்தது. இல்லாவிட்டால் அந்த இரு பெண்களின் யோசனை முடியுமுன்பாகக் கரிகாலன் கதியும் ஒருவிதமாக முடிந்திருக்கும். வேங்கி நாட்டுச் சிறையில் இரவின் பாக்கி நேரத்தை நிம்மதியாகக் கழிக்கப் போயிருப்பான். ஆகவே, இரண்டு பெண்களும் என்ன செய்வதென்பதை அறியாமல் தத்தளித்தபொழுது, கரிகாலன் மூளை மிக வேகமாக வேலை செய்துகொண்டிருந்தது. திடீரென்று ஒரு யோசனை தோன்றவே, “அம்மணி! இந்த வசந்த மண்டபத்தின் பின்பகுதியில் ஒரு குறுகிய தாழ்வாரம் ஓடுகிறதல்லவா?” என்று வினவினான்.

அந்தத் தாழ்வாரம் இருக்கும் விஷயம் இவனுக்கு எப்படித் தெரிய வந்தது என்று நந்தவனத்து மோகினி ஆச்சரியப்பட்டாளானாலும், அதைப்பற்றி விசாரிக்காமல் எதற்காக அதைப்பற்றிக் கேட்கிறான் என்பதை மட்டும் அறிந்து கொள்ள வினவினாள்: “ஆமாம், இருக்கிறது; அதற்கென்ன இப்பொழுது?”

“அந்தக் குறுகிய தாழ்வாரத்துக் கோடியிலிருக்கும் கதவைத் திறந்தால், கிருஷ்ணா நதி கோட்டைச் சுவரை ஒட்டிப் பிரவகிக்கிறதல்லவா?” என்று மீண்டும் கேட்டான் கரிகாலன்.

“ஆமாம்.”

“அது ராஜஸ்திரீகளின் ஸ்நான கட்டந்தானே?”
வெகு நாள்களாக அந்த வசந்த மண்டபத்திலேயே வசித்தவன் போல், அதைப்பற்றி அணு அணுவாக ஆராய்ந்து பேசிய கரிகாலன் மீது, சந்தேகம் பலமாகத் தோய்ந்த கண்களை நிலைக்கவிட்டாள் அந்த அழகி.

அவள் கண்களில் உதித்த சந்தேகத்திலிருந்து, உள்ளத்தே ஓடிய எண்ணங்களைப் புரிந்து கொண்ட கரிகாலன், “அம்மணி! சந்தேகப்பட வேண்டாம்; நான் இந்த மண்டபத்தை இதற்கு முன்பு பார்த்ததே கிடையாது” என்று சொல்லி லேசாகப் புன்முறுவலும் செய்தான்.

“அப்படியானால் ஸ்நான கட்டம் இருப்பது உனக்கு எப்படித் தெரியும்?”

“சிற்ப சாஸ்திரம் கற்றிருக்கிறேன்.”

“நீ என்ன சிற்பியா?”

“என்ன என்பது எனக்கே தெரியாது.”

“பின் எதற்காக சிற்ப சாஸ்திரம் படித்தாய்?”

“படிப்பு – காரணத்துக்காகவோ காரியத்துக்காகவோ ஏற்பட்டதல்ல; படிப்பு – அறிவை விசாலப்படுத்துகிறது. அறிவு விசாலம் மனிதனுக்குத் தேவை.”

“அப்படியானால் எல்லா சாஸ்திரங்களையும் படித் திருக்கிறாயா?”

“ஓரளவு படித்திருக்கிறேன். ஆனால், அதைப்பற்றி இப்பொழுது தர்க்கம் செய்துகொண்டே இங்கு நின்றால் படித்ததெல்லாம் பயனற்றுவிடும்.”

“ஏன்?”

“வீரர்கள் பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். நாளைக்கு நான் தூக்கில் ஆடுவேன். மரணத்துக்குப் பின் அறிவு எதற்கு?”

“இப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்கிறாய்?”

“ஸ்நான கட்டத்தைத் திறந்துவிடுங்கள்.”

“திறந்துவிட்டால்?”

“சுவரை ஒட்டியிருக்கும் படித்துறையில் நின்றுகொள் கிறேன்.”

“உனக்கென்ன பைத்தியமா? கிருஷ்ணா நதி பூரணப் பிரவாகத்திலிருக்கிறது. படித்துறையில் காலை வைத்தால் இழுத்துக்கொண்டு போய்விடும்.”

“பாதகமில்லை, வீரர்கள் இழுத்துக்கொண்டு போவதைவிட, புனிதமான கிருஷ்ணா நதி தன் நீர்க்கரங்களால் என்னை அணைக்கட்டும்!” என்றான் கரிகாலன்.

நந்தவனத்து மோகினியின் கண்களில் பயம் பூரணமாகத் தெரிந்தது. அத்துடன் அவன் தைரியத்தைக் கண்டு ஏற்பட்ட ஆச்சரியமும் அந்தப் பார்வையில் கலந்து கொண்டது. அவள் கண்களில் முதன் முதலாகத் தோன்றிய பயத்தைக் கண்ட கரிகாலன், “பயப்படாதீர்கள்! தப்ப வேறு வழியில்லை! தவிர, பிரவாகம் என்னை அடித்துக்கொண்டு போகாது. திடமாகக் கால்களை அடிப்படியில் ஊன்றிக் கழுத்தளவு நீரில் நிற்கிறேன். அதுவும் படியின் பக்கவாட்டில் நின்றால், வீரர்கள் பந்தங்களைக் கொண்டு பார்த்தாலும் தெரியாது. அவர்கள் பார்க்கும்போது தலையை நீரில் அமிழ்த்திக் கொள்வேன். உம் வாருங்கள்” என்று துரிதப்படுத்தி வசந்த மண்டபத்துக்குள் வேகமாக நடந்தான்.

நந்தவனத்தில் கரிகாலனைச் சந்தித்த அந்த அழகி மட்டும் நகரவில்லை. பணிப்பெண்ணை நோக்கி, “சரி, அவனிஷ்டப்படி செய்!” என்று உத்தரவிட்டதும், பணிப் பெண்ணே கரிகாலனுடன் மண்டபத்திற்குள் சென்றாள்.

வீரர்கள் அங்குமிங்கும் பல இடங்களில் தேடிவிட்டு, வசந்த மண்டபத்தை நோக்கி விரைந்தார்கள். நந்தவனத்து மோகினியும் சரேலென்று வசந்த மண்டபத்துக்குள் நுழைந்து, கதவைத் தாளிட்டுக்கொண்டு, தன் அறைக்குள் சென்று மஞ்சத்தில் படுத்து நித்திரை செய்வது போல் பாசாங்குடன் கண் மூடினாள்.

கரிகாலனைக் கிருஷ்ணா நதியில் இறக்கிவிட்டுத் திரும்ப வந்த பணிப்பெண் மாலினியும், கட்டிலில் உறங்குவது போல் பாவனை செய்துகொண்டிருந்த அழகியின் வழியைக் கடைப்பிடித்துத் தரையில் கிடந்த பட்டு மெத்தையில் சுருட்டிக்கொண்டு படுத்தாள். சில விநாடிகளுக்கெல்லாம் வசந்த மண்டபத்தின் கதவு தடதடவெனப் பலமாக இடிக்கப்பட்டது.

கட்டிலில் படுத்திருந்த கட்டழகி கண்களை விழித்துக் கீழே தரையில் கிடந்த பணிப்பெண்ணுக்குக் கண்சாடை காட்டி, அவளை முதலில் வெளியே அனுப்பித்தானும் மெல்ல எழுந்து அப்பொழுதுதான் தூக்கம் கலைந்தவள் போல் அசைந்து அசைந்து நடந்து வாயிலை நோக்கிச் சென்றாள். வாயிற்படியில் நின்றிருந்த வீரர்கள் தலைவனைக் கண்டதும் அவள் கண்கள் நெருப்பைக் கக்கிய தன்றி, அவள் அழகிய வாயிலிருந்து சுடு சொற்களும் வெளி வந்தன. “எதற்காக இந்த நடுராத்திரியில் எங்களை எழுப்புகிறாய்? இங்கே வர உங்களுக்கு யார் அதிகாரம் “கொடுத்தது?” என்று விடுவிடு என்று, வார்த்தைகளை உதிர்த்தாள் நந்தவனத்து மோகினி.

“நான்கூடச் சொல்லிப் பார்த்தேன்; தங்களைப் பார்க் காமல் போக முடியாதென்று பிடிவாதம் பிடித்தார்கள்” என்று பணிப்பெண்ணும் அவள் கோபத்துக்கு தூபம் போட்டாள்.

வீரர்கள் தலைவன் இதற்கெல்லாம் மசிகிற பேர்வழியாயில்லை. வணக்கமும் அதிகாரமும் கலந்து தொனித்த குரலில் கூறினான்: “மன்னிக்க வேண்டும். சேரநாட்டு ஒற்றனையும் அவன் தோழன் ஒருவனையும் இன்று பிடிக்க முயற்சி செய்தோம். இருவரும் தப்பிவிட்டார்கள். ஒருவன் இந்தப்பக்கம் ஓடிவந்தான்” என்று.

“இங்கு எப்படி அவன் நுழைய முடியும்?” என்று கேட்டாள் நந்தவனத்து மோகினி.

கோட்டைக் கதவின் வழியாகப் புகுந்திருக்க வேண்டும்.”
“கதவைத் திறந்தது யார்?”

“யாரென்று தெரியவில்லை.”

“கதவு நீங்கள் பார்க்கும்போது திறந்திருந்ததா, மூடி யிருந்ததா?”

“மூடியிருந்தது.”

அந்தப் பெண் கடகடவென நகைத்து, “ஒருவேளை அந்த ஒற்றன் ஆகாய மார்க்கமாகப் பறந்து கோட்டைச் சுவரைத் தாண்டி நந்தவனத்துக்குள் குதித்திருக்கலா மென்று அபிப்ராயப்படுகிறீர்களோ?” என்று வினவினாள்.

அவள் இகழ்ச்சிச் சிரிப்பை வீரர்கள் தலைவன் லட்சியம் செய்யாமலே சொன்னான்: “அவன் எப்படி உள்ளே வந்திருப்பானென்பது எனக்குத் தெரியாது. ஆனால் கோட்டைக் கதவு வரை வந்தான். பிறகு மறைந்து விட்டான். அவன் தப்பியோட வேறு வழியும் இல்லை.”

அவன் காரணங்களைக் கேட்ட அந்தப் பெண் சற்று யோசித்துவிட்டு, “நந்தவனப் பகுதிகளைச் சோதனை செய்து பார்ப்பதுதானே?” என்றாள்.

“பார்த்தாகிவிட்டது.”

“வேறு எங்கு பார்க்க வேண்டும்?”

“மண்டபத்திற்குள்.”
“இங்கு யாரும் வரவில்லையே.”

“எதற்கும் நாங்கள் பார்த்துவிடுகிறோம்.”

“என் வார்த்தையில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?”

“அப்படியொன்றுமில்லை. வந்திருக்கும் ஒற்றர்கள் மிக சாமர்த்தியசாலிகள். தாளிட்டிருக்கும் கோட்டைக் கதவு வழியாக மறையக்கூடியவன், இந்த வசந்த மண்டபத்துக்குள் நுழைவது கஷ்டமல்ல. ஆகவே அனுமதி தர வேண்டும்.” மேலுக்குக் கெஞ்சலாகவும் வார்த்தைகளைச் சற்று அழுத்திச் சொல்லி உத்தரவாகவும் வற்புறுத்தினான் வீரர்கள் தலைவன்.

பணிப்பெண் தன் தலைவியைப் பார்த்தாள். “சரி அவர்களை அழைத்துப் போ. பார்த்துவிட்டுப் போகட்டும்” என்றாள் தலைவி.

அந்த உத்தரவிற்குப் பின் வீரர்கள் வசந்த மண்ட பத்திற்குள் தடதடவென நுழைந்து, மண்டபத்தைத் துருவி யெடுத்தார்கள். வீரர்கள் தலைவன் உத்தரவுப்படி ஸ்நான கட்டத்தையும் பந்தம் கொண்டு பரிசோதித்தார்கள்.

“நதிக்குள் இருக்கப் போகிறான். யாராவது ஒருவர் குதித்துப் பாருங்கள்” என்று பணிப்பெண்கூடக் கேலியாகச் சொன்னாள்.

ஆனால், வீரர்கள் அந்தக் கேலியை எல்லாம் லட்சியம் செய்யும் மனப்பக்குவத்தில் இல்லை. தங்கள் சோதனையை முடித்துக்கொண்டு விடுவிடென்று வெளியே நடந்தார்கள்.

அவர்கள் அரவம் அடங்கும் வரை காத்திருந்த நந்த வனத்து மேரிகினி, பணிப்பெண்ணை நோக்கி, “மாலினி, சீக்கிரம் அவனை மண்டபத்திற்குள் வரச் சொல்லி வேறு உடைகளை அணிவித்து அழைத்து வா” என்று உத்தர விட்டாள்.

“வேறு உடை ஏது அம்மணி? அங்கு இருக்கும் ஒரே ஆண்பிள்ளையின் உடை உங்கள் சகோதரருடையது” என்றாள் பணிப்பெண்.

“சரி, அதைத்தான் கொடு” என்று பதிலைக் கேட்ட பணிப்பெண் பிரமித்தே போனாள். அவள் பிரமிப்பைக் கண்ட தலைவி, “பாதகமில்லை, கொடு!” என்று மீண்டும் வற்புறுத்தினாள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் புது உடை உடுத்தி ராஜ தோரணையில் வந்து நின்ற கரிகாலனை நோக்கிய தலைவி, “வீரர்கள் போய்விட்டார்கள். இனி தைரியமாய்ச் சொல்” என்றாள்.

கரிகாலனுக்கு அவள் பேச்சு விளங்காது போகவே, “எதைச் சொல்ல?” என்று கேட்டான்.

“சந்தேகம் வேண்டாம்! நான்தான் அவள்!” என்றாள் தலைவி.

கரிகாலனுக்கு என்ன செய்வதென்று விளங்காததால், பணிப்பெண்ணை நோக்கினான். “பயப்படாமல் சொல்லுங்கள் இவர்தான் அவர்” என்றாள் பணிப்பெண்.

மீண்டும் கரிகாலன் முகத்தில் தோன்றிய கலக்கத்தைக் கண்ட பணிப்பெண், “இனி ரகசியம் தேவையில்லை. தைரிமாகச் சொல்லுங்கள். உங்கள் முன் நிற்பது…” என்று இழுத்தாள்.

“நிற்பது?” கரிகாலன் உதடுகளிலிருந்து மெல்ல எழுந்தது கேள்வி.

அதைவிட மெல்லிய குரலிலும், பயபக்தியுடனும் உதிர்ந்தன பணிப்பெண்ணின் சொற்கள். அந்தச் சொற்களில் என்னதான் மந்திர சக்தியிருந்ததோ தெரியாது. சித்தம் எங்கெங்கோ அலைய, கண்கள் அப்படியே வியப்பினால் ஸ்தம்பிக்க, உணர்ச்சிகள் நரம்புகளில் வெகு வேகமாகப் பாய்ந்தோடி இருதயத்தைத் துடிக்க வைக்க, விவரிக்க இயலாத பல உணர்ச்சிகளுக்கு இலக்கான கரிகாலன், ஏதோ சொப்பன தேவதையைப் பார்ப்பது போல் பிரமை கொண்டு எதிரே நின்ற ஏந்திழைமீது தன் விசாலமான விழிகளை ஓட்டினான்.

Previous articleMannan Magal Part 1 Ch 6 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here