Home Historical Novel Mannan Magal Part 1 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

90
0
Mannan Magal Ch 8 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 8 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 8 மன்னன் மகள்

Mannan Magal Part 1 Ch 8 | Mannan Magal | TamilNovel.in

  1. மன்னன் மகள்
    மன்னன் மகள்! மாலினியின் உதடுகளிலிருந்து உதிர்ந்தது, அந்த இரண்டே மந்திரச் சொற்கள்! அவற்றில் அடங்கியிருந்ததுதான் எத்தனை பெரிய சரித்திரக் காவியம்!

அவற்றைக் கேட்ட மாத்திரத்தில் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் எழுந்து ஊசலாட, உடலில் எண்ணற்ற உணர்ச்சி அலைகள் உருகியோட, சற்று நேரம் பிரமை பிடித்துக் கற்சிலையென சமைந்துவிட்ட கரிகாலன் சில விநாடிகளில் பிரமையை உதறித் தள்ளிச் சுய உணர்வை வரவழைத்துக் கொண்டு, எதிரே நின்ற எழிலுருவத்தை ஏறெடுத்து நோக்கினான். அவள் பெயரைக் கேட்ட விநாடியில் பிரமையால் அசைவற்று நிலைத்த அவன் கண்கள், அவள் பேரெழிலைக் கண்டதும் மிதிஞ்சிய வியப்பால் நன்றாக விகசித்து, அவளை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரையில் ஆராயவும் தொடங்கின. வீரர்கள் தொடர்ந்து வந்ததால் உயிரைத் தப்புவித்துக் கொள்வதிலே லயித்திருந்த கவனம், எந்த இந்திரியத்தையும் வேறு அலுவல்களுக்கு அனுமதிக்காததால் கோட்டைக்குள் நுழைந்ததிலிருந்து அந்த நிமிஷம்வரை அவன் கண்கள் அவளைச் சரியாகப் பார்க்கக்கூடச் சக்தியற்றிருந்தன. அந்த ஆபத்து நீங்கிவிட்டதால் அவளை நன்றாகக் கவனிக்கத் தொடங்கிய கரிகாலன், ‘மனத்திற்குத்தான் என்ன மடமை! எதிரே இத்தகைய ஓர் அப்சரஸ் இருக்கும் போது அற்ப உயிருக்காக என் கண்களைக் கட்டிக் குரு டாக்கிவிட்டதே!’ என்று உள்ளூர கடிந்துகொண்டான். அடுத்த விநாடி அப்படிக் கடிந்து கொள்வதும் அர்த்த மற்றதாகிவிட்டது. உயிரைக் காப்பாற்றிக் கொண்ட அந்தச் சுயநல உள்ளம், உயிர் பத்திரம் என்று தெரிந்ததும் கண்களுடன் சேர்ந்துகொண்டு அவள் அழகிய உடலை நோக்கித் தாவி இணையற்ற இன்ப லாகிரியால் துள்ளி விளையாடவும் தொடங்கியது.

வேங்கி நாட்டு மன்னன் மகள், பக்கத்திலிருந்த கட்டில் காலின் மேல்பாகத்தில் செதுக்கப்பட்டுத் தங்கக் கவசம் போடப்பட்டிருந்த சிங்கத்தின் தலையைப் பிடித்துக் கொண்டு நின்றிருந்த திடத்தையும், அவள் விரல்கள் சிங்கத்தின் தலையைப் பிடித்திருந்த உறுதியையும் கண்ட கரிகாலன், வேங்கி நாட்டு மன்னன் மகளின் மனம் இரும்புக்குச் சமானம். யாராலும் அசைக்க முடியாது என்பதைச் சந்தேகமறப் புரிந்துகொண்டான். அவளுடைய ஒவ்வோர் அம்சத்தையும் அளவெடுக்கத் துடித்த அவனுடைய மனப்போக்கைப் புரிந்துதானோ, அல்லது எதிரும் புதிருமாக நின்றுகொண்டு ஏதும் பேசாமல் மௌனம் சாதித்துக் கொண்டிருந்த அந்த இருவரும் அறையில் சிருஷ்டித்துவிட்ட சூழ்நிலையை உடைக்கத் தானோ, அல்லது இந்த இக்கட்டான நிலையிலிருந்து தன்னையாவது விடுவித்துக் கொள்ளத்தானோ தெரியாது, பணிப்பெண் மாலினி, மெள்ள நகர்ந்து அறைக் கோடியிலிருந்த வெண்கலப் பாவை விளக்கில் திரியை நன்றாகத் தூண்டிவிட்டாள்.

சாளரத்திலிருந்து சந்திரனின் வெள்ளிக்கிரணங்கள் ஒரு பக்கத்தில் பட்டதாலும், மற்றொரு பக்கத்திலிருந்து பாவை விளக்கின் தங்கநிற ஜோதி தழுவி நின்றதாலும், வெள்ளியும் தங்கமும் இணைந்த சித்திரப்பாவை போலும், கங்கையும் யமுனையும் கலந்த திரிவேணியைப் போலும் இணையற்ற அழகுடன் விளங்கினாள் வேங்கி நாட்டு மன்னன் மகள். அத்தகைய பேரழகை யாராவது பார்த்து திருஷ்டி போட்டுவிடப் போகிறார்கள் என்ற அச்சத்தி னால், பூரண சந்திரனில் தோன்றும் மெல்லிய களங்கக் கோடுகளைப் போல் விசாலமான அவள் நெற்றியில் கறுத்த தலைமயிர் ஒன்றிரண்டு பறந்து வந்து வளைந்து கிடந்தன. அத்தகைய மயிர்களை அதிக தூரம் அனுமதித்து மற்ற இடங்களையும் ஆக்கிரமிக்க விடக்கூடாதென்ற தீர்மானத்தினால், அவற்றைத் தடுத்து நிறுத்த, காமன் வில்லையும் பழிக்கும் கரிய புருவங்கள் இரண்டு கீழே வளைந்து சித்தமாக நின்றன. அந்தக் கரிய விற்களுக்குக் கீழே அவற்றைவிடக் கருமையாக இருந்த இமைகளுக் கிடையே இருந்த இரண்டு விழிகளும், இரவு அத்தனை நேரம் மட்டும் தூக்கமில்லாதிருந்ததற்கு அறிகுறியாகச் சிவந்து கிடந்ததாலும், அந்தச் சிவப்பும், அந்தச் சிவப்புக்குள்ளே பதிந்து கிடந்த கண்ணின் கருமணிகளும் சேர்ந்து தாமரை மலரில் தப்பி விழுந்துவிட்ட நீலோற்பலங்களைப்போல, எவர் மனத்தையும் அரைவிநாடியில் கவரும் ஆற்றலைப் பெற்றிருந்தன. நீண்டநாள் பழகிப்போன தந்தத்தைப் போல் தாழம்பூவின் லேசான மஞ்சள் நிறத்தைப் பெற்றிருந்த வழவழப்பான அவள் கன்னங்களில், உணர்ச்சிகளின் காரணமாகத் தட்டியிருந்த சிவப்பு, பெண்கள் எடுத்துச் செல்லும் கல்யாணத் தட்டிலிருக்கும் சந்தனக் குழம்பில் அகஸ்மாத்தாய் சிந்திவிட்ட குங்குமம் லேசாகப் படர்ந்துவிடும் இன்பக் காட்சியை நினைவூட் டியது. அவளுடைய கைகளிலொன்று பக்கவாட்டில் செயலற்றுக் கிடந்தமையால், பூரணமாகச் சேலைத் தலைப்பால் மறைக்கப்பட்டிருந்தாலும், சிங்கத்தைப் பிடித்திருந்த கையின் அடிப்பாகத்திலிருந்து சேலை வழுக்கி விழுந்து கிடந்ததால், கைகளின் அளவையும் அழகையும் ஓரளவு புரிந்துகொள்ளக் கரிகாலனால் முடிந்தது.

பெருகு மத வேழத்தின் துதிக்கையைத் தடுத்து நிற்கும் தந்தத்தைப் போல் வழவழப்பாக நீண்டிருந்த கையின் முகப்பில், நன்றாக மலர்ந்துவிட்ட செந்தாமரை மலரின் இதழ்களைப் போல் கட்டில் சிங்கத்தின் தலையைப் பற்றியிருந்த விரல்களின் நகங்களில் தீட்டப்பட்டிருந்த மருதாணியைக் கண்ட கரிகாலன், ‘மஞ்சளுக்குச் சிவப்பு அழகு செய்வது என்ன விந்தை!’ என்று ஆச்சரியப்பட்டான். மென்மையும் உறுதியும் எப்படிக் கலந்திருக்க முடியும் என்பதை, மென்மையான அவள் விரல்கள் சிங்கச் சிலையின் தங்கத்தைப் பிடித்து நின்ற உறுதியிலிருந்து புரிந்துகொண்டாலும், அப்படிப் பிடித்ததால் அந்த விரல்கள் இன்னும் சிவந்து கன்றிவிட்டால் என்ன செய்வது என்று ஏங்கினான். அப்படிக் கன்றியும் போகலாம் என்பதற்கு அறிகுறியும் இருந்தது. திடமான அவள் சரீரத் தில் பெண்மையின் பலவீனம் கலந்திருப்பதைக் கரிகாலன் கண்டான்.

குப்புற எறியப்பட்ட செம்பருத்தி மலர்கள் போல் தரையில் பதிந்து நின்ற பாதங்கள் திடமாகவே இருந்த போதிலும், பெண்மையின் காரணமாக அவ்வப்பொழுது அவள் புறங்கால்களில் இடப்பட்டிருந்த மருதாணியின் ஹம்ஸ சித்திரங்களின் காரணமாக, பூமியில் இரண்டு அன்னப்பறவைகள் அசைவன போன்ற பிரமை ஏற்படத்தான் செய்தது. பாதங்களுக்கு மேலே ஓடிய கால்கள் சேலையில் புதைந்து கிடந்தாலும், அவ்வப்பொழுது அசைந்து கால்களோடு ஒட்டிய சேலை, தொடைகளின் பரிமாணத்தையும், அழகையும் எடுத்துக் காட்டியதன்றி இன்னும் பல இன்ப ஊகங்களுக்கும் இடங்கொடுத்ததால், யாரையும் பைத்தியமாக அடிக்கும் தன்மையைப் பெற்றிருந்தன. அவள் அழகிய மேல் பாகத்தையும், கீழ்ப்பாகத் தையும் தொடுத்து நின்ற நுண்ணிடை கம்பன் வியந்தது போல் ‘பொய்யோ’ என்று தோன்றும்படியாக அவ்வளவு சிறுத்துக் கிடந்தது. அப்படிச் சிறுத்துக் குன்றிப் போயிருந்த இடைக்குமேலே தெரிந்த மார்பகத்தின் செழிப்பு, ஒருவர் வறுமையாலேயே மற்றொருவர் செழிப்பு ஏற்படுகிறது என்ற உலக உண்மையை வலியுறுத்தியது.

சங்கைப் பழிக்கும் கழுத்துக்குக் கீழும், இல்லையோ என்று ஐயுறும் இடைக்கு மேலும், உறுதியுடன் எழுந்து பிரமாதமாக நின்ற மார்பகத்தின் மீது கண்களை ஓட்டிய கரிகாலன் மனம் பெரிதும் சலனமடைந்து, அவன் இதயத்திலே பல இன்ப வேதனைகளைக் கிளப்பி விட்டதன்றி, ஏற்கெனவே படித்திருந்த காவியப் பகுதிகள் பலவற்றையும் கவனத்துக்குக் கொண்டு வந்தது. வண்டுகள் நுனியில் உட்கார்ந்த செந்தாமரை மொட்டுகள் என மகாகவி காளிதாசன், ரகு வம்சத்தில் சுதஷினையின் மார்பகத்தைப் பற்றி எழுதிய வர்ணனை அவன் மனத்தே எழுந்து நின்றது. அத்தனை அழகைப் பெற்றதால் பெருமிதத்துடன் அடக்கமின்றி எழுந்து நின்ற அவற்றை அடக்கிவைக்க நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்த ரவிக்கை தன் பல வீனத்தையே உணர்ந்தது. மெல்லியதாக ஓடிய மேலாடைக்குள்ளே தெரிந்த ஒற்றை வைர மாலைகூட ரவிக்கையின் மேடிட்ட பிரதேசங்களில் நெளிந்து, “சே! உன் சக்தி இவ்வளவுதானா?’ என்று நகைப்பதைப் பார்ப்பதற்காகத் தலை நீட்டும் திருடர்களைப் போல, ரவிக்கைக்குள்ளிருந்த பாகங்கள் மார்பின் நடுவில், இருபுறத்திலும் லேசாக வெளிப் பட்டுக்கிடந்தன. அவை இரண்டையும் சேரவிடாமல் தடுத்து நின்ற மார்பின் நடுப்பிரதேசம், ரவிக்கையின் மேல் பாகம் பட்டுக் கயிறுகளாலும் கீழ்ப்பாகம் துணியாலும் இறுக முடியப்பட்டிருந்ததால், நீண்ட தாழைமடலைப் போல காட்சியளித்தது. இத்தனை அழகு அங்கு மண்டிக் கிடந்ததால்தானோ என்னவோ, அவள் அணிந்திருந்த பட்டுக் கொட்டடி ரவிக்கையில் குறுக்கும் நெடுக்குமாகத் தாயக் கட்டம் போல் பின்னப்பட்டிருந்த சரிகை வேலைப் பாடுகள், அந்த எழிலைப் பாதுகாக்கும் சிறைக் கம்பிகள் போல் தோன்றின.

இந்தப் பாதுகாப்பே அவற்றுக்குப் போதும்; ஆனால் அன்று அதிக அலங்காரம் செய்து கொள்ளாததால், கருமையான அவள் நீண்ட குழல் எடுத்துக் கட்டப்படாமல் ஒரே பின்னல் போடப்பட்டிருந்ததாலும், அந்தப் பின்னலையும் அவள் கழுத்துப் பக்கமாக இழுத்து மார்பு மீது தொங்க விட்டிருந்ததாலும், நிதானமாக அவள் விட்ட மூச்சில் அந்தப் பின்னல் எழுந்து எழுந்து தாழ்ந்து தாழ்ந்து உயிருடன் வளையும் கருநாகம்போல், ‘ஜாக்கிரதை! கிட்டே வரவேண்டாம்’ என்று எச்சரிக்கை செய்தது, அத்துடன் அவள் அழகில் புரண்டு விளையாடத் தனக்குத்தான் உரிமை போல அந்தப் பெரிய நீண்ட பின்னல் நேராகக் கீழே சென்று, அவளுடைய வலது தொடையையும் தொட்டுக் கொண்டு நின்றதன்றி, அவள் அசைந்த போதெல்லாம் அக்கம்பக்கத்திலிருந்த சுற்றுப் பிரதேங்களிலும் தாவத் தொடங்கியது.

அந்த அழகையெல்லாம் மாறிமாறிப் பருகிய கரிகாலன் அவள் ஆபரணங்களை அணியாவிட்டாலும், அணிந்திருந்த ஓரிரு ஆபரணங்கள் உயர்ந்த முறையில் செய்யப்பட்டிருந்ததையும், அவற்றில் வேங்கி நாட்டுக் கலை மட்டுமின்றி, தமிழ் நாட்டுக் கலையும், அக்கம் பக்கத்து ராஜ்யங்களின் கலைகளும் கலந்து கிடப்பதையும் கண்டான். அவள் மெல்லிய மேலாடை மூலம் லேசாகத் தெரிந்தாலும், அவள் கழுத்தில் அணிந்திருந்த வைரமாலை யின் அமைப்பிலிருந்தும் அதன் முகப்பில் புதைக்கப் பட்டிருந்த பாண்டிய நாட்டு முத்திலிருந்தும் அது முழுக்க முழுக்கத் தமிழ்நாட்டு வேலைப்பாடு என்பதைப் புரிந்து கொள்ளக் கரிகாலனுக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. அவள் ஒரு கையில் மட்டும் அணிந்திருந்த ரத்தினங்கள் புதைக்கப்பட்ட வங்கி, வேங்கியின் வேலைப்பாட்டுக்கு அறிகுறியாக, சக்கரத்துக்குள் சக்கரமாக அமைந்து பட்டுக் கயிறு முடிச்சுப்போல் இழுத்து விடப்பட்ட தங்கக் கயிறுகள் கொண்ட ஒரு மரகதப் புஷ்பத்துடனும் காணப்பட்டது. காதில் தொங்கிய கமலங்கள், நாகத்தின் உருவைப் பெற்று வளைந்து கிடந்ததால், வேங்கி நாட்டை ஒட்டி நின்ற நாகர்கள் நாடாகிய மாசுணி தேசத்தின் காதணிகள் அவை என்பதைக் கரிகாலன் ஊகித்துக் கொண்டான். காலில் அவள் அணிந்திருந்த மெட்டிகள் கூடப் பாம்புகளாகவே அமைக்கப்பட்டிருந்தன. மார்பகத்தே புரண்டு தொங்கிய கருநாகத்தாலும், காதிலும் கால்களிலும் அணிந்து நின்ற நாகர்களின் அணிகளாலும், அநேக நாகங்களால் பாதுகாக்கப்பட்ட நாக கன்னிகை போல் விளங்கிய வேங்கி நாட்டு மன்னன் மகளைக் கண்ட கரிகாலன், ‘இவளுக்கு இத்தனை பாதுகாப்பு எதற்கு? கொல்லும் விழிகள் இரண்டே போதாதா?’ என்று நினைத்தான்.

அந்த நினைப்பாலும், எங்கேயோ புத்த மடாலயத்தில் சன்னியாசிகளோடு சன்னியாசியாய்ப் பிரம்மசாரியாக வளர்ந்த நான் ஒரு பெண்ணை இப்படி அணு அணுவாக அலசிப் பார்க்கிறேன்’ என்ற சிந்தனையாலும், கரிகாலன் அழகிய உதடுகளில் புன்முறுவல் ஒன்றும் உதயமாயிற்று. அந்தப் புன்முறுவல் மன்னன் மகளையும் ஓரளவு சுய நிலைக்குக் கொண்டு வந்தது. அவளும் அதுவரை அவனைத் தீவிரமாக ஆராய்ச்சி செய்து கொண்டு தானிருந்தாள். சாதாரண உடையிலிருந்தபோதே, அவன் கம்பீரமான நடையையும், களை சொட்டும் முகத்தையும், வேல்கள் போல் இருட்டிலும் ஜொலித்த அவன் கண்களையும் கண்டு வியந்திருந்த மன்னன் மகள், அவன் தன் சகோதரனுடைய உடையுடன் எதிரே வந்து நின்றதும் அவன் ஓர் அரசகுமாரன் போலவே தோன்றுவதைக் கண்டு பிரமிப்பின் மேல் பிரமிப்பை அடைந்தாள். அவள் பிரமிப்பை அவன் புன்முறுவல் உடைக்கவே அவள் கண்கள் பணிப்பெண்மீது பாய்ந்தன.

அதுவரை இருவருடைய மௌனத்திலோ ஆராய்ச்சி யிலோ கலந்துகொள்ள இஷ்டப்படாமல் அறைக்கோடியில் நின்ற பணிப்பெண் மாலினி, மன்னன் மகளின் பார்வை தன்மீது திரும்பியதும், தன் தலையீட்டுக்கான சமயம் வந்துவிட்டதை அறிந்து, கரிகாலனை நோக்கி, “இன்னும் ஏன் தாமதம்? கொண்டு வந்த செய்தியைச் சொல், வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தன் மகள் நிரஞ்சனாதேவி இவர்தான்; தைரியமாகச் சொல்” என்று உத்தரவிட்டாள்.

அவளைத் தொடர்ந்து அதிகார தோரணையில் மன்னன் மகளும் கேட்டாள்: “பிரம்ம மாராயர் என்ன சொல்லியனுப்பினார்? ஏன் இரண்டு வார காலமாக அரிஞ்சயன் என்னைச் சந்திக்கவில்லை?” என்று.

கரிகாலன் உடனே பதிலேதும் சொல்லவில்லை. உள்ள நிலை அப்பொழுதுதான் திடீரெனப் பளிச்சிட்டது அவன் புத்தியில். ஆகவே, அவளுக்குப் பதிலேதும் சொல்லாமல் லேசாகச் சிரித்தான். ‘நிரஞ்சனா தேவி’ என்று இருமுறை அவன் உதடுகள் பயபக்தியுடன் அந்த வார்த்தைகளை உச்சரித்தன. ‘ஆம்: அந்தக் கரிய விழிகளுக்கு அஞ்சனம் எதற்கு? நிரஞ்சனா! சரியான பெயர்தான்’ என்று மனமும் கூடச் சேர்ந்து பாடியது.

“ஏன் சிரிக்கிறாய்?” என்று உஷ்ணமாகக் கேட்டாள் மன்னன் மகள்.

“விதியை நினைத்துச் சிரித்தேன்” என்றான் கரிகாலன்.

“விதியா!” அவள் குரலில் சந்தேகம் தொனித்தது. விழிகள் கேள்வி கேட்பதைப் போல் அவனை நோக்கி உயர்ந்தன.

“ஆம் அரசகுமாரி!” என்று திடமாகவே பதில் சொன்ன கரிகாலன் கண்கள், வருத்தத்துடன் மன்னன் மகளின் மருண்ட விழிகளுடன் ஒரு விநாடி கலந்தன, அந்தப் பார்வையைத் தாங்கமாட்டாமல் அவள் விழிகளைத் தாழ்த்திக்கொண்டாள்.

தான் இருந்த இடத்தைவிட்டு இரண்டடி எடுத்து. வைத்த கரிகாலன், கட்டிலின் இன்னொரு கோடியிலிருந்த சிங்கத்தின் தலையொன்றைப் பிடித்துக்கொண்டு, சில விநாடிகள் ஏதோ யோசித்துவிட்டு அரசகுமாரியை மீண்டும் நோக்கி, “அரசகுமாரி! நீங்கள் எதிர்பார்த்த பேர்வழி நானல்ல, சிறிது தவறு நேர்ந்துவிட்டது!” என்று மெல்ல வார்த்தைகளை உதிரவிட்டான்.

அந்தப் பதிலைக் கேட்ட மன்னன் மகளின் விழிகள் திடீரெனச் சலனப்பட்டன. பூரண சந்திரனை ஒரு விநாடி மறைத்துச் செல்லும் சிறு மேகத்தைப்போல், அவள் வதனத்தில் சிறிது நேரம் கவலைக்குறி படர்ந்ததன்றி, அதற்கு அறிகுறியாக அவள் பூவுடலும் சிறிது நெகிழ்ந்து கால் பெருவிரலொன்றும் சிறிது மடிந்து நிலத்தில் ஊன்றியது. சலனப்பட்ட கண்கள் திடீரெனத் திரும்பிப் பணிப்பெண்ணைப் பார்த்தன. பணிப்பெண்ணின் முகத்திலோ விவரிக்க இயலாத கிலி படர்ந்து நின்றது.

அடுத்த விநாடி மன்னன் மகளின் மருண்ட விழிகள் நெருப்பைக் கக்கின. ஏற்கெனவே சிவந்திருந்த அவள் கண்கள் கோபத்தால் அதிகமாகச் சிவந்தன. “நீ யார்? எதிரிகளின் ஒற்றனா?” என்று எழுந்தது கேள்வியொன்று, துடித்த அவள் உதடுகளிலிருந்து.

இந்தக் கேள்விகள் சமீபத்தில் நேரிட்ட பல அனுபவங் களை அவன் உள்ளத்தில் கிளப்பிவிட்டாலும், சந்தர்ப்பத்தை உத்தேசித்து அவற்றையெல்லாம் அடக்கிக் கொண்ட கரிகாலன், “நான் ஒற்றனல்ல, அரசகுமாரி!” என்று வினயமாகவே பதில் சொன்னான்.

“அப்படியானால் நீ யார்?” என்று மன்னன் மகள் மீண்டும் கேட்டாள்.

“அதைக் கண்டுபிடிக்கவே புறப்பட்டேன்.”

“என்ன, நீ யாரென்பது உனக்குத் தெரியாதா?”

“தெரியாது. தெரிந்தால் இந்த இடத்தில் நிற்க வேண்டிய அவசியமோ, உங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய தேவையோ ஏற்பட்டிருக்காது.”

“உன்னையே உணராத உனக்கு, இந்தக் கோட்டைக் கதவு திறந்திருப்பது எப்படித் தெரிந்தது?”
“அதுவும் தெரியாது எனக்கு.”

“அப்படியானால் நான் யாரென்பது உனக்கு-”

“பணிப்பெண் சொல்லும் வரையில் தெரியாது.”

இந்தப் பதில் மன்னன் மகளின் சந்தேகத்தை மீண்டும் கிளறிவிடவே, “இவள் பணிப்பெண் என்பது உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினாள்.

“ஊகித்துக் கொண்டேன்.”

“எப்படி ஊகித்தாய்”

“ஆடையிலிருந்து; அவள் நடந்து கொண்ட மாதிரி யிலிருந்து.”

“பெண்களைப்பற்றி உனக்கு நிரம்பத் தெரியுமோ?”

“தெரியும்.”

“அவ்வளவு அனுபவசாலியா?”

“அநுபவமில்லை; படித்திருக்கிறேன்!”

அத்தனை இக்கட்டான நிலையிலும், விபரீதமான தவறு ஏற்பட்டிருக்கும் அந்தச் சந்தர்ப்பத்திலும், அவன் பதிலைக் கேட்ட நிரஞ்சனாதேவியின் இதழ்களில் புன் முறுவலொன்று படர்ந்தது. “எல்லாம் ஏட்டுச் சுரைக்காய் தானா!” என்று அவள் ஏளனமாகக் கேட்டாள்.

“ஏடுகளைப் பற்றி என்ன அவ்வளவு ஏளனமாகப் பேசிவிட்டீர்கள்! ஏடுகள் விளைவித்த விந்தைகள் மனித சரித்திரத்தில் விரிந்து கிடக்கின்றனவே. காவியப் பெண்கள் ஏடுகளைக் கொண்டு சாதித்த காதல் களியாட்டங்கள் எத்தனை! சதிகள் எத்தனை!”

“சதியா!” என்று ஆச்சரியத்துடன் கேட்டாள் நிரஞ்சனா.

“ஆம் சதிதான். நீங்கள் சிக்கியிருக்கும் சதியைக்கூடத் தான் குறிப்பிடுகிறேன்” என்று சொன்ன கரிகாலன் இதழ்களில் புன்முறுவலொன்று படர்ந்தது. ஆனால், நிரஞ்சனா தேவியின் உதடுகளின் கோடியில் அதுவரை தவழ்ந்து கொண்டிருந்த புன்முறுவல் சட்டென்று மறைந்தது. அதுவரை தைரியம் சொட்டிய அவள் கண்களில் மட்டுமென்ன, பணிப்பெண் மாலினியின் கண்களிலும் பயத்தின் சாயை வெகு துரிதமாகப் படரலாயிற்று.

Previous articleMannan Magal Part 1 Ch 7 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here