Home Historical Novel Mannan Magal Part 1 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

91
0
Mannan Magal Ch 9 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch 9 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 9 பாய்ந்துவரும் இரு வேல்கள்

Mannan Magal Part 1 Ch 9 | Mannan Magal | TamilNovel.in

கரிகாலன் கடைசியாகச் சொன்ன வார்த்தைகளின் காரணமாக நிரஞ்சனா தேவியின் நீள் விழிகளில் நிலவிய அச்சத்தின் சாயை அரை விநாடிதான் நிலைத்தது. அடுத்த கணம் மின்னல் தோன்றி மறைந்ததைப் போல் அகன்று விட்ட பயத்தின் குறியைக் கண்ட கரிகாலன், மன்னன் மகளின் மன உறுதியை நினைத்துப் பெரிதும் வியந்தான். எப்படிப்பட்ட உணர்ச்சியையும் எண்ணிய மாத்திரத்தில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து அடக்கக்கூடிய நிரஞ்சனாதேவி சாதாரணப் பெண்ணல்ல என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, இவள் சிக்கியிருக்கும் சதி எத்தன் மையதாயிருக்கும்? காதல் சம்பந்தமானதா? காதலனை எதிர்பார்த்துக் காத்திருந்தாளா? பிரும்ம மாராயன் என் பவன் யார்? அரிஞ்சயன் யார்? இவள் தோழன் பிரும்ம மாராயனா? அரிஞ்சயனா? ஏதோ செய்தி என்று சொல்லுகிறாளே, எத்தகைய செய்தியை இவள் எதிர்பார்த்து நிற்கிறாள்? இறங்கியுள்ள காரியம் காதல் சம்பந்தமில்லாமல் அரசியல் சம்பந்தமானால் எத்தகைய அரசியல் சிக்கல் வேங்கி நாட்டில் ஏற்பட்டிருக்கக்கூடும்?’ என்று எண்ணி விஷயங்களை அலசிப் பார்த்த கரிகாலன் மனத்தில் மெள்ள மெள்ள உண்மை உதயமாகவே, அவன் கண்களில் மிதமிஞ்சிய ஆச்சரியமும், நிரஞ்சனா தேவியின் நலனை உத்தேசித்து ஓரளவு அச்சமும் உதயமாயின.

அவன் தீவிர யோசனையில் ஆழ்ந்ததையும், அவன் புத்தியில் ஓடிய எண்ண அலைகள் முகத்தில் அவ்வப் பொழுது பிரதிபலித்ததையும், கடைசியாக அவனுக்கு ஏதோ உண்மை விளங்கிவிட்டது போல் கண்களில் வீசிய ஒளியையும் அவள் கவனிக்கத் தவறவில்லை. தன்னைப் பற்றியும் தன் ரகசியத்தைப் பற்றியும் இவன் புரிந்து கொண்டு விட்டானா? புரிந்து கொண்டால் எத்தனை தூரம் புரிந்து கொண்டிருப்பான் என்பதை நினைத்துப் பார்த்த நிரஞ்சனா தேவியும், அதை அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஆசையால், கரிகாலனுடன் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்து, “சதியா? எந்தச் சதியைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள்?” என்று வினவினாள், உணர்ச்சிகளை சிறிதும் வெளியில் காட்டாத மிகச் சாதாரணமான குரலில்.

அவளைச் சந்தித்தது முதல் அதுவரை நீ’ என்றும் ‘உன்’ என்றும் ஒற்றைப்படைச் சொல்லில் மரியாதை இன்றி வந்த சம்பாஷணை சற்றே சுவடு மாறியிருப்பதையும் ‘குறிப்பிடுகிறீர்கள்’ என்று மரியாதையுடன் சொல் வெளிவருவதையும் கவனித்த கரிகாலன், மனத்துக்குள் லேசாக நகைத்துக் கொண்டான். இந்த மாற்றத்துக்குக் காரணம் பயமாயிருக்க முடியாது என்பது அவனுக்குத் தெரிந்தேயிருந்தது. வேறு எது காரணமாயிருக்க முடியும் என்பதை மட்டும் அவனால் அறிந்துகொள்ள இயலவில்லை. நிரஞ்சனா தேவியின் சகோதரனுடைய உடையை அணிந்துகொண்ட பிறகே நன்றாக அவனைக் கவனித்த மன்னன் மகள், அவன் முகத்தில் ராஜகளை சொட்டு வதையும்; சிறிதும் சலனமின்றி நட்சத்திரங்கள் போல் ஜொலித்த அவன் கண்களில் தெரிந்த உறுதியையும் கண்டு, அவன் சாதாரண மனிதனாயிருக்க முடியாதென்பதையும், உயர் குடியில் பிறந்தவனென்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டுவிட்டாள். இப்படி அவள் தன்னைப்பற்றிப் புரிந்துகொண்டு தன் அந்தஸ்து பற்றி ஒரு முடிவுக்கும் வந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொள்ளக் கரிகால னுக்கு வாய்ப்பு ஏதும் இல்லையாகையால், அவள் தொடர்ந்து பேசிய தோரணை அவனுக்குப் பெரிதும் ஆச்சரியத்தையே விளைவித்தது.

“நீங்கள் யாரென்பது எனக்குத் தெரியாது. விதியால் தள்ளப்பட்டு வந்ததாகச் சொன்னீர்கள். இப்பொழுது சதியைப் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். விளக்கிச் சொல்லுங்கள்” என்று வினவினாள் விமலாதித்தன் மகள்.

“அரசகுமாரி! தெரியாதவர்களுக்கு விளக்கவேண்டும்; தெரிந்த உங்களுக்கு விளக்குவானேன்?” என்றான் கரிகாலன்.

அவன் பேச்சை மெல்ல மறைக்க முற்படுவதைக் கண்ட அரசகுமாரி, அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்து சட்டென்று நின்று, அவன் முகத்தில் தன் கண்களை நன்றாகப் பதியவிட்டு, “இனி ஒளிவு மறைவுக்கு இடமில்லை. வெளிப்படையாகப் பேசுங்கள்” என்றாள்.

கரிகாலன் சிறிது நேரம் ஏதோ யோசித்துவிட்டுச் சொன்னான்: “அரசகுமாரி! நீங்கள் பயங்கரமான அரசியல் சதியில் சிக்கியிருக்கிறீர்கள் என்பதைத் தெளிவாக அறிந்து கொண்டேன். ஆகவே, உங்கள் நிலைபற்றி அச்சமும் பரிதாபமும் என் மனதில் எழுந்து நிற்கின்றன.”

அவன் வார்த்தைகளைக் கேட்ட அரசகுமாரியின் இதழ்களில் அலட்சியப் புன்முறுவலொன்று படர்ந்ததன்றி அவள் முகத்தின் கம்பீரமும் சற்றே உயர்ந்தது. வாளினும் கூர்மையான விழிகளைக் கரிகாலன்மீது ஓட்டிய மன்னன் மகள், “விமலாதித்தனின் மகள் அச்சம் என்று ஒரு சொல் இருப்பதையே அறியமாட்டாள், அவளைப்பற்றி யாரும் பரிதாபப்பட வேண்டிய அவசியமுமில்லை” என்றாள்.

அவள் நின்ற தோரணை, பேச்சுக்களில் தொனித்த அச்சமின்மை, இதழ்களில் தவழ்ந்த அலட்சியக் குறுநகை, அனைத்தையும் கவனித்த கரிகாலன், ‘இத்தனை துணிவும் அழகும் நிரம்பிய பெண் பெரிய வல்லரசுகளுடன் மோதத் துணிந்து விட்டாளே’ என்ற நினைப்பால் பெருமூச்செறிந் தான். அவன் ஆயாசத்தையும் ஆயாசத்தால் ஏற்பட்ட பெருமூச்சையும் கவனித்த மன்னன் மகள், “எதற்காகப் பெருமூச்சு விடுகிறீர்கள்? இப்பொழுது என்ன ஆபத்து வந்துவிட்டது?” என்று கேட்டாள்.

“ஆபத்து வரவில்லை அரசகுமாரி. ஆபத்தைத்தான் நீங்களே வரவழைத்துக்கொண்டு விட்டீர்களே. ஆபத்துத்தான் உங்களைச் சூழ்ந்து நிற்கிறதே?” என்றான் கரிகாலன்.

“ஆபத்து சூழ்ந்து நிற்கிறதா?”

“ஆம் அரசகுமாரி! ஒரு பக்கம் சோழப் பேரரசு மோதுகிறது. இன்னொரு பக்கம் மேலைச் சாளுக்கியர்களின் பயங்கரப்படை பாய்ந்து நிற்கிறது. இரண்டுக்கு மிடையில் அழகெல்லாம் திரண்ட உங்கள் உடல். இதைவிடப் பயங்கரம் என்ன வேண்டும்?” என்றான் கரிகாலன்.

“சோழப் பேரரசா! மேலைச் சாளுக்கியர்களின் படை பலமா!” என்று, ஏதும் அறியாதவள் போல் வினவினாள் விமலாதித்தன் மகள்.

“அரசகுமாரி, சோழப் பேரரசு வேங்கி நாட்டை விழுங்கப் பார்க்கிறது. மேலைச் சாளுக்கியர்களுக்கும் இதைக் கபளீகரம் செய்ய ஆசை. இரண்டு பேர் ஆதிக்கமும் இல்லாமல் சுதந்திர நாடாக வைத்திருக்க உங்கள் முயற்சி நடக்கிறது.” “இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“ஊகம். சரித்திர உண்மைகளை இணைத்துப் பார்க்க எனக்குள்ள சக்தி.”

“தற்புகழ்ச்சி அதிகமாயிருக்கிறதே!”

“தற்புகழ்ச்சியல்ல, உள்ள உண்மை, மனித அறிவுக்கு எட்டாதது உலகத்தில் எதுவும் இல்லை. ஆனால் அந்த அறிவைப் பயன்படுத்தப் பக்குவம் தேவை. அந்தப் பக்குவத்தை அளிக்கிறது சாஸ்திர ஞானம். அத்தகைய பக்குவம், விஷயங்களைப் பாகுபாடு செய்து பார்க்கும் பகுத்தறிவு ஏற்பட்டுவிட்டால் எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். இரண்டுடன் இரண்டைச் சேர்த்தால் நாலு என்று சொல்லப் பெரும் திறமை வேண்டியதில்லை. அனால் எண்களின் தன்மை, எண்களின் தொகுப்பு முறை இவை தெரியவேண்டும். அரசியலிலும் அப்படித்தான் அரசகுமாரி. அதுவும் ஒரு பெரிய கணித சாஸ்திரம்தான். அதில் கணக்குப் போடுவதும் கணக்குத் தீர்ப்பதும் நமக்குள்ள சரித்திர அறிவைப் பொறுத்தவை. அப்படி விளையாடப்படும் அரசியல் சதுரங்கத்தில், கணக்கு சிறிது பிசகி னால் ராணிக்கு ஆபத்துத்தான்!” என்றான் கரிகாலன்.

அவன் சதுரங்கத்தின் ராணியாகக் குறிப்பிட்டது தன்னைத்தான் என்பதை அரசகுமாரி நிமிஷ நேரத்தில் புரிந்து கொண்டதால், அவள் லேசாகச் சிரித்தாள். அத்துடன், “இந்தச் சதுரங்கத்தில் ராணி வெட்டப் படுவாள் என்று நினைக்கிறீர்களா?” என்றும் கேட்டாள்.
“ராணிக்கு ஆபத்து என்றுதான் சொன்னேனே தவிர வெட்டப்படுவாள் என்று சொல்லவில்லை. ராணிக்குச் சரியான காவலாள் இருந்தால், எதிரி கிட்டே வரமுடியா தல்லவா?” என்றான் கரிகாலன்.

“அத்தகைய காவலாளருக்கு எங்கே போவது?” என்று சதுரங்க பாஷையிலேயே கேட்டாள் நிரஞ்சனாதேவி.

“உங்களுக்கு ஆட்சேபணையில்லாவிட்டால் இதோ நானிருக்கிறேன்!” என்று சொல்லிய கரிகாலன், தன் வார்த்தைகளை அவள் எப்படி வரவேற்கிறாள் என்பதை அறிய, அவள் முகத்தை ஏறெடுத்தும் நோக்கினான்.

அந்தப் பதிலைக் கேட்ட நிரஞ்சனாதேவி ஒருகணம் ஸ்தம்பித்தே போனாள். எங்கிருந்தோ வந்து குதித்த இந்த மனிதன் தன்னைக் காப்பதாகவும் தன் காவலாளாக இருப்பதாகவும் கூறியதைக் கேட்ட அவள், ‘யாரோ அரச குமாரன் திடீரெனத் தோன்றுவதும், அரசகுமாரி ஒருத்திக்கு அவன் உதவுவதும் கதைகளில் நடக்கும்; வாழ்க்கையில் நடக்குமா?’ என்று எண்ணிச் சிரித்தாள்.

“எதற்காகச் சிரிக்கிறீர்கள்?”

“இன்றைய இரவு நடப்பதெல்லாம் கதையில் நடப்பது போல் இருக்கிறதே என்று நினைத்தேன்.”

“அதனாலென்ன?”

“அதனாலென்னவா! கதையில் நடப்பது வாழ்க்கையில் நடக்க முடியுமா?”

“ஏன் முடியாது? வாழ்க்கையிலிருந்து கதை உண்டா கிறது; ஆகவே கதையைப் பின்பற்றி வாழ்க்கை நிகழ்ச்சிகள் ஏற்படுவதில் விந்தை என்ன இருக்கிறது?”

“விஷயம் தெரியாமல் பேசுகிறீர்கள். நீங்கள் பாதுகாக்க முன்வரும் பெண் யாரென்பதை அறியாமல் பேசுகிறீர்கள். முன்னிருக்கும் ஆபத்தும் எத்தன்மையதென்பது உங்க ளுக்குத் தெரியாது.”

“நன்றாகத் தெரியும், அரசகுமாரி.”

“என்ன தெரியும் உங்களுக்கு?”

“சொல்லுகிறேன் கேளுங்கள்…” என்று துவங்கிய கரிகாலன், வஸந்த மண்டபத்தின் அந்த அறைக்குள்ளே சற்று நேரம் உலவிக்கொண்டே சிந்தனை செய்தான். சிந்தனை செய்யச் செய்ய அவன் கண்கள் ஏதோ கனவுலகத்தில் சஞ்சரிப்பதைப் போல் தோன்றின. அந்த உலகத்திலிருந்தே பேசுபவன் போலும் எதிரேயிருக்கும் மாணவிக்குப் போதிக்கும் ஆசான் போலும் உள்ள நிலையை விவரிக்க முற்பட்ட கரிகாலன் வாயிலிருந்து வார்த்தைகள் ஒரே சீராகவும் திடமாகவும் உதிரத் தொடங்கின. அவன் தரையைப் பார்த்துக் கொண்டும் நடந்து கொண்டுமே பேசத் தொடங்கிக் கூறினான்:

“அரசகுமாரி! தமிழ்நாடு இன்று மகோன்னத நிலையில் நிற்கின்றது. பிறந்த நாட்டுப் பெருமையை எடுத்துப் பறைசாற்றுகிறேன் என்று நினைக்காதீர்கள்.
பிறந்த அன்னையை நினைத்து மகிழ்ந்து பெருமிதமடை யாத மகன் யாரும் இருக்க முடியாதல்லவா! அந்தப் பெருமையால் என் சித்தம் குதூகலிக்க உள்ளம் உவகையால் துள்ள, சொல்கிறேன். வட பெண்ணைக்கும் வெள் ளாற்றுக்கும் இடையே குறுகிக் கிடந்த சோழச் சிற்றரசு விஜயாலயன் காலம் முதல் விரிவடையத் தொடங்கி, இராஜராஜ சோழன் வாள் பலத்தால் வடக்கே கிருஷ்ணா நதியையும், மேற்கிலும் கிழக்கிலும் கடலையும், தெற்கே கடலையும் தாண்டிச் சிங்களம் வரையிலும் நீண்டு அகன்று இன்று பாரதத்தின் மிகப் பெரிய பேரரசாகப் பரந்து கிடக்கிறது. இராஜராஜன் காலத்திலேயே முடிசூடிப் பல போர்களில் வாகை சூடிய இராஜராஜன் மகன் இராஜேந்திர சோழதேவனின் தோள்தினவு இன்னும் அடங்கவில்லை. வடகிழக்கில் கிருஷ்ணா நதியின் அலை களும் வடமேற்கில் துங்கப்பத்திரையின் வேகமான நீரோட்டமும் தன் பேரரசைத் தடுத்து நிற்பதைப் பரகேசரி வர்மனான ராஜேந்திர சோழன் விரும்பவில்லை. சோழ மன்னன் கண்கள் கிருஷ்ணாவை அடுத்து நிற்கும் இந்த வேங்கி நாட்டின் மீது நிலைத்து நிற்கிறது. கிருஷ்ணாவின் அலைகளைத் தாண்டி, வேங்கி நாட்டை உடைத்து, வடக்கே தன் பேரரசை விஸ்தரிக்கத் துடித்துக் கொண் டிருக்கிறான் சோழப் பேரரசன். அவன் கண்கள் மட்டும் வேங்கி நாட்டின் மீது விழுந்திருந்தால், இதன் கதி இத்தனை அபாயத்திலிருக்காது. இதை நோக்கி மேலைச் சாளுக்கிய மன்னன் கண்களும் வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. மேலைச் சாளுக்கிய மன்னனான ஜெயசிம்மனும் அப்படி அற்ப சொற்பமானவனல்ல. பலமுறை போர்கள் நடந்தும் மேலைச் சாளுக்கியர்களின் பலம் சிறிதும் குன்றவில்லை. சோழர்கள் தொடுத்த போர்களில் அவர்கள் படைகள் அழிந்தன. ஆனால் அவர்கள் திறன் அழியவில்லை . துங்க பத்ராவைத் தாண்டியுள்ள கல்யாணபுரம் இப்பொழுது தலைநகராகிவிட்டது. அங்குள்ள கோட்டையையும் ஜெயசிம்ம சாளுக்கியன் பலப்படுத்திவிட்டான். எந்தக் காரணத் தைக் கொண்டும் சோழர்களை ஓங்கவிடக் கூடாதென்று திடச்சித்தம் கொண்ட ‘ஜெயசிம்ம சாளுக்கியன், தனது தாயாதிகள் நாடான வேங்கி நாட்டையும் சோழர்கள் வசத்தில் சிக்கவிடாதிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறான். இரண்டு நாடுகளின் உறவு முறை வேறு வேங்கி அரச குடும்பத்தில் கலந்து நிற்கிறது….” என்று பேசிக் கொண்டே போன கரிகாலன், தன் பேச்சைச் சற்று நிறுத்தி, நிரஞ்சனாதேவியை ஏறெடுத்து நோக்கினான். அதுவரை நின்றிருந்த அவள் கட்டிலின் மீது உட்கார்ந்துவிட்டாள். அவள் தலை குனிந்து கிடந்தது. கண்கள் மூடிக்கிடந்தன. தன் பேச்சு அவள் இதயத்தில் ஊறிவிட்டதைக் கண்ட கரிகாலன் மேலும் சொல்லலானான்:

“வேங்கி நாட்டின் தலையெழுத்து விசித்திரமானது அரசகுமாரி! ஏற்கெனவே விவாகமாயிருந்த வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனுக்கு, சோழப் பேரரசுக்கு வடக்கே பிடியிருக்க வேண்டுமென்பதற்காகவே, இராஜராஜ சோழன் தன் மகள் குந்தவையை இரண்டாந்தாரமாகக் கொடுத்தான். ஆனால், மேலைச் சாளுக்கியர்களுக்கும் இந்த வித்தை தெரியாமற் போகவில்லை. அந்த அரச குடும்பப் பெண்ணொருத்தி விமலாதித்தனுக்கு மூன்றாந் தாரமானாள். முதல் மனைவி ஒரு பெண்ணைப் பெற்றுக் கொடுத்து மண்ணுலகை விட்டுச் சென்றாள். அந்தப் பெண்ணான நீங்கள் எழிலெல்லாம் திரண்டு வந்தது போல் என் எதிரே நிற்கிறீர்கள்.

“விமலாதித்தனின் இரண்டாம் தாரமும் மூன்றாம் தாரமும் ஆண்மகவுகளைப் பெற்றார்கள். சோழ ராஜ குமாரி குந்தவைக்குப் பிறந்தான் இராஜராஜ நரேந்திரன். சாளுக்கிய அரச மகளுக்குப் பிறந்தான் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன். சந்ததிகள் தலையெடுத்ததும், இனி இவ்வுலகில் தன் கடமை தீர்ந்ததென விமலாதித்தன் மேல் உலகம் ஏகினான். ஆனால் நாட்டை எப்படி விட்டுச் சென்றான்? வேங்கி நாட்டுச் சிம்மாசனத்துக்கு இரண்டு இளவரசர்கள்! ஒரே நாட்டில் இரு விரோதிகள் சிருஷ்டித்து விட்ட பெரும் வாள்கள்! ஒன்று சோழநாட்டு இளவல், இராஜராஜ நரேந்திரன்! இன்னொன்று மேலைச் சாளுக்கியர்களின் செல்வன் விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன்.”

இந்த இடத்தில், மன்னன் மகள் தலையிட்டு “சரித்திரத்தை நன்றாக அறிந்திருக்கிறீர்கள்” என்றாள்.

“இன்னும் சொல்கிறேன் கேளுங்கள், அரசகுமாரி. சோழப் பேரரசு தன் பலத்தால் இராஜராஜ நரேந்திரனுக்கு வேங்கி நாட்டில் முடி சூட்டிவிட்டது. ஆனால் மேலைச் சாளுக்கிய நாடு அருகிலிருப்பதாலும், ஜெயசிம்ம சாளுக்கியன் படைகள் வேங்கி நாட்டை ஆக்கிரமித்து நிற்பதாலும் பெரும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஜயாதித்தனுடைய மாமன் என்ற முறையில், ஜெயசிம்ம சாளுக்கியன் அடிக்கடி இங்கு வந்தும் தன் படைகளை நிறுத்தியும், வேங்கி நாட்டின் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தி விட்டான். இராஜராஜ நரேந்திரன் மீது தனக்கேதும் பகையில்லாதது போல் நடித்து அவனைத் தன் கைப்பொம்மையாகவும் ஆக்கியிருக்கிறான். சோழர்கள் இளவலுக்குத் துணையாக, அவன் ரொம்பக் கேவலமான பேர்வழிகளை நிறுத்தியிருப்பதாகவும், சூடாமணி விஹாரத்தில் இருக்கும்போதே கேள்விப்பட்டேன். இராஜராஜ நரேந்திரனைக் குடிகாரனாக்கி, அற்ப வழிகளில் அவனை இறக்கிவிட்டு, மக்கள் வெறுக்கும்படியாகச் செய்து, பிறகு விஜயாதித்தனை மன்னனாக்க ஜெயசிம்ம சாளுக்கியன் திட்டமிட்டிருக்கிறான்.” என்று சொல்லிக் கொண்டு போன கரிகாலனை இடைமறித்த நிரஞ்சனாதேவி, “ஜெயசிம்மன் நோக்கத்தை எப்படித் தெரிந்துகொண்டீர்?” என்று வினவினாள்.

கரிகாலன் விளக்கினான்: “அரசகுமாரி! நான் கல்வி பயின்ற திருக்கூடமான சூடாமணி விஹாரத்தைப் பற்றியும் அந்த மடாலயத்தின் பெரியாரைப் பற்றியும் தெரிந்தால் நீங்கள் இப்படிக் கேள்வி கேட்கமாட்டீர்கள். அந்த விஹாரத்திலிருந்த பொழுது, அவரை நாடி யோசனை கேட்க வராத ராஜதந்திரிகள் கிடையாது. அவர் அறியாத அரசியல் மர்மங்களும் கிடையாது. ஓர் அரசன் ஒரு காரியத்தில் இறங்கினால், அதன் காரணம் என்ன என்பதை விநாடி நேரத்தில் ஊகித்துவிடுவார். சரித்திர ஞானம், அன்றாடம் நாட்டில் நிகழும் விஷயங்கள், அவற்றை ஆராயும் தன்மை, இத்தனையும் அவர் சொல்லிக் கொடுத்தவைதான் எனக்கு. ஜெயசிம்ம சாளுக்கியனைப் பற்றியும் அவன் சாமர்த்தியத்தைப் பற்றியும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். அங்கு அவன் ஆதிக்கம் இருந்தும் விஜயாதித்தனை ஏன் வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தவில்லை? இத்தனைக்கும் அவன் மருமகன்! காரணம் வெகு தெளிவு, அரசகுமாரி. விஜயா தித்தனை ஜெயசிம்மன் படை பலத்தைக் கொண்டு அரியணையில் ஏற்றினால், அடுத்த விநாடி வேங்கி நாட்டின் மீது சோழ நாட்டுப் படையெடுப்பு ஏற்படும். தன் மருமகனைக் காக்க இராஜேந்திரன் படை அனுப்பத் தயங்கமாட்டான் என்பது ஜெயசிம்மனுக்கு நன்றாகத் தெரியும். ஆகையால் நேரடியான போர் முறையில் இறங்கவில்லை. தந்திரத்தைக் கையாளுகிறான். இராஜராஜ நரேந்திரன் மீது மக்களுக்கு வெறுப்புண்டாக்கப் பார்க்கிறான். மக்கள் வெறுத்து மன்னனை அகற்றினால், இராஜேந்திரன் கூடத் தலையிட முடியாது. மக்கள் பலத்தை எதிர்ப்பதற்கு எந்த மன்னாதி மன்னனாலும் முடியாது என்பதை இராஜேந்திர சோழனைவிட அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆகை யால்தான் மக்களைத் தூண்ட முயல்கிறான் ஜெயசிம்மன். இராஜராஜ நரேந்திரன் ஒழுக்கம் கெட்டால் மக்கள் அவனை வெறுப்பார்கள்! மக்கள் வெறுத்தால் அவனை நீக்குவது சுலபம். இது ஜெயசிம்மன் தந்திரம். இங்குதான் உங்கள் தலையீடு இருக்கிறது. ஒரு பக்கம் சோழப் பேரரசின் படை பலம்; இன்னொரு பக்கம் சாளுக்கியர்களின் இராஜ தந்திரம். வேங்கி நாட்டை நோக்கிப் பாய்ந்து வரும் அந்த இரு வேல்களுக்கிடையே நிற்கின்றன இரு வேல்விழிகள்.”

அதுவரை ஆச்சரியத்தால் உணர்ச்சிகள் பொங்கக் கரிகாலனின் சரித்திர ஆராய்ச்சியைக் கேட்டுக்கொண்டிருந்த நிரஞ்சனாதேவி, “என் தலையீடா! நானா குறுக்கே நிற்கிறேன்?” என்றாள் நித்திரையிலிருந்து விழித்தவள் போல. “எந்தவிதத்தில் நான் தலையிடுகிறேன்?” என்றும் கேட்டாள்.

“இராஜராஜ நரேந்திரனை அரியணையில் பலமாக இருத்தி வைக்க நீங்கள் ஏற்பாடு செய்கிறீர்கள். காரணம் மட்டும் எனக்கு விளங்கவில்லை. இராஜராஜ நரேந்திரன் ஒரு சிறிய தாயின் மகன். விஜயாதித்தன் இன்னொரு சிறிய தாயின் மகன். இந்த இருவரில் உங்களுக்கு இராஜராஜன் மீது அன்பும் விஜயாதித்தன் மீது வெறுப்பும் ஏற்படக் காரணமென்ன?” என்று வினவினான் கரிகாலன்.

“காரணம் நான் சொல்லுகிறேன்” என்றது ஒரு புதுக் குரல். அந்தக் குரலைக் கேட்டு வாயிற்படியை நோக்கிய மூவரும், அடியோடு திடுக்கிட்டுப் போனார்கள். வாயிற் படியில் இராஜராஜ நரேந்திரன் நின்றிருந்தான்.

Previous articleMannan Magal Part 1 Ch 8 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here