Home Historical Novel Mannan Magal Part 2 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

98
0
Mannan Magal part 2 Ch 10 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 10 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 10 அட துரோகி

Mannan Magal Part 2 Ch 10 | Mannan Magal | TamilNovel.in

இராஜராஜ நரேந்திரன் சொன்ன கடைசி வார்த்தைகளால் ஒருகணம் அடியோடு செயலிழந்து ஸ்தம்பித்துப்போன அரசகுமாரி, அடுத்தகணம் உள்ளூர ஓடிய உணர்ச்சிகளால் தன் கால்களால் நிற்கவும் முடியாமல் பலவீனப்பட்டுப் போவதை அறிந்து, கட்டிற்காலின் முகப்பிலிருந்த சிங்கத்தின் தலையைத் தன் மெல்லிய விரல்களால் அமுக்கிப் பிடித்துத் தன்னைச் சற்றே திடப்படுத்திக் கொண்டாள். பள்ளியறையின் மூலையிலிருந்த வெங்கலப் பதுமை விளக்குக்கூட, ‘அடி பேதையே! தம்பிக்காக உன் வாழ்நாளையெல்லாம் தியாகம் செய்து தலைக்கே தீம்பு தரக்கூடிய சதியிலிறங்கினாயே! கிடைத்த பலனைப் பார்த்தாயா?’ என்று தன்னைப் பார்த்துச் சிரிப்பது போலிருந்தது அரசகுமாரிக்கு. இன்னொருவன் முன்பாகத் தன்னைச் சிற்றறிவு படைத்தவள் என்று தம்பி சொன்ன மாத்திரத்திலே துடித்தெழுந்த அரசகுமாரி உள்ளத்தில், இராஜராஜ நரேந்திரன் தனக்கு வேங்கி நாட்டு அரசு வேண்டாம் என்று சொன்ன சொற்கள் பல நெருப்புக் கணைகளாகப் பாய்ந்து, அவள் இதயத்தை அப்படியே சுட்டுப் பொசுக்கிக் கொண்டிருந்தன. சிங்காரத்திலும் சிற்றின்பத்திலும் செலவிட வேண்டிய தன் இளமையை, எந்த இராஜராஜ நரேந்திரனுக்காகச் சதியிலும் சங்கடத்திலும் செலவிட்டுக் கொண்டிருந்தாளோ, அந்த இராஜராஜ நரேந்திரன் தான் வகுத்த திட்டத்துக்கெல்லாம் யமனாக வந்து முளைப்பான் என்று அவள் சற்றும் எதிர்பாராததால், தம்பி மீது நெருப்பில் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியின் முனைகளைப் போல் சிவந்து ஜொலித்த தனது இரு விழிகளையும் பதியவிட்ட அரசகுமாரி கண்களில் தெரிந்த உஷ்ணத்தைச் சொற்களிலும் தோயவிட்டு நெருப்பென வார்த்தைகளைக் கக்கினாள்.

“நரேந்திரா! அதைரியமும் பயமும் இன்னதென்றறியாத விமலாதித்தன் மகனா நீ? எந்த வேங்கி நாட்டு அரியணையைப் பாதுகாப்பதற்காகப் பலப்பல சாளுக்கிய மன்னர்கள் போர்முனையில் தங்கள் உதிரத்தைச் சொட்டினார்களோ, அந்த வீரர்கள் பரம்பரையில் வந்த இளவலா நீ? எந்த அரசபீடத்தைக் கண்டு விமலாதித்தன் காலத்தில் மேலைச் சாளுக்கியர்களும் பயந்தார்களோ, அந்த அரசபீடத்தை மாற்றான் கையில் ஒப்படைக்கச் சோழர்களிடம் பேரம் பேச முற்படும் நீயும் ஒரு வீரனா? எந்த தைரியத்தைக் கொண்டு இந்த வார்த்தைகளை என் செவிகளில் படும்படி பேச முன்வந்தாய்? இதோ நிற்கும் இவர் சோழர்கள் ஆயுத பலத்துக்கிடையே உன்னைப் பேடி போல் அடைக்கலம் புக ஏற்பாடு செய்வதாகச் சற்று முன்பு தோட்டத்தில் சொன்னாரே, அந்தச் சொற்கள் அளித்த தைரியமா? அல்லது, ‘இவள் பெண்தானே, இவள் முன்பாக எதைப் பேசினால் என்ன செய்துவிடுவாள்?’ என்று இனத்தால் ஆண்களுக்கு இயற்கையாகவுள்ள இறுமாப்பு அளிக்கும் தைரியமா?” என்று, கண்களும் உதடுகளும் ஏக்காலத்தில் கனல் கக்கச் சொல்மாரி பொழிந்தாள் மன்னன் மகள்.

அந்தச் சமயத்தில் அவள் நின்ற கம்பீரத்தையும், கோபத்தால் குங்குமக் குழம்பாயிருந்த அவள் முகத்தில் எழுந்த கோபாவேசத்தையும் கண்ட கரிகாலன், இராஜராஜ நரேந்திரனுக்குப் பதில் இவள் ஆளப் பிறந்திருந்தால் வேங்கி நாடு எத்தனை உயரிய ஸ்தானத்தைத் தென்னகத்தில் வகித்திருக்கும்!’ என்று எண்ணியதோடு, இந்தச் சுடு சொற்களுக்கு இராஜராஜ நரேந்திரன் எத்தகைய பதிலைச் சொல்லப் போகிறான் என்று அவன்மீது தன் பார்வையைச் செலுத்தினான்.

சாதாரணமாகக் கோழையென்று எல்லோராலும் மதிக்கப்பட்ட இராஜராஜ நரேந்திரன் உண்மையில் அத்தனை கோழையல்ல என்பதை அவன் நின்ற தோரணையே நிரூபித்தது. சகோதரியின் கோபத்தைக்கண்டு பயந்து ஒருவிநாடி அசைந்த அவன் உடல், அடுத்தவிநாடி கூடிய வரையில் திடமாகவே காலைத் தரையில் ஊன்றி நின்றது. இயற்கையாகச் சற்றுச் சலனத்தைக் காட்டும் அவன் கண்கள் கூடப் பயத்தால் ஒருகணம் தரையில் தாழ்ந்தாலும், மறுகணம் மன்னன் மகளின் கூர்விழிகளுடன் இணைந்து நின்றன. கொஞ்சம் நடுங்கிய குரலிலிருந்து வெளிவந்த சொற்களிலும் தீர்க்காலோசனையும் நியாயமும் நிரம்பி நின்றன.

“அக்கா சோழ நாட்டுத் தூதர்.” என்று ஆரம்பித்த இராஜராஜ நரேந்திரனை, “அவரைத் தூதரென்று அழைக்காதே; சுத்தப் பொய்” என்று கோபத்துடன் வெட்டின அரசகுமாரியின் சொற்கள் ஆரம்பத்திலேயே.

“இல்லை, இந்த நண்பர்.”

“இவர் நமது நண்பரல்ல.”

“சரி அக்கா! இந்த மனிதர்.”

“இவர் மனிதரல்ல; இவரிடம் மனிதத்தன்மை மருந்துக்குக்கூட இல்லை.”

பெண்களின் கோபம் உச்சநிலையை அடையும்போது, அவர்கள் நிதானத்தை எத்தனை தூரம் இழந்துவிடு கிறார்களென்பதை அறிந்த இராஜராஜ நரேந்திரன், மெள்ள இளநகை பூத்துவிட்டுக் கேட்டான், “அப்படியானால் இவரை என்னவென்று அழைக்கட்டும்?” என்று.

அவன் இதழ்களிலே பூத்த இளநகையைக் கண்டாள் நிரஞ்சனாதேவி. அவன் முகத்திலே பூத்த ஏளனத்தையும் கண்டாள். இரண்டையும் கண்டு வெகுண்டாள், “விளையாடுகிறாயா நரேந்திரா?” என்று கேட்டாள்.

“விளையாடவில்லை, அக்கா! உன் போக்குத்தான் எனக்குப் பெரும் விளையாட்டாக இருக்கிறது. இங்கு நாம் பேச வந்தது இவர் யார் என்பதை விவாதிக்க அல்ல; இவர் சொல்லும் யோசனை நமக்கு நன்மை பயக்குமா தீமை பயக்குமா என்பதை ஆராயத்தான். ஆனால் நான் பேசத் தொடங்குகையில் வார்த்தைகளுக்கே நீ ஆட்சேபிக்கிறாய். சொற்களில் என்ன இருக்கிறது அக்கா? விஷயத்தைப் பற்றி விவாதிப்போம்” என்று பேசினான் இராஜராஜ நரேந்திரன்.

“இவர் பேச்சில் விஷயமில்லை தம்பி! விஷம் இருக்கிறது” என்று எச்சரித்தாள் அரசகுமாரி.

“விஷமிருந்தால் ஏற்க வேண்டாம். அமுதமாயிருந்தால் ஏற்பதற்கு என்ன தடை? உனக்குப் பிடிக்காத இந்தக் கரிகாலன் அளித்தாலும், அதை ஏற்கலாமல்லவா?”

“எது அமுதம்? சோழநாட்டுச் சுகவாசம் அமுதமா?”

இந்தச் சந்தர்ப்பத்தில் மெள்ளச் சம்பாஷணையில் புகுந்த கரிகாலன், “இங்கே சிறிது தவறு இருக்கிறது” என்று சுட்டிக் காட்டினான்.

அதுவரை கரிகாலனைக் கண்ணெடுத்தும் பார்க்காத நிரஞ்சனாதேவி, அவன் மீது கேள்வியும் வெறுப்பும் தொக்கி நின்ற பார்வையொன்றை வீசினாள். அவள் பார்வையில் தொக்கி நின்ற கேள்வி இராஜராஜ நரேந்திரன் வாயிலாக வெளிவந்தது. “என்ன தவறு கரிகாலரே?” என்று இராஜராஜன் கேட்டான்.

“வேங்கி நாட்டு இளவலுக்குச் சோழ நாட்டில் காத்திருப்பது சுகவாசமல்ல” என்று பதில் சொன்னான் கரிகாலன்.

“வேறேன்ன காத்திருக்கிறது கரிகாலரே? சிறை வாசமா?” என்று கேட்டான் நரேந்திரன்.

“சிறைவாசமும் சிலருக்குச் சொர்க்கபோகம்தான். ஆனால், அந்தச் சுகமும் இராஜேந்திர சோழதேவர் சகோதரி மகனான தங்களுக்குக் கிடைப்பது கஷ்டம்.’’

“அப்படியானால் அங்கு என்னதான் கிடைக்கும்.?’’

“தங்களுக்கு இங்கு கிடைக்காததெல்லாம் அங்குக் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறேன். நான்கு பக்கத்திலும் எதிரிகள் சூழ்ந்திருக்கும் வேங்கி நாட்டு மன்னனுக்கு அத்தியாவசியமான போர்ப் பயிற்சி கிடைக்கும். தங்கள் கைகளை இரும் பாக்குவதற்குத் தேவையான தேகப்பயிற்சிகள் கிடைக்கும். படைகளை அணிவகுத்து நடத்துவதற்கு ஓர் அரசனுக்கு மிக மிக அவசியமான அறிவு கிடைக்கும். தவிர மற்ற அரசர்களுடன் சமானமாக உறவாடுவதற்குத் தேவையான ராஜதந்திரமும் கற்பிக்கப்படும். இவற்றையெல்லாம் உங்களுக் களிக்கவே சோழ நாடு அழைத்துச் செல்ல இஷ்டப்படுகிறேன்’ என்று நரேந்திரனுக்குப் பதில் சொன்ன கரிகாலன், வாசற் படியைத் தாண்டிப் பள்ளியறைக்குள் வந்து, அரசகுமாரியையும் பார்த்து, “நிரஞ்சனாதேவி! சந்தர்ப்பங்கள் உங்கள் கண்களில் என்னைச் சதிகாரனாக்கிவிட்டன. சந்தேகத்தால் உங்கள் அறிவும் நிலையை உள்ளபடி அலசும் சக்தியை இழந்து கிடக்கிறது. இந்தச் சமயத்தில் நான் எதைச் சொன்னாலும் நீங்கள் நம்புவது கஷ்டம். ஆனால் சிந்தித்துப் பாருங்கள். நாம் இன்றிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் ஏற்கெனவே வகுத்த சதித்திட்டம் பலன் தருமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஜெயசிம்மனைக் கொலை செய்ய உங்கள் நண்பர் பிரும்ம மாராயர் இட்ட திட்டம் நிறைவேறியிருந்தால், விமலாதித்தன் அரச பரம்பரைக்கு மட்டுமல்ல, அத்துடன் திருமணத் தொடர்பு கொண்ட, ஏன் இன்னும் தொடர்பு கொள்ள உத்தேசித்திருக்கும் சோழ பரம்பரைக்கும் சரித்திரத்தில் ஏற்படக்கூடிய நிரந்தரமான இழிவைப் பற்றிச் சிறிது சிந்தித்துப் பாருங்கள்” என்று நிதானமாக, ஆனால் மிக அழுத்தமாகவும் தெளிவாகவும் விஷயங்களை எடுத்துரைத்தான்.

ஆனால் குழம்பிப் போயிருந்த அரசகுமாரியின் சிந்தனையைத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாகக் கரிகாலனது சொற்கள் அவள் கோபத்தையே கிளறின. “திருமணத் தொடர்பா! அதற்கும் ஏற்பாடாகியிருக்கிறதா? சோழ நாட்டுக்குப் போனால் நரேந்திரனுக்குச் சொர்க்க போகம்தான் போலிருக்கிறது!” என்றாள், நிரஞ்சனாதேவி, கோபமும் ஏளனமும் கலந்த குரலில்.

“சொர்க்க போகம் பின்னால் இருக்கலாம்; தற்சமயம் இல்லை!” என்றான் கரிகாலன்.

வெறுப்பையெல்லாம் அள்ளிக் கொட்டிய அரசகுமாரியின் கண்கள் கரிகாலனை நோக்கி எழுந்தன. “ஓகோ! அதற்குச் சிறிது காலம் பிடிக்கும் போலிருக்கிறது” என்றாள் அவள்.

“அரசகுமாரி! இராஜேந்திர சோழதேவர் மகள் அங்கம்மா தேவியைத் தங்கள் தம்பிக்குக் கொடுப்பதென இளவயதிலேயே நிச்சயம் செய்யப்பட்டதை ஊரறியும். ஆனால், ஏன் அத்திருமணம் இன்னும் நடைபெற வில்லை?” என்று கரிகாலனும் கோபத்துடன் கேட்டான், நிரஞ்சனாதேவியின் இருண்ட புத்தியில் சற்று ஒளியை உதயமாக்கும் எண்ணத்துடன்.

கரிகாலன் கேள்வி தன்னையும் தன் தம்பியையும் சுளீரென அடிக்கும் சாட்டையென உணர்ந்த நிரஞ்சனாதேவிக்கு என்ன பதில் சொல்வதென்பதே விளங்கவில்லை. அம்மங்கா தேவியும் நரேந்திரனும் சிறு வயதாயிருக்கும் போதே அவர்கள் திருமணத்தை நிச்சயித்த இராஜேந்திர சோழதேவன், இருவரும் மணப்பருவத்தை அடைந்தும் வாளாவிருக்கிறான் என்றால், அதற்குக் காரணம் தன் தம்பியின் தற்கால நிலையே என்பதை நிரஞ்சனாதேவி நன்றாக உணர்ந்துகொண்டாள். சோழப் பேரரசன் தன் மகளுக்கு வீரமற்ற ஒருவனை மணாளனாக்க ஒருகாலும் சம்மதிக்கமாட்டான் என்பதையே கரிகாலன் சுட்டிக் காட்டுகிறானென்பதைத் திட்டமாகத் தெரிந்து கொண்ட நிரஞ்சனாதேவி, விஷயம் கரிகாலன் வாயினாலேயே வரட்டுமென்று, “ஏன்?” என்று ஒற்றைச் சொல் கேள்வியை வீசினாள்.

ஏதோ பதில் சொல்ல வாயெடுத்த கரிகாலனைத் தனது வலது கையைத் தூக்கி அடக்கிய நரேந்திரன், சகோதரியை நோக்கி, “அக்கா! சதியில் திளைத்த உனக்குக் கூடவா இது புரியவில்லை? எந்தச் சங்கடத்திலும் ஈடுபடாத எனக்கே இது புரிகிறதே. நான் வீரனல்ல; பேருக்குத் தான் நான் மன்னன் தவிர” என்று மேலும் பேசப்போன அவனை இடைமறித்த நிரஞ்சனாதேவி, “இராஜேந்திர சோழதேவனின் சகோதரி மகன் நீ” என்றாள்.

“இருக்கலாம் அக்கா! அதற்காக ஒரு பேரரசன் பெண்ணைக் கொடுப்பானா? அப்படியே கொடுப்பதானாலும் வீரமற்றவனை ஒரு தமிழ்ப்பெண் மணக்க இசைவாளா?” என்று கேட்டான் இராஜராஜ நரேந்திரன்.

“தம்பி!” பதற்றத்துடன் எழுந்தது நிரஞ்சனாதேவியின் குரல்.

“இதில் பதற்றம் உதவாது அக்கா! உண்மையை அலசுவதில் நிதானம் வேண்டுமென்று நீயே சொல்வாயே. இந்தத் திருமணத்தில் ஏதோ உன் தம்பியும் இன்னொரு பெண்ணும் மட்டும் சம்பந்தப்பட்டு இருப்பதாக நினைக்காதே. இரண்டு அரசுகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. பெருவாரியான மக்கள் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். வேங்கி நாட்டு அரசு திடப்படக் கரிகாலர் சொன்ன யோசனையை ஏற்பது அவசியம்.”

அது ஒழுங்கான யோசனை அல்ல.”
“ஏன்?”

“உன்னைச் சோழநாட்டு அடிமையாக்க ஒருகாலும் நான் உடன்பட மாட்டேன்.”

“இங்கு ஜெயவர்மன் அடிமையாக நான் வாழ்வதில் உனக்கிஷ்டமா?”

“அந்த அடிமைத்தளையை உடைத்துவிட்டால்?”

“உடைக்கப் பலம் தேவை அக்கா! அந்தப் பலத்தைச் சம்பாதிக்க, நான் இந்த அரசைச் சில காலம் துறக்க வேண்டும்; வேங்கி நாட்டில் கிடைக்காத போர்ப் பயிற்சியை வேறு நாட்டில் பெற வேண்டும்.”

“இங்கு அதை ஏன் பெற முடியாது?”

“பெற விடமாட்டான் ஜெயசிம்மன். சைன்னியம் அவன் சொன்னபடி கேட்கிறது; மக்கள் அவனை நம்புகிறார்கள். நான் வாளைக் கேட்டால், என் கையில் மதுக்கிண்ணத்தை வேலைக்காரர்கள் தரச் சித்தமாயிருக்கிறார்கள். படைகளைப் பார்க்க வேண்டுமென்றால், பருவப் பெண்களின் படைகளைத்தான் என்னைச் சூழ விடுகிறான் ஜெயசிம்மன். இந்த வலையிலிருந்து முதலில் விடுபட வேண்டும். எனது கையும் காலும் சுதந்திரமடைந்த பிறகு, ஜெயசிம்மன் சூழ்ச்சி வலையை அறுக்க நான் கத்தியுடன் இங்கு வர வேண்டும்” என்றான் இராஜராஜ நரேந்திரன்.

“முதலில் வலையிலிருந்து விடுபட வேண்டும்” என்றாள் அரசகுமாரி.

அவள் சிந்தனையிலும் மெள்ள மெள்ள உண்மை உதயமாயிற்று. ஆனால், அடுத்தகணம் கரிகாலன் மீதிருந்த வெறுப்பு அவள் மதிக்கு மீண்டும் திரை போட்டது.

அவள் கேள்விக்கு, “விடுபட வைக்கவே நான் வந்திருக்கிறேன்” என்று பதில் சொன்னான் கரிகாலன்.

அரசகுமாரி அவனுடன் பேசவும் இஷ்டமில்லாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

ஆனால் இராஜராஜ நரேந்திரன், “கரிகாலரே! எந்த எண்ணத்தினால் நீர் என்னை இந்த வேங்கி நாட்டிலிருந்து அகற்ற இஷ்டப்படுகிறீர் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அதற்குக் காரணம் எனக்குப் போர்ப் பயிற்சி அளிப்பது என்றால், அதில் எனக்குப் பூரண சம்மதம். நீர் ஜெயசிம்மனுடன் சேர்ந்து கொள்ளும் எந்த ஒப்பந்தத்திற்கும் நான் உடன்படுவேன்” என்று சொல்லிவிட்டு நிரஞ்சனாதேவியைப் பார்த்து, “கவலைப்படாதே அக்கா! எல்லாம் நன்மைக்குத்தான் நடக்கிறது” என்று அவளிடம் விடை பெற்றுக்கொண்டு, வெளியே நடந்துவிட்டான்.

தனியே விடப்பட்ட கரிகாலனும் மன்னன் மகளும் நீண்ட நேரம் மௌனமாக நின்றனர். பிறகு மன்னன் மகளே பேசத் தொடங்கி, “சோழ நாட்டுத் தூதரின் அடுத்த திட்டம் என்ன?” என்று இகழ்ச்சி பூரணமாகத் ததும்பிய குரலில் கேட்டாள்.

“அரசகுமாரி! நீங்கள் எத்தனை இகழ்ச்சியாக என்னை அழைத்தாலும், நான் சோழ நாட்டுத் தூதன்தான். உங்கள் இருவரையும் சோழ நாட்டுக்கு அழைத்துச் செல்வது என் திட்டம்” என்றான் கரிகாலன்.

“அதற்கு என்ன காரணத்தைச் சொல்லுவீர் ஜெயசிம்மனிடம்?”

“காரணத்தைத்தான் நீங்களே முன்பு சுட்டிக் காட்டி விட்டீர்களே. அவன் மருமகன் விஷ்ணுவர்த்தன விஜயா தித்தனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தவே நான் முயல்வதாகக் கூறுவேன்.” ” அதாவது உண்மையைக் கூறுவீர்!” “உண்மையோ பொய்யோ, காலம் சொல்லும் அரசகுமாரிக்கு.”

அரசகுமாரி ஏதோ யோசித்தாள். பிறகு சாளரத்தை நோக்கி வெளியே பார்த்தாள். அவள் அருகில் செல்லக் கரிகாலனும் இரண்டடி எடுத்து வைத்தான்.

அவன் காலடிச் சத்தம் அவள் காதுகளிலும் விழவே, அவள் திரும்பிப் பாராமலே சொன்னாள்: இங்கே வர வேண்டாம். போய் வாருங்கள். உங்கள் திட்டம் நிறைவேறிய பிறகு, உங்களுடன் கைதிகளாக நானும் என் தம்பியும் சோணாடு வரும்போது, மீண்டும் சந்திப்போம்” என்று.

அவள் குரலில் ஏக்கமும் துக்கமும் கலந்து தொனித்தன. பின்னால் நின்ற கரிகாலனால் முன்னாலிருந்த அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை. முடிந்திருந்தால், அவள் அழகிய கண்களிலிருந்து இரண்டு நீர்த்துளிகள் உருண்டு நிலத்தைச் சுட்டதை அறிந்திருப்பான்.

முகத்தைப் பார்க்காவிடிலும், அவள் சொற்களில் சொட்டிய வெறுப்பின் காரணமாக அவன் அவளை அணுக முற்படவில்லை. உள்ளத்தே எழுந்த துயர அலைகளின் காரணமாகப் பெருமூச்சொன்றை விட்டு வெளியே சென்றான். அவன் தூரத்தே செல்லச் செல்ல அவன் காலடி ஓசை மெல்ல அவள் செவிகளில் விழுந்தது. மெள்ளத் திரும்பி அவன் நின்றிருந்த இடத்தைப் பார்த்த அவள் வாயிலிருந்து, “அடத் துரோகி! உன்னிடம் என் உள்ளத்தைக் கொள்ளை கொடுத்தேனே!” என்ற வார்த்தைகள் உதிர்ந்தன. அவள் உள்ளத்தின் ஏதோ மூலையில் மட்டும், ‘அவன் நல்லவன், அவனை நம்பு!’ என்று ஏதோ ஒன்று ரகசியமாகச் சொல்லிக் கொண் டிருந்தது. அவள் நம்பவும் முயன்றாள். அப்படி ஏதாவது நம்பிக்கை உதயமாகியிருக்கும் பட்சத்தில், அடுத்த நாள் மாலினி கொண்டு வந்த செய்தியொன்று, அந்த நம்பிக்கையை அடியோடு உடைத்துவிட்டது.

Previous articleMannan Magal Part 2 Ch 9 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here