Home Historical Novel Mannan Magal Part 1 Ch1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

113
0
Mannan Magal Ch1 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 1 Ch1 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 1 Ch1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் முதல் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 சூடாமணி விஹாரம்

Mannan Magal Part 1 Ch1 | Mannan Magal | TamilNovel.in

சித்திரைத் திங்கள் துவங்கிப் பதினைந்து நாள்களுக்கு மேலாகிவிட்டதால், இரவு முழுவதும் மக்களை வாட்டி வதைத்த அந்தக் கோடை வெப்பம்கூடக் காலை வேளையில் அடியோடு நீங்கி, சூடாமணி விஹாரத்தின் சுற்றுப் புறம் பூராவிலும் இதமான சீதனநிலை நிலவி உதவி புரிந்தது. சைலேந்திர மன்னனான ஸ்ரீமாற விஜயதுங்க வர்மனால் நிர்மாணிக்கப்பட்ட பிரும்மாண்டமான அந்த புத்த விஹாரத்தின் எதிரே இருந்த நாகைக் கடலின் அலைகள் கூட அன்று காலையில் புத்தர் பிரான் மனத்தைப் போல அமைதியடைந்து லேசாகத் தரையை வந்து தொட்டுத் தொட்டுச் சென்றுகொண்டிருந்தன. கடலில் எழுந்த குளிர்ந்த காற்றை அனுபவித்த கடல் நாரைகள், ஆனந்தத்தால் பலவித சப்தங்களை எழுப்பிக்கொண்டு, தங்கள் வெள்ளை இறகுகளை அகல விரித்துப் பறந்து, மெல்லிய தோலால் பாவப்பட்டிருந்த தங்கள் நரம்புப் பாதங்களை ஜலமட்டத்தில் வைத்து மிதந்து மிதந்து, ஓடுமீன் ஓட உறுமீன் வருவதை எதிர்பார்த்து, அப்படியும் இப்படியும் தங்கள் அலகுகளை ஆட்டிக்கொண்டிருந்தன.

இரவின் வெப்பத்தால் கரையோரத்தில் அலைக்கருகே பதுங்கிக்கிடந்த நண்டுகள் வெளியே கிளம்பித் தங்கள் கால்களால் மணலைக் கவ்விக் கவ்வி நடந்து வளைகளைத் தேடிச் சென்றன. உக்கிரமான காற்றில்லாததால் சிறுக அடித்துக்கொண்டிருந்த அலைகளிலும், தக்கையான கிளிஞ்சல்கள் பல மிதந்து வந்து கரையில் பாய்ந்து ஓடும் நண்டுகளைப் பார்த்து விழித்தன. உறுமீனை நோக்கி ஜல மட்டத்தில் உட்கார்ந்தும் பறந்தும் கொண்டிருந்த நாரை களையும், முடிந்தால் மனிதர்களையும் பட்சணம் செய்யக் கூடிய பெரிய சுறாக்கள், சிறுது தூரத்தில் பிரும்மாண்ட மாக ஜலமட்டத்துக்கு மேல் எழுமபி எழும்பித் தங்கள் வாய்களில் நீரை வாணம்போல் ஊதிவிட்டு மீண்டும் கடலுக்குள் பாய்ந்து மறைந்தன. இந்தச் சுறாக்களோடு பிரதி தினமும் போராடும் மீனவர் மட்டும், காலை நேரத்தின் குளிர்ச்சியை அனுபவித்துக்கொண்டு மணலில் குழந்தையும் குட்டியுமாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர். கரைக்குச் சற்றுத் தூரத்தில் சோணாட்டுப் போர்க் கலங்கள் இரண்டு நங்கூரம் பாய்ச்சி நின்று லேசாக ஆடிக் கொண்டிருந்தன. அவற்றைக் கரைக்கு வா வா என்று அழைப்பன போல் சூடாமணி விஹாரத்தில் புஷ்பச் செடிகள் காலை நேரத்தில் இன்பமான குளிர்ந்த காற்றில் தங்கள் மலர்த்தலைகளை அசைத்தன.

இரவு முழுவதும் வெப்பத்தின் காரணமாக உறக்கம் பிடிக்காதிருந்த நாகைப்பட்டணத்துப் பொதுமக்கள் இன்ப மான அந்தக் காலை நேரத்தை அனுபவிக்க எழுந்திருக்க வில்லையே தவிர, சூடாமணி விஹாரத்தின் விமானங்களி லிருந்த புறாக்களும், கிள்ளைகளும், எழுந்து சப்திக்கத் தொடங்கி விட்டன. விஹாரத்தைச் சுற்றியிருந்த தோட்டச் செடிகளில் கூடு கட்டியிருந்த குயில்களும், உள்ளே கோயில் கொண்டிருந்த புத்தர் பிரானுக்கு உதயராகம் பாடின. இயற்கையில் கலந்து வாழும் அந்தப் புள்ளினங் களின் இன்பக் கூச்சலுக்குச் சுருதி கூட்டுவதுபோல், விஹாரத்திலிருந்த புத்த பிக்ஷக்கள், “புத்தம் சரணம் கச்சாமி!” என்று மெல்லக் கோஷித்தார்கள். பயபக்தியுடன் மெல்ல எழுப்பப்பட்ட அந்தச் சரணாகதிச் சப்தம், அந்த விஹாரத்தின் பிரும்மாண்டமான ஸப்தஸ்வர கற்றூண்களிலும், பெரிய சுவர்களிலும் தாக்கி எதிரொலி செய்தால் கருணையே உருவான புத்தமகானின் நாமத்தைக் கல்லும் உருகிச் சொல்வது போன்ற பிரமை ஏற்பட்டது. சூடாமணி விஹாரத்தின் நடு மஹாலில் உட்கார்ந்து புத்தபிரான் நாமத்தைத் துதித்த அந்த இருபத்தைந்து பிக்ஷுக்களின் மீது மட்டுமின்றி, அந்தக் கூட்டத்திலிருந்து சற்று விலகித் தலைசாய்த்து நின்ற ஒரு வாலிபன் மீதும், புத்தரின் மந்தஹாசம் விழுந்துகொண்டிருந்தது. மூடிய கண்களைத் திறக்காமலே தியானத்தில் ஆழ்ந்திருந்த அந்தச் சிறுவனை, விஹாரத்தின் தலைமைப் பிக்ஷவே தொட்டு, “தம்பி! விழித்துக்கொள். காலைப் பிரார்த்தனை முடிந்து விட்டது” என்றார்.

கண்களைச் சிறிதே அகல விழித்த அந்த வாலிபன், பதிலேதும் சொல்லாமல் அந்தப் பெரியவரைப் பின் தொடர்ந்து சென்றான். இருபது இருபத்திரண்டு வயதுக்கு மேற்படாத அந்த வாலிபனின் நடை மிகக் கம்பீரமாக இருந்தது. பிக்ஷுக்களுக்குரிய காஷாய வஸ்திரத்தை அவன் அணிந்திருந்த போதிலும், காஷாயத்துக்கும் அவனுக்கும் எந்தவித சம்பந்தமுமிருக்க முடியாதென்பதை அவன் கைகளை ஆட்டிச் சென்ற தோரணை மட்டுமின்றி, அவன் இடையில் வயிற்றுக்கு நேர் எதிரில் வேஷ்டியின் மடிப்பில் செருகியிருந்த உடைவாளும் நிரூபித்தது. தீர்க்கமான நாசி யுடன் சந்திர பிம்பத்தையும் பழிக்கும்படி எழில் மிகுந்து கிடந்த அவனுடைய குழந்தை முகத்தைச் சுற்றிலும் நன்றாக வெட்டப்பட்டுச் சுருண்டு சுருண்டு கிடந்த மயிர்கள் செந் தாமரையைச் சுற்றி வட்டமிடும் வண்டுகளைப் போல காட்சியளித்தன. அவ்வளவு அழகிய முகத்திலும் அழகாகவே திகழ்ந்த கண்கள் மட்டும் இரண்டு கூரிய ஈட்டிகள் போல ஜொலித்துக் கொண்டிருந்தன. மிகச் சுறு சுறுப்புடன் சதா அப்புறமும் இப்புறமும் சஞ்சரித்த அந்தக் கூரிய விழிகளில் இருந்த பார்வை, அந்த வாலிபனின் சீரிய ஆராய்ச்சி நோக்கத்தைக் காட்டியது. அவனுடைய செவ்விய உதடுகள் லேசாக மடிந்து கிடந்த மாதிரியிலிருந்து அவன் உள்ளத்தின் உறுதி நன்றாகத் தெரிந்தது. அந்த உறுதியை, திட்டமாகப் பாதம் பாவிச் சென்ற அவன் நடை நிரூபித்தது.

விஹாரத்தின் தலைமைப் பிக்ஷவும் பின்னால் சென்ற வாலிபனும் ஒருவருக்கொருவர் எந்தவித வார்த்தையும் பேசாமலே சீரிய சிந்தனையுடன் நடந்து, தாழ்வாரங்களைத் தாண்டி, மூலையிலிருந்த ஒரு பெரிய அறைக்கு வந்து சேர்ந்தனர். அறையிலிருந்த பெரிய பாயை இழுத்துப் போட்டுக்கொண்டு பிக்ஷு உட்கார்ந்து, பக்கத்திலிருந்த மரப்பெட்டியையும் தமக்காக இழுத்துக்கொண்டார். பிறகு எதையோ மறந்துவிட்டவர் போல் வெளியே சென்று பெரிய சாவிக்கொத்துடன் திரும்பி வந்து பழையபடி பாயில் உட்கார்ந்து, வெகுநேரம் ஏதோ மௌனமாக யோசித்துக் கொண்டிருந்தார். கடைசியாகத் தலைநிமிர்ந்து எதிரேயிருந்த வாலிபனை உற்றுநோக்கிய போது, அவர் கண்களில் ஒரு பொட்டுக் கண்ணீரும் தேங்கி நின்றது. அதைக் காஷாயத்தின் தலைப்பால் துடைத்துக்கொண்ட பிக்ஷு கேட்டார், “தம்பி! கடைசியாக விஹாரத்தை விட்டுப் போய்விடுவதென்று தீர்மானித்துவிட்டாயா?” என்று.

அவருடைய சொற்களில் தொனித்த துக்கத்தையோ கண்ணீரில் துளிர்த்த நீரையோ பார்க்கத் தவறாத அந்த வாலிபனும், உணர்ச்சி ததும்பும் குரலிலேயே பேசத் தொடங்கி, “தந்தையே! எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து உங்களையும் கருணாமூர்த்தியான புத்தர் பிரானையும் தவிர வேறு பெற்றோர்களை நான் அறியேன். இந்த விஹாரத்தையும் சித்தார்த்தனின் திருவடி நிழலையும் விட்டு, தங்களுடைய அன்பு வலையிலிருந்து விலகிச் செல்ல எனக்கும் இஷ்டமில்லைதான். இருந்தாலும் பிறந்த கடன் ஒன்று இருக்கிறது; அது தங்களுக்குத் தெரியாததல்ல. என் கடமையை நான் நிறைவேற்ற வேண்டாமா?” என்றான்.

“உன்னை அனாதரவாக விட்டுப்போன உன் தந்தைக்கு நீ செலுத்த வேண்டிய கடமை என்ன இருக்கிறது தம்பி! அதைவிட புத்த பகவானுக்கும் இந்த விஹாரத்துக்கும் நீ உன்னை அர்ப்பணித்துக் கொண்டால், உலகத்துக்கு எத்தனையோ நன்மை செய்யலாமே” என்றார் தலைமைப் பிக்ஷு.

“தந்தையே! துறவு மனப்பான்மை எனக்கு இன்னும் ஏற்படவில்லையே. அதற்கான வயதும் ஆகவில்லையே, என்றான் வாலிபன்.

“தம்பி! துறவறம் வயதைப் பொறுத்ததல்ல; மனத்தைப் பொறுத்தது. அதைப் பக்குவப்படுத்த நானிருக்கிறேன்” என்று சொன்னார் பெரியவர்.

“பக்குவப்படுத்துவதற்கும் கடவுளின் கருணை வேண்டு மல்லவா? களிமண்ணைப் பக்குவப்படுத்துவதற்கும் தண்ணீர் வேண்டும்; அதைப் போலத்தான் மனித மனமும். அதைப் பக்குவப்படுத்த மனித முயற்சியோடு கடவுளின் கருணையாகிற தண்ணீரும் கலக்க வேண்டும். இதை நீங்களே சொல்லி யிருக்கிறீர்களே!” என்று பதில் கூறிய வாலிபன், பெரியவர் முகம் சற்றே சுளிப்பதைக் கண்டான். அதற்குக் காரணம் அவனுக்குத் தெரியும். கடவுள் என்ற சொல் அவரது உள்ளத்தைச் சற்று உறுத்தியிருக்கிறது என்பதையும் அந்தச் சொல்லுக்குப் பதில் புத்தர்பிரான் கருணை என்று சொல்லி யிருந்தால் அவருக்கு எத்தனையோ ஆனந்தமாயிருக்கும் என்பதையும் புரிந்துகொண்ட வாலிபன் உதடுகளில் லேசாகப் புன்முறுவலும் தோன்றியது.

அவன் உதடுகளில் உதயமான புன்முறுவலைக் கவனித்த பெரிய பிக்ஷவும் முகச்சுளிப்பை விநாடியில் மறைத்துக்கொண்டு, “தம்பி! புத்தர் கருணை மழைநீர் போன்றது. எல்லோருக்கும் சமமாகப் பெய்கிறது. உனக்கும் அது கிடைக்காது என்று ஏன் நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“தந்தையே, பிசகு புத்தபிரான் மீதல்ல, விழலில் நெல் விளையவில்லையென்றால் அது மழையின் குற்றமல்ல” என்றான் வாலிபன்.

“உன் உள்ளம் விளையாட்டு உள்ளமல்ல, தம்பி! சகல சாஸ்திரங்களையும் படித்திருக்கிறாயே” என்றார் பெரியவர் மீண்டும்.

சாஸ்திரம் படித்திருக்கிறேன் உங்கள் கருணையால். ஆனால், சாந்தி பெறவில்லை. மனம் பெற்றோர்களைத் தேடத் துடிக்கிறது. உலக பந்தத்தில் இப்படிச் சிக்கியுள்ள மனம் துறவறத்துக்குத் தகுந்ததல்ல. காஷாயம் மட்டும் துறவறத்துக்கு அடையாளமென்றால், இப்பொழுதே நான் துறவிதான். அப்படி என்னைத் துறவியாக்கும் உத்தேசமிருந்தால் எனக்குச் சாஸ்திரங்களை மட்டும் கற்றுக் கொடுத்திருக்கலாம். எதற்காக வாள்போர்ப் பயிற்சி அளித்தீர்கள்?” என்று வினவினான்.

“உன் தந்தைக்கு நான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற; அதுவும் நீ ஐந்து வயதில் இங்கு வந்தாய். இந்தச் சிறு வயதுக்குள் பெரிய தர்க்க சாஸ்திரியாகி விடுவாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை தம்பி. தவிர இத்தனை பாசம் உன்மீது ஏற்படும் என்றும் எதிர்பார்க்க வில்லை” என்று சொன்னபோது பெரியவரின் குரல் ஓரளவு தழுதழுக்கவும் செய்தது. உலக பாசத்தில் இப்படி சிக்கியதற்காக அடுத்த விநாடி வெட்கப்பட்ட பெரிய பிக்ஷ தமது உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு, “தம்பி! உன் தகப்பனுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டேன். நான் பௌத்தனானாலும் உன் தந்தையின் விருப்பப்படி உனக்குச் சைவ, சமய நூல்கள் அத்தனையும் கற்பித்துவிட்டேன். வாள்போரிலும் உனக்கு இணையான வர்கள் இன்றையத் தமிழ் மண்டலத்தில் இருக்க முடியாது…” என்ற பெரியவரை இடைமறித்த வாலிபன், “என்ன அப்படிச் சொல்கிறீர்கள்?” என்று வினவினான்.

தலைமை பிக்ஷீவின் உதடுகளில் புன்சிரிப்பு லேசாகத் தாண்டவமாடியது. “தம்பி! இந்தத் துறவியும் ஒருகாலத்தில் மனிதர்களை வெட்டிச் சாய்த்துக் கொண்டிருந்த மகா பாதகன்தான். ஆனால் புத்தர்பிரான் கருணையால் அந்தக் கொலைத் தொழிலிலிருந்து மீண்டேன். எனக்களித்த கருணையை புத்தர் பகவான் உனக்கும் ஒருநாள் அளிக்கட்டும்!” என்றார்.

அவர் பேச்சின் உட்கருத்தை விநாடியில் புரிந்து கொண்ட வாலிபன், ஆச்சர்யம் ததும்பும் கண்களுடன் அவரை உற்றுப் பார்த்தான். அந்த புத்தபிக்ஷவும் ஒரு காலத்தில் பெரிய வீரராயிருந்திருக்க வேண்டுமென்றும் பிறகு உலகை வெறுத்துத் துறவறம் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவனுடைய தெள்ளிய புத்தியில் திட்டமாகப் பளிச்சிட்டது. தலைமைப்பிக்ஷு தற்பெருமையைக் கூட எத்தனை சாமர்த்தியமாக வெளியிட்டார் என்பதை நினைத்த வாலிபன் உள்ளூர லேசாக நகைத்துக் கொண் டான். ‘உன்னைப்போல் வாள் வீரன் தமிழ் மண்டலத்தில் யாரும் இருக்க முடியாது’ என்று அவர் தன்னைப் புகழ்ந்ததிலிருந்தே, குருவான அவருடைய தற்பெருமை உள்ளடங்கி நின்ற விசித்திரத்தை நினைத்து வியந்தான். தலைமைப் பிக்ஷவின் கூர்மையான புத்தியையும், ஆழ்ந்த ராஜதந்திரத்தையும், விசாலமான நோக்கத்தையும் பல சமயங்களில் அனுபவித்திருந்த அந்த வாலிபனுக்கு, அவரை விட்டுப் பிரியவும் மனமில்லை. ஆனால் வாழ்க்கையின் கடமையை நினைத்து அந்த விஹாரத்திலிருந்து வெளியேற நினைத்தான். அந்த எண்ணத்தை மீண்டும் வலியுறுத்த நினைத்த வாலிபன், பெரியவரைப் பார்த்துச் சொன்னான்: “தந்தையே, தங்கள் சித்தப்படி நடக்கட்டும். என் வாழ்க்கைக் கடன் முடிந்து, புத்தர்பிரான் கருணையும் பிறக்குமானால் மீண்டும் இந்த விஹாரம் வந்து உங்கள் உத்தர வுப்படி நடக்கிறேன். அதற்கிடையில் தாங்கள் சொல்லிக் கொடுத்த வாள் பயிற்சிக்கும் வேலை கொடுக்க வேண்டாமா?”

பெரியவர் அவனை ஏறெடுத்துப் பார்த்து, “தம்பி! வாழ்க்கையில் வாளுக்கு வேலை குறைவேயில்லை. மனிதர்களுக்கு ஆசையிருக்கும் வரையில் சச்சரவு உண்டு. சச்சரவிருக்கும் வரையில் போர்க்கருவிகளுக்கு வேலை உண்டு. அதுவும் கொந்தளிக்கும் நிலைமையிலுள்ள இந்தப் பாரத பூமியில் உன் வாளுக்கென்ன, புத்திக்கும் நிறைய வேலை கிடைக்கும். கௌடில்யனுடைய அர்த்தசாஸ்திரத்தைப் பூராவாகப் படித்திருக்கும் உனக்கு, ராஜதந்திரத்தைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. புராணங்களைத் தலைகீழாக அலசவல்ல உனக்குப் போர்த்தந்திரங்களும் புதிதல்ல. யுத்த சாஸ்திர வியூகங் களில் உனக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?” என்றார்.

“எல்லாம் ஏட்டுச் சுரைக்காய்தானே!” என்றான் வாலிபன்.

“ஏட்டுச் சுரைக்காய், மனிதனுக்கு உரமூட்டும் உணவுக்குப் பயன்படாதிருக்கலாம் தம்பி; ஆனால் மனிதர் களைக் கொல்லக் கண்டிப்பாய்ப் பயன்படும். உலகத்திலே சிறிதுகாலம் சுற்றுமுன்னரே அநுபவத்தைப் பூரணமாகப் பெறுவாய். அந்த அனுபவத்துடன் சாஸ்திர ஞானமும் சேர்ந்தால் உன்னை வெல்ல ஒருவராலும் முடியாது. ஏதோ உன்னைத் தோத்திரம் செய்கிறேனென்று நினைக்காதே உண்மையைச் சொல்லுகிறேன். இத்தனை அறிவாளியான ஒருவன் நாச வேலைக்கு உடந்தையாகப் போகிறாயே என்ற வருத்தத்துடன் சொல்கிறேன்” என்றார்.

“நான் என்ன, உடனே சைன்னியத்தில் சேரப் போகிறேனா?”

“நீ சேராவிட்டாலும் உன் நாடு விடாது.”

“என் நாடு எது?”

“இந்த நாடுதான். சோழநாடு.”

“இத்தனை திட்டவட்டமாகச் சொல்லும் நீங்கள், ஏன் என் தகப்பனார் இன்னாரென்று சொல்ல மறுக்கிறீர்கள்?” “மறுக்கவில்லை தம்பி! எனக்கே தெரியாது.”

“அப்படியானால் நான் வீரன் மகன் என்பது மட்டும் எப்படித் தெரியும்?”

“உன் தந்தையைப் பார்த்திருக்கிறேன். அவர் பெரிய வீரர் என்பது நெற்றியில் எழுதி ஒட்டியிருந்தது. அதோ உன் முகமேதான். சற்று முற்றியிருக்கும் அதோ அந்தக் கூரிய பார்வை அவருக்கும் உண்டு…” என்று ஏதோ கனவில் பேசுவது போல் பேசிக்கொண்டு போன பெரியவர், “தம்பி, அதுமட்டுமல்ல; உனக்கு அவர் வைக்கச் சொன்ன பெயரும் எனக்குச் சந்தேகத்தை அளித்தது” என்றார்.

வாலிபன் கண்களில் திடீரென்று ஒரு பிரகாசம் தோன்றியது. “எனக்கு என்ன பெயரை வைத்திருக்கிறீர்கள்? அதைக்கூட இருபது வருஷமாக மறைத்துவிட்டீர்களே. இங்குள்ள பிக்ஷீக்களெல்லாம் என்னைத் ‘தம்பி’ என்றழைக்கிறார்கள். வெளியே ஊரில் போனால், ‘சின்ன சாமியார்’ என்றழைக்கிறார்கள். நீங்கள் வைத்த பெயர்தான் என்ன?” என்று கேட்டான்.

தலைமைப் பிக்ஷீ பதில் ஏதும் சொல்லாமல், பக்கத்தி லிருந்த மரப்பெட்டியைத் திறந்து பெரிய பச்சைக்கல் மோதிரம் ஒன்றை எடுத்து வாலிபனிடம் கொடுத்தார். விலை உயர்ந்த அந்த மோதிரத்தைப் பலமுறை திருப்பித் திருப்பிப் பார்த்த வாலிபன், அதன் உட்புறத்தைக் கூர்ந்து நோக்கினான். மிகுந்த பிரமிப்பால் அவன் கண்கள் மலர்ந்தன. உதடுகள் ‘கரிகாலன்’ ‘கரிகாலன்’ என்று இரு முறை உச்சரித்தன. வேத அத்யயனத்தின் போதுகூட உச்சரிக்காத அத்தனை பக்தியுடனும் உணர்ச்சியுடனும் அந்தப் பெயரை உச்சரித்த அந்த வாலிபனை நோக்கிய பெரியவர், “ஆம் கரிகாலா! அதுதான் உன் தந்தை உனக்குச் சூட்டச் சொன்ன பெயர்!” என்றார்.

“அப்படியானால் நான்…” என்று ஏதோ கேட்க வாயெடுத்த வாலிபனை, மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்த தலைமைத் துறவி, “கரிகாலா! சீக்கிரம் உடைகளை மாற்றிக்கொண்டு கிளம்பு. உனக்காகக் குதிரையொன்று வாசலில் நிற்கிறது. இங்கிருந்து கும்பகோணம் மடாலயத்துக்கு மாலைக்குள் போய்ச் சேரலாம். அங்கு ஒரு துறவி உன்னைச் சந்திப்பார். மீதி விஷயங்களை அவர் உனக்கு விளக்குவார்” என்றார்.

தந்தைக்கும் மேலாக மதித்து வந்த அந்தப் புத்தத் துறவியிடமும் இதர பிக்ஷீக்களிடமும் விடைபெற்றுக் கொண்டு சூடாமணி விஹாரத்திலிருந்து கிளம்பிய கரிகாலன் தலைமைப் பிக்ஷ சொன்னபடி கும்பகோணம் காவிரிக்கரையிலிருந்த புத்த மடாலயத்தருகே அன்று மாலையே வந்து சேர்ந்தான். மடாலயத்துக்கு எதிரே பிரவகித்துக் கொண்டிருந்த காவிரியின் அழகில் கருத்தை லயிக்க விட்டுக் குதிரைமீது கற்சிலையென உட்கார்ந்திருந்த கரிகாலனை, “யாரப்பா அது? குதிரையை விலக்கி ஓட்டு!” என்ற குரல் எச்சரித்தது. யாரது அப்படி அதட்டுவது என்று திரும்பிப் பார்த்த கரிகாலன் முன்பாக, ஒரு சைவத் துறவி நின்று கொண்டிருந்தார். அந்தத் துறவியால் தன் வாழ்க்கை எத்தனை தூரம் திரும்பப் போகிறதென்பதை அறியாத கரிகாலன், குதிரையை அசைக்காமலேயே அவருடன் பேச்சுக் கொடுக்கவும் தொடங்கினான்.

Previous articleMoongil Kottai Ch22 | Moongil Kottai Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 1 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here