Home Historical Novel Mannan Magal Part 2 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

89
0
Mannan Magal part 2 Ch 16 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 16 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 16 சக்கரக் கோட்டம்

Mannan Magal Part 2 Ch 16 | Mannan Magal | TamilNovel.in

கரிகாலன் கைமீது சத்தியம் அடித்துக் கொடுக்க எழுந்த வந்தியத்தேவரின் கை, அரையன் ராஜராஜன் திடீரெனக் குறுக்கிட்டதால் பாதியிலேயே நின்று விட்டாலும், அவர் விழிகளில் மட்டும் பேராச்சரியம் படர்ந்தது. சோழ சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்கு எல்லையற்ற சேவை செய்திருக்கும் கரிகாலன் கோரிக்கையை நிராகரிப்பது எத்தனை நன்றி கெட்ட செய்கை என்று அவர் பண்பட்ட இதயத்திலே உறுத்தியதால், அவர் அரையன் ராஜராஜனை நோக்கி, “படைத்தலைவரே! நாட்டுக்கு நலம் புரிந்தவர் கேட்பதைத் தருவது சோழ மரபில் நாம் கண்ட பண்பல்லவா?” என்று வினவினார்.

வந்தியத்தேவரைத் திரும்பி நோக்கிய அரையன் ராஜராஜன் விழிகளில் உறுதி பரிபூரணமாகத் தெரிந்தது. “உண்மைதான் தேவரே, ஒரு நன்மையை உத்தேசித்து நாம் செய்யும் கைம்மாறு நாட்டுக்குப் பெரும் தீங்கைக் கொண்டு வருவதானால், அந்தப் பிரதி உபகாரத்தைச் செய்யாதிருப்பதே ராஜ தர்மம்” என்றான் அரையன் ராஜராஜன்.

“சோழர்களுக்கு இத்தனை சேவை புரிந்திருக்கும் கரிகாலன் நாட்டுக்குப் பாதகம் விளைவிக்கக்கூடிய பிரதி உபகாரத்தை எதிர்பார்ப்பானென்று நினைக்கிறீரா?” என்று வினவிய வந்தியத்தேவரின் குரலில் சிறிது கண்டனமும் கலந்திருந்தது.

அரையன் ராஜராஜன் வந்தியத்தேவருக்குப் பதில் ஏதும் கூறாமல், கரிகாலனை நோக்கி, “கரிகாலா! நாட்டுக்குப் பெரும் நன்மை புரிந்திருக்கிறாய். ஜெயசிம்ம சாளுக்கியனிடம் நீ செய்துகொண்ட ஒப்பந்தத்தால் நமது பெரும் படை எந்தத் தடையுமில்லாமல் சக்கரக் கோட்டம் வரை போக முடியும். நீ விளக்கியபடி இந்த ஒப்பந்தத்தை வேங்கியை அணைத்து நிற்கும் கலிங்க நாடோ அதற்கு அப்பாலிருக்கும் ஒட்டர தேசமோ ஒப்புக்கொள்ளாது. இப்படிக் கலிங்கன் ஒட்டரன் ஒரு பக்கமும், ஜெயசிம்மன் இன்னொரு பக்கமும் சாய்வதால், அம்மன்னர்களின் ஒற்றுமை உடைக்கப்பட்டு விட்டது. இவர்களைத் தனித்தனியே வெல்வது பரம சுலபம். பெரும் சேனைகள் சாதிக்க முடியாத மகத்தான காரியத்தை ராஜதந்திரத்தால் சாதித்துவிட்டாய்.” என்ற அரையன் ராஜராஜன் பேச்சை இடைபுகுந்து வெட்டிய வந்தியத் தேவர், “இதனால் நாம் கங்கைப் படையெடுப்பில் மூன்றிலொரு பங்கைப் போரில்லாமலே கடக்கிறோம்” என்றார்.

இதை ஆமோதிப்பதற்கு அறிகுறியாகத் தலையை அசைத்த அரையன் ராஜராஜன், “இத்தகைய மகத்தான பணியை உன் கோரிக்கையால் நாசம் செய்யாதே கரிகாலா?” என்றான் கடைசியாக.

“அப்படியானால் என் பிறப்பு என் ஆயுள் பூராவும் மர்மமாகவே இருக்கவேண்டியதுதானா?” என்று வினவிய கரிகாலன் குரலில், துயரம் பூரணமாகத் தொனித்தது.

“யார் கண்டார்கள் கரிகாலா! உனக்கு அந்த மர்மத்தை நானே விளக்கும் சமயம் வரலாம். உன் பிறப்பு வரலாற்றுடன் அரசாங்க ரகசியங்கள் பிணைந்து நிற்கின்றன. அந்தச் சிக்கல்களை விதிதானாக அவிழ்க்கலாம். உன் நல்ல மனசுக்கு அவிழ்க்கவும் செய்யும். அதுவரையில் பொறுத்திருக்க உன்னை வேண்டுகிறேன்” என்று கெஞ்சினான் அரையன் ராஜராஜன்.

கரிகாலனிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. சோகப் பெருமூச்சு ஒன்றே வெளிப்பட்டது. மேற்கொண்டு ஏதும் பேசாமல், தலைகுனிந்த வண்ணம் பாசறையை விட்டு வெளியேறினான் கரிகாலன். அவன் போவதை உற்றுக்கவனித்துக் கொண்டிருந்த வந்தியத்தேவர் மனம் பாகாய் உருகிக் கொண்டிருந்தது. சற்று முன்பாக அரையன் ராஜராஜனைக் கூட லட்சியம் செய்யாமல், திடமாகப் போர் நிலவரத்தை எடுத்துக் கூறிய அந்த வீரன் வெளியே சென்றபோது, அவன் எடுத்து வைத்த ஒவ்வோர் அடியிலும் வருத்தம் தொனித்ததைக் கண்ட வந்தியத் தேவர், அரையன் ராஜராஜனை நோக்கினார். அரையன் ராஜராஜன் அவரை அலட்சியமாகப் பார்த்துவிட்டு, “தேவரே, உம்மிடம்கூட நான் கரிகாலனைப் பற்றிய மர்மத்தைச் சொல்ல முடியாது. மன்னிக்க வேண்டும்” என்று சொல்லிவிட்டுப் பாசறையை விட்டு வெளியே சென்றான்.

வந்தியத்தேவர், தம்முடன் தனித்திருந்த அரச குமாரியைப் பார்த்தார். “நிரஞ்சனாதேவி, இது வேடிக் கையாயில்லையா?” என்றும் வினவினார்.

அரசகுமாரியின் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்ததால், அவள் உடனே பதில் சொல்லவில்லை. கரிகாலன் மீது எத்தனையோ கோபமிருந்தாலும், அவன் துயரம் அவள் இதயத்தைப் பல வேல்களைக் கொண்டு தாக்கிக் கொண்டிருந்ததால், அவள் நீண்ட நேரம் மௌனமாக இருந்துவிட்டுப் பிறகு சொன்னாள்: “தேவரே! நான் அவரைச் சந்தித்தது முதல் நடந்துள்ள வேடிக்கைகள் பல. சந்தித்த முறையே ஒரு வேடிக்கை. வேங்கி வீரர்கள் துரத்த, என்னிடம் அடைக்கலம் புகுந்தார். பிறகு என் தம்பிக்கு உதவுவதாகச் சொல்லி ஜெயசிம்மனுடன் சேர்ந்துகொண்டார். இப்பொழுது எங்கள் நாட்டையே ஜெயசிம்மனிடம் ஒப்படைத்து விட்டார். இதெல்லாம் வேடிக்கைதானே தேவரே?”

அவள் கரிகாலனை வெறுக்கிறாளா விரும்புகிறாளா என்பதைத் தேவரால் புரிந்து கொள்ள முடியாததால், “அரசகுமாரி! கரிகாலன் உங்களுக்கு ஒருநாளும் தீங்கு செய்யமாட்டான். ஏதோ பெரிய நல்ல முடிவை உத்தேசித்தே இந்த வேங்கி நாட்டைத் தற்காலிகமாக எதிரியிடம் ஒப்படைத்திருக்கிறான். நான் கிழவன் தான் அரசகுமாரி. இருந்தாலும் மனித இதயங்களை நன்கு அறிவேன். கரிகாலன் உங்களைப் பார்க்கும் பார்வைக்கு என் மனம் தரும் விளக்கம் சரியானால், உங்களுக்காக அவன் தன் உயிரையும் தியாகம் செய்வான். பொறுத்திருங்கள் அரசகுமாரி. காலம் உங்களுக்காக சந்துஷ்டியான முடிவைத் தரும்” என்று சமாதானம் செய்தார் வந்தியத்தேவர்.

அத்துடன் அவ்விருவரும்கூடப் பாசறையை விட்டு அகன்றார்கள். அங்கிருந்து அகன்ற அரசகுமாரி, நேராக அறைக்குச் செல்லாமல் சைனியங்கள் தங்கியிருந்த இடத்தை நோக்கிக் கால்நடையாகச் சென்றாள். அவள் உள்ளத்தில் எண்ணற்ற எண்ண அலைகள் பேரிரைச்சலுடன் தாக்கிக் கொண்டிருந்ததால், அவள் ஏதோ கனவில் நடப்பவள் போல் நடந்து சென்றாளாயினும், அடிக்கடி படைத்தளத்தின் எங்கோ ஒரு பகுதியிலிருந்து எழுந்த கூச்சல்களை அவள் காதுகள் கேட்கத் தவற வில்லை. தளமடித்துத் தங்கிய காலத்திலும், அரையன் ராஜராஜன் தன் படைகளை எத்தனை அருமையாக அணி வகுத்திருந்தான் என்பதைக் கண்ட அவள், தன் சுய எண்ணங்களையும், துயரங்களையும் ஓரளவு மறந்து, ‘வேங்கியிலும் இந்தமாதிரி அணிவகுப்பு என்றாவது நடைபெறுமா? என் தம்பி மன்னனாக முடிசூடி வீரனாக வாழ்வானா’ என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள்.

அரையன் ராஜராஜன் பாசறை மண்டபத்திலிருந்து கவனித்தால், நான்கு அரைச்சக்கரங்களாக சைனியத்தைச் சோழர் படைத்தலைவர் நிறுத்தியிருப்பது தெரியும். தளத்தின் கோடி அரைச்சக்கரம் யானைப்படை, அதற்கு அரைவட்டம் குதிரைப்படை. இந்த அர்த்த சந்திர வியூகத்தை அரசகுமாரி பார்க்கப் பார்க்க, பெரிய வீரர்கள் வம்சத்தில் பிறந்த அவள் உள்ளத்திலும், வீர அக்கினி கொழுந்துவிட்டு நின்றது. ‘இந்தப் படைகளை அரையன் ராஜராஜன் எப்படி நடத்திச் செல்வான்? அதுவும் கங்கைக் கரையில்?’ என்று பிரமித்தாள் அவள். உண்மை யாகக் கங்கைப் பயணம் வந்தபோது, அவள் பிரமிப்புப் பன்மடங்கு அதிகமாயிற்று.

விக்கிரமச் சோழிய வரையனான அரையன் ராஜ ராஜன் பெரும் பிரகஸ்திகளை உடைய இராஜேந்திர சோழதேவரின் ஆக்ஞைப்படி, மேலைச் சாளுக்கிய நாட்டின் எல்லையிலிருந்து, சுக்கிலபட்ச சப்தமியன்று கங்கைப் படையெடுப்பைத் துவக்கினான். சோழப் பேரரசின் இணையற்ற படைபலத்துக்கும் ஆற்றலுக்கும் அத்தாட்சியாக விளங்கிய அந்த மாபெரும் படை பிரும்மாண்டமாக அணிவகுத்து நின்றது. படையின் முன்னணியில் அரையன் ராஜராஜன் பூரண பொற்கவசம் அணிந்து அந்தப் பொற்கவசம் காலைச் சூரியனில் பளபளக்கப் பெரும் வெள்ளைப் புரவிமீது வீற்றிருந்தான். அவன் வலப்பக்கத்தில் ராட்சஸன் போலிருந்த பிரும்ம மாராயன் பெரும் இரும்புக் கவசத்துடனும், இடது பக்கத்தில் ராணுவ உடையில் செங்கமலச் செல்வியும் குதிரைகளில் ஆரோகணித்துப் புறப்படத் தயாராயிருந்தனர். செங்கமலச் செல்விக்கு அருகே கரிகாலன் காணப்பட்டான். மற்ற பாண்டிய, சோழ நாட்டுப் படைத்தலை வர்கள் ஏராளமாகப் படைத் தலைவனை அடுத்துப் புறப்படச் சித்தமாயிருந்தனர்.

துந்துபிகள் முழங்கப்பட்டன. தாரைகள் சப்தித்தன. சங்குகள் ஒலித்தன. நிரஞ்சனாதேவி அரையன் ராஜராஜன் நெற்றிக்குத் திலகமிட்டு, “சோழர் படைத்தலைவரே! சென்று வெற்றி வாகை சூடித் திரும்புங்கள்” என்றாள். “நன்றி அரசகுமாரி! ஆனால் இந்தப் பயணத்தின் முன்பாகத் தங்களை ஒன்று கேட்கலாமா?” என்று வினவினான் சோழர் படைத்தலைவன்.

“கேளுங்கள்.”

“செய்வீர்களா?”

கணடிப்பாகச் செய்வேன்.”

“இந்தப் படையெடுப்பு சாத்தியமானதற்குக் காரணமான என் மகன் கரிகாலனுக்கும் உங்கள் கையால் திலகமிட வேண்டும்” என்று, குனிந்து மெல்லச் சொன்னான் சோழர் படைத்தலைவன்.

நிரஞ்சனாதேவி மௌனம் சாதித்தாள். அரையன் ராஜராஜன் மீண்டும் வேண்டினான். “அரசகுமாரி! போருக்குச் செல்பவர்களில் யார் திரும்புவோம், யார் திரும்பமாட்டோம் என்று சொல்ல முடியாது. ரணகளம் செல்லும் வீரனுக்குப் பெண்கள் அளிக்கக்கூடிய ஒரே உதவியை மறுக்காதீர்கள்” என்றான் அரையன் ராஜராஜன்.

நிரஞ்சனாதேவி மெள்ளக் கரிகாலனை நோக்கி நடந்து, அவன் புரவியை அணுகி, கையிலிருந்த தங்கச் சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்தாள். அவன் புரவியிலிருந்த படியே குனிந்தான். திலகமிட்ட அவள் விரல்கள் நடுங்கின. திலகத்தை அவன் நெற்றியில் தீட்டிவிட்டுத் தலைகுனிந்த படியே வந்தியத்தேவரின் ரதமிருந்த இடத்துக்குச் சென்றாள். அரையன் ராஜராஜன் கையை உயர்த்தினான். படை பெரும் கடல் போல நகர்ந்தது. கரிகாலனை நோக்கிக் கொண்டிருந்த அரசகுமாரியின் விழிகளில் நீர் தேங்கி நின்று, ரதத்தின் தட்டிலும் விழுந்தது.

வந்தியத்தேவர் அவளை ஆசுவாசப்படுத்த முற்பட்டு, “தேவி! கலங்காதீர்கள்! கரிகாலன் பெரும் வெற்றி வாகையுடன் திரும்புவான். அவனிடம் உபதலைவனாகச் செல்லும் உங்கள் தம்பியும் மாபெரும் வீரனாகத் திரும்புவான். அதுவரையில் காஞ்சி மாகரில் நீங்கள் இராஜேந்திர சோழதேவரின் பராமரிப்பில் இருக்கலாம்” என்றான்.

அரசகுமாரி போகும் படைகளையே பார்த்துக் கொண்டு நின்றாள். எங்கும் தூள் கிளப்பப் படை நகர்ந்தது. தூரம் செல்லச் செல்ல வேகமாகவே நகர்ந்தது. அன்றிலிருந்து இருபதாவது நாள் இந்திராவதி நதிக் கரையில் ராஜபுரத்துக்கு ஒரு காத தூரத்திலிருந்த சக்கரக் கோட்டம் என்ற சித்திரகூடத்துக்கு எதிரில் தங்கியது.
சித்திரகூடத்தின் அரண்களையும் அமைப்பையும் பார்த்த அரையன் ராஜராஜன், இந்தக் கோட்டையை எப்படிப் பிடிக்கப் போகிறோம் என்று அஞ்சினான். அவன் அச்சம் சரியென்பதைக் காலம் நிரூபித்தது. இரண்டு மாத காலம் முற்றுகையிட்டும் சக்கரக் கோட்டம் சரணடையவில்லை. எதற்கும் குழம்பாத கரிகாலன் மூளை கூட, ‘இந்தச் சக்கரக் கோட்டம் எப்படி உணவில்லாமல் இரண்டு மாத காலமாகச் சமாளிக்கிறது?” என்ற கேள்வியால் குழம்பியது.

கேள்விக்குப் பதில் மிகவும் எதிர்பாராத விதமாகக் கிடைத்தது கரிகாலனுக்கு.

Previous articleMannan Magal Part 2 Ch 15 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here