Home Historical Novel Mannan Magal Part 2 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

87
0
Mannan Magal part 2 Ch 12 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 12 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 12 உணர்ச்சியின் அதிர்ச்சி

Mannan Magal Part 2 Ch 12 | Mannan Magal | TamilNovel.in

ரகசியத்தை அறிவதில் மனிதனுக்குள்ள ஆசை ஒரு தீப்பொறி. ஊகம் என்ற காற்றினால் அது வீசப்படும் போது, வதந்தி என்ற பெரும் தீ சமூகத்தில் படுவேகத்தில் பரவிவிடுகிறது. அப்படிப் பரவும்போது, அது யார் யார் நலன்களைச் சுடும், யார் யாரை விட்டுவைக்கும் என்பதை நிர்ணயிக்க முடியாது. எப்பேர்ப்பட்ட திறமைசாலியையும் திணற வைக்கும் நிலையை வதந்தி சிருஷ்டித்துவிடுகிறது. வேங்கியின் தலைநகருக்குள் கரிகாலன் சோழ நாட்டுத் தூதனாக நுழைந்த இரண்டு மூன்று தினங்களுக்கெல்லாம் பலப்பல வதந்திகள் ஊரில் பரவியிருப்பதை ஒற்றர்கள் மூலம் கேட்டறிந்த ஜெயசிம்மன், என்ன செய்வது, நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்பதை அறியாமல் குழம்பிப் போனான்.

“சோழர்கள் ஜெயசிம்ம சாளுக்கியனுக்கு அடிபணிந்து விட்டார்கள். இராஜேந்திர சோழதேவர் தமது மருமகனான இராஜராஜ நரேந்திரனைச் சோழ நாட்டுக்கு அழைத்துச் சென்றுவிடப் போகிறார்” என்று சிலர் பேசினார்கள். அப்படியில்லை; ஜெயசிம்ம சாளுக்கியன் சோழர்களுக்குப் பயந்து வேங்கி நாட்டை அவர்களிடம் ஒப்படைக்கத் தீர்மானித்துவிட்டான்” என்று மற்றும் சிலர் பேசினார்கள். “அதெல்லாம் காரணமல்ல; விஷ்ணு வர்த்தன விஜயாதித்தனை அரியணையில் அமர்த்த, ஜெயசிம்ம சாளுக்கியனும் புதிதாக வந்திருக்கும் சோழ தூதருமாகச் சேர்ந்து ஏதோ சதி செய்திருக்கிறார்கள். ஆனால் இதெல்லாம் அதிக நாள் நீடிக்காது. கூடிய சீக்கிரம் சோழர்களின் பெரும் படை வந்து வேங்கியைச் சுட்டெரித்துவிடும்” என்று வேறு சிலர் பேசினார்கள்.

இப்படி மக்களிடையே வதந்தி பலவிதமாகப் பரவிக் கிடப்பதையறிந்த ஜெயசிம்மன், பெரிதும் குழப்பமடைந் திருந்தான். இந்தக் குழப்பம் அவனை மட்டுமல்ல, கரிகாலனைச் சேர்ந்தவர்களையும் பலமாகப் பிடித்துக் கொண்டது. கண்ட வதந்திகள் நகரத்தில் உலாவுவதால், தூதர் காரியாலயத்துக்கு ஏதாவது கெடுதி நேரிட்டால் என்ன செய்வது என்ற பீதி முத்துத்தேவன் மனத்தில் பலமாகப் படரவே, அவன் கரிகாலனை நேரடியாகவே கேட்டான், “அபாயத்தை அளிக்கக்கூடிய வதந்திகள் நகரத்திலே படர்ந்து வருகின்றனவே, தெரியுமா உங்களுக்கு?” என்று.

பல நாள்களுக்கு முன்பு எந்த மாளிகையில் பிரும்ம மாராயனின் விருந்தாளியாகவும் பிறகு கைதியாகவும் இருந்தானோ, அதே மாளிகையின் அறையொன்றில் தீவிர யோசனையுடன் உலாவிக்கொண்டிருந்த கரிகாலன், முத்துத்தேவனின் வார்த்தைகளைக் கேட்டதும், சற்று நின்று அவனை உற்று நோக்கிவிட்டு, “தெரியும் முத்து!” என்று பதில் சொன்னான்.

“இந்த வதந்திகளால் ஏற்படக்கூடிய பலனை உணர்ந் தீர்களா?” என்று முத்துத்தேவன் மீண்டும் வினவினான், எல்லையற்ற கவலை முகத்தில் தவழ.

“பலனை உணராமல் யாராவது காரியத்தில் இறங்கு வார்களா?”

“சோழ தூதர் சொல்வது என்னவென்று எனக்கு விளங்கவில்லை.”

“விளங்காததற்கு என்ன இருக்கிறது இதில்? வதந்திகளைக் கிளப்பிவிட்டது நான்தான். ஆகையால், பலனைக் கருதாமல் இருந்திருப்பேனா என்பதை யோசித்துப்பார் முத்து.”

முத்துத்தேவனுக்கு என்ன பேசுவதென்றே புரியாததால் ஒருகணம் விழித்தான்; மறுகணம் பதறினான். அடுத்தபடி அவன் பேசிய பேச்சில் பயமும் ஓரளவு தொனித்தது. “வதந்திகளை நீங்கள் கிளப்பிவிட்டீர்களா? இதை ஜெயசிம்மன் அறிந்தால், விளைவு என்ன ஆகும் தெரியுமா?” என்று கேட்டான் முத்துத்தேவன்.

“மனித சரித்திரத்தில் வதந்திகளின் மூலத்தைக் கண்டுபிடித்தவன் எவனுமே கிடையாது, முத்து. நமது ஒற்றர்கள் நகரத்தின் பல இடங்களிலும் சஞ்சரித்து வருகிறார்கள். ஏதோ அறைகுறையாக அரசாங்க விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். மீதியை மக்களின் ஊகத்துக்கு விட்டுவிடுகிறார்கள். விஷயம் எந்த இடத்திலிருந்து முளைத்தது, எப்படிக் கிளை விட்டது, இலையும் பூவும் காயுமாக எப்படிப் பரவியது என்பதை நிர்ணயிக்க யாராலும் முடியாது. சிறிதும் பயப்படாத ஜெயசிம்மனை விடச் சிறந்த ராஜதந்திரியாலும் இந்த வதந்திகளின் வித்தை நட்டவன் யார் என்பதை அறிய இயலாது” என்றான் கரிகாலன்.

முத்துத்தேவன் சிறிது நேரம் யோசித்துவிட்டு, “இந்த வீண் வதந்திகளைக் கிளப்பிவிட்டுப் பயன் என்ன?” என்று வினவினான்.
“வதந்தி ராஜதந்திரத்துக்கு அவசியமான கருவிகளில் ஒன்று. அதுவும் ஜெயசிம்மனைப் போன்ற பெரிய ராஜதந்திரியுடன் உறவாடும்போது அந்தக் கருவி மிக மிக அவசியமாகிறது முத்து. ஜெயசிம்மனைச் சற்று நிம்மதியாகப் படுக்கவிட்டால், அவன் சிந்தனை வேலை செய்யும்; சிந்தனை வேலை செய்தால் தெளிவு ஏற்படும்; தெளிவு ஏற்பட்டால் நீயும் நானும்…”

“சொல்லுங்கள் தூதரே!”

“நேராகச் சிறைச்சாலைக்குச் செல்ல வேண்டி வரும். கோதண்டத்தில் மாட்டி இருவர் தோலையும் உரித்து விடுவான் ஜெயசிம்மன்” என்று சொல்லி, லேசாக நகைத்தான் கரிகாலன்.

ஆனால், முத்துத்தேவன் கரிகாலனின் நகைச்சுவையில் பங்கு கொள்ளக்கூடிய நிலையில் இல்லை.

பிரும்ம மாராயன் செய்து வைத்துள்ள வேங்கி நாட்டுக் கோதண்டத்தை அந்த நகரத்துக்கு வந்த மறுநாளே பார்த்து, அது இயங்கும் முறையையும் அறிந்து கொண்டிருந்த முத்துத்தேவன் உடலில், அதைப்பற்றிய பிரஸ்தாபம் ஏற்பட்ட மாத்திரத்திலேயே ஒரு பயங்கர உணர்ச்சி ஊடுருவிச் சென்றதால், அவன் கரிகாலனுடைய சிரிப்பை ரசிக்க முடியாமல், கவலை தோய்ந்த குரலிலேயே கேட்டான், “இத்தனை ஆபத்தில் நாம் தலையைக் கொடுப்பது அவசியமா?” என்று.

“சிங்கத்தின் குகைக்குள் நுழைந்துவிட்டோம் முத்து. இனி என்ன செய்வது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமேயொழிய, உறுமி வரும் சிங்கத்தைக் கண்டு பயந்து என்ன பயன்?” என்று வினவிய கரிகாலன், முத்துத்தேவன் அருகில் சென்று, “முத்து! எல்லாம் திட்டப்படியே நடக்கிறது; கவலைப்படாதே. இன்னும் சில தினங்களில் வேங்கி நாட்டின் தலையெழுத்தையே அழித்து எழுதிவிடுவோம்” என்று உறுதி கூறினான்.

கரிகாலனுடன் பழகிய சில தினங்களுக்குள்ளாகவே அவனிடம் உயிரை வைத்திருந்த முத்துத்தேவன் கவலையை அந்த உறுதிமொழி சிறிதும் உடைக்கவில்லை.

அந்தக் கவலை முத்துத்தேவனை மட்டுமல்ல, அந்த மாளிகையிலிருந்த சோழ நாட்டு ஒற்றர்கள், வீரர்கள் எல்லோரையுமே கவர்ந்து கொண்டிருந்ததால் மாளிகை வாசிகளின் முகங்களில் மலர்ச்சி சிறிதும் இல்லை. எந்த விநாடியிலும் ஜெயசிம்மன் உண்மையை அறிந்து தூதர் மாளிகையையும், அதிலிருக்கும் தங்களையும் அழித்து விடலாம் என்ற கிலியில் அனைவரும் ஆழ்ந்து கிடந்தனர்.

இத்தனை அபாய நிலைமையிலும் சிறிதும் கவலை யில்லாமல் முகத்தில் புன்சிரிப்புடன் உலாவிக் கொண் டிருந்தவன் கரிகாலன் ஒருவன்தான்.

ஆற்றுக்குப் பாலம் அமைக்கும் சிற்பி எப்படி அதன் வெள்ளத்தைக் கண்டு அச்சப்படுவதில்லையோ, அப்படியே எதற்கும் அஞ்சாமல் தன் திட்டத்தை உருவாக்குவதில் முனைந்திருந்தான் கரிகாலன். வேங்கி நாட்டின் அரசியல் வாழ்வை அடியோடு மாற்றியமைக்கத் திட்டமிட்டுள்ள அந்த பௌத்த மடாலயச் சிஷ்யன், அரசியல் அரங்கத்தில் ஏதும் ஏற்படாதது போலவே நடந்துகொண்டு அரண்மனை வட்டாரங்களில் சுற்றிக் கொண்டிருந்தான். ஜெயசிம்ம சாளுக்கியனைக் கூடிய வரையில் பிரியாமல் அவனை அடிக்கடி சந்தித்துக் கொண்டும், அவனுடன் பேசிக்கொண்டும் உலாவிக் கொண்டும் இருந்த கரிகாலனின் மதிப்பு, அரண்மனை வட்டாரங்களில் நாளுக்கு நாள் ஏறிக்கொண்டிருந்தது. உள்ளூர எவ்வளவோ கரிகாலனை வெறுத்தாலும், ஊரில் தன்னைப்பற்றி உலாவிக்கொண்டிருந்த வதந்திகள் ஊர்ஜிதமாகாதபடி தடுக்க வேண்டுமென்ற காரணத்தால், சோழ நாட்டுக்கும் தனக்கும் எந்தவிதப் பகையுமில்லாதது போல் காட்டப் பிரியப்பட்ட ஜெயசிம்ம சாளுக்கியன் சோழ தூதனான கரிகாலனுக்கு, வேறு யாருக்கும் கிடைக்க முடியாத அத்தனை சலுகைகளையும் அளித்திருந்தான். அரண்மனையில் எந்த இடத்திலும் நுழைந்து புறப்படச் சோழ தூதருக்கும் அனுமதி கிடைத்தது.

இந்த அனுமதி காரணமாகக் கிடைத்த வசதியைக் கொண்டு, இராஜராஜ நரேந்திரனுடன் நெருங்கிப் பழகிய கரிகாலன், சம்பாஷணையில் தனக்கிருந்த சாதுரியத்தினால் சோழ நாட்டுக்குப் பிரியமுடன் போவதற்கு வேண்டிய மனோ நிலையையும் அவனுக்கு ஏற்படுத்தினான்.

பழக்க வழக்கங்களாலும், ஜெயசிம்மன் அளித்த சகவாச தோஷத்தினாலும் உறுதியையும் நம்பிக்கையையும் வாழ்க்கையில் இழந்து நின்ற இராஜராஜ நரேந்திரனுக்குப் பாரதத்தில் பிறந்த பல வீர புருஷர்களின் கதைகளை எடுத்துச் சொன்னான் கரிகாலன். இராஜராஜ நரேந்திரனைப் போன்ற சிறு வயதிலேயே, அபிமன்யு எப்படிக் கௌரவர்களின் பதும வியூகத்தையே உடைத் தான் என்பதை விவரித்து, அபிமன்யு பிறந்த இந்தப் பாரத நாட்டில் தோன்றிய நீங்கள் மட்டும் எப்படி வீரத்தை இழந்திருக்க முடியும்? சந்தர்ப்பம் உங்களையும் அத்தனை பெரிய வீரனாக்கும்; சந்தேகம் வேண்டாம்” என்று உற்சாக வார்த்தைகளைச் சொல்லி, அவன் மனத்திலிருந்த அவநம்பிக்கையையும் உறுதியின்மையையும் மெள்ள அழித்துக் கொண்டிருந்தான் கரிகாலன்.

இருட்டில் நடந்து செல்பவனுக்குத் திடீரெனத் தீப்பந்தம் கிடைத்த கதையாக இராஜராஜ நரேந்திரனின் இருண்ட மதியிலே ஒளியைப் பிறப்பித்து, வாழ்க்கையின் உண்மைப் பாதையையும் கரிகாலன் வார்த்தைகள் காட்டவே, அவனிடம் மிதமிஞ்சிய அன்பும் மதிப்பும் இராஜராஜ நரேந்திரனுக்கு நாளடைவில் ஏற்பட்டன. கரிகாலனுடைய ராஜதந்திரம் முற்றிப் பலன் தரும் சமயத்தில், இராஜராஜ நரேந்திரன் மட்டும் பூரண உறுதியைக் காட்டியிராவிட்டால் கரிகாலன் திட்டத்தை உடைத்துக்கூட இருப்பாள் நிரஞ்சனா. அத்தனை ஆக்ரோஷத்துடன் ஜெயசிம்மனுடனும் கரிகாலனுடனும் போராடினாள் அவள்.

அன்று சந்திரன் தன் கலைகளைப் பூரணமாக இழந்துவிட்ட அமாவாசை தினம். வேங்கி நாட்டை இயற்கை இருள் மட்டுமல்ல, செயற்கை இருளும் சூழ்ந்துகொண்டதாகவே கருதினாள் நிரஞ்சனாதேவி. அவளும் இராஜராஜ நரேந்திரனும் வேங்கி நாட்டை விட்டுச் சோழ நாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற ஏற்பாட்டின் பூர்த்தியை ஜெயசிம்மன் மெள்ள அவளுக்கு உணர்த்திக் கொண்டிருந்தான். வேங்கி நாட்டு மன்னர்களின் அந்தரங்க அறையிலேயே, அந்த நாடகம் தொடங்கியது. மன்னன் மகளின் சீற்றத்துக்கும், ஜெயசிம்ம சாளுக்கியனின் ராஜதந்தரப் பேச்சுக்கும் இடையே, பதிலேதும் சொல்லத் தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த மந்திரிப் பிரதானிகள் மௌனமாகவே நின்றுகொண்டிருந்தார்கள்.

அரசகுமாரி அந்த அவையைக் கம்பீரம் சொட்டிய தன் கருவிழிகளால் ஒரு முறை அளவெடுத்தாள். ஒருமுறை எதிரே அமர்ந்திருந்த தன் தம்பியை வெறுப்புடன் நோக்கினாள். தம்பிக்குப் பக்கத்தில், சந்திரனுக்குப் பக்கத்தில் ராகுவைப் போல் வேங்கி நாட்டை விழுங்கச் சித்தமாக உட்கார்ந்திருந்த மேலைச் சாளுக்கிய மன்னன் மீது ஆத்திரம் தோய்ந்த விழிகளை நாட்டினாள். மீண்டும் அவை முழுவதையும் தன் வேற் கண்களால் தாக்கிவிட்டுக் கேட்டாள் அரசகுமாரி: “இந்த நாட்டை விட்டு என்னை வெளியேற்ற உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்று. இந்தக் கேள்வியை அவள் பொதுவாகவே கேட்டாலும், அவள் விழிகள் கடைசியில் வேங்கி நாட்டுப் பேரமைச்சர் மீதே நிலைத்தன.

அந்தப் பார்வையைத் தாங்கமாட்டாத பேரமைச்சர், மிகுந்த சங்கடப்பட்டு ஆசனத்தில் அசைந்து ஜெயசிம்ம சாளுக்கியனை நோக்கினார். மேலைச் சாளுக்கிய மன்னனையும் அந்த நிலை பெரும் சங்கடத்துக்குள்ளாக்கியிருந்தாலும், அவன் ஓரளவு சமாளித்துக் கொண்டு, “குழந்தாய் உன்னை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக யார் சொன்னது?” என்று வினவினான்.

அரசகுமாரியின் கண்கள் கனலைக் கக்கின. “இல்லை ! நாட்டை விட்டு வெளியேற்றவில்லை. சோழ நாட்டைச் சுற்றிப் பார்த்துவர உல்லாசப் பயணம் அனுப்புகிறீர்கள்!” என்று இகழ்ச்சியும் கோபமும் ததும்பும் குரலில் கூறினாள் நிரஞ்சனாதேவி.
“தவறாக நினைக்கிறாய் குழந்தாய்! உங்களைச் சோழ நாட்டுக்கு அனுப்ப எங்களுக்கு இஷ்டமில்லைதான்” என்று ஏதோ பதில் சொல்லத் தொடங்கிய ஜெயசிம்மனை, இடையிலே வெட்டின அரசகுமாரியின் இகழ்ச்சி நிரம்பிய சொற்கள்: “உங்களுக்கு இஷ்டமில்லை. சோழப் பேரரசர் விரும்புகிறார், அதனால் அனுப்புகிறீர்கள்” என்று நிரஞ்சனாதேவி சுடச்சுட வார்த்தைகளை உதிர்த்தாள்.

“அதில் சந்தேகமென்ன அரசகுமாரி?” என்றார் பேரமைச்சர், மெள்ள தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

நிஞ்சனாதேவியின் கண்களில் ஆத்திரம் தாண்டவ மாடியது. “பேரமைச்சரே! நீர் என் தகப்பனார் காலத்திலிருந்து இங்கு பதவி வகிக்கிறீர் அல்லவா?”

“ஆம் தேவி.”

“உமக்கு அரசியல் விவகாரமும் ராஜதந்திரமும் சிறிது தெரியும்.”

“அப்படித்தான் தங்கள் தந்தையார் அபிப்பிராயப் பட்டார்.”

“அப்படியானால் சொல்லுங்கள்; மேலைச் சாளுக்கிய மன்னருக்கும் சோழர்களுக்கும் இத்தனை வருஷ காலமாக நட்பு ஏற்பட்டதுண்டா?”

“நட்பாவது? தீராத போர்தான்!”

“அப்படியானால் திடீரென்று சோழர்களுக்கு இவரிடம் இப்பொழுது நட்பு ஏற்பட வேண்டிய காரணம் என்ன?”

பேரமைச்சர் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தார். அரசகுமாரி விடாமல் அவரை வற்புறுத்தி, பேரமைச்சரே! உமது நாவு அசையவில்லையா? விமலாதித்தன் உப்பை உண்டு, அவன் குலத்தை நாசம் செய்ய முயலும் சதிக்கு உடந்தையாயிருக்கிறோமே என்ற வெட்கம் உமது நாவையும் அடைத்துவிட்டதா?” என்று வினவினாள்.

பேரமைச்சர் பேசவில்லை. அவர் உதவிக்கு கரிகாலனே விரைந்தான்: “அரசகுமாரி! கலங்கிய உங்கள் கருத்தில் நடக்காத சதிகள், இல்லாத சூழ்ச்சிகள், நாங்கள் சிந்தனையால் நினைக்கவும் முடியாத கேடுகள் சகலமும் வலம் வருகின்றன. தங்களை யாரும் இந்த நாட்டை விட்டு வெளியேறச் சொல்லவில்லை. சோழ மன்னர் விருப்பத்தை ஜெயசிம்மனிடம் தெரிவித்தேன்; அவர் வேங்கி நாட்டு மன்னரைக் கலந்தார்; மன்னர் இசைந்தார். அதனால் ஏற்பட்ட முடிவு இது. மன்னர் என்னுடன் வருவதாக முடிவு செய்துவிட்டார்கள். தங்களுக்கு இஷ்டமில்லை யேல், தாங்கள் இங்கேயே தங்கலாம்” என்று இராஜராஜ நரேந்திரன் மீது கண்களைச் சிறிதே ஓட்டினான்.

அரசகுமாரியின் கயல் விழிகளும் தம்பியின் மீது நிலைத்தன. “வேங்கி நாட்டு மன்னர் தமது பொறுப்பை விட்டு நாட்டைத் துறந்து ஓடச் சம்மதித்துவிட்டாரா?” என்று வினவினாள், குரலில் இகழ்ச்சி தொனிக்க.

சலனப்பட்ட கண்களை லேசாக உயர்த்தித் தன் சகோதரியை ஒரு விநாடி நோக்கினான், இராஜராஜ நரேந்திரன். அவள் கண்களைக் கவர்ந்து நிற்கச் சக்தியற்ற தன் கண்களை மறுபடியும் தரையில் தாழ்த்திக் கொண்டு, “விமலாதித்தன் மகன் பொறுப்பைப் புறக்கணிக்கும் கோழையல்ல அக்கா! நாட்டின் நன்மையை முன்னிட்டு நான் செய்த முடிவு இது. என் பூரண சம்மதத்துடனேயே இந்த ஏற்பாடு நடந்திருக்கிறது. இதற்காகக் கரிகாலர் மீதோ மேலைச் சாளுக்கிய மன்னர் மீதோ நீ குற்றம் சாட்டிப் பயனில்லை. நான் சோழ நாடு போகிறேன். நீ இஷ்டப்பட்டால் வா; இல்லாவிட்டால் இங்கேயே இரு!” என்று சொல்லிவிட்டு, அவை அத்துடன் முடிவடைந்து விட்டது என்பதற்கறிகுறியாக அரியணையை விட்டு எழுந்தான் இராஜராஜ நரேந்திரன்.

தம்பியின் சொற்களைக் கேட்டு ஸ்தம்பித்துப் போன நிரஞ்சனாதேவி, தலைகுனிந்தவாறே அவையிலிருந்து வெளியேறினாள். அவள் உள்ளத்திலே தம்பி தன்னைத் தூக்கியெறிந்து பேசிவிட்டானே என்ற துக்கமும் அவனுக்கு இத்தனை தைரியம் எங்கிருந்து உதயமாயிற்று என்ற ஆச்சரியமும் கலந்து தாண்டவமாடியதால், அடுத்த சில தினங்களில் உணர்ச்சியற்ற பதுமை போல் நடமாடிக் கொண்டிருந்தாள் மன்னன் மகள். கரிகாலனும் சுமார் ஐம்பது சோழ நாட்டு வீரர்களும் காவல் புரிய, ஆறு வெண் புரவிகளால் இழுக்கப்பட்ட ரதத்தில் தம்பியுடன் அவள் சோழ நாட்டுக்குப் புறப்பட்ட போதுகூட உணர்ச்சி யிழந்தே கிடந்தாள்.

உணர்ச்சிக்கு ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியானது, மக்கள் அவர்களை வழியனுப்பச் செய்த வாழ்த்துக் கோஷங்களைக் கூட அவள் செவிகளில் விழ விடவில்லை. அவளைத் தாங்கிச் சென்ற ரதத்தின் சக்கரங்களின் ஓசை யைக்கூடக் கேட்கும் சக்தியை இழந்திருந்தாள் அவள். வேங்கி நாட்டில் தனக்கேற்பட்ட அரசியல் தோல்வியால் உண்டான அதிர்ச்சியைப் பெரிதாக மதித்து, அடியோடு மதியைக் கவலைக்கும் குழப்பத்துக்கும் பறி கொடுத்திருந்தாள் மன்னன் மகள். ஆனால், அதைவிடப் பேரதிர்ச்சி காத்திருந்தது அவளுக்கு, அரையன் ராஜராஜன் பாசறையில்.

Previous articleMannan Magal Part 2 Ch 11 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here