Home Historical Novel Mannan Magal Part 2 Ch 1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

121
0
Mannan Magal part 2 Ch 1 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 1 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 1 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 1 உருவிய வாள்கள், உரத்த குரல்கள்

Mannan Magal Part 2 Ch 1 | Mannan Magal | TamilNovel.in

அரையன் ராஜராஜன் போர்த் திட்டத்துக்குப் பழுது சொல்லியதால், பிரும்ம மாராயன் வெகுண்டு எழுந்த தையோ தன்னை வெட்டிப் போடுவதாகக் கூவிக் கத்தியின் மேல் கையை வைத்ததையோḥ சிறிதும் லட்சியம் செய்யாத கரிகாலன், தன் அபிப்பிராயத்தை மேலும் வலியுறுத்தத் தொடங்கி, “நான்குபேரைக் கலந்துகொண்டு திட்டங்களை முடிவு செய்வதற்காகவே மந்திராலோசனை ஏற்பட்டது. அதில் யோசனை சொல்லும் ஒவ்வொருவரையும் வெட்டிப் போடுவதானால், கடைசியில் போரிடப் படைத்தலைவர்கள் யாருமே மிஞ்சமாட்டார்களே! நாம் ஒருவரையொருவர் வெட்டிக்கொள்ளப் பெரிய மந்திராலோசனை ஏதும் அவசியமில்லையே” என்று சொல்லிப் பிரும்ம மாராயனை நோக்கிப் புன் முறுவல் செய்தான்.

அரையன் ராஜராஜன் திட்டத்தில் குறை கண்ட போது, மற்றப் படைத்தலைவர்கள் திகைப்பும் ஆச்சரியமும் அடைந்தார்களென்றால், அவன் பிரும்ம மாராயனை எதிர்த்துப் பேசியதைக் கேட்டதும், அந்தத் திகைப்பும் ஆச்சரியமும் பன்மடங்கு அதிகமாகி, அடுத்தபடி என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்தவர்களாகப் பேச்சோ செயலோ அற்று நின்றார்கள். அங்கிருந்த ஒவ்வொரு படைத்தலைவனும் உப படத்தலைவனும் அநேக போர்களில் தங்கள் வல்லமையை நிரூபித்தவர்கள். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து இராஜேந்திரன் படையில் சேர்ந்து பதவி வகித்த அந்தப் படைத்தலைவர்களின் பலதரப்பட்ட உடைகளும் ஆயுதங்களும் பார்ப்பதற்குக் கண்ணைப் பறித்தன. மீன் சின்னங்களைக் கழுத்தின் பெரிய பொற் சங்கிலிகளில் அணிந்த பாண்டி நாட்டுப் படைத்தலைவர்கள், சிறுசிறு வெண்சங்குகளை இணைத்த தங்கப் பதக்கங்களைக் கையில் இறுகக் கட்டிக்கொண்டிருந்த சேரநாட்டுச் சேனாதிபதிகள், செங்கழுநீர்ப் புஷ்பத்தின் பிறப்பிடம் தொண்டை மண்டலம் என்பதை நிரூபிக்க, அந்தப் புஷ்பங்களை வெள்ளியாலும் பொன்னாலும் செய்து கைகளில் வீர கங்கணங்களாக அணிந்திருந்த தொண்டை மண்டலச் சிங்கங்கள், இப்படிப் பல தரப்பட்ட பகுதிகளிலிருந்தும் சேர்க்கப்பட்டவர்களும் இராஜேந்திர சோழதேவன் மெய்க்கீர்த்தியைப் பரப்புவதிலேயே ஆர்வங் கொண்டவர்களுமான அந்த வீர சிங்கங்களுக்கிடையே சிறிய ஓர் ஆட்டுக் குட்டி புகுந்தது போல் கரிகாலன் புகுந்து யோசனை சொன்னதன்றி, எதிரிகள் மீது மிக முரட்டுத்தனமாகப் பாயக்கூடியவனும், மகா கோபிஷ்டனுமான பிரும்ம மாராயனை எதிர்த்துப் பேசினானென்றால், அந்த மந்திராலோசனை மண்ட பத்தில் சிறிது நேரம் மௌனம் நிலவியதில் ஆச்சரிய மென்ன இருக்க முடியும்?

அப்படி ஏற்பட்ட அந்த மௌனத்தை வந்தியத்தேவரே புன்முறுவலால் மெள்ளக் கலைத்தார். அவருடைய ராஜ வதனத்தில் மலர்ந்த புன்முறுவலையும் தன்மீது அவர் கண்களை ஓட்டியதன் அர்த்தத்தையும் புரிந்துகொண்ட பிரும்ம மாராயன் கண்கள் பேராச்சரியத்தால் அகல விரிந்தன. வாளை நோக்கிச் சென்ற அந்த அந்தணனின் கை மீண்டும் திரும்பி பக்கவாட்டில் செயலற்று விழுந்தது. இருப்பினும், உள்ளூர ஏற்பட்ட கோபம் தணியாததால், “என்னை அவமதிக்க இந்தச் சிறுவனுக்கு வந்தியத்தேவரும் இடமளிக்கிறாரா?” என்று அவரை நோக்கிச் சற்று உஷ்ணமாகவே கேட்டான் பிரும்ம மாராயன்.
வந்தியத்தேவர் வாழ்க்கையின் பாதிப் பகுதியைத் தாண்டி வருஷம் பத்தாகிவிட்டாலும், இடைவிடாத போர்ப்பயிற்சியின் காரணமாகவும், உள்ளூர அவருக்கு யாரிடமும் இருந்த அன்பின் காரணமாகவும், முகத்தில் முதுமை அதிகமாகத் தட்டவில்லை. தலையில் லேசாகத் தெரிந்த ஓரிரு நரைகள், முகத்தில் ஆரம்பித்துக் கொண்டிருந்த ஓரிரு திரைகள் இவைகூட அந்த வதனத்துக்குச் சோபையையும் ஒருவித கம்பீரத்தையும் அளித்தனவே ஒழிய, முதுமையைக் காட்டவில்லை.

இளமைக் காலத்தில் அரசமகளான அழகி குந்தவை உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அவருடைய கண்களில் இத்தனை வயதுக்குப் பிறகும் பிரகாசம் குறைய வில்லை. எத்தனையோ படைவீரர்களைத் தன் இஷ்டப்படி திருப்பும் வல்லமை வாய்ந்த கண்கள்! கண்டிப்பான கண்கள்தான்! ஆனால் அந்தக் கண்டிப்பில் கருணையும் கலந்திருந்தது. அத்தகைய கண்களின் பார்வையை மீண்டும் ஒருமுறை பிரும்ம மாராயன் மீது செலுத்திய வந்தியத் தேவர், “பிரும்ம மாராயரே! இந்த மந்திராலோசனையில் இந்தச் சிறுவனுக்கு நான் இடமளிக்கவில்லை. அவனுக்குப் பயிற்சியளிக்கும் படைத்தலைவர்களெல்லாம், போரில் அவனுக்கிருக்கும் நுண்ணிய அறிவைப்பற்றி வியந்து கூறியதால், நாமனைவரும் அவனுக்கு மந்திராலோசனையில் இடமளித்தோம். மந்திராலோசனை மண்டபத்தில் பெரியவர் சிறியவர் கிடையாது. எந்த யோசனையையும் மறுத்துக் கூற யாருக்கும் அதிகாரமுண்டு – தமிழர் வழக்கு இதுதான்” என்றார்.

“சோழர் படையின் பெரும் தலைவரான அரையன் ராஜராஜனையே எதிர்த்துப் பேச அனுமதிப்பது ஒரு வழக்கா? பேசுபவன் யார், அவன் அனுபவம் என்ன என்பதெல்லாம் யோசிக்கக்கூடிய விஷயங்களல்லவா?” என்று மீண்டும் கேட்டான் பிரும்ம மாராயன்.

வந்தியத்தேவர் ஒருமுறை கரிகாலன் மீது தமது கண்களை ஓட்டிவிட்டுத் திருப்திக்கு அறிகுறியாகத் தமது தலையையும் ஒருமுறை ஆட்டிக்கொண்டார். பிறகு மற்ற படைத்தலைவர்களைப் பார்த்துச் சொன்னார். “பிரும்ம மாராயர் சொன்ன விஷயங்களையும் யோசிக்க வேண்டியதுதான். ஆனால், அவை ஒருவரை மந்திராலோசனையில் சேர்க்குமுன்பாக யோசிக்க வேண்டிய விஷயங்கள். ஒருவருக்கு அநுபவமிருக்கிறதா, அவர் யோசனை சொல்லத் தகுந்தவரா என்பதையெல்லாம் முன்பே யோசித்திருக்க வேண்டும். மந்திராலோசனையில் ஒருவரைச் சேர்த்தபிறகு அவர் வயதைப்பற்றி அக்கறை கொண்டு பயனில்லை. அறிவைப் பற்றிதான் அக்கறை. ஆனால், இதில் முடிவு சொல்ல வேண்டியவன் நானல்ல. இங்கு படைகளின் தலைவர் அரையன் ராஜராஜன். அவர்தான் அதில் தீர்ப்புச் சொல்ல வேண்டும்.”

அதுவரை ஏதும் பேசாமல் நடப்பதைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்த அரையன் ராஜராஜன் மீது மற்றப் படைத்தலைவர்களின் கண்கள் திரும்பின. அவனைப் பேசத் தூண்ட முற்பட்ட வந்தியத்தேவரும், “படைத்தலைவரே! இதில் நேராகச் சம்பந்தப்பட்ட தாங்கள் ஏதும் சொல்லவில்லையே?”

அரையன் ராஜராஜனின் கூர்மையான விழிகள் வந்தியத்தேவர் மீது அரைவிநாடி உலாவிவிட்டுப் பிறகு சற்றுத் தூரத்திலிருந்த கரிகாலன் மீது நிலைத்தன. தன் உள்ளத்தையே ஊடுருவிச் சென்ற அந்தப் பார்வையைச் சந்திக்கத் திறமையற்ற கரிகாலன், தன் கண்களைத் தரையில் தாழ்த்தினான். மகனென ஏற்றுக்கொண்டு, மகனை விட அருமையாக நடத்திவந்த அந்த மாபெரும் படைத் தலைவனுக்கு மாசு ஏற்படும்படியாகப் பேசிவிட்டோமே என்ற வருத்தமும் அவன் மனத்திலே ஓடியதால், “தந்தையே! என் துணிவுக்கு மன்னிக்க வேண்டும்” என்று மெள்ளச் சொன்னான்.

அரையன் ராஜராஜன் கண்கள் மட்டும், அந்த வாலிபனை விட்டு அரை விநாடி அகலவில்லை. அந்தப் பார்வையைத் தொடர்ந்து வெளிவந்த வார்த்தைகளில் கடுமையுமில்லை, கண்டிப்புமில்லை. ஏதோ சமதையான படைத்தலைவனுடன் போர்த் திட்டங்களைத் தர்க்கிப்பது போலவே பேசிய அரையன் ராஜராஜன், “கரிகாலா! துணிவு வீரனுக்கு அவசியம். ஆனால் துணிவுடன் அறிவும் தேவை. பலாபலன்களை யோசித்துப் பார்க்கும் திறனும் வேண்டும்” என்றான்.

“யோசித்துப் பார்த்ததால் வந்த விளைவுதான் இது தந்தையே!” என்று கரிகாலன் பதில் சொன்னான்.

“எதை யோசித்துப் பார்த்தாய்?”

“பலா பலன்களை.”

“எந்தப் பலாபலன்களை?”

“தங்கள் போர்த் திட்டத்தின் பலாபலன்களை.”

“வெற்றியில் உனக்குச் சந்தேகமா?”

“சந்தேகமில்லை; தோல்வி நிச்சயம்!”

சபையில் மீண்டும் பேரதிர்ச்சி ஏற்பட்டது. பல படைத்தலைவர்கள் ஆசனங்களைவிட்டே எழுந்துவிட் டார்கள். வந்தியத்தேவருடைய முகத்தில் கூடப் பிரமை தட்டிவிட்டது. சிறுவன் சுத்த அதிகப்பிரசங்கியாயிருப் பானோ என்ற சந்தேகம் அவர் முகத்திலும் நன்றாகப் பளிச்சிட்டது. இத்தனைக்கும் அரையன் ராஜராஜன் மட்டும் நிதானத்தை இழக்காமல் கையமர்த்தி, படைத் தலைவர்களை உட்காரச் சொல்லிவிட்டு, மீண்டும் கரிகாலனை நோக்கிக் கேட்டான்:

“தோல்வி நிச்சயமென்று எப்படிச் சொல்லுகிறாய்? திட்டத்தில் அப்படியென்ன பெருங் குறையிருக்கிறது?”

அனுமதி கொடுத்தால் விளக்குகிறேன்” என்று பணிவு நிரம்பிய குரலில் கரிகாலன் பதில் சொன்னான்.

“சரி சொல்” என்று ஆணையிட்ட அரையன் ராஜராஜன், தனது ஆசனத்தின் பின்னாலிருந்த தலையணை யிலே சாய்ந்துகொண்டான்.

கரிகாலன் தன்னைச் சூழ நின்றிருந்த படைத்தலைவர் களை விலகிக்கொண்டு நடந்து, அரையன் ராஜராஜனுக்கு அருகில் வந்து, எதிரேயிருந்த மரப்பலகையில் இழுக்கப்பட் டிருந்த கரிக்கோடுகளை ஒருகணம் உற்றுப் பார்த்துவிட்டு, “தந்தையே, உங்கள் திட்டத்திற்குப் பேராபத்தாயிருப்பது கிருஷ்ணா நதி. முகத்துவாரத்துக்கு அருகே செல்லச் செல்ல நதியின் அகலம் மிக அதிகம்” என்றான்.

இதைக் கேட்ட பிரும்ம மாராயன், “ஓகோ! நதிகள் முகத்துவாரத்துக்கு அருகில் பெரிதாகிவிடுமோ, என்ன புதுமை? இதை எப்படியப்பா கண்டுபிடித்தாய்?” என்று சொல்லிப் பெரிதாகக் கேலிச் சிரிப்பும் சிரித்தான்.

ஆனால், அரையன் ராஜராஜனோ, வந்தியத் தேவரோ கரிகாலன் சொன்னதைக் கேட்டு நகைக்கவில்லை. அதற்குப் பதிலாக இருவர் கண்களும் ஒரு முறை சந்தித்து விட்டு, மீண்டும் கரிகாலனை நோக்கின. கரிகாலன் மனம் போர்த் திட்டத்தை வகுப்பதில் சுழன்று கொண்டிருந்ததால், பிரும்ம மாராயன் நகைப்பையோ, வந்தியத்தேவரும் அரையன் ராஜராஜனும் பரஸ்பரம் பார்த்துக்கொண்டதையோ, அவன் கவனிக்கவில்லை. ஏதோ வகுப்பு நடத்தும் உபாத்தியாயன் போல அவன் சொல்லிக்கொண்டே போனான். “வெறும் தரை குறுக்கேயிருக்குமானால், தந்தை யார் வகுத்த திட்டத்தை வகுப்பதில் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நதி குறுக்கே வந்தால் படைபலம் மட்டும் பயன்படாது. இதற்குச் சரித்திரச் சான்று இருக்கிறது” என்று பேசிக்கொண்டே போன கரிகாலனை, மெள்ள இடைமறித்த வந்தியத்தேவர், “அது என்ன சரித்திரச் சான்று கரிகாலா?” என்று கேட்டார்.’

“புருஷோத்தமனுக்கும் சிக்கந்தருக்கும் நடந்த போரைப் பற்றிக் குறிப்பிடுகிறேன் தலைவரே. புருஷோத்தமன் நதிக்கு இக்கரையில் மாபெரும் படையுடன் தங்கினான். அவன் படையில் கால் பங்குகூட இல்லை யவனனான சிக்கந்தரின் படை. புருஷோத்தமன் படையைக் கண்டு சிக்கந்தர் படையே கலங்கியது. ஆனால் முடிவு என்ன? புருஷோத்தமன் படை பலம் வெற்றி பெற்றதா? சிக்கந்தரின் போர்த் தந்திரம் வெற்றி பெற்றதா? இடையில் நதி ஒன்று இல்லாமற் போனால், புருஷோத்தமன் படைபலத்தால் சிக்கந்தரை நிர்மூலம் செய்திருக்கலாம். ஆனால் நதி சதி செய்துவிட்டது. பாதிப் படையை நதியில் புருஷோத்தமன் கண்களுக்கு முன்னால் நிறுத்திவிட்டு, இரவோடிரவாக இன்னும் பாதிப்படையை நதியின் கோடியில் மற்றொரு பக்கத்திற்குக் கொண்டு போய் நதியைக் கடந்த சிக்கந்தர், புருஷோத்தமனைப் பின்புறம் தாக்கினான். அதைச் சமாளிக்கத் திரும்பிய படையை எதிர்க்கரையிலிருந்த மீதிப்படை இன்னொரு பக்கத்தில் தாக்கியது. இரண்டு படைகளுக்குமிடையில் அழிந்தது புருஷோத்தமனின் மாபெரும் படை” என்றான் கரிகாலன்.

“வெறும் ஏட்டுச் சுவடி! பழங்கதை!” என்றான் பிரும்ம மாராயன்.

“பழங்கதைகளில் இக்காலத்துக்குத் தேவையான அறிவு புதைந்து கிடக்கிறது பிரும்ம மாராயரே. ஏட்டுச்சுவடிகளில் தான் நாம் பயில வேண்டிய போர் அறிவும் இருக்கிறது” என்று கூறிய கரிகாலன், அரையன் ராஜ ராஜனை நோக்கி, “தந்தையே! நான் சொல்வது பிரும்ம மாராயருக்குப் புரியாவிட்டாலும், தங்களுக்கும் வந்தியத் தேவருக்கும் புரிகிறது. கிருஷ்ணாவின் அகலம், அக்கரையிலும் இக்கரையிலும் செல்லும் நமது படைகளைக் கிழக்கே போகப்போக பெரிதும் பிரித்துவிடும். தவிர தற்சமயம் கிருஷ்ணாவில் வெள்ளம் வேறு அதிகம். வேங்கியை அடைந்தபிறகு, நமது இரு படைகளும் இரு புறத்திலும் வேங்கி நாட்டுப் படைகளை இறுக்க முடியாது. இடையே நிற்கிறது பயங்கரமான கிருஷ்ணாவின் பிரவாகம்” என்றான்.

“பிரவாகத்தைப் பற்றிக் கவலைப்படாதே கரிகாலா. கீழ்க்கடலில் கிருஷ்ணாவின் முகத்துவாரத்தில் நமது கப்பற்படை சித்தமாயிருக்கிறது. நமது இரண்டு படைகளும் வேங்கியை அடைந்ததும், கப்பற்படை நதிக்குள் வந்து இரண்டு படைகளுக்கும் பாலம்போல் குறுக்கே நின்று இரண்டு படைகளும் இணைவதற்கும் ஏற்பாடு செய்யும். அக்கரையில் நமது படையின் ஒரு பகுதி, இக்கரையில் ஒரு பகுதி, குறுக்கே நதியின் நீர்மட்டத்தில் நமது கப்பற்படை ஆக மூன்றும் சேர்ந்த பலமான போர்ச்சுவர் ஒன்று வேங்கியில் அமைக்கப்படும். இந்தச் சுவர் வடக்கு தெற்கில் வேங்கியை இரண்டாக வெட்டிவிடாதா?” என்றான் ராஜராஜன்.

“இதையும் நான் யோசித்தேன். ஆனால் நான் மட்டும் ஜெயசிம்மன் நிலையிலிருந்தால், இந்தச் சுவரைப் பல இடங்களில் உடைத்துவிடுவேன்.”

“எப்படி?”

“இந்தச் சுவரில் நான் மோதவே மாட்டேன். முதலிலேயே ஒற்றர்களை அனுப்பி, தங்கள் படை நடமாட்டத்தை அறிவேன். வேங்கிப்படைகளைக் கிருஷ்ணா நதிக்கு இக்கரையிலுள்ள சாளுக்கியர் கோட்டைப் பகுதியிலேயே நிறுத்துவேன். பிறகு என் சகாக்களை விட்டு அக்கரையிலிருக்கும் சோழப்படைகளைத் தாக்கச் செய்வேன்…” என்று சொல்லிக்கொண்டு போன, கரிகாலனை இடைமறித்த பிரும்ம மாராயன், ‘யார் அந்தச் சகாக்கள்?” என்று கேட்டான்.

பிரும்ம மாராயனின் ஞானசூன்யத்தை வியந்த கரிகாலன்,” என்ன அப்படிக் கேட்கிறீர்கள் பிரும்ம மாராயரே! வேங்கி நாட்டுத் தலைவாசலில், வடக்கில் இருக்கும் ஒட்டர நாட்டு மன்னன் இந்திரதத்தன் எங்கே போனான்? அவனை அடுத்துள்ள கலிங்க மன்னன் எங்கே போனான்? இந்த இருவரும் சோழ சாம்ராஜ்யத்தின் விஸ்தரிப்பை விரும்பவில்லையென்பதை உலகம் அறியுமே! ஜெயசிம்மன் கைப்பொம்மைகளான இந்த இருவரின் படைபலம் மகத்தானது. நமது படையெடுப்பு முயற்சிகளைக் கண்டதும் ஜெயசிம்மன் கிருஷ்ணா நதியின் தெற்குக் கரைக்கும் வந்து, வடக்குக் கரையில் இந்திர தத்தனையும் கலிங்கனையும் நிறுத்தினால், நம் கதி என்ன? பிரிவுப்பட்ட நமது படைப்பகுதிகள் பிரிவுபடாத மூன்று அரசர்களின் பெரும் படைகளைச் சமாளிக்கும்படி யிருக்கும். விளைவு என்ன என்பது படைத்தலைவர் களாகிய உங்களுக்கே தெரியும்” என்று விளக்கினான்.

மறுபடியும் சபையில் பெரிய அமைதி. அதைத் தொடர்ந்து எழுந்தது அரையன் ராஜராஜன் குரல். “இந்த நிலையைத் தவிர்க்க மாற்றுத் திட்டம் இருக்கிறதா?”

“இருக்கிறது” என்றான் கரிகாலன்.

“சொல் பார்ப்போம்” என்று கட்டளையிட்டான் அரையன் ராஜராஜன்.

கரிகாலன் சொன்னான். மறுபடி எழுந்தது சபையில் பெருங்கூச்சல். இந்த முறை பிரும்ம மாராயன் மட்டுமல்ல, பல படைத்தலைவர்களின் குரல்கள் மிக உக்கிரமாக எழுந்தன. உறையிலிருந்து எழுந்தன பல வாள்கள். அடுத்த விநாடி, கரிகாலன் கதி என்ன ஆகுமோ என்று எதற்கும் கலங்காத வந்தியத்தேவரே கலங்கினார்.

Previous articleMannan Magal Part 1 Ch 34 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 2 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here