Home Historical Novel Mannan Magal Part 2 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

83
0
Mannan Magal part 2 Ch 11 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 11 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 11 சதுரங்கக் காய்கள்

Mannan Magal Part 2 Ch 11 | Mannan Magal | TamilNovel.in

ஒரே இரவு ஒரே பகல்! அறுபதே நாழிகைகள்! அந்தக் குறுகிய கால அளவில், பெரிய பெரிய ராஜதந்திரிகளும் சாதிக்க முடியாத அந்த மகத்தான காரியத்தைக் கரிகாலன் எப்படிச் சாதித்தான் என்பதை நினைக்க நினைக்க பேராச்சரியமாயிருந்தது நிரஞ்சனாதேவிக்கு. தன்னையும் தன் தம்பியையும் சோழ நாட்டுக்கு அழைத்துச் செல்வதாக முந்திய நாளிரவு வசந்த மண்டபத்தில் உறுதி கூறிய கரிகாலன், எந்த உபாயத்தைக் கையாண்டு, மறுநாள் பகலுக்குள் அந்தக் காரியத்துக்கு ஜெயசிம்மன் சம்மதத்தைப் பெற்றான் என்பதைப் பற்றி, எண்ணற்ற முறைகள் திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்தும் காரணத்தை அறிய முடியாமல் திணறிய அரசகுமாரிக்கு, மாலினி கொண்டு வந்த தகவல் உண்மையாக இருக்க முடியுமா என்ற சந்தேகமும் ஏற்படவே, எதிரே நின்ற தன் தோழிமீது தன் அழகிய விழிகளைச் சற்றே பதிய விட்டாள்.

அரசகுமாரியின் பார்வையில் படர்ந்து கிடந்த சந்தேகச் சாயையைக் கண்ணுற்ற மாலினி, “ஏன் அரசகுமாரி! நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா?” என்று மெல்லக் கேட்டாள்.

அரசகுமாரியின் சித்தம் எங்கெங்கோ சுழன்று கொண்டு கிடந்ததால், அவள் உடனே பதில் ஏதும் சொல்லாமல், சாளுக்கியர் அரச மாளிகையில் அந்தப் பெரும் அறையின் பிரும்மாண்டமான சாளரங்களிலொன்றை நோக்கிச் சென்று வெளியே தன் பார்வையைச் செலுத்தினாள். வெளியே சற்று தூரத்தில் நகரத்து விளக்குகளின் ஒளியில் பளபளத்துக் கொண்டிருந்த கிருஷ்ணா நதி மிக அமைதியாகப் பிரவகித்துக் கொண்டிருந்தது. விளக்கொளி விழாத இடத்தில் இருண்டும், ஒளி விழுந்த ஒவ்வோரிடத்தில் பிரகாசித்துக் கொண்டும், இருளும் ஒளியும் கலந்து மானிட வாழ்க்கைக்கு விளக்கம் தருவது போல் பிரவகித்துக் கொண்டிருந்த கிருஷ்ணா நதியை நீண்ட நேரம் பிரமித்துப் பார்த்துக் கொண்டிருந்த அரசகுமாரி, இன்னும் சில நாள்களுக்குள் உன்னை விட்டுப் போய் வேறு நாட்டு எல்லையில் வாசம் செய்ய வேண்டுமே தாயே!” என்று சற்று இரைந்தே சொல்லி, வரப்போகும் பிரிவின் நினைப்பால் ஏக்கம் கலந்த பெருமூச்சொன் றையும் விட்டாள்.

அரசகுமாரியின் மனோநிலை மாலினிக்குப் பூரணமாகப் புரிந்திருந்ததால், அவள் ஏதும் பேசாமல் சிறிது நேரம் மௌனமாகவே நின்றாலும், இருவரையும் சங்கடத்திலாழ்த்திக் கொண்டிருந்த அந்த மௌன நிலையை உடைக்க எண்ணி மெள்ள அரசகுமாரியை அணுகி, “அரசகுமாரி! நான் கேட்டது உங்கள் காதில் விழவில்லை போலிருக்கிறது? என்று மெதுவாக வார்த்தைகளை உதிர்த்தாள்.

அந்தக் கேள்வி அரசகுமாரியையும் ஓரளவு நிதானத் துக்குக் கொண்டுவரவே, அவள் மீண்டும் சாளரத்தை விட்டு உட்பக்கம் திரும்பி, மாலினியை நோக்கி, “என்ன கேட்டாய் மாலினி?” என்று வினவினாள்.

“நான் சொல்வதில் உங்களுக்கு நம்பிக்கையில்லையா என்று கேட்டேனே!” என்று முதலில் கேட்ட கேள்வியை மீண்டும் விளக்கிச் சொன்னாள் பணிப்பெண் மாலினி.

அரசகுமாரியின் புருவங்கள் ஏதோ யோசனையின் அறிகுறியாக ஒருமுறை எழுந்து தாழ்ந்ததல்லாமல், இதழ்களிலும் ஒரு வரட்டுப் புன்முறுவல் தவழ்ந்தது. அந்த வரட்சி குரலிலும் தொனிக்கச் சொன்னாள் அரசகுமாரி, “நம்பக் கஷ்டமாகத்தானிருக்கிறது மாலினி. செய்தி எப்பேர்ப்பட்டது. நினைத்துப் பார்!” என்று.

“நம்பவும் முடியாத விஷயங்கள் உலகத்தில் நடப்ப தில்லையா அரசகுமாரி?” என்று கேட்டாள் மாலினி.

“நடக்கின்றன, மாலினி. ஆனால் இத்தனை சீக்கிரத்தில் ஒரு நாட்டின் அஸ்திவாரத்தையே ஆட்டவல்ல ஓர் ஏற்பாடு நடப்பது சாத்தியமா?” என்று அரசகுமாரியும் பதிலுக்குக் கேட்டாள்.

“ஏன் சாத்தியமல்ல அரசகுமாரி? சாளுக்கிய வீரர்களுக்கு அஞ்சி நம்மிடம் அடைக்கலம் புகுந்த ஒரு நாடோடி சில நாள்களுக்குள் சோழ தூதராவது சாத்தியமாயிருந்தால், தாங்களும் மன்னரும் சோழ நாட்டுக்குச் செல்வது ஏன் சாத்தியமாகக் கூடாது?” என்று மாலினி தர்க்க ரீதியில் கேள்வியைத் தொடுத்தாள்.

“அப்படியானால், கரிகாலர் உண்மையில் சோழ நாட்டுத் தூதர்தான் என்கிறாயா?”

“சந்தேகமில்லை அரசகுமாரி! நமது பிரதான மந்திரியே சொன்னார்.”

“இருக்க முடியாது மாலினி; இதிலும் ஏதோ விஷம மிருக்கிறது.”
“விஷமம் ஏதுமில்லை அரசகுமாரி. கரிகாலரைத் தூதராக நியமித்த ஓலையில், வல்லவரையர் வந்தியத் தேவரே கையெழுத்திட்டிருக்கிறார். சோழர்கள் முத்திரையும் ஓலையில் பொறிக்கப்பட்டிருக்கிறது.”

“இதையும் பிரதான மந்திரிதான் சொன்னாரோ?”

ஆமாம் அரசகுமாரி!”

“நன்றாக விசாரித்தாயா?”

“திட்டமாக விசாரித்தேன். சந்தேகத்துக்கு இடமேயில்லை.”

அரசகுமாரி மீண்டும் சிந்தனையிலாழ்ந்து அறைக் குள்ளே சிறிது நேரம் உலாவினாள். கடைசியாக மாலினியை நோக்கி அரசகுமாரி சற்று இரைந்தே நகைத்தாள்.

“ஏன் நகைக்கிறீர்கள் அரசகுமாரி?”

“சிந்தித்துப் பார்த்தேன்; எல்லாம் விந்தையாயிருக்கிறது மாலினி.”

“எது விந்தையாயிருக்கிறது அரசகுமாரி?”

“சோழ தூதர் வந்தது, அவர் யோசனைக்கு ஜெயசிம்மன் ஒப்புக்கொண்டது எல்லாம் விந்தையாயிருக்கிறது மாலினி. இதில் யாருக்குப் பைத்தியம் பிடிக்கிறதென்பதுதான் எனக்குப் புரியவில்லை. ஊர் பேரறியாத ஒரு புத்த மடாலயச் சீடரை, நாடோடியை, ஒரு வல்லரசின் தூதராக நியமிக்க ஒப்புக்கொண்ட வல்லவரையருக்குப் பைத்தியமா? இந்தப் புதுத் தூதர் வந்ததும் வராததுமாக முன்பின் ஆராயாமல் அவர் யோசனைக்கு ஒப்புக் கொண்ட ஜெயசிம்மனுக்குப் பைத்தியமா? அல்லது ‘சோழ நாட்டுக்கு உங்களைக் கொண்டு செல்கிறேன்’ என்று சொன்னது, சரியென்று துள்ளிக் குதித்தானே நரேந்திரன், அவனுக்குப் பைத்தியமா? வேங்கி நாட்டு அரசபீடம் மாற்றான் கைக்குப் போகிறது என்பதை அறிந்தும், ஏதும் செய்ய வழியில்லாமல் விழிக்கிறேனே எனக்குப் பைத்தியமா? இது என்ன, நாடுகளைப் பற்றிய ராஜதந்திரமா அல்லது ஒரு தனிமனிதன் இஷ்டப்படி நடத்தக்கூடிய நாடகமா?” என்று விடுவிடு என்று பேசிக் கொண்டுபோன அரசகுமாரி, உணர்ச்சிகளின் வேகத்தில் சிறிது தள்ளாடி கட்டிலுக்காக நகர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

மன்னன் மகள் உள்ளத்திலே கொதித்தெழுந்த உணர்ச்சிப் பிரவாகம் எத்தன்மையது என்பதை மாலினி நன்றாக உணர்ந்து கொண்டாள். கரிகாலன் வந்ததும் வராததுமாக மன்னன் மகளையும், மன்னன் இராஜராஜ நரேந்திரனையும் சோழ நாட்டுக்குக் கூட்டிச் செல்ல ஏற்பாடு செய்துவிடுவானென்பது மனத்தால் நினைக்கக்கூட முடியாத மகத்தான சாதனை என்பதையும் சந்தேகமறப் புரிந்து கொண்டிருந்த மாலினிக்கு, அந்தச் சாதனையின் விளைவாக அரசகுமாரிக்கு ஏற்படக்கூடிய துக்கமும் ஏமாற்றமும் எத்தன்மையதென்பது நன்றாகத் தெரிந்தேயிருந்தது. ஆகவே, மேற்கொண்டு எதுவும் பேசாமல், அரசகுமாரிக்கு முன்பாக மௌனமாகவே நின்றாள்.

அரசகுமாரியின் உள்ளத்தை எண்ணற்ற உணர்ச்சி அலைகள் தாக்கிக் கொண்டிருந்ததால், ஏதோ சொப்பன உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். அவள் அகக்கண் முன்பு ஏதேதோ காட்சிகள் தோன்றித் தோன்றி மறைந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, கரிகாலன் உருவமே அவள் உள்ளத்தில் திரும்பத் திரும்ப எழுந்து நின்றது. உள்ளே ஓடும் உணர்ச்சிகளைச் சிறிதும் பிரதிபலிக்காத அந்தக் குழந்தை முகம், சதா விஷமம் தவழும் கூரிய அந்தக் கண்கள், புன்முறுவல் பூத்து நிற்கும் உறுதியான அந்த உதடுகள் – இவையனைத்தையும் திரும்பத் திரும்பக் கருத்தின் திரையிலே தீட்டித் தீட்டிப் பார்த்த அரச குமாரிக்கு, கரிகாலனை வெறுப்பதா விரும்புவதா என்றே புரியவில்லை. விருப்பும் வெறுப்பும் கலந்து தாண்டவ மாடிய உணர்ச்சிகளுக்கும் மேலாக எழுந்து நின்றது ஒரு கேள்வி. அவர் எப்படி இதைச் சாதித்தார்?” என்ற அந்தக் கேள்வியை ஒரு முறை வாய்விட்டும் சொன்னாள்.

“அது அமைச்சருக்கும் தெரியவில்லை அரசகுமாரி” என்றாள் மாலினி.

“என்ன அமைச்சருக்கும் புரியவில்லையா?” என்றாள் அரசகுமாரி, சிந்தனைச் சுழலிலிருந்து தன்னைச் சற்று விடுவித்துக் கொண்டு.

“இல்லை.”

“ஏன்?”

“சோழ தூதர் ஜெயசிம்மனுடன் தனிமையிலேயே பேசினார். அமைச்சரைக்கூட ஜெயசிம்மன் அறையை விட்டு அகன்றுவிடும்படி உத்தரவிட்டானாம்.”
“அப்படியா?”

“ஆம் கரிகாலர் ” மாலினி வாக்கியத்தை முடிக்குமுன்பே அரசகுமாரி கட்டிலிலிருந்து துள்ளியெழுந்து, “தனிமையில் பேச விரும்பினார்… இப்பொழுது புரிகிறது!” என்று நிதானத்தை இழந்து கூவினாள். மாலினி ஏதோ பேச வாயெடுத்தாள். ஆனால் அதற்குச் சந்தர்ப்பமளிக்காமல் அரசகுமாரியே பேசிக்கொண்டு போனாள்: “புரிகிறது மாலினி, நன்றாகப் புரிகிறது! அந்தப் படுபாவி நேற்றுச் சொன்னதைச் சாதித்துவிட்டான். இனி நமது நாட்டை ஜெயசிம்மனுக்கு விற்றுவிட்டான். விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் நிர்ப்பயமாக உட்காரலாம். சோழர்கள் கூட இதற்கு ஒப்புக்கொளவார்கள். வேங்கி நாட்டு அரியணையில் யார் அமர்ந்தால் சோழர் களுக்கென்ன? அவர்களுக்கு வேண்டியது சாம்ராஜ்ய விஸ்தரிப்பு. இதற்கு இடமளிக்கக்கூடிய எதையும் சோழர்கள் ஒப்புக்கொள்வார்கள். இனி விமலாதித்தன் வம்சம் அழிந்தது; அதன் பெருமை அழிந்தது! இத்தனைக்கும் மூலகாரணம் ஓர் அயோக்கியன்; தர்க்க சாஸ்திரம் படித்த ஒரு போக்கிரி. வெகு சுலபத்தில் முடித்துவிட்டான் காரியத்தை” என்று விடுவிடு என்று பேசினாள்.

அவள் நினைத்தது போல் காரியம் அத்தனை சுலபத்தில் முடியவில்லை. அன்று காலையில் ஜெயசிம்மனைச் சந்தித்த கரிகாலன், தனக்குத் தெரிந்த தந்திரங்கள் அனைத்தையும் பிரயோகித்தே காரியத்தை முடித்தான். எடுத்த காரியத்தை முடிக்கக் கரிகாலன் எத்தனைப் பொய்களைப் புனைந்தான், எத்தனை முறை உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டான், எத்தனை முறை எதிரியுடன் சொற்போர் நடத்தினான் என்பதையெல்லாம், அந்தப் பேதை எப்படி அறிவாள்?
வேங்கி நாட்டுக்கு முதலில் வந்தபோது எந்த அறையில் ஜெயசிம்ம சாளுக்கியன் கரிகாலனைச் சந்தித்தானோ அதே அறையில் தான் அன்று காலையிலும் அவனுக்குப்பேட்டியளித்தான். வல்லூரின் கண்களைவிடக் கூர்மையான அதே கண்கள், எள்ளளவும் வெளியில் காட்டாத நிர்ச்சலமான அதே முகம் அவனை ஏறெடுத்துப் பார்த்தது. உறுதியும் கொடுமையும் நிறைந்த புன்முறுவல் பயங்கரமான மீசைக்குக் கீழே இதழ்களில் தவழ்ந்து நின்றது. ஜெயசிம்மன் முதலில் பேசவில்லை. கரிகாலன் பேசுவதைக் கேட்கத் தன் செவிகள் சித்தமாயிருக்கின்றன என்பதைப் பார்வையின் மூலமே உணர்த்தினான். இவன் மௌனத்திலும் ஒரு கட்டளை தொனித்தது.

மேலைச் சாளுக்கிய மன்னனைத் தலைதாழ்த்தி வணங்கிய கரிகாலன், “தங்கள் அடிமை வந்திருக்கிறேன்” என்று சொல்லி, மடியிலிருந்த ஓலை ஒன்றை எடுத்து ஜெயசிம்மனிடம் நீட்டினான். திடமான தன் கரங்களிலொன்றை நீட்டி ஓலை வாங்கிய ஜெயசிம்மன், ஒரு விநாடி அதைப் பார்த்தான். பிறகு ஓலையைத் திருப்பிக் கரிகாலனிடம் கொடுத்துவிட்டு, ‘லேசாகச் சிரித்துக்கொண்டே கேட்டான்: “இங்கு எந்த முறையில் வந்திருக்கிறாய் கரிகாலா? சோழ நாட்டுத் தூதர் என்ற முறையிலா, அல்லது என் வீரர்களால் சிறைப் படுத்தப்பட்டவன் என்ற முறையிலா?” என்று.

கரிகாலனும் மெள்ள நகைத்துவிட்டு, “இரண்டுக்கும் அதிக வித்தியாசமில்லையே மன்னவா!” என்றான்.

“வித்தியாசமில்லையா?” உணர்ச்சி ஏதுமில்லாமலே தொனித்தது மன்னன் குரல்.

“தங்கள் மேற்பார்வையில் இருப்பவன், பிற நாட்டுத் தூதனாயிருந்தாலும், தங்கள் கைதிபோல்தானே அலுவல் புரிய முடியும்?” என்றான் கரிகாலன்.

ஜெயசிம்மன் புருவங்கள் ஏதோ கேள்வி கேட்கும் முறையில் சற்றே உயர்ந்தன. அந்தக் கேள்வி அவன் உதடுகளிலிருந்து உதிரும் முன்பாகக் கரிகாலனே பேசத் தொடங்கி, “நான் இப்படித் திடீரெனச் சோழ நாட்டுத் தூதனாக வந்திருப்பது தங்களுக்கு ஆச்சரியத்தை விளை வித்திருக்கிறது; அதுமட்டுமல்ல; என்மீது அவநம்பிக்கை யையும் அளித்திருக்கிறது!” என்றான்.

ஜெயசிம்மன் மேலும் மௌனம் சாதித்ததால், கரிகாலன் பேச்சைத் தொடர்ந்து, “நான் அரிஞ்சயனை இங்கிருந்து கடத்திச் சென்றதே தங்களுக்கு என் மீது சந்தேகத்தைக் கிளப்பியிருக்கலாம்…” என்று மிகப் பணிவுடன் வார்த்தைகளை உதிர்த்தான்.

“அரிஞ்சயனைக் கடத்திச் சென்றது மட்டுமல்ல, விஜயாதித்தனை ஏமாற்றி, செங்கமலச் செல்வியையும் அழைத்துச் சென்று, அரையன் ராஜராஜனிடம் ஒப்படைத் திருக்கிறாய்” என்று விளக்கிய ஜெயசிம்மன், கரிகாலன் செய்துள்ள குற்றம் எத்தனை கடுமையானது என்பதைச் சுட்டிக் காட்டினான். அந்தச் சமயத்தில் கூட, ஜெயசிம்மன் முகத்தில் சிரிப்பின் சாயை மண்டிக் கிடந்ததேயொழிய, கோபத்தின் குறி சற்றேனும் புலப்படாததைக் கண்ட கரிகாலன், மேலைச் சாளுக்கிய மன்னரிடம் மிக எச்சரிக்கையுடன் பேச வேண்டிய அவசியத்தை உணர்ந்தான். ஆகவே, பணிவு நிரம்பிக் கிடந்த குரலிலேயே மீண்டும் பேச்சைத் துவக்கி, “எல்லாம் தங்கள் கட்டளையை முன்னிட்டுத்தான் மன்னவா! என்று கூறினான்.

“எது என் கட்டளை கரிகாலா? அரிஞ்சயனைக் கடத்திச் சென்றதா? அல்லது செல்வியை விடுவித்ததா?” என்று கேட்டான் ஜெயசிம்மன்.

“இரண்டுமில்லை மன்னவா; தாங்கள் முதலில் எனக்கு இட்ட கட்டளை.”

“என்ன அது?”

“தாங்கள் அடிமையாக அலுவல் புரியச் சொன்னீர்கள். அதற்காகப் பெரும் பதவி அளிப்பதாகவும் உறுதி கூறினீர்கள்.

‘ஆமாம், உறுதி கூறினேன்.:

“நானும், தங்கள் பக்கம் அலுவல் புரிய ஒப்புக் கொண்டேன். அதன் விளைவுதான் இது!”

“எது?”

“நான் செய்திருக்கும் காரியம்.”

“என்ன காரியத்தைச் சாதித்துவிட்டாய்?”

“விஷ்ணுவர்த்தன விஜயாதித்தனை வேங்கி நாட்டு அரியணையில் அமர்த்தும் சூழ்நிலையைச் சிருஷ்டித்து விட்டேன். கரிகாலன் இந்தப் பதிலை மிக மெதுவாகத் தான் சொன்னான். ஆனால் எதற்கும் அசையாத ஜெய சிம்மனையே அது அசைய வைத்தது.

ஜெயசிம்ம சாளுக்கியனின் கரிய பெரும் புருவங்கள் சட்டென ஒருவிநாடி உயர்ந்தன. உதடுகள் துடிப்பதற்கு அறிகுறியாக, மீசையும் ஒருமுறை அதிர்ந்து அடங்கியது. “என்ன! விஷ்ணுவர்த்தன விஜயாதித்தன் வேங்கி நாட்டு அரியணையில் அமரலாமா?” என்று வினவினான் ஜெயசிம்ம சாளுக்கியன்.

“ஆம்; இன்னும் பதினைந்து நாள்களில் திட்டமாகப் பதில் சொன்னான் கரிகாலன்.

அப்படியானால் நரேந்திரன்?”

“இராஜராஜ நரேந்திர மன்னரையும் அரசகுமாரி நிரஞ்சனாதேவியையும் சில நாள்கள் தமது விருந்தாளிகளாக வைத்திருக்கச் சோழ மன்னர் இஷ்டப்படுகிறார்.”

ஜெயசிம்மன் சிம்மாசனத்தில் ஒருமுறை அசைந்து உட்கார்ந்து, நம்பிக்கையைச் சிறிதும் பிரதிபலிக்காத விழி களைக் கரிகாலன் மீது நாட்டி, “என்ன சோழ மன்னன் இங்கிருந்து நரேந்திரனையும் அவன் சகோதரியையும் தம் நாட்டுக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறாரா?” என்று ஆச்சரியம் ததும்பி நின்ற குரலில் கேட்டான்.

‘ஆம் மகாராஜா! சோழ நாட்டுத் தூதுவன் என்ற முறையில், நான் தங்களிடம் அவர்களை அழைத்துச் செல்ல அருமதி கேட்டு வந்திருக்கிறேன்” என்று சொல்லித் தலையைத் தாழ்த்தி ஜெயசிம்மனை வணங்கினான் கரிகாலன்.

ராட்சசன் போல் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த ஜெயசிம்மன் ஸ்தம்பித்துப் போனான். இவன் சொல்வது உண்மையாக எப்படி இருக்க முடியும்?” என்று எண்ணி எண்ணிப் பார்த்து, விடை காணாமல் தவித்தான்.

மெள்ள கரிகாலனே சிக்கலை அவிழ்க்கத் தொடங்கி, நிலைமையை விவரித்தான்:

“மன்னவா! தங்களிடம் சேவை செய்ய ஒப்புக்கொண்ட நாள் முதலே அதற்கான திட்டங்களை வகுத்தேன். அரிஞ்சயனைக் கடத்திச் சென்று சோழர்களிடம் ஒப்படைத் தேன். அரையன் ராஜராஜன் மகளைத் தங்கள் மருமகனிட மிருந்து விடுவித்தேன். இரண்டிலும் சோழப் படைத்தலைவரின் நம்பிக்கையைப் பெற்றேன். தஞ்சைத் துறவியார் கொடுத்த ஓலை அந்த நம்பிக்கையை உறுதிப்படுத்தியது. பிறகு நானும் படைத்தலைவன் பதவியைப் பெற்றேன். படைத்தலைவர் மந்திராலோசனையில் கலந்து கொண்டேன். ஆனால் எந்த நிலையிலும் தங்கள் நலனை மட்டும் மறக்கவில்லை. சந்தர்ப்பம் வந்தபோது காரியத்தைச் சாதித்தேன். சோழப் படைகள் வடநாட்டு யாத்திரைக்குச் சித்தமாயிருந்தன. ஆனால், இடையே நிற்கிறது வேங்கி நாடு; இதைக் கடந்து வடநாடு செல்லத் தங்கள் உறவு வேண்டும் என்று மந்திராலோசனையில் கூறினேன்” என்று பேசிய கரிகாலன், சிறிது பேச்சை நிறுத்தி ஜெயசிம்மனைக் கவனித்தான்.

“ஹும்…” என்ற ஒரு சப்தமே எழுந்தது ஜெயசிம்மனிடமிருந்து.

கரிகாலன் மெள்ள ஜெயசிம்மனை அணுகி, “முதலில் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை, மன்னவா! வந்தியத் தேவர் கூடச் சற்று யோசித்தார். ஆனால் அவர்கள் சாம்ராஜ்யப் பேராசையைத் தூண்டிவிட்டேன். தங்கள் படைபலத்தையும், வேங்கியின் சக்தியையும் பற்றி அளவுக்குச் சற்று அதிகமாகவே சொன்னேன். கடைசியில் தங்கள் நட்பைப் பெறவும், வேங்கி நாட்டைத் தங்களிடம் ஒப்படைக்கவும் தீர்மானித்தார்கள்” என்று கூறினான்.

“என்னிடமிருந்து சோழர்கள் எந்த உதவியை எதிர் பார்க்கிறார்கள்?” என்று கேட்டான் ஜெயசிம்மன்.

“நட்புள்ள ஒரு நாட்டு மன்னன் செய்யக்கூடிய உதவியைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் படைகள் இந்நாட்டு வழியாக வடக்கே செல்லத் தங்கள் அனுமதி வேண்டும்.”

“அவ்வளவுதானா?”

“அவ்வளவேதான் மன்னவா! தாங்கள் அனுமதி கொடுத்தால், இன்னும் ஒரே வாரத்திற்குள் இராஜராஜ நரேந்திரனையும் நிரஞ்சனாதேவியையும் அழைத்துக் கொண்டு, நான் அரையன் ராஜராஜன் பாசறைக்குப் பயணமாவேன்.” “இதற்கு நரேந்திரன் ஒப்புக்கொள்ள வேண்டுமே?” “ஒப்புக்கொண்டு விட்டார்.’’

இந்தப் பதில் ஜெயசிம்மனை அப்படியே தூக்கிவாரிப் போடவே, திடீரென ஆசனத்திலிருந்து எழுந்து, பலமான கரங்களிலொன்றைக் கரிகாலன் தோள் மீது வைத்து அவனை மீண்டும் கூர்ந்து நோக்கினான். அப்படிக் கூர்ந்து நோக்கிய அந்த விழிகளில் சந்தேகம் பலமாய்ப் படர்ந்தது. “நீ எப்பொழுது நரேந்திரனைச் சந்தித்தாய்?” என்று கேட்டான் ஜெயசிம்மன், அந்தச் சந்தேகம் குரலிலும் தொனிக்க.

“நேற்றிரவு சந்தித்தேன் மன்னவா. தங்களுடைய திட்டங்களுக்கு வழியைச் சீர்படுத்த வேண்டியது உங்கள் அடிமையின் பொறுப்பல்லவா? அதற்காக, அவரிடம் ஏதேதோ பொய் சொன்னேன்.”

“என்னிடம் சொல்வது மட்டும் நிஜமென்று எப்படித் தெரியும் எனக்கு?”

“கிடைக்கும் பலனிலேயே இருக்கிறது அத்தாட்சி. தங்கள் திட்டம் இராஜராஜ நரேந்திரனை விலக்கி, தங்கள் மருமகனை மன்னனாக்குவதுதானே! அதற்கு நான் வழிகோலவில்லையா?” என்று கேட்டான்.

எதற்கும் குழம்பாத ஜெயசிம்மன் மூளை கூடக் குழம்பிக் கிடந்தது. எதிரே நிற்கும் அயோக்கியன் யார் பக்கம் பணி புரிகிறான் என்பதை நிர்ணயிக்க ஜெயசிம்மனால் கூட முடியவில்லை. அதுமட்டுமா? அடுத்த சில தினங்களில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தடுக்கவும் ஜெயசிம்மன் சக்தியிழந்து போனான். திறமைசாலியான சூதாட்டக்காரன் சதுரங்கப் பலகையில் காய்களை நகர்த்துவது போல, வேங்கி நாட்டு ராஜகுடும்பத்தினரைத் தன் இஷ்டப்படி திருப்பிக் கொண்டிருந்தான், பௌத்த மடத்தின் மாணவனான கரிகாலன். அவன் இஷ்டப்படி வேங்கி நாடு மட்டுமல்ல, சோழ நாடும் ஆடியது. ஜெயசிம்மனைக் கரிகாலன் சந்தித்த நாளிலிருந்து, சரியாக ஆறாவது நாள், பிரமிக்கத்தக்க நிகழ்ச்சிகள் வேங்கி நாட்டின் தலைநகரிலே நடந்தேறின.

Previous articleMannan Magal Part 2 Ch 10 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here