Home Historical Novel Mannan Magal Part 2 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

87
0
Mannan Magal part 2 Ch 13 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 13 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 13 பஞ்சணையை நோக்கி நகர்ந்த உருவம்

Mannan Magal Part 2 Ch 13 | Mannan Magal | TamilNovel.in

வேங்கி நாட்டு அரச குடும்பத்தைப் பத்திரமாக அரையன் ராஜராஜன் பாசறைக்குக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பை ஏற்றிருந்ததாலும், கிருஷ்ணா நதியின் கரையோரமாகச் சென்று கூடல் சங்க மத்தை அடைவதால் ஆபத்துக்கள் பல அரசகுமாரிக்கும் அவள் தம்பிக்கும் ஏற்படலாம் என்ற அச்சத்தாலும், கரிகாலன் கிருஷ்ணா நதியின் கரையை விட்டுச் சற்று விலகி குறுக்கேயுள்ள தட்சிண பீடபூமியின் மேடான பிரதேசங்கள் வழியே அவர்களை அழைத்துச் சென்றான். துங்கபத்திரையும் கிருஷ்ணாவும் இணையும் கூடல் சங்கமத்திற்குச் செல்வதால் அநுகூலங்கள் பல இருக்கத் தான் செய்தன. வேங்கி நாடும் மேலைச் சாளுக்கிய நாடும் ஒரு காலத்தில் ஒரே சாளுக்கியப் பேரரசாக இருந்ததால், கிருஷ்ணா நதியின் கரையோரமாகப் பட்டணங்கள் பல ஏற்பட்டிருந்தன. வேங்கியிலிருந்த சாளுக்கியக் கோட்டையிலிருந்து கூடல் சங்கமத்தின் வேட்டுவர் மாளிகை வரையில் வழிநெடுக அரச குடும்பத்தினர் தங்குவதற்கான மாளிகைகளும் வேறு பல வசதிகளும் இருந்தன. ஆனால் அந்த வழியாகச் சென்று கூடல் சங்கமத்தை அடைவதற்குள், தான் வேங்கி நாட்டு அரச குடும்பத்தை அழைத்துச் செல்லும் காரணத்தை ஜெயசிம்மன் ஊகிக்க முற்பட்டால், வெகு சீக்கிரத்தில் தன்னை வளைத்துக் கொள்வதற்கு மேற்குச் சாளுக்கிய மன்னனுக்கு வழி உண்டு என்பதை அறிந்திருந்ததாலும், அப்படி வளைத்துக் கொள்ள நேரிட்டால் வேங்கி நாட்டு அரச குடும்பத்தின் கடைசிக் கட்டம் அதுவாகவே இருக்குமென்பதையும் உணர்ந்திருந்ததாலும், வழக்கமான வழியை விட்டுத் தெற்குத் திசையில் திரும்பி, கஷ்டமான மார்க்கத்திலேயே நிரஞ்சனாதேவியையும் இராஜராஜ நரேந்திரனையும் கரிகாலன் அழைத்துச் சென்றான்.

இந்தப் பயணத்திற்கும் கிருஷ்ணா நதிக் கரையோரமாகப் பயணம் செய்வதற்கும் ஒரு வார காலத்திற்கு மேல் வித்தியாசமிருக்கத்தான் செய்தது. தவிர, வழியிலிருந்த சிறு கிராமங்களிலும் சரி, ஒதுக்குப்புறமாக இருந்த சில பட்டணங்களிலிருந்த சத்திரங்களிலும் சரி, அரச குடும்பத்தினர் தங்குவதற்கு வேண்டிய பூரா வசதியும் இல்லை. இருப்பினும் கரிகாலன் நிரஞ்சனாதேவிக்கும் இராஜராஜ நரேந்திரனுக்கும் எத்தனை சௌகரியங்களைச் செய்து கொடுக்க முடியுமோ, அத்தனை சௌகரியங்களைச் செய்து கொடுத்தான். எவ்வளவு ராஜபோகத்தில் அவர்களை வைக்க முடியுமோ அவ்வளவு ராஜபோகத்தில் வைக்கச் சகலவித முயற்சிகளையும் எடுத்துக் கொண்டான். ஆனால் மன்னன் மகளுக்கிருந்த மனோநிலையில் அவள் வழியிலே இருந்த கஷ்டங்களைச் சிறிதும் கவனிக்காமலும் வழி நெடுக ஏதும் பேசாமலும் மௌனமாகவே பிரயாணம் செய்தாள். இறங்கும் இடங்கள் வந்த சமயங்களில் முத்துத்தேவன் அவளை அணுகி, “அரசகுமாரி, இறங்க லாம்” என்று பணிவுடன் கூறியபோதெல்லாம், அவள் பதிலுக்கு ஒரு வார்த்தை கூடப் பேசாமலும், அவனைத் திரும்பியும் பார்க்காமலும் வெறும் பதுமை போல் இறங்கிச் சென்றாள்.

அவள் சித்தத்தில் சதா வேங்கி நாடும் ஜெயசிம்மனும், கரிகாலனும் மாறி மாறிச் சுழன்று கொண்டிருந்ததால், வேறு இடங்களோ மனிதர்களோ உலகில் இருப்பதாகவே தோன்றவில்லை அவளுக்கு. தான் பிறந்த மண்ணை விட்டுத் தன்னை வெளியேற்ற, ஒருவன் பாரதத்தின் மண்ணில் பிறப்பான் என்பதைச் சொப்பனத்தில் கூட நினைக்காத நிரஞ்சனாதேவிக்கு, அப்பேர்ப்பட்டவன் பிறந்து வந்து அந்தக் காரியத்தைச் சாதித்துவிட்டானே என்ற நினைப்பால் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. யார் ஒருவனை ஒழிக்க வேண்டும் என்பதற்காகப் பிரும்ம மாராயனுடன் சதியில் இறங்கினாளோ, அந்த ஜெயசிம்மன் கடைசியில் தன்னை வென்றுவிட்டானே என்ற எண்ணம் அவள் உள்ளத்தை உடைத்தெறிந்து கொண்டிருந்தது. சாளுக்கிய வீரர்களிடமிருந்து யாரைக் காத்து, யாரிடம் தன் நலனையும் உள்ளத்தையும் ஒப்படைத்தாளோ, அவனே தன்னுடன் இச்சகம் பேசி, தன்னை ஏமாற்றித் தனக்கும் தான் பிறந்த மண்ணுக்கும், பெரும் நமனாய் வாய்த்தானே என்ற ஏமாற்றம் அந்த ஏந்திழையின் இதயத்தைப் பாகாய் உருக்கிக் கொண்டிருந்தது. இப்படியாக உள்ளம் முறிந்து உணர்ச்சிகள் சிதறிப் பிரயாணம் செய்துகொண்டிருந்த அரசகுமாரியின் மனத்தில், கரிகாலனைப் பற்றிய வெறுப்பு மிதமிஞ்சி வளர்ந்திருந்ததால் மாற்றானிடம் அகப்பட்ட ஒரு கைதி போலவே அவள் பயணம் செய்தாள்.

ஆனால் இராஜராஜ நரேந்திரன் உணர்ச்சிகள் நேர்மாறாக இருந்தன. கூண்டிலிருந்து விடுபட்ட பட்சி சிறகடித்துக் குதூகலிப்பது போல், வேங்கி நாட்டு அரியணையிலிருந்து கிடைத்த விடுதலையால் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தான் வேங்கி நாட்டு மன்னன். வாலிபப் பருவமடைந்த நாளாய் ஜெயசிம்மன் ஏற்பாட்டினால் மதுவுடனும் மங்கையுடனும் காலம் கழித்த வேங்கி நாட்டு இளவலுக்கு, வீரர்கள் சேர்க்கையும் அவர்கள் தங்கியிருந்த மண் தரையும்கூடத் தேவேந்திர போகமா யிருந்தது. அதிகமாகச் சத்திரங்களில் இடவசதி அகப்படாத போதெல்லாம் கரிகாலன், அரசகுமாரிக்கும் இராஜராஜ நரேந்திரனுக்கும் மட்டும் சத்திர வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டுத் தன் வீரர்களுடன் எதிரிலிருந்த தோப்புகளிலோ, அதுவுமில்லாவிடில் வானக் கூரையின் கீழோ தங்கி வந்தான். இரவில் தோப்புகளில் குதிரைகளைக் கட்டிவிட்டு, வெளிச்சத்துக்காகச் சுள்ளிகளைக் குவித்து எரியவிட்டு, மரங்களில் குதிரைகளைக் கட்டி மண் தரையில் உட்கார்ந்து பேசியே இராப்பொழுதைப் போக்கும் வீரர்களுடனும் இராஜராஜ நரேந்திரனும் வந்து கலந்துகொள்வான். அவர்களுட னிருந்த கரிகாலன் சொல்லும் வீரர்களின் கதைகளைக் கேட்பான். அந்தமாதிரித் தானும் ஒரு வீரனாகிப் பாரதத்தின் வரலாற்றில் தனியிடம் பெறும் நாள் வருமா என்று ஏங்கிப் பெருமூச்சும் விடுவான். பொதுவில், வேங்கியிலிருந்து அரையன் ராஜராஜனுடைய பாசறைக்கு அவன் பயணம் செய்த சுமார் பதினைந்து நாள்களுக்குள்ளாகவே, தன் உணர்ச்சிகளில் பெரும் மாறுதல் ஏற்படுவதைக் கவனித்த வேங்கி நாட்டு மன்னனுக்கு, மெள்ளக் கரிகாலனிடம் ஓரளவு குரு பக்தியும் ஏற்படவே செய்தது. கரிகாலனுடைய ஆழ்ந்த சாஸ்திர ஞானத்தைக் கண்ட இராஜராஜ நரேந்திரன், இவ்வளவு படிப்பும் நுண்ணறிவும் ராஜதந்திரமும் இத்தனை இளவயதில் கரிகாலனுக்கு எப்படி ஏற்பட்டன என்பதை நினைத்து நினைத்து வியப்படைந்தான். மந்திரத்தைவிட மகாசக்தியுள்ள கரிகாலன் போதனைகள் இராஜராஜ நரேந்திரனை ஒரு புது மனிதனாக அடித்துக் கொண்டிருந்தன. வேங்கி நாட்டு மன்னன் மனத்திலிருந்து மது அகன்றது. மடந்தையர் அகன்றனர். அறிவும் புகுந்தது, ஆணவமும் தலைநீட்டியது. வாளைப் பிடிக்க நடுங்கிய கை வாளை ஏற்கத் துடித்தது. அவனுடைய மூதாதையரின் ரத்தத்தைத் தேக்கி வைத்திருந்த ஜெயசிம்மன் என்ற பெரிய கரை அகன்றதும், வீர உணர்ச்சி அவன் உடலில் பிரவகிக்கத் தொடங்கியது. அதன் விளைவு அவன் பார்வையிலும் தெரிந்தது.
இராஜராஜ நரேந்திரனிடம் மெள்ள மெள்ள ஏற்பட்டு வந்த இந்த மாறுதலைக் கரிகாலன் மட்டுமல்ல, அரசகுமாரி நிரஞ்சனா தேவியும் கவனிக்கத்தான் செய்தாள். தம்பியின் வாழ்க்கையில் ஒரு புது சகாப்தம் ஏற்பட்டு வருவதை அவன் நடையிலும் பார்வையிலும் அவள் கண்டறிந்தாள். ஆனால், பிறந்த மண்ணை அவன் மாற்றானுக்குத் தத்தம் செய்துவிட்டானே என்ற உள்ளத்துடிப்பு அவள் உணர்ந்த உண்மையை மறக்கச் செய்யவே, அவள் அவனிடமும் ஓரளவு வெறுப்புக் கொண்டாள்.

இந்த இருவர் நிலை இப்படியென்றால் பயணம் செய்த சில நாள்களில் கரிகாலன் மனோநிலை எப்படியிருந்த தென்பதை யாராலும் உணர முடியவில்லை. வேங்கி நாட்டில் சாளுக்கியர் கோட்டையின் திட்டி வாசலைத் திறந்துகொண்டு அவன் ஓடிவந்த அன்று முதன் முதலாக அவளைச் சந்தித்த அந்தத் தினத்தில், அவன் முகபாவம் எப்படியிருந்ததோ அப்படித்தானிருந்தது. பல நாள்கள் கழித்தும் மனத்தாலும் நினைக்க முடியாத பல சம்பவங்களுக்குப் பிறகு பயணம் செய்த அந்த நாள்களிலும் அவனிடம் எந்த மாற்றமோ துடிப்போ ஏற்படவில்லை. உதட்டில் இயற்கையாகத் தெரியும் அந்த விஷமப் புன்முறுவல் அந்த நாள்களிலும் இருந்துகொண்டு தானிருந்தது. வீரர்களுக்கு அவன் இடும் கட்டளைகள் எப்பொழுதும் போலவே உறுதியாகவும் தெளிவாகவும் இருந்தன. அவன் சித்தத்தில் சிந்தனைகள் ஏதாவது ஓடிக்கொண்டிருந்தாலும், அந்தச் சிந்னையின் முத்திரை ஏதும் முகத்தில் தெரியவில்லை. பயணம் செய்த நாள்களில் அவனைப் பார்க்காதது போல் பல முறை பார்த்து அவன் மனத்திலோடிய எண்ணங்களை அறியமுயன்ற அரச குமாரிகூடத் தோற்றே போனாள்.

எந்த நிகழ்ச்சிகளும் உடைக்க முடியாத அந்த உறுதி, உள்ளத்தில் என்ன உணர்ச்சிகள் ஓடுகின்றன என்பதைக் கண்டுபிடிக்க முடியாது முகத்தைக் கல்லாக வைத்துக் கொள்ளக்கூடிய ஒரு சாமர்த்தியம் – இவைதான் கரிகாலன் வெற்றிக்குக் காரணம் என்று பிற்காலத்தில் அரையன் ரர்ஜராஜன், இராஜேந்திர சோழதேவரிடம் சொன்னான் என்றால் அதற்கான அத்தாட்சியை முன்னதாகவே அந்தப் பயணத்தில் கண்டாள், அரசகுமாரி. அரசாங்க விஷயங்களில் அதிக அநுபவமில்லாதவனானாலும் எந்த ராஜ தந்திரியின் அறிவுக்கும் கீழ்ப்படாத ஓர் அறிஞனிடம், தான் எந்த வழியும் போக முடியாமல் சிக்கிக் கொண்டிருப்பதை அறிந்தாள் நிரஞ்சனாதேவி. அத்தகைய அறிவு அவளுக்கு உண்மையில் சாந்தியை அளித்திருக்க வேண்டும். ஒரு பெரிய அறிவாளியின் காதலைப் பெற்ற அவள் பெருமைப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவள் மனம் சாந்தியிழந்து நின்றது. கரிகாலன் ஒரு துரோகி என்ற சிறுமை மனப் பான்மையை அவள் காட்டத் தயங்கவில்லை. அவளுடைய போக்கைக் கண்டு அரையன் ராஜராஜனும் பால்யத்தில் அவளை எதிர்கொண்ட வந்தியத்தேவரும்கூட அயர்ந்து போனார்கள்.

பத்துநாள் பயணத்திற்குப் பின்பு அரையன் ராஜராஜன் பாசறையில் அவள் வந்தியத்தேவரைச் சந்தித்தாள். அதுவும் கரிகாலன் முன்பே தூதர்களை அனுப்பியதன் விளைவாக அவள் வருகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாபெரும் வரவேற்பு சபையில்தான் அவரைச் சந்தித்தாள். அங்கு அவள் இகழ்ச்சி நிரம்பிய வெறுப்புச் சொற்களால் கரிகாலனை மட்டுமல்ல, வந்தியத்தேவரையும் அரையன் ராஜராஜனையும் கூடச் சுட்டாள்.
இராஜேந்திர சோழதேவரின் பிரதான படைத் தலைவனும் போரில் இணையற்ற ஜெயசிம்மனையே முறியடித்த மாவீரனுமான அரையன் ராஜராஜன், விமலாதித்தன் மகளையும் மகனையும் படைத்தளத்தின் எல்லையிலேயே ஆயிரம் குதிரைகளுடனும், யானைகளுடனும் எதிர்கொண்டு, துந்துபிகளும் சங்கங்களும் வானைப் பிளக்க அவர்களை வரவேற்றான். அவனைக் கூட லட்சியம் செய்யவில்லை அரசகுமாரி. ஆறு வெண்புரவி வண்டியிலிருந்து வரவேற்பு மண்டபத்திலிறங்கிய மன்னன் மகள், தலையைச் சற்றே திருப்பி, கடல் போல் கண் சென்றவிடமெல்லாம் பரந்து கிடந்த சோழப் படைகளைக் கவனித்தாள். பிறகு தலையைச் சட்டென்று மண்டப வாயிலுக்காகத் திருப்பி உள்ளே சென்றாள். அவளுக்கும் இராஜராஜ நரேந்திரனுக்கும் சுற்றப் பெண்கள் கொண்டு வந்திருந்த ஆரத்திகளையும் ஏற்சாது புறக்கணித்து மண்டபத்துக்குள் புகுந்தாள் அவள். மண்டபத்திலிருந்த சுமார் ஆயிரம் வீரர்கள் எழுந்திருந்து மன்னன் மகளுக்கும் வேங்கி இளவலுக்கும் தலை தாழ்த்தினர். ஆயிரம் வாள்களும் ஏக காலத்தில் உருவப் பட்டு, ‘இந்த வாள்கள் உங்கள் சேவைக்காக’ என்று பொருள் படும்படி அவள் காலடியில் தாழ்த்தப்பட்டன. மௌனமாக அந்த வரவேற்பு வாள்கள் எழுந்து தாழ்ந்த அந்த வீரக்காட்சி, வீரனான விமலாதித்தன் மகளும் உடலிலே வீரம் சிறிதும் குன்றாதவளுமான நிரஞ்சனா தேவியின் இதயத்தைச் சென்று தொடத்தான் செய்தது. தளராத அவள் பிடிவாதத்தைக்கூட அந்தக் காட்சி ஓரளவு தளர்த்திவிடவே, தனது மணிக்கரங்களை எடுத்துக் குவித்துச் சபையை வணங்கினாள் நிரஞ்சனாதேவி. பிறகு நடுவிலிருந்த வழிக்குள் நுழைந்து தாழ்ந்த பல வாள்கள் தன் கமலப் பாதங்களைத் தொடத் தம்பி பின்தொடர, நடந்து சென்று தனக்காகப் பிரத்தியேகமாகப் போடப் பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்து பக்கத்தில் உட்காரும்படி இராஜராஜ நரேந்திரனுக்கு விழிகளால் சைகை காட்டினாள்.

அவள் முன்பாகப் பயபக்தியுடன் நின்ற வல்ல வரையர் வந்தியத்தேவர் மற்றப் படைத்தலைவர்களையும் வீரர்களையும் உட்காரச் சொல்லிவிட்டு, “விமலாதித்தன் திருமகளும் வேங்கி நாட்டு மன்னரும் விஜயம் செய்திருப்பதால் சோழப் படைகளின் இந்தப் பாசறை புனிதமடைந்திருக்கிறது. நீங்கள் இணங்கி வந்ததற்கு சோழப் பேரரசர் சார்பாக எங்கள் நன்றி” என்று முகமன் கூறினார்.

நிரஞ்சனாதேவியின் நீள்விழிகள் ஒருமுறை அந்த அவையைத் துழாவிவிட்டுக் கடைசியில் வந்தியத்தேவர் மீது நிலைத்தன. செம்பருத்தியின் இதழ்களைப் போன்ற அவள் இதழ்கள் மெல்லத் திறந்தன. செம்பருத்தியிலிருந்து தேன் சிதறும் என்று வல்லவரையர் எதிர்பார்த்தார். ஆனால் விஷம் தோய்ந்த நெருப்புப் பொறிகள் உதிர்ந்தன.

“வந்தியத்தேவரே! எங்கள் வருகை குறித்து நீர் நன்றி கூற வேண்டியது எங்களுக்கல்ல. எங்களைச் சிறைப்படுத்தி இங்கு கொண்டு வந்துள்ள உங்கள் தூதருக்குச் சேர்ந்தது. அவருக்குக் கூறுங்கள் நன்றியை” என்றாள் அரசகுமாரி.

சபையில் ஒருவிநாடி சலசலப்பு ஏற்பட்டது. அந்தச் சலசலப்பை ஒரே பார்வையால் அடக்கிய வந்தியத்தேவர், நிதானம் சிறிதும் தவறாத பார்வையொன்றை அரசகுமாரி மீது நிலைக்கச் செய்து, “அரசகுமாரி! தூதர் வேங்கி நாட்டு நன்மையையும் உத்தேசித்துத்தான் தங்களை இங்கு அழைத்து வந்திருக்கிறார். அவர்மீது தாங்கள் சினப்படுவது முறையல்ல. தவிர, தூதர்கள் என்ன செய்வார்கள்? அரசனிடும் ஆணைப்படி நடப்பது தூதர்கள் பொறுப்பு. இது தங்களுக்கும் தெரிந்ததுதானே?” என்றார்.

“எங்களைச் சிறைப்பிடித்து வரச்சொல்லிச் சோழப் பேரரசர் உத்தரவிட்டாரா?” என்று வினவினாள் நிரஞ்சனா தேவி.

“மருமகனைச் சில நாள்கள் தம்முடன் தங்க அழைத்து வருவதைச் சிறைப்பிடிப்பதென்று சொல்வதில்லையே அரசகுமாரி” என்றார் வந்தியத்தேவர்.

அரசகுமாரி ஆசனத்தில் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, தங்கக் கம்பிகளைப் போட்டாலும் சிறை சிறைதான் தேவரே! எங்கள் இஷ்டவிரோதமாக எங்களை இங்குக் கொண்டு வந்ததைச் சிறைப்பிடிப்பது என்று சொல்லாமல் வேறெந்தப் பெயரிட்டு அழைக்க முடியும்.” என்று கேட்டாள்.

வந்தியத்தேவர் பக்கத்திலிருந்த கரிகாலனை நோக்கி னார். கரிகாலன், “தேவரே! அரசகுமாரி சொல்வது தவறு. யார் இஷ்ட விரோதமாகவும் எதுவும் செய்யப்பட வில்லை ” என்றான் பணிவான குரலில்.

“அப்படியா?” என்றார் வந்தியத்தேவர்.

“ஆமாம்! வேண்டுமானால் வேங்கி நாட்டு மன்னரையே கேட்டுப் பாருங்கள்” என்று கரிகாலன் சொன்னான்.

யாரும் கேட்கும் வரையில் காத்திராத இராஜராஜ நரேந்திரன், வந்தியத்தேவரை நோக்கி, “தேவரே! என் சகோதரி பிறந்த மண்ணை இதுவரை பிரியாதவள். அதைப் பிரிந்த ஆத்திரத்தில் சொன்ன வார்த்தைகளை நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம். என் பூரண சம்மதத்துடனேயே நான் இங்கு வந்திருக்கிறேன். வேண்டுமானால், வேங்கியிலேயே தங்கும்படி சகோதரிக்கு வேங்கி நாட்டு அவையிலேயே சொன்னேன். அவள் தான், என்னை விட்டுத் தனித்திருக்க இஷ்டமில்லாமல் வந்திருக்கிறாள். உண்மையில் நாங்கள் கரிகாலருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.” என்றான்.

தம்பியின் வார்த்தைகளுக்குப் பிறகு பேசுவதற்கு ஏதுமில்லாததால், அடுத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சிகளில் சிறிதும் கலந்து கொள்ளாமலே உட்கார்ந்து கொண்டிருந்தாள் நிரஞ்சனாதேவி. வரவேற்பு முடிந்தபிறகும், அவள் மனத்தே விவரிக்க இயலாத எண்ணங்கள் எழுந்து தாண்டவமாடியதால் உணர்ச்சிகளை எங்கோ பறக்க விட்டு மரப்பாவை போல் அன்று முழுவதும் நடமாடிக் கொண்டிருந்தாள். எல்லோருக்கும் நிம்மதியளிக்கும் இரவுகூட அவளுக்கு நிம்மதியளிக்காததால் தன் அறைப் பஞ்சணையில் மெள்ளப் புரண்டு கொண்டிருந்தாள். கரிகாலனை நினைத்து வெகுண்டாள். உணர்ச்சிகள் அப்படி நிறைந்து நின்றதால் வார்த்தைகள் அவள் உதடுகளிலிருந்து இரைந்தே உதிர்ந்தன. “அட பாவி! உன்னை ஏன் சந்தித்தேன் நான்” என்ற சொற்கள் அறைக்குள்ளே எதிரொலி செய்தன. அந்த ஒலியை வெட்டியது கலகலவென்ற சிரிப்பொலி. அந்த ஒலி வந்த திசையை நோக்கிய ராஜகுமாரி பஞ்சணையில் சட்டென்று எழுந்து உட்கார்ந்தாள். வாயிற்படியில் சிரித்துக்கொண்டிருந்த உருவத்தை நோக்கிய நிரஞ்சனாதேவியின் விழிகளில் வியப்பும் கோபமும் கலந்து தாண்டவமாடின. “யார் நீ?” என்று அதட்டிக் கேட்டாள் அரசகுமாரி.

அந்த அதட்டலை அந்த உருவம் சிறிதும் லட்சியம் செய்ததாகத் தெரியவில்லை. சிரித்துக்கொண்டே அவள் பஞ்சணையை நோக்கி நகரவும் தொடங்கியது அந்த உருவம்.

Previous articleMannan Magal Part 2 Ch 12 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here