Home Historical Novel Mannan Magal Part 2 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

80
0
Mannan Magal part 2 Ch 17 Mannan Magal Sandilyan, Mannan Magal Online Free, Mannan Magal PDF, Download Mannan Magal novel, Mannan Magal book, Mannan Magal free, Mannan Magal,Mannan Magal story in tamil,Mannan Magal story,Mannan Magal novel in tamil,Mannan Magal novel,Mannan Magal book,Mannan Magal book review,மன்னன் மகள்,மன்னன் மகள் கதை,Mannan Magal tamil novel,tamil novel,full story,book review,tamil book review,Sandilyan,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal ,Mannan Magal full story,Mannan Magal novel full story,Mannan Magal audiobook,Mannan Magal audio book,Mannan Magal full audiobook,Mannan Magal full audio book,
Mannan Magal Part 2 Ch 17 | Mannan Magal | TamilNovel.in

Mannan Magal Part 2 Ch 17 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

மன்னன் மகள் இரண்டாம் பாகம் – சாண்டில்யன்

அத்தியாயம் – 17 காட்டுக்குள்ளே காலடிச் சத்தம்

Mannan Magal Part 2 Ch 17 | Mannan Magal | TamilNovel.in

மாசுணி தேசத்தின் முக்கியக் கோட்டைகளில் ஒன்றான சக்கரக் கோட்டத்தைத் தன் படைகளைக் கொண்டு சூழ்ந்தபோது, அந்தக் கோட்டை நீண்டநாள் தன்னை எதிர்த்து நிற்க முடியும் என்று அரையன் ராஜராஜன் கனவிலும் கருதவில்லையாகையால், முற்றுகை இரண்டு மாத காலத்துக்கும் மேலாக நீடித்தது பெரும் மனக்கவலையை அளித்தது அவனுக்கு. நீண்ட தூரம் பயணம் செய்து நாலைந்து அரசுகளுடன் போரிட வேண்டிய படைகளுக்கு ஓரளவு ஓய்வு ஆங்காங்கு அவசியமென்றாலும், அதிகப்படியான ஓய்வை அளித்தால் படைகளின் சுறுசுறுப்புக் குறைந்துபோகு மென்பதை அநுபவத்தில் கண்ட அரையன் ராஜராஜனுக்கு, சக்கரக் கோட்டத்தின் முற்றுகை நீடிக்க நீடிக்க மனவேதனையும் அதிகமாகிக் கொண்டே வந்தது.

சக்கரக் கோட்டத்தைப் படைகள் அணுகிய முதல் நாளன்று, அதன் அமைப்பையும் கோட்டையின் வலுவையும் கண்ட சோழர் படைத்தலைவன் அதைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்தானானாலும், தன் படைபலத்தையும் கோட்டையிலிருக்கக் கூடிய பாதுகாப்பையும் எடை போட்டுப் பார்த்தபின், பலமான அந்தக் கோட்டையை உடைப்பதும் தன் படைகளுக்கு எளிதே என்று எண்ணினான். மாசுணி நாகர்களின் அந்தக் கோட்டையின் மூன்று வாயில்களையும் தனது ஆயிரம் யானைகளையும் கொண்டு தவிடு பொடியாக்கிவிட முடியுமென்றும், பிறகு காலாட்படையும் குதிரைப் படையும் உள்ளே புகுந்தால் ஊரைக் கண் இமைக்கும் நேரத்தில் கைவசப்படுத்திவிடலா மென்றும் நினைத்தான் சோழப் படைத்தலைவன். இந்த யோசனையை அவன் தனது படைத்தலைவர்களிடம் முதல்நாள் வெளியிட்டபோது, கரிகாலன், அரையன் ராஜராஜனை எதிர்த்துப் பேசினான்.

படைகள் கோட்டையை வளைத்துத் தாங்கிய முதல் நாளிரவு தன் படைத்தலைவர்களை மந்திராலோசனைக்கு அழைத்த அரையன் ராஜராஜன் தன் திட்டத்தை அவர்களுக்கு விளக்கிச் சொன்னான்.

சற்று எட்ட எரிந்துகொண்டிருந்த பந்தத்தின் திக்கில் கைநீட்டி எதிரேயிருந்த கோட்டையைச் சுட்டிக் காட்டிய சோழர்களின் பிரதான படைத்தலைவன், “பிரும்ம மாராயரே! அதோ அந்தக் கோட்டையின் அமைப்பு. பலமானதுதான். ஆனால், அதில் சில பலவீனங்களும் இருக்கின்றன. அதோ பாருங்கள், கோட்டையின் முகப்பில் மூன்று பெரிய வாயில்கள் அர்த்த சந்திர வடிவத்தில் காணப்படுகின்றன. அந்த வாயிலின் கதவுகளை நமது யானைப் படைகள் உடைக்க முடியுமானால், பிறகு நமது படைகள் மிகச் சுலபமாக உள்ளே நுழையலாம். தவிர இந்திராவதி நதி இந்தக் கோட்டையை இணைந்து ஓடுவதும் நமக்கு அநுகூலம். கோட்டைக்குப் பின்னிருக்கும் நதி ஆழமானது. ஆகவே எதிரியின் படைகள் வெளியே வருவதானால் முன் வாயில் வழியாகத்தான் வர வேண்டும். வந்தால் நமது வாயிலில் நுழைந்துதானாக வேண்டும்” என்றான்.

பிரும்ம மாராயரும் இதர தளபதிகளும் கோட்டையை உற்றுக் கவனித்தார்கள். கடைசியில் அரையன் ராஜராஜனைப் பார்த்த பிரும்ம மாராயர், இதைவிடச் சிறந்த மார்க்கம் இருக்க முடியாது. நீண்ட மரங்களை யானைகளின் துதிக்கைகளில் கொடுத்துக் கதவுகளை நொறுக்கி விடலாம். பிறகு தலைவர் அனுமதி கொடுத்தால் நான் என் படைப் பிரிவுகளுடன் நகருக்குள் நுழைந்து விடுவேன்” என்றார்.

இதரப் படைத்தலைவர்களும் அரையன் ராஜராஜன் யோசனையை அங்கீகரித்தார்கள். கோட்டைக்கெதிரே சமவெளியில் அமர்ந்திருந்த அந்தப் படைத்தலைவர் களிடமிருந்து சற்று விலகி நின்று கோட்டையை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த கரிகாலனைப் பார்த்த செங்கமலச் செல்வி, “அப்பா! அவர் ஏதும் சொல்லவில்லையே!” என்று வினவி, கரிகாலன் இருந்த திசையில் கண்களை ஓட்டினாள்.

இதைக் கேட்ட பிரும்ம மாராயர், வயிறு குலுங்கப் பெரிதாக நகைத்து, “கரிகாலனா! அவன் என்ன சொல்ல முடியும் செல்வி? அநேகப் போர்களில் வெற்றி கண்ட அரையன் ராஜராஜன் திட்டத்துக்குக் குறை சொல்லக் கூடிய திறன் உடையவன் சோழ மண்டலத்தில் எவனிருக்கிறான்?” என்று வினவினார் கேலியாக.

அவருடைய ராட்சதச் சிரிப்பினால், கோட்டையிலிருந்து கண்களை அகற்றிப் பக்கத்திலிருந்த படைத்தலை வர்களை நோக்கித் திரும்பிய கரிகாலன், “இந்தக் கோட்டைக் கதவுகளை உடைத்து உட்புகுவது நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு எளிதல்ல பிரும்ம மாராயரே” என்றான்.

பிரும்ம மாராயர் அடுத்த விநாடி எரிமலை போல் வெடித்தார். “ஏன் உபதளபதியாரே! ஏன் உட்புக முடியாது? கதவுகளை உடைக்க நமது யானைகளுக்கு வலுவில்லையா? அவற்றைத் தொடர்ந்து உட்புக நமது படைகளுக்குத்தான் பலமில்லையா?” என்று கோடையிடி போன்ற குரலில் கேள்விகளை மடமடவென்று வீசினார்.

அவர் சொற்களிலிருந்த கோபத்தைக் கரிகாலன் கவனித்ததாகவே தெரியவில்லை. நிதானமாக, அரையன் ராஜராஜனையும் மற்றப் படைத்தலைவர்களையும் பார்த்தே சொன்னான், “படைத்தலைவர்களே! கதவுகளை மாத்திரம் பார்க்காதீர்கள். கதவுகளுக்கு மேலேயுள்ள கோட்டைச் சுவர்க் கட்டடங்களில் எத்தனை பெரிய துவாரங்கள் இருக்கின்றன, கவனியுங்கள்” என்று.

படைத்தலைவர்கள் கண்கள் மீண்டும் கோட்டைகளை ஆராய்ந்தன. அரையன் ராஜராஜனும் அந்தப் பெரும் துவாரங்களை ஆராய்ந்தான். “துவாரங்கள் இருக்கின்றன கரிகாலா! அவற்றால் கோட்டைக்குப் பலவீனம்தானே?” என்று வினவினான் அரையன் ராஜராஜன் இறுதியில்.

“ஆம் தந்தையே! பலவீனம்தான். ஆனால், அந்தப் பலவீனத்தை எதற்காக அந்தக் கோட்டைமீது அமைத்திருக் கிறான் சிற்பி?” என்று வினவினான் கரிகாலன்.

“தூரத்திலிருந்து வரும் படைகளைக் கண்காணிப் பதற்காக இருக்கலாம்” என்று அரையன் ராஜராஜன் பதில் சொன்னான்.

“அதற்கும் இருக்கலாம்; அப்படிப் படைகள் வந்து கோட்டையைச் சூழ்ந்து கொள்ளுமானால், படைகளைக் கோட்டைகளை அணுகவிடாமல் அம்புமாரி பொழியவும் அந்தப் பெரும் துவாரங்கள் உபயோகப்படலாம். தவிர இந்தக் கோட்டையும் சாளுக்கியர்கள் கோட்டைகளைப் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கிறது. கோட்டைச் சுவரின் அகலம் நான்கு அடிகளுக்குக் குறைவில்லை. இந்த ஒவ்வொரு துவாரத்தையும் ஒட்டிக் கோட்டைச் சுவரின் மேல்பாகம் பூராவும் வில்லாளிகள் தங்கலாம்…”

கரிகாலன் இதற்கு மேல் பேசாமல் மீண்டும் கோட்டைச் சுவரைக் கவனித்தான். அவன் மேலே பேசாவிட்டாலும் கரிகாலன் மனத்திலோடிய எண்ணங்களை நொடிப்பொழுதில் புரிந்து கொண்ட அரையன் ராஜராஜனுக்கு அந்தக் கோட்டையைத் தாக்குவதோ பிடிப்பதோ தான் எண்ணியது போல் அத்தனை சுலபமல்லவென்பது மட்டும் திட்டவட்டமாகத் தெரிந்தது. ஆகவே, கரிகாலன் கிளப்பிய ஆட்சேபணையை அவனே பூர்த்தி செய்து, இதர படைத்தலைவர்களுக்கு நிலைமையை விளக்கினான்.

“கரிகாலன் சொல்வது சரிதான் பிரும்ம மாராயரே!” என்று முணுமுணுத்தன அரையன் ராஜராஜன் உதடுகள்.

“என்ன சொல்கிறான் கரிகாலன்? எதைச் சரியென் கிறீர்கள்?” என்று சீறினார் பிரும்ம மாராயர்.

பிரும்ம மாராயரே! நீரும் போரில் நெடுநாள் பழக்கமுள்ளவர். நானும் எத்தனையோ போர்களைக் கண்டிருக்கிறேன். இருந்தும் அநுபவமற்ற இந்தச் சிறுவனின் கண்களில் பட்டது நம்மிருவர் கண்களிலும் படவில்லை, பார்த்தீர்களா?” என்றான் அரையன் ராஜராஜன்.

“என்ன கண்டுவிட்டான் இவன்?” என்றார் பிரும்ம மாராயர் விஷயம் லவலேசமும் புரியாமல், ஆனால் கோபம் குரலில் கொழுந்துவிட்டெரிய.

“அதோ அந்தக் கோட்டைக்குள் மேலுள்ள சுவரில் தெரியும் பெரிய துவாரங்கள்…”

“ஆம் இருக்கின்றன.”

“அவற்றுக்குப் பின்னால் வீரர்கள் இருக்க முடியும்.”

“இருக்கட்டும்.”

“வேல் வீரர்களும் இருக்கலாம்.”

“இருக்கட்டுமே!”

“யானைகள் கதவைத் தாக்கப் புறப்படுமானால், அந்தத் துவாரங்களிலிருந்து வாளிகள் யானைகளை நோக்கிப் பறக்கும். ஈட்டிகளும் பறந்து வரும்!”

இதைக் கேட்ட பிரும்ம மாராயருக்கும் மெள்ள மெள்ள விஷயம் புரியலாயிற்று. அரையன் ராஜராஜனின் திட்டம் அந்தத் துவாரங்களினால் எப்படித் தவிடுபொடி யாகிவிட்டதென்பதை உணர்ந்தார். வேல்களும் அம்புகளும் சரியாகக் குறி பார்த்து யானைகளைப் பார்த்து எய்யப்படுமானால், யானைகள் மிரளலாம். மிரண்டு அலங்கோலமாக ஓடினால் அவற்றுக்குச் சேதம் ஏற்படும்” என்று தமக்குள்ளேயே சொல்லிக்கொண்ட பிரும்ம மாராயர், அரையன் ராஜராஜனைப் பார்த்து விழித்தார்.

பதிலுக்கு அரையன் ராஜராஜன் புன்முறுவல் காட்டி, ‘பார்த்தீரா பிரும்ம மாராயரே! போரில் அநுபவமற்ற இந்தச் சிறுவனின் கண்களில் படுவது நமது கண்களில் படவில்லை” என்று மீண்டும் சுட்டிக் காட்டினார்.

அப்பொழுதும் வீம்பை விடாத பிரும்ம மாராயர், “சிறு துரும்பும் பல் குத்த உதவும்” என்று அலட்சியமாகவே பேசினார் கரிகாலனைப் பற்றி. அந்த அலட்சியத்தைக் கரிகாலன் கவனித்தானானாலும், கவனிக்காதது போலவே உள்ள ஆபத்தை மேலும் விளக்க முற்பட்டு, “தந்தையே, எதிரிகள் கோட்டையிலிருந்து அம்புகள் எய்யும் விஷயத்தில் நாம் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இது நாகர்கள் நாடு. நாக பூஜை செய்பவர்கள். இவர்களிடம் நாகப்பாம்புகள் கட்டுப்பட்டிருப்பதாகச் சரித்திரம் கூறுகிறது. இவர்களது அம்புகளிலும், ஈட்டிகளிலும் நாகப் பாம்புகளின் கடும் விஷம் தோய்க்கப் பட்டிருக்குமென்றும் கேள்வி. அந்த அம்புகள் யானைகளின் மீதோ அல்லது நமது பிரும்ம மாராயர் மீதோ பாய்ந்தால் நிலைமை என்னவென்பதைச் சொல்லத் தேவையில்லை. பிரும்ம மாராயர் என்ன செய்வாரென்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் யானைகளின் மீது விஷம் தீட்டப்பட்ட வாளிகள் பாய்ந்தால் யானைகள் அலறித் திரும்பி, நமது படைகளை நோக்கி ஓடிவரும்.” என்று பேச்சை முடிக்காமலே விட்டு, பிரும்ம மாராயர் மீது ஏளனம் கலந்த இளநகை யொன்றையும் வீசினான்.

ஆனால் இத்தனையும் கேட்டுக்கொண்டிருந்த செங்கமலச் செல்வி இளநகை காட்டவில்லை, பெரிதாகவே நகைத்தாள்.

“ஏனம்மா சிரிக்கிறாய்?” என்று கேட்டார் பிரும்ம மாராயர்.

“யானைகள் மிரண்டு திரும்பி ஓடி வந்தால் நமது படைகள் மிதிபட்டுப் போகுமே. அதை நினைத்துப் பார்த்தேன். தவிர, உங்கள் மீதும் விஷ வாளி பாய்ந்தால்…” என்ற செல்வியின் பேச்சை, “மாண்டுபோவேன். வீர சொர்க்கம் அடைவேன்” என்று முடித்தார் பிரும்ம மாராயர்.

“மாண்டு போக முடியாது பிரும்ம மாராயரே!” என்று திருத்தினான் கரிகாலன்.

“மாண்டு போக முடியாதா? விஷவாளி பாய்ந்தால் ஆயுசு நீடிக்குமோ?” என்று சீறினார் பிரும்ம மாராயர்.

“ஆமாம் பிரும்ம மாராயரே! நாகர்கள் பாம்பின் விஷத்தில் ஏதோ பச்சிலையைக் கலக்குகிறார்களாம். அதனால் அவர்கள் வாளியால் தாக்கப்பட்டவனுக்குப் பைத்தியம் பிடிக்குமாம்! யானைகளுக்கு மதம் பிடித்ததாகவும் கேள்வி” என்றான் கரிகாலன்.

இதற்குப் பின் நிலைமையை நினைப்பதே பயங்கரமா யிருந்தது பிரும்ம மாராயருக்கு. “மதம் பிடித்த நமது யானைகள் நமது படைகளை நோக்கி ஓடிவந்தால்.” என்று இரைந்தே பேசினார்.

“பெரும் குழப்பம்! நமது படைகள் நாசப்பட்டுவிடும்” என்று விளக்கினான் கரிகாலன்.

“வேறு இதற்கு வழிதான் என்ன கரிகாலா?” என்று வினவினான் அரையன் ராஜராஜன்.

“முற்றுகைதான் வழி தந்தையே! ஆகாரமெதுவும் நகரத்துக்குள் போகவிடாமல் செய்வோம்! பிறகு எதிரி, கோட்டைக் கதவுகளைத் திறந்துகொண்டு சண்டைக்கு வந்தாலும், நமது குதிரைப்படை கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரிகளைத் தாக்க முடியும். அப்படிச் சண்டைக்கு வரவில்லையானால், எதிரி சரணடைய நேரிடும். பிறகு தொல்லையே இல்லை” என்று கரிகாலன் யோசனை சொன்னான்.

அவன் யோசனைப்படி முற்றுகைக்கு உத்தரவிட்ட அரையன் ராஜராஜன், தன் படைகளைக் கோட்டையைச் சுற்றிலும் நிறுத்தினான். கரிகாலன் யோசனைப்படி யானைப்படை பின்னுக்குக் கொண்டு போகப்பட்டது. குதிரைப்படை முன்னணியில் தங்கியது. கோட்டையை முற்றிலும் சோழர்களின் பிரும்மாண்டமான படை சூழ்ந்து கொண்டது. ஆனால் ஒரே ஓர் இடத்தை மட்டும் படைகள் சூழ முடியவில்லை. அதுதான் இந்திராவதியை அடுத்துக் கோட்டையின் மேற்குப் பக்கத்திலிருந்த வாயிலுக்கருகில் அடர்த்தியாயிருந்த காடு. அந்த இடத்தில் முத்துத்தேவன் சுமார் முப்பது வீரர்களுடன் காவலுக்கு நிறுத்தப்பட்டான். அந்தக் காடு இருந்தென்ன? எதிரிக்கு அதனால் பயனில்லை” என்று அரையன் ராஜராஜன் மட்டுமென்ன, கரிகாலன் கூட நினைத்தான்.

ஆனால், எதை மனிதன் அலட்சியப்படுத்துகிறானோ அதுவே பெரும் எமனாய் வந்து சேருகிறது, அவனுக்குப் பல சமயங்களில். அந்தக் காடு எதிரிக்கு அத்தனை தூரம் உபயோகமாயிருக்கும் என்று கரிகாலன் சொப்பனத்தில் கூட நினைக்கவில்லை. சுவரில் முதன்முதலாக முளைக்கும் சிறு அரசச் செடியை எப்படி அலட்சியம் செய்கிறோமோ, அப்படியே கரிகாலன் அந்தச் சிறு காட்டையும் அலட்சியம் செய்தான். அதன் விளைவு?

மாதம் இரண்டாகியும் சக்கரக் கோட்டம் பணி யாததைக் கண்ட கரிகாலன், ஒரு நாளிரவு சந்திர வெளிச்சத்தில் முத்துத்தேவனுடன் சம்பாஷித்துக் கொண்டே, அந்தக் காட்டின் முகப்பில் இந்திராவதி நதிக் கரையோரமாக நடந்துகொண்டிருக்கையில், சட்டென்று குனிந்து எதையோ கையிலெடுத்தான். அந்தப் பொருளைப் பார்க்கப் பார்க்க அவன் கண்கள் ஆச்சரியத்தால் மலர்ந்தன. மீண்டும் தரையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே சிறிது தூரம் நடந்த கரிகாலன் வழிநெடுக உணவுப் பொருள்கள் இறைந்திருக்கக் கண்டு, “இதைப் பார்த்தாயா முத்து?” என்று கையிலிருந்த பதக்கத்தை முத்துத்தேவனிடம் கொடுத்ததன்றி, சிந்திக் கிடந்த உணவுப் பொருள்களையும் சுட்டிக் காட்டினான்.

முத்துத்தேவன் எல்லையற்ற ஆச்சரியத்தால் அந்தப் பதக்கத்தையும் கரிகாலனையும் மாறி மாறி நோக்கிவிட்டு, “இதில் ஒட்டர நாட்டு ராஜமுத்திரை இருக்கிறதே!” என்றான்.

“இப்பொழுது புரிந்துவிட்டது எனக்கு, இந்த முற்றுகை நீடிக்கும் காரணம்” என்றான் கரிகாலன்.

“என்ன புரிந்து விட்டது?” என்று வினவினான் முத்துத்தேவன்.

விஷயத்தை மெள்ள விளக்கினான் கரிகாலன். அவன் விளக்க விளக்க மிதமிஞ்சிய கலவரத்துக்கு உள்ளான முத்துத்தேவன், “இதை உடனே படைத்தலைவரிடம் சொல்ல வேண்டாமா?” என்றான். “வேண்டாம் முத்து.” “பின் நாம் செய்ய வேண்டியது?”

செய்ய வேண்டியதை எடுத்துச் சொன்னான் கரிகாலன். அவன் யோசனையைக் கேட்ட முத்துத்தேவன், “இது ராஜராஜனுக்குத் தெரிந்தால் இருவர் தலைகளையும் வாங்கிவிடுவான்” என்று கூவினான்.

முத்துத்தேவனின் எச்சரிக்கைக்குச் சிறிதும் செவி கொடுக்காத கரிகாலன், “நீ போய் இருபது வீரர்களை அழைத்து வா முத்து” என்று உத்தரவிட்டுவிட்டு, மீண்டும் தரையை ஊன்றிக் கவனித்துக் கொண்டே கோட்டையை நோக்கி நடக்கலானான். அதற்குமேல் ஏதும் பேச முடியாத முத்துத்தேவன், கரிகாலன் உத்தரவுப்படியே இருபது வீரர்களை அழைத்து வந்தான். அந்த இருபது வீரர்களையும் அந்தக் காட்டின் பக்கவாட்டுகளில் ஒளிந்து கொள்ளச் செய்தான். கரிகாலனும் ஒரு மரத்தடியில் மறைந்து நின்று காட்டின் உட்புறத்தைக் கவனித்துக்கொண்டு நின்றான். இரவு ஏறியது; நடுநிசியும் தாண்டிவிட்டது. காத்திருந்த வீரர்கள் பொறுமை இழக்கத் தொடங்கினார்கள். முத்துத் தேவன்கூட பொறுமையிழந்து, “தலைவரே! இன்னும் எத்தனை நேரம் இப்படிக் காத்திருக்க வேண்டும்? யாருக்காகக் காத்திருக்கிறோம்?” என்று கேட்டான்.

அந்தச் சமயத்தில் எங்கிருந்தோ மெள்ள மெள்ளக் காலடிகள் கேட்டன. காட்டுக்குள்ளேயிருந்து சிறு பந்த மொன்றும் மெல்ல நகர்ந்து வந்தது.

Previous articleMannan Magal Part 2 Ch 16 | Mannan Magal Sandilyan | TamilNovel.in
Next articleMannan Magal Part 2 Ch 18 | Mannan Magal Sandilyan | TamilNovel.in

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here