Home Historical Novel Mannan Magal Part 2 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

78
0
Mannan Magal part 2 Ch 14 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 14 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 14 அவர் உன் காதலர்

Mannan Magal Part 2 Ch 14 | Mannan Magal | TamilNovel.in

வானவீதியில் மிதந்துகொண்டிருந்த ஏழாம் பிறைச் சந்திரன் தனது கிரணங்களைச் சாளரத்தின் வழியாக உள்ளே அனுப்பி, அரசகுமாரியின் அரைக்கோடியிலிருந்த பொன் அகல் விளக்கின் சுடரோடு உறவாட விட்டிருந்ததால், அந்த அறையில் தேவைக்குச் சற்று அதிகமான வெளிச்சமே இருந்தது. அதன் விளைவாக, தன் பஞ்சணையை நோக்கி நகர்ந்த உருவத்தை நன்றாக ஏறெடுத்துப் பார்த்து அளவெடுக்க முடிந்தது அரசகுமாரிக்கு. தன் அறை வாயிற்படியில் நின்று, தன்னையும் பார்த்து நகைத்தது ஒரு பெண் என்று அறிந்துகொண்ட மாத்திரத்திலேயே வியப்பெய்திய நிரஞ்சனாதேவி, அந்தப் பெண்ணின் அச்சமில்லாக் கண்களையும் திடமான நடையையும் அலட்சிய முகபாவத்தையும் கண்டதும் வியப்புடன் கோபமும் எழப்பெற்று, “யார் நீ?” என்ற கேள்வியையும் அதிகாரம் நன்றாகத் தொனித்த குரலில் வீசினாள்.

அறைக்குள் நுழைந்த பெண்ணும், அந்த அதிகாரத் தொனியைச் சிறிதும் லட்சியம் செய்யாதவளாய், மெதுவாக நடந்து பஞ்சணைக்கருகில் வந்து அதன் கால்களொன்றன் உச்சியைப் பிடித்துக்கொண்டு, நிரஞ்சனாதேவியின் அழகிய உடலின் மீது அச்சத்தைச் சிறிதும் தோற்றுவிக்காத தன் அஞ்சன விழிகளை நீண்ட நேரம் ஓடவிட்டாள். இப்படித் தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல், இரவில் வந்து தன் தனிமையைக் கலைத்ததுமன்றித் தன்னை அலசிப் பார்க்கும் அந்தப் பெண்ணைப் பதிலுக்குத் தானும் நன்றாகக் கவனித்துப் பார்க்கத் தொடங்கிய அரசகுமாரிக்கு, அவளுடைய அவயவங்களில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்த எழிலும் பலமும் முகத்திலிருந்த ஒரு கம்பீரமும் இணையற்ற ஆச்சரியத்தை விளைவிக்கவே, இப்பேர்ப்பட்ட ஒரு பெண் இந்தப் படைத்தளத்துக்கு எதற்காக வந்து சேர்ந்தாள்?’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.

ஆனால், வந்த பெண்ணோ, அரையன் ராஜராஜனின் படைபலத்தைப் பற்றியோ, அந்தப் படைகளின் நடுவில் தனித்திருப்பதைப் பற்றியோ, சிறிதும் அக்கறை கொண்ட வளாகத் தெரியவில்லை. அவளுடைய கூரிய கண்கள் மீண்டும் மீண்டும் அரசகுமாரியை வலம் வந்தன. கடைசியில் அவளிடமிருந்து பெருமூச்சொன்றும் கிளம்பியது. ‘புரிந்தது; காரணம் புரிந்தது’ என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள் அவள்.

வார்த்தைகளை மிக மெதுவாகத்தான் உச்சரித்தாள் அவள். ஆனால் அந்த அறையிலிருந்த நிசப்தத்தில், அந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட அக்கறையில், அந்தப் பெண்ணின் சொற்கள் மிகத் தெளிவாக விழுந்தது அரசகுமாரியின் செவிகளில். ‘இவள் யார்? எதற்காக இங்கு வந்தாள்? ஏன் சிரித்தாள்? என்ன புரிந்தது இவளுக்கு? ஒருவேளை பைத்தியமோ?’ என்றெல்லாம் சிந்தித்தாள் நிரஞ்சனாதேவி. அவள் உள்ளத்தே ஓடிய எண்ணங்களை அந்தப் பெண்ணும் புரிந்து கொண்டிருக்க வேண்டும். ஆகவே சொன்னாள் அவள், “எனக்குப் பிடித்திருப்பது ஒருவகைப் பைத்தியம்தான் அரசகுமாரி. ஆனால் அது உங்களுக்குத் தான் பிடித்திருக்கிறது” என்று.

வந்தப் பெண்ணுக்குப் பைத்தியமா அல்லவா என்ற சந்தேகம் அதுவரை அரசகுமாரிக்கும் இருந்திருக்குமா னால் அந்தச் சந்தேகத்தை அப்பெண்ணின் வார்த்தைகள் அடியோடு போக்கடித்துவிட்டதால், ‘இது நிச்சயமாகப் பைத்தியந்தான்’ என்று தீர்மானித்த நிரஞ்சனாதேவி பஞ்சணையை விட்டுச் சட்டென்று எழுந்திருக்க முயன்றாள். வந்தவள், அவ்வளவு சுலபமாக அரசகுமாரியைத் தப்புவிக்க விடுவதாக இல்லை. பலமான தன் வலது கரத்தால் அரசகுமாரியின் தோளைப் பிடித்து அழுத்தி மீண்டும் பஞ்சணையில் உட்கார வைத்து, “தேவியவர்கள் என்னைப் பைத்தியம் என்று தீர்மானம் செய்துவிட்டாற் போலத் தோன்றுகிறது. நீங்கள் நினைப்பதுபோல் நான் அறிவிழந்தவள் அல்ல. முழு அறிவுடன் இருக்கிறேன். நல்ல அறிவிலும் சித்தம் சலிப்பது பெண்களுக்கு இயற்கைதானே அரசகுமாரி? அந்தச் சித்தப் பிரமையைத்தான் சொன்னேன். நான் சொல்லும் இந்தப் பிரமை அறிவைக் குழப்புவதில்லை. கிடைக்கும் பலனுக்குத் தக்கபடி ஆனந் தத்தையோ துக்கத்தையோ அளிக்கிறது. பருவ காலத்தில் பெண்களுக்குப் பிடிக்கும் பைத்தியம் இத்தன்மையது” என்றாள்.

அரசகுமாரி என்ன செய்வது என்று விளங்காததால், சற்று நேரம் மௌனமாகவே கட்டிலில் உட்கார்ந்தாள். தன் தோளைத் தொட்டுப் பலவந்தமாக உட்கார வைக்கும் அந்தப் பெண்ணின் துணிவை வியந்ததுமன்றி, அந்தப் பெண்ணின் வார்த்தைகளில் உள்ளர்த்தமும் ஏராளமாகப் புதைந்து கிடப்பதைக் கண்ட அரசகுமாரியின் பவள இதழ்கள் கடைசியாகத் திறந்தன. திறந்ததன்றி, “யார் நீ! அதை முதலில் சொல்” என்ற கட்டளையும் பிறப்பித்தன.

“தேவியவர்களின் பணிப்பெண். அரையன் ராஜராஜன் புதல்வி. என்னைச் செங்கமலச் செல்வி என்று அழைப்பார்கள்” என்றாள் அந்தப் பெண்.

அடுத்த விநாடி நான்கு செங்கமலங்கள் சந்தித்தன. அரசகுமாரியின் பங்கஜ விழிகள் செல்வியின் கமலக் கண்களுடன் உறவாடின. அந்த இரண்டு பெண்களும் ஒருவர் மனத்தை இன்னொருவர் ஆராயும் நோக்கத்துடன் நீண்ட நேரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண் டிருந்தனர். ஒருவர் அழகை ஒருவர் வியந்தனர். அந்த வியப்பில் பொறாமையும் கலந்துதானிருந்தது. அந்தப் பொறாமை இருவரிடமிருந்தும் ஏக காலத்தில் பெரு மூச்சாக வெளிவந்தது. அந்தப் பெருமூச்சை யொட்டி ‘உனக்கு நான் குறைவில்லை’ என்று பழிப்பன போல் இருவர் மார்பகங்களும் ஒரு முறை எழுந்து தாழ்ந்தன.

அந்தப் பெருமூச்சைத் தொடர்ந்து, “உனக்கு ஏதோ பைத்தியம் என்று சொன்னாயே, அது என்ன செல்வி?” என்று கேட்டாள் அரசகுமாரி.

“எனக்கு மட்டும் பைத்தியம் என்று சொல்ல வில்லையே. இருவருக்கும் தான் பைத்தியம் என்று சொன்னேன்” என்று திருத்தினாள் அரையன் ராஜராஜன் மகள்.

“இருவருக்குமா? அதென்ன விசித்திரப் பைத்தியம்?” “விசித்திரம்தான் அது. காதல் பைத்தியம் விசித்திர மில்லையா?”

இந்த முறை சட்டென்று பஞ்சணையிலிருந்து எழுந்து விட்டாள் அரசகுமாரி. அவள் அழகிய கண்களில் ஆத்திரம் சொட்டியது. அதைக் கண்டு கலகலவென மீண்டும் நகைத்தாள் அரையன் ராஜராஜன் மகள்.
“எதைக் கண்டு நகைக்கிறாய்?” – அரசகுமாரியிட மிருந்து எழுந்தன இந்தச் சுடுசொற்கள்.

“உங்கள் ஆத்திரத்தைக் கண்டு!” – அலட்சியமாக வெளிவந்தது அரையன் ராஜராஜன் மகளின் பதில்.
“நான் காதலால் தவிக்கிறேனென்று யார் சொன்னது உனக்கு?”

“உங்கள் கண்கள்.”

“கண்களிலிருந்தே கண்டுபிடிப்பாயா உள்ளத்தை? அத்தனை வல்லவளா நீ?”

“இதற்கு வல்லமை தேவையில்லை. பார்வைதான் தேவை.”

“அரையன் ராஜராஜன் மகளுக்கு நல்ல ஆராய்ச்சிப் பார்வைதான்.”

“கோபித்துப் பயனில்லை அரசகுமாரி. உங்கள் கருத்தில் காதல் நிரம்பிக் கிடக்கிறது. அதை உங்கள் கண்கள் பறைசாற்றுகின்றன. ஓர் ஆண்பிள்ளைக்கு அது தெரியாதிருக்கலாம். ஆனால் பெண்ணுக்குத் தெரியா திருக்குமா? உங்கள் துடிப்பு ஆண்மக்களை ஏமாற்றலாம். ஆனால், அதே உள்ளத் துடிப்பு உள்ள ஒரு பெண்ணை ஏமாற்ற முடியாது. உங்களை இன்று வரவேற்பு மண்டபத்தில் கண்டபோதே, நீங்கள் பேசிய கோபச் சொற்களைக் கேட்ட போதே, உங்கள் பார்வை அவ்வப்பொழுது சென்ற திக்கை நோக்கும்போதே உண்மையைப் புரிந்து கொண்டேன் அரசகுமாரி.”

அரசகுமாரியின் கண்கள் தரையை நோக்கித் தாழ்ந்தன. காற்பெருவிரல் தரையைச் சற்று நேரம் கீறியது. சிறிது சிந்தனைக்குப் பிறகு பேசிய அரசகுமாரியின் குரலில், கோபமில்லை. குழைவு இருந்தது; ஆத்திரம் சொட்டவில்லை, அன்பு கனிந்து நின்றது. “எந்தத் திக்கில் என் பார்வை பாய்ந்தது செல்வி?” என்று கேட்டாள் விமலாதித்தன் மகள்.

நிரஞ்சனாதேவியின் மாறிய தோரணை, குழைந்த குரல், கனிந்த சொற்கள், செங்கமலச் செல்வியின் இதழ்களில் ஓர் இளநகையைத் தோன்றச் செய்தன. “கரிகாலர் இருந்த திக்கில் தான்” என்றாள் செல்வி.

செல்வியின் பொறாமை தோய்ந்த குரல் கூட மிக இனிமையாய் ஒலித்தது நிரஞ்சனாதேவியின் செவிகளுக்கு. அடி பேதையே! சற்றுமுன் அவன் மீது ஆத்திரப்பட்டாயே, இப்பொழுது எங்கு போயிற்று அந்த ஆத்திரம்?” என்று வானவீதியிலோடிய மதியும் அவளைப் பார்த்துச் சிரித்துவிட்டுக் குறுக்கே பாய்ந்த சின்னஞ்சிறு வெண்மேகத் திரைக்குள் சில விநாடிகள் பதுங்கிப் பிறகு எட்டிப் பார்த்தான். அரசகுமாரி பூவுலகத்தையே மறந்தாள். அவள் எதிரே கரிகாலன் உருவம் மெள்ள எழுந்தது. அந்த அறை முழுவதும் அவனே வியாபித்து விட்டது போல் தோன்றியது மன்னன் மகளுக்கு. அந்தக் குழந்தை முகம், அந்த விஷமப் புன்முறுவல் இரண்டையும் பார்த்துப் பார்த்து உள்ளமெங்கும் இன்ப வேதனைகள் அலைபாய நின்றாள் அரசகுமாரி.

அந்தப் பெண்ணுள்ளத்தை இன்னொரு பெண்ணுள்ளம் நன்றாகப் புரிந்துகொண்டதால், அதன் முகத்திலும் வேதனை பாய்ந்தது. இப்படி விரகமும் வேதனையும் இணைந்து விளையாடி இன்ப வேகத்தால் அவதிப்பட்ட அந்த இருவர் கரங்களும் பரஸ்பரம் ஆதரவைத் தேட முற்பட்டன. செங்கமலச் செல்வியின் கரங்களைத் தன் கரங்களுக்கிடையில் கெட்டியாகப் பிடித்துக்கொண்ட நிரஞ்சனாதேவி, அவளைத் தனக்காக இழுத்துப் பஞ்சணையில் தானும் உட்கார்ந்து தன் பக்கத்தில் அவளையும் உட்கார வைத்தாள்.

“அரசகுமாரி! இது முறையல்ல. நான் தங்கள் பணிப்பெண்” என்றாள் செல்வி.

“போடி பைத்தியமே! காதலில் கட்டுண்ட நமக்குள் ஏதடி பேதம்? அவர் காதல் உனக்குக் கிடைக்கலாம்; எனக்குக் கிடையாது. உன் வெற்றியும் எனக்கு மகிழ்ச்சி தான்” என்றாள் மன்னன் மகள்.

மீண்டுமொரு முறை பெருமூச்செறிந்த செங்கமலச் செல்வி, “தேவி! எனக்கு வெற்றி கிடையாது. வெற்றி தங்களுக்குத்தான்” என்றாள்.

“தவறு செல்வி! அவர் எனக்குத் தீங்கைத் தவிர வேறெதுவும் செய்ததில்லை..என்னை என் அரசை விட்டு வெளியேற்றினார். என் எதிரிக்கு உளவாளியானார்…” என்று மேலும் பேசப்போன அரசகுமாரியை இடைமறித்த செல்வி “தேவி! கரிகாலர் உங்களுக்கு ஒருகாலும் தீங்கு விளைவிக்க மாட்டார். உங்களுக்கெதிராக அவர் ஏதாவது செய்தாலும் அதை உங்கள் நன்மைக்காகவே செய்வார்” என்றாள்.

“அவரை அவ்வளவு நன்றாக அறிவாயோ?” என்று கேட்ட அரசகுமாரி குரலில் கூடச் சற்றுப் பொறாமை தொனித்தது.

“அறிவேன் அரசகுமாரி.”

“எப்படி அறிவாய்?”

“சந்தர்ப்பங்கள் அறியச் செய்தன.”

“எந்தச் சந்தர்ப்பங்கள்?”

“நானும் அவரும் தனித்திருந்த சந்தர்ப்பங்கள்.”

“தனித்திருந்தீர்களா?”

“பல முறைகள்.”

“ஓகோ!”

“ஆமாம் அரசகுமாரி! அவருக்கு வில் வித்தை நான் தான் கற்றுக் கொடுத்தேன். அந்தச் சமயங்களில் தனித்திருந்தோம்.”

“தனித்திருந்தீர்களா? வில் வித்தை கற்றுக் கொடுத் தாயா! இன்னும் என்ன கற்றுக் கொடுத்தாய்?” அரச குமாரியின் குரலில் கோபம் பரிபூரணமாகத் தாண்டவ மாடியதுமன்றி, உள்ளக் கொதிப்புக்கு அடையாளமாக அவள் உதடுகளும் துடித்தன.

பஞ்சணையில் வேங்கி நாட்டு அஞ்சுகத்துக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த செங்கமலச் செல்வி திரும்பி மன்னன் மகளை ஏற இறங்க நோக்கிவிட்டு, “தேவி! சந்தேகம் உங்கள் அறிவைக் கலக்குகிறது. ஆகையால் பேசத்தகாத வார்த்தைகளைப் பேசுகிறீர்கள். ஓர் அரசகுமாரி இப்படிப் பேசலாமா?” என்று வினவினாள்.

அரசகுமாரியாயிருந்தாலும் நான் பெண்தானே? மற்றப் பெண்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? அவர்களுக்குள்ள உணர்ச்சிகள் எனக்கிருக்காதா? உள்ளத் துடிப்புதான் இருக்காதா?” என்று அரசகுமாரி பதில் கேள்வி கேட்டாள்.

“உணர்ச்சிகள் இருக்கும், ஆனால், அறிவின் பலத்தைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். உள்ளத் துடிப்பு இருக்கும். உயர்ந்த நிலையை உத்தேசித்து அதைக் கட்டுப்படுத்த வேண்டும். நானும் பெண்தான். எனக்கும் உணர்ச்சிகள் இருக்கின்றன அரசகுமாரி. ஆனால் அவற்றை அலையவா விடுகிறேன்?”

“நீ பேசலாம் செல்வி. ஆனால், செயலில்…”

“செயல் என் கருத்துக்குட்பட்டது. அவரை நான் இழந்துவிட்டேன் என்பதை அறிந்ததும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விட்டேன். நான் பிறந்தது முதலே துரதிருஷ்டசாலி, அரசகுமாரி. இளவயதில் தாயை இழந்தேன். இந்த வயதில் காதலனை இழந்தேன். அவள் உயிர் நீக்க அவளைப் பறிகொடுத்தேன். இவரை உயிருடன் உன்னிடம் பறிகொடுத்துவிட்டேன். அதற்குக் கூட என் மனம் கலங்கவில்லை. ஆனால், உனக்காக எத்தனையோ ஆபத்துக்களை ஏற்ற அவரைச் சந்தேகிக்கிறாயே, அதைக் கண்டுதான் என் மனம் பதறுகிறது. அந்தச் சந்தேகத்தைப் போக்கவே இங்கு வந்தேன். அவர் உன் காதலர்தான்; வேறு யாருக்கும் அவர் சொந்தமல்ல, நம்பு அவரை; பூரணமாக நம்பு. உன் தம்பி அரசைப் பெறுவான். நீ ஒரு மகாவீரனை, தமிழ்நாட்டின் சிறந்த அறிவாளியைப் பெறுவாய்” என்று உணர்ச்சிப் பெருக்கால் சற்று இரைந்து பேசிய செங்கமலச் செல்வி, கட்டிலிலிருந்து எழுந்து அறையில் உலாவினாள். உணர்ச்சிப் பெருக்கால் வார்த்தைகளில் மரியாதையைக் கைவிட்டு அரசகுமாரியை ஏகவசனத்தில் பேசியதைக்கூட அவளால் உணர முடிய வில்லை.

கோபத்தாலும் சந்தேகத்தாலும் பொறாமையாலும் தெளிவை அடியோடு இழந்து கிடந்த அரசகுமாரியின் சித்தத்தில், செங்கமலச் செல்வி கூறிய உண்மை மொழிகள் இடம் பெற மறுத்தன. அந்த உண்மையைக் கூறிவிட்டுச் செங்கமலச் செல்வி அறையை விட்டுப் போய்விட்ட வெகு நேரத்திற்குப் பிறகும் அவற்றைப்பற்றிச் சிந்தித்தவாறே பஞ்சணையில் படுத்திருந்தாள் நிரஞ்சனாதேவி. எண்ணங்கள் பல எழுந்து அவள் புத்தியில் அலை மோதின. அவரா என் காதலர்! ஒருகாலும் இல்லை. ஒரு காதலன் தன் காதலிக்கு எதிராகச் சதி செய்வானா? அவள் நாட்டை விட்டு அவளை வெளியேற்றுவானா?’ அடுத்த சில தினங்களிலும் கரிகாலனைப் பற்றிய சந்தேகம் மட்டும் அவள் மனத்தை விட்டு அகலவில்லை. அந்த எண்ணத்தை உறுதி செய்யும் நிகழ்ச்சியொன்றும் அடுத்த ஒரு மாத காலத்திற்குள் ஏற்பட்டது. அந்த நிகழ்ச்சியை வேங்கி நாட்டுத் தூதுவன் வல்லவரையரிடம் கூறுகையில் சபையில் நிரஞ்சனாதேவியும் வீற்றிருந்தாள்.

அமைதியாகத் தேங்கி நிற்கும் குளத்தில் பெரும் பாறையைத் தூக்கியெறிந்தது போல் வார்த்தைகளைக் கொட்டினான் தூதுவன். “தேவர் பெருமானே! வேங்கி நாட்டுத் தலைநகரில் இன்று விஷ்ணுவர்த்தன விஜயாதித் தன் முடிசூடி விட்டான்!”

சபையில் பெரு மௌனம் நிலவியது. ஏக காலத்தில் பல கண்கள் கரிகாலன் மீது பாய்ந்தன. மௌனத்தை உடைத்த வந்தியத் தேவர் கேட்டார்: “கரிகாலா! கேட்டாயா செய்தியை!”

சபையே ஒரு கலங்கு கலங்கும்படியாகப் பதில் சொன்னான் கரிகாலன்: “இது எதிர்பார்த்ததுதானே?”

அரையன் ராஜராஜன் முகத்திலும் ஆத்திரக்குறி எழுந்தது. “இதற்குத்தானா உன்னை வேங்கி நாட்டுக்கு அனுப்பினேன்?” என்றார் சோழர் படைத்தலைவன்.

“எல்லாம் திட்டப்படிதான் நடக்கிறது தந்தையே” என்றான் கரிகாலன்.

அரசகுமாரியின் விழிகள் அவனைச் சுட்டெரித்து விடுவனபோல் பார்த்தன.

Previous articleMannan Magal Part 2 Ch 13 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here