Home Historical Novel Mannan Magal Part 2 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

99
0
Mannan Magal part 2 Ch 15 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 15 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 15 நீ ஒரு தெய்வப் பிறவி

Mannan Magal Part 2 Ch 15 | Mannan Magal | TamilNovel.in

வேங்கி நாட்டு அரியணையில் விஜாயதித்தன் அமர்ந்துவிட்டான் என்ற செய்தியைக் கேட்ட மாத்திரத்தில், எந்தச் சந்தர்ப்பத்திலும் நிதானத்தை இழக்காத அரையன் ராஜராஜனே நிதானத்தை இழந்துவிட்டதைக் கண்ட வல்லவரையருக்குக் கூடக் கரிகாலன் செய்த காரியம் சரிதானா என்பதில் சந்தேகம் உண்டாயிற்று. அத்துடன் விமலாதித்தன் மகளின் விழிகள் தீப்பொறிகளாக மாறியதையும் அவர் கண்டதும், இந்தக் கரிகாலனை வேங்கி நாட்டுக்கு ஏன் அனுப்பினோம்?” என்ற எண்ணங்கூட அவர் மனத்தில் எழுந்தது. போதாக்குறைக்கு அந்த மகா சபையில் கூடியிருந்த படைத்தலைவர்களெல்லோருமே கரிகாலனைக் கண்டித்து கூச்சலும் போடத் தொடங்கவே, வல்லவரையர் சிறிது நேரம் அந்தக் குழப்பத்தை அடக்கக்கூடத் துணிவில்லாதவராய், தமது ஆசனத்தில் அசைவற்று உட்கார்ந்துவிட்டார். ஆனால், உள்ளூரக் கோபம் எரிமலையாக எழுந்து வெடித்துக் கொண்டிருந்தாலும், ஓரளவு அதை அடக்கிக்கொண்ட அரையன் ராஜராஜன், அவையைச் சுற்றி ஒருமுறை தன் கூரிய கண்களைச் சுழலவிட்டு அந்தப் பார்வையின் சக்தியாலேயே படைத்தலைவர்களிடையே எழுந்த கூச்சலையும் குழப்பத்தையும் அடக்கிவிட்டு அவை நடுவே குற்றவாளி போல் நின்று கொண்டிருந்த கரிகாலன் மீது கடைசியாகத் தன் பார்வையை நிலைநிறுத்தி, “உன் குற்றம் மன்னிக்க முடியாதது என்பதைப் புரிந்து கொண்டாயா கரிகாலா?” என்று வினவினான்.

கரிகாலனும் அவையைச் சுற்றித் தன் பார்வையை ஒருமுறை ஓடவிட்டுப் பிறகு தன் வளர்ப்புத்தந்தையை நோக்கினான். அந்தப் பார்வையில் எந்தக் கல்மிஷமும் இல்லாதிருந்ததோடு, எல்லையில்லாத துணிவும் ஒருவித அலட்சியமும் நிரம்பிக் கிடந்ததைக் கண்ட அரையன் ராஜராஜன் மனத்தில், ‘இத்தகைய பார்வையை உடையவன் குற்றவாளியாக இருக்க முடியாது’ என்ற எண்ணம் ஏற்பட்டாலும், சந்தர்ப்ப சாட்சியங்கள் கரிகாலனுக்கு முற்றும் விரோதமாக இருக்கவே முதலில் கேட்ட கேள்வியை மறுபடியும் உக்கிரத்துடன் திருப்பினான், சோழர்களின் பிரதான படைத்தலைவன். “கரிகாலா, உன் குற்றம் மன்னிக்க முடியாதது என்பதைப் புரிந்து கொண்டாயா, இல்லையா?” என்று வினவினான்.

கரிகாலன் இதழ்களில் லேசாக இளநகை அரும்பியது, “தந்தையே! குற்றம் என்ன என்பதைப் புரிந்துகொண்டால் தானே, அது மன்னிக்கத் தகுந்ததா அல்லவா என்பதைப் புரிந்துகொள்ள முடியும்?” என்று பதில் கூறினான் கரிகாலன்.

அவன் பேச்சில் கண்ட துணிவு அவை முழுவதை யுமே ஆச்சரியத்தில் அமிழ்த்தினாலும் பிரும்ம மாராயரை மட்டும் ஆத்திரத்தில் அமிழ்த்தவே அவர் அரையன் ராஜராஜனை நோக்கி, “படைத்தலைவரே! இவனைப் பேச மட்டும் விடாதீர்கள். பேச விட்டால் எதையாவது சொல்லி இந்த அவையை ஏமாற்றிவிடுவான். இவன் பெரிய போக்கிரி” என்றார்.

பிரும்ம மாராயனின் ஆத்திரமும் பேச்சும் வல்லவரை யரின் உதடுகளில் கூட ஒரு புன்முறுவலைத் தோற்றுவித்தது. “பிரும்ம மாராயரே! இந்தச் சிறுவன் பேச்சினால் இந்தப் பேரவை ஏமாந்துவிடுமானால், இது அறிவிற்சிறந்த சபை யாகுமா? இத்தகைய ஒரு சபையை நம்பிக் கங்கைக் கரையை நோக்கிப் படையெடுக்கத்தான் முடியுமா? பொறுத்திருங்கள்” என்று அவரை அடக்கிவிட்டுக் கரிகாலனை நோக்கி, “கரிகாலா! நீ இளைஞன். இங்குள்ள படைத்தலைவர்கள் பல போர்களைக் கண்டவர்கள்; ராஜதந்திரத்தில் இணையற்றவர்கள். இவர்கள் உன் செய்கையை ஒப்புக் கொள்ளவில்லை. உன் தந்தையே உன்னைக் குற்றவாளியென நினைக்கிறார். இத்தனையையும் சிருஷ்டித்தது எது? வேங்கி நாட்டிலிருந்து ராஜராஜ நரேந்திரன் வெளியேற்றம்; விஜயாதித்தன் மகுடாபிஷேகம். இவை எல்லாம் நடந்தது உன்னாலல்லவா?” என்று கேட்டார்.

கரிகாலன் அவருக்கு ஒருமுறை தலைதாழ்த்தி வணங்கி விட்டுச் சொன்னான்: “தேவர் பெருமானே! நீங்கள் கூறுவது எதையும் நான் மறுக்கவில்லை. வேங்கி நாட்டு மன்னரையும் அரசகுமாரியையும் வேங்கி நாட்டைவிட்டு வெளியேற்றியவன் நான்தான். விஜயாதித்தன் முடிசூட இடம் அளித்தவனும் நான் தான். இவையெல்லாம் குற்றமென்றால், நான் குற்றம் புரிந்தவன்தான்.”

“இவையெல்லாம் குற்றமல்லவென்று கூறுகிறாயா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான் அரையன் ராஜராஜன், வல்லவரையருக்கும் கரிகாலனுக்கும் இடையே புகுந்து.

கரிகாலன் பதில் தெளிவாக இருந்தது. குரலும் திடமாக ஒலித்தது.

“ஆம் தந்தையே! இவை எதிலும் குற்றமில்லை. இந்த நிகழ்ச்சிகள் ஏற்படுமென்பது முன்பே நமக்குத் தெரிந்தது தான். இதை அரசகுமாரியும் முன்னமே உணர்ந்திருந்தார்கள். வேங்கி அரண்மனை வசந்த மண்டபத்தில் அவர்களைச் சந்தித்தபோது, அவர்களே இப்படியெல்லாம் குற்றம் சாட்டினார்கள்” என்றான் கரிகாலன்.

“அப்படியிருந்துமா பிடிவாதமாக அவர்களை அரசிழக்கச் செய்தாய்?” என்று பிரும்ம மாராயர் பெரும் குரலில் கேட்டார்.

“ஆம். அந்தக் குற்றச்சாட்டுகளையெல்லாம் லட்சியம் செய்யாமலே காரியத்தை முடித்தேன்” என்றான் கரிகாலன்.

“அவனே குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். கைது செய்யுங்கள் அவனை” என்று கூவினார் பிரும்ம மாராயர்.

கரிகாலன் அவரை ஏறெடுத்துப் பார்த்தான். “பிரும்ம மாராயரே! உமக்கு ராஜதந்திரம் என்பதைப் பற்றி ஏதாவது தெரியுமா?” என்று நிதானமாக ஒரு கேள்வியையும் கேலி நிரம்பி நின்ற குரலில் வீசினான்.

அவன் கேள்வி, குரலில் தொனித்த கேலி – இரண்டும் பிரும்ம மாராயருடைய நிதானத்தை அடியோடு போக்கடித்துவிடவே, அவர் ஆசனத்திலிருந்து எழுந்து தமது ராட்சச சரீரத்தைத் தூக்கிக்கொண்டு, “என்ன சொன்னாய்? எனக்கு ராஜதந்திரம் தெரியுமா என்றா கேட்கிறாய்?” என்று கூவிக்கொண்டே, கரிகாலனை அடித்து விடுபவர்போல அவனை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தார்.

“பிரும்ம மாராயரே! இந்த அவைக்குத் தலைவன் நான் என்பது நினைவிலிருக்கட்டும்” என்ற வல்லவரையரின் கண்டிப்பான வார்த்தைகள், பிரும்ம மாராயரை மீண்டும் ஆசனத்தில் இழுத்து உட்கார வைத்தன. மேற்கொண்டு கேள்விகளை வல்லவரையரே கேட்டார்.

“கரிகாலா! சோழப் பேரரசு கங்கை வரையில் நீடிக்கக் கூடிய பெரிய சகாப்தத்தில் நாம் ஜீவிக்கிறோம்” என்று வந்தியத்தேவர் தமது பேச்சைத் துவக்கினார்.

“ஆம்! தேவர் பெருமானே!” என்றான் கரிகாலன்.

“அந்த நிலையில் நாம் செய்யும் எந்தக் காரியமும் அந்தப் பேரரசின் விஸ்தரிப்புக்கு அநுகூலமாக இருக்க வேண்டும்.”

“ஆம்.”

“இடைஞ்சலான எந்தச் செய்கையும் குற்றமான செய்கைதான்.”

“சந்தேகமில்லை, தேவரே.”

“வேங்கி நாட்டில் விஜயாதித்தன் முடிசூடிவிட்டான்.”

“ஆம்.”

“ஜெயசிம்மன் பலம் அங்கு வேரூன்றியது போலத் தான்.”

“ஆமாம் தேவரே!”

“நமது வட இந்தியப் போருக்குக் குறுக்கே, நமது பலமான எதிரியொருவன் நிற்கிறான்.”

“இங்குதான் சிறிது தவறு இருக்கிறது தேவரே?”

“என்ன! தவறா!” தேவர் ஆச்சரியம் நிரம்பிய கண்களை கரிகாலன் மீது நாட்டினார்.

கரிகாலன் உள்ள நிலையைத் தெளிவாக்க முற்பட்டுத் தன் தந்தையையும் தேவரையும் ஒருமுறை பார்த்துவிட்டு அவையோரையும் நோக்கினான். பிறகு மிக மெதுவான குரலில் பேசினான்: “தேவர் பெருமானே! தந்தையே! அவையோரே! நான் சொல்வதைச் சற்றுச் செவி சாய்த்துக் கேளுங்கள். இப்பொழுது ஜெயசிம்ம சாளுக்கியன் சோழ நாட்டுக்கு விரோதியல்ல, நண்பன்” என்றான்.

“நண்பனா! நண்பனா! ஜெயசிம்மன் நண்பனா!” என்ற குரல்கள், அவையின் பல பக்கங்களிலிருந்தும் எழுந்தன. அரசகுமாரியின் இகழ்ச்சி ததும்பிய பார்வை யொன்றும் கரிகாலன் மீது நிலைத்தது.

“நண்பனா! என்ன கரிகாலா இது?” என்று வினவி னார் வல்லவரையர் வந்தியத்தேவர்.

கரிகாலன் மடியிலிருந்த ஓலையொன்றை எடுத்து வந்தியத்தேவரிடம் கொடுத்தான். அதைப் படிக்கப் படிக்க வந்தியத்தேவரின் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. படித்து முடித்ததும், ஓலையை அரையன் ராஜராஜனிடம் அவரே நீட்டினார். சோழர்களின் பிரதான படைத் தலைவனும் ஓலையைப் படித்ததும் அடியோடு பிரமித்துப் போனான். அவர்களிருவரும் அப்படி ஓலையைப் படித்து விட்டு ஆச்சரியத்திலாழ்ந்து விட்டதைக் கண்ட அவைத் தலைவர்கள், ஓலையிலிருந்த விஷயம் என்னவென்று அறியாதவர்களாய், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

ஓலையின் மர்மத்தைக் கரிகாலன் சொற்களே நீக்கின. “தேவர் பெருமானுக்கும் தந்தைக்கும் என் மேலுள்ள சந்தேகம் இன்னும் விலகவில்லையா?” என்று கேட்டான் கரிகாலன்.

“சரித்திரத்தில் இதுவரை யாரும் சாதிக்காத மாபெரும் காரியத்தை நீ சாதித்துவிட்டாய் கரிகாலா! இந்த மாதிரி ராஜதந்திரத்தை நான் என் ஆயுளில் கண்டதில்லை!” என்று வந்தியத்தேவர் வியப்பினால் மெய் மறந்து பேசினார்.

அதுவரை பொறுமையாயிருந்த பிரும்ம மாராயர் கரிகாலனுக்கு வந்த பெருமையைச் சகிக்க முடியாமல், ‘அப்படியென்ன பெரிய ராஜதந்திரத்தை இவன் சாதித்து விட்டான்? ஓலையில் என்ன கண்டிருக்கிறது?” என்று வினவினார்.

“இந்த ஓலை ஜெயசிம்ம சாளுக்கியனால் எழுதப்பட்டு அவன் ஒப்பந்தத்துடனும் முத்திரையுடனும், இருக்கிறது. சோழப்படைகள் வேங்கி நாட்டுக்குள் புகுந்து வடக்கே செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கிற தென்றும், இந்த ஓலையைக் காணும் எந்தச் சாளுக்கியப் படைத் தலைவனும் சோழப் படைகளுக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியதென்றும், இந்த ஓலையில் கண்டிருக்கிறது. இது ஜெயசிம்மன் ஆக்ஞாபத்திரம்!” என்று கூறினார் வந்தியத்தேவர்.

அவை அப்படியே ஸ்தம்பித்துவிட்டது. இது என்ன இந்திர ஜாலமா, மகேந்திர ஜாலமா என்று படைத்தலைவர்கள் பிரமிப்படைந்தனர். சோழர்களின் பரம விரோதியான ஜெயசிம்மன் திடீரெனப் பரம நண்பனாக மாறியது பேராச்சரியமாயிருந்தது அவர்களுக்கு. ஆனால் நிரஞ்சனா தேவி மட்டும் இதைப் பற்றி எள்ளளவும் ஆச்சரியப்பட வில்லை. தன் எண்ணத்தைத் தெளிவுடனேயே கூறத் தொடங்கிய அவள், “சோழநாட்டுப் படைத்தலைவர்களே! இது பெரும் சாதனையல்ல. சோழ நாட்டுக்குப் பெருமை யளிப்பதுமாகாது. என் தம்பியின் அரசை ஜெயசிம்மனுக்குத் தத்தம் செய்தீர்கள். ஜெயசிம்மன் அதற்குப் பதிலாக உங்கள் படைகளைத் தனது நாட்டின் மூலம் செல்ல அனுமதிக்கிறான். இது வீரர்கள் செய்யக்கூடிய செய்கையா? ஜெயசிம்மனை வெல்ல முடியாத சோழப் பேரரசர், மருமகன் அரசை மாற்றானுக்குத் தத்தம் செய்து, படைகள் செல்ல அனுமதி வேண்டினார் என்று உலகம் தூற்றாதா பேரரசை?” என்று சடசடவென்று வார்த்தைகளை உதிர்த்தாள்.

கரிகாலன் அவளுக்குப் பதில் சொன்னான். “பெரிய சாதனைகளை முன்னிட்டுச் சிறு நாடுகளை விட்டுக் கொடுப்பது சரித்திரத்திற்குப் புதிதல்ல. அர்த்த சாஸ்திரம் எழுதிய கௌடில்யனே முதலில் சந்திரகுப்தனைச் சொந்த நாட்டை விட்டுக் கிளப்பிக் கொண்டுபோய், பிறகு அந்த நாட்டிற்கே அவனை அதிபதியாக்கினான். நந்தர்கள் மந்திரி ராட்சஸனைக் கௌடில்யன் ராஜதந்திரம்தான் வென்றது. ஜெயசிம்மனுக்கு எதிராக நாம் கையாளுவது அத்தகைய ஒரு ராஜதந்திரம்தான். இது இந்தப் பேரவையில் பேசக்கூடிய விஷயமல்ல. வந்தியத் தேவரும் என் தந்தையும் மட்டும் தங்களுடனிருக்கும் பட்சத்தில் விஷயத்தை விளக்க என்னால் முடியும்.”

அன்றிரவில் அரையன் ராஜராஜன் பாசறையில் கரிகாலன். உள்ள நிலையை விவரித்தபோது, அரையன் ராஜராஜன் மட்டுமல்ல, தேவர் பெருமானும் அரசகுமாரியும்கூட ஆச்சரியத்தால் பிரமித்துப் போனார்கள். கரிகாலன் பேச்சைக் கேட்கக் கேட்க வந்தியத்தேவரின் வயோதிக விழிகளின் எதிரே சோழப் பேரரசின் பெரும் விஸ்தரிப்பு ஆச்சரியமாக எழுந்து கொண்டிருந்தது. அந்தக் கனவில் அவர் வார்த்தைகளையும் உதிர்த்தார். “அப்பா! ஆச்சரியம்! ஆச்சரியம்! சக்கரக் கோட்டம்! தூரத்தில் மூன்றிலொரு பாகம் தீர்ந்துவிட்டதே” என்று முணுமுணுத்தார். அதனால் ஏற்பட்ட ஆனந்தம் தாங்காமல், ஆசனத்திலிருந்து எழுந்து கரிகாலனைத்தம் இரு கைகளாலும் தழுவிக்கொண்டார். “கரிகாலா, நீ ஒரு தெய்வீகப் பிறவி! உனக்கு வேண்டியதைக் கேள் தருகிறேன்” என்றார்.

“கொடுப்பதாகச் சத்தியம் செய்வீர்களா? என்று வினவினான் கரிகாலன்.

“கண்டிப்பாய்ச் சத்தியம் செய்வேன். உன் கை எங்கே” என்று அவன் கையை எடுத்து, அதில் தம் கரத்தால் அடித்துப் பிரமாணம் செய்யப் போனார்.

“நில்லுங்கள்!”- உக்கிரமாக இடைபுகுந்தது அரையன் ராஜராஜன் குரல்.

Previous articleMannan Magal Part 2 Ch 14 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here